Advertisement

அத்தியாயம் –23

 

 

ஆதி பெரும் குழப்பத்தில் இருக்க மொத்தமாக அவன் நிலை குலைந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் போல் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆதிரா மீண்டும் வந்து அவனை சாப்பிட அழைக்க “நீ போ எனக்கு சாப்பாடு வேண்டாம் பசிக்கலை” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டான். வெகு நேரம் கழித்து கீழே இறங்கி வந்தவன் அவர்கள் அறைக்கு சென்றான். விளக்கணைத்து படுக்க நினைத்தவன் படுக்கையில் ஆதிரா பிரண்டு பிரண்டு படுப்பதை பார்த்தான். ஏதோ நினைத்தவன் “எனக்கு பசிக்குது சாப்பாடு போடு” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

பின்னாலேயே எழுந்து வந்தவள் அவனுக்கு ஒரு தட்டை வைத்து உணவு பரிமாற “நீயும் உட்காரு” என்றான். “நான் சாப்பிட்டேன்” என்றாள் அவள்பொய்யாக. “சரி பரவாயில்லை எனக்காக இன்னொரு தடவை சாப்பிடு” என்று சொல்லிவிட்டு இன்னொரு தட்டை எடுத்து வைத்து அதில் அவளுக்கு சாதம் போட்டு குழம்பை ஊற்றினான்.

 

“சாப்பிடு” என்றுவிட்டு அவனும் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்று கை கழுவிவிட்டு வர அவள் அவனுக்கு சூடாக பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். அதை குடித்துவிட்டு படுக்கச் சென்றனர். குழந்தைகள் இப்போதெல்லாம் அருணாசலம், லட்சுமியுடனே படுத்துக் கொள்ள இருவர் மட்டுமே அவர்கள் அறையில் இருந்தனர்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ஆளுக்கொரு பக்கமாக திரும்பிக் கொண்டு உறங்கினர். சாப்பிட கூட வராமல் அப்படி என்ன யோசனை இவருக்கு என்று அவள் நினைக்க அவனோ அவனுடைய மனநிலையில் உழன்றான். இரண்டு நாட்களாகவே அவன் அவளிடம் சரியாக பேசவில்லை என்று அவளுக்கு தோன்றியது.

 

ஒரேடியாக பேசவில்லை என்று சொல்ல முடியாது என்ன என்றால் என்ன என்பது போல் இருந்தது அந்த பேச்சு. அவனின் அந்த செயல் அவளுக்கு மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்தது. அன்று அவள் குழந்தைகளை கூட்டி வர பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாள். லட்சுமி அவளை அழைக்க “என்ன அத்தை” என்று அவரிடம் சென்று நின்றாள்.

 

“ஏம்மா உனக்கும் ஆதிக்கும் ஏதாவது பிரச்சனையா” என்றார் லட்சுமி. “ஏன் அத்தை அப்படி கேக்குறீங்க, அப்படி எதுவும் இல்லை அத்தை” என்றாள் அவள். “ஆதி ஊருக்கு போயிருக்கான்ம்மா, உன்கிட்ட சொல்ல சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போனான். அதுனால தான் கேட்டேன் என்ன பிரச்சனைன்னு” என்றார் அவர். “எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை அத்தை நான் அவர்கிட்ட பேசறேன் அத்தை” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவள் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது, ‘என்கிட்ட எதுக்கு சொல்லாம போனார் ஒரு போன் பண்ணி பேசி இருக்கலாமே. என்னவா இருக்கும் ரெண்டு நாளா முகம் கொடுத்தும் பேசமாட்டேங்குறார். எதையோ மனசுல வைச்சுட்டு குழப்பிட்டு இருக்க மாதிரி இருக்கு’ என்று யோசித்தவள் இப்போதைக்கு அவருக்கு போன் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தாள். அவனாக பேசட்டும் என்று நினைத்தாள்.

 

ஆனாலும் அவன் சொல்லாமல் போனது மனதை உறுத்த அப்போது அவள் சிந்தனைக்கு அந்த விஷயம் வந்து போனது. செல்வம் மாமா வந்து போன அன்றிலிருந்து தான் இவர் இப்படி இருக்கிறார் ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்று நினைத்தவள் வெற்றிக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், ஆனால் அவளுக்கு அவனின் எண் தெரியாததால் ராஜீவிற்கு போன் செய்வது என்று முடிவெடுத்தாள்.

 

“ஹலோ அண்ணா நான் ஆதிரா பேசறேன்” என்றாள், “சொல்லும்மா” என்றான் அவன் எதிர்முனையில் இருந்து. “எனக்கு செல்வம் மாமா சாரி வெற்றி மாமாவோட நம்பர் வேணும்” என்றாள் அவள். “என்னாச்சும்மா” என்றான் ராஜீவ். “நீங்களாச்சும் சொல்லுங்க அண்ணா எதாச்சும் பிரச்சனையா செல்வம் மாமா வந்து போன அன்னிலேர்ந்து அவர்கிட்ட ஏதோ மாறுதல் தெரியுது. அவர் உங்ககிட்ட எதுவும் சொன்னாரா” என்றாள் அவள்.

 

“இல்லைம்மா அப்படிலாம் எதுவும் இல்லை” என்றான் அவன். “இல்லைண்ணா அவர் என்கிட்ட சொல்லாமகூட ஊருக்கு போயிருக்கார், இப்படி அவர் செஞ்சதே இல்லை. எனக்கு ஏதோ சரியில்லைன்னு தோணுது” என்றாள் அவள். “இல்லைம்மா அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஆதி ஒரு ஆபீஸ் வேலையா தான் ஊருக்கு போயிருக்கான். ரெண்டு நாள்ல வந்துடுவான்” என்றான் ராஜீவ்.

 

அவனிடம் செல்வத்தின் எண்ணை வாங்கிய பின்னே போனை வைத்தாள் அவள். உடனே செல்வத்திற்கு போன் செய்தாள் “ஹலோ யார் பேசுறது” என்றான் அவன். “நான் ஆதிரா பேசுறேன்” என்றாள் அவள். “சொல்லு லட்சுமி” என்றான் அவன்.  “என் புருஷன்கிட்ட நீங்க என்ன பேசுனீங்க சொல்லுங்க. நீங்கள் வந்து போன அன்றிலிருந்து அவர் சரியில்லை. என்கிட்ட முகம் கொடுத்து அவர் பேசாம இருந்ததே இல்லை, என்கிட்ட சொல்லாம எங்கயும் போனது இல்லை. இன்னைக்கு என்கிட்ட சொல்லாம அவர் ஊருக்கு போயிருக்கார். சொல்லுங்க மாமா நீங்க என்ன சொன்னீங்க அவர்கிட்ட” என்று குரலை உயர்த்தி பேசினாள் அவள்.

 

ஆதிரா ஆதிக்காக உரிமையுடன் பேசி அவனிடம் சண்டையிட்டதில் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ஆதிராவுக்கு ஆதியை பிடித்திருக்கிறது. அவள் என் புருஷன் என்று சொன்னதில் அவள் உரிமையுணர்வு தெரிந்தது. “இல்லை லட்சுமி எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை, நான் ஆதிக்கிட்ட பேசிட்டேன். நீ எதுவும் வருத்தப்பட்டுக்காதா” என்று அவன் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

 

அவளோ சமாதானமடைந்தால் தானே மீண்டும் அவன் மேல் பாய்ந்தாள் அவள். “எனக்கு தெரியும் மாமா உங்களுக்கு என் மேல ஒரு விருப்பம் இருந்துச்சு, இதை பத்தி நீங்க அவங்ககிட்ட ஏதோ பேசி இருக்கீங்க, அதுனால தான் அவர் ரெண்டு நாளா ஏதோ யோசனையாவும் குழப்பமாவும் இருந்துருக்கார். சொல்லுங்க மாமா நான் என்னைக்காவது உங்களை விரும்பறதா சொல்லி இருக்கேனா. உங்களுக்கு என் மேல விருப்பம் இருக்குமோன்னு என்னைக்கு எனக்கு தோணிச்சோ அன்னைல இருந்து நான் உங்ககிட்ட இருந்து விலகி விலகி தான் போனேன். அப்புறமும் ஏன் மாமா என் வாழ்க்கைல வந்து நீங்க விளையாடுறீங்க” என்று பொருமினாள் அவள்.

 

“லட்சுமி நான் சத்தியமா சொல்றேன், என்னால இனிமே உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது, நான் ஆதிகிட்ட பேசறேன்…” என்றவனை இடைமறித்து “நீங்க இனிமேலயும் எதுவும் பேசி குழப்ப வேணாம் மாமா, இது எங்க பிரச்சனை நானே பார்த்துக்கறேன், முடிஞ்சா நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணுங்க. நாங்க எல்லாரும் நிம்மதியா இருப்போம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் அவள்.

 

ஆதி ஊருக்கு சென்றவன் மறுநாள் அவளுக்கு போன் செய்தான், அப்போதும் அவன் அவளிடம் சொல்லாமல் சென்றுவிட்டோமே என்று வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவளிடம் சாதாரணமாக பேசுவது போல் பேசிவிட்டு குழந்தைகளிடம் பேசிவிட்டு போனை வைத்தான். ஆதிரா அவனிடம் கேட்க நினைத்து வார்த்தைகளை அப்படி முழுங்கினாள், அவன் ஊரில் இருந்து வந்தபின் நேருக்கு நேர் பேசிக் கொள்ளலாம் என்று விட்டாள்.

 

மறுநாள் முதல் நாள் போல் அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தான் ஆதி. ஆதிரா தான் பெரும் குழப்பத்தில் இருந்தாள், நேரில் சொல்ல முடியவில்லை என்றால் என்னிடம் போனில் சொல்லிவிட்டாவது அவர் ஊருக்கு சென்றிருக்கலாமே என்று அவள் மனம் குமைந்து கொண்டிருக்க அவள் மணாளனோ மறுநாள் காலையில் ஊரிலிருந்து வந்துவிட்டான்.

 

அதிகாலையிலேயே அவள் அலைபேசி அழைக்க எடுத்தவள் “ஹலோ” என்றாள் தூக்கத்துடனே, “வந்து கதவை திற வெளிய தான் நிக்குறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி. ஆதிரா தூக்கத்தில் இருந்து விடுபட்டவள் போனை எடுத்து பார்க்க அழைத்திருந்தது ஆதி தான், எழுந்து சென்று வாசற்கதவை திறந்தவள் எதிரில் அவன் நின்றிருக்க இரண்டு நாட்களாக அவனை காணாமல் தவித்தவள் கண்களில் நீர் துளிர்த்தது.

 

அதை கண்டும் காணாதவன் போல் பார்த்தவன் “என்ன என்னை வாசலோட அனுப்ப போறியா, வழி விடமாட்டியா” என்றான் அவன். அப்போது தான் சுயநினைவு வந்தவள் அவனுக்கு வழியை விட்டாள். அவன் ஏதும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டான், குளித்து உடைமாற்றி அலுவலகம் கிளம்பியவனை நிறுத்தி பேச அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

 

மாலை வீட்டிற்கு வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவனுக்கு காலை உணவை பரிமாறினாள். அதன் பின் அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டான் ஆதி. அவனிடம் என்ன பேசுவது எப்படி கேட்பது என்று அன்று முழுவதும் யோசனையிலேயே சுற்றி வந்தவளை கவலை தோய்ந்த விழிகளுடன் அளவிட்டாள் நேத்ரா. தோழிக்காக அவள் மனம் வருந்தியது. அவளுக்கு நல்லது என்று நினைத்து இந்த திருமணம் நடக்க நாம் உறுதுணையாக இருந்துவிட்டோமோ என்று குற்றஉணர்வு எழுந்தது. மாலை வீட்டிற்கு வந்த ஆதி குழந்தைகளிடம் விளையாடிவிட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான். இரவு உணவு அருந்திவிட்டு குழந்தைகள் லட்சுமியுடன் படுக்க சென்று விட ஆதிரா ஆதிக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

அவனிடம் கொடுக்க குடித்துவிட்டு அவன் கோப்பையை கொடுக்க எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டு அவர்கள் அறைக்கு வந்தாள். ஆதி அவன் கையோடு கொண்டு வந்திருந்த மடிகணினியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவள் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

 

என்ன என்பது போல் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான், “என்கிட்ட சொல்லாம ஏன் நீங்க ஊருக்கு போனீங்க, உங்களுக்கு என்ன தான் பிரச்சனை” என்றாள் அவள். “அது தான் கேட்க வந்தீயா” என்றான் அவன். “அது உங்களுக்கு பெரிய விஷயமா இல்லையா, நான் வீட்டில இல்லைனா ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல. அப்புறம் நான் ஒருத்தி எதுக்கு இங்க இருக்கேன்” என்றாள் அவள் ஆற்றாமையுடன்.

 

“அதெல்லாம் இருக்கட்டும் நான் தான் உன்கிட்ட சொல்லலை, நீ ராஜீவ்கிட்ட போன் பண்ணி கேட்ட, வெற்றிக்கிட்ட போன் பண்ணி சண்டை போட்ட, உனக்கு ஏன் ஒரு தடவை எனக்கு போன் போடணும்ன்னு தோணலையா. நீ போன் பண்ணி கேட்டா நான் உனக்கு பதில் சொல்லி இருக்க மாட்டேனே. நான் எந்த எண்ணத்தோடயும் இல்லை, நீ தான் வேற நினைப்பா இருக்க அதான் உனக்கு எல்லாம் தப்பா தெரியுது. அப்புறம் என்ன சொன்ன நான் ஒருத்தி எதுக்கு இங்க இருக்கேன்னா, அதே தான் நானும் கேக்குறேன் நான் யாரு உனக்கு, நீ யாரு எனக்கு. இதெல்லாம் உன் மனசுல இருக்கு தானே” என்றான் அவன்.

 

‘அவனின் எதிர் கேள்வியில் ஆதிரா திகைத்து போனாள், அவளாக அவனுக்கு போன் செய்யவில்லை தான், அதற்காக இவர் என்னிடம் எதுவும் சொல்லமாட்டாரா, இவர் தானே முதலில் சொல்லாமல் போனது என்னாச்சு இவருக்கு புரிந்தும் புரியாத மாதிரி பேசுறாரே. நான் இவர் பொண்டாட்டின்னு இவருக்கு தான் ஞாபகம் இல்லை’ என்று நினைத்தாள்.

 

உடனே வீம்புடன் “எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு நான் உங்க பொண்டாட்டிங்கறது உங்களுக்கு தான் ஞாபகம் இல்லை, அப்படி இருந்தா என்கிட்ட சொல்லாம போயிருப்பீங்களா” என்றாள் அவள். “நீ வீட்டில இல்லை நான் அம்மாகிட்ட சொல்லிட்டு போனேன், நீ என்ன செஞ்சு இருக்கணும், வீட்டுக்கு வந்ததும் எனக்கு ஒரு போன் பண்ணி கேட்டு இருக்கலாம்ல. உனக்கு போன் பண்ணி சொல்லலாம்னா நீ போனை வீட்டில வைச்சுட்டு போயிருக்க, அப்புறம் எப்படி நான் பண்ணி சொல்லிருக்கணும்ன்னு நீ நினைக்கிற” என்று அவன் கேட்டதும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. நம் மீது தான் தவறிருக்கிறதோ என்று நினைத்தவள் அப்படியென்றால் ஊரில் இருந்து திரும்பி வரும்போது கூட நீங்க என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, “அதான் சொல்லிட்டனே நீ எதுவும் என்கிட்ட கேட்கவில்லை நான் சொல்லவில்லை”.

 

“உனக்கு நினைப்பு எங்கேயோ இருக்கிறது” என்று ஒரு அழுத்தம் கொடுத்து அவன் சொல்ல ஆதிரா சிலையென சமைந்தாள். இவர் என்ன சொல்ல வருகிறார் என் நினைப்பு எங்கிருப்பதாக இவர் நினைக்கிறார் என்று அவள் மனம் வேதனை கொண்டது. அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கில்லை என்பது போல் மடிகணினியை மூடிவைத்துவிட்டு விளக்கணைத்துவிட்டு படுத்தான் ஆதி. அழுதுக் கொண்டே உட்கார்ந்திருந்தவள் அமர்ந்த நிலையிலேயே உறங்கி போயிருந்தாள்.

 

தீடிரென்று ஆதிக்கு விழிப்பு தட்ட திரும்பி பார்த்தால் ஆதிரா உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருந்தாள். அவளை தன்புறம் திருப்பி படுக்க வைத்தவன் அவள் கண்ணீர் கோடுகளை துடைத்துவிட்டு போர்வையை போர்த்திவிட்டான். தூக்கத்தில் அவள் கைகளை அவன் மேல் போட ஆதியும் அப்படியே உறங்கிப் போனான். எதையோ இழந்தது போன்று ஒவ்வொரு நாளும் கழிய ஆதிராவின் முகம் பொலிவிழந்திருந்தது. இப்போதெல்லாம் இருவருக்குள்ளும் தினமும் ஏதாவதொரு சிறு சிறு சண்டையுடனே பொழுது கழிந்தது.

 

ஆதிராவின் முகம் எப்போதும் வேதனை சுமந்திருக்க நேத்ரா மனம் அதைக் கண்டு கவலையடைந்தது. நேத்ராவை கவனித்துவிட்டிருந்த ஆதவன் அவளிடம் “நேத்ரா என்னாச்சும்மா ஏன் எப்பவும் கவலையாவே இருக்க, உனக்கு இந்த மசக்கையினால ரொம்ப கஷ்டமா இருக்கா” என்றான் அவளின் மேல் கரிசனத்துடன்.

 

கணவனின் அந்த அன்பில் கண்களில் நீர் நிரம்ப அவன் தோள் மேல் சாய்ந்தாள் அவள். அவன் நெஞ்சு ஈரமாவதை உணர்ந்து “என்ன நேத்ரா என்னடி ஆச்சு எதுக்கு அழற என்கிட்ட சொல்லும்மா” என்றான் ஆதவன். “எனக்கு ஆதிராவை நினைச்சு தான் கவலையா இருக்கு” என்றாள் அவள். “அண்ணியை நினைச்சு உனக்கு என்ன கவலை, நான் அன்னைக்கே கேட்கணும்ன்னு நினைச்சேன்.

 

“நீ அன்னைக்கு அண்ணனை ஏன் அப்படி கேட்ட, அப்புறம் அண்ணி உன்கிட்ட சண்டை போட்டாங்க அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டிங்க. நானும் நீயா சொல்லுவேன்னு நினைச்சு அன்னைக்கு எதுவும் கேட்கலை. இப்பவாச்சும் சொல்லுடி என்ன விஷயம்” என்றான் ஆதவன். கணவனின் அணைப்பில் இருந்தவள் தன் மனதில் உள்ளவற்றை மொத்தமாக அவனிடம் கொட்டினாள்.

 

அதை கேட்டு வியந்தவன் “எப்படிடி இப்படி ஒரு காதலா அண்ணிக்கு அண்ணன் மேல உண்மையிலேயே அண்ணன் ரொம்ப கொடுத்து வைச்சவர். சரி இதுக்கும் நீ கவலைப்படறதுக்கும் என்ன சம்மந்தம், அதான் அண்ணி விரும்பின வாழ்க்கை தாமதமானாலும் அவங்களுக்கு கிடைச்சாச்சே அப்புறம் என்ன” என்றான் ஆதவன்.

 

“என்ன சொல்றீங்க, அவ மட்டும் தான் உங்க அண்ணனை விரும்புற, அவங்க சந்தோசமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா” என்றாள் அவள். “என்னடி சொல்ற அவங்க சந்தோசமா தானே இருக்காங்க” என்றான் ஆதவன். “நீங்க புரியாம பேசுறீங்க, அவங்க உண்மையான கணவன் மனைவியா இல்லை எனக்கு அது அவங்க நடவடிக்கைகள்ல தெரியுதுங்க” என்றாள் நேத்ரா.

 

“இங்க பாரு நேத்ரா உனக்கு சமாதானம் சொல்றதுக்காகவோ இல்லை எங்க அண்ணனாச்சே அப்படின்னோ நான் இதை சொல்லலை. அவங்க சந்தோசமா தான் இருப்பாங்க அதுக்கு என்னால என்ன செய்ய முடியுமோ நான் அதை செய்யுறேன். அண்ணன் மட்டும் இல்லை அண்ணியும் நமக்காக எவ்வளோ செஞ்சு இருக்காங்க, அவங்க சந்தோசமா இருக்கணும் அதுக்கு என்னால முடிஞ்சதை நான் செய்வேன்.

 

“இதையும் கேட்டுக்கோ, எங்க அண்ணனுக்கும் அண்ணி மேல ப்ரியம் இருக்கு அது எனக்கு எப்படி நிருபிக்கறதுன்னு தெரியலை. ஆனா கண்டிப்பா ஒரு நாள் அவரோட அன்பு தெரிய வரும், அப்போ நீயே என்கிட்ட சொல்லுவ பாரு. அப்புறம் நீ இதை எல்லாம் போட்டு உன்னை கஷ்டப்படுத்திக்காத நீ சந்தோசமா இருந்தா தான் நம்ம குழந்தையும் ஆரோக்கியமா பிறக்கும். சரியா இந்த கவலையை நீ விடு அதான் என்கிட்ட சொல்லிட்டல நான் பார்த்துக்கறேன்” என்றான் ஆதவன்.

 

கணவனிடம் சொல்லிய நிம்மதியில் நேத்ராவும் சற்று தெளிந்தாள். மறுநாளே ஆதவன் அவர்கள் இருவரையும் கண்காணித்தான். நேத்ரா கூறியது போல் அவர்களுக்கு இடையில் ஏதோ ஒரு இடைவெளி இருப்பது தோன்ற அவர்களை அடிக்கடி சந்திக்க வைத்தால் இந்த இடைவெளி குறையும் என்று நினைத்த ஆதவன் ஒரு வேலை செய்தான்.

 

அண்ணா காலையில் வேலைக்கு சென்றால் வீட்டிற்கு வருவதற்கு இரவாகி விடுகிறது, ஞாயிறு அன்றும் நண்பர்களை காண வெளி சென்றுவிடுகிறார். இருவரும் சந்தித்துக் கொள்ளும் தருணம் குறைவாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது. மறுநாள் ஆதிராவிடம் வந்தவன் “அண்ணி எனக்கு ஒரு உதவி செய்யணும். நாம தயாரிச்ச இந்த திட்டத்தை அண்ணாகிட்ட நான் நேத்தே காமிச்சுட்டேன். அண்ணாவும் எல்லாம் ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் அவங்களுக்கு ஒரு தடவை நேர்ல போய் ஒரு விளக்கம் கொடுக்கணும். எனக்கு அவசரமா மதுரைக்கு ஒரு விளம்பரம் விஷயமா போக வேண்டி இருக்கு. நீங்க போய் அண்ணாவுக்கும் புதுசா வந்திருக்கற அந்த விளம்பரத்துறை உதவி மேலாளருக்கும் நீங்க ஒரு செயல் முறை விளக்கம் கொடுக்கணும் அண்ணி” என்றான் அவன் உதவியாக.

 

“என்ன தம்பி இது நீங்க கேட்டா நான் செய்ய மாட்டேனா, இது நம்மோட வேலை தானே நீங்க ஊருக்கு போங்க நான் நாளைக்கு போய் அவங்களுக்கு இதை பற்றி விளக்கிடுறேன்” என்றாள் அவள். “நான் அண்ணன்கிட்ட இது பத்தி போன்ல சொல்லிடுறேன் அண்ணி பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவன் ஊருக்கு கிளம்பிச் சென்றான்.

 

மறுநாள் ஆதி எப்போதும் போல் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க ஆதிராவோ அவள் அலுவலகம் வருவது பற்றி ஆதி எதுவும் கேட்பான் என்று நினைத்திருந்தாள். குழந்தைகளை லட்சுமி பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட அவளும் அவனுடன் அலுவலகம் செல்ல வேண்டி கிளம்பி தயாராக இருந்தாள். காலை உணவை முடித்தவன் அவளிடம் விடைபெற்று அவன் வெளியே கிளம்பிவிட்டான். இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று அவன் பின்னேயே சென்றாள் ஆதிரா.

 

“ஒரு நிமிஷம் நானும் வர்றேன்” என்றாள் அவள். அவன் சரி என்பது போல் அவளை பார்த்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தான். அவள் உள்ளே சென்று அவள் மடிகணினியை எடுத்துக் கொண்டு வர அவன் காரை கிளப்பினான். “நான் இன்னைக்கு வர்றது பத்தி தம்பி உங்ககிட்ட சொல்லலையா” என்றாள் அவள். “சொன்னான்” என்றான் அவன் மொட்டையாக, ஆதிராவுக்கோ ஆத்திரத்தில் முகம் சிவந்தது, தெரிந்தும் என்னை அழைக்காமலே சென்றாள் எப்படி என்ற எண்ணம் தோன்ற மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டாள்.

 

“அப்போ நீங்க எதுவும் சொல்லாம என்னை விட்டுட்டு ஆபீஸ் கிளம்புறீங்க” என்றாள் அவள். “நீ என்கூட வர்றேன்னு சொல்லவே இல்லையே” என்றான் அவன் அசட்டையாக, “நான் உங்ககிட்ட கேட்டா தான் நீங்க என்னை கூட்டிட்டு போவீங்களா” என்றாள் அவள். “நீ சொல்லாம எனக்கு எப்படி தெரியும்” என்றான் அவன். “உங்க தம்பி தான் உங்ககிட்ட நான் வர்றது பத்தி சொல்லி இருந்தார்ல அப்புறம் தெரியாத மாதிரி கேக்குறீங்க” என்றாள் அவள்.

 

“உனக்கு என்கூட எப்போமே சண்டை போடணுமா சொல்லு, ஏன் இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே வர்ற, இப்போ என்ன அவன் நீ வர்றதா சொன்னான். நான் தான் உன்னை கூட்டிப் போகணும்ன்னு எதுவும் சொல்லலை. அப்படியே அவன் சொல்லி இருந்தாலும் நான் உன்னை கூட்டி போயிருக்க மாட்டேன். உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தான் என்னிடம் சொல்ல வேண்டும் அதை விட்டு அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க உங்களுக்கு தெரியாதா என்று என்னை கேட்காதே” என்று அவனும் அவளுக்கு மறுமொழி சொல்லிவிட்டு அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கில்லை என்பது போல் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான்.

 

அலுவலகம் வந்திருங்க இதற்கு முன் வந்த இருமுறையும் அவளுக்கு ஞாபகம் வந்து கண்களில் நீர் நிறைத்தது. அவளின் எண்ணத்தின் நாயகனோ எனக்கென்ன என்பது போல் காரில் இருந்து இறங்கி நேராக உள்ளே சென்று விட்டான். அவளை வாவென்றும் அழைக்கவில்லை. தொண்டையில் எதுவோ அடைக்க அவள் உள்ளே நுழைந்தாள். ஆதியின் அறைக்கு செல்ல வந்த ராஜீவ் அவளை பார்த்துவிட “என்னம்மா நீ எப்போ வந்த இங்க எதுக்கும்மா நிக்குற வா உள்ளே வா” என்றான் அவன்.

 

‘இவராவது நம்மை அழைத்தாரே’ என்று நிம்மதியுற்றாள் அவள். “அண்ணா என்னோட லேப்டாப் கார்ல இருக்கு, அவர் பாட்டுக்கு இறங்கி நேரா உள்ளே போய்ட்டார். நான் அதை எடுக்கணும்” என்றாள் அவள். “சரி வாம்மா அவன் உள்ளே தான் இருக்கான்” என்று சொல்லி அவளை ஆதியின் அறைக்கு அழைத்துச் சென்றான். “வா ராஜீவ் நேத்து நான் கேட்ட அந்த பைல் தயாரா இருக்கா, நான் பார்க்கலாமா” என்றான் அவன்.

 

“ஆதி தங்கச்சி லேப்டாப் கார்ல இருக்காம் அதை எடுக்கறதுக்குள்ள நீ உள்ள வந்துட்டியாம்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை ஏறிட்டான் அவன். “நான் உங்களை கூப்பிடுறதுக்குள்ள நீங்க வேகமா உள்ள வந்துட்டீங்க” என்றாள் அவள். “இதை நீயே சொல்றதுக்கு என்ன உனக்காக வேற யாராவது தான் பேசணுமா” என்றவன் “சரி இந்தா கார் சாவி போய் எடுத்துக்கோ” என்று சொல்லி அவளிடம் கார் சாவியை நீட்டினான்.

 

அதை வாங்கிக்கொண்டு வெளியே விரைந்தவள் அவள் மடிகணினியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “எப்போ ஆரம்பிக்கணும்” என்றாள் அவனிடம். “ராஜீவ் அந்த ரமேஷ் வந்தாச்சா பாரு, வந்திருந்தா இங்க வர சொல்லு, ஆதிரா வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்பட்டும்” என்றான் அவன்.

 

அவளை உட்காரு என்று கூட சொல்லாததை அவள் மனம் குறித்துக் கொண்டது. இப்போதெல்லாம் அவன் அவளை பெயரிட்டு அழைப்பதை கூட தவிர்க்கிறான் என்று புரிந்தது. அப்படியே கூப்பிட்டாலும் அவள் முழுப்பெயரையே சொல்லி அழைக்கிறான்.

 

‘எங்கே சென்றது அவனின் ஆரா என்ற அழைப்பு’ என்று அவள் உழப்பிக் கொண்டிருக்க, ராஜீவ் அவளை அமருமாரு சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான் சுயநினைவு வந்தவளாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். “நினைப்பு எல்லாம் எங்க தான் இருக்குமோ” என்றான் ஆதி சலிப்பாக. ராஜீவ் இருவரின் நடவடிக்கையும் கண்டுவிட்டிருந்தான், நண்பனிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அவன் ரமேஷை அழைக்கச் சென்றுவிட்டான். ரமேஷ் வந்ததும் ஆதிரா இருவருக்குமாக அவர்கள் திட்டத்தை விளக்க ஆதியோ அவளை பேசவே விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

 

ரமேஷும் ஆதியுடன் சேர்ந்து ஒத்து ஊத, முடிவில் ஆதிக்கு அந்த திட்டத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லிவிட்டான். ரமேஷும் அதை அங்கீகரித்தான். “நீங்க சொல்றது என்னையே கவரலையே அப்புறம் எப்படி வாடிக்கையாளர்களை கவரும், இப்போ உங்களுக்கு ஆர்வம் போயிடுச்சு போல முதல்ல இருந்த அந்த துடிப்பு இப்போ இல்லையே. உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தர்றேன் அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் நல்லா தயார் பண்ணிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டான்.

 

ராஜீவ் குழம்பிப் போனான், நேற்று ஆதவனிடம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு இன்று ஆதிராவை இப்படி வறுத்தெடுக்கிறானே இதை பற்றி இவனிடம் பேசியே ஆக வேண்டும் இவன் இன்னும் வெற்றி பேசிய குழப்பத்தில் இருக்கிறானோ, சரி அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தான் அவன். அவனிடம் பேசிவிட்டு ஆதிராவை தேடி வெளியில் வந்தான் அவன்.

 

ரமேஷும் வெளியில் வர ராஜீவ் அவனை நிறுத்தினான், “ரமேஷ் ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றான் ராஜீவ். “சொல்லுங்க ராஜீவ்” என்றான் அவன். “இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன குறை தெரிஞ்சுது நீங்க எதுக்கு சார் கூட சேர்ந்து பேசினீங்க. சார் அவங்க ப்ராஜெக்ட் இன்னும் நல்லா வரணும்ன்னு அவங்ககிட்ட அப்படி பேசினார். அவங்க யாருன்னு தெரியுமா உங்களுக்கு” என்றான் அவன். அவன் தெரியாது என்பது போல் தோளை குலுக்க “அவங்க சாரோட மனைவி” என்றதும் ரமேஷின் முகம் இருண்டது.

 

“இன்னையோட இந்த ஜால்ரா தட்டற வேலை எல்லாம் நிறுத்திக்கோங்க, உங்களுக்கு சார் பத்தி தெரியலை அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. உங்க வேலையை நீங்க ஒழுங்கா பார்க்கறவரை அவர் எதுவும் சொல்லமாட்டார். இப்படி ஜால்ரா தட்றது சுத்தமா பிடிக்காது. நீங்க புதுசு அதான் உங்களுக்கு தெரியலை பார்த்து நடந்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவன் நகர ரமேஷ் நேராக அவளிடம் வந்து மன்னிப்பு கோரினான்.

 

அவன் மன்னிப்புக்கோரி என்ன நடக்கப் போகிறது என்று நினைத்தவள் “அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, எனக்கு வீட்டுக்கு போறதுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு கொடுங்களேன்” என்றாள் அவள். “கொஞ்சம் இரும்மா ஆதி கூடவே நீயும் வீட்டுக்கு போகலாமே” என்றான் அவன். “இல்லை அண்ணா பரவாயில்லை நான் தனியா போய்க்கறேன், குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரணும், நீங்க எனக்கு ஆட்டோ மட்டும் பிடிச்சு கொடுங்க” என்றாள் அவள். அவள் முகம் சுத்தமாக சரியில்லை என்பதை ராஜீவ் கண்டு கொண்டான். அவளுக்கு ஆட்டோ பிடித்து கொடுக்க அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

 

அவளை ஏற்றிவிட்டவன் நேராக ஆதியை சந்திக்க சென்றான், “என்னடா நினைச்சுட்டு இருக்க, எதுக்கு நீ ஆதிராவை இப்படி வாட்டி எடுக்குற” என்றான் அவன். “அதெல்லாம் அவளுக்கு தேவை தான்” என்றான் ஆதி. “என்னடா நீ இன்னும் வெற்றி பேசுனதை மனசுல வைச்சுட்டு இருக்கியா” என்றான் ராஜீவ். அதற்குள் கதவை திறந்து ஆதிரா உள்ளே வர “என்ன இப்படி எல்லாம் இவ தான் உன்கிட்ட பேச சொன்னாளா” என்றான் ஆதி.

 

அவன் என்ன பேசுகிறான் என்று புரியாமல் விழித்தவள், “என்னோட லேப்டாப் விட்டுட்டு போயிட்டேன்” என்றாள். “ஓ இப்படி சொல்லிட்டு நாங்க பேசுறது எல்லாம் ஒட்டு கேட்டியா” என்றான் அவன். “நீங்க என்ன பேசுனீங்கன்னே எனக்கு தெரியாது அப்புறம் எதுக்கு இப்படி சொல்றீங்க” என்றாள் அவள் பதிலுக்கு. “கிளம்பு போது சொல்லிட்டு போகணும்ன்னு கூட உனக்கு தெரியலையா” என்றான் அவன். அவள் கிளம்புமுன் அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பவில்லை என்பது நினைவு வர “சாரி, நான் போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

வெளியில் வந்தபின் தான் அவளுக்கு உரைத்தது, ‘நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்டேன். நான் எப்படி போறேன்னு இவருக்கு கவலையில்லை ஆனா நான் சொல்லிட்டு போகலைன்னு மட்டும் இவருக்கு கவலையா’ என்று மனம் குமைந்தாள். வீட்டிற்கு வந்து லட்சுமியிடம் சொல்லிவிட்டு மேலே அவள் அலுவல் அறைக்கு சென்று அடுத்த திட்டத்திற்கு யோசனை செய்ய ஆரம்பித்தாள். ஏதோ ஒரு யோசனை பிடிபட வேகமாக அடுத்த திட்டத்தை தயார் செய்தாள்.

 

ஆதி மாலையில் வீட்டிற்கு வர அவர்கள் அறைக்கு சென்று உடைமாற்றி வெளியில் வந்தான், வந்ததில் இருந்து அவன் ஆதிராவை தேட அவள் இருக்கும் சுவடே தெரியவில்லை. குழந்தைகளிடம் விசாரித்தான், அவர்கள் தெரியவில்லை என்று கூற அவன் கண்கள் அவளை தேடி ஒவ்வொரு அறையையும் துளைத்தது.

 

அதற்குள் லட்சுமி வந்துவிட “எங்கம்மா போய்ட்டா ஆளே காணோம்” என்றான் அவரிடம், “அதுவாப்பா மேல தான் இருக்கா, ஏதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டு மேலே போயிருக்காப்பா ரொம்ப நேரமா அங்க தான் இருக்கா. அதான் அவளுக்கு சூடா காபி கொடுத்துட்டு வர்றேன்” என்றார் அவர்.

 

‘ஓ அம்மணி வந்ததும் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா செய்யட்டும் செய்யட்டும்’ என்று நினைத்தவன் அவளை தொந்திரவு செய்யாமல் அவனும் ஏதோ அலுவல் வேலை பார்க்கவென்று மடிகணினியை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான். சாப்பிடும் நேரமும் கடக்க இன்னமும் அவள் வரவில்லையே என்று அவளே தேடி மேலே வந்தான் ஆதித்தியன்.

 

அவளோ களைப்பில் உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள். “ஆதிரா எழுந்திரு வந்து சாப்பிட்டு படு, நான் தான் ஒரு வாரம் டைம் கொடுத்தேனே அப்புறம் ஏன் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்யுற வா” என்று அவளை அழைக்க அவளும் மறுபேச்சு பேசாமல் எழுந்து சென்றாள்.

 

அவள் புதிதாக செய்திருந்த அந்த திட்டம் அவர்களுக்கு மிகவும் பிடிக்க ஆதியோ பரவாயில்லை என்பது போல் இருந்தான். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க நேத்ராவிற்கு ஐந்தாம் மாதம் நிரம்பி இருக்க அவளுக்கு பூ முடித்தனர். அவளுக்கு செய்து முடித்து ஆதிராவையும் உட்கார வைத்து நலங்கு வைக்க அவள் தவித்து போனாள். முதல் முறையாக தன் மாமியாரிடம் சற்று கடுமையாக பேசினாள்…..

 

மீன்கள் தண்ணீரில்

நீந்துவது அழகு…

உன் கயல் விழிகள்

நீரில் நீந்தினால்

துடிக்குது என் மனது…

உன் மைவிழி

கண்டு மயங்கினேன்…

அது துடிப்பது

கண்டு வருந்தினேன்…

 

உன் பாத கொலுசொலி

என் காதுகளில்

ரீங்காரம் செய்கிறது…

உன் புன்னகை

என் நெஞ்சில் உறைகிறது…

உன் கண்ணீர்

என் உயிரை உலுக்குகிறது…

 

உன் கண்ணீர் வற்றி

உன் கண்களும்….

இதழ்களும் புன்னகைக்கு

சொந்தமாகும் நாள்

விரைவில்…

 

 

அத்தியாயம் –24

 

நேத்ராவுக்கு பூ முடித்து பின் ஆதிராவையும் அதே மனையில் உட்கார வைக்க ஒரு பெண்மணி சொல்ல அவளையும் உட்கார வைத்து நலங்கு வைத்தனர். ஆதிராவோ லட்சுமியை மன்றாடுவது போல் பார்க்க லட்சுமி ஒரு இயலாத பார்வை பார்த்தார். ஆதிராவோ முள் மேல் நிற்பது போல் தவித்து போனாள். ஆதி ஏதோ வேலை இருந்ததால் அந்த விழாவிற்கு கடைசியாக வந்து சேர நடப்பதை அவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். லட்சுமியோ ஆதிராவுக்கு நடப்பதை ஒரு நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

ஆதிராவின் தவிப்பை யாருமே உணரவில்லை. லட்சுமி இதை பற்றி யாரிடமோ சந்தோசத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை பார்த்த ஆதிராவுக்கு கடுங்கோபம் வந்தது. என்றுமே தன் மாமியாரிடம் கடுமையாக பேசியிராதவள் அன்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் பேசினாள். லட்சுமி ஸ்டோர் அறைக்குள் எதையோ எடுக்க செல்ல பின்னோடு வந்த ஆதிரா அவரை பிடித்துக் கொண்டாள்.

 

“அத்தை உங்ககிட்ட பேசணும்” என்றாள். “என்ன அத்தை இப்படி பண்ணிட்டீங்க, என்னை எதுக்கு மனையில உட்கார வைச்சீங்க. நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எல்லாரும் பேசாம இருந்து இருப்பாங்க. நான் முள் மேல நிக்கற மாதிரி அங்க உக்கார்ந்துட்டு இருந்தேன்” என்றாள் அவள். பேசும் போது அவள் கண்கள் கலங்கியது.

 

“அத்தை இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும், இது போல ஒண்ணு நடக்கவே நடக்காது. உங்களுக்கு அந்த மாதிரி எதாச்சும் நினைப்பு இருந்தா இன்னையோட அதை விட்டுடுங்க. நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். எனக்கு கவினும் கவினியும் தான் குழந்தைங்க, இனி இது போல நடக்காம பார்த்துக்கோங்க” என்று சற்று குரலை உயர்த்தி பேசிவிட்டு சென்றாள் அவள்.

 

எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை வேண்டாமலே அந்த ஆண்டவன் அவளுக்கு கொடுக்கப் போவது அறியாமல் அவள் லட்சுமியிடம் பேசினாள். எப்போதும் இது போல் அவரிடம் அவள் பேசியதில்லை என்பதால் லட்சுமிக்கு அது சற்று மனவேதனையை கொடுத்தது, அவர் அந்த அறையில் இருந்து வெளியில் வர ஆதி அதற்கு அடுத்த அறையில் இருந்து வெளி வந்தான். இவன் எங்கே இங்கே எதுவும் கேட்டிருப்பானோ அவளிடம் போய் ஏதும் சண்டையிடுவானோ என்று எண்ணி அவர் கலங்கினார் அவர்.

 

ஆதியோ அது பற்றி எதுவும் கேளாமல் “என்னம்மா இங்க என்ன செய்யுறீங்க அங்க உங்களை அந்த பக்கத்து வீட்டு ரமா அத்தை கேட்டுட்டு இருக்காங்க” என்று சொல்லிவிட்டு சென்றான் அவன். “ஆதி ஒரு நிமிஷம், ஆதிராவோட அம்மா அப்பா தான் ஏதோ கல்யாணம் இருக்குன்னு ஊருக்கு போயிருக்காங்க, சூர்யா ஏன் வரலை, தனியா வர்றதுக்கு கூச்சப்பட்டுக்கிட்டு வராம இருக்கு போல நீ போன் பண்ணி வரச் சொல்லுப்பா” என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.

 

“சரிம்மா நான் பேசறேன்” என்று சொல்லிவிட்டு அவன் சூர்யாவுக்கு போன் செய்தான். “சூர்யா என்ன செய்யுற மாமா, அத்தை தான் ஊருக்கு போய் இருக்காங்கல நீ மட்டும் அங்க தனியா என்ன பண்ற, அவங்க வர்ற வரைக்கும் நீ இங்க வந்து இரு” என்றான் ஆதி.

 

“அத்தான் அதெல்லாம் வேணாம் நான் இங்கயே இருக்கேன். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லை அத்தான்” என்று மறுத்தான் அவன். “சூர்யா நான் சொன்னா நீ கேட்க மாட்டியா இது உங்க அக்கா வீடு தானே நீ சகஜமா வந்து போ. நீ வேற எதையும் போட்டு மனசை குழப்பிக்காத, அத்தை, மாமா வர்ற வரைக்கும் உனக்கு தேவையான துணி எல்லாம் எடுத்துட்டு நீ உடனே வர்ற” என்று சொல்லிவிட்டு அவன் மேலே பேச இடம் கொடாமல் போனை வைத்துவிட்டான் ஆதி.

 

சூர்யா வேறுவழியில்லாமல் அவர்கள் வீட்டிற்கு கிளம்பி வந்தான். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது நேத்ராவுக்கு பூமுடிப்பு என்று சொன்னது. கீர்த்தி இவனைக் கண்டதும் எழுந்து வந்தாள் “என்ன அத்தான் இப்படி தான் தாமதமா வருவீங்களா, கேட்கறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சுட்டீங்களா. ஒருவேளை இது தான் சாப்பாட்டு நேரம்னு சரியா வர்றீங்களா. ஆமா அத்தை மாமா எங்கே” என்று கிண்டல் செய்தாள்.

 

“அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க, அத்தான் போன் பண்ண பிறகு தான் நான் கிளம்பி வந்தேன். அம்மா அப்பா ஊருக்கு போயிருக்காங்க, ஆமா கார்த்தி அண்ணா வரலையா” என்றான் அவன். “உங்க அண்ணாக்கு இன்னைக்கும் வேலை தான், கொஞ்சம் தாமதமா வர்றதா சொல்லி இருக்கார். அப்புறம் என்ன அத்தான் கடைசில என்னை ஏமாத்திட்டீங்களே” என்றாள் கீர்த்தி.

 

“மதினி உங்களுக்கு நான் தான் கிடைச்சனா என்னை ஏன் இப்படி வதைக்குறீங்க” என்றான் சூர்யா. “பரவாயில்லை நீங்க பொழைசுக்குவீங்க எதுக்கு பயப்படுறீங்க யாரும் உங்களை எதுவும் சொல்லமாட்டாங்க” என்றாள் அவள். “என்னை யார் என்ன சொல்லப் போறாங்க, நீங்க வேற” என்றான் அவன். “பயம் இல்லாமையா என்னை பார்த்து அலறுறீங்க” என்றாள் அவள்.

 

“மதினி நீங்க என்ன சொல்ல வர்றீங்க” என்றான் சூர்யா. “நல்லா வந்து சேர்ந்தீங்க எனக்குன்னு ஒரு மக்கு கொழுந்தன் ஒரு மக்கு தங்கச்சியும்” என்றாள் கீர்த்தி அலுப்புடன். “என்ன முழிக்கறீங்க, நீங்க என் தங்கச்சியை பார்க்கறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா, அவளும் உங்களை தான் பார்க்குறா. ரெண்டு பேரையும் பேச வைக்க நான் உங்ககிட்ட வந்து கடலை போட்டா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி  பார்க்குறீங்களே தவிர பேசவே மாட்டேங்குறீங்களே” என்றாள் பட்டென்று உடைத்து.

 

“அது… அது வந்து…” என்று இழுத்தான் சூர்யா. “தெரியும் விடுங்க, நான் உங்ககிட்ட பேசினா அவ பொறாமைலயாச்சும் உங்ககிட்ட வந்து பேசுவான்னு பார்த்தா. அவளும் பேசலை, நீங்களாச்சும் என்கிட்ட இருந்து தப்பிக்கவாச்சும் அவகிட்ட பேசுவீங்கன்னு பார்த்தா நீங்களும் தேறலை. இப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்கீங்க” என்றாள் அவள். “மதினி என்னோட படிப்பு இன்னும் ரெண்டு மாசத்துல முடியுது, அப்புறம் ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு அதுக்கு அப்புறம் பேசிக்கலாமே. அவளும் படிப்பை நல்ல படியா முடிக்கட்டும்” என்றான் அவன்.

“நீங்க சொல்றதும் சரி தான் பரவாயில்லை நல்ல விதமாவே யோசிச்சு இருக்கீங்க. அங்க பாருங்க நம்ம ரெண்டு பேரும் பேசுறதை பார்த்து அவ எப்படி கொதிச்சு போய் இருக்கான்னு” என்று ஆதர்ஷா இருக்கும் பக்கம் சுட்டிக் காட்ட அவளும் அப்போது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களிருவரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததை ஆதர்ஷா பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘இவ என்ன எப்பப்பாரு இவருகிட்டயே பேசிட்டு இருக்கா, இவளுக்கு வேணுமின்னா போய் கார்த்திக் அத்தானோட பேச வேண்டியது தானே’ என்று மனதுக்குள் அங்கலாய்த்தாள். ‘இவரும் அவகிட்ட நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுறார், என்கிட்ட பேச மட்டும் தான் கசக்குது’ என்று எண்ணி வருந்தினாள்.

 

சூர்யா வந்திருந்ததை பார்த்த ஆதி அவனை அழைத்து சென்று சாப்பிட உட்கார வைத்து விட்டு ஆதிராவை தேடி வந்தான். அவளோ அவர்கள் அறையில் எதையோ வெறித்தவாறு உட்கார்ந்திருக்க  “இங்க வந்து என்ன செய்யுற, உன் தம்பி வந்து இருக்கான் அவனை சாப்பிட உட்கார வைச்சு இருக்கேன். போய் பாரு, அப்புறம் அத்தை, மாமா தான் ஊர்ல இல்லையே அவனை இங்கேயே தங்க சொல்றதுக்கு என்ன. நான் தான் போன் பண்ணி அவனை வரச்சொன்னேன், மேல உன்னோட அலுவல் அறையை ஒழுங்கு பண்ணி அவனுக்கு கொடுத்துடு. அவங்க ஊர்ல இருந்து வர்ற வரைக்கும் அவன் இங்க தான் இருப்பான். சரியா” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

 

ஆதிராவுக்கு இவனை எந்த கணக்கில் சேர்ப்பது என்றே புரியவில்லை ஒரு நேரம் சுட்டெரிப்பது போல் பேசுகிறான், ஒரு நேரம் பார்த்து பார்த்து செய்து அவள் மனதை குளிர்விக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அவள் தம்பியை கவனிக்கச் சென்றாள்.

 

சூர்யாவை பார்த்ததில் மனதுக்கு இதமாக இருக்க அவனிடம் பேசிவிட்டு அவன் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவன் கொண்டு வந்த பையை அவன் தங்கும் அறையில் வைத்தாள். சாப்பிட்டுவிட்டு எழுந்த வந்தவனிடம் கீர்த்தி மேலும் ஏதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

சூர்யா வந்ததிலிருந்து எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டவன் ஆதர்ஷாவை தேட அவள் படியேறி மாடிக்கு செல்வது தெரிந்தது. அவனருகில் ஆதி வந்து நிற்க இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சூர்யா மாடிப்படியேறினான். அந்த மாடியின் ஒரு மூலையில் போய் நின்றுக் கொண்டு வானத்தையே வெறித்து பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் ஆதர்ஷா. அவளருகில் சென்றவன் “ஹாய் தர்ஷு எப்படி இருக்கீங்க” என்றான் அவன்.

 

திரும்பி அவனை முறைத்தவள் “உங்களுக்கு இப்போ தான் என்னை தெரியுது, இவ்வளோ நேரமா நான் உங்க கண்ணுக்கு தெரியலையா” என்றாள் அவள். “என்ன சொல்றீங்க” என்றான் அவன். “அவகிட்ட என்ன பேச்சு உங்களுக்கு” என்றாள் அவள். ‘இவள் கீர்த்தியை சொல்கிறாள் போல’ என்று நினைத்தவன். “அதனாலென்ன” என்றான் அவன். “உங்களுக்கு என்கிட்ட வந்து பேசணும்னா வந்து பேச வேண்டியது தானே அதுக்கு எதுக்கு இப்படி பேசறீங்க. வீட்டுக்கு வந்தவனை அவங்க தான் வான்னு வரவேற்த்தாங்க. உங்களுக்கு அதெல்லாம் தெரியாது போல இருக்கே” என்றான் அவனும் பதிலுக்கு.

 

“நீங்க இப்படி நல்லா ஊரை சுத்திட்டு எல்லார்கிட்டயும் கடலை போட்டுட்டு வர்ற வரைக்கும் நான் பேசாம இருக்கணும் அப்ப…” என்று பேசியவளை அடிக்க கையை ஓங்கியவன் அப்படியே நிறுத்திவிட்டான் அவன் செய்வது அவனுக்கே அதிகப்படியாக தோன்ற ஓங்கிய கையை இறக்கினான்.

 

“ஹேய் என்ன ரொம்ப பேசற போதும் நிறுத்து, அப்படியே ஒரு அப்பு அப்புனேன்னு வை… சீய் நீயும் ஒரு மனுஷின்னு உன்கிட்ட போய் நான் பேச வந்தேன் பாரு. என்னடி தெரியும் என்னைப் பற்றி உனக்கு. நான் கடலை போட்டேன் அதை நீ வந்து பார்த்த, நான் ஒரு பொம்பளை பொறுக்கின்னு நினைச்சுட்டல. இனி உன் மூஞ்சிலயே நான் முழிக்க மாட்டேன். சீய்…” என்று சொல்லிவிட்டு அவன் கீழிறங்கி சென்று விட்டான். அவன் முகம் கோபத்தில் சிவந்து விட்டது.

 

‘அய்யோ அதிகமா பேசிட்டமோ’ என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ‘நாம உண்மையை தானே பேசினோம் அதுக்கு எதுக்கு இவருக்கு கோபம் வருது’ என்று நினைத்துக் கொண்டாள் அவள். சூர்யாவுக்கு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை. ஆதியிடம் சென்று நின்றான் அவனிடம் கிளம்பப் போவதாக சொல்ல ஆதியோ “என்ன சூர்யா நீ தங்கறன்னு சொல்லிட்டு இப்படி கிளம்பறியே” என்று வருந்தினான் ஆதி. 

 

“இல்லை அத்தான் நான் நாளைக்கு வர்றேன், இன்னைக்கு வீட்டுக்கு எல்லாரும் வந்து இருக்காங்க இல்லையா. ப்ளீஸ் அத்தான் எதுவும் சொல்லாதீங்க” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரா அங்கு வர “என்னடா எங்க கிளம்பிட்ட வீட்டுக்கா” என்றாள் அவள்.

 

“ஆமாம் அக்கா நான் நாளைக்கு வேணா வர்றேன்” என்று தயங்கினான் அவன். அவளுக்கு அவனை பற்றி தெரியும் அவன் இது போல் எங்கும் தங்கியதில்லை. தங்குகிறேன் என்று சொன்னதே ஆச்சரியமாக இருந்தது, இப்போது இங்கு வீட்டில் நெறய பேர் இருக்கும் போது தங்குவதற்கு கூச்சப் படுகிறான் என்று நினைத்தவள் “சரிடா நாளைக்கு கண்டிப்பா வந்துடு சரியா” என்று சொன்னாள் அவள்.

 

“என்ன நீ நான் அவனை இங்க இருக்க சொல்லறேன் நீ கிளம்ப சொல்ற” என்றான் ஆதி. “இல்லைங்க இங்க வீட்டில விஷேசத்துக்கு ஆளுங்க வந்து இருக்காங்கல அவன் கொஞ்சம் கூச்சப்படுவான், அதான் நாளைக்கு வர்றேன்னு சொல்றானே விடுங்களேன்” என்றாள் அவள். “சரி சூர்யா நேரமாச்சு நீ கிளம்பு நாளைக்கு காலையிலேயே வந்துடு சரியா” என்று சொல்லி ஆதியும் சம்மதிக்க அவன் எல்லோரிடம் விடை பெற்று கிளம்பினான்.

 

தப்பித் தவறி கூட ஆதர்ஷா இருந்த பக்கம் அவன் திரும்பவே இல்லை. ‘எல்லாம் இவளால தான் என்னை பார்த்து போயிட்டு வர்றேன்னு கூட சொல்லாம இவர் போறதுக்கு இவ தான் காரணம்’ என்று கீர்த்தியை மனதார திட்டியவள் நேரே அவளிடம் சென்றாள். “என்னடி இங்க வந்து நிக்குற” என்றாள் அவள். “நீ முதல்ல என்கூட வா” என்று அவளை அவளுடைய அறைக்கு இழுத்துச் சென்றாள் ஆதர்ஷா. “எதுக்குடி இப்படி இழுத்துட்டு வர்ற, சொல்லு என்ன விஷயம்” என்றாள் கீர்த்தி.

 

“என்ன விஷயமா எல்லாம் உன்னால தான் பாரு அவர் இங்க தங்க வந்தாரு இப்போ அப்படியே சொல்லாம கொள்ளாம கிளம்பி போறார். எல்லாமே உன்னால தான் உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல நீ போய் கார்த்திக் அத்தான்கிட்ட பேச வேண்டியது தானே அப்புறமும் நீ ஏன்…” என்று அவள் வார்த்தைகளை கொட்ட அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் கீர்த்தி. “சீய் வாயை மூடு என்ன பேசிட்டே போற” என்றாள் கீர்த்தி ஆத்திரமாக, “என்ன நீயும் அவரை மாதிரியே என்னை அடிக்க வர்ற, ரெண்டு பேரும் இதுலயும் ஒண்ணா தான் இருக்கீங்க” என்றாள் அவள் அழுகையுடன்.

 

“அவர் என்கூட பேசினா உனக்கென்ன நீ அவரை விரும்புறியா” என்றாள் கீர்த்தி நேரடியாக, “அது தெரியாம தான் நீ அவர்கூட பேசினியா” என்று மூக்கை சிந்தினாள் ஆதர்ஷா. “நீ சரியான முட்டாள் தான் உன்னை நான் எப்பவோ கண்டு பிடிச்சுட்டேன். அண்ணா கல்யாணத்துக்கு வந்து இருக்கும் போதே உன் பார்வை சூர்யா பக்கம் இருந்தது எனக்கு தெரியும், ஆனா அப்போ சூர்யா உன்னை திரும்பி கூட பார்க்கலை. உங்களை எப்படி சேர்க்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் நான் அவர்கிட்ட பேசறது பார்த்து உன் முகம் கோபத்துல சிவந்தது பார்த்தேன்”

 

“நீ இதை காரணமா வைச்சு அவர்கிட்ட உன் மனசை சொல்லுவன்னு பார்த்தா, நீ எங்க ரெண்டு பேரையும் தப்பா நினைக்குறியா. அவர் கிட்ட என்ன பேசின, அதுனால தான் அவர் கிளம்பி போனாரா” என்றாள் கீர்த்தி. ஆதர்ஷா நடந்ததை சுருக்கமாக சொல்ல, உன்னை அடிக்காம விட்டாரா அவர். நானா இருந்தா நொறுக்கிருப்பேன்” என்றாள் கீர்த்தி.

 

“நீ என் தங்கச்சிடி” என்றவளை “என்ன அப்படி பார்க்குற நீ எனக்கு நாலு மாசம் இளையவ தானே அப்போ நீ எனக்கு தங்கச்சி தானே, சரி அவரை பற்றி முழுசா தெரிஞ்சுக்காம எப்படி அவரை கடலை போடுறன்னு சொல்லுவ, உனக்கு வாய் ரொம்ப அதிகமா போச்சு, இங்க பாரு ஒண்ணு தெரிஞ்சுக்கோ எனக்கு கார்த்தி அத்தான் மேல தான் இஷ்டமா இருந்துச்சு வேற யாரையும் நான் நினைக்கலை. புரிஞ்சுக்கோ இனிமே இப்படி எல்லாம் பேசி வைக்காத, சரியா” என்றாள் அவள்.

“சாரி கீர்த்தி நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடு. அவர் மேல உள்ள காதல் தான் உன் மேல பொறாமை வந்து அவர்கிட்டயும் ஏதேதோ பேசிட்டேன் உன்னையும் பேசிட்டேன்” என்று அழுதாள் ஆதர்ஷா. “சரி விடு நீ பண்ண தப்புக்கு அவர்கிட்ட நீ தான் போய் மன்னிப்பு கேட்கணும்” என்றாள் அவள். “அவர் என்னை மன்னிப்பாரா” என்றாள் அவள் அழுகையினூடே. “அதை பத்தி எனக்கு தெரியாது, நீ அவர் மன்னிக்கற அளவுக்கு பேசணும் ஏன்னா தப்பு உன் பேர்ல தான்” என்றாள் கீர்த்தி.

 

வந்திருந்தவர்கள் எல்லாரும் கிளம்பிச் சென்றிருக்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுத்தனர். ஆதிராவோ அவர்கள் அறைக்கு சென்றவள் சாப்பிடக் கூட வெளியில் வரவில்லை. லட்சுமி சூடாக பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு சென்றார். இரண்டு பழமும் பாலும் கொடுத்து அவளை சாப்பிட சொல்ல லட்சுமியின் அந்த செயலில் அவள் குற்றஉணர்வு கொண்டாள். தனக்காக தானே அவர் இது போல் செய்தார், என்னுடைய பிடிவாதத்தால் அவரை அதிகமாக பேசிவிட்டோமோ என்று அவள் கலங்கி தன் மாமியாரின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

 

“அத்தை மன்னிச்சுடுங்க நான் பேசின எதையும் மனசுல வைச்சுக்காதீங்க அத்தை” என்றாள் அவள். “விடும்மா நீ எதுக்கு கவலைப்படுற இப்பவும் என்னோட ஆசை அப்படியே தான் இருக்கு, உங்க அம்மாவுக்கும் அந்த ஆசை இருக்கும் அது எப்பவும் உன் மனசுல இருக்கட்டும். சரி அந்த பேச்சை விடுவோம், நீ இந்த பழத்தை சாப்பிட்டு பாலைக் குடிம்மா சரியா” என்றுவிட்டு போய்விட்டார் அவர்.

 

அவர் சென்றதும் உள்ளே நுழைந்த ஆதி “பேசறது எல்லாம் பேசிட்டு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்குற” என்றான் அவளைப் பார்த்து, ‘அய்யோ இவர் எப்போ வந்தார், நாம பேசினதை எல்லாம் கேட்டு இருப்பாரோ’ என்று நினைத்தாள்.

 

“என்ன யோசிக்கற நான் எல்லாம் கேட்டு இருப்பேன்னு யோசிக்கறயா, நீ அம்மாவை கூப்பிட்டு பேசும் போதே நான் கேட்டுட்டேன். அங்க வைச்சு கேட்டா அம்மா சங்கடப்படுவாங்கன்னு தான் எதுவும் பேசலை. இப்போ அவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு நீ அவங்களை பேசற, உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு அவங்க நினைச்சது தப்பா” என்றான் அவன்.

 

“அதுல எந்த தப்பும் இல்லை ஆனா நமக்கு அப்படி எல்லாம் நடக்காதுன்னு அவங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம் உங்களுக்குமா தெரியாது” என்றாள் அவள். சில நிமிடம் அவளின் பதிலில் திகைத்து நின்றுவிட்டவனுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது.

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க, இப்படி தான் ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் போய் நமக்குள்ள ஒண்ணும் இல்லைன்னு தம்பட்டம் அடிப்பியா, ரொம்ப சந்தோசமா இருக்குடி நீ செய்யுறது. இந்த நாலு சுவத்துக்குள்ள நடக்கறது இப்போ எல்லோருக்கும் தெரிய போகுது அப்படிதானே, எல்லாரும் என்னை வந்து கேள்வி கேட்கணும் அதுக்கு தானே நீ இப்படி செய்யுற, போதும் நீ எதுவும் பேச வேணாம்.

 

“அவங்க கேட்டா சரின்னு சொல்லிட்டு போகாம நீ எப்போ பார்த்தாலும் நடக்காது வேணாம்னு என்னனென்னவோ பேசி எங்க அம்மாவை கஷ்டப்படுத்தி அன்னைக்கு நேத்ரா கூடவும் சண்டை போட்டு, இதெல்லாம் எதுக்கு பண்ற, நீ இந்த நினைப்புல தான் இருக்கியா எப்பவும். இது தான் உனக்கு கடைசி இனிமே இப்படி யார்கிட்டயாச்சும் நீ பேசின நான் நானா இருக்க மாட்டேன்” என்று அவன் உறும ஆதிரா முழுவதுமாக தொய்ந்துபோனாள். விளக்கணைத்து படுத்தவன் வெகு நேர யோசனைக்கு பின்னே கண்ணயர்ந்தான்.

 

மறுநாள் காலையில் வந்த சூர்யா சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்ப ஆதி அவனிடம் ஆதர்ஷாவையும் கூட்டிச் செல்லுமாறு கூற வேறு வழியில்லாமல் அவனும் அவளை கூட்டிக் கொண்டு சென்றான். அவள் அவனிடம் ஏதோ பேச வர “என்னை மன்னிச்சுடுங்க…” என்று ஆரம்பித்தவளை “கொஞ்சம் நிறுத்து நான் உன்கூட பேச விரும்பலை, அத்தான் சொன்னாரேன்னு தான் உன்னை கூட்டிட்டு போகவே நான் ஒத்துக்கிட்டேன். நீ எதுவும் பேசி என்னை கொல்லாதே” என்று அவன் சொல்லிவிட அவள் கண்களில் நீர் தளும்பியது.

 

அதற்கு பின் அவன் அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பாமலே வண்டியை ஓட்டினான். இடைப்பட்ட நாட்கள் ஒரு வெறுமையுடன் கழிய சனிக்கிழமை அன்று இரவு ஆதித்தியன் ஆதிராவை அழைத்தான் “நாளைக்கு நீயும் என்னோட வா, எல்லாரும் உன்னையும் அழைச்சுட்டு வரச் சொல்லிட்டு இருக்காங்க, குழந்தைகளையும் கிளம்பிடு எல்லாரும் காலையில் டிபன் சாப்பிட்டு அப்புறம் கிளம்பலாம்” என்றான் அவன்.

 

ஆதிரா எதுவும் பேசாமல் சரியென்பது போல் தலையாட்ட “ஏன் வாயை திறந்து வர்றேன்னு சொல்ல முடியாதோ” என்றான் அவன். அவள் ஏதும் பேசவில்லை பேசாமல் படுத்துவிட்டாள். ரொம்பவும் கொழுப்புடி உனக்கு என்று நினைத்துக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.

 

காலையில் நால்வருமாக கிளம்பி ஸ்பென்சருக்கு செல்ல ஆதிராவுக்குள் பழைய நினைவுகள் வலம் வரத் துவங்கியது. ஆதி ஏதும் பேசாமல் காரை செலுத்தினான். கவினும் கவினியும் அவளை அதென்ன இதென்ன என்று கேள்விக் கேட்டுக் கொண்டு வர அவள் பதிலளித்துக் கொண்டு வந்தாள். ஆதி காரை நிறுத்தத்தில் விட்டு விட்டு வர நால்வருமாக உள்ளே சென்றனர்.

 

ஆதிரா இதுவரை அங்கு பலமுறை வந்திருந்தாலும் ஆதியுடன் மட்டுமே அவள் அந்த நகரும் படிக்கட்டில் ஏறி இருந்தாள், அவள் தனித்து வந்த பொழுதிலும் நேத்ராவுடன் வந்த பொழுதும் மின் தூக்கியில் மட்டுமே சென்றிருந்தாள். ஒருவேளை இவர் அதில் ஏறச் சொன்னால் என்ன செய்வது என்று அவள் பலவாறு தன்னை உழப்பிக் கொண்டிருக்க ஆதியோ அவள் கையைப்பிடித்து “என்ன இங்கேயே நிற்க போறதா உத்தேசமா வா” என்று அவளை அழைத்துக் கொண்டு நகரும் படிக்கட்டில் மேலே ஏறினான்.

 

குழந்தைகள் இதற்கு முன் இது போல் ஒரு முறை ஆதியுடன் வெளியில் வந்திருந்த போது அதில் ஏறி இருந்ததில் அவர்கள் குதூகலத்துடன் தனித்து மேலே ஏறினர். ஆதிராவோ அவன் கைப்பிடித்து அழைத்து சென்றதில் அவனுக்கு ஒருவேளை என்னை பற்றி நினைப்பு வந்திருக்குமோ என்னை கண்டு கொண்டிருப்பானோ என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை.

 

‘இவர் என்னைக்கு தான் என்னை புரிஞ்சுக்குவார் கடவுளே கடைசி வரைக்கும் இவர் என்னை புரிஞ்சுக்காமலே போயிட்டா…’ என்று அவள் நெஞ்சம் தவிக்க நாயகனோ அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

 

“என்ன நினைப்புல தான் இருப்பியோ, எப்போ பார்த்தாலும் எதாச்சும் யோசனையோடவே இருக்கறது. வா” என்று சொல்லிக் கொண்டே அவளை இழுத்துச் சென்றான். ஒருவழியாக அவர்கள் உணவு கூடத்தை அடைந்தனர். அங்கு எல்லோரும் இவர்களுக்கு முன்னமே வந்திருந்தனர். ஆதிராவோ இன்னமும் நடப்புக்கு வந்தாளில்லை. இவ்வளவு நடந்ததில் அவள் கவனிக்க மறந்தது ஒரு விஷயத்தை, அதை கவனித்திருந்தால் அவர்களுக்குள் ஏற்பட போகும் பிணக்கை சரி செய்திருக்க முடியுமோ என்னவோ….

 

ஆதி அவளை மீண்டும் உசுப்ப தன்னுணர்வுக்கு வந்தவள் எல்லோரிடமும் சகஜமாக உரையாட ஆரம்பித்தாள். குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் ராகுல் வகை வகையாக ஏதோ வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்க எல்லோரும் அவனை கேலி செய்துக் கொண்டிருந்தனர்.

 

“என்னடா நீங்க, நான் இன்னும் சாப்பாடே சாப்பிட ஆரம்பிக்கலை. இது வெறும் நொறுக்கு தீனி தானே அதுக்கு எதுக்குடா கண்ணு வைக்குறீங்க போங்கடா” என்றான் சிணுங்கலாக “இவனை கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அர்ச்சனா. “நீயெல்லாம் எப்போ தான் திருந்த போறே” என்றாள் அவள்.

 

“தங்கச்சி நீ சொல்லும்மா இவங்க எல்லாரும் நான் சாப்பிடுறேன்ன்னு பொறமைப்படுறாங்க, நீ தான் அன்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ண நீ சொல்லும்மா நீ சொன்னா சரியா தான் இருக்கும்” என்று சொல்லி ஆதிராவை உதவிக்கு அழைத்தான் அவன். “அண்ணா நான் சொல்றது நீங்க கேப்பீங்கன்னு தான் சொல்றேன், இப்படி அனாவசியமா கண்ட நேரத்துலயும் நீங்க இப்படி நொறுக்கு தீனி சாப்பிடறது உடம்புக்கு நல்லது இல்லை அண்ணா, அதுவும் இது சாப்பிடுற நேரம் இப்போ நீங்க இதெல்லாம் சாப்பிட்டா அப்புறம் சாப்பாடு எப்போ சாப்பிடுவீங்க. இதெல்லாம் பின்னாடி பெரிய பிரச்சனையா வரும் அண்ணா. அளவோடு சாப்பிட்டா வளமோடு இருக்கலாம். சரியா அண்ணா” என்றாள் அவள்.

 

“அப்பா நம்ம ஆதிராவே சொல்லியாச்சு இனிமேவாச்சும் கேப்பீங்களா” என்று அர்ச்சனா அவனை பார்க்க “சரி” என்பதாய் தலையை ஆட்டினான் அவன். “தேங்க்ஸ் அண்ணா” என்றாள் அவள். “டேய் கேக்க மறந்துட்டேன் இந்த வெற்றி பயலை நீங்க கூப்பிடலையா நான் தான் அவன் இங்க வந்து இருக்கும் போது ஊருக்கு போயிட்டேன். நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன், அவனை பார்க்கலாம்ன்னு பார்த்தா அவனை கூப்பிடாம விட்டு இருக்கீங்க” என்று கேட்டு வைத்தான்.

 

நடந்த விஷயம் அறியாதவனாக அவன் கேட்டு வைக்க ஆதியின் முகமும் ஆதிராவின் ஒருங்கே இருண்டது. “சரிடா கிளம்பலாமா” என்றான் ஆதி. “என்னடா இரு சாப்பிட்டு போகலாம்” என்று ராஜீவ் சொல்ல சரியென்றான் ஆதி. எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மீண்டும் ராகுல் வெற்றி பேச்சை எடுக்க அவனை வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்குமாறு அர்ச்சனா அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

 

ஆதியும் ஆதிராவும் எல்லோரிடமும் விடை பெற்று கிளம்பினர். ஆதிரா குழந்தைகளுக்கு ஏதோ வாங்க வேண்டுமென்று கூற “சரி வா” என்று அவர்களை அழைத்துக் கொண்டு லேன்ட்மார்க்கிற்குள் நுழைந்தார்கள். ஏதோ நினைவில் ஆதி வேகமாக நகரும் படிக்கட்டில் இறங்கி லேன்ட்மார்க்கின் அடுத்த தளத்திற்கு சென்றான்.

 

அவனுக்கு பிடித்த பாரதியார் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி பார்க்க அருகில் அவள் இல்லை. குழந்தைகள் அவன் அருகில் நின்றுக் கொண்டு எதையோ எடுத்து பார்த்துக் கொண்டிருக்க “அம்மா எங்கேடா” என்று அவன் குழந்தைகளிடம் கேட்க “தெரியலைப்பா” என்றாள் கவினி.

 

“நீங்க இங்கேயே இருங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக மேலே ஏறினால் அவளோ படியின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். “என்ன இங்க எதுக்கு நிக்குற, திரும்பவும் உன் கனவுலகத்துக்கு போயிட்டியா. கூடவே வரமாட்டியா” என்று அவளை திட்டிக் கொண்டே அவளை இழுத்துச் சென்றான். அவன் தனித்து விட்டு போனதில் கண்களில் நீர் வழிய நின்றிருந்தவளை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

 

அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு நால்வரும் அங்கிருந்து கிளம்பினர். ஆதிராவிற்கு அங்கு சென்று வந்ததிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை. ஆதி இப்போதாவது அவளை கண்டு கொள்வான் என்று எண்ணி இருந்தவள் அவனின் போக்கில் மிகுந்த வருந்தம் கொண்டாள். அவள் என்ன செய்தாலும் அதில் ஒரு குறையை அவன் கண்டு பிடித்து திட்டிக் கொண்டே இருந்தான். நாட்கள் இப்படி போய் கொண்டிருக்க ஒரு நாள் ஆதவன் அவளிடம் வந்து ஒரு நல்ல விஷயம் சொன்னான்.

 

“அண்ணி அண்ணி” என்று உள்ளே வரும் போதே சந்தோசத்துடன் அவளை அழைத்தவன் முன்னில் “என்ன தம்பி வரும் போதே என்னை கூப்பிட்டுட்டே வர்றீங்க. என்ன விஷயம்” என்றாள் அவள். நாம தயாரிச்ச விளம்பரத்துக்கு தான் இந்த வருஷம் பரிசு அறிவிச்சு இருக்காங்க அண்ணி. அதுக்கு வடிவமைச்ச உங்களுக்கும் ஒரு சிறப்பு பரிசு அறிவிச்சு இருக்காங்க அண்ணி. அண்ணா இப்போ தான் கூப்பிட்டு சொன்னாங்க” என்றான் அவன்.

 

ஆதிராவுக்கு மனம் வலித்தது அவளை அழைத்து அவன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று. அன்று இரவு வீட்டிற்கு வந்தவன் வழக்கம் போல் எப்படி இருப்பானோ அப்படியே இருந்தான். குழந்தைகளிடம் விளையாடினான், சாப்பிட்டான் படுத்து உறங்கியும் விட்டான். அங்கு உறங்காமல் இரு விழி அவன் விழி பார்க்குமா என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது……

 

என் கண்களின் மொழி உனக்கு புரியவில்லையா

என் காதல் உனக்கு விளங்கவில்லையா

என் அன்பை என்று நீ அறிவாய்

என் உடலின் ஒவ்வொரு அணுவும்

உனக்காய் துடிக்கிறதை எப்போதறிவாயடா…

 

                                                                                          

புரிகிறது கண்ணே புரிகிறது

உன் விழி பேசும் மொழியால்….

திணறிப் போயிருக்கும் என்னை

புரியவில்லையா

தெரியவில்லையா

விளங்கவில்லையா

என்று நீ கேட்பதறிவேன்

காத்திரு கண்மணி

உண்மை உணரும் நாள்

வெகு தொலைவில் இல்லை….

 

 

 

Advertisement