Advertisement

அத்தியாயம் –25

 

 

தன்னவன் தன்னிடம் அந்த நல்ல விஷயத்தை சொல்லவில்லை என்ற ஏக்கத்தில் அவள் அவன் முகம் பார்த்தே அன்றைய இரவை கழித்தாள். அன்றைய பொழுது இனிதாக விடிந்தது. ஆனால் அது இருவருக்கும் இனிதானதா……….

 

 

என்ன இருந்த போதும் அவன் அவளிடம் சொல்லாமல் இருந்தது அவளுக்குள் பெரும் மனவலியை கொடுக்க அதை பற்றி அவனிடம் கேட்டாலொழிய அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. அதற்கான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தாள். அவன் காலையில் எழுந்து குளித்து அவர்கள் அறையில் உடை மாற்றிக் கொண்டிருக்க அது தான் தருணம் என்றுணர்ந்தவள் அவனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் மென்று விழுங்கியவாறே அவன் என்ன சொல்வானோ என்று இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு அவனிடம் கேட்டாள். என்ன ஏதோ பூடகமாக ஆரம்பிக்கிறாள் என்று நினைத்தவன் என்ன என்பது போல் அவளை நோக்க “தம்பி ஒரு விஷயம் சொன்னாங்க…”

 

“இம் அதனாலென்ன என்றான் அவன். இப்படி கேட்பவனிடம் மேலும் என்ன கேட்பது என்று திணறியவளுக்கு இயலாமையும் கோபமும் ஒருசேர எழுந்தது, கோபத்தில் வார்த்தைகளை கொட்டினாள் அவனிடம். “நான் உங்க பொண்டாட்டி தானே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு உங்களுக்கு தோணலையா, உங்க தம்பி வந்து சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணுமா. எனக்கு பரிசு கிடைச்சதுல உங்களுக்கு சந்தோசம் இல்லையா…” என்றாள் அவள்.

 

“எனக்கு சந்தோசம் தான் அதனால தான் நான் ஆதவனுக்கு போன் பண்ணி உடனே சொன்னேன். ஆதவன் தான் உன்கிட்ட வந்து சொல்லிட்டான்ல அப்புறமும் உனக்கு என்ன பிரச்சனை” என்றான் அவன் பதிலுக்கு.  “உங்களுக்கு உண்மையிலேயே சந்தோசமிருந்தா எனக்கு நீங்க ஒரு வாழ்த்தாவது சொல்லி இருக்கலாமே, இப்படி எனக்கென்னன்னு இருந்தா என்ன நினைக்கிறது. எப்போமே என்னை கேப்பீங்களே நீ என்ன நினைப்புல இருக்கன்னு, நீங்க தான் வேற ஏதோ நினைப்புல இருக்கீங்க போல அதான் என்னை அப்படி கேக்குறீங்க” என்றாள் அவள்.

 

“நான் என்ன பண்ணனும் நீ நினைக்கிற” என்றான் அவன் நிதானமாக, “நான் இவ்வளோ பேசிட்டு இருக்கேன் நீங்க திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க, உங்ககிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை விடுங்க” என்று சொல்லி எழப்போனவளை “என்ன ரொம்ப பேசற” என்று சொல்லி அவள் கையை பிடித்து அவன் வேகமாக இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் அவள்.

 

அவன் கட்டிலில் அமர்ந்திருந்ததால் அவன் மேலே அவள் தடுமாறி விழ அவன் மெத்தையில் சாய்ந்தான். எதிர்பாராமல் அவள் மேலே வந்து விழுந்ததில் அவன் கைகள் அவளை தாங்கிப் பிடிக்கவென்று அவள் இடையில் அழுந்தியது. அவளை தன்னோடு சாய்த்தவன் அவளிடம் இருந்து வந்த கஸ்தூரி மஞ்சளின் வாசத்தில் கிறங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து அந்த வாசத்தை தன்னுள் வாங்கிக் கொண்டான்.

அவன் சட்டென்று அவளை இறுக்கி அணைக்க முதலில் திமிறியவள் பின் அவன் அணைப்பில் கட்டுண்டாள். அவன் கண்கள் அவள் விழிகளுடன் ஏதோ உறவாட முயல அவனை புரியாமல் பார்த்தாள் ஆதிரா. குனிந்து அவள் இதழ்களை சிறை செய்தவன் கைகள் அவனறியாமலே அவள் மேனியில் விளையாட “ஆதி கிளம்பிட்டியாப்பா” என்ற அவன் தந்தையின் அழைப்பில் சட்டென்று மீண்டது. தன்னுணர்வுக்கு வந்து சட்டென்று அவளை உதறினான்.

 

“ச்சே” என்றுவிட்டு அவன் இடக்கையால் அவன் நெற்றில் லேசாக அடித்துக் கொண்டு சாப்பிடாமலே அவன் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான் அவன் தந்தையை அழைத்துக் கொண்டு. அலுவலகத்தில் எல்லோரிடமும் எரிந்து விழ அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.

 

அங்கு வீட்டிலோ ஆதிராவின் நிலைமை மோசமாக இருந்தது, கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய அதை துடைக்க கூட இல்லாமல் அவள் அழுது கொண்டே இருந்தாள். அவராக தானே என்னை அணைத்தார் பின் அவரே உதறி தள்ளிவிட்டு சென்று விட்டாரே என்று எண்ணி கண்ணீர் உகுத்தாள், சுய இரக்கமே அவளை கொன்று விடும் போல் இருந்தது. அவன் அவளை எப்படி நடத்திய போதும் அவன் அணைப்பில் நெகிழ்ந்திருந்த அந்த நொடி அவள் மனக்கண் முன் வர தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

 

இவருக்கு எப்போதும் தன் உணர்வுகளுடன் விளையாடியே பழக்கமாகிவிட்டது. இனி அவர் தன்னை முழுமனதாக ஏற்காமல் அவருக்கு இணங்கக் கூடாது என்று முடிவெடுத்தாள். அவள் முடிவு காற்றில் கரைந்த கற்பூரம் போல ஆகப் போகிறது என்று அறியாமலே அவளாக ஒரு முடிவெடுத்திருந்தாள்.

 

லட்சுமி காலையில் இருந்து ஆதிரா அவர்கள் அறையை விட்டு வராமல் இருந்ததில் அவளுக்கு உடம்புக்கு ஏதோ முடியவில்லை என்று நினைத்து அவளை தேடி அவர்கள் அறைக்கு வந்தார்.

 

அங்கு அவளிருந்த கோலம் அவரை ஏதோ செய்ய அருகில் நெருங்கி “என்னம்மா ஆதிரா உடம்புக்கு என்ன செய்யுது” என்றார் அவர். “ஒண்ணும் இல்லை அத்தை லேசா தலை வலி கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியாகிடும் அத்தை” என்றாள் அவள்.

 

“சரிம்மா ஒரு வாய் சாப்பிட்டு படும்மா அதுனால கூட தலைவலியா இருக்கலாம்” என்றவர் அவளை வற்புறுத்தி இரண்டு இட்லியை சாப்பிட வைத்தார். அவளுக்கு ஏனோ அவள் அன்னையை பார்க்க வேண்டும் அவர் மடியில் சாய்ந்து கண்ணீர் விடவேண்டுமென்று தோன்ற மெதுவாக லட்சுமியிடம் அங்கு செல்ல அனுமதி வேண்டினாள்.

 

“அத்தை நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா, அம்மாவை பார்க்கணும் போல இருக்கு” என்றாள் அவள். “என்கிட்ட எதுக்கும்மா கேட்டுக்கிட்டு உங்க வீட்டுக்கு தானே போகப் போற, நீ போயிட்டு வாம்மா” என்றார் அவர். “அத்தை குழந்தைங்க…” என்று இழுத்தவளை “நான் போய் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்து பார்த்துக்கறேன் நீ போயிட்டு வாம்மா” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

 

ஒரு ஆட்டோவை வரவைத்து அவளை அதில் ஏற்றி அனுப்பினார் அவர். அவள் என்றுமில்லாமல் இன்று தனித்து வந்தது அன்னையின் மனதில் ஒரு வருத்தத்தை கொண்டு வந்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மகளை அன்புடன் வரவேற்றார் அவர்.

 

“என்னம்மா நீ தனியா வந்திருக்க, மாப்பிள்ளை குழந்தைகள் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல நீங்க எல்லாரும் ஒன்னா வந்து எவ்வளோ நாள் ஆச்சு” என்று நாசுக்காக மகளை அவர் கேட்க, “ஏன்மா நான் உன்னை பார்க்க வரக் கூடாதா, குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கின்றனர். அவரும் அலுவலகம் சென்றுவிட்டார். ஏனோ இன்று உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றியது உன் மடியில் படுக்க வேண்டும் போல் இருந்தது அதனால் நான் கிளம்பி வந்தேன். நீ என்னடாவென்றால் என்னை கேள்விகளாலேயே துளைத்து எடுக்கிறாய். சரி நான் கிளம்புகிறேன்” என்றாள் செல்லக் கோபத்துடன்.

 

“என்னம்மா லட்சுமி அம்மா இப்ப என்ன சொல்லிட்டேன் நீ கோவிச்சுக்கற, கல்யாணம் ஆகி போன பொண்ணு புருஷன் பிள்ளைகளோட வந்தா தானே பெத்தவங்களுக்கு சந்தோசமா இருக்கும். நீ தனியா வந்திருக்கியே அவங்களோட வந்திருக்கலாமேன்னு நினைச்சேன் வேற எதுவும் இல்லைடா. அம்மா மடியில படுக்கணும்னு சொல்லிட்டு இப்போ கிளம்பற” என்றார் அவர்.

 

ஏனோ அவரின் கனிவில் அவள் கண்களில் நீர் கோர்த்தது. “அம்மா” என்றழைத்தவாறே அவள் மடியில் தலை வைத்து படுத்தாள். கண்களில் கண்ணீர் வழிய அது கோமதியின் புடவையை நனைத்து அவள் அழுகையை சொல்லிவிட மகளின் தலையை செல்லமாக கோதிவிட்டவர் “என்னம்மா எதுக்கு அழுகற” என்றார் அவர்.

 

“ஒண்ணுமில்லைம்மா நீ பேசினதுல வந்த ஆனந்த கண்ணீர்மா அது. நீ இதுக்கும் எதாச்சும் ஒரு கதை இருக்கான்னு கேட்காதே. நிஜமாவே நீ சொன்னதை நினைச்சு தான் அழுதேன், போதுமா” என்று சொல்லி அவள் வேதனையை மறைத்து வலிய அவள் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தாள்.

 

கோமதி ஒன்றும் விவரம் அறியாதவர் அல்ல இருந்தும் மகளை மேலும் எதுவும் கேட்டு வருத்த வேண்டாமென்று அவர் மேலே ஏதும் கேட்கவில்லை. மகளுக்கு விருப்பமானதை சமைத்து கொடுத்து அவளை உணவருந்த செய்தவர், அன்று கோவிலில் விளக்கேத்த வேண்டி அவளை வீட்டில் இருக்குமாறு சொல்லிவிட்டு அவர் அருகில் இருக்கும் கோவிலுக்கு கிளம்பிச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வெற்றி வீட்டிற்கு வந்தான்.

‘மாமா எதுக்கு இப்போ இங்க வராங்க’ என்று எண்ணியவள் அவள் எண்ணத்தை உள்ளே புதைத்து அவனை வரவேற்றாள். “வாங்க மாமா, உட்காருங்க” என்றுவிட்டு அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். “லட்சுமி அக்கா இல்லையா” என்றான் அவன் தயங்கியவாறே, “அம்மா பக்கத்துல உள்ள கோவிலுக்கு விளக்கு போட போயிருக்காங்க என்ன விஷயம் மாமா” என்றாள் அவள். “இல்லைம்மா அக்காவை பார்த்து பேசிவிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். ஆமா நீ என்ன இங்க” என்றான் அவன்.

 

“என்ன மாமா இது எங்க அம்மா வீடு நான் இங்க வரக் கூடாதா” என்றாள் அவள். “அய்யோ தெரியாம சொல்லிட்டேன் நீ தாராளமா வரலாம்” என்றான் அவன். “சரி நீங்க இருங்க மாமா நான் உங்களுக்கு காபி போட்டு கொண்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ஆவென்று கத்த ஓடிச் சென்று பார்த்தான் வெற்றி.

 

அங்கு பாலை சூடாக்கி கோப்பையில் ஊத்துவதற்காக எடுத்தவள் கை தவறி அவள் இடக்கையில் பால் கொட்டிவிட்டிருந்தது. சூடான பால் என்பதால் அவளுக்கு எரிய ஆரம்பிக்க “லட்சுமி என்னம்மா இது கொஞ்சம் பார்த்து செய்யக் கூடாதா, என்ன நினைப்புல தான் இருக்கியோ போ. சரி இதுக்கு போட மருந்து எதாச்சும் இருக்கா, எங்க இருக்கும்” என்றான் அவன் அவளிடம்.

 

‘என்ன இவனும் என்னை என்ன நினைப்புல இருக்கன்னு கேக்குறேன், நான் நிஜமாவே வேற நினைப்புல தான் இருக்கேனா’ என்று நினைத்தவள் அவன் கேட்ட கேள்வி நினைவு வர, “தெரியலை மாமா எங்க இருக்குன்னு, நீங்க குளியலறைக்கு சென்று அந்த பேஸ்ட் எடுத்து வாங்க, அதை போட்டா கொஞ்ச நேரத்துல எரிச்சல் அடங்கிரும். கொப்புளமும் எழும்பாது” என்றாள் அவள்.

 

“என்ன சொல்ற புதுசா, சரி நீ சொல்ற நான் செய்யறேன்” என்றவன் விரைவாக சென்று பேஸ்ட் எடுத்து வந்து அவள் கைகளை பிடித்து பேஸ்ட்டை தடவிக் கொண்டிருந்த வேளை ஆதி உள்ளே நுழைந்தான். ஆதியை முதலில் பார்க்காதவள் வெற்றியிடம் எங்கு மருந்திட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க வெற்றி தான் முதலில் ஆதியை கவனித்தான்.

 

அவனுக்கு அப்போது தான் அவன் ஆதிராவின் கைகளை பிடித்து மருந்திட்டு கொண்டிருந்தது நினைவு வர சட்டென்று கையை கீழே இறக்கினான். “வா… வா ஆதி” என்று அவன் கூப்பிடவும் தான் ஆதிரா அவனை கவனித்தாள். ‘அய்யோ மாமா அன்னைக்கு வீட்டுக்கு வந்ததுல இருந்து என்னைவிட்டு தள்ளி இருக்கவர், இன்னைக்கு மாமா என் கை பிடிச்சு மருந்து போடுறது பார்த்தா என்ன நினைப்பாரோ என்ன நடக்கப் போகுதோ’ என்று அவனை பற்றி தப்பாக கணித்துக் கொண்டிருந்தாள். சம்பிரதாயமாக அவனை பார்த்து “வாங்க” என்றாள் அவள். 

 

வெற்றி அவனிடம் “ஆதிரா எனக்கு காபி போட பால் காய்ச்சு ஊத்தும் போது கைல பால் கொட்டிருச்சு, பாவம் வலில துடிச்சு போய்ட்டா, அதான் மருந்து போட்டுட்டு இருந்தேன். நீயும் சரியா உள்ளே வந்த” என்று தன்னிலை விளக்கம் போல் ஆதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “கொஞ்சம் தாமதமாவே வந்திருக்கலாம்” என்று முணுமுணுத்தான் ஆதி.

 

“என்னாச்சு டாக்டர் போய் பார்க்கலாமா” என்றான் அவன் அவளை பார்த்து. “இல்லை பரவாயில்லை மருந்து போட்டிருக்கு, சரியாகி போகும்” என்றாள் அவள். “அத்தை மாமா வீட்டில இல்லையா” என்றான் அவன். “அக்கா கோவிலுக்கு போயிருக்கறதா இப்போ தான் லட்சுமி சொல்லிச்சு, பக்கத்துல தான் போயிருக்காங்க போல வந்திடுவாங்க” என்றான் வெற்றி மீண்டும். ‘இவளை கேள்வி கேட்டா இவன் பதில் சொல்றான்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஆதி.

 

“அப்பா கடைக்கு போயிருக்காங்க சூர்யா இன்னும் காலேஜ்ல இருந்து வரலை” என்றாள் அவள். “சரி நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகத் தான் வந்தேன்” என்றவனை வியப்புடன் நோக்கினாள் அவள். அவன் அவனுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து அவளை அழைத்து போகவென வந்திருக்கிறான் என்றதில் அவள் உள்ளம் குதூகலித்தது.

 

“அம்மா சொன்னாங்க நீ இங்க வந்திருக்கன்னு அதான் ஆபீஸ் விட்டு சீக்கிரம் கிளம்பிட்டேன். ஏழு மணிக்கு ஹோட்டல் சோழால ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, வர்ற வழியல உன்னை கூட்டிப் போகலாம்னு தான் வந்தேன்” என்று அவன் சொன்னதும் அவள் உற்சாகம் மொத்தமாக வடிந்தது.

 

‘அத்தை சொல்லி தான் வந்திருக்கிறார், என்னடா இவருக்கு என் மேல் பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டதோ என்று எண்ணி ஏமாந்து விட்டேனே’ என்று தன்னையே கொட்டிக் கொண்டவளை ஆதி கண்டுவிட்டான், ஒரு நமுட்டு சிரிப்புடன் எழுந்தவன் “எனக்கு முகம் கழுவணும்” என்றான்.

 

“இதோ வர்றேன்” என்றவள் அவனை மேலே உள்ள அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். படிக்கட்டில் ஏறும் போது வேண்டுமென்றோ அல்லது தெரியாமல் தான் நடந்ததோ ஆதி அவள் மேல் உரசியவாறே நடந்து வந்தான். மேலே சென்றதும் அவன் குளியலறைக்குள் புகுந்தவன் முகம் கழுவி வெளியே வர ஆதிரா அவனுக்காக துண்டுடன் நின்றாள்.

 

துண்டை வாங்கும் போது அவன் கைகள் அவள் மேல் அழுந்திவிட ஆவென்றுவிட்டாள் அவள். “என்னாச்சு” என்று பதறியவன் அவள் கையை பற்ற வர ஆதிரா அவள் கையை பின்னுக்கிழுத்தாள். “ஏன் என்கிட்டலாம் காட்டமாட்டியா” என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்லவும் அவள் கைகள் தானாக மேலே உயர்ந்தன. அவள் கையை மென்மையாக பற்றியவன் அந்த கைகள் சிவந்திருந்தது கண்டு வருந்தினான்.

 

“பார்த்து வேலை செய்ய மாட்டியா, சரி வா டாக்டர்கிட்ட போகலாம்” என்றவனை “வேண்டாம்” என்ற அவள் குரல் கோபப்படுத்தியது, “நான் சொன்னா கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா” என்றான் அவன் மீண்டும் ஒரு மாதிரி குரலில். அவள் முகம் வாடி நிற்க “நீ வர்ற, நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம் சரி வா கிளம்பலாம்” என்று அவளை அவசரப் படுத்தினான்.

 

கீழே கோவிலுக்கு சென்றிருந்த கோமதி வீட்டிற்கு திரும்பி இருந்தார், வாசலில் மருமகனின் கார் நிற்பதை கண்டு ஓரளவு அவர் தெளிந்திருந்தார். அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்த போதும் மருமகனே நேரில் வந்து அவளை அழைத்து செல்ல வந்திருக்கிறார் என்றால் விஷயம் ஏதுமில்லை என்று அவர் மனம் சற்று நிம்மதியடைந்தது.

 

அவர் நிம்மதி எல்லாம் சில காலம் மட்டுமே என்று அவர் அறிந்திருக்கவில்லை. வீட்டிற்கு உள்ளே வந்தவர் வரவேற்பறையில் வெற்றி தனித்து அமர்ந்திருப்பது கண்டார். “என்னடா தம்பி நீ எப்போ வந்த” என்றார் அவர். “நீங்க கோவிக்கு போய் கொஞ்ச நேரத்துல வந்துட்டேன் அக்கா” என்று சொல்லி ஆதிரா கையில் பாலை கொட்டிக் கொண்ட விஷயத்தையும் ஆதி வந்திருப்பதையும்  சொன்னான்.

 

மருமகனும் மகளும் மாடியில் இருக்கின்றனர் என்று தெரிந்ததும் உள்ளே சென்று அவருக்கு பில்டர் காபி கலந்து கொண்டு வந்தார். கீழே இருந்து “லட்சுமி” என்று குரல் கொடுக்க, “இதோ வர்றேன்ம்மா” என்று அவள் இறங்கி வந்தாள். ஆதியும் பின்னோடு இறங்கி வந்தான்.

 

பரஸ்பர நல விசாரிப்புக்கு பின் அவன் கிளம்புவதாக சொல்ல அவர் அவர்களை ஒரு நாள் தங்கி செல்லச் சொன்னார். “இல்லைம்மா இன்னைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னார், நாங்க கிளம்புறோம்” என்றாள் ஆதிரா. “சரி அத்தை கிளம்புறோம்” என்றவன் அவரிடம் விடைபெற்று வெற்றியிடம் ஒரு சிறு தலையசைப்புடன் கிளம்பிச் சென்றான்.

 

ஆதி வெற்றியிடம் சகஜமாக பேசவில்லை என்பதை வெற்றியும் ஆதிராவும் உணர்திருந்தனர். எல்லாம் தன்னால் தான் என்று இருவரும் அவரவர் மனதில் நினைத்துக் கொண்டனர். காரில் முன்பக்கம் அவள் ஏறி அமர்ந்ததும் காரை கிளம்பினான் ஆதி, நேரே அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று அவளுக்கு முதலுதவி செய்த பின்னே அங்கிருந்து கிளம்பினர். அவளை வீட்டிற்கு சென்று விட்டுவிட்டு குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடினான்.

 

ஆதிரா அவன் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ இன்று அவள் மனநிலை ஏதோ நடக்கப் போகிறது என்றே கூறிக் கொண்டிருந்தது, சட்டென்று மனதில் ஒரு பயம் வட்டமிட்டது. “மேடம், மேடம், ஆரா……” என்று அவன் சொல்ல “ஆ…. என்ன என்ன சொன்னீங்க” என்றாள் அவள். “இம் நீ இன்னும் வேற நினைப்புல தான் இருக்கியா, எவ்வளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன்” என்றான் அவன்.

அவன் இயல்பாக பேசியது அவளுக்குள் ஒரு இதம் தர “இல்லைங்க ஏதோ யோசனையில இருந்துட்டேன் சொல்லுங்க” என்றாள் அவள். “என்ன யோசனைல இருக்க உன் மாமா பத்தி யோசனையில இருக்கியா” என்ற அவன் கேள்வியில் அவள் உள்ளம் பதற அவனை நிமிர்ந்து பார்த்தாள். பதிலுக்கு அவனும் சளைக்காமல் பார்த்தான். “என்ன சொன்னீங்க” என்றாள் அவள். “ஏன் உனக்கு காது கேக்கலையா இன்னும் வேற நினைப்புலேயே இருக்கியா” என்றான் அவன்.

 

“சரி நான் கிளம்புறேன்” என்று அவன் கிளம்பிய பின் தான் கவனித்தாள் அவன் பார்ட்டிக்கு செல்ல தயாராகிவிட்டான் என்பதை தான் சொல்ல வந்திருக்கிறான், நான் ஏதோ நினைப்பில் இருக்க அவன் என்னவெல்லாம் சொல்லிவிட்டு போய்விட்டான் என்று நினைத்து மருகினாள் அவள்.

 

லட்சுமி இரவு உணவுக்காக அவளை சாப்பிட அழைக்கவும் தான், அவளுக்கு அவள் வெகுநேரமாக யோசனையுடனே அந்த அறையில் இருந்தது புரிந்தது, குற்ற உணர்வுடன் “மன்னிச்சுடுங்க அத்தை ஏதோ யோசனையா இருந்துட்டேன்” என்று வருத்தம் தெரிவிக்க, “ஆதி சொல்லிட்டு தான் போனான்ம்மா நீ கையில பால் கொட்டிகிட்டியாமே உன்னை தொல்லை பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டு தான் போனான்” என்றார் அவர்.

 

‘கடவுளே இவர் என்னை புரிந்து கொள்ள வேண்டுமா இல்லை நான் இவரை புரிந்து கொள்ள வேண்டுமா என்று கேள்வி எழுந்தது அவளுக்குள். எந்த நேரம் எப்படி நடந்து கொள்வார் என்று கணிக்கவே முடியவில்லையே’ என்று அவளுக்குள் ஒரு அங்கலாய்ப்பு எழுந்தது. “நேத்ரா சாப்பிட்டாளா அத்தை” என்றாள் அவள்.

 

“உனக்காக தான் காத்திட்டு இருக்காம்மா வா நாம மட்டும் தான் சாப்பிடணும், மாமாவும் ஆதவனும் சாப்பிட்டாங்க. நீ, நான், நேத்ரா, ஆதர்ஷா மட்டும் தான் சாப்பிடணும் வாம்மா” என்று பேசியவாறே நடந்து சென்றனர். ஆதிராவின் முகம் ஒரு மாதிரி இருப்பதை நேத்ரா கண்டுவிட்டாள்.

 

“என்னடி ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதாச்சும் பிரச்சனையா. என்கிட்ட சொல்லமாட்டியா, நீ இப்போலாம் என்கிட்ட சரியா பேசுறதுகூட இல்லை தெரியுமா” என்று வருத்ததுடன் அவள் சொல்ல ஆதிராவுக்கு சங்கடமாக இருந்தது. “அப்படி எதுவும் இல்லைடி நீ சாப்பிடு எதுக்காக நீ எங்களுக்காக காத்திட்டு இருக்க, வயித்து பிள்ளைக்காரி நேரமா சாப்பிட வேணாமா” என்று அவளை கடிந்தாள்.

 

“உண்மையிலேயே எதுவும் இல்லையே எனக்கு மனசே சரியில்லைடி. நீ நிஜமாவே சந்தோசமா இருக்கியா” என்றாள் நேத்ரா. இருவருமாக ஏதோ ரகசியம் பேசுவது போல் பேசியதை லட்சுமி கண்டும் காணாமல் பார்த்தார். தோழிகள் பேசிக் கொள்ளட்டும் என்று அவர் வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்ததை இருவரும் அறியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

“அண்ணிகளா நான் ஒருத்தி இங்க இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க, என்னை பார்த்தா பாவமா இல்லையா. நான் மட்டும் மொட்டு மொட்டுன்னு தனியா சாப்பிட்டு இருக்கேன். என்கூடவும் கொஞ்சம் பேசுங்களேன்” என்றவளை இருவரும் ஒரு சிரிப்புடன் பார்த்தனர்.

 

“மன்னிச்சுடும்மா ஆதர்ஷா நாங்க செஞ்சது தப்பு தான், ஆமா அத்தை எங்கே” என்று அப்போது தான் ஆதிரா கவனித்து கேட்க, “உங்க மாமியார் நீங்க ரெண்டு பேரும் பேசுறதை பார்த்துட்டு அவங்க வேக வேகமா சாப்பிட்டு எழுந்துட்டாங்க. நல்ல மாமியார் நல்ல மருமகளுங்க” என்று பெருமூச்செறிந்தாள்.

 

“என்ன ஆதர்ஷா நீ இப்படி பெருமூச்சு விடற, கவலையே படாதே உனக்கும் இது போல நல்ல மாமியார் தான் கிடைப்பாங்க சரியா” என்றாள் நேத்ரா. “இம் கிடைப்பாங்க” என்று முணுமுணுத்தவள், “ஏன் அண்ணி அப்போ எனக்கு நல்ல மாமியார் மட்டும் தான் கிடைப்பாங்களா, நல்ல புருஷன் கிடைக்கமாட்டானா” என்றாள் அவள்.

 

“என்ன இன்னைக்கு ஒரு மாதிரி தான் இருக்க போல” என்று கிண்டல் செய்தாள் நேத்ரா. “என்ன ஆதர்ஷா நீ இப்படி சொல்லிட்ட உன் மனசை புரிஞ்சுவன் உனக்கு பிடிச்சவன் தான் உனக்கு கணவனா கிடைப்பான்” என்றாள் ஆதிரா. ‘அண்ணி அது உங்க தம்பி தான், அவர் கிடைக்க நீங்க தான் எனக்கு உதவி பண்ணணும்’ என்று மனதிற்குள்ளேயே ஆதிராவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“என்ன மேடம் அமைதியா ஆகிட்டீங்க, கல்யாணம் பற்றி கனவு வந்திருச்சா. நல்லா படிங்க முதல்ல எல்லாம் காலா காலத்துல நல்லபடியா நடக்கும். உனக்கு எந்த கவலையும் வேண்டாம் நாங்க இருக்கோம் உன் கல்யாணத்தை நல்ல படியா நடத்தி முடிக்க” என்றாள் நேத்ரா. மூவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

 

குழந்தைகள் இருவரும் லட்சுமியுடன் பேசிக் கொண்டே அவர்கள் அறையில் உறங்கிவிட ஆதிரா அவர்கள் அறையில் தனித்திருந்தாள். ஆதி எப்போது வருவான் என்று மணி பார்த்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணங்கள் முழுதும் அவனை முதன் முதலில் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பிக்க மனதில் சொல்லொணாத ஒரு உணர்வு உண்டானது.

 

அவனை பற்றிய இனிய கற்பனைகளில் இருந்தவள் அப்படியே உறங்கிப் போக அவள் கைபேசி அழைத்தது. அப்போது தான் உணர்ந்தவள் அச்சோ அவர் வருவதற்கு முன் உறங்கி விட்டோமே என்று அவள் எழ நேரம் பதினொன்றரையை நெருங்கி இருந்தது.

 

கைபேசியை எடுத்து பார்க்க அழைத்து ராஜீவ், ‘அண்ணா எதுக்கு இந்த நேரத்துல போன் பண்றாங்க’ என்று நினைத்தவளுக்குள் சட்டென்று ஒரு பயம் பரவ அவருக்கு ஏதாவது என்று யோசித்தவள் மேலே யோசிக்கும் முன் போனை ஆன் செய்தாள். “ஹலோ சொல்லுங்க அண்ணா” என்றாள். “ஆதிரா நாங்க வெளிய தான் இருக்கோம் கொஞ்சம் கதவை திறம்மா” என்றான் அவன்.

 

‘என்ன இது இவர் போன் செய்யாமல் அண்ணா போன் செய்கிறார்’ என்று நினைத்துக் கொண்டே “இதோ வர்றேன் அண்ணா” என்று எழுந்தவள் வெளியே சென்று கதவை திறக்க ராஜீவ் காரை கொண்டு வந்து உள்ளே நிறுத்தினான். ஆதியை தாங்கியவாறே அவன் இறங்க ஆதிரா “என்னாச்சு” என்றவாறே அருகில் செல்ல அவனிடத்தில் இருந்து மதுவின் வாசனை வந்தது.

 

“அண்ணா என்ன இது இவர் குடிப்பாரா” என்றாள் அவள், “இல்லைம்மா இந்த மாதிரி சில நேரம் நடக்கறது உண்டு, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள்ல நாமளும் கொஞ்சம் சாப்பிட்டு ஆகணும். இல்லன்னா தப்பா எடுத்துக்குவாங்க. ஆதி இதுக்கு தான் பெரும்பாலும் எந்த பார்ட்டிலயும் கலந்துக்கறது இல்லை. ஒண்ணு ரெண்டு பார்ட்டியும் தவிர்க்க முடியாததாகிடும்”.

 

“அப்போ இப்படி எப்பவாச்சும் சாப்பிடறது உண்டு. நீ தப்பா எடுத்துக்காதம்மா” என்றான் அவன் நண்பனை விட்டுக் கொடுக்காமல். “அதுக்குன்னு இப்படியா அண்ணா நிதானம் இல்லாத மாதிரி இருக்காரு” என்று சொல்லிக் கொண்டே அவனை தாங்கிச் சென்று உள்ளே அவர்கள் படுக்கை அறையில் படுக்க வைத்தாள்.

 

“என்ன வேணும் உனக்கு எது கேக்குறதுனாலும் என்னை கேக்க மாட்டியா, அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்” என்று அவன் சற்று குழறலான குரலில் கேட்க ‘இது மட்டும் நல்லா நினைவிருக்கு போல நாளைக்கு பேசிக்கறேன் உங்ககிட்ட’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

“சரிம்மா நேரமாச்சு, நான் கிளம்பறேன்” என்று ராஜீவ் கிளம்ப “அண்ணா ஒரு நிமிஷம் நீங்க எப்படி போவீங்க. ரொம்ப நேரமாச்சே வண்டி எதுவும் கிடைக்காதே” என்றவள் உள்ளே சென்று அவனுடைய பைக் சாவியை கொண்டு வந்து அவனிடத்தில் கொடுத்து எடுத்து செல்ல சொன்னாள். ராஜீவ் மறுக்க அவனை கட்டாயப்படுத்தி வண்டியை எடுத்து போகச் செய்தாள். கதவை எல்லாம் அடைத்துவிட்டு அவள் அவர்கள் அறைக்கு வந்தாள்.

 

ஆதி எழுந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவன் உடையை கூட மாற்றாமல் உட்கார்ந்திருக்க அருகில் சென்று அவன் சட்டையை கழற்ற முயன்றாள். அவள் சட்டையை கழற்ற அவன் சட்டையின் பொத்தானை ஒவ்வொன்றாக கழற்ற அருகில் நின்றிருந்தவளின் மேல் இருந்து வீசிய மல்லிகை பூவின் வாசம் அவனை கிறங்கடித்தது.

 

சட்டென்று அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன் அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டான். அவளை இறுக்க அணைத்து அவன் மேலும் மேலும் முன்னேற தடுக்க முயன்றவள் தோற்று போய் ஒரு கட்டத்தில் அவனிடம் அடங்கிப் போனாள். அவளைப் போலவே அவனுக்கு இணங்கக்கூடாது என்று அவள் எடுத்த முடிவும் கரைந்து போனது. ஆதி அன்று அவளை தூங்க விடாமல் செய்துவிட்டு வெகு நேரம் கழித்து அவன் உறங்கிவிட ஆதிரா உறக்கத்தை முற்றிலுமாக தொலைத்தாள்.

 

நடந்த நிகழ்வு அவளை தூங்கவிடாமல் செய்திருந்தது. இருவரும் இணைந்து இயல்பாக நடந்திருக்க வேண்டிய ஒன்று இப்படி நடந்ததில் அவளுக்கு வருத்தமாயிருந்தாலும் அவளை நினைத்து அவளுக்கே வெட்கமாகவும் இருந்தது. அவனுள் அவள் அடங்கி போனதை நினைத்தே அவள் வெட்கமானாள். காலையில் எப்படி அவன் முகம் பார்ப்போம் என்று நினைக்க அப்போதே அவள் முகம் சிவந்தது. மறுநாள் விடியலுக்காக அவள் காத்திருந்தாள்…………..

 

 

என்னில் உறைந்தவனே

இதயம் சிறை செய்தவனே

என் அகத்தில் நிறைந்தவேனே

என் உயிரில் கலந்தவனே

என் காதல் உன்னை சேரும்

நாள் எப்போதேன காத்திருக்கும்

மங்கையிவள் எண்ணம் என்று

புரியும் உனக்கு…

காத்திருக்கிறேன் மன்னவனே

உன் காதலுக்காக…

 

 

உன் பார்வை என்னை தீண்டாமலில்லை

உன் விழி பேசும் மொழி புரியாமலில்லை

உன் ஏக்கம் ததும்பும் கண்களை பார்க்காமலில்லை

உன் இதயம் துடிக்கும் துடிப்பு அறியாமலில்லை

உன் எண்ணமும் சிந்தனையும் தெரியாமலில்லை

கண்ணே உன் செம்பவள அதரங்கள் புன்னகையில்

விரிவதை உன் கயல் விழிகள் மகிழ்ச்சியில்

விகசிப்பதை உன் இரு கைகள் என் தோள் சேரும் அந்நாளில்

என்னுள் இருக்கும் உன்னை அறிவாய்…

 

அத்தியாயம் –26

 

வெகு நேரம் விழித்திருந்தவள் தன்னை மறந்து உறங்கி இருக்க, வழக்கம் போலவே அவளுக்கு விடியலிலேயே விழிப்பு வர அவள் கணவனின் கையணைப்பில் இருந்தாள். அவன் கையை விலக்கி எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்தாள். தலைக்கு குளித்து விட்டு அவள் வெளியே வரவும் ஆதி சாவகாசமாக எழுந்திருக்கவும் சரியாக இருந்தது.

 

வழக்கம் போல் எழுந்தவன் எழுந்ததும் குளியலறைக்குள் புகுந்து கொள்ள ஆதிராவால் எதையும் யோசிக்க முடியவில்லை. சமையலறைக்கு சென்று அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள். அதற்குள் அவனும் காலைக் கடனை முடித்துவிட்டு வெளியில் வந்திருந்தான்.

 

அவனுக்கு காபி கொடுத்துவிட்டு அவன் முகம் பார்க்க அதிலிருந்து அவளால் எதுவும் கணிக்க முடியவில்லை. அவன் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தது போல் இருந்தது. இரவில் அப்படி ஒரு நிகழ்வு நடக்காதது போல் இருந்தது அவன் செயல். ஆதிரா மிகுந்த குழப்பத்திற்கு உள்ளானாள்.

 

அவன் எப்போதும் போல் குளித்துவிட்டு அலுவலகமும் கிளம்பிச் சென்று விட்டான். இப்போது ஆதிராவுக்குள் பெரும் குழப்பம் வந்து போனது. அவள் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் ராஜீவ் வீட்டிற்கு வந்தான், ஆதியின் வண்டியை விட்டுவிட்டு அவன் அங்கிருந்து ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்றான்.

 

அவள் எண்ணப் போக்கிலேயே இருக்க அவள் அலுவல் அறைக்குள் நுழைந்தாள், மனம் போன போக்கில் அவள் வரைய ஆரம்பிக்க அவள் மனதில் நீங்காதிருந்தவனை ஓவியமாக்கி இருந்தாள்.

 

இதற்கு முன் ஒரு முறை அவள் வரைந்திருந்தது அவனுடைய அப்போதைய தோற்றம், தற்போது அவள் எண்ணத்தில் இருந்து அவள் வரைந்திருந்தது ஆதியின் தற்போதைய தோற்றமும் கண்களில் அளவில்லா காதலை அவன் தேக்கி வைத்து அவளை பார்ப்பது போலவும் வரைந்திருந்தாள். வெகு நேரம் அந்த ஓவியத்தை பார்த்து கண்கலங்கி நின்றவள் அந்த ஓவியத்தை எடுத்து பத்திரப்படுத்தினாள்.

 

அலுவலகத்துக்கு சென்ற ஆதியும் பலத்த யோசனையுடன் இருந்தான். அப்போது ராஜீவ் அவனைத் தேடி உள்ளே வந்தான். “என்னடா ஏன் லேட்” என்றான் ஆதித்தியன். “உங்க வீட்டுக்கு தான் போய்ட்டு வர்றேன், நேத்து தங்கச்சி உன்னோட பைக் சாவி கொடுத்து தான் என்னை வீட்டுக்கு போகச் சொல்லிச்சு, அதை கொண்டு போய் உங்க வீட்டுல விட்டுட்டு வர்றேன்” என்றான் ராஜீவ்.

 

“சரி நேத்து ஏன் குடிச்ச மாதிரி நடிச்ச என்னை வேற எதுக்கு வீட்டுக்கு வரச் சொன்ன. உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனை ஆதி. நேத்து தங்கச்சி முகத்தை பார்க்கவே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. நீ குடிப்பேன்னு நினைச்சு அவ ரொம்பவும் கவலைப்பட்டது எனக்கு இன்னும் கண்ணுலே நிக்குது ஆதி. நீ எங்கிட்டயாச்சும் மனசுவிட்டு பேசுடா. ஒருவேளை நீ இன்னும் வெற்றி சொன்னதே நினைச்சு குழம்பறியா, ஆதிராவும் வெற்றியை விரும்பறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஆதி இடையிட்டான்.

 

“அவளை பத்தி உனக்கு என்னடா தெரியும் அவ என்னை தவிர வேற யாரையும் நினைக்க மாட்டா, நான் செத்தாலும் அவ வேற யாரையும் நினைக்கமாட்டா, அது தெரியுமா உனக்கு” என்று நிறுத்தினான். “கவினும், கவினியும் என்னோட குழந்தைங்கன்னு அவ என்னைக்குமே நினைச்சது இல்லை. நம்ம குழந்தைங்கன்னு தான் சொல்லுவா. அவளுக்கு என்னைத் தவிர வேற யார் மேலயும் காதல் இல்லை, அவளுக்கு நான் மட்டும் தான் உலகம்” என்று அவன் சத்தமாக இரைந்தான்.

 

அவன் மனதில் உள்ளதை பேசிவிட்டு ஆசுவாசப்படுத்த அவன் இருக்கையில் அமர்ந்து தண்ணீர் எடுத்துக் குடித்தான். ராஜீவ்வும் ஆதி பேசியதில் சற்று அதிர்ந்து தான் போயிருந்தான். அவன் சற்று நிதானமானதும் கேட்கலாம் என்று நினைத்தவன் ஆதி கொஞ்சம் தெளிவடைந்ததும் பேச்சை ஆரம்பித்தான்.

 

“ஆதி நீ பேசுறது….” என்று அவன் சொல்லும் முன் “எல்லாமே உண்மை தான்டா அவ என்னை உயிரா நினைக்குறா. வெற்றியே அவகிட்ட போய் அவனோட காதலை சொல்லியிருந்தாலும் அவ கண்டிப்பா மறுத்திருப்பா. ஒருவேளை ஹரிணி இறந்து போகலைன்னா அவ கடைசி வரைக்கும் என்னை நினைச்சுட்டே இருந்திருப்பா ராஜீவ்”.

 

“ஆனா அப்போகூட அவ என்னை கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கலை கடைசி வரைக்கும் திருமணமே வேணாம்ன்னு இருக்கறதா சொன்னவஎன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே குழந்தைகளுக்காக தான்” என்றவன் ராஜீவ்விடம் மேலும் ஏதோ சொல்ல ராஜீவ் முகம் தெளிவடைந்தது.

 

“நீ அதுக்காக ரொம்பவும் அவளை வாட்டிடாதே அவ ரொம்பவும் பாவம், உன்னை நினைச்சது தவிர வேற எந்த தப்பும் செய்யல்லையே. நீ ரொம்பவும் கொடுத்து வைச்சவன் ஆதி, உன்னை இந்த அளவுக்கு நேசிக்கற ஒரு மனைவி உனக்கு கிடைச்சு இருக்காங்க. ஆதிராவும் கொடுத்து தான் வைச்சு இருக்கா, காலம் தான் எல்லாத்தையும் மாத்தி அமைச்சுருச்சு. அதுவும் நல்லதுக்குத்தான் போல” என்றான் ராஜீவ்.

 

“அப்புறம் ராஜீவ் நான் சொன்னது…” என்றவனை “என்னைவிட்டு எங்கயும் போகாது, ஆனா நீ ரொம்பவும் சோதிக்காதடா பாவம் என்னோட தங்கச்சி” என்றான் ராஜீவ். “அப்போ நான் பாவம் இல்லையா” என்றான் ஆதித்யன். ராஜீவ் சிரித்துவிட்டு வெளியே சென்று விட்டான். ஆதிக்கு அப்போது தான் மனது லேசானது போல் இருந்தது.

 

‘ரொம்பவும் அழுத்தக்காரி தான்டி நீ, என்ன செஞ்சாலும் வாயே திறக்க மாட்டேங்குறீயே. உன்னை பேசவைக்குறேன் என்று மனதிற்குள் சூளுரைத்தவனுக்கு ஆயாசமாக இருந்தது. அலுவலகத்தில் அவர்கள் புதிதாக விளக்கு எண்ணெய் உற்பத்தியும் தொடங்கி இருந்தனர். எண்ணெய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருக்க ஆதியோ நிதானமாக “ஆரா தீபம் எண்ணெய்” என்றான்.

 

ராஜீவ் அவனை பார்த்து சிரிக்க அருணாசலமும் அவனை வியப்புடன் ஏறிட்டார். ஆதி அதற்கொரு விளக்கம் கொடுத்தான். அதன் பின் எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். “ஆரா என்ற சொல் வழிப்பாட்டை குறிக்கும் ஒரு சொல், ஆரா என்றால் பொருளில் இருந்து பரவிச் செல்லும் ஒளி என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இது கொஞ்சம் பொருத்தமாக வரும் என்பதினால் தான் நான் இந்த பெயரை சொன்னேன்” என்றான் அவன்.

 

ராஜீவ் அவனிடம் தனியே வந்தவன் “அது மட்டும் தான் காரணமா” என்றான் அவனை பார்த்து. “அதான் கண்டுபிடிச்சுட்டியே அப்புறம் என்ன” என்று சொல்லி அசடு வழிந்தான். “நடக்கட்டும் நடக்கட்டும்” என்றான் ராஜீவ். அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.

 

ஆதிராவுக்கு தான் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை, அவள் அறையில் அடைந்து கிடந்தவள் அவள் நிலைமையை நினைத்து அவளுக்கு அழுகையாக வந்தது. ஓவென்று கதறி அழ வேண்டும் போல் இருக்க தன்னை மீறி அழுது கொண்டிருந்தாள் அவள். ஆதிராவை தேடி வந்த நேத்ராவுக்கு பகீரென்றது. “என்னடி ஆச்சு எதுக்கு அழற” என்றாள் நேத்ரா.

 

ஆதிரா அவர்களுக்குள் நடக்கும் ஊடலை பற்றி சொன்னவள் நேற்று இரவு நடந்ததை மட்டும் தவிர்த்திருந்தாள். “என்னடி சொல்லற அப்போ அத்தான் உன்னை சந்தேகப்படுறார்ன்னு சொல்றியா” என்றாள் நேத்ரா. “இல்லை ஆனா வருத்தப்படுறார், அவர் என்கிட்ட சரியா பேசியே பல நாள் ஆச்சு” என்று மனம் வருந்தி அவள் தோழியிடம் பேசிக் கொண்டிருக்க வாசலில் நிழலாடியது.

 

ஆதிக்கு ஏனோ அவளை உடனே பார்க்க வேண்டும் போல் தோன்ற அவளை காணவே அவன் அன்று விரைந்து வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு நேத்ராவும் அவளும் பேசியதை கேட்டவன் அப்படியே வெளியில் நின்றுவிட்டான். வரவேற்பறையின் சோபாவில் வந்து அமர்ந்தான். சில நிமிடங்களில் நேத்ரா வெளியில் வர ஆதி வரவேற்பறையில் அமர்ந்திருப்பது கண்டு திகைத்தாள்.

 

ஒருவேளை நாங்க பேசியதை அத்தான் கேட்டிருப்பாரோ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, லட்சுமி அவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தார். “என்னப்பா ஆதி சீக்கிரமா வந்துட்ட, எப்போப்பா வந்தே” என்றார். “இப்போ தான்ம்மா வந்தேன் வந்ததும் கொஞ்சம் அப்படியே சோபாவிலே சாய்ந்தேன்” என்றான் அவன். அதை கேட்ட நேத்ரா சற்று நிம்மதியுற்றாள்.

 

குழந்தைகள் எங்கே என்று அவன் கேட்க அவர்கள் ஆதர்ஷாவிடம் விளையாடிக் கொண்டிருப்பதாக லட்சுமி கூறினார். ஆதி எழுந்து அவர்கள் அறைக்கு செல்ல ஆதிரா இன்னமும் கவலையுடன் அங்கு அமர்ந்திருந்தாள். “என்ன எல்லார்கிட்டயும் எல்லாமும் சொல்லியாச்சா, ரொம்ப சந்தோசமா இப்போ உனக்கு. நமக்குள்ள இருக்க வேண்டிய விஷயத்தை இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுறதுல உனக்கு என்னடி சந்தோசம்” என்று கோபமாக இரைந்தான் ஆதி.

 

“அன்னைக்கும் இப்படி தான் அவ வந்து என்னை கேள்வி கேக்குற, அதுக்கும் நீ தான் காரணம்னு இப்போ தான் எனக்கு புரியுது. நமக்குள்ள நடக்கற விஷயத்தை எல்லாம் நீ இப்படி தான் எல்லார்கிட்டயும் சொல்லுவியா” என்று சினந்தான் அவன்.

 

அவளுக்கு அவன் பேசுவது அதிகப்படியாக தோன்ற இதில் தன் தவறென்ன ‘நான் என் தோழியிடம் கூட மனம்விட்டு பேசக் கூடாதா’ என்று மனம் குமுறியவள் நினைத்ததை அவனிடம் கேட்டும் வைத்தாள்.  “இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி பேசறீங்க, அன்னைக்கு நான் எதுவும் அவளை உங்ககிட்ட கேட்க சொல்லவில்லை. அவளாக தான் உங்களை கேட்டாள். உங்களுக்கு முன்னில் இருந்தே அவள் எனக்கு தோழி, அவளிடம் நான் மனம் விட்டு எதுவும் பேசக் கூடாதா” என்று அவளும் பதிலுக்கு கொடுத்தாள்.

 

“ஓ இன்னைக்கு உன் தோழிக்கிட்ட சொல்லிட்ட, நாளைக்கு உன் மாமன்கிட்ட சொல்லுவ நாளன்னைக்கு உன் அம்மா, அப்பா, தம்பின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவ. ஏன்னா எனக்கு முன்னாடில இருந்து தான் உனக்கு அவங்களை தெரியுமே” என்றான் அவன் குத்தலாக. அவன் மாமன் என்று அழுத்தி சொல்லியது போல் அவளுக்கு தோன்றியது

 

எப்படி பேசினாலும் கடைசில என்னையே குற்றம் சொல்லுறாரே இவர் மேல இருக்க தப்பை பத்தி யோசிக்கவே மாட்டேங்குறார் அன்று மருகினாள் அவள். “அப்போ நான் யார்க்கிட்ட தான் போய் என் குறையை சொல்றது, எனக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தா நான் யார்கிட்ட தான் போய் சொல்லுவேன்” என்றாள் அவள்.

 

“இத்தனை நாள்ல அதை நீ உணரவே இல்லைல உன்கிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை. நான் ஒருத்தன் எதுக்கு இங்க இருக்கேன், உனக்கு ஊருக்கெல்லாம் உபகாரம் பண்ண மட்டும் தான் தெரியும். கட்டின புருஷனுக்கு என்ன வேணும் என்ன செய்யணும்னு உனக்கு தெரியாது. உன் மனக்குறையை சொல்ல உனக்கு ஒரு தோழி தேவை என்கிட்ட எதுவும் சொல்லக் கூட உனக்கு தோணாது அப்படிதானே”

 

“ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ இனி யாராச்சும் என்னை கை நீட்டி கேள்வி கேக்குற நிலைமை வந்தா நான் நானாவே இருக்கமாட்டேன். நமக்குள்ள இருக்க வேண்டிய விஷயம் வெளிய போனாலும் நான் சும்மா இருக்கமாட்டேன். என்னை கெட்டவனாக்கிட்டு நீ ரொம்ப நல்லவளாகிட்ட அப்படி தானேடி” என்று உறுமி விட்டு குளியலறைக்குள் புகுந்தான் அவன்.

அவளிடம் கோபமாக பேசிவிட்டு குளியலறைக்குள் புகுந்தவன் ‘ஏன்டி என்னை இப்படி சோதிக்கற, என்னை தவிர உனக்கு எல்லாரும் முக்கியமா போய்ட்டாங்க. இப்பவாச்சும் நீ உன் மனசுவிட்டு பேசுறியா, பார்ப்போம் எவ்வளோ நாள் தான் இப்படி இருப்பன்னு பார்ப்போம். உன்னை சீக்கிரமே பேசவைக்கிறேன்’ என்று அவனுகுள்ளாக பேசிக் கொண்டான் அவன்.

 

இப்படியே இரண்டு நாட்கள் கழிய ஒரு நாள் ஆதி வீட்டிற்கு சீக்கிரமாக வந்துவிட்டான். ஆதிரா குழந்தைகளை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றிருக்க அவனுக்கோ தலைவலி வின்னென்றிருந்தது கட்டிலில் தலையில் கையை வைத்து படுத்துவிட்டான்.

 

வீட்டிற்கு நேரம் கழித்து வந்த ஆதிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஆதி விரைவாக வந்துவிட்டிருந்தது. லட்சுமி அவன் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி படுத்துவிட்டதாக கூற அவளும் அவனை தொந்திரவு செய்யவில்லை. குழந்தைகளையும் அந்த அறைக்குள் விடாமல் வெளியேவே பிடித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

இரவு அவள் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றவளுக்கு மனம் கேட்கவில்லை. அவன் முகம் ஏதோ யோசனையுடன் படுத்திருப்பது போல் இருந்தது, அவன் புருவசுளிப்பை கையால் நீவிவிட்டவள் அவனுக்கு சூடாக பாலாவது காய்ச்சி எடுத்து செல்லலாம் என்று எண்ணி அவள் வெளியே வர அங்கு நேத்ரா சோபாவில் அமர்ந்திருந்தாள்.

 

“என்ன நேத்ரா இங்க உட்கார்ந்து இருக்க, உடம்புக்கு எதுவும் செய்யுதா” என்றாள் ஆதிரா. “அதெல்லாம் ஒண்ணும் இல்லைடி அவர் வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகும்ன்னு சொன்னார். அதான் அவர் வர்றவரைக்கு உட்கார்ந்து இருக்கலாம்ன்னு உட்கார்ந்திருக்கேன்” என்றாள் அவள்.

 

“என்னடி நீ பிள்ளைத்தாய்ச்சி பொம்பிளை இப்படி உட்கார்திருக்க, சரி நீ சோபால சாய்ஞ்சு படுத்துக்கோ. உனக்கு நான் துணையா இருக்கேன்” என்று அங்கேயே உட்கார்ந்தாள். அவள் எதற்காக வந்தாளோ அந்த வேலையை மறந்து நேத்ராவுக்கு துணைக்கமர்ந்தாள்.

 

அவர்கள் அறையில் ஆதியோ அவள் நெற்றியை நீவி விடும் போதே விழித்தவன் லேசாக கண் திறந்து அவளை பார்த்திருந்தான். அவள் அவன் கேசம் கோதியவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு எழுந்து வெளியில் சென்றாள். அவள் வருவாள் வருவாள் என்று பார்த்திருந்த ஆதி ஏமாந்து போனான். நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை கடக்க ஆதி பொறுமையிழந்தான்.

 

‘என்னாச்சு இவளுக்கு’ என்று அவன் எழுந்து அமர்ந்து யோசித்தவன் அவர்கள் அறை வாயிலுக்கு வந்து வெளியே எட்டி பார்த்தான். ஆதிராவும் நேத்ராவும் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஆதவன் உள்ளே வர ஆதிரா அவர்களிடம் விடை பெற்று உள்ளே வருவது தெரிந்ததும் அவன் கட்டிலில் சென்று படுத்தான்.

 

ஆதவன் வந்துவிட ஆதிரா அவர்களிடம் விடைபெற்று எழுந்து உள்ளே வர நினைத்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது அவள் ஆதிக்கு பால் எடுத்து வரலாம் என்று வெளியில் வந்தது. நேரமாகிவிட்டது இதற்கு மேல அவரை எழுப்பி தொந்திரவு செய்யக் கூடாது என்று நினைத்தவள் அவர்கள் அறைக்கு வந்தாள். அவளுக்கு என்ன தெரியும் ஆதி அங்கு இவள் வரவிற்காய் காத்திருப்பது.

 

அவள் உள்ளே வர ஆதியோ அங்கு பயங்கர சினத்தில் இருந்தான். அவன் கட்டிலில் அமர்ந்திருக்க அவளை பற்றி யோசித்ததில் அவனுக்கு வந்த தலைவலியை மறந்தே போனான். உள்ளே வந்தவளோ அவன் கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்து “என்னங்க நீங்க எதுவும் சாப்பிடலைன்னு அத்தை சொன்னாங்க அதான் பால் எடுத்துட்டு வரலாம்ன்னு போனேன், பாவம் அங்க நேத்ரா உங்க தம்பி வர நேரமாகும்னு தனியா உட்கார்ந்திருந்தா”

 

“பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு வேற அதான் அவளுக்கு துணையா கொஞ்சம் நேரம் அங்க இருந்து பேசிவிட்டு வந்தேன். நான் உங்களுக்கு பால் எடுத்துட்டு வரட்டுமா” என்றவளை எரித்துவிடுபவன் போல் பார்த்தான் ஆதி. “என்ன நினைச்சுட்டு இருக்க, ஒரு மனுஷன் வீட்டுக்கு வந்தானே அவனுக்கு என்னாச்சு ஏதாச்சின்னுகூட பார்க்காம நீ பாட்டுக்கு உன் தோழிக்கு துணையா இருக்க போயிட்ட”

 

“உனக்கு எல்லாரும் முக்கியம் நீ எல்லாருக்காகவும் பாரு சரியா. எனக்கு என்னாச்சுன்னு மட்டும் பார்க்காத. நான் எவ்வளோ தலைவலில வீட்டுக்கு வந்தேன் தெரியுமா உனக்கு. உனக்கு எப்படி தெரியும் உனக்கு ஊர்ல இருக்க எல்லாரையும் கவனிக்க தெரியும் என்னை தவிர. நீ என்ன நினைப்புல தான் இருக்கன்னு எனக்கு தெரியலை” என்று கோபமாக இரைந்தவன் குப்புற படுத்துக் கொண்டான்.

 

அவள் அவனருகில் வந்து எழுப்ப “மன்னிச்சுடுங்க எனக்கு தெரியாது உங்களுக்கு தலைவலின்னு சூடா பால் கொண்டு வர்றேன்” என்றவளை “தெரிஞ்சு இருந்தா மட்டும் நீ என்ன செய்ய போற எனக்கு தைலம் தேய்ச்சு விட போறியா. போடி உனக்கு ஆயிரம் வேலை இருக்கும் நீ போய் அதை பாரு” என்று சொல்லிவிட்டு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

 

வேகமாக வெளியில் சென்றவள் திரும்பி வரும் போது பாலுடன் வந்தாள். தைலத்தை எடுத்து அவன் தலையில் இதமாக தேய்க்க அவள் கையை தட்டிவிட நினைத்தவன் அந்த சுகத்தில் எதுவும் பேசாமலிருந்தான். “சூடா கொஞ்சம் பால் குடிங்க” என்று சொல்லி அவனை எழுப்பி பால் அருந்தச் செய்தாள். அவனுக்கு கொஞ்சம் பரவாயில்லை போல் தோன்றியது.

 

எழுந்து பத்து நிமிடம் அறைகுள்ளாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் விளக்கணைத்து படுத்தான். “தேங்க்ஸ்” என்றான் ஒற்றைச் சொல்லாக, “நம்மகுள்ள இதெல்லாம் தேவையா” என்றாள் அவள். ”சரி படு” என்று சொல்லிவிட்டு அவனும் படுத்துவிட்டான்.

 

இப்படியே சில நாட்கள் செல்ல ஆதி ஒரு வேலை விஷயமாக மும்பை செல்ல வேண்டி இருந்தது. அதற்கு ஒரு வாரம் முன்பு அன்று காலை அவன் பைக்கை எடுத்துக் கொண்டு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தான். அவன் சென்ற சில மணி நேரத்திலேயே காலில் பெரிய கட்டுடன் வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்த ஆதிராவுக்கு பகீரென்றது. “என்னங்க என்னாச்சு” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

 

“ஒண்ணுமில்லை வண்டில போகும் போது ஒருத்தன் தப்பா வந்துட்டான் அவன் மேல இடிக்காம இருக்க வண்டியை திருப்பினேன். அப்போ ஒரு கார்ல இடிச்சு கீழே விழுந்துட்டேன். கால்ல கொஞ்சம் லேசா அடி, மத்தபடி எனக்கு வேற எதுவும் இல்லை. அதான் நான் வீட்டுக்கு வந்துட்டேன்ல” என்றான் அவன்.

 

“ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல, கால்ல கட்டு போட்டுட்டு நீங்க தனியா எப்படி வண்டி ஓட்டிட்டு வந்தீங்க” என்றாள் அவள். “நான் தனியா வரலை ஆதவன் தான் என்னை கூட்டிட்டு வந்தான். நான் அவனுக்கு போன் பண்ணி சொல்லி அவனை வரச் சொன்னேன், போதுமா உன் கேள்வி எல்லாம் முடிஞ்சுதா நான் போய் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமா” என்று தடுமாறி எழுந்தவனை பற்றி அவன் கைகளை தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவனை அவர்கள் அறையின் கட்டிலில் படுக்க வைத்தாள்.

 

பின்னோடு வந்த ஆதவன் வண்டியை நிறுத்திவிட்டு வர ஆதிரா அவனிடம் என்ன ஏது என்று விபரம் கேட்டறிந்தாள். அவன் அங்கு செல்வதற்கு முன்பே ஆதி வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு மருத்துவமனை சென்றுவிட்டதாகவும் ஆதவன் மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு ஆதியை ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வரும் போது அவன் பைக்கை எடுத்து வந்ததாகவும் கூறினான்.

 

அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை மருந்துகளை ஆதவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவர்கள் அறைக்கு விரைந்தாள். சோர்வுடன் படுத்திருந்தவனின் அருகில் நெருங்கி அவனுக்கு தலையணையை எடுத்து அணைவாக அவன் காலுக்கு கொடுத்தாள். ஆதி மருந்தின் வேகத்தில் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்திருந்தான்.

 

அவனருகிலேயே உட்கார்ந்திருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். லட்சுமி வெளியே சென்றிருந்தவர் விஷயமறிந்ததும் பதறியபடி வந்து அவனை பார்த்தார். ஒரு இரண்டு நாட்கள் கழிந்ததும் ஆதிக்கு சற்று குணமானது போல் தோன்ற அவன் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். ஆதிரா எவ்வளோ மறுத்தும் அவன் அலுவலகம் சென்றான்.

அன்று இரவு வீட்டிற்கு வந்தவன் மும்பை செல்லும் விஷயத்தை சொன்னான். அருணாசலம் அவர் செல்வதாகக் கூற ஆதி தானே செல்வதாகக் கூறி மறுத்துவிட்டான். ஆதிராவுக்கோ அவனை தனியாக அனுப்ப அவளுக்கு மனமில்லை, அவனுக்கு அடிபட்டதில் இருந்தே அவள் பார்வை அவனையே சுற்றி சுற்றி வந்தது. வீட்டில் கூட அவனை கடைக்கு செல்ல அவள் அனுமதிக்கவில்லை. எங்கு செல்வதானாலும் அவளே சென்று வந்தாள்..

 

“என்னங்க நீங்க தான் போய் ஆகணுமா” என்றாள் ஆதிரா. “என்ன புதுசா கேக்குற, நான் தானே போகணும் இதுக்கு முன்னாடியும் நான் தானே போனேன். அப்பாக்கு வயசாகுது அவரை அங்க இங்கன்னு அலைய விட முடியுமா” என்றான் அவன்.

 

“ஏங்க ராஜீவ் அண்ணா போய்ட்டு வரமுடியாதா” என்றாள் அவள். “லூசாடி நீ நான் போய் ஒப்பந்தத்துல கையெழுத்து போடணும் அப்புறம் புதுசா ஒரு வாடிக்கையாளர் பார்த்திருக்கேன் அவரோட ஒரு சின்ன மீட்டிங் இருக்கு, நீ என்ன புரியாம பேசுற. இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை” என்றான் அவன்.

 

“உங்களுக்கு கால் வேற இன்னும் சரி ஆகலை, நீங்க போய் தான் ஆகணுமா” என்றாள் அவள். “ரொம்ப தான் அக்கறை உனக்கு அவ்வளோ அக்கறை இருந்தா நீயும் வேணா கூட வந்து என்னை பார்த்துக்கோயேன்” என்று எரிந்து விழுந்தான் அவன். அவளுக்கு அதே சரியாக பட்டது.

 

மறுநாள் லட்சுமியிடம் சென்று நின்றவள், “அத்தை” என்று அழைத்தாள். “என்னம்மா” என்றார் அவர். “அத்தை அவர் மும்பைக்கு போகணும்னு சொல்றார், நான் போக வேணாம்னு சொன்னா கேட்க மாட்டேங்குறார். நானும் அவர்கூட போய்ட்டு வரட்டுமா அத்தை” என்றாள் அவள். அவளை பார்த்து சிரித்தவர், “அதை எதுக்கும்மா என்கிட்டே கேட்குற, நீயும் போய்ட்டு வா, அவனை கூட இருந்து பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்” என்றார் அவர்.

 

“அத்தை எனக்கு குழந்தைகளை விட்டு போகணும் நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. குழந்தைகளை பிரிஞ்சு என்னால போக முடியாமான்னு தான் யோசிக்கறேன் அத்தை” என்றவளை விசித்திரமாக நோக்கினார் லட்சுமி. “ஏம்மா நான் பார்த்துக்க மாட்டேனா” என்றார் அவர்.

 

“அத்தை என்னால அவங்களை விட்டுட்டு இருக்க முடியுமான்னு தெரியலை, அவரை தனியா அனுப்பவும் மனசில்லை” என்று கலங்கியவளை லட்சுமி சமாதானப்படுத்தி ஆதியுடன் செல்லுமாறு கூறினார். குழந்தைகளை அவரே பார்த்துக் கொள்வதாக கூறினார்.

 

குழந்தைகளிடம் விஷயத்தை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று நினைத்தவள் மெதுவாக அவர்களிடம் சொல்ல அவர்களோ சந்தோசமாக போய்விட்டு வருமாறு கூறினர். அன்று இரவே அவள் ஆதியிடம் அதை பற்றி கூறினாள். “என்னங்க நானும் உங்ககூட மும்பைக்கு வர்றேன்” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் ஆதி. “என்ன சொல்ற நீ எதுக்கு வர்ற” என்றான் அவன்.

 

“அதான் நீங்களே சொன்னீங்களே உங்களை பார்த்துக்கணும்னா நானும் கூடவே வரணும்னு அதான் நானும் வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் அவள். “நீ என்னை கவனிக்கணும்னா எனக்கு அடிபடணும் போலிருக்கு, அப்போ தான் அம்மணிக்கு என் மேல கரிசனம் வருது” என்றான் ஆதி அவளிடம்.

 

அவள் முகம் வாடிவிட அவளிடம் இருந்து பதிலில்லாமல் போக பேச்சை மாற்றும் விதமாக “சரி அப்போ உனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுடலாம் தானே, அப்புறம் மாத்தணும்னு சொல்லமாட்டியே” என்றான் அவன். “இல்லைங்க நான் கண்டிப்பா வர்றேன், ஆமா ஏன் அப்படி கேக்குறீங்க” என்றாள் அவள். “ஒண்ணுமில்லை சும்மா தான்” என்றான் அவன்.

 

மறுநாள் அவளிடம் வந்தவன் “நாளை மறுநாள் பகலில் கிளம்ப வேண்டிய ரயிலில் நாம் கிளம்பவேண்டும், பயணத்திற்கு தேவையானதை ஏற்பாடு செய்துவிடு” என்றான் அவன். “ஏங்க விமானத்துல டிக்கெட் கிடைக்கலையா” என்றாள் அவள். “இல்லை டிக்கெட் கிடைக்கலை, அதுனால தான் ரயில்ல பதிவு பண்ணி இருக்கு, ஏன் ரயில்ல உனக்கு வர இஷ்டம் இல்லையா” என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.

 

“இல்லைங்க நான் அப்படி எதுவும் நினைக்கலை நாம போகலாம்” என்றவள் அவர்கள் பயணத்திற்கு தேவையானதை எடுத்து அடுக்கி வைத்தாள்.  ஆதியோ சந்தோசத்தில் இருந்தான், அவனுக்கு ஏற்கனவே பதிவு செய்திருந்த விமான பயணச் சீட்டை ரத்து செய்துவிட்டு வேண்டுமென்றே தான் அவன் ரயிலில் பதிவு செய்திருந்தான்.

 

அவர்கள் இருவருமாக தனித்திருக்கும் சூழ்நிலையிலாவது அவள் தன் மனதை திறப்பாளா என்று எண்ணத்தில் இருந்தான் ஆதி. எப்படியாவது எதையாவது பேசி அவள் மனதில் உள்ளதை வெளியில் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினான் அவன். அதற்காகவே அவன் ரயிலில் பதிவு செய்திருந்தான். திரும்பி வரும் போதும் ரயிலிலே பதிவு செய்திருந்தான்.

 

அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது, அவனுக்கு ஏன் தான் அவளை கூட்டிச் செல்ல வேண்டும் என்று நினைத்தோமோ என்று ஆகிவிட்டது. அவள் குழந்தைகளிடம் விடைபெறும் போது கண்கலங்கிவிட்டது. ஆனால் குழந்தைகளோ அவளிடம் நன்றாக சிரித்து பேசி விடையளித்தனர்.

 

அவளால் குழந்தைகளை விட்டு பிரிய முடியாமல் அவர்களை கட்டிக் கொண்டு அழ, கவினியோ “அம்மா நீ என்ன சின்ன பாப்பாவா எதுக்கும்மா அழுற, நாங்க ஆச்சிகூட பத்திரமா இருந்துப்போம்மா. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க. அப்பா நீங்களும் தான்” என்றாள் பெரிய மனுஷி போல். கவினுக்கு எப்போதும் விளையாட்டுத்தனம் அதிகம் அவனோ, “அம்மா அழுவாத நீ அப்பாகூட போய்ட்டு வா அப்பா பாவம் தனியா எப்படி போவாங்க. அப்பாக்கு கால்ல வேற அடிபட்டு இக்கு ஆனா நீங்க ஊர்ல இருந்து வரும் போது எனக்கு நெய்ய பொம்மை வாங்கிட்டு வாங்க. அப்பா எனக்கு காரு வேணும்ப்பா” என்றான் அவன்.

 

ஆதியால் பொறுக்க முடியவில்லை, இதற்கு மேல் தாமதித்தால் அவள் வீட்டிலேயே இருந்துவிடுவாள் போல் தோன்ற, “சரி நீ இங்கயே இருந்துக்கோ நான் கிளம்புறேன் எனக்கு மணியாகுது” என்று பரபரத்தான் ஆதி. “இல்லைங்க இருங்க நானும் வர்றேன்” என்று சொல்லி விடைபெற்றாள் அவள்.

 

அவர்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி எல்லாவற்றையும் வைத்தவன் ஆதிராவை தேட அவளோ வீட்டிற்கு போன் செய்து குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். நல்ல வேளை அவர்களும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தால் இவள் கண்டிப்பாக வீட்டிற்கு சென்றிருப்பாள்.

 

ரயிலில் ஏறியதில் இருந்து அவள் முகத்தை தொங்க போட்டுக் கொண்டே வர, ஆதியோ என்ன செய்து இவளை மாற்றுவது என்று முழித்தான். ஏதோ யோசனை தோன்ற சீட்டில் இருந்து எழுந்தவன் கூபேயின் கதவை திறந்து வெளியே செல்ல முயல காலில் வலிப்பது தோன்ற அவன் “ஆ” என்று முனகினான்.

 

சட்டென்று எழுந்து அவனருகில் வந்தவள் “என்னங்க என்னை கூப்பிட வேண்டியது தானே நான் வந்து செய்யமாட்டேனா” என்றவள் அவன் கையை தன் தோளில் போட்டுக் கொண்டு அவன் இடையுடன் அணைத்தவாறே கூட்டிச் சென்றாள். ‘ரொம்ப கஷ்டம்டி உன் பார்வையை என் பக்கம் திருப்ப எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கு’ என்று மனதிற்குள் அவளை செல்லமாக வைதான் ஆதி.

 

மறுநாள் காலையில் அவர்கள் மும்பையில் சென்று இறங்கினர். அங்கிருந்து ஒரு வாடகை கார் அமர்த்தி அவன் ஹோட்டலுக்கு செல்லும் வழி சொல்ல அவர்கள் ஓட்டலை வந்தடைந்திருந்தனர். முதன் முதலாக தனித்து தன் கணவனுடன் வெளியில் வந்திருக்கிறாள் ஆதிரா. இருவர் மட்டுமாக தனித்து இருக்கப் போகிறார்கள், ஏதோ தேன்நிலவுக்கு வந்தது போல் இருந்தது. அந்த எண்ணம் வந்ததும் அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி அதை கவனித்துவிட “என்னாச்சு” என்றான். “இல்லை நாம ரெண்டு பேரும் தனியா இதுவரைக்கும் எந்த ஊருக்கும் போனதில்லை. இப்படி தனியா வர்றது இது தானே முதல் தடவை அதை தான் நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள் அவள்.

 

“தேன்நிலவு பயணம் போலன்னு தோணிச்சா” என்றவனிடம் ஏதோ காது கேளாதவள் போல் இருந்துவிட்டு குளியலறைக்கு விரைந்தாள் அவள். அப்போது அவளுக்கு அது உரைத்தது, ஊரில் அவர்கள் வீட்டில் குளியலறையை ஒட்டி உடை மாற்றுவதற்கு என தனியறை உண்டு.

 

ஆனால் இப்போது அவள் வெளியில் அல்லவா சென்று புடவையை கட்டவேண்டும் என்று யோசித்துக் கொண்டே அவள் உள்ளே நின்றிருந்தாள். அங்கேயே கட்டினால் புடவை நனைந்து போகும் என்ன செய்வது என்று எண்ணும் போதே, “ஆரா இவ்வளோ நேரமா குளிப்ப, சீக்கிரம் வெளியே வா எனக்கு நேரமாச்சு” என்றான் ஆதித்தியன்.

 

“இல்லை இங்க எப்படி புடவை கட்றதுன்னு பார்த்துட்டு இருக்கேன், அதான் கொஞ்சம் தாமதம்” என்றாள் அவள் உள்ளிருந்து. “வெளிய வந்து கட்டிக்கோ” என்றான் அவன். தயங்கியவாறே அவள் வெளியே வந்தாள், புடவையை இழுத்து முன்பக்கமாக பிடித்திருந்தவள் இன்னொரு கைகளால் புடவை கீழே விழாமல் பிடித்துக் கொண்டு வெளியே வர ஆதிக்கு அவளின் அந்த கோலம் ஏதோ செய்தது.

 

தனக்கு பயந்து தான் அவள் அவ்வளவு நேரமும் உள்ளிருந்தாள் என்பது உரைக்க விரைந்து குளியலறைக்கு சென்றான். பத்து நிமிடத்தில் அவன் வெளியே வர ஆதிரா கண்ணாடி முன் நின்றிருந்தாள். அவனும் வந்து அவள் பின்னால் நிற்க இருவரையும் ஒன்றாக சேர்ந்தார் போல் நிற்பதை கண்ணாடியில் கண்டவன் முகம் அகமகிழ்ந்தது.

 

அவள் பின்னால் நின்றிருந்தவனுக்கு அவள் கூந்தலில் இருந்து வந்த ஷாம்பூவின் வாசம் ஏதோ செய்ய குனிந்து அவள் கூந்தலில் முகம் புதைத்தான். அவளை தன்புறம் திருப்ப அவளோ தலை குனிந்து கொண்டாள், இரு கையால் அவள் முகம் நிமிர்த்த அவள் அஞ்சனை விழிகள் அவனை தீண்ட அதில் கட்டுண்டவன் அவளை அணைத்து இரு கைகளாலும் தூக்கியவன் அவளை மெத்தையில் கிடத்தி முன்னேறினான்.

 

அவள் முகம் வெட்கத்தை தத்தெடுக்க அவன் அவளை விடுவிக்கும் போது மதிய உணவு வேளை நெருங்கி இருந்தது. “நீங்க சீக்கிரம் போகணும்ன்னு சொன்னீங்க, இப்போ இவ்வளோ நேரமாச்சே” என்று பதறி எழுந்தாள் அவள். “ஒண்ணும் அவசரம் இல்லை, நாளைக்கு தான் மீட்டிங் இன்னைக்கு உன்னை கூட்டிட்டு போய் சுத்தி காட்டலாம்ன்னு நினைச்சேன். அது தான் கொஞ்சம் தாமதமாகி போச்சு”

 

“ஆனா அந்த தாமதமும் நல்லதுக்கு தான்” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான், அதை கேளாமல் கேட்டவள் முகம் சிவந்தாள்……….இனி மும்பையில் என்ன நடக்கும் ஆதியின் முயற்சி வெற்றி பெறுமா, அல்லது ஆதியே தன் மனதை வெளிபடுத்துவானா.

 

அஞ்சனை எழுதிய அஞ்சுகமே

எனை நெஞ்சணைத்து

நீஉனை வெளிப்படுத்தும் நாளென்று

 

காத்திருக்கிறேன் கண்மணி

உனது செவ்விதழ் திறந்து

உரைக்கப் போகும் நாளிற்காய்

 

உன்னருகினில் இருக்கையிலே

தண்ணீரும் பன்னீராய் மணக்குதடி

பிரிந்திடும் சிறு பொழுதினிலே

வெந்நீராய் மனம் கொதிக்குதடி

 

உனக்காகவே இருக்கிறேன்

எனக்காகக் காத்திட…. வந்துவிடு

குளிர் நிலவாய் ஒளி தந்துவிடு

 

 

 

Advertisement