Advertisement

அத்தியாயம் –19

 

“வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான் உங்க மேல கோவமா இருக்கேன் அண்ணா” என்றாள் அவள். “அப்பா நான் தப்பிச்சேன்” என்றான் ஆதித்தியன்.

 

“உன் தங்கச்சி கேக்குற கேள்விக்கு நீயே பதில் சொல்லிக்கோ, என்னை ஊடையில விட்டு கேள்வி கேக்காதடா இனிமே” என்றான் ஆதி. “இல்லைம்மா அப்போதான் இவன் ஊருக்கு போயிட்டானே, அதான் நாங்க வரலை” என்றான் ராஜீவ்.

 

“ஊருக்கு அவர் தானே போனார் நான் போகலையே, நான் இங்க தானே இருந்தேன். நீங்களாம் வந்து என்னை பார்த்து இருந்தா எனக்கு உடம்பு சரி இல்லாம போயிருக்காது இல்லை. எனக்கும் உங்களை பார்த்திருந்தா இவர் நினைப்பு கொஞ்சம் குறைஞ்சு இருக்கும்ல, நானும் அவரை ரொம்ப தேடாம இருந்துருப்பேன். நீங்க என்னை ஏமாத்திட்டீங்க அண்ணா” என்றான் அவள்.

 

அவள் யதார்த்தமாக பேசப் போக அவள் மனதில் உள்ளவை ஆதிக்கு புரிந்தது. அவன் ஊரில் இல்லாததாலேயே அவள் உடல் நலமின்றி இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும், அவனை அவள் தேடியது அவன் மனதுக்கு இதமாக இருந்தது. “அப்போ தான் வரலை அதுக்கு அப்புறம் எத்தனை மாசம் ஓடிப் போச்சு, நீங்க இப்பவரைக்கும் வரலையே அண்ணா” என்றாள் நிஜமான வருத்ததுடன். “இவன் தான் கல்யாணம் இருக்கு அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்குன்னு சொன்னான்மா” என்றான் ராஜீவ்.

“டேய் என்னடா, பாரு தங்கச்சி என்னை கேள்வி கேக்குது, நீ பாட்டுக்கு சிரிச்சுட்டு இருக்க” என்றான் ராஜீவ். “அப்பாடா நான் தப்பிச்சேன், இவ்வளோ நாளா நீ தானே என்னை கேள்வி கேட்ட, இப்ப உன் தங்கச்சி கேக்குறா, நீயாச்சு அவளாச்சு. என்னை விடுங்கப்பா” என்றான் ஆதி.

 

“அண்ணா நாங்க இங்க வந்து இருக்கும் போதே உங்களை கூப்பிட்டாச்சு. அப்புறம் எதுக்கு நீங்க இவர்கிட்ட வரட்டுமான்னு கேட்டீங்க, நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வர்றேன்னு இவருக்கு தகவல் கொடுத்துட்டு நீங்க நேரா வீட்டுக்கு வந்து இருக்க வேண்டியது தானே” என்றாள் அவள்.

 

“சரிம்மா இந்த வாரம் நாங்க கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர்றோம்” என்றான் ராஜீவ். அருணாசலம் அப்போது உள்ளே வர மரியாதை நிமித்தம் அவள் எழுந்து நின்றாள். “பரவாயில்லை உட்காரும்மா” என்று அவர் சொன்ன போதும் அவர் முன்னிலையில் அவள் அமரவே இல்லை. அவர் சென்ற பின்னே அந்த இருக்கையில் அமர்ந்தாள். ஆதிக்கு இப்போதெல்லாம் அவளுடைய ஓவ்வொரு நடவடிக்கையும் அத்துபடி ஆகிப் போனது.

 

தொழிளார்களுக்கு அவள் கையாலேயே இனிப்பும் துணிமணிகளும் வழங்கச் சொன்னார் அருணாசலம். சிறு கூச்சத்துடன் மறுத்தவளை கட்டாயப்படுத்தி செய்யச் சொன்னார்கள். எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இனிப்பும் துணிமணிகளும் வழங்கியவளை கண்டு எல்லோரும் அவளை கனிவுடன் பார்த்தனர், ஒரு சிலர் அவளிடம் வந்து பேசி நன்றி கூறிச் சென்றனர். கணவனின் கம்பீரமான இன்னொரு முகம் கண்டு ஆதிரா பிரமிப்படைந்தாள். பெருமையாகவும் உணர்ந்தாள்.

 

எல்லோரிடமும் விடைபெற்று அவர்கள் வீட்டிற்கு வர ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சூர்யாவின் முகம் யோசைனையில் இருப்பது போல் தோன்ற “என்ன சூர்யா என்ன யோசனையா இருக்க, எதனாச்சும் பிரச்சனையா, என்கிட்ட சொல்லுடா” என்றாள் ஆதிரா கனிவாக. குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு சங்கரனை கதை சொல்ல சொல்லி அவர்கள் அறையிலேயே உறங்கிவிட்டனர். 

 

“சூர்யா வர்றியா நாம கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்” என்று ஆதித்தியன் அவனை அழைக்க மறுக்காமல் அவனுடன் கிளம்பினான். “ஆரா நீ வீட்டில இரு, நானும் சூர்யாவும் கடைக்கு போய்ட்டு வர்றோம்” என்றவனை வித்தியாசமாக பார்த்தாள் அவன் மனைவி. “சரிங்க போய்ட்டு வாங்க, என்கிட்ட சொல்லமாட்டீங்களா, என்னை கூப்பிடமாட்டீங்களா” என்று முகத்தை திருப்பினாள் அவள்.

 

“சூர்யா நீ கார் எடு, நான் ஒரு ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்” என்றான் ஆதி, அவன் வெளியில் செல்லவும், முகத்தை திருப்பி இருந்த மனைவியின் அருகில் வந்தவன், அவள் எதிர்பாராத தருணத்தில் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு “செல்லம் கொஞ்சம் எனக்காக காத்திருக்க மாட்டியா, நாங்க ஒரு அரைமணி நேரத்தில வந்துடுறோம், சரியா” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான். நடந்தது கனவா நனவா என்று பிரமிப்பில் ஆழ்ந்தாள் ஆதிரா.

 

அவன் முத்தம் தந்த இனிய உணர்வில் அவள் மிதந்து கொண்டிருந்தாள், அவனின் செல்லம் என்ற அழைப்பு அவள் காதுகளில் செல்ல சிணுங்கலாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ அவள் அறியாள், ஆதியும், சூர்யாவும் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு கைநிறைய பைகளுடன் வந்தனர்.

 

மனைவி கிளம்பும்முன் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தது கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவன், “ஆரா” என்றழைத்தான். அவளிடமிருந்து பதில் ஏதும் வராமல் போக அவன் மீண்டும் அழைத்தான், “ஆரா” என்று அழைத்தவாறே அவள் தோளை தட்ட “என்னங்க நீங்க இன்னும் போகலையா” என்றாள் அவனைப் பார்த்து, சூர்யா சத்தமாக சிரிக்க, “என்னடா எதுக்கு சிரிக்கற, சொல்லிட்டு சிரியேன்” என்றாள் அவள்.

 

அதற்குள் சத்தம் கேட்டு சங்கரன், கோமதியும் எழுந்து வர, “என்னாச்சு சூர்யா எங்க போனீங்க, இதென்ன இவ்வளோ பை” என்றார் கோமதி. அப்போது தான் அருகில் வைக்கப் பட்டிருந்த துணிப்பைகளை கவனித்தாள் ஆதிரா. ‘கடைக்கு போய்ட்டு வந்துட்டாங்களா, அதுவரைக்கும் நாம இப்படியேவா உட்கார்ந்துட்டு இருந்தோம்’ என்று யோசித்துக் கொண்டே அவள் தலையில் குட்டிக்கொள்ள, “என்னம்மா ஆதிரா என்னாச்சு எதுக்கு தலையில குட்டிக்கற” என்றார் சங்கரன்.

 

“ஒண்ணுமில்லைப்பா, தூக்க கலக்கம்” என்று சொல்லிவிட்டு அவள் கணவனை பார்க்க, அவன் உள்ளுக்குள் சிரிப்பது நன்றாக தெரிந்தது, ‘எல்லாம் உங்களால் தான்’ என்று அவள் கண்களாலேயே மிரட்ட, ‘நான் என்னடி பண்ணேன்’ என்று அவன் கண்களாலேயே அவளுக்கு பதில் கொடுத்தான். “சூர்யா நான் கேட்டுடே இருக்கேன், என்னடா இதெல்லாம்” என்றார் கோமதி.

 

“அத்தை இதெல்லாம் தீபாவளிக்கு நானும் சூர்யாவும் போய் கடையில எடுத்துட்டு வந்தது, இந்தாங்க” என்று எல்லோர் கையிலும் துணி அடங்கிய பையை கொடுத்து பார்க்கச் சொன்னான். சூர்யாவின் கைகளில் நான்கைந்து பைகளை திணிக்க, “அத்தான் எனக்கெதுக்கு இவ்வளவு, நான் இதெல்லாம் உங்களுக்குன்னு நினைச்சேன். நீங்க எல்லாமே என்கிட்ட கொடுக்கறீங்க. எனக்கு ஒரு டிரஸ் போதும் அத்தான்” என்றான்.

 

“இங்க பாரு சூர்யா நீ காலேஜ் போற பையன் நல்லா டிரஸ் பண்ணிட்டு போக வேணாமா, உன்கிட்ட இது எல்லாம் உனக்குன்னு சொன்னா நீ எடுக்க மாட்டேன்னு தெரியும் அதான் எனக்குன்னு சொல்லி எடுத்தேன். இதெல்லாமே உனக்கு தான், நான் வாங்கி கொடுத்தா வேண்டாம்னு சொல்வியா” என்று அவன் கேட்க, “என்ன சூர்யா யோசனை அத்தான் தானே வாங்கி கொடுக்கறாங்க, நான் வாங்கி கொடுத்தா வேண்டாம்னு சொல்வியா. நான் எப்படியோ அது போல தான் அத்தானும் உனக்கு. நான் வேற அவர் வேறன்னு நினைக்காதே, வாங்கிக்கோ” என்று அவள் அதட்டு போட, “அத்தான் இதை நான் அக்காவுக்காக வாங்கிக்கலை, உங்களுக்காக தான் வாங்கிக்கறேன்” என்று வாங்கிக் கொண்டான். மருமகன் தன் குடும்பத்தில் ஒட்டுத்தலாக இருப்பது கண்டு ஆதிராவின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

“மேலே வா” என்று அவளை அழைத்துவிட்டு அவன் படியேறி செல்ல, “ஆதிரா ஒரு நிமிஷம்மா, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துட்டு போய் கொடும்மா” என்று நொடியில் சென்று காபி கலந்து எடுத்து வந்தார். “அம்மா அவர் காபி” இன்று இழுத்தவளை, “பில்டர் காபி தான் போட்டு இருக்கேன் மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி தான் இந்தா உங்க ரெண்டு பேருக்கும் வைச்சு இருக்கேன். எடுத்துட்டு போ” என்று சொல்லி ஒரு தட்டில் காபி மற்றும் கொஞ்சம் பலகாரம் வைத்து அவளிடம் கொடுத்தார்.

 

அவள் அதை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்ல, “என்னடி இவ்வளோ நேரமா நீ வர்றதுக்கு” என்றவன், “காபி போட்டுட்டு இருந்தியா, கொடு கொடு” என்று அதை எடுத்து பருகியவன், “நல்லாயிருக்கு” என்றான். “நெஜமாவா அம்மா தான் போட்டாங்க, உங்களுக்கு பிடிச்ச மாதிரி போட்டு இருக்காங்களா” என்றாள் அவள். “நெஜமா நல்லாயிருக்கு” என்று அவன் சொல்ல அவளும் தனக்கு ஒன்றை எடுத்து பருகினாள்.

 

“என்ன எதுக்கு மேல வரச் சொன்னீங்க” என்றாள் அவள். “நீ என் பொண்டாட்டி தானே நான் உன்னை தானே மேல வரச் சொன்னேன். பக்கத்து வீட்டு பொண்ணையா வரச் சொன்னேன்” என்றான் அவன். “அய்யோ போதுமே, சொல்லுங்க. ஏதோ விஷயம் இருக்கு, அதுக்கு தான் என்னை வரச் சொல்லி இருக்கீங்க” என்றாள் அவள்.

 

“சரி இந்தா இந்த புடவை எப்படி இருக்குன்னு பாரு” என்றான் அவன். “எனக்கு எதுக்குங்க, இப்போ தானே பிறந்த நாளுக்கு எடுத்தீங்க, அதுக்குள்ள திரும்ப எடுத்து இருக்கீங்க” என்றாள் அவள். “அதான் நீயே சொல்லிட்டியே அது பிறந்த நாளுக்கு எடுத்ததுன்னு, இது தீபாவளிக்கு எடுத்தது, அப்புறம் இது நம்ம வீட்டில இருக்க எல்லாருக்கும் எடுத்தது” என்றான் அவன்.

 

அவளுக்கு எடுத்த புடவையை எடுத்து பார்த்தாள் நாகபழ நிறத்தில் தங்க நிற ஜரிகை இழையோட இருந்த அந்த புடவை அழகாக இருந்தது. அவளுக்காக அவன் எடுத்த ஒவ்வொரு புடவையும் ஒரு தனித்தன்மையுடன் அழகாக இருந்தது.

 

“என்ன அந்த ஒன்னை மட்டும் பார்த்துட்டு பேசாமா இருக்க, அடுத்ததும் பிரிச்சு பாரு” என்றான். ‘எத்தனை புடவை தான் எடுத்து இருக்கார்’ என்று நினைத்தவாறே அவள் அடுத்தது பார்க்க, அது ஒரு டிசைனர் புடவை வெளிர் நீலத்தில் வெள்ளி ஜரிகை இழையோட இருந்த அந்த புடவை ஜொலித்தது. “என்னங்க எனக்கு எதுக்கு இத்தனை புடவை” என்றாள் அவள். “ஒண்ணு உனக்கு தீபாவளிக்கு எடுத்தது, அடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சது, உனக்கு அழகா இருக்கும்ன்னு தோணிச்சு. அதான் எடுத்துட்டு வந்தேன்” என்றான் அவன். “இதெல்லாம் எடுத்து வை, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்” என்றான் அவன். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அவள் அவனருகில் கட்டிலில் அமர “சொல்லுங்க என்ன கேட்கணும்” என்றாள் அவள்.

 

“உண்மையை சொல்லணும்” என்றான் அவன் பீடிகையுடன். இம்மென்றாள் அவள். “சரி நாங்க ரெண்டு பேரும் போய்ட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வந்தோம் நீ அதுவரைக்கும் ஏன் ஒரே இடத்தில சிலையா சமைஞ்சு இருந்த, அங்க வைச்சு கேட்டா உன் தம்பி சிரிப்பான்னு தான் எதுவும் கேக்கலை. என்னாச்சு உனக்கு” என்று எதுவும் தெரியாதவன் போல் கேட்க, ‘கள்ளன்’ என்று அவனை மனதுக்குள் வைதாள் அவள்.

 

“அது…அது வந்து நீங்க தெரிஞ்சுட்டே கேக்குறீங்க, நான் கீழே போறேன்” என்றவள் எழ முற்பட அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்ததில் அவள் அவன் நெஞ்சின் மீது வந்து விழுந்தாள். அவள் நிமிர்ந்து அவனை பார்க்க அங்கு கண்கள் சங்கமித்தன. “அம்மா” குரலில் இருவரது மோன நிலையும் கலைய “வாங்க குட்டிம்மா, தூங்கி எழுந்துட்டீங்களா, அம்மா தேடுனீங்களா” என்றவாறே எழுந்து சென்று கவினியை தூக்கினாள்.

 

“நாங்க அப்பவே எழுந்துட்டோம், ஆச்சி தான் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க, அதான்மா வந்தேன், வாங்க போகலாம்” என்றாள் அவள். “அப்பா நீங்க மட்டும் ஏன் இங்க இருக்கீங்க, நீங்களும் கீழே வாங்க” என்றவளுடன் இருவரும் இறங்கிச் சென்றனர். அன்று இரவு உணவு முடிந்து ஆதிரா மாடிக்கு வர ஆதித்தியன் கட்டிலில் மல்லாக்க படுத்தவாறே விட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான்.

 

ஆதிராவின் காலடி சத்தத்தில் திரும்பி பார்த்தவன், அவள் பின்னே தேடினான். “என்னங்க என்ன தேடுறீங்க” என்றாள் அவள். “குழந்தைங்க எங்கே” என்றான் அவன். “அவங்க ரெண்டு பேரும் தாத்தா, ஆச்சிகிட்ட தான் படுக்க போறாங்களாம். எங்க அப்பா நெறைய கதை சொல்லி ரெண்டு பேரையும் மயக்கிவைச்சுட்டார். ரெண்டு பேருமே வரமாட்டேன் நீங்க போய்த் தூங்குங்கன்னு சொல்லிட்டாங்க” என்றாள் அவள்.

 

“அப்போ சரி நாம தூங்கலாம்” என்றான் அவன். அந்த குரலில் இருந்தது என்ன என்று புரியாமல் யோசித்தாள். விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கை போட்டுவிட்டு கட்டிலின் விளிம்பில் அவனுக்கு முதுகு காட்டி படுக்க, உள்ளமோ தறிகெட்டு ஓடும் குதிரையின் வேகத்துடன் துடித்தது. இதுவரை இருவர் மட்டும் இப்படி ஒன்றாக படுத்து உறங்கியது இல்லை, இதற்கு முன் ஒரு தரம் பாபநாசத்தில் இப்படி உறங்கியது உண்டு, ஆனால் அன்று அவள் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு இப்படி ஓரமா படுத்து இருக்க, பார்த்து கீழே விழுந்துட போற. கொஞ்சம் உள்ள தள்ளி படுத்தா தான் என்ன. என்னை பார்த்து என்ன பயம் உனக்கு, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். தைரியமா உள்ள தள்ளி படு” என்றான் அவன்.

 

அவன் இவ்வளவு சொல்லியபின் தள்ளி படுக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று அவள் தள்ளி படுத்தாள். அவளை உறக்கம் எப்போது தழுவியது என்றே தெரியவில்லை. அவள் லேசாக கண் விழித்து பார்க்கையில் எதிரில் அவன் முகம் அவளையே பார்த்துக் கொண்டிருக்க  கனவோ என்று நினைத்து அவள் கண்கள் மீண்டும் மூட, அதற்குள் மூளை விழிப்பு பெற்றிருக்க, மீண்டும் கண் விழித்து பார்த்தாள்.

 

இவன் எப்படி இவ்வளவு அருகில் நம்மையே வேறு விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவாறே அவள் எழ முயற்சிக்க, அப்போது தான் அவளுக்கு புரிந்தது. அவன் ஒன்றும் அவள் அருகில் படுக்கவில்லை அவள் தான் அவனை ஒட்டி படுத்ததும் இல்லாமல் குழந்தைகள் மேல் கை போட்டும் படுக்கும் பழக்கத்தில் அவன் மீது கை போட்டு உறங்கியிருந்தாள்.

 

“அப்பாடா எழுந்துட்டியா, இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே படுத்துட்டு இருக்கப் போறோம்ன்னு நினைச்சேன். நல்லவேளை ஒரு வழியா நித்திரா தேவி உன்னைவிட்டு போனதுல நீயும் எழுந்துட்ட” என்றான் அவன். “என்னை எழுப்பி இருக்கலாம்ல நேத்து நைட் ரொம்ப நேரமா தூக்கம் வரலை, அதான் காலையில அசந்துட்டேன்” என்றாள் அவள்.

 

“தெரியும் நைட் நீ பிரண்டு பிரண்டு படுக்கும் போதே நினைச்சேன், நீ தூங்கலைன்னு. அதான் நீ தூங்கும் போது எழுப்ப எனக்கு மனசு வரலை. சின்ன குழந்தை மாதிரி முகத்தை வைச்சுட்டு நீ தூங்கிட்டு இருந்த, பத்தாததுக்கு என் மேல உன் கையை வேற போட்டுட்டு தூங்கிட்டு இருந்த. நான் அசைஞ்சா நீ எழுந்துடுவன்னு தான் அப்படியே படுத்துட்டு இருந்தேன்” என்றான் அவன்.

 

அவசர அவசரமாக எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள். குளித்துவிட்டு அவள் வெளியில் வந்ததும் அவன் உள்ளே சென்றான், அவன் வருவதற்குள் உடை மாற்றி விடலாம் என்று எண்ணி அவள் உடையை களைந்து அவன் அவள் பிறந்த நாளிற்கு எடுத்துக் கொடுத்த சேலையை எடுத்து உடுத்திக் கொண்டிருந்தாள்.

 

குளியலறைக்கு சென்றவன் காலை கடனை முடித்துவிட்டு பார்க்க அப்போது தான் ஞாபகம் வந்தது, அவன் துண்டு கொண்டு வர மறந்தது. உடனே வெளியில் வந்தவன் “ஆரா என் துண்டு எங்க மறந்துட்…….” அவளும் அவன் குரலை கேட்டு அப்படியே நின்றுவிட்டாள். “சாரி நான் துண்டு மறந்துட்டேன்” என்று சொல்லி அவன் சுற்று முற்றும் பார்க்க, அவள் அவனுடைய துண்டை தான் தோளில் போட்டிருந்தாள். அவன் தற்செயலாக அவளை பார்க்க துண்டை அவள் மேல் போட்டிருந்தாள். “சரி நீ டிரஸ் மாத்தினதும் சொல்லு” என்றுவிட்டு அவன் மீண்டும் குளியலறைக்குள் புகுந்துவிட்டான்.

 

வேக வேகமாக புடவையை அணிந்துக்கொண்டு குளியலறை கதவை தட்டி துண்டை அவனிடம் கொடுத்தவள் அவனுக்காக எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து மெத்தையில் வைத்துவிட்டு கீழே சென்றாள். குழந்தைகளுடன் சென்று பட்டாசு வெடிக்க ஆதிராவை அங்கு காணோம். “சூர்யா எங்க உங்கக்கா எங்க, பட்டாசு வெடிக்கலாம்ன்னு சொல்லி கூப்பிட்டு வந்தேன், ஆளையே காணோம்” என்றான் ஆதி.

 

“அத்தான் உங்களுக்கு தெரியாதா, அக்காக்கு பட்டாசுன்னா பயம் அத்தான். அவ அதிக பட்சம் கம்பி மத்தாப்பு மட்டும் தான் சுத்துவா. வேற எந்த பட்டாசு போட்டாலும் அவ வெளிய வரமாட்டா” என்றான் சூர்யா. “ஆரா என்ன எங்க போய்ட்ட, இங்க வா” என்றான் ஆதி. “என்னங்க” என்றாள் அவள். “கொஞ்சம் வெளிய வா, நாம பட்டாசு வெடிக்கலாம் வா” என்றான் அவன்.

 

“இல்லைங்க நீங்க போய் வெடிங்க, எனக்கு உள்ள வேலை இருக்கு” என்றாள் அவள். “அத்தை நான் ஆராவை பட்டாசு வெடிக்க கூட்டிட்டு போறேன், வேலை ஏதும் இருந்தா கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான் அவன். ஒரு ஊசி பட்டாசை வைத்துவிட்டு “இந்தா போய் பத்த வைச்சுட்டு வா” என்று அவள் கையில் ஊதுபத்தியை கொடுக்க, “நீங்க போய் வைங்க” என்றாள் அவள்.

 

“நீ வை ஆரா” என்றான் அவன் விடாமல், நடுங்கியவாறே சென்றவள் ஒரு வழியாக திரியில் நெருப்பை வைத்துவிட்டு அவனருகில் வந்துவிட பட்டாசு சத்தத்துடன் வெடித்தது. அவள் சட்டென்று அவன் கையை பற்றிக் கொள்ள “என்னடி உன் தம்பி நீ பட்டாசு வெடிக்க பயப்படுவேன்னு சொன்னான் தைரியமா போய் நெருப்பு வைச்சுட்டு வந்த, இப்போ சத்தத்துக்கு பயப்படுற” என்றான் அவன். “நீங்க சொன்னதுனால தான் போய் வைச்சேன்” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

              

காலையில் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாமல் பாவம் ஆதர்ஷா ஏங்கி போவாள் என்று சொல்லி அவனை அங்கிருந்து கிளப்பிச் சென்றாள் ஆதிரா. அவள் சொன்னது போலவே ஆதர்ஷா முகம் வாடி அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள்.

 

“அண்ணி, அண்ணா, குட்டீஸ் எல்லாரும் வந்துட்டீங்களா, ரொம்ப போர் அண்ணா நீங்க யாரும் இல்லாம, எப்படி தான் இன்னைக்கு பொழுது போகப் போகுதுன்னு நினைச்சேன். நீங்க வந்துட்டீங்க” என்றாள் அவள். ஆதித்தியன் அவளை பெருமையுடன் பார்த்தான். தன்னைவிட தன் வீட்டினரை அவள் நன்றாக புரிந்து வைத்திருப்பது அவனுக்குள் கர்வமாக இருந்தது.

அந்த வார இறுதியில் ஆதித்தியனின் நண்பர்கள் வருவதாக இருந்ததால் முதல் நாள் ஆதியும் ஆதிராவும் கடைக்குச் சென்றனர். மறுநாளைக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ள ஆதி அவளிடம் “ஆரா அன்னைக்கு ஊர்ல செஞ்சியே அதே மாதிரி பாயாசம் பண்ணிடுறியா. ரொம்ப நல்லா இருந்துச்சு” என்றான். “சரிங்க” என்றாள் அவள்.

 

மறுநாள் காலையில் ஆதி மார்கெட்டிற்கு சென்று மீன், கறி வகைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்தான். ஆதவனும், நேத்ராவும் தலை தீபாவளி முடிந்து இன்னமும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. ஆதலால் மாமியாரும் மருமகளும் சேர்ந்து அன்றைய சமையலுக்கு தயார் செய்துக் கொண்டிருந்தனர்.

 

லட்சுமியை எந்த வேலையையும் செய்யவிடாமல் அவளே எல்லாமும் செய்துக் கொண்டிருந்தாள். அவர் அவளுக்கு தேவையானதை நறுக்கி கொடுக்கவும் எடுத்துக் கொடுக்கவும் என்று அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார். “எத்தனை மணிக்கு வர்றாங்கம்மா” என்றார் அவர் மருமகளிடம்.

 

“பன்னிரண்டரைக்கு வந்துடுவாங்க அத்தை” என்றவள் எல்லா வேலையும் முடித்துவிட்டு “அத்தை நான் குளிச்சுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றாள். ராஜீவ்-ராதிகா, கதிர்-அனு, ராகுல்-அர்ச்சனா எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஆதித்தியன் வீட்டிற்கு வந்தான். “அம்மா, ஆரா இங்க வாங்க” என்றான்.

 

“வாங்கப்பா, வாங்கம்மா இப்போ தான் உங்களுக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா, சுத்தமா இந்த அம்மாவை மறந்துட்டீங்களா” என்றார். “அய்யோ அம்மா அப்படிலாம் இல்லை, நாங்க ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க வேலையில கவனமா இருந்துட்டோம். இப்போ எல்லாம் நாங்க பார்த்துகறதே ரொம்ப அரிதாகி போச்சும்மா” என்றான் ராஜீவ்.

 

“ஆரா எங்கம்மா ஆளை காணோம்” என்றான் ஆதி. பேச்சு சுவாரசியத்தில் அவர் “அவ உள்ளே இருக்காப்பா” என்றுவிட்டு எல்லோரையும் தனித்தனியாக விசாரித்துக் கொண்டிருந்தார். அவன் அவர்கள் அறைகதவை திறந்து உள்ளே செல்ல அவள் இருப்பதன் அடையாளம் தெரியாததால் “ஆரா” என்றழைத்தான். உள்ளறையில் இருந்து வேகமாக ஓடிவந்தவள் “என்னங்க” என்றவாறே ஈரத்தலையுடன் நீர் சொட்ட சொட்ட வந்து நின்றாள்.

 

“நான் சொல்றது நீ கேக்கவே மாட்டியா பாரு, எப்படி தண்ணி சொட்ட சொட்ட வந்து நிக்குற” என்று சொல்லி துண்டை எடுத்து அவள் தலையை துவட்டினான். “அய்யோ என்ன செய்யுறீங்க, விடுங்க நானே செய்யமாட்டேனா” என்று அவள் சொல்ல அவன் கேட்காமல் தலை துவட்டிக் கொண்டிருந்தான். “என்ன நடக்குது இங்க, நாங்க பார்த்துட்டோம்” என்று அவன் நண்பர்கள் கோரசாக குரல் கொடுக்க “பார்த்துக்கோங்கடா நம்ம ஹீரோவை இப்படி தான் இருக்கணும் நீங்களும் பார்த்து கத்துக்கோங்க” என்றாள் அனு. “ஹேய் நீங்க எங்கடா இங்க எங்களை தேடி இங்கேயே வந்துட்டீங்களா” என்று அசடு வழிந்தான் ஆதி.

 

“உன்னோட மனைவியை நாங்க இப்போ தான் பார்க்கறோம். ஒரு வழியா அவங்களை எங்களுக்கு காண்பிச்சுட்ட” என்றாள் அர்ச்சனா. “எப்படி இருக்கீங்க, இவன் எங்களை பத்தி உங்ககிட்ட சொல்லி இருக்கானா” என்றார்கள் அவர்கள் ஒருசேர, “அவர் சொல்லலைன்னா என்ன எனக்கு உங்க எல்லாரையும் நல்லாவே தெரியும்என்றாள் அவள்.

 

“நல்லா தெரியுமா எப்படி என்றாள் அவள். “அர்ச்சு இவ என்னை பத்தி எல்லா விஷயமும் எங்க அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சு வைச்சு இருக்கா என்றான் அவன். ஆதிரா அவள் தலையில் லேசாக குட்டிக் கொண்டாள். எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். ஆதிரா ராதிகாவை பார்த்து “ஆமா நீங்க கண்ணாடி தானே போட்டுட்டு இருந்தீங்க இப்ப போடுறது இல்லையா, லென்சா” என்றாள் அவள்.

 

“நான் கண்ணாடி போடுறதை விட்டு பல வருஷம் ஆச்சு, எப்படி இவ்வளோ சரியா ஞாபகம் வைச்சு கேக்குறீங்க” என்றாள் அவள். “நம்ம போட்டோஸ் எதாச்சும் பார்த்து இருப்பா, அதான் கேக்குறா. இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஞாபகம் இருக்க கூடாது ஆரா” என்றான் அவன்.

 

“சரி வாங்க சாப்பிடலாம், என்னங்க எல்லாரையும் கூட்டிட்டு வாங்க” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றாள். ராகுல் நன்றாக சாப்பிட எல்லோரும் அவனை கிண்டல் செய்தனர். “ஏம்மா ஆரா வீட்டில அரிசி எல்லாம் இருக்கு தானே, இங்க ஒரு சாப்பாட்டு ராமன் வந்து இருக்கான். விட்டா உங்க வீட்டையே தின்றுவான் பார்த்துக்கோம்மா” என்றான் கதிர்.

 

“சாப்பிட்டடும் அண்ணா அதுக்கு தானே நீங்க எல்லாம் சம்பாதிக்கறீங்க. சாப்பாட்டுல எப்பவும் வஞ்சனை வைக்கக் கூடாது. எங்க வீட்டில அப்பாவும் தம்பியும் நல்லா சாப்பிடுவாங்க அம்மா எப்பவும் நெறைய சாப்பாடு தான் செய்வாங்க, உழைக்கறவங்க நல்லா சாப்பிட்டா தானே உடம்புக்கு நல்லது. அதுவும் இல்லாம நாம போதும்னு சொல்றது அதுல மட்டும் தானே அண்ணா. ராகுல் அண்ணா நீங்க நல்லா சாப்பிடுங்க, யார் என்ன சொன்னாலும் கேட்காதீங்க. என்ன வேணுமோ கூச்சப்படாம கேட்டு வாங்கிக்கோங்க” என்றவள் அவன் போதும் போதும் என்று சொல்லும் வரை அவனை விடவில்லை.

 

“பாருங்கடா என் தங்கச்சியை என்னை நல்லா புரிஞ்ச ஒரே ஆளு நீ தான்மா, அர்ச்சனா இதெல்லாம் கத்துக்கோ” என்றான் அவன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பாயாசம் அருந்திவிட்டு மீண்டும் தங்கள் அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர்.

 

 

அவர்கள் கல்லூரியில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள் எல்லாம் பகிர்ந்தனர். அப்போது தான் ஆதிரா அவர்களிடம் கேட்டாள், “நீங்க எல்லாரும் காதல் கல்யாணமா பண்ணி இருக்கீங்க, அப்புறம் ஏன் இவங்க மட்டும் பண்ணலை” என்று ஆதித்தியனை பார்த்து கேட்க, “இவனா… இவனுக்கு அம்மா ஆதித்தியன்னு பேரு வைச்சதுக்கு பதில் முனிவர்ன்னு வைச்சு இருக்கலாம், இவன் எல்லா கலாட்டாவும் செய்வான், ஆனா காதல் மட்டும் பண்ணவே மாட்டேன்னு ஒரே அடம், இவன் பின்னாடி சுத்துன பொண்ணுங்க எத்தனையோ பேரு, இவன் தான் யாரையும் திரும்பி கூட பார்க்கலை. சொல்லப் போனா எங்ககிட்ட பேசறதுக்கு முதல்ல இவன் தயக்கம் தான் காட்டினான். நாங்க தான் அவன்கிட்ட சொல்லி நாங்க உனக்கு நல்ல தோழமையா இருப்போம். காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி உன்னை எதுவும் செய்ய மாட்டோம் சொன்னதுக்கு அப்புறம் தான் எங்ககிட்ட நல்லா பழக ஆரம்பிச்சான்” என்று நிறுத்தினாள் அர்ச்சனா.

 

“அப்புறம் அந்த பொண்ணு ரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களாச்சும் இவன் ஆள் வசதியானவன் பார்க்க நல்லா இருக்கான், இவனுக்கு தூண்டில் போடுவோம்ன்னு நினைச்சாங்க. ஆனா ரஞ்சனிக்கு இவன் குணம் பிடிச்சு தான் இவனை சுத்தி சுத்தி வந்தா, ரொம்ப அழகா இருப்பா. இந்த சாமியார் மத்த பொண்ணுங்களை திட்டி அனுப்பின மாதிரி அவளையும் திட்டிட்டான். நாங்களும் இவன்கிட்ட பேசி பார்த்தோம், அதுல எனக்கு எந்த விருப்பமும் இல்லைன்னு சொல்லிட்டான்.

 

“அப்புறம் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி சமாதானபடுத்தி பார்த்தோம், அவ கேட்கவே இல்லை. எனக்கு அவரை பார்க்கற சந்தர்பமாச்சும் கிடைக்கட்டும்னு தினமும் நாங்க காலேஜ் வந்ததும் வந்து பார்த்துட்டு போவா. காலேஜ் விட்டு நாங்க கிளம்பும் போதும் அப்படி தான் செய்வா. இப்ப எந்த ஊருல இருக்காளோ தெரியலை” என்று அவள் சொல்லிக் கொண்டே போக ஆதிராவின் முகமாற்றம் ஆதிக்கு என்னவோ செய்தது.

 

அவன் பேச்சை வேறு திசைக்கு மாற்றினான் எல்லோரும் விடைபெற்று கிளம்ப அவன் நண்பர்கள் ஆதியிடம் “நீ ரொம்ப கொடுத்து வைச்சவன்டா, உனக்கு நல்ல மனைவி கிடைச்சு இருக்காங்க. தங்கச்சியை நல்லா பார்த்துக்கோடா” என்று ராகுல் கூறினான்.

 

எப்போதும் சாப்பாட்டை பற்றியே பேசும் ராகுல் எந்த பேச்சு ஆரம்பித்தாலும் கடைசியில் சாப்பாட்டில் வந்தே முடிப்பவன் முதல் முறையாக ஆதியிடம் இது போல் பேசுவதில் ஆதி ஆச்சரியாமானான். “என்னடா நான் இப்படி பேசறேன்னு பார்க்குறியா, இங்க இருக்க எல்லாரும் உனக்கு பிரிண்ட்ஸ், ஆனா சிஸ்டர் வேற யாரோ, ஆனா எங்க எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டாங்க, எப்படி பார்த்துக்கிட்டாங்க, எங்களோட எவ்வளவு சகஜமா இருந்தாங்க பார்த்தியா. இவங்க எல்லாரும் நம்ம கூட படிச்சவங்க நம்மளை தெரியும் அதுனால நம்ம எல்லாரும் ஒண்ணா பேச முடியுது சந்திக்க முடியுது. இதுவே இவங்க வேற யாரோ ஒருத்தர்னா நிச்சயாம சொல்லறேன் நாம இப்படி வார வாரம் சந்திக்க முடியாது. எப்பவாச்சும் சந்திப்போம் அவ்வளோ தான். நாம அப்போ நம்ம குடும்பத்தையும் பார்க்கணும்னு  அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

 

“ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதி இப்ப நாம எல்லாரும் ஒண்ணா ஒரு குடும்பமா சந்திக்கறோம். இது மாதிரி நீங்க எல்லாரும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும். இப்படி வீட்டுக்கு கூப்பிட்டு வயிறார சாப்பிட்டு மனசார பேசி சிரிக்கற இந்த சந்தோசம் எப்பவும் நிலைக்கணும்டா” என்று நீளமாக பேசியவனை எல்லோரும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். அவர்கள் விடைபெற்று கிளம்ப ஆதிக்கு ஆதிராவிற்கும் இருந்த இடைவெளி குறைந்ததாக தோன்றியது. அவள் மேல் அளவு கடந்த அன்பு பெருகியது.

 

“என்னடி செஞ்ச என் பிரிண்ட்ஸ் எல்லாரும் உன் புகழ் தான் பாடுறாங்க. என்னை மொத்தமா மறந்துட்டானுங்க. உன் மனைவி அப்படி இப்படி நீ ரொம்ப கொடுத்து வைச்சவன்னு சொல்றாங்க அப்படியா” என்றான் அவன். “அது எனக்கு தெரியலை ஆனா எனக்கு கொடுத்து தான் வைச்சு இருக்கு, இல்லன்னா நீங்க எனக்கு கிடைச்சு இருப்பீங்களா” என்று அவள் ஒருமாதிரி குரலில் சொல்ல ஆதி அவளை வியப்புடன் ஏறிட்டான். ‘நான் சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கு, இவ ஏன் இப்படி சொல்லறா’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

நேத்ராவும் ஆதவனும் தலை தீபாவளிக்கு சென்று வீடு திரும்பியிருந்தனர். நாட்கள் மெதுவாக நகர ஆரம்பிக்க, அன்று விடுமுறை தினம். அருணாசலமும், லட்சுமியும் மைலாப்பூர் கபாலீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தனர். ஆதி நண்பர்களை பார்க்க வெளியே சென்றிருக்க, ஆதவன் விளம்பர படம் எடுப்பது தொடர்பாக ஒருவரை சந்திக்க வெளியில் சென்றிருந்தான்.

 

குழந்தைகள் ஆதர்ஷாவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆதிராவும் நேத்ராவும் பேசிக் கொண்டே சமைத்துக் கொண்டிருந்தனர். நேத்ராவுக்கு அந்நேரம் வயிற்றை புரட்ட ஓடிச்சென்று வாஷ்பேசின் அருகே நின்றவள் குடல் வெளியில் வந்துவிடும் அளவுக்கு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

பதறி ஓடிவந்த ஆதிரா அவள் தலையை பிடித்துக் கொள்ள அவளுக்கு முகம் துடைத்து அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து சோபாவில் படுக்க வைத்தாள். சூடாக தண்ணிர் கொண்டு வந்து அவளை குடிக்கச் செய்தாள். “என்னடி என்னாச்சு காலையில இட்லி தானே சாப்பிட்ட, எதாச்சும் உனக்கு ஒத்துக்கலையா” என்றாள் ஆதிரா. “தெரியலைடி ஒரு ரெண்டு மூணு நாளாவே இப்படி தான் இருக்கு” என்றார் நேத்ரா.

 

“ஏன்டி பேசாம இருக்கே, தம்பிக்கு தெரியாதா டாக்டர்கிட்ட போயிருக்கலாம் இல்லை” என்று கடிந்தாள் அவள். “நான் அவர்க்கிட்ட எதுவும் சொல்லலைடி சொன்னா பயந்துடுவாரு” என்றாள் நேத்ரா. ஏதோ யோசனையுடன் இருந்த ஆதிரா “நேத்ரா உனக்கு நாள் எதுவும் தள்ளி போயிருக்கா” என்றாள் சந்தேகமாக. “என்னடி கேக்குற எனக்கு எதுவும் புரியலை” என்றாள் ஆதிரா. “உனக்கு எவ்வளவு நாள் தள்ளி போயிருக்கு” என்றாள் அவள்.

 

“எனக்கு ஞாபகம் இல்லைடி, அது எதுக்கு இப்போ கேட்குற” என்றாள் நேத்ரா. “எல்லாம் காரணாமா தான் கேட்குறேன், நல்லா யோசிச்சு சொல்லு” என்றாள் அவள். “இம், உன்னோட பிறந்த நாள் அன்னைக்கு தான் ஊத்தினேன்” என்றாள் அவள். “ஹேய் அது முடிஞ்சு ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதே, அப்போ இது நான் நினைக்கறது தான், சரி நீ இப்படியே படுத்துட்டு இரு, நான் கடைக்கு போயிட்டு வர்றேன்” என்றாள் ஆதிரா.

 

“என்னன்னு எனக்கு சொல்லிட்டு போடி” என்றாள் நேத்ரா. “நீ உண்டாகி இருக்கேன் நினைக்கிறேன்” என்று சொன்னவள் காசை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள். சிறிது நேரத்தில் கையில் எதையோ கொண்டு வந்தவள் நேத்ராவிடம் அதை நீட்டினாள். “என்னடி இது” என்றாள் அவள். “இதுலயே செய்முறை விளக்கம் இருக்கு, படிச்சுட்டு சீக்கிரம் அது படி செய். இது நான் சொன்னது தானான்னு இப்பவே பரிசோதிச்சு பார்த்துடலாம்” என்று அவளை விரட்டினாள்.

 

நேத்ரா உடனே அதை பரிசோதிக்க அவள் கர்ப்பமுற்று இருப்பது உறுதியானது. அவள் ஆதிராவிடம் அதை காட்ட ஆதிரா சந்தோசமானாள். “நேத்ரா நீ அம்மா ஆகப் போறடி, ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு. முதல்ல நீ தம்பிக்கு போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்லு” என்று அவள் கைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றவள் அடுத்து போன் செய்து விஷயத்தை கணவனுக்கும், மாமியார், மாமனாருக்கு சொன்னாள். எல்லோரும் உடனே வீட்டிற்கு வருவதாகக் கூறினர்.

 

நேத்ரா ஆதவனிடம் பேசிவிட்டு வெளியில் வந்தாள். “என்னடி தம்பி வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்களா” என்றாள் ஆதிரா. “இல்லைடி அவர் ஏதோ முக்கியமான வேலை இருக்கு வர தாமதாமாகும்ன்னு சொல்லிட்டு போனார். அவர் எப்படி இப்ப வீட்டுக்கு வருவார், ஆனா இந்த விஷயம் கேட்டதும் ரொம்ப சந்தோசப்பட்டார்” என்றாள் அவள். “நான் வேணும்னா சொல்றேன் கேட்டுக்கோ, தம்பி இன்னும் அரைமணி நேரத்துல இருப்பார்” என்றாள் ஆதிரா.

 

அவள் சொன்னதற்கு முன்பாகவே வந்த ஆதவன் “நேத்ரா” என்றழைந்தான். நான் சொன்னேன் பார்த்தியா என்பது போல் பார்த்துவிட்டு ஆதவனுக்கு வாழ்த்து கூறிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள். ஆதிரா வெளியில் செல்லவும் நேத்ரா யோசனையானாள்.

 

உள்ளே வந்தவன் “ஹேய் ஆழாக்கு எனக்கு சந்தோசமா இருக்குடி, நீ போன் பண்ணதும் எதுவும் தோணலை. நான் இன்னைக்கு ஒருத்தரை பார்க்க போகணும் சொன்னேன்ல அவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்டி. உன்னை பார்க்கறதுக்கு உடனே ஓடி வந்துட்டேன்” என்றான் அவன். அந்நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ஆதிரா, அவனிடம் “தம்பி நீங்க அவளை எதுக்கும் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காமிச்சு உறுதி பண்ணிடுங்க. ரொம்பவும் வாந்தி எடுத்தா அதையும் சொல்லுங்க” என்றாள் அவள். நேத்ராவிற்குள் குற்ற உணர்வு எழுந்தது….

 

 

குளிர் நிலவாய் எனக்குள்நிறைந்து விட்டவளே

உனைக்காணும் ஒவ்வொருநொடியும்

எனக்குள் ஓர்புதுமையான அனுபவமே

என் சொந்தத்தைஉன் சொந்தமாய் மாற்றினாய்

என் நட்புக்களை உன்நட்பாய் போற்றினாய்

எனக்கான ஒவ்வொருநொடியும்

உன்னால் தான்இயக்கப்படுகின்றன

என் வாழ்வில்வசந்தமாய் வந்தவளே

என்ன தவம் செய்தேன்உனை நான் பெறவே

 

 

அத்தியாயம் –20

 

 

ஆதிரா தன்னை பற்றி இவ்வளவு கவலைபட தனக்கு எப்படி அவள் நினைப்பே இல்லாமல் போனது, முதன் முறையாக தன் தோழியா சந்தோசமாக தான் குடும்பம் நடத்துக்கிறாளா என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு. இதை பற்றி அவளிடம் பேசியாக வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள். ஆதவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டி மருத்துவரும் அவள் கர்ப்பத்தை உறுதி செய்ய சந்தோசத்துடன் வீட்டிற்கு வந்தார்கள்.

 

அதற்குள் வீட்டில் எல்லோருமே குழுமி இருக்க அந்த சந்தோசத்தை எல்லோரிடம் பகிர்ந்துக் கொண்டனர். அப்போது பார்வதி லட்சுமிக்கு போன் செய்ய நேத்ரா கருவுற்றிருக்கும் விஷயத்தை லட்சுமி பார்வதியிடம் சொல்ல பார்வதியும் ஒரு சந்தோஷ விஷயம் சொல்ல அதை கேட்ட லட்சுமியின் முகம் மலர்ந்தது. தங்கையிடம் பேசிவிட்டு போனை வைத்தவர் அந்த சந்தோசத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்.

 

“பார்வதி ஒரு சந்தோசமான விஷயம் சொன்னா, நம்ம அம்முவும் முழுகாம இருக்காளாம், ரெண்டு மாசம் ஆகுதாம்” என்று அவர் சொல்ல எல்லோருமே சந்தோசமாயினர். நேத்ராவின் குற்ற உணர்வு அதிகமாகி போனது. எப்படியாவது ஆதிராவிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள். எனக்காக நல்லது செய்தவளை நான் எப்படி மறந்தேன் என்று எண்ணி தவித்தாள்.

 

நேத்ராவின் வீட்டிற்கு விஷயத்தை தெரியப்படுத்த அவர்கள் அன்றே குடும்பத்துடன் வந்து பார்த்தனர். கார்த்தியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதாலும் நேத்ராவால் ஊருக்கு பயணப்பட இயலாது என்பதாலும் திருமணத்தை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகக் கூறினார். லட்சுமியும் அம்முவும் மாசமாக இருப்பதாகக் கூற என்ன செய்வது என்று யோசித்தனர்.

 

அடுத்த வாரம் ஊருக்குச் சென்று எல்லோரிடமும் பேசிவிட்டு பிறகு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாம் என்று அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தனர். நேத்ராவை தன் வீட்டில் ஒரு மாதம் வைத்து பார்த்துக் கொள்வதாக சந்திரா கூற ஆதவனின் முகம் மாறியது. கவனித்தும் கவனியாதது போல் பார்த்தவள், “இல்லைம்மா நான் அப்புறம் வர்றேன்” என்று மகள் சொல்லிவிட அதற்கு மேல் சந்திரா அவளை வற்புறுத்தவில்லை. வந்தவர்கள் கிளம்பிச் சென்றுவிட ஆதிரா தங்கள் அறைக்குச் சென்றாள்.

 

அங்கு ஆதி ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்க, ஆதிராவுக்கு ஏனோ மனம் அமைதியின்மையை கொடுத்தது. மனதில் சட்டென்று ஒரு நெருடல் வந்து போக அதை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து மாமியாரை நாடிச் சென்றாள்.

 

அவர்கள் அறைக்கு வெளியே நின்று “அத்தை” என்று அவள் அழைக்க, “வாம்மா உள்ள வா எதுக்கு வெளிய நிக்குறா, மாமா ஏதோ வேலை இருக்குன்னு வெளிய போயிருக்காங்க” என்று சொல்லி வெளியில் வந்து அவளை அழைத்துப் போனார். “சொல்லும்மா என்ன விஷயம்” என்றார் அவள் முகத்தை பார்த்து.

 

“அத்தை நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க, ஹரிணியோட அம்மா அப்பா குழந்தைகளை பார்க்க கூட வரவே இல்லை அத்தை. பிறக்க போற குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையில் சந்திரா சித்தி எவ்வளவு ஆவலாக தன் மகளை தன் வீட்டிற்கு கூப்பிட்டார். ஏன் அத்தை ஹரிணி அன்னைக்கும் தந்தைக்கும் இருக்கும் ஒரே உறவு இந்த குழந்தைகள் தானே” என்றாள் அவள்.

 

“நானே இதை பத்தி உன்கிட்ட எப்படி பேசறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்ம்மா, நீ கேட்டது எல்லாம் நியாயமானது தான். ஹரிணியோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கொள்ளை கொள்ளையாய் ஆசை இருக்கிறது. ஆனால் இங்கு வந்தால் ஏதாவதொரு விதத்தில் உங்களுக்கு தொந்திரவாக இருக்கும் என்று நினைத்தே அவர்கள் வருவதில்லை. அவ்வபோது எங்கேயாவது தூரத்தில் நின்று குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். ஒரு முறை பள்ளிக்கு சென்று அவர்களை பார்த்திருக்கிறார்கள்” என்றார் அவர்.

 

“என்ன அத்தை இதெல்லாம் அவங்க ஏன் இப்படி செய்யணும் இந்த குழந்தைங்க அவங்களுக்கு உரிமையுள்ளவங்க அத்தை அவங்களை பார்க்கறதை நாம எப்படி தொல்லையா நினைக்க முடியும். இனிமே இப்படி இருக்க வேணாம் அத்தை அவங்களை வீட்டிற்கே வந்து குழந்தைகளை பார்த்துட்டு போக சொல்லுங்க” என்றாள் அவள்.

 

“இல்லைம்மா ஆதிரா அவங்க இன்னும் கொஞ்ச நாள் தள்ளியே இருக்கட்டும். நான் வேணா குழந்தைகளை கூட்டி போய் அவங்களுக்கு காட்டுறேன். ஏதாவதொரு போது இடத்துல வைச்சு பார்த்துட்டு வந்திடறோம்” என்றார் அவள். “எதுக்கு அத்தை அவங்க நம்ம வீட்டுக்கு வர்றதுல என்ன பிரச்சனை அத்தை” என்றாள் அவள்.

 

“இது வரைக்கும் உன் மனசுல இருந்ததை நீ கேட்டுட்டா, உன்கிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியாம யோசிச்சுட்டு இருந்தேன். நீயே வந்துட்டா, நான் கேட்டா தப்பா எடுத்துக்காம எனக்கு நீ ஒரு உண்மையை சொல்லும்மா” என்றார் அவர் பீடிகையுடன். “சொல்லுங்க அத்தை” என்றாள் அவள். “நீயும் ஆதியும் சந்தோசமா தான் இருக்கீங்களா” என்றார் அவர்.

 

அன்னையிடம் ஏதோ கேட்பதற்கு அவர்கள் அறைக்கு முன்னிருந்த சின்ன அறைக்கு வந்தவன் உள்ளே பேச்சு குரல் கேட்கவும் அப்படியே நின்றுவிட்டான். “அதிலென்ன அத்தை உங்களுக்கு சந்தேகம், எதுவா இருந்தாலும் நேராவே கேளுங்க அத்தை” என்றாள் அவள். “ஏம்மா உனக்கு பிறகு கல்யாணம் ஆனா ரெண்டு பேரும் இப்ப உண்டாகிட்டாங்க நீ எப்போம்மா நல்ல சேதி சொல்லப் போற” என்றார் அவர்.

 

“அத்தை நீங்க தெரிஞ்சுகிட்டே பேசுறீங்களே அத்தை, எங்களுக்கு எதுக்கு இன்னொரு குழந்தை ஆண்னொன்னு பெண்னொன்னு என்று ரெண்டு பசங்க எங்களுக்கு இருக்காங்களே, அப்புறம் எதுக்கு அத்தை எங்களுக்கு இன்னொரு குழந்தை” என்றாள் அவள்.

 

“உன்னோட பதில்ல நான் சந்தோசப்படலாம், ஆனா என்னால அவ்வளவு சுயநலமா இருக்க முடியலைம்மா. உங்க அம்மாவை நினைச்சு பாரு தன் பெண்ணுக்கு பூ முடிக்கணும் வளைக்காப்பு, சீமந்தம் எல்லாம் பண்ணி பார்க்கணும் அவங்க ஆசை படமாட்டாங்களா” என்றார் அவர்.

 

“அத்தை அவங்க அப்படி நினைக்க மாட்டாங்க, ஏன்னா எல்லாம் தெரிஞ்சு தானே இந்த கல்யாணம் நடந்துச்சு கவினும் கவினியும் தான் எனக்கு குழந்தைங்க, என்னோட குழந்தைகள் தான் அவங்களுக்கு பேரப்பிள்ளைகள். இதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி எதுவும் பேசவேண்டாம் அத்தை. என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லிவிட்டு எழ முற்பட்டவளை தடுத்து, “நீ மாறணும்மா உனக்குன்னு ஒரு குழந்தை வேணும். இதை உங்கம்மாவுக்காக நான் சொல்லலை, நானும் ஒரு தாயா இருக்கறதுனால சொல்றேன். சரிம்மா நீ போயிட்டு வா” என்று ஒரு பெருமூச்சுடன் அவளை அனுப்பி வைத்தார்.

 

வெளியில் நின்றிருந்த ஆதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, ஆதிரா வெளியில் வரும் அரவம் கேட்க அவசரமாக அங்கிருந்து நகர்ந்தவன் படியேறி மொட்டை மாடிக்குச் சென்றான், அங்கிருந்த ஆதிராவின் அலுவலக அறையை திறந்து அங்கிருந்த சோபாவில் தொய்ந்து அமர்ந்தான்.

 

இவளுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு, தனக்கு கூட குழந்தை வேண்டாம் தான் பெறாத குழந்தைகளே தன் மகவுகள் என்று சொல்லவும் ஒரு மனம் வேண்டும். திருமணமே வேண்டாம் என்று இருந்தாளாமே, எப்படி என்னை திருமணம் செய்துக் கொண்டு இப்படி எல்லோருக்கும் பார்த்து பார்த்து செய்கிறாள், தான் அவளுக்காக எதையுமே செய்ததில்லை என்ற குற்ற உணர்வு எழ வேகமா எழுந்தவன் அவனுடைய இயலாமையில் மேஜை மேல் குத்தினான்.

 

தனக்காகவும் குழந்தைகளுக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிறாளே என்று அவன் மனம் அவளுக்காக துடித்தது. தனக்குள் ஏதோ முடிவெடுத்தவனாக வெளியில் வந்து கதவை அடைத்தான். கீழே இறங்கி வந்தவன் வேகமாக கிளம்பி வெளியில் சென்றுவிட்டான்.

 

லட்சுமி அன்று மாலையே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்லுவதாக கூற ஆதிரா அவரை அர்த்தத்துடன் பார்க்க அவரும் மெதுவாக அவளிடம் தலையசைத்து விட்டு கிளம்பினார். ஆதர்ஷா பரீட்சை நேரமானதால் அவள் அறையில் படித்துக் கொண்டிருந்தாள், ஆதவனும் வெளியில் சென்றிருந்தான். இது தான் ஆதிராவிடம் பேச நல்ல சமயம் என்று யோசித்தவள் அவள் அறையில் இருந்து வெளியில் வந்து ஹால் சோபாவில் அமர்ந்தாள்.

 

சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த ஆதிரா நேத்ரா சோபாவில் அமர்ந்திருப்பது கண்டு அவளருகில் வந்து அமர்ந்தாள். “என்னடி இங்க உட்கார்ந்து இருக்க, வேணா போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக்க, உனக்கு எதனாச்சும் வேணுமின்னா என்கிட்ட சொல்லுடி, நான் செஞ்சு தர்றேன். நீ இனிமே ரெண்டு பேருக்காக சாப்பிடணும்…” என்று அவள் அடுக்கிக்கொண்டே போக, “என்னடி கொஞ்சம் நிறுத்து ஆரம்பிச்சுறாத அடுத்த அறிவுரையை” என்றவள் சிறு இடைவெளிக்கு பின் “ஆதிரா உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள். ‘இவளுமா அத்தை கேட்டது போல் ஏதும் கேட்பாளோ’ என்று நினைத்தவளை “சொல்லுடி என்ன விஷயம்” என்றாள் அவள்.

 

“நீங்க சந்தோசமா இருக்கீங்களா” என்றாள் அவள். ‘இன்னைக்கு என்ன எல்லாரும் ஒரே மாதிரி கேள்வி கேட்டு என்னை கொல்றாங்க’ என்று நினைத்தவள் மாமியாரிடம் பேசியது போல் தோழியுடன் பேசமுடியாது இவளுக்கு தன்னை பற்றி எல்லாமும் தெரியும், என்னை எப்படியாவது மடக்குவாள், என்ன சொல்வது என்ற யோசனையில் இருந்தவளை, “என்னடி என்ன சொல்லி என்னை சமாளிக்கறதுன்னு யோசிக்கறியா” என்றாள் அவள்.

“இல்லை உனக்கு ஏன் இந்த சந்தேகம்ன்னு தான் யோசிச்சேன்” என்றாள் அவள். “எனக்கு அப்படி தெரியலை, நீ என்கிட்ட எதையோ மறைக்கிற. சந்தோசமான தம்பதிங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும். எனக்கும் திருமணமாகி குழந்தையும் உண்டாகிவிட்டேன். ஒரு கணவனும் மனைவியும் சந்தோசமா இருக்காங்களா இல்லையான்னு கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது” என்று சொல்லி தோழியின் வாயை அடைத்தாள் அவள்.

 

“இத்தனை நாள் உன்ன பத்தி யோசிக்காம என்னை பத்திய நினைப்புலையே நான் இருந்துட்டேன். உன்னை சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஆனா யோசிச்சு பார்க்கும் போது நீ சந்தொசமாயில்லைன்னு எனக்கு தெரியுது. சொல்லுடி அத்தான் இன்னும் உன்னை ஏத்துக்கலையா, இத்தனை மாசத்துல நீ ஒரு தடவை கூட உன் மனசை திறந்து அவர்கிட்ட பேசலையா” என்றாள் அவள்.

 

நேத்ராவின் கேள்விகள் ஒவ்வொன்றும் அவளை தாக்க அவளுக்கு எந்த பதிலும் கூற முடியாமல் சிலையென சமைந்தாள் அவள். “உன்னோட அம்மாவும் அப்பாவும் உன் விருப்பத்துக்கு மட்டும் மதிப்பு கொடுத்து தான் இந்த கல்யாணத்தை நடத்தினாங்க, அவங்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்ன்னு நீ ஏன் நினைக்கலை, உன்னோட சந்தோசம் தானே அவங்களுக்கு நிம்மதி.

 

“அவங்களுக்கு என்ன இன்னும் ரெண்டு பொண்ணா இருக்கு எல்லாம் உனக்கு செய்யலைன்னா அடுத்தவங்களுக்கு செய்ய, நீ அவங்களுக்கு ஒரே பொண்ணுடி உனக்கு நல்லது கெட்டது எல்லாம் அவங்க செய்யணும்ன்னு ஆசைப்பட மாட்டாங்களா” என்று அவள் கேள்விகளை கேட்டுக்கொண்டே செல்ல ஆதிரா அவளை நிறுத்துமாறு சைகை செய்தாள்.

 

“போதும் நேத்ரா நீ எதுவும் சொல்ல வேணாம், என்னை பத்தி முழுசா தெரிஞ்ச நீ இப்படி பேசலாமா. எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க, அவங்க மட்டும் போதும் எனக்கு, உண்மையிலேயே சொல்றேன் அவர் என்மேல பிரியமா தான் இருக்கார். ப்ளீஸ்டி உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன், இதுக்கு மேல நாம இதை பத்தி பேச வேண்டாம். என்னை புரிஞ்சுக்கோடி” என்றாள் அவள்.

 

“நான் புரிஞ்சு என்ன ஆகப் போகுது, நீயும் ஒரு பொண்ணை வைச்சு இருக்கற, இன்னைக்கு உங்க அம்மாவோட கவலை உனக்கு புரியாம போகலாம். நாளைக்கு இதே நிலைமை உனக்கு வந்தா தான் புரியும்” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து அவர்கள் அறைக்கு சென்றுவிட்டாள் நேத்ரா.

 

ஆதிராவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தான் என்ன மாதிரி நிலையில் இருக்கிறோம் என்று அவளால் உணரமுடியவில்லை. ஆதியை யாருக்காவும் அவளால் விட்டு தர முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவள் எழுந்து சமையலறை நோக்கி சென்றாள். அறைக்குள் வந்த நேத்ரா ‘இனி இவளிடம் எதுவும் பேசி ப்ரோயோஜனமில்லை ஆதியிடம் எப்படியாவது பேசிவிடுவது’ என்று முடிவெடுத்தாள். எப்படி ஆரம்பிக்கலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

 

அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் தாத்தா ஆச்சியுடன் உறங்குவதாக சொல்ல லட்சுமியும் அருணாசலமும் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். ஆதர்ஷா படிப்பில் இருந்ததால் அவளும் அவள் அறையிலேயே இருந்தாள்.

 

ஆதி, ஆதவன், ஆதிரா மற்றும் நேத்ரா ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, நேத்ரா யதார்த்தமாக கேட்பது போல் ஆதியிடம் ஆரம்பித்தாள், “அத்தான் நீங்க எப்போ எங்களுக்கு நல்ல சேதி சொல்லப் போறீங்க” என்றாள் அவள். ஆதவன் நேத்ராவை புரியாமல் பார்த்தான். “என்ன நல்ல சேதிம்மா” என்றான் ஆதி. “ஆதிராவும் என்னை போல நல்ல சேதி சொல்ல வேண்டாமா” என்றாள் அவள். ஆதி பேச்சிழந்து போனான்.

 

ஆதிராவால் எதுவும் பேசமுடியாமல் அமைதி காத்தாள், அவள் தன்னை விட்டு தன் கணவனை கேள்வி கேட்டது அவளுக்கு வலித்தது. ஆதவனும் அங்கிருந்ததால் அவளால் எதுவும் பேசமுடியவில்லை. ஆதியோ லேசாக சிரிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு “இம் சொல்லிடலாம்மா” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான்.

 

ஆதவனும் நேத்ராவை அழைத்துவிட்டு முன்னே செல்ல நேத்ரா அவன் பின்னேயே செல்லக் கிளம்பினாள். “நேத்ரா” என்ற அழைப்பில் நின்றவள் என்ன என்பது போல் தோழியை பார்க்க அவள் முகம் கடுங்கோபத்தில் இருந்தது.

 

“எதுக்குடி அவர்கிட்ட இப்படி கேட்ட, நான் தான் அப்போவே சொன்னேன்ல இதை பத்தி இனி எதுவும் பேச வேண்டாம்ன்னு பாரு அவர் முகமே வாடி போச்சு, அவரை யாருமே இப்படி முகத்துக்கு நேரே கேட்டது இல்லை தெரியுமா. நீ என்னை கேட்கலாம் அதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அவரை நீ எப்படி கேட்பாய். போதும் நேத்ரா இனி நீ எதுவும் என்னிடம் பேசாதே. எப்போதும் பேசாதே” என்று கோபமாக அடிக்குரலில் இரைந்துவிட்டு சென்றாள் அவள்.

 

கோபமாக போகும் ஆதிராவை கண்ணீர் சுமந்த விழிகளுடன் அவள் நோக்க ஆதவன் வந்து அவள் தோள் மேல் ஆதரவாக கைப்போட்டு அழைத்துச் சென்றான். அவர்கள் அறைக்கு சென்ற ஆதிரா அங்கே ஆதியை தேட அவனை அங்கு காணாததால் வெளியில் வந்து பார்த்தாள்.

 

மாடியறைக்கு செல்லும் கதவு திறந்திருக்க அவள் படியேறி மாடிக்குச் சென்றாள் அங்கு ஆதி அந்த சுவற்றின் மேல் அமர்ந்துக் கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனருகில் சென்று அவனை அழைக்க அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. “என்னங்க” என்று அவள் மீண்டும் அழைக்க அவன் அவளை நோக்கி திரும்பினான். “என்ன ஆரா என்ன விஷயம்” என்றான் அவன். “நீங்க நேத்ரா பேசினது எதுவும் மனசுல வைச்சுக்காதீங்க அவ ஏதோ விவரம் இல்லாம பேசுறா. நீங்க அதை நினைச்சு கவலைப்படாதீங்க” என்றாள் அவள்.

 

“அவ கேட்டதுல எந்த தப்புமில்லையே” என்ற அவன் பதிலில் ஆதிரா வாயடைத்து போனாள். “ஏன் ஆரா உனக்கு என்கிட்ட இருந்து எந்த எதிர்பார்ப்புமே இல்லையா, நான் உனக்கு பெரிசா எதுவுமே செய்யலையே அப்புறமும் நீ எனக்காக அவகிட்ட சண்டை போட்டு, அவளுக்காக என்கிட்ட நீ பேசுற. உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி, நான் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்.

 

“உன் வாழ்க்கை வேற யார் கூடவாவது அமைஞ்சு இருந்தா நீ சந்தோசமா இருந்திருப்பன்னு தோணுது, நான் உன்னையும் கஷ்டப்படுத்தி என்னை கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன். நான் சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவேடுக்கறேன் அது வரைக்கும் கொஞ்சம் காத்திரு ஆரா” என்று சொல்லி அவளை எதுவும் பேசவிடாமல் கீழே அழைத்துச் சென்றான். ஏதோ பேச வாயேடுத்தவளை “வேணாம் ஆரா நீ எனக்கு எந்த சமாதானமும் சொல்ல வேணாம், நீ பேசாம நிம்மதியா படுத்து தூங்கு” என்று சொல்லி விளக்கை அணைத்து விட்டு விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தான்.

 

மறுநாள் காலை எல்லோரும் வேலைக்கு சென்றிருக்க, லட்சுமி காய்கறி வாங்க வென்று மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார், குழந்தைகளுக்கும் பள்ளிக்கு சென்றிருக்க ஆதிராவும் நேத்ராவும் மட்டுமே வீட்டிலிருந்தனர். காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த நேத்ராவிற்கு அடிவயிற்றில் புரட்டி எடுக்க எழுந்து சென்று வாஷ்பேசின் அருகே நின்று சாப்பிட அனைத்தையும் வாந்தி எடுத்தாள்.

 

பதறியபடி உள்ளிருந்த வந்த ஆதிரா அவள் நெற்றியை பிடிக்க நேத்ரா அதை ஒதுக்கினாள். “என்னடி செய்யுற, பேசாம இரு” என்று சொல்லிவிட்டு ஆதிரா அவள் நெற்றியை பிடித்துக் கொண்டாள். ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “ஆதிரா என்னை மன்னிப்பியாடி, நான் அத்தான்கிட்ட கேட்டது தப்பு தான்டி அந்த நேரத்துல நான் உன்னை பத்தி மட்டும் தான் யோசிச்சேன். வேற எதுவும் யோசிக்கலை, அப்புறம் அவர்கூட சொன்னார் நான் அப்படி கேட்டது தப்புன்னு” என்று அழுதவளை “சீய் விடுடி நீ அவர்கிட்ட கேட்டது எனக்கு கோபம் தான் அதுக்காகஉன்கிட்ட பேசாமா இருந்துடுவேனா. ஒரு பேச்சுக்கு நேத்து அப்படி சொன்னேன். என் வாழ்க்கையில நான் மறக்கவே முடியாத ரெண்டு பேரும் நீங்க தான்” என்ற ஆதிராவை தன்னோடு சேர்த்து சந்தோசத்தில் கட்டிக்கொண்டாள் நேத்ரா.

 

ஒருவாரம் சென்றிருக்க நேத்ராவின் பெற்றோர் அவளை பார்க்கவென வந்திருந்தனர். ஊருக்கு சென்று திருமண விஷயம் பேசியதாகவும் அம்முவும் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவேன் என்று அழுததாகவும் திருமணத்தை மேலும் ஒரு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று பேசியிருப்பதாகக் கூறினார் சந்திரா.

 

லட்சுமியோ “ஆனா இவங்க ரெண்டு பேரும் மாசமா இருக்காங்க பார்த்துக்க கூடாதுன்னு சொல்வாங்களே” என்று சொல்லி அவர் சந்தேகத்தை எழுப்ப, “நானும் சொன்னேன், ஆனா நாம இவங்க ரெண்டு பேரையும் விட முடியாதே. அம்மு எங்கயாச்சும் ரூம்ல இருந்துக்கிட்டே என் தங்கச்சி கல்யாணத்தை பார்த்துக்கறேன்னு சொல்றாளாம். அவளுக்கு ஒரு ஐந்து மாதம் ஆன பிறகு வேணா அவ பிரயாணம் பண்ணலாம்ன்னு டாக்டர் சொன்னாங்களாம். அதான் ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறோம். சென்னையில் தான் திருமணம் அங்கிருந்து எல்லோரும் ரயிலில் இங்கு வந்துவிடுவார்கள்” என்றவர் ஆதிராவிடம் திரும்பி “ஆதிரா நீ தான்மா உன் அண்ணனுக்கு எல்லாம் செய்யணும், நேத்ரா மாசமா இருக்கறதால இதெல்லாம் செய்யக் கூடாது. பொண்ணுக்கு அந்த நாத்தனார் முடிச்சு போடுறது அப்புறம் கார்த்திக்கு தங்கை முறையா செய்ய வேண்டியது எல்லாம் நீ தான் செய்யணும்” என்று சொல்லிவிட்டு போனார் அவர்.

 

கார்த்தி கீர்த்தியின் திருமண நாள் நெருங்க எல்லோருக்கும் புடவை வாங்குவது நகை வாங்குவது என்று எல்லாவற்றிற்கும் அவளே செல்ல திருமண நாளும் நெருங்கியது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஆதி ஆதிராவை அழைத்தான். “ஆரா” என்று அவன் அழைக்க “என்னங்க” என்று அவசர அவசரமாக அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

 

“என்னடி செய்யுற எதுக்கு இப்படி ஓடிக்கிட்டே இருக்க ஓய்வே இல்லாம, நான் சொல்ல சொல்ல கேக்காம சுத்துற, போன தடவை மாதிரி மயக்கம் போட்டு விழுந்தன்னு வை அப்புறம் நீ வேற ஆதியை பார்க்க வேண்டி இருக்கும்” என்று அவளிடம் குரலை உயர்த்தி பேசினான் ஆதித்தியன். அவன் குரலே அவன் சொன்னதை செய்வான் என்பது போல் இருக்க ஆதிரா அன்றைக்கு எந்த வேலையும் வைத்துக் கொள்ளாமல் வீட்டிலேயே இருப்பது போல் பார்த்துக் கொண்டாள்.

 

சொன்னதை கேட்டுவிட்டாள் என்பதில் ஆதிக்கும் மகிழ்ச்சியே. நேத்ரா திருமணத்திற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்க, ஊரில் இருந்து பார்வதியின் குடும்பம் மொத்தமும் வந்து இறங்கியது. அன்றைய பொழுது கீர்த்தியை பார்லருக்கு கூட்டிச் செல்வதும் அவளுக்கு மருதாணியிடவும் என்று பொழுது கழிய மறுநாள் காலை திருமணம் அன்று மாலையே வரவேற்ப்பும் இருக்க நேரமாக எல்லோரும் தூங்கினர்.

 

காலையில் சுபயோக சுபதினத்தில் குறித்த முஹுர்த்த நேரத்தில் கீர்த்தியின் கழுத்தில் தாலியை கட்டினான் கார்த்தி. ஆதிரா நிற்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்க மாப்பிள்ளையும் பெண்ணும் அங்கேயே மண்டபத்திலேயே ஓய்வெடுக்க ஆதிராவை அழைத்துக் கொண்டு ஆதி வீடு வந்து சேர்ந்தான். “அப்பா எல்லா கல்யாணமும் முடிஞ்சது, இனி நீ இப்படி பம்பரமா சுத்தமாட்டியே, என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் பேசாம இருக்க” என்றான் ஆதி.

 

“என்ன எங்க நீங்க பேசவிடுறீங்க. எல்லார் முன்னாடியும் வான்னு இழுத்துட்டு வந்துட்டீங்க. எல்லாரும் என்ன நினைச்சு இருப்பாங்க” என்று அவள் முகத்தை தூக்க, “சரி நீ முதல்ல குழந்தைகளை கொஞ்சம் தூங்க வை, நீயும் படு” என்றான் அவன். “அங்க அவ்வளோ வேலை இருக்கு, தூங்கணும்ன்னு சொன்னா எனக்கு எப்படி தூக்கம் வரும்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் குழந்தைகளை தூங்க வைத்தாள்.

 

அவர்களை தூங்க வைக்க அவளும் அவர்களுடன் படுத்தாள். வெகு நேரம் கழித்து ஆதி அவளை உலுப்ப கண்ணை கசக்கி பார்த்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தான் எப்போது தூங்கினோம் என்று யோசிக்க ஆதியிடம் வீம்பாக பேசியது நினைவுக்கு வந்தது.

 

“என்னடி தூக்கம் வராதுன்னு சொன்ன, பார்த்தியா உனக்கு எவ்வளோ களைப்பு இருக்குன்னு. என் பேச்சையும் கொஞ்சம் கேளும்மா, நான் உன் நல்லதுக்கு தான் சொல்வேன். சரி நேரமாச்சு ஆதவன் குழந்தைகளை கூட்டிட்டு போய்ட்டான். நானே அவங்களை தயார் பண்ணி அனுப்பிட்டேன். இப்ப நீயும் நானும் தான் கிளம்பணும். நீ போய் தயாராகு” என்று சொல்லிவிட்டு அவன் வெளியில் சென்றான்.

 

‘எனக்கு எப்படி தூக்கம் வந்துச்சு அவ்வளவு அசதியில இருந்துருக்கேனா நானு, குழந்தைகளையும் அவரே தயார் பண்ணி அனுப்பி இருக்காரே’ என்று யோசித்துக் கொண்டு அவசர அவசரமாக எழுந்தவள் குளியலறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்துக் கழுவினாள். வரவேற்புக்கு என்று அவள் எடுத்து வைத்திருந்த சேலையை எடுத்து உடுத்தினாள்.

 

அரக்கு நிறத்தில் ஆங்காங்கே பச்சையும் தங்க நிற ஜரிகையும் இழையோட அவள் அணிந்திருந்த சேலை கண்ணை பறித்தது. “ஆரா என்ன இன்னும் கிளம்பலையா என்றவாறே உள்ளே வந்த ஆதி வெளிர் சந்தன நிற முழு கால்சட்டையும் அடர் குங்கும நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிதிருந்தான். பேசிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன் அவளை கண்டு இமைக்க மறந்து நின்றான்.

 

“ஒரு பத்து நிமிஷங்க நான் தயாராகிடுவேன் என்று அவளும் அவனை பார்க்க அவன் என்றுமில்லாமல் இன்று புதிதாக தெரிந்தான். அவள் சேலைக்கு பொருத்தமாக அவன் உடையணிந்தது போலிருந்தது. அவன் வாங்கிக் கொடுத்த நகையை கையில் வைத்துக் கொண்டு அவள் நிற்க அதை வாங்கி அவனே அவளுக்கு போட்டுவிட அவன் கைகள் அவள் கழுத்தை மெல்ல வருடியது. கூசி சிலிர்த்தவள் உடல் சட்டென்று சூடாவது போல் இருக்க அவளை தன்புறம் திருப்பினான்.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்திருந்தவளை மெல்ல நிமிர்த்தி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவள் முகம் நிமிர்த்தி அவள் கண்களோடு கலந்தவன் பின் அவள் அதரங்களோடு கலந்தான். இருவரது கைபேசியும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்க இருவரும் வேறு உலகத்திற்கு சென்றிருந்தனர். நீண்ட நெடிய நேரம் கழிய ஒருவாறு அவன் காதுகளில் அந்த கைபேசி ஒலித்தது கேட்க அவளை மெதுவாக விடுவித்தான்.

 

ஆதிரா நிற்க முடியாமல் கட்டிலின் மேல் அமர அவளுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பீறிட்டு எழுந்தது. போன் பேசிவிட்டு வந்தவன் அவளை வா என்பது போல் கையை நீட்ட யோசிக்காமல் அவள் கைகள் அவன் கரம் பற்றியது. அவளை அருகே அணைத்தாற் போல் நின்றவன் முன்னாடி வந்து விழுந்திருந்த அவள் முடிக்கற்றைகளை ஒதுக்கினான். சரி போகலாம் என்பதாய் அவன் நடக்க அவளும் அவனை ஒட்டியே நடந்து வந்தாள்.

 

காரில் ஏறி அவளை அமரவைத்தவன் அவனும் ஏறிக் கொண்டு மண்டபத்தை நோக்கிச் சென்றனர். மண்டப வாசலில் வந்து இறங்கிய பிறகு தான் அவள் ஒருவாறு சுய உணர்வுக்கு வந்தாள். அவளைத் தேடி வாசலுக்கே வந்துவிட்ட லட்சுமி, “என்னம்மா என்ன ஆச்சு, அன்னைக்கு மாதிரி எதுவும் மயக்கம் போட்டுட்டியா, முகமே ஒரு மாதிரியா இருக்கே என்றார் அவர்.

 

“அம்மா அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளுக்கு ஓய்வே இல்லை, அதான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய் தூங்க வைச்சேன். அந்த களைப்பு அவளுக்கு இன்னும் தீரலை அதான் ஒரு மாதிரி இருக்கா என்று அவளுக்கு பதில் அவனே பேசினான். எதுவாக இருப்பினும் மருமகளின் வாய்மொழியால் கேட்க அவர் அப்படியே நின்றிருக்க இவர்களுக்குள் எதுவும் பிரச்சனையாய் இருக்குமோ என்று அவர் மனம் பதைத்தது.

 

“எனக்கு எதுவுமில்லை அத்தை. நான் நல்லா தான் இருக்கேன், அவர் சொன்ன மாதிரி களைப்பு தான் அத்தை. வாங்க உள்ளே போகலாம் என்று அவர் கைப்பிடித்து உள்ளே சென்றாள். போகும் முன் அவனை பார்க்க அவனோ லேசாக சிரித்து பின் கண் சிமிட்டினான். ‘அடப்பாவி இவருக்கு இதெல்லாம் கூட தெரியுமா, எப்படி வேலை எல்லாம் செய்யுறாரு என்று நினைத்துக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

 

மேடையில் ஆதர்ஷா பேனா மை நிறத்தில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடு அமைந்த காக்ரா சோளியை அணிந்திருக்க சூர்யாவின் பார்வை தன்னையுமறியாமல் அவளையே சுற்றி சுற்றி வந்தது. இதை கண்டுவிட்ட கீர்த்தி சும்மா இல்லாமல் அவள் வேலையை ஆரம்பித்தாள். “என்ன கீர்த்தி நான் இங்க இருக்கேன் நீ எங்க பார்க்குற என்றான் கார்த்தி. “இருங்க இப்ப உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுறேன் பாருங்க என்றவள் அவனிடம் “நீங்க சூர்யாவை இங்க வரச் சொல்லுங்களேன் என்றாள். “எதுக்கு கீர்த்தி என்றான் கார்த்தி. “கூப்பிடுங்க சொல்லறேன் என்றாள் அவள்.

கார்த்தி கையசைத்து சூர்யாவை மேடைக்கு வரச் சொன்னான். கீர்த்தியின் அருகில் நின்றிருந்த ஆதர்ஷாவின் கண்கள் அவனை மொய்த்தது. “என்ன அண்ணா என்றவாறே மேலே வந்தான் அவன். கீர்த்தியோ வேண்டுமென்றே “என்ன அத்தான் உங்க அண்ணன் கூப்பிட்டா தான் மேடைக்கு வருவீங்களா. நான் உங்ககிட்ட ஊர்ல வச்சு என்ன சொன்னேன். என்னை எங்க பார்த்தாலும் நீங்க வந்து என்கிட்ட பேசணும் சொல்லி இருக்கேன்ல என்று சொல்லிவிட்டு ஆதர்ஷாவின் பக்கம் ஒரு பார்வை பார்க்க அவள் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.

 

“அய்யோ அண்ணி என்னை ஆளை விடுங்க, ஊர்ல ஏதோ கிண்டல் பண்றீங்கன்னு பார்த்தா இப்பவும் என்னை கலாட்டா பண்றீங்க. நான் கிளம்புறேன் என்று அவன் இடத்தை காலி செய்தான். “என்ன நடக்குது இங்க என்றான் அவன். அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் “கொஞ்சம் உங்க தம்பியையும் என் தங்கச்சியையும் பாருங்க என்றாள் அவள். அவர்களிருவரையும் பார்த்தவன் இருவரும் ஒருவர் பார்க்காத போது மற்றவரை பார்ப்பது தெரிந்தது.

 

“சரி இதுக்கும் நீ செஞ்சதுக்கும் என்ன சம்மந்தம் என்றான் அவன். “உங்க தம்பிக்கும் என் தங்கச்சிக்கும் விவரம் பத்தலைன்னு அர்த்தம், இவ எப்போல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா, இதை நான் கண்டுபிடிச்சு அவங்களை சேர்த்து வைக்க சமுக சேவை எல்லாம் செய்யுறேன். நான் உங்க தம்பிக்கிட்ட பேசுறது பார்த்தா ஒரு கோபத்துலயாச்சும் இவ போய் பேசுவான் பார்க்குறேன். இவளும் பேச மாட்டேங்குறா, சூர்யாவும் பேசமாட்டேங்குறார். ரொம்பவும் கஷ்டம் என்று அலுத்துக் கொண்டவலை பார்த்து சிரித்தான் கார்த்தி.

 

“உனக்கு எதுக்கு இந்த சமூக சேவை எல்லாம் என்றான் அவன். “ஊரார் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானா வளரும் நினைச்சு தான் அத்தான் அப்படி செஞ்சேன் என்றாள் அவள். “என்ன சொல்ற அப்போ நீ காதலிக்கறயா என்றான் கார்த்தி. “நீங்க தேறவே மாட்டீங்க அத்தான், உங்களை வைச்சுக்கிட்டு நான் எப்படி தான் குடித்தனம் பண்ணப் போறேனோ என்றவளை “இரு இரு உன்கிட்ட இப்ப என்ன பேசினாலும் பதிலுக்கு பதில் பேசி என் வாயை அடைக்குற, எல்லா விஷயத்தையும் இன்னைக்கு நைட் உன்கிட்ட கேட்டுக்கறேன். அப்போ மட்டும் பதிலுக்கு பதில் பேசு உன் வாயை எப்படி அடைக்கிறேன்னு அதுக்கு அப்புறம் நீ வாயே திறக்கமாட்ட என்று அவன் அவள் காதில் கிசுகிசுக்க அவள் முகம் சிவந்தது.

 

“அச்சோ அத்தான் போதும் இப்படிலாம் பேசாதீங்க என்றாள். “முத தடவையா உன் முகத்துல வெட்கம் வருது என்று அவன் அவளை ரசனையாக நோக்கினான். ஆதிரா எங்கு சென்றாலும் ஆதியின் பார்வை அவளை பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. தூரத்தில் நின்றிருந்தாலும் தன் மணாளன் கண் அவளையே பார்ப்பதை கண்டவள் முகம் செந்நிறமாகியது. அன்றைய இரவிற்கு வழக்கம் போல் அவர்கள் இருவரையுமே அலங்காரம் செய்யச் சொல்ல ஆதியின் பார்வை அவளை துளைக்க அவள் ஒருவாறு அலங்காரம் செய்து முடித்தாள். எல்லாம் முடித்து அவர்கள் வீட்டிற்கு வந்து சேர நள்ளிரவானது.

 

அவர்கள் அறைக்குச் சென்று உடை மாற்றி படுக்கையில் தொப்பென்று விழுந்தவளுக்கு குழந்தைகளின் நினைப்பு வர லட்சுமியை தேடினாள், அவர் குழந்தைகள் பேச்சியிடம் உறங்குவதாகக் கூற மீண்டும் அவர்கள் அறைக்கு வந்தாள். அங்கு ஆதியோ ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தான். அவனருகே சென்று அவன் முகத்தை பார்த்தவள், ‘கள்ளன் என்னல்லாம் செய்யுறான், அப்புறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி கண்ணடிச்சு மயக்குறான். இப்படி தானே அன்னைக்கும் என்னை பார்த்து கண்ணடிச்சான் என்று நினைத்துக் கொண்டே அவன் முன்னுச்சியில் முத்தமொன்றை பதித்தாள்.

 

மறுநாளே கறி விருந்து இருக்க எல்லோரும் லட்சுமியின் வீட்டிற்கு வந்தனர். விருந்து தடபுடலாக நடந்து முடிய மறுநாள் எல்லோரும் ஊருக்கு கிளம்பினர். கீர்த்தி தாளமுடியாமல் அழுதுவிட பார்வதியும் அழுக, உலகநாதனுக்கும் கண்ணில் நீர் நிறைந்தது. வீட்டில் இருந்த இரு பெண் பிள்ளைகளும் திருமணமாகி தத்தம் வீடுகளுக்கு போய்விட ஏதோ ஒரு தனிமை பயம் அவர்கள் இருவரையும் வாட்டியது.

 

“அத்தை மாமா நீங்க கவலைப்படாதீங்க, உங்களுக்கு அங்க தனியா இருக்க மாதிரி எப்ப நினைச்சாலும் உடனே கிளம்பி இங்க வந்துடுங்க, நீங்க கலங்குனா அவளால எப்படி நிம்மதியா இருக்க முடியும். நீங்க உங்க தங்கச்சி வீட்டில தானே உங்க பொண்ணை விட்டுட்டு போறீங்க. சந்தோசமா ஊருக்கு போய்ட்டு வாங்க என்று ஆதிரா ஆறுதல் சொல்ல ஒருவாறு எல்லோரும் கிளம்பினர்.

 

ஆச்சியோ ஆதிராவின் அருகில் வந்து “நான் அடுத்த முறை இங்கு வரும் போதும் நீ எனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெற்றுத் தரவேண்டும். அப்போது தான் நான் இங்கு வருவேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினர். ஒருவழியாக திருமணம் முடிந்து வந்திருந்த விருந்தினர் கூட்டமும் அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர். நாளை ஏதோ செய்யக் காத்திருக்கிறது என்பது அறியாமல் இருவரும் ஒரு மோனநிலையிலே இருந்தனர்…….

 

ஆதிரையே…

எனக்கு நான் இட்டேன்

திரையே…

உனக்கு நான் இழைத்தேன்

தீங்கினையே…

 

திருமணம் என்னும்

விலங்கிட்டு உன்னை

கூட்டுக்குள்

அடைத்து விட்டேனோவென

கலங்கி தவித்தேன் நானே…

 

காடு கரை தேடினாலும்

அண்டம் முழுதும் அலசினாலும்

காணக் கிடைக்காத

பொக்கிஷம் நீயேனக்கு…

 

உன்னை பார்க்கும் வரம்

மட்டுமே இப்போதெனக்கு

உன்னில் முழுதுமாக

கரைந்து போக ஆசையெனக்கு

 

என் மனச்சிறை மெல்ல

மெல்ல உடைகிறது…

உன் அன்பில்…

உன் வெட்கச் சிகப்பில்…

உன் கனிவில்…

உன் பொறுமையில்…

உன் காதலில்…

 

தேவதையே…

என்னுள் முழுதுமாக

கரைந்தவளே…

என்னை கரைத்தவள் நீயே…

 

 

Advertisement