Advertisement

அத்தியாயம் –17

 

 

“ஏன்லா லட்சுமி நீ இதெல்லாம் கவனிக்க மாட்டியா” என்றார் காந்திமதி. “என்னம்மா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை” என்றார் அவர். “உன் மகனும் மருமகளும் ஒன்னா சந்தோசமா இருக்க மாதிரி தெரியலைல. நீ இதை கூடவா பார்க்க மாட்டா” என்றார் அவர்.

 

“என்னம்மா சொல்றீங்க, எனக்கு அப்படி எதுவும் தெரியலையே, அவங்க சந்தோசமா தான் இருக்காங்கம்மா” என்றார் அவர். “எனக்கு அப்படி தோணலை, என் பேரன் முகமே சரியில்லை. பேத்தி முகத்துல சந்தோசமில்லை, எனக்கு இன்னும் அவங்க சந்தோசமா இருக்கலைன்னு தோணுது” என்றார்.

 

“அம்மா மருமகளுக்கு டைபாய்டு ஜுரம் வந்து இருக்கும் போது ஊர்ல இருந்து சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு வந்து இறங்குன உன் பேரன் என்ன குதி குதிச்சான்னு எனக்கு தான் தெரியும். அவன் எப்போமே இப்படி வருத்தப்பட்டு நான் பார்க்கலைம்மா, அதுனால தான் நான் உறுதியா சொல்றேன் அவங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம பாசமா இருக்காங்கம்மா” என்றார் லட்சுமி.

 

லட்சுமியின் பதிலில் குழப்பம் கொண்ட காந்திமதிக்கு உறுதியாக தோன்றியது அவர்கள் சந்தோசமாக இல்லை என்று. “இல்லைல நீ அவங்களை கவனிச்சு பாரு, எனக்கென்னமோ இன்னமும் பேரனுக்கு போன புள்ளை நினைப்பாவே இருக்கோன்னு தோணுது. அதுனால தான் என் பேத்திகூட சந்தோசமா இல்லையோன்னு தோணுது” என்றார் யோசனையுடனே.

 

“சரிம்மா நான் அவங்களை கவனிக்கறேன், ஓ அதுனால தான் அவங்களை அந்த அறைக்கு அலங்காரம் பண்ண அனுப்பினீங்களா” என்றார் லட்சுமி. “சரி பார்வதி எங்க…” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “என்னமா” என்றவாறே உள்ளே நுழைந்தார் பார்வதி.

 

“ஆதிரா மேல அலங்காரம் முடிச்சு வந்ததும் நம்ம காந்திமதியை மேல கூட்டி போய் விடச் சொல்லு” என்றார் அவர். “சரிம்மா சொல்லிடுறேன், அம்மா அப்புறம் ஒரு சந்தேகம், எதுக்கும்மா இந்த ஏற்பாட்டை இங்க வைச்சீங்க, நம்ம வீட்டுங்கள்ள மாப்பிள்ளை வீட்டுல வைக்கிறது தானே முறை” என்றார் பார்வதி.

 

“என்னலே எனக்கே முறை சொல்லி குடுக்கியா, நான் எதுக்கு சொன்னேன்னு நீ யோசிக்கலையா. அவங்களே பாவம் ரெண்டே அறைல தான் இருக்காங்க. அந்த வீட்டில இவங்க முதலிரவை ஏற்பாடு பண்ணா அவங்க எங்க போய் படுப்பாங்க. இதெல்லாம் யோசிக்க மாட்டியா, அதுமில்லாம இந்த வீடு பல தலைமுறைகளை பார்த்திருக்கு, மேல இருக்க அந்த கட்டிலும் அப்படி தான் இந்த வம்சம் தழைக்கணும் அதுவும் ஒரு காரணம்” என்றார் அந்த மூத்த பெண்மணி. தன் அன்னையின் முன்யோசனையை கண்டு சிலாகித்தார் பார்வதி.

 

பழங்கால கட்டிலின் நாற்புறமும் அமைந்த மரக்கட்டையில் பூச்சரத்தை தொங்கவிட்டவாறே ஆதியின் கண்கள் ஆதிராவை அளவெடுத்துக் கொண்டிருந்தன. மெத்தையில் இதய வடிவில் பூக்களை அலங்காரம் செய்து அதன் அருகில் இரு காதல் பறவைகளை போன்று அவள் அமைத்திருந்தது கண்டு அவன் கண்கள் பிரமிப்பில் ஆழ்ந்தன.

 

எதையோ எடுக்க அவள் வெளியே சென்ற சமயம் அவன் கைபேசியில் அவள் கைவண்ணத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டான். யோசனையுடனே இருவரும் அதை அலங்கரித்து முடிக்க, இருவருமாக கீழே இறங்கிச் சென்றனர்.

 

நேரே மாமியாரிடம் சென்றவளை “அம்மா ஆதிரா நீ போய் அம்முவை தயார் பண்ணி மேலே அனுப்பிட்டு வாம்மா, ஆதிக்கிட்ட மாப்பிள்ளையை மேலே கூட்டிட்டு போகச் சொன்னேன், கொஞ்சம் பார்த்துக்கோம்மா” என்றுவிட்டு அவர் வெளியில் சென்று விட்டார்.

 

அவளுக்கு ஆயாசமாக இருந்தது, கொஞ்ச நேரம் படுத்தால் தேவலாம் போல் இருந்தது. அனைத்தையும் ஒதுக்கி விட்டு மதியின் அறையை நாடிச் சென்றாள். அங்கு கீர்த்தி அவளை கிண்டல் செய்துக் கொண்டிருக்க அவளை போய் படுக்குமாறு சொல்லிவிட்டு ஆதிரா மதியை தயார் செய்தாள். மதியின் முகம் கலவரமாயிருந்தது.

 

“என்னாச்சு அம்மு, எதுக்கு இந்த பயம் என்கிட்ட சொல்லும்மா. உனக்கு பிடிச்சவரை தானே கல்யாணம் செஞ்சுகிட்ட, அப்புறம் ஏன் உன் கண்ணுல ஒரு பயம் தெரியுது” என்றாள் ஆதிரா. “இல்லை மதினி பயம்மா இருக்கு, இதுவரைக்கும் அம்மா, அப்பா, கீர்த்தின்னு இருந்துட்டேன். என்ன இருந்தாலும் நான் போய் இருக்கப் போறது வேற வீடு தானே. எல்லாரும் புதிய மனுசங்க அதை நினைச்சு தான் மதினி எனக்கு கவலையா இருக்கு” என்றாள் அவள்.

 

“அம்மு இதெல்லாம் நடக்கறது தானே, உண்மை சொல்லணும்னா இனிமே அது தான் உன்னோட குடும்பம். அண்ணனோட அப்பா, அம்மாவை நீ உங்க அப்பா, அம்மாவா தான் பார்க்கணும். அண்ணனோட தம்பி உனக்கும் ஒரு சகோதரன் போலவே, அதையும் விட அவர் உனக்கு மூத்த மகன்னும் சொல்லலாம்.

 

“பெண்கள் வாழை மரம் போன்றவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் குருத்தை நட்டால் தான் குலம் தழைக்கும். இப்போ அது தான் நடக்குது. உன் மனசுக்கு பிடிச்சவரையே தான் நீ கல்யாணம் பண்ணி இருக்க, அவரையும் அவரை சேர்ந்தவங்களும் இனி உன் குடும்பமா நினைச்சு பழகு. அப்போ தான் உனக்கு அது வேற இடமா தெரியாது. இனி அண்ணனோட இன்பம், துன்பம் ஏற்ற தாழ்வு எல்லாத்துலயும் உனக்கும் பங்கு இருக்கு. அண்ணனுக்கு நல்லா வரணும், உழைச்சு முன்னேறணும்ன்னு நினைக்கிறார். அதுக்கு நீ எப்பவும் அவருக்கு உறுதுணையா இருக்கணும். அவரோட பலமே நீ தான் இது உங்க வாழ்க்கை அதை நல்ல படியா நீங்க வாழணும்.

 

“கல்யாணத்துக்கு முன்ன இருந்த மாதிரியே கல்யாணத்துக்கு அப்புறமும் எல்லாரும் இருக்க மாட்டாங்க, அதுனால நீ அதை எல்லாம் எதிர்பார்க்காதே. அவங்க கோபப்பட்டாலும் பொறுத்துக்கோ, அவங்க கோபமா பேசும் போது நீ எதிர்த்து பேசாதே.

 

“உன்னை அதுக்காக நான் பேசாம இருக்க சொல்லலை, பேசணும் எப்ப பேசணுமோ அப்போ பேசு. அவங்க இயல்பா இருக்க நேரத்துல பேசு, அவங்களுக்கு உன்னை புரியவை, ரெண்டு பேரும் எப்பவும் மனசு விட்டு பேசுங்க. உனக்கு யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாத விஷயமா நீ நினைச்சா நீ இந்த அண்ணிக்கு போன் பண்ணி பேசு. நீ எப்ப கூப்பிட்டாலும் நான் உன் கூட பேசுவேன்” என்று கூறி ஒரு பெட்டியை அவளிடம் நீட்டினாள்.

 

“இந்தா இது உனக்கு தான் உனக்கு எப்ப என்கிட்ட பேசணுமோ, அப்போ நீ எனக்கு போன் பண்ணு சரியா” என்றாள் அவள். “இப்போ சொல்லு இப்பவும் உனக்கு பயமா இருக்கா” என்றாள் அவள்.

 

“இல்லை மதினி நீங்க பேசுனதுல எனக்கு பயம் எல்லாம் போச்சு. எனக்கு அம்மாவா, தோழியா, ஒரு வழிகாட்டியா, ஆசானா இருந்து நீங்க பேசுனீங்க மதினி. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று அவளைக் கட்டிக் கொண்டாள். “சரி வா போகலாம் நேரமாச்சு” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வர பார்வதி ஆதிராவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா, நாங்க அவளுக்கு சொல்ல வேண்டியது எல்லாம் நீயே சொல்லிட்டம்மா” என்று நெகிழ்ந்தார் அவர். ஆதிரா மதியை அழைத்துச் சென்று மாடியறையில் விட்டு கீழிறங்கி வந்தவள் குழந்தைகளை தேட அவர்கள் பேச்சியுடன் உறங்கிவிட்டனர்.

 

மறுநாளுக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். அறைக்கு வராதவளை தேடி ஹாலுக்கு வந்தவன் அவள் சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவது கண்டு மனம் வலிக்க அவளை மெதுவாக பற்றி எழுப்ப அவள் அவன் தோள்களில் தூங்கி விழுந்தாள். அப்படியே கூட்டி வந்து அவளை படுக்கையில் கிடத்திவிட்டு அவனும் தூங்கிப் போனான்.

 

மறுநாள் காலை எல்லோருக்கும் முன் எழுந்தவள் எல்லோரும் காபியை கலந்து கொண்டு போய் கொடுத்து எழுப்ப அவசரமாக எல்லோரும் எழுந்து கோவிலுக்கு செல்ல கிளம்பினர். மேலே சென்று மதியை எழுப்பி வந்து அவளை கல்யாணத்திற்கு தயாராக சொன்னாள். “என்ன அம்மு நீ தான் நாத்தனார் முடிச்சு போடணும், சீக்கிரமா கிளம்பு கோவிலுக்கு நேரமாச்சு” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு ஆதவனின் அறைக்கு செல்ல அவனோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

 

“தம்பி, தம்பி” என்று அவள் குரல் கொடுக்க அவன் அசைவதாக தெரியவில்லை. “குட்டி சித்தப்பாவை எழுப்புடா” என்றாள் அவள். அவனும் எழுப்ப அவன் அசையவே இல்லை “சரி விடுங்க தம்பி நேத்ராவை அடுத்த வருஷம் வரச் சொல்றேன், கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளி வைச்சுகலாம்” என்று அவள் சத்தமாக சொல்ல “அண்ணி நான் எழுந்துட்டேன் அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுவேன் அண்ணி” என்று குளியலறைக்கு பறந்தான் அவன்.

 

எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு வர கோவிலில் பூஜை முடிந்து அய்யர் தாலியை அம்மனின் முன் வைத்து எடுத்துக் கொடுக்க நேத்ராவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் ஆதவன். இருவர் முகமும் ஒரு சேர மலர்ந்திருக்க எதையோ சாதித்துவிட்ட உணர்வு இருவருக்குள்ளும் எழுந்தது. சம்பிரதாயம் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு வர அடுத்து கார்த்திக்கும் கீர்த்திக்கும் திருமண உறுதி இருப்பதால் எல்லோரும் அதற்கு தயாராயினர்.

 

மாலையில் கார்த்திக்கும் கீர்த்திக்கும் அடுத்த மூன்று மாதங்களில் திருமணத்தை உறுதி செய்தனர். சரவணனும் மதியும் சரவணனின் வீட்டிற்கு சென்று விட்டனர். வீட்டிற்கு சென்றதும் ஆச்சி நேற்று போலவே இன்றும் ஆதிராவையும் ஆதியையுமே அறையை அலங்காரம் செய்ய அனுப்பி வைத்தார் அவர்.

 

‘நேத்து காதல் பறவைகள் மாதிரி அலங்காரம் பண்ணா, இன்னைக்கு என்ன செய்யப் போறா’ என்று யோசித்துக் கொண்டே அவளை நோக்க இருகைகள் ஒன்றாக கோர்த்தது போல் இதய வடிவில் அலங்காரம் செய்திருந்தாள் அவள். வெளியே சென்று தட்டில் பழம் மற்றும் இனிப்புகள் வைத்து அவள் கொண்டு வர அதற்குள் அவன் அந்த அலங்காரத்தை நேற்று போல் அவன் கைபேசியில் புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்தினான். ஆதவனையும் நேத்ராவையும் அந்த அறைக்குள் அனுப்பிவிட்டு அவள் கீழிறங்கி வந்தாள்.

 

கீழே வந்தவள் கவினி அழுது கொண்டு வர அவளை தூக்கி சமாதானப்படுத்தினாள் அவளை படுக்க வைத்தாள் அவள். ஆதி வெளியில் சோபாவில் அமர்ந்திருக்க மற்றவர்களும் அங்கேயே அமர்ந்திருந்தனர். “என்னம்மா தூங்கிட்டாளா, உன்னை தேடி இருப்பா போல. அது அழுத்துட்டா” என்றார் லட்சுமி.

 

“ஆமா அத்தை என்னை தேடி தான் அழுதிருக்கா ஒருவழியா தூங்க வைச்சுட்டேன்” என்றாள் அவள். “சரிம்மா நாளைக்கு நாம எல்லாரும் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணும், எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டேன். காலையிலே நேரமா கிளம்பணும்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க ஆதிராவுக்கு கண்கள் சொருகியது, அவளின் தோற்றம் ஆதிக்கு ஏதோ செய்ய அவன் எழுந்து வருவதற்குள் மயங்கி விழுந்தாள் அவள்.

 

“ஆரா ஆரா என்னாச்சு” என்று அவளை எழுப்ப அவளோ நினைவில்லாமல் இருந்தாள். ஆதிக்கு கோபமாக வந்தது, மாஞ்சி மாஞ்சி வேலை செய்தால் அவள் என்னவாள் என்று வந்த கோபத்தை அவன் எல்லோரையும் சத்தம் போட உள்ளேயிருந்து வெளியே வந்த காந்திமதி “ஏன்பா ஆதி உன் பொண்டாட்டி மேல இம்புட்டு கரிசனம் இருந்தா அவளை நீ தானே பார்த்துக்கணும். எதுக்கு எல்லாரையும் குத்தம் சொல்ற, உனக்கு தானே அந்த பொறுப்பு இருக்கணும்” என்று அவர் சொல்ல ஆதி அதற்கு மேல் வாயை திறக்கவில்லை.

 

அதற்குள் உலகநாதன் அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வர அவர் அவளை பரிசோதித்து பார்த்துவிட்டு சோர்வினால் தான் அவள் மயங்கி இருக்கிறாள் என்று சொல்லி அவளுக்கு தூங்குவதற்கு ஒரு ஊசியை போட்டு விட்டு அவன் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்று சொல்லி கிளம்பிச் சென்றார். அவளை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான் ஆதி.

 

உட்கார்ந்துக் கொண்டே அவள் தலைமுடியை கோதியவன், ‘எதுக்குடி இப்படி எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு செய்யுற, உனக்கு நான் எதுவுமே செஞ்சது இல்லை. ஆனா நீ இந்த குடும்பத்தை இந்த தாங்கு தாங்குற, நான் உனக்கு தகுதியானவனே இல்லைடி. நீ கிடைக்க நான் எந்த ஜென்மத்துலையோ புண்ணியம் பண்ணி இருக்கணும். அதுக்கு நான் அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்’ என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

 

காலையில் கண் விளுத்தவள் எழுந்திருக்க முயல அவள் இடுப்பில் இருந்த வலிமையான கரம் அவளை மேலும் இறுக்கியது. அவள் திரும்பிப் பார்க்க ஆதி அவளை நன்றாக அணைத்தவாறே படுத்திருந்தான். ‘எப்படி எழுந்திருப்பது, இவர் எப்படி என்னருகில் வந்தார். என்னை அணைத்து வேறு படுத்திருக்கிறார்’ என்று யோசைனையுடனே அவன் கையை அப்புறப்படுத்தி ஒருவாறு எழுந்தாள்.

 

எழுந்து குளித்து கரும்பச்சையில் லேசாக பார்டர் செய்திருந்த புடவையை உடுத்தியவள் தயாராகி வெளியில் வந்தாள், நேரே ஆச்சியை பார்க்கச் சென்றாள். லட்சுமியும் அங்கிருக்க “என்னம்மா இப்போ எப்படி இருக்கு” என்றார் அவர். “எனக்கென்ன அத்தை நான் நல்லா தானே இருக்கேன்” என்றாள் அவள்.

 

“என்னம்மா நேத்து ராத்திரி நீ மயக்கம் போட்டு விழுந்து டாக்டர் வந்து பார்த்துட்டு ஊசி எல்லாம் போட்டாரே. ஆதிகூட எங்க எல்லாரையும் சத்தம் போட்டானேம்மா” என்றார் அவர். “என்ன அத்தை சொல்றீங்க, நேத்து ராத்திரி குழந்தையை தூங்க வைச்சுட்டு நானும் தூங்கிட்டேனே. நீங்க கூட காலையிலே கோவிலுக்கு போகணும் சொன்னீங்களே. எனக்கு அது வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு அத்தை” என்றாள் அவள்.

 

“நல்ல பொண்ணும்மா நீ, உன் புருஷன் எல்லாரையும் சத்தம் போட்டான். என் பொண்டாட்டியை ரொம்ப வேலை வாங்கிட்டீங்க. அதான் அவ இப்படி மயங்கி விழுந்துட்டா. உங்களுக்கு பொறுப்பே இல்லை அப்படி இப்படின்னு பேசினான். நான் வந்து ஒரு அதட்டல் போடவும் தான் பேசாம போனான். உன் பொண்டாட்டியை நீ தானே பார்த்துக்கணும் சொன்னேன், பய வாயை மூடிட்டு போய்ட்டான். என்ன செய்யறான், ராத்திரி எல்லாம் உன் பக்கத்துலையே உட்கார்ந்திட்டு இருந்தான்ன்னு இப்ப தான் லட்சுமி சொன்னா” என்றார் காந்திமதி.

 

“ஆச்சி அவர் தூங்குறார், அத்தை நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க அத்தை அவர் ஏதோ தெரியாம பேசிட்டார்” என்று அவரிடம் வருந்தினாள் அவள். காந்திமதி மகளை அர்த்தத்துடன் பார்த்தார். “நான் சொன்னேன்ல காலையில உன் மருமக வந்து இதை தான் சொல்லுவான்னு. விடும்மா ஆதிரா ஆதி பேசுனதுக்கு நாங்க ஏன் உன்மேல கோவப்படப் போறோம். அவன் பேசினதுல எந்த தப்பும் இல்லையே” என்றார் காந்திமதி.

 

“ஆதிரா எனக்கு உன் மேலயும் கோவம் வராது, ஆதி மேலயும் கோவம் வராது. நீ வருத்தப்படாதேம்மா, சரி நீ போய் நேத்ராவை எழுப்பும்மா. கோவிலுக்கு கிளம்பலாம், மதியும் மாப்பிள்ளையும் கூட கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. போம்மா” என்றார் அவர்.

 

நேத்ராவை எழுப்பி கிளம்பச் சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு வந்து ஆதியை எழுப்பி தயாராகச் சொன்னாள். கவினையும் கவினியையும் குளிப்பாட்டி தயாராக்கினாள். ஆதி குளித்துவிட்டு வர “என்னங்க” என்றாள். “என்ன” என்றான் அவன்.

 

“என்னங்க நேத்து எதுக்கு அத்தைகிட்ட அப்படி பேசுனீங்க, போங்க போய் அவங்ககிட்ட பேசுங்க அவங்க எவ்வளோ வருத்தப்படுவாங்க” என்றாள். ஆதிக்கும் சங்கடமாகவே இருந்தது, அதுவும் பேசாமல் கிளம்பியவன் நேரே சென்று நின்றது அவன் அன்னையிடம் “அம்மா சாரிம்மா நைட் ஏதோ பேசிட்டேன். என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று அவரிடம் சிறுகுழந்தையாய் மன்னிப்பு கேட்டவனை “எதுக்குப்பா ஆதி இதெல்லாம் விடு எனக்கு தெரியாதா உன்னை. விடுப்பா சரி கோவிலுக்கு கிளம்பணும் ஆச்சியும் வர்றாங்க” என்றார் அவர்.

 

எல்லோரும் ஒரு பேருந்து ஏற்பாடு செய்துக் கொண்டு சொரிமுத்து அய்யனார் கோவில் நோக்கி விரைந்தனர். பொங்கல் வைத்துவிட்டு அங்கேயே காலை உணவை அருந்தினர். ஆதிக்கும் ஆதிராவுக்கும் அவர்கள் திருமணத்தன்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வர அவனுக்கு பொங்கல் வைக்க வந்த ஆதிராவுக்கு சிரிப்பு வந்தது. “என்னடி உனக்குள்ள சிரிக்கற” என்றான் அவன். “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள். அவனுக்கு நினைவு வந்தது அவள் அன்றைய நாளை நினைத்து சிரிக்கிறாள் என்று புரிந்தது.

 

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அடுத்து காரையாறு நோக்கி சென்றனர். ஆதிக்குள் அன்றைய நினைவுகள் மீண்டும் எழுந்தது. படகு சவாரியில் ஆதிரா அவன் கையை இருக்க பற்றிய நினைவு அவளுக்குள் எழுந்து சந்தோஷ ஊற்றை கொடுத்தது. அருவிக்கு செல்ல படகு குழாமில் இறங்கியவர்கள் படகுக்கு பணம் கொடுத்துவிட்டு இரண்டு படகில் ஏறினர்.

 

“இளந்தாரிக எல்லாம் ஒரு படகுல போகட்டும். நாம எல்லாம் ஒரு படகுல போவோம்” என்று ஆச்சி கூற ஒரு படகில், ஆச்சி, பேச்சி, லட்சுமி, அருணாசலம், உலகநாதன், சங்கரன், கோமதி, கருப்பசாமி மற்றும் சந்திராவும் ஏறிக் கொண்டனர். கவினையும் கவினியையும் பேச்சியே பார்த்துக் கொள்வதாகக் கூற அந்த படகு முதலில் கிளம்பியது.

 

அடுத்த படகில் ஒவ்வொரு ஜோடியாக ஏறிக் கொண்டனர். கார்த்தி நிச்சயம் முடிந்ததில் இருந்து கீர்த்தியையே சுத்தி சுத்தி வந்தான். “என்ன அத்தான் படகுல ஏறுற உத்தேசமே இல்லையா, உங்களுக்கு படகை பார்த்து ஏறுங்க” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள். அவன் முதலில் ஏறிக் கொண்டு அவளுக்கு கைக் கொடுக்க “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நாங்களே வருவோம்” என்று அவளே அழகாக ஏறி அமர்ந்தாள்.

 

சரவணன்-மதி, ஆதவன்-நேத்ரா ஜோடியாக அமர ஆதிரா ஆதர்ஷாவை அருகே அமர்த்திக் கொண்டாள். ஆதர்ஷாவின் அருகே ஆதி அமர்ந்தான். எதிரில் சூர்யாவும் கீர்த்தியும் கார்த்தியும் அமர்ந்துக் கொண்டனர். ஆதர்ஷாவை அருகே அவள் அமர்த்திக் கொள்ளவும் ஆதிக்கு முகம் வாடிவிட்டது. அந்த படகு மெல்ல கிளம்ப ஆதி ஆதிராவின் முகம் பார்த்தான். படகின் ஆட்டத்தில் அவள் முகம் பயத்தை சுமந்திருந்தது. ஆதர்ஷாவும் படகின் ஓரத்தில் அமர பயப்படுவாள் என்று ஆதிராவே ஓரமாக உட்கார்ந்துக் கொண்டாள்.

 

ஆளாளுக்கு அவர்கள் ஜோடியை கொஞ்சிக் கொண்டும் சீண்டிக் கொண்டும் இருக்க சூர்யாவுக்கு முதல் முறையாக காதலித்தால் தான் என்ன எதிரில் வேறு நம்மை கவனிக்கும் ஒரு பெண் ஆளாளுக்கு இப்படி ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு நம்மை வேறு இம்சை செய்கிறார்களே என்று அவள் எல்லோரையும் வைதான்.

 

ஆதர்ஷாவுக்கோ அவன் கீர்த்தியின் அருகில் உட்கார்ந்து இருப்பது முகத்தை கடுப்பை வரவழைத்தது. படகு நன்றாக ஓரிடத்தில் ஆட ஆதிரா எந்த பிடிப்பும் இன்றி கூடவே ஆடினாள். அவள் முகத்தில் பயம் அதிகமாகவே தெரிந்தது. “ஆதர்ஷா நீ போய் சூர்யா பக்கத்துல உட்காரு, உங்கண்ணி பயப்படுவா” என்று சொல்லி சூர்யாவின் வயிற்றில் பாலை வார்த்தான்.

ஆதர்ஷா ஆடிக் கொண்டே வர சூர்யா அவள் கைப்பிடித்து அவனருகில் உட்கார வைத்தான். ஆதி அருகே அமர்ந்த போதும் ஆதிரா அவன் கையை பிடிக்கவில்லை அவனாக அவள் கையை பிடிக்கலாம் என்றால் அவன் பிடிக்காத வண்ணம் அவனுக்கு போக்கு காட்டினாள். “ஏன்டி இப்படி செய்யற உன் பயம் எனக்கு நல்லா தெரியுது, எதுக்கு வீம்பு பண்ற. மரியாதையா என்னை பிடிச்சுக்கோ” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

“நான் உங்ககிட்ட வந்து பேசினா நான் உங்களுக்கு தொல்லையா தெரிவேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்க கையை பிடிக்கறது நீங்க அதுக்கும் எனக்கு பிடிக்கலைன்னு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டா என்ன பண்றது, அதுக்கு நான் பிடிமானம் இல்லாம இந்த தண்ணிக்குள்ள கூட விழுந்துடலாம்” என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு.

 

அவள் பேசிய வார்த்தைகள் ஈட்டியாய் நெஞ்சில் குத்த அவனுக்கு வலித்தது. இது போல் தான் அவளுக்கும் இருந்திருக்குமோ அவளை ரொம்பவே படுத்திவிட்டோம் என்பது புரிய அவளை பாவமாக நோக்கினான். “ஏன்டி இப்படி எல்லாம் பேசுற” என்றான் அவன் வலியுடன்.

 

“நீங்க அப்படி சொன்னப்ப எனக்கும் அப்படி தாங்க வலிச்சுது. விடுங்க எதுவும் பேசவேண்டாம்” என்று அவள் மீண்டும் திரும்பிக் கொள்ள “எந்த சுழ்நிலையிலையும் நான் இனிமே அப்படி பேசமாட்டேன் ப்ளீஸ்டி இனிமே இப்படி பேசாதே என்னால தாங்க முடியலை” என்று கூறியவனின் குரல் நலிந்திருக்க ஆதிரா தன்னையுமறியாமல் அவன் கையை பற்றினாள்.

 

“நான் உங்களை கஷ்டப்படுத்த இப்படி பேசலைங்க நீங்க திரும்பவும் அப்படி பேசினா என்னால தாங்க முடியாது. அதை தான் சொன்னேன், இதோட இந்த பேச்சை விடுங்க” என்றவாறு அவன் கைகளை இறுக பற்றினாள். அவனோ இடது கையை வளைத்து அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

 

‘அய்யோ அத்தானுமா இவ்வளவு நேரம் தள்ளி தானே இருந்தாங்க, இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து என்னை ஒரு வழி பண்றாங்களே. இவ வேற பக்கத்துல உட்கார்ந்து இருக்கா’ என்று நினைத்துக் கொண்டான் சூர்யா. அவனுக்கு பயம் ஒரு பக்கம் அவள் மீதான ஆசை ஒரு பக்கமுமாக அவனை அலைகழித்தது. அவனுக்கு அவள் மீதான நேசம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்திருந்தது.

 

அவள் கைப்பற்றி அருகில் அமர வைத்தவனது உள்ளம் அவன் வசம் இல்லாமல் அந்தரத்தில் ஆடியது. ஆதர்ஷாவிற்கு அடுத்து அமர்ந்திருந்த கீர்த்தி சும்மா இல்லாமல் தள்ளி உட்காரு என்று சொல்லி வேண்டுமென்றே அவளை சூர்யாவின் மேல் இடிக்கும் அளவிற்கு தள்ளி உட்காரவைத்தாள். ஆதர்ஷாவோ நெளிந்து கொண்டிருக்க சூர்யாவின் இதயம் விட்டுவிட்டு துடித்தது. அவர்கள் பார்வை ஒருவரை ஒருவர் தழுவிச் சென்ற அந்த நொடி இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் சொல்லாமலே உணரப்பட்டது.

சூர்யாவின் கண்களில் காதலை கண்டுகொண்ட ஆதர்ஷாவுக்குள் உள்ளம் துள்ளியது. எல்லோரும் அருவிக்கரையில் இறங்கிக் கொள்ள கவினி ஓடி வந்து ஆதிராவைக் கட்டிக் கொண்டாள். “அம்மா நான் உங்ககூட தான் வருவேன்” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவளையும் தூக்கிக் கொண்டு எல்லோருமாக சேர்ந்து அருவில் குளித்துவிட்டு வந்தனர். ஆதியின் பார்வை ஈரத்துடன் நின்றிருந்த ஆதிராவின் மேல் விழ அவன் பார்வையை வேறு புறம் திருப்பினான்.

 

திரும்பி வரும் போதும் முதலில் வந்தது போலவே பயணம் செய்ய இடைசெறுகலாக கவினும் கவினியும் அந்த படகில் ஆதிராவுடன் தான் வருவோம் என்று சொல்லி ஏறிக் கொண்டனர். கவினை ஆதி மடியில் இருத்திக் கொண்டு இருவருக்கும் இடையில் கவினியை அமர்த்திக் கொண்டனர். ஆதியின் கரம் முன்பு போலவே அவள் தோள்களை பற்றியது. கார்த்தி கீர்த்தியுடன் சந்தோசமாக பேசிக் கொண்டு வர “ஹேய் நீ ரொம்பவும் வாயடிக்கற, ரொம்ப கஷ்டம் தான் என் பாடு” என்றான் கார்த்திக்.

 

“உங்களை அப்படி யாரு அத்தான் கஷ்டப்பட சொன்னது நானா உங்களை கட்டிக்கறேன்னு சொன்னேன். நீங்க தானே நான் வேணும்னு வந்தீங்க” என்று அவள் சிலுப்ப, “நானா உன்னை கட்டிக்கறேன்னு சொன்னேன், எல்லாம் எங்க அம்மா பார்த்த வேலை” என்று அவனும் பதிலுக்கு கொடுக்க, “அப்ப சரி அத்தான் விடுங்க நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க போல. நீங்க இப்படியே உட்காருங்க, நான் எங்க அண்ணன் பக்கத்துல போய் உட்கார்ந்துக்கறேன்” என்று அவள் எழ முயல “உட்காருடி பேசாம” என்று அவளை இழுத்து தன்னருகில் அமர்த்தினான்.

 

“இனிமே அப்படி ஏதும் பேசமாட்டீங்களே” என்றாள் “அம்மா தாயே உன்னை நான் எதுவும் சொல்லமாட்டேன் நீ என் பக்கத்துல உட்காரு அதே போதும்” என்று அவன் அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் கோர்த்துக் கொண்டான். சூர்யா இதை கண்டும் காணாதவன் போல் கண்டவனுக்கு அய்யோ என்றிருந்தது. ‘படிக்கற புள்ளைங்களை பக்கத்துல வைச்சுட்டு எல்லாரும் என்ன வேலை செய்யறாங்க’ என்று நினைத்து நொந்து போனான்.

 

எல்லோரும் ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் கறி விருந்து செய்வதாக இருந்தது. ஆதிரா விருந்தை வயலுடன் ஒட்டிய தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல எல்லோரும் சரியென்றனர். அங்கு அவர்கள் கட்டிக் கொண்டிருந்த வீடும் முடியும் தருவாயில் இருக்க மறுநாள் காலை பாலைக் காய்ச்சி விட்டு மதியம் கறி விருந்து என்று முடிவு செய்தனர். காலையில் எல்லோரும் பஸ் பிடித்து அங்கு சென்று இறங்கினர். “அம்மு உள்ள வா அத்தை கையால பாலைக் காய்ச்சட்டும்” என்றான்.

 

“அண்ணா நாங்க எதுக்கு காய்ச்சணும். பெரியம்மாவும் மதினியும் பாலைக் காய்ச்சட்டும் அண்ணே” என்றாள் அவள். “சரவணா அம்மு இந்தாங்க இந்த வீட்டோட பத்திரம் உங்களுக்கு தான் எழுதி இருக்கேன். அத்தை மாமா வாங்கிகோங்க” என்று சொல்லி சரவணனின் பெற்றோரிடம் அந்த பத்திரத்தைக் கொடுத்தான் அவன். எல்லோரும் வியப்பில் ஆழ ஆதிரா சிரித்துக் கொண்டு நின்றாள். சரவணனின் தாயார் மருமகளை பாலைக் காய்ச்சச் சொன்னார். அன்று மதிய விருந்துக்கு ஆட்கள் வந்து சமைத்துக் கொண்டிருந்தனர்.

 

அவரவர்கள் ஜோடி ஜோடியாக சென்று தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த தோப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவுகளை கொடுத்தது. ஆதிக்கு அன்று ஆதிரா இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவளை முறைத்தது நினைவுக்கு வந்தது. பார்த்து பார்த்தே என்னை ஏதோ செய்யுறா என்று அவளை மனதுக்குள் செல்லமாக வைதான் அவன்.

 

ஆதவனோ அவன் தங்கை கீர்த்தியை ஓட்டிக் கொண்டிருந்தான் “மச்சான் போன தடவை இந்த தோப்புக்கு வந்து இருக்கும் போது இவ என்னவெல்லாம் பண்ணா தெரியுமா, சரவணனையும் மதியையும் நல்லா கலாட்டா பண்ணினா, அன்னைக்கு சொன்னது ஞாபகம் இருக்கா வாலு” என்று அவன் சொல்ல “என்ன” என்றான் கார்த்தி.

 

“அய்யோ அண்ணா சொல்லாத அப்புறம் ரொம்ப கஷ்டமா போகும்” என்று கீர்த்தி சொல்ல “என்னன்னு சொல்லுங்க மச்சான்” என்று கார்த்தி கேட்க “உன்னை கட்டிட்டு எவன் கஷ்டப்படப் போறானோன்னு தான் அவகிட்ட சொன்னேன். பார்த்தா அந்த நல்ல மனுஷன் நீங்க தான், உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த வாயாடியை வைச்சு நீங்க எப்படி தான் காலத்தை ஓட்டப் போறீங்களோ” என்று ஆதவன் சொல்ல கார்த்தி சிரித்துவிட்டான்.

 

“இந்த வாயாடியை எப்படி சமாளிக்குறேன்னு நீங்க பார்க்க தானே போறீங்க, அப்புறம் என் தங்கச்சியா இப்படின்னு நீங்க சொல்ல தான் போறீங்க பாருங்க” என்றான் கார்த்தி. ஆளாளுக்கு அவர்கள் துணையுடன் இருக்க சூர்யாவும் ஆதர்ஷாவும் ஏன் தான் இங்கு வந்தோமோ என்று தனித்தனியாக புலம்பிக் கொண்டிருந்தனர்.

 

ஆதியோ ஆதிராவையே விழிகளால் தேடிக் கொண்டிருக்க அவளோ சமையல் செய்பவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தாள். அவளருகில் வந்தவன் “இங்க என்னடி பண்ற, பேசாம வந்து உட்காரு” என்றான் அவன். “என்னங்க நம்ம வீட்டு விஷேசம் நாம தானே பார்க்கணும்” என்றாள் அவள்.

 

“நான் சொன்னா நீ கேட்க மாட்டியா” என்றான் அவன். அவள் பாவமாக அவனை பார்க்க “சரவணா” என்றழைத்தான். “என்ன ஆதி” என்று வந்தான் அவன். “உன் தங்கச்சி நான் சொன்ன கேட்காம வேலை செய்யற, அப்புறம் அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்தட்டா மாதிரி ஏதாச்சும் ஆச்சுன்னு எனக்கு டென்ஷன் ஆகிடும். அத்தையை கொஞ்சம் சமையல் பண்றவங்களுக்கு உதவி பண்ண சொல்லேன்” என்று சொல்ல “என்னம்மா ஆதி சொன்னா கேளும்மா முதல்ல உன் உடம்பை பாரும்மா ரொம்ப அலட்டிக்காதே, நான் சித்தியை பார்க்க சொல்லறேன்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

 

“இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க” என்றாள் அவள். “அங்க பாரு எல்லாரும் என்ன பண்றாங்கன்னு ஆளாளுக்கு தோப்பை சுத்தி பார்த்துட்டு பம்பு செட்ல குளிச்சுட்டுன்னு சந்தோசமா இருக்காங்க. நீ என்னடான்னா போய் சமையல் பண்ற இடத்துல நிக்கற, பேசாம என் பக்கத்துல உட்காரு. கவினையும் கவினியையும் கூட்டிட்டு போய் தோப்பை சுத்தி பார்த்துட்டு வரலாம்” என்று கூறி அவளை பக்கத்தில் இருத்திக் கொண்டான்.

 

“என்னங்க நான் வந்து பாயசம் செய்யறேன், சொல்லி இருந்தேன் கொஞ்ச நேரம் கழிச்சு போய்ட்டு வர்றேனே” என்றாள் அவள். அவன் அவளை முறைக்க அவளையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தோப்பை சுற்றி வந்தனர், மாந்தோப்பில் அவன் மாங்காய் பறித்து கொடுத்தான். குழந்தைகளுடன் சேர்ந்து பம்பு செட்டில் குளித்தான்.

 

அவளை சேர்த்து தொட்டிக்குள் அவன் தள்ளிவிட ஒருவழியாக குளியல் முடித்து ஆடை மாற்றிக் கொண்டு அவள் மேலே வந்தாள். மதிய உணவு தயாராகி இருக்க அவள் சென்று பாயாசமும் வைத்துவிட்டு வந்தாள். ஆதர்ஷா, கீர்த்தி, மதி, ஆதிரா மற்றும் நேத்ரா எல்லோருக்கும் பரிமாற முதலில் ஆண்களும் பெரியவர்களும் குழந்தைகளும் சாப்பிட்டனர்.

 

“என்னலே பார்த்துக்கிட்டு இருக்க, உன் புருஷனை முதல்ல கவனி. நீ அவனுக்கு கறி போடுவன்னு உன்னையே பார்த்துக்கிட்டு இருக்கான் பாரு” என்று ஆச்சி நேத்ராவை பார்த்துக் கூற, அவள் அசடு வழிந்தவாறே சென்று அவனுக்கு உணவு பரிமாறினாள். “நீங்களும் என்னலே பாக்குறீங்க, உங்களுக்கு வேற சொல்லணுமா, போய் அவங்க அவங்க ஜோடிக்கு சாப்பாட்டை வைங்க” என்று ஏவினார் ஆச்சி.

 

கடைசியாக எல்லாருக்கும் ஒரு கோப்பையில் பாயாசம் ஊத்திக் கொடுக்க ஆதிராவை பார்த்தவாறே வாங்கி சுவைத்தவன் விழிகள் வியப்பில் ஆழ்ந்தது. “என்ன பாயாசம் இது ரொம்ப நல்லா இருக்கு” என்றான் அவன். “கோதுமை பாயாசம்” என்றாள் அவள். “கோதுமையா எப்படி செய்யணும், நெஜமாவே ரொம்ப நல்லா இருக்கு” என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வாங்கிக் குடித்தான் அவன்.

 

எல்லோரும் சாப்பிட்டு எழ பெரியவர்கள் ஓய்வெடுக்கச் சென்றனர், கிளம்பும் முன் காந்திமதி அவர்களிடம் “இவ்வளவு நேரம் என் பேத்திங்க எல்லாருக்கும் சாப்பாடு போட்டாங்க, இனி பேரனுங்க எல்லாரும் சேர்ந்து இப்போ எங்க பேத்திகளுக்கு சாப்பாடு போடணும். என்ன பேராண்டிகளா செய்வீங்கள்ள” என்றார் அவர்.

சந்தோசமாக தலையை ஆட்டினர் எல்லோரும். அவரவர் ஜோடியை அமர வைத்து ஆளாளுக்கு ஒன்றை தூக்கி வந்து சாப்பிடு சாப்பிடு என்று ஊட்டாத குறையாக அவர்கள் சாப்பாடு போட பெண்கள் திணறினர். ஆதர்ஷா தனித்து விடப்பட்டு இருக்க சூர்யா எதிலும் கலந்து கொள்ளாமல் தனியே சென்று விட்டான்.

 

தூரத்தே அமர்ந்து இருந்த காந்திமதி ஆச்சி அதை கண்டுவிட “என்னப்பா சூர்யா உன்னையும் சேர்த்து தான் போகச் சொன்னேன், அங்க யாரு சாப்பிடுறா. உங்க அக்காமாரும் மதினிமாருங்க தானே. போப்பா போய் அவங்களை கவனி” என்றவர் மனதில் சிரித்துக் கொண்டார். சூர்யா வேறு வழியில்லாமல் அங்கு சென்றான்.

 

ஒரு பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வைத்துக் கொண்டு வர கடைசியாக ஆதர்ஷா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவன் பரிமாற “போதும்” என்றாள் அவள் ஒற்றை சொல்லாக, “இல்லை நல்ல சாப்பிடுங்க, ஆச்சி எல்லாருக்கும் பரிமாற சொன்னாங்க சாப்பிடுங்க” என்று சொல்லி அவளுக்கு அள்ளி வைத்தான்.

 

“ஆரா உனக்கு என்ன வேணும் சொல்லு நான் எடுத்துட்டு வர்றேன்” என்றான். “நீங்க இவ்வளவு வைச்சது போதாதா, இதுக்கு மேல வைக்கணுமா, அப்புறம் நான் இன்னும் குண்டாகிடுவேன்” என்றாள் அவள். “நீ ஒண்ணும் ரொம்ப அதிக எடை எல்லாம் இல்ல, நான் தூக்கற அளவுக்கு தான் இருக்க” என்றான் அவன். “என்ன… என்ன சொல்றீங்க” என்று முகம் சிவந்தாள் அவள்.

 

“அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்தியே நான் தானே உன்னை தூக்கிட்டு போய் படுக்கையில் படுக்க வைச்சேன்” என்றான் அவன். அவள் முகம் வெட்கத்தில் மேலும் சிவக்க அதை ரசனையுடன் பார்த்தான் ஆதி. யாரும் பாரா வண்ணம் அவள் உண்ண எடுத்த ஒரு கவளத்தை எடுத்து அவன் வாய்க்குள் வைத்துக் கொண்டான். வெட்கத்தில் அவள் நெளிய அவள் கன்னத்தை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

 

“என்னடி ஆழாக்கு உனக்கு என்ன வேணும் சொல்லு கொண்டு வர்றேன்” என்று அவளருகில் வந்தான் ஆதவன். “அய்யோ போதும் கொஞ்சம் பேசாம இருங்க, இதுக்கு மேல வைச்சா தாங்காது சாமி ஆளை விடுங்க” என்றாள் அவள். “நீ என்ன சாப்பிட்டாலும் இனி வளர போறது இல்லைடி, நான் என்ன பண்றது உனக்கு ஸ்டுல் வாங்கி கொடுத்தே நான் ஓட்டாண்டி ஆகிடுவேன்” போல என்று அவன் கிண்டலடித்தான்.

 

“இப்ப கிண்டல் பண்றதுக்கு பதில் நல்லா வளர்த்தியா உங்க உசரத்துக்கு ஒரு பொண்ணை பார்த்து கட்டியிருக்க வேண்டியது தானே” என்றாள் அவள். “என்ன செய்ய எனக்கு உன்னை தான் பிடிச்சு இருந்துச்சு, அதான் சரி சொல்லிட்டேன்” என்று சலிப்பது போல் சொல்லி சிரித்தான் ஆதவன்.

 

 

ஒரு பக்கம் மதிக்கு சரவணன் ஊட்டி விட, கார்த்தியோ கீர்த்தியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான். சூர்யாவுக்குள் எண்ணக் கலவைகள் ஓட அவன் மனம் ஆதர்ஷாவிடமே சென்றது. அவள் மட்டும் ஏனோ தானோவென்று உண்ண யார் என்ன நினைத்தாலும் சரி என்று முடிவெடுத்தவன் அவளை கவனிக்கச் சென்றான்.

 

“என்ன தர்ஷு சாப்பிடாம என்ன யோசனை, இந்தா இன்னும் கொஞ்சம் பிரியாணி போட்டுக்கோ” என்று அவன் கரிசனமாக வந்து அவளுக்கு உணவை வைத்தான். ஏனோ அந்த கணம் அவள் கண்களில் நீர் துளிர்த்தது அதை கண்டவனுக்கு உள்ளே எதுவோ உடைவது போல் இருந்தது. அவனின் தர்ஷு என்ற அழைப்பு அவள் மனதை தென்றலாய் வருடியது.

 

‘கடவுளே இன்னும் ஒரு வருஷம் இப்போ தான் கடைசி வருஷம் வந்திருக்கேன், இது முடிஞ்சதும் வேலைக்கு போய்டுவேன், அப்புறமா வந்து தைரியமா இவகிட்ட பேசுறேன். அதுவரைக்கும் எனக்கு சக்தி கொடு, இவ இப்படி கண்ணீர் விட்டா நான் இப்பவே இவளை கூட்டிட்டு போய்டுவேன்’ என்று அவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

 

மாலை எல்லோருக்கும் சூடாக தேநீர் கொடுத்துவிட்டு சூடாக வாழைக்காயை பொரித்துக் கொண்டு எடுத்து வந்திருந்தாள் ஆதிரா. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என பாராட்ட ஆதிக்கு அவளை நினைத்து பெருமிதமாக இருந்தது.

 

எல்லாரையும் எப்படி தான் தன்வசப்படுத்தி வைச்சு இருக்காளோ என்று நினைத்து மாய்ந்து போனான். “எப்படில இப்படி பொரிச்சு கொண்டு வந்து இருக்க, நல்லா இருக்கே” என்றார் பார்வதி. “அத்தை ஒண்ணுமே செய்யலை, சின்ன வாழைக்காய் எடுத்து பாதி விரல் அளவுக்கு அரிஞ்சு சிக்கன் பொரிக்கற மசாலா போட்டு கொஞ்சம் காரப்பொடி லேசா உப்பு போட்டு பிசறி வைச்சேன். எண்ணெய் காய்ஞ்சதும் போட்டு எடுத்தேன். அவ்வளோ தான் அத்தை. இது ஒண்ணும் புதுசு எல்லாம் இல்லை” என்றாள்.

 

இருட்டும் முன் கிளம்ப வேண்டும் என்று காந்திமதி சொல்ல எல்லோரும் கிளம்பினர். மறுநாள் இரவு தென்காசியில் இருந்து ரயிலில் அவர்கள் சென்னை செல்வதாக இருந்தது. விடிந்ததும் எல்லோரும் அவரவர் துணிகளை எடுத்து அடுக்கி கொண்டிருந்தனர். சின்ன காந்திமதி அன்று அவர்கள் புகுந்த வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றாள்.

 

என்ன முயன்றும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொல்ல சரவணன் அவள் கையை பிடித்து “அழாதே மதி நான் இருக்கேன் உனக்கு, நீ என்ன வேற ஊருக்கா போகப் போற, நாம இதே ஊர்ல தானே இருக்கோம். உனக்கு மாமா அத்தை உன் தங்கச்சி பார்க்கணும்னா நீ வந்து பாரு. சரி அழாதே பாரு நீ அழறது பார்த்து அவங்களும் அழறாங்க” என்று சொல்லி ஒருவாறு அவளை தேற்றி அவர்கள் வீட்டிற்கு கூட்டிச்சென்றான். பேச்சி காந்திமதிக்கு துணையாக இருப்பதாகச் சொல்லி அங்கே தங்கிவிட்டார், அவரும் காந்திமதியும் ஒரு மாதம் கழித்து சென்னை வருவதாக சொல்லிவிட அன்று மாலையே எல்லோரும் ஊருக்கு கிளம்பினர்.

 

வீடே வெறிச்சென்று இருக்க கீர்த்திக்கு அழுகையாக வந்தது, உடன் பிறந்தவளும் திருமணமாகி சென்றுவிட இந்த ஒருவாரமும் சென்றதே தெரியாமல் ஓடிவிட அவள் முகம் வாடியது. கார்த்தி அவளை தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினான். எல்லோரிடமும் விடைபெற்று தென்காசிக்கு வந்து ரயிலில் ஏறி அமர்ந்தனர்.

 

என்னில் முழுவதுமாக

கலந்து எனக்கு

சகலமும் நீயே என்று

ஆகிப்போனாயடி…

 

நீ மயங்கி விழுந்து

என்னை கலங்கச் செய்தாய்

கலங்கி போனவன்

உன்னில் மயங்கிப் போனேனடி…

 

கனவுகள் வந்ததில்லையெனக்கு…

ஆனால் இப்போதெல்லாம்

என் கனவாகவும் நினைவாகவும்

நீயென ஆகிப்போனாயடி…

 

சகியே இத்துனை நாள்

எங்கிருந்தாயாடி…

என் சுவாசமாகியவளே

என்னை மொத்தமாக

களவாடிபோனாயடி…

 

அத்தியாயம் –18

 

ஒருவாரம் கழித்து கல்லூரிக்குச் சென்றவனை சூர்யாவின் நண்பர்கள் பட்டாளம் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்த்தனர். “என்னடா வரவேற்பு எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. என்ன விஷயம்” என்றான் சூர்யா.

 

“இல்லை மச்சி இன்னிக்கு நீ என்னமோ பிரெஷ்ஷா வந்து இருக்க மாதிரி இருக்கு ஜொலிக்கற, கல்யாணம் உனக்கு நடந்த மாதிரி புது மாப்பிள்ளை மாதிரி தெரியறியே… என்ன மச்சி என்ன விஷயம் என்கிட்ட மட்டும் சொல்லுடா, மாப்பிள்ளை மாறி ஒருவேளை நீ தீடிர் மாப்பிள்ளை ஆகிட்டியா” என்று கிண்டல் அடித்தான் சுந்தர். “என்னடா கிண்டல் பண்றியா, என்னை பார்த்தா புது மாப்பிள்ளை மாதிரியா தெரியுது” என்று யோசித்துக் கொண்டே அங்கு நின்றிருந்த ஒரு பைக்கின் கண்ணாடியில் முகம் பார்த்தான் சூர்யா. “டேய் மச்சி நீங்க கிளம்புங்க நான் சூர்யாவோட வர்றேன்” என்று சொல்லி மற்றவர்களை அனுப்பிவிட்டு சூர்யாவை மேலிருந்து கீழாக அளந்தான் சுந்தர்.

 

“என்னடா இப்ப நீ பார்க்கறதை பார்த்தா ஏதோ விசித்திர ஜந்துவை பார்க்கற மாதிரி பார்க்குற” என்றான் சூர்யா. “நான் கிண்டல் பண்ணேன் சரி, நீ எதுக்கு கண்ணாடியை பார்த்தே” என்று புருவத்தை தூக்கி கேள்வி கேட்டான் சுந்தர். “நீ சொன்ன மாதிரி எதுவும் தெரியுதான்னு பார்த்தேன், அப்படி எதுவும் தெரியலையே” என்றான் சூர்யா.

 

“இதுவரைக்கும் நான் உன்னை சும்மா கலாட்டா தான் பண்ணேன், இப்ப முடிவே பண்ணிட்டேன், நீ எதுக்கு இப்போ கண்ணாடியை பார்த்தே, ஊர்ல எதாச்சும் பொண்ணு பார்த்து முடிவு பண்ணிட்டாங்களா” என்று கண் சிமிட்டியவாறு.  “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீ வா நேரமாச்சு நம்ம ரூமுக்கு போகலாம்” என்று பேச்சை மாற்றினான் சூர்யா. “மச்சி அங்க பாரேன் யார் வர்றாங்கன்னு, உன் சொந்தகார பொண்ணு வருதுடா” என்று சுந்தர் கூற, சூர்யாவின் கண்கள் அவளை தேடி அங்குமிங்கும் அலைந்தது.

 

தூரத்தில் அவள் வருவது தெரிய நண்பன் அவன் பார்வையை கண்டுகொள்வானோ என்று எண்ணி ஒன்றும் தெரியாதவன் போல் “யாருடா தர்ஷுவா, அவ வந்தா எனக்கென்னடா, நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேனா. எனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமுமில்லைன்னு அப்புறம் எதுக்கு அவ வர்றான்னு சொல்லி என்னை கூப்பிடுற” என்றான் குரலில் சலிப்பைக் காட்டி, சுந்தர் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, “உண்மையை சொல்லு சூர்யா, நீ அந்த பொண்ணை விரும்பற தானே” என்றான் அவன்.

 

நண்பனின் பார்வையை தாளாதவனாக சிரம் தாழ்ந்தவன், “இல்லைடா” என்றான். “அப்புறம் அவளுக்கு செல்ல பெயர் எல்லாம் வைச்சு எப்படி கூப்பிடுற” என்று கேள்வியாய் நோக்க, சூர்யா முகம் சிவந்தான். அதை கண்ட சுந்தரோ பாட ஆரம்பித்துவிட்டான், “வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட, மீசை முளைச்சு முன்னுக்கு வந்துட்ட” என்று அவன் குதிக்க, “என்னடா பாட்டு இது அசிங்கமா பாடிட்டு, இப்போ என்ன ஆச்சு” என்று திக்கி திணறினான்.

 

“நீ அந்த பொண்ணு ஆதர்ஷாவை காதலிக்க ஆரம்பிச்சுட்ட, அதான் உன் முகமே சொல்லுதே, நான் ஒண்ணு கேட்டா நீ நெறைய சொல்ற, இதுல இருந்தே தெரியலையா” என்றான் அவன். “பேரு ரொம்ப பெரிசா இருக்கு, ஆன்னு கூப்பிடற மாதிரி இருக்கு அதான் சுருக்கி தர்ஷுன்னு சொன்னேன். இதுல என்ன தப்பு கண்டு பிடிச்ச” என்றான் சூர்யாவும் விடாமல்.

 

“சரி தம்பி நீ தூங்கற மாதிரி நடிக்கற, உன்னைய நான் என்ன செஞ்சாலும் நான் தூங்கறேன்னு தான் சொல்லுவ, நீ எப்படியோ போ” என்று சொல்லிவிட்டு அவன் வகுப்பறையை நோக்கிச் சென்றான். “ஹேய் இருடா நானும் வர்றேன்” என்று பின்னாலேயே சூர்யாவும் செல்ல, ஆதர்ஷா அவர்களை பின் தொடர்ந்து வந்தாள். “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்” என்று அவள் கூற அவன் திரும்பி பாராமலே நடந்தான்.

 

“அண்ணா” என்ற அழைப்பில் சுந்தரும், சூர்யாவும் ஒருசேர திரும்ப சூர்யாவின் முகத்தில் ஈயாடவில்லை. “யாரை கூப்பிட்டீங்க” என்று மென்று விழுங்கினான். “உங்களை தான் கூப்பிட்டேன்…” என்று அவள் சொல்லவும் அவனுக்கு மயக்கமே வந்தது போல் இருந்தது, “என்னை… என்னை எதுக்கு கூப்பிட்டீங்க” என்றான் அவன்.

 

“உங்களை கூப்பிட்டேன், ஒரு நிமிஷம் சொல்லிட்டே வந்தேன், நீங்க கவனிக்கலை. சரி சுந்தர் அண்ணாவை கூப்பிட்டேன், அப்போ தான் ரெண்டு பேரும் திரும்புனீங்க” என்று அவள் சொன்னதும் தான் ‘நல்லவேளை நீ என்னை தான் அண்ணான்னு சொன்னியோன்னு நினைச்சு பயந்துட்டேன்’ என்று அவன் மனம் நினைக்க சுந்தர் அதை கண்டுகொண்டான். “சொல்லுங்க தர்ஷு என்ன விஷயமா என்னை கூப்பிட்டீங்க” என்றான் அவன்.

 

கணநேர தயக்கத்திற்கு பின் “இல்லை இது…. கல்யாண பலகாரம் உங்களுக்கு கொடுக்க மறந்துட்டாங்க அதான் எடுத்துட்டு வந்தேன் இந்தாங்க” என்று அவள் கொடுக்க “தேங்க்ஸ்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “அண்ணா நீங்களும் பலகாரம் எடுத்துக்கோங்க, உங்களுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன். நான் போய்ட்டு வர்றேன் அண்ணா, போய்ட்டு வர்றேங்க” என்று சுந்தரிடம் பேசினாலும் கண்கள் என்னவோ சூர்யாவை நோக்கியே இருந்தது.

 

அவனும் தலையாட்டி விடைக் கொடுக்க அவள் அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் நண்பனை முறைத்த சுந்தர் “இம் இப்போ என்ன சொல்ற, அந்த பொண்ணு உன்கிட்ட பேசணும்னே தான் வந்து பலகாரம் கொடுத்துட்டு போகுதுன்னு எனக்கு தோணுது. நீயும் அந்த பொண்ணுகிட்ட கண்ணுலேயே பேசுற, அப்புறம் அந்த பொண்ணு அண்ணான்னு சொன்னதும் உன்னை தான் சொல்லிடுச்சோன்னு உன் முகம் வெளுத்து போச்சே அதுக்கு என்ன சொல்ல போற” என்று சூர்யாவை துருவினான் அவன்.

 

“நீ பேசாம வாடா எனக்கு நெறய படிக்கணும் நான் நல்லா சம்பாதிக்கணும், அதுவரைக்கும் எனக்குள்ள எந்த நினைப்பும் வேண்டாம்னு இருக்கேன். இதுக்கு மேல என்னை துருவி துருவி எதுவும் கேக்காதே. என்ன பார்க்குற, சரி ஆமாம் ஒத்துகறேன் அந்த பொண்ணை எனக்கு பிடிச்சுருக்கு, அது தான் காதலா அப்படின்னு நான் எதுவும் யோசிக்க விரும்பலை, இது அதுக்கான நேரம் இல்லைன்னு நினைக்கிறேன்.

 

“இன்னும் ஒரு வருஷம் என் படிப்பு முடிஞ்சு நான் நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் இதை பத்தி யோசிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இதோட இந்த பேச்சு வேண்டாம் சுந்தர், அந்த பொண்ணுக்கு இப்போதைக்கு எந்த நினைப்பும் வேண்டாம் படிக்கற பொண்ணு, படிச்சு முடிக்கட்டும்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்ப, “டேய் இப்பவாச்சும் சொன்னியே, அந்த பொண்ணு மேல ஒரு நினைப்பு இருக்குன்னு. விடு இனிமே நான் இதை பத்தி பேசமாட்டேன். நீ உன் படிப்புல கவனத்தை செலுத்து” என்று அவனும் அந்த பேச்சை அத்துடன் நிறுத்தினான்.

 

“என்னடி அவன்கிட்ட உனக்கு என்னடி பேச்சு” என்று அவள் நண்பிகள் குழுவினர் அவளை சுற்றிக் கொள்ள, “இல்லைடி அவருக்கு கல்யாண பலகாரம் குடுக்கலை அதான் என்னை கொடுக்கச் சொன்னாங்க, இப்போ நான் அதை தான் கொடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் வகுப்பறைக்கு சென்றாள்.

 

இதற்கு மேல் நின்றால் அவள் தோழிகள் அவளை துளைத்து எடுத்துவிடுவர், ஏதோ சொல்லி எப்படியோ இன்று அவனிடம் பேசியாயிற்று. அவர்கள் வீட்டிற்கு பலகாரம் கொடுத்து அனுப்பும் போது தெரிந்து விட்டால் என்ன நினைத்துக் கொள்வார். அவருக்கும் என் மேல் ஒரு பிடிப்பு இருக்கிறது, அப்புறம் என்ன, அவர் எதுவும் நினைத்துக் கொள்ளமாட்டார் என்று நினைத்துக் கொண்டாள்.

 

ஏதோ தோன்ற அவள் திரும்பி பார்த்தால் யாரோ அவளை பார்ப்பது போல் தோன்ற எதிர்புறம் இருந்த அந்த பில்டிங்கை அண்ணாந்து பார்த்தால் சூர்யா அங்கு நின்றிருந்தான்.

____________________

 

 

நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்க ஆதி முன்பு போல் அவளிடம் கடுமை காட்டவில்லை எனினும் ஒரேடியாக அவன் மாறிவிடவில்லை என்றே அவளுக்கு தோன்றியது.

 

ஆதிக்கும் அப்படியே அவள் மேல் அவனுக்கு அக்கறை இருந்த போதும், எதுவோ ஒன்று அவனை அவளிடம் நெருங்கவிடாமல் செய்தது.  அந்த எதுவோ ஒன்று வேறு ஒன்றுமில்லை, கார்த்திக்கின் பேச்சு தான். தான் அவளுக்கு பொருத்தமில்லாதவன் என்ற எண்ணம் அடி ஆழத்தில் அவனுள் புதைந்து இருந்தது. சந்தோசமாக சிரித்தான், இயல்பாக நடந்தான், இருந்த போதும் அதில் ஒரு முழுமை இல்லாததை இருவருமே உணர்ந்திருந்தனர்.

 

இந்நிலையில் விளம்பரம் நன்றாக வந்ததில் அடுத்தத்தடுத்து வந்த விளம்பர ஒப்பந்தத்தில் ஆதவனுக்கு நன்றாக வருமானம் வர ஆரம்பிக்க, அவன் ஆதிராவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். அவளிடம் கேட்க அவள் திட்டவட்டமாக தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுக்க அவனுக்கோ தவிப்பாக இருந்தது.

 

அவன் எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஆதிரா ஒத்துக் கொள்ளாததால் அவன் கவலையில் ஆழ்ந்தான். அவளுக்கு எதுவும் கொடுக்காமல் அவளிடம் இருந்து வேலை வாங்கிக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை. இனி விளம்பர துறையில் இறங்க வேண்டாம் வேறு வேலை பார்போம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னங்க என்ன யோசனையா இருக்கீங்க” என்று அவனருகில் வந்து அமர்ந்தாள் நேத்ரா. “இல்லை நீது அண்ணி விளம்பரத்துல வந்த வருமானத்துல ஒரு பங்கு கூட வாங்கிக்க மாட்டேன் சொல்றாங்க. நீங்க என்னை வேறா நினைக்காதீங்க, உங்களுக்கு செய்யாம நான் வேற யாருக்கு செய்ய போறேன். இனிமே இப்படி காசு கொடுத்து என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டாங்க, அண்ணாகிட்ட கேட்டா அவங்க நீயாச்சு உன் அண்ணியாச்சுன்னு சொல்றாங்க.

 

“எனக்கு வெறுமென அவங்ககிட்ட வேலை வாங்கறமோன்னு குற்ற உணரச்சியா இருக்கு. என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன். இனிமே எந்த விளம்பர ஒப்பந்தமும் எடுத்துக்க வேணாம்ன்னு நினைக்கிறேன்” என்றான் அவன். “என்ன பேசறீங்க நீங்க, அதுக்காக நீங்க விரும்புன இந்த தொழிலை விட்டுடுவீங்களா. உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை ஆதிரா உங்ககிட்ட காசு வாங்கிக்க மாட்டேங்குறா அதானே, அதுக்கு நான் ஒரு வழி சொல்றேன்” என்றாள் அவள். “நானும் ஒரு வழி சொல்றேன்” என்ற குரலில் இருவரும் திரும்ப ஆதித்தியன் உள்ளே வந்தான்.

 

 

ஒருவாரமாக வீட்டில் ஏதோ நடப்பது போல் தோன்ற யாரும் எதுவும் சொல்லவில்லை என்பதால் ஆதிராவும் பேசாமல் இருந்தாள். மறுநாள் அவளின் பிறந்த நாள், சென்ற வருடம் அவள் வீட்டில் அந்த பிறந்தநாளை கொண்டாடியது அவள் நினைவுக்கு வந்தது.

 

சூர்யா காலையில் அவளுக்கு வாழ்த்து சொல்ல அவள் அன்னை அவளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை செய்திருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஏனோ அவர்கள் நினைப்பில் அவள் கண்கள் கரித்தது. இங்கு வந்தபின் அவள் தாய் வீட்டிற்கு சென்று வந்த நாட்கள் வெகுவாக குறைந்து போயிருந்தது. திருமணத்திற்கு பின் இரண்டொரு தடவையே அவள் அங்கு சென்று வந்திருக்கிறாள்.

 

ஆதித்தியன் அன்று தாமதமாக வருவதாக போன் செய்திருக்க அவள் லட்சுமியிடம் “அத்தை அவர் இன்னைக்கு கொஞ்சம் தாமதம் ஆகும்ன்னு சொன்னார். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் எடுத்து வைச்சுடறேன். நான் அவர் வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்கறேன் அத்தை” என்றாள். “இல்லைம்மா நீயே சொல்ற அவன் வர தாமதம் ஆகும்ன்னு அப்புறம் ஏன்மா காத்துட்டு இருக்க, நீயும் சாப்பிடும்மா. அவன் வந்த பிறகு அவனுக்கு சாப்பாடு போடு” என்றார் அவர். “இல்லை அத்தை அவருக்கும் தனியா சாப்பிட ஒருமாதிரியா இருக்கும்ல, நான் அவர்கூட சாப்பிடுறேன். நேத்ரா, தம்பியை கூப்பிடு. ஆதர்ஷா நீயும் வாம்மா, வந்து சாப்பிடுங்க” என்று சொல்லி அவள் எல்லோருக்கும் பரிமாறினாள்.

எல்லோரும் சென்று படுத்திருக்க லட்சுமி ஆதித்தியனுக்கு போன் செய்தார். “ஆதி என்னப்பா நீ எப்ப வருவ, உன் பொண்டாட்டி நீ வந்த பிறகு உன்னோட சாப்பிடுவேன்னு உட்கார்ந்து இருக்கா. நாங்க சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா. கொஞ்சம் நேரத்தோட வந்து சாப்பிடக் கூடாதா” என்றார் அவர்.

 

“அம்மா நான் இங்க இருந்து கிளம்பிட்டேன் நான் ஒரு பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன், நீங்க படுத்துக்கோங்க, நான் வந்து பார்த்துக்கறேன்” என்று போனை வைத்துவிட்டு வெளியில் வந்து காரை எடுத்தான். பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொன்னவனுக்கு அரைமணி நேரம் பிடித்தது.

 

அன்று நல்ல மழை பெய்திருக்க, தெருவெல்லாம் தண்ணீர் தேங்கி இருந்தது. அவன் வரும் வழியில் ஒரு மரம் விழுந்திருக்க அவன் சுற்றிக் கொண்டு வருவதற்கு தாமதமாகிப் போனது. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவன், “என்ன ஆரா உட்கார்ந்துக்கிட்டே தூங்கற, எனக்காக எதுக்கு காத்துட்டு இருக்க, அம்மா போன் பண்ணி என்னை சத்தம் போடுறாங்க. நீ சாப்பிட்டு படுக்க வேண்டியது தானே. சரி போய் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வை, நான் ஒரு குளியல் போட்டுட்டு வர்றேன்” என்று அவர்கள் அறைக்கு நுழைந்தான்.

 

குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்க, அவர்கள் அருகில் சென்று இருவருக்கும் முத்தம் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு விரைந்தான். “ஆரா” என்ற அழைப்பில் அவள் வேகமாக அவர்கள் அறைக்கு வந்து “என்னங்க” என்றாள். “பாத்ரூம்ல தண்ணி வரலை, கொஞ்சம் மோட்டர் போட்டு விடு” என்றான் அவன். “சரிங்க” என்று அவள் மோட்டர் போட்டுவிட்டு வந்தாள்.

 

அவன் குளித்துவிட்டு வந்து ஒரு தரம் அவனை அழைக்க அவள் கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்கு சென்றாள், அவளுக்கு பசியும் தூக்கமும் ஒன்றாக வந்தது. எப்போதடா சாப்பிட்டு தூங்குவோம் என்று அவள் இருக்க அவன் அதை எடு இதை எடு என்று அவளை ஏவிக் கொண்டிருந்தான். “சாப்பிடலாமா” என்று சொல்ல அவனுக்கு ஒரு தட்டில் சப்பாத்தியை வைத்து பருப்பை ஊற்றினாள்.

 

அவளுக்கும் ஒரு தட்டில் வைத்து சாப்பிட்டுவிட்டு மோட்டரை அணைத்துவிட்டு அவள் அவர்கள் அறைக்கு சூடான பாலுடன் வர மணி கிட்டத்தட்ட பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. “என்னங்க பால் சாப்பிட்டு ஒரு பத்து நிமிசம் நடந்துட்டு தூங்குங்க” என்று அவனுக்கு பாலை கொடுத்துவிட்டு அவளும் குடித்தாள்.

 

பால் தம்ளரை அலம்பி வைத்துவிட்டு அவள் படுக்கையில் வந்து குழந்தைகளின் அருகே வந்து படுக்க அப்போது தான் கவனித்தாள். குழந்தைகள் இருவரும் ஓரமாக படுத்திருக்க ஆதி அவர்களின் அருகில் படுத்திருந்தான். ‘நான் எங்கு படுப்பதாம், இவர் படுத்து இருக்கிறார்’. “என்னங்க” என்றாள் அவனோ உறங்குவதாக பாவிக்க, விளக்கை அணைத்துவிட்டு வேறு வழியில்லாமல் அவனருகில் படுத்தாள். அவள் படுக்கவும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று சொல்லி விளக்கை போட்டான்.

 

அவள் உள்ளம் சந்தோசத்தில் துள்ள தலையணை அடியில் இருந்து அவன் ஒரு கவரை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை பிரித்து பார்க்க வெங்காய சருகு நிறத்தில் அழகிய டிஸ்யு சேலை இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, ஒரு நகை பெட்டியை திறந்து அந்த நகையை அவளுக்கு காண்பித்தான்.

 

அதில் ஒரு அழகிய கழுத்து மாலை இருந்தது, ஒரு வரிசையில் சிறு சிறு குண்டுகள் அணிவகுத்திருக்க, அடுத்த வரிசை முழுவதும் பச்சையும் கெம்பும் பதிந்திருக்க கடைசி வரிசையில் மாங்காய் டிசைன் செய்யப்பட்டு நடுவில் இரண்டு மாங்காய் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க நடுவில் கெம்புக்கல் அலங்கரித்திருந்தது.

 

அவளை அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிறுத்தினான். பின்னால் நின்றவன் அந்த கழுத்து மாலையை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டவனின் கைகள் அவள் கழுத்தை வருடி நின்றது. அவள் இரு தோள்களையும் பற்றியவன் எப்படி இருக்கு என்பது போல் அவளை பார்க்க அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

 

“என்னடி எதுக்கு இப்போ கலங்குற, பிடிக்கலையா” என்றான் அவன். அவன் வாயை பொத்தியவள், “பிடிச்சுருக்கு, ரொம்ப பிடிச்சுருக்கு. உங்களுக்கு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சேன். நீங்க எனக்கு வாழ்த்து சொல்வீங்கன்னே நினைக்கலை” என்றாள் அவள் நெகிழ்வுடன்.

 

“ஏன்டி நான் அவளோ கொடுமைக்காரனா இருந்துருக்கேனா, உன்னை நினைக்கவே மாட்டேன்னு முடிவே பண்ணிட்டியா. எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான் முழுசா மாறிடுவேன். எனக்காக கொஞ்ச நாள் காத்திரு, காத்திருப்பியா” என்றான் அவன்.

 

‘உனக்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறேன், உன்னை சேர வேண்டுமென தவமிருந்து உன்னை கை பற்றி இருக்கிறேன். உனக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க மாட்டேனா’ என்று அவள் மனம் நினைக்க, “என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பேசாம இருக்க” என்றான் அவன். “உங்களுக்கு அதுல சந்தேகம் இருக்கா” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள். அவள் கழுத்தில் அவன் முகம் புதைக்க அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

 

அவளை பற்றி தன் புறம் திருப்பியவன் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான், அவள் நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் அவளுக்கு வாழ்த்துக் கூறினான். அவன் வாங்கி வந்தவற்றை எடுத்து பீரோவில் வைத்துவிட்டு படுக்க அவன் கரம் அவளின் மீது விழ அவளை அணைத்தவாறே உறங்கினான் அவன்.

 

அவளுக்கு தான் உறக்கம் முற்றிலும் தொலைந்தது, அவனின் கரிசனத்தில் அவளுக்கு நெஞ்சடைத்தது, அவன் மனம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர்ந்தது. மறுநாள் விடியலில் அவள் எழுந்து வரும் முன்னே வீடு முழுவதும் நெய் வாசம் வீச வாசலிலே எல்லோரும் காத்திருந்தனர். லட்சுமி அவளுக்கு இனிப்பு செய்து கொண்டு வந்து ஊட்ட ஒவ்வொருவராக அவளுக்கு வாழ்த்து கூற அவள் சந்தோசத்தில் திக்குமுக்காடி போனாள்.

 

ஆதித்தியனும் எழுந்து குளித்துவிட்டு வெளியே வந்தான், கவினும் கவினியும் கூட அவளுக்கு முத்தமிட்டு வாழ்த்து கூறினர். “சரி கொஞ்சம் மாடிக்கு வாங்க அண்ணி உங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷ அதிர்ச்சி” என்று கூறி ஆதவன் அழைத்தான். “என்ன பார்க்கற வா போய் பார்க்கலாம்” என்று ஆதி அவள் கைபிடித்து அழைத்துச் சென்றான்.

 

“ஹேய் என்னடி நடக்குது என்ன வைச்சு இருக்கீங்க” என்று ஆதிரா நேத்ராவிடம் கேட்க, “அதை நீ மேலே வந்து பாருடி” என்றாள் அவள். மாடியில் இருந்த ஒரு சிறிய அறையில் ஏதோ அலங்காரம் செய்தது போல் இருந்தது, அவள் கையில் ஒரு கத்திரியை கொடுத்து அங்கு கட்டியிருந்த ரிப்பனை கத்தரிக்க சொன்னார்கள்.

 

அதை கத்தரித்து உள்ளே சென்றவள் அப்படியே நின்றுவிட்டாள். அவள் வீட்டில் அவள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் எல்லாம் அங்கு அழகாக மாட்டப்பட்டிருந்தது.ஆதவனும் நேத்ராவும் அவளுக்காக அந்த அறையை நிறைத்திருக்க, ஆதி தன் பங்குக்கு அவள் வரைந்திருந்த ஓவியங்கள் அனைத்தையும் அவள் வீட்டிற்கு சென்று வாங்கி வந்து அழகாக சட்டமிட்டு மாட்டியிருந்தான்.

 

“அண்ணி இன்னைல இருந்து இது உங்க அறை, நீங்க நல்லா ஓவியம் வரைவீங்கன்னு சொன்னாங்க, ஆனா எல்லாமே நான் இப்போ தான் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணி” என்றான் அவன். “அப்புறம் இதையே நீங்க உங்க அலுவலக அறையா பயன்படுத்திக்கலாம்” என்று கூறினான்.

 

அங்கு அவளுக்கு தேவையான அனைத்தும் வாங்கி நிரப்பி இருந்தனர், அவள் ஓவியம் வரைய ஏதுவாக ஒரு ஸ்டான்ட் ஒரு ஓரத்தில் நின்றிருக்க, ஆதி அவளருகில் வந்தான், நீ உன் அம்மா, அப்பா, தம்பி எல்லாரையும் படம் வரைஞ்சு இருக்க, என்னையும் வரைஞ்சு தருவியா” என்றான் அவன் ஆவலுடன். ஏனோ அவளுக்கு அந்த நேரம் அந்த பழைய பாடலின் வரிகளே மனதில் வந்து போனது “மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா” என்பதே அது. “கண்டிப்பா ஒரு நாள் வரைஞ்சு தர்றேன்” என்றாள் அவள்.

 

ஓவியம் வரைவது அவளுக்கு உண்பது உடுப்பது போல் இருந்தது திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் அவளுக்கு நேரமும் இருந்ததில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அவளுக்கு அமைந்திருப்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருந்தது. அருணாசலம், லட்சுமி, ஆதர்ஷா எல்லோரும் அவள் ஓவியத்தை பார்த்து பாராட்டினர். அவள் அன்னை, தந்தை, தம்பி மூவரும் காலையிலேயே வந்துவிட்டனர் அவளுக்கு வாழ்த்து சொல்ல, அவளுக்கு ஒரு பட்டுபுடவை எடுத்து வந்து அவர்கள் கொடுத்திருந்தனர்.

 

ஆதிரா இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும் போது அந்த அறைக்கு சென்று அவள் மனதுக்கு பிடித்த ஓவியம் வரைவதும் என்று அவள் பொழுது சென்றது. நாட்கள் விரைந்தோட நேத்ராவின் வீட்டில் இருந்து அவர்களை தலை தீபாவளிக்கு வருமாறு அழைத்துவிட்டு சென்றனர். அவர்கள் வந்து சென்ற மறுநாள் ஆதிராவின் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தனர் அவர்களை தலை தீபாவளிக்கு அழைக்க, ஆதிராவுக்கும் அது தலை தீபாவளி ஆயிற்றே.

 

அதை கேட்ட ஆதித்தியனுக்கு தான் முகம் மாறியது, அவன் மனம் புரிந்தவள், “அம்மா எதுக்கும்மா இந்த சம்பிரதாயம் எல்லாம், அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று சொன்னவள், அவரருகில் சென்று “அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, அவருக்கு தர்மசங்கடமா இருக்காதா” என்றாள் மெதுவான குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்.

 

“ஏம்மா எங்களுக்கும் ஆசை இருக்காதா, நீ எங்களுக்கு ஒரே பொண்ணு தானே, உனக்கு செஞ்சு பார்க்கணும்ன்னு நாங்க நினைக்கக் கூடாதா” என்றார் வருத்தத்துடன். “சரி பரவாயில்லை, எப்பவும் போல இப்பவும் உன் விருப்பத்தையே நாங்க மதிக்கறோம். சரிம்மா போய்ட்டு வர்றோம்” என்று சொல்லி சங்கடத்துடன் விடை பெற்றனர் அவர்கள்.

 

ஆதி யோசனையுடன் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான். மறுவாரம் தீபாவளி என்பதால் இரண்டு நாட்களுக்கு முன் ஆதவனும் நேத்ராவும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். தீபாவளிக்கு முதல் நாள் காலை ஆதித்தியன் ஆதிராவை அழைத்தான். “ஆரா ஒரு ரெண்டு நாளைக்கு தேவையான துணிமணி எடுத்து வைச்சுக்கோ, நாம ஒரு இடத்துக்கு போக வேண்டி இருக்கு, போயிட்டு எப்படியும் ரெண்டு நாள்ல வந்துடலாம்” என்றான்.

 

அவளும் அவன் சொல்லியபடி எடுத்து வைக்க மீண்டும் அவனிடம் வந்து “என்னங்க அத்தைக்கிட்ட நாம எங்க போறதா சொல்லணும்” என்றாள் அவள். “அம்மாகிட்ட நான் சொல்லிட்டேன், நீ வா கிளம்பலாம்” என்று பரபரத்தான் அவன். அவர்கள் வீட்டில் விடை பெற்று செல்ல அவன் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமலே அவளை அழைத்துச் சென்றான். கார் அவள் வீட்டிற்கு போகும் பாதை போல் தெரிய அவனை ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தாள்.

 

“என்னடி உங்க வீட்டுக்கு தான் போறோம் நம்ப முடியலையா, கண்ணை எதுக்கு இப்படி பெரிசா விரிச்சு பார்க்கற” என்றான் அவன். “எதுக்குங்க உங்களுக்கு சங்கடமா இருக்கும்ன்னு தான் நான் வரலைன்னு சொல்லிட்டேன்” என்றாள்

 

“ஆனா அவங்களுக்கும் சங்கடமா இருக்கும்ன்னு நீ யோசிக்கலையா, நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு அவங்களுக்கு உனக்கு செய்யணும் ஆசை இருக்காதா” என்று அவள் அன்னை சொன்னதையே அவனும் சொல்ல அவள் அவன் மீது தலை சாய்த்தாள் மகிழ்ச்சியுடன். “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள், “நமக்குள்ள இந்த தேங்க்ஸ் தேவையா” என்றான் அவன் “சாரிங்க” என்றாள் அவள். “இதுவும் நமக்குள்ள வேண்டாமே” என்றான் அவன்.

 

அவர்கள் வீட்டிற்கு சென்று இறங்க வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு சங்கரனும் கோமதியும் வெளியில் வந்தனர், அவர்களை கண்டதும் சந்தோசத்தில் அவர்கள் திக்குமுக்காடி போயினர். அவர்களை வாசலில் நிற்க வைத்துவிட்டு ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார் கோமதி, ஆரத்தி சுற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

 

சங்கரன் கவினை கூப்பிட “தாத்தா நீ இங்க தான் இக்கியா, நீ ஊர்ல தானே இருந்த, எப்போ வந்த தாத்தா” என்றான் மழலையுடன். “செல்லம் வாங்க தாத்தா இந்த ஊருல தான் கண்ணா இருக்கேன். நாங்க உங்க சித்தப்பா கல்யாணத்துக்காக ஊருக்கு வந்தோம். நீங்களும் தானே வந்தீங்க, என் பேரனுக்கு தாத்தாவை இப்போ தான் கண்ணனுக்கு தெரியுதா, இம்புட்டு நாளா நீங்க தாத்தா பக்கமே வரலையே. நீங்க வரமாட்டீங்கன்னுல நான் நினைச்சேன். உங்க ஆச்சிகூட சங்கப்பட்டா பேரனும் பேத்தியும் வரமாட்டேங்காங்கனு. ஏலே கோமதி இங்க வா இந்தா பாரு உன் பேரனை என்ன வாயாடிக்கறான்னு” என்று மனைவியை கூப்பிட்டு சிலாகித்தார் அவர்.

 

“கவினி ஆச்சிகிட்ட போடா, இந்த ஆச்சியும் நம்ம ஆச்சி மாதிரி தான்டா, உன்னை இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும், கவின் நீயும் போ” என்றாள் அவள். “என்னங்க நீங்க அவங்களை வெளியவே நிக்க வைச்ச்சுட்டு, நீங்க முதல்ல உள்ள வாங்க” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார். “அம்மா சூர்யா எங்க” என்றாள் அவள்.

 

“இப்போ தான்மா அவன் நண்பனை பார்க்க போறேன்னு கிளம்பி போனான். இன்னைக்கு அவனுக்கு காலேஜ் இல்லை அதான் அப்படியே கிளம்பிட்டான். நீ இருந்தவரைக்கும் உன்கூட மல்லு கட்டுவான்” என்றார் அவர். “என்னது நீயும் உன் தம்பியும் சண்டை போடுவீங்களா” என்றான் அவன். “என்னங்க ஏதோ அதிசயம் போல கேக்குறீங்க, ஏன் நீங்க போட்டது இல்லையா” என்றாள். “சின்ன வயசில நான் எங்க ஆச்சி வீட்டில வளர்ந்தேன், ஆதவன் கொஞ்ச நாள் தான் அங்க இருந்தான் அப்புறம் அவனை கூட்டி வந்துட்டாங்க. ஆதர்ஷா சின்ன பொண்ணு அவ நான் பார்த்து வளர்ந்த பொண்ணு அதுனால எனக்கு அவ மேல ரொம்ப பாசம். சண்டை எல்லாம் போட்டது இல்லை. ஆனா ஆதர்ஷாவும் ஆதவனும் சண்டை போடுவாங்க அதை நான் பார்த்து இருக்கேன். எனக்கு என்ன சந்தேகம்னா நீ சண்டை போடுவியான்னு தான், நீ எவ்வளவு அமைதியான பொண்ணா இருக்க, சூர்யாவும் அப்படி தானே இருக்கான். அதான் ஆச்சரியப்பட்டேன்” என்றான்.

 

“அய்யோ மாப்பிள்ளை இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா வீட்டை ரெண்டா ஆக்கிடுவாங்க, அவ்வளோ வாலு ரெண்டு பேரும். நான் வீட்டில இல்லாத சமயத்துல சண்டை போட்டு எதையாச்சும் உடைச்சு வைச்சுட்டு ரெண்டு பேரும் ரொம்ப ஒத்துமையா இருக்க போல இருப்பாங்க. அப்போவே நான் கண்டு பிடிச்சுடுவேன், ரெண்டும் ஏதோ வேலை செஞ்சுச்சுட்டு பதவிசா உட்கார்ந்து இருக்குன்னு. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரையும் நல்லா வெளுத்து வாங்கிடுவேன்” என்றார் அவர்.

 

“அம்மா எதுக்கும்மா என்னோட வண்டவாளம் எல்லாம் இவர்கிட்ட சொல்லி என் மானத்தை வாங்குற” என்றாள் அவள் சிணுங்கலாக. கவினும் கவினியும் சங்கரனுடன் கடைக்கு கிளம்ப “ஆதிரா நீ மாப்பிள்ளை கூப்பிட்டு மேலே போம்மா” என்றார் கோமதி. “சரிம்மா” என்று சொல்லிவிட்டு அவள் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு விரைந்தாள்.

 

“நீங்க கொஞ்சம் நேரம் இருங்க, நான் போய் உங்களுக்கு டிபன் எடுத்து வைச்சுட்டு வர்றேன்” என்று கீழிறங்கி வந்தாள். அவள் அன்னைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவசர அவசரமாக குக்கரில் பருப்பை போட்டு குழம்பு வைத்துக் கொண்டிருந்தார். “அம்மா எதுக்கும்மா பதட்டம் நான் செய்ய மாட்டேனா” என்றவளும் உடன் சேர்ந்து அவருக்கு உதவி செய்யவும், குழந்தைகளுடன் வெளியில் சென்றிருந்த சங்கரன் கை நிறைய பொம்மையுடனும் துணிமணிகளுடன் வந்தார்.

 

“என்னப்பா இதெல்லாம் இவ்வளோ எதுக்குப்பா” என்றாள் ஆதிரா, அதற்குள் மாடியில் இருந்து வந்த ஆதியும் அதையே சொல்ல, “இருக்கட்டும்மா எனக்கு இப்போ தான் நிறைவா இருக்கு. குழந்தைங்க தாத்தா தாத்தான்னு கூப்பிடும் போது எவ்வளோ சந்தோசமா இருக்கு. அவங்களுக்கு இது வாங்கினது தான் பெரிய விஷயமா விடும்மா” என்றார் அவர். வெளியில் சென்றிருந்த சூர்யாவும் வீட்டிற்கு வந்துவிட எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

 

காலை உணவிற்கு பின் மீண்டும் அவர்கள் அறைக்கு சென்றவனின் பின்னாலேயே வந்தாள் ஆதிரா. “என்னங்க இன்னைக்கு நீங்க ஆபீஸ் போகலையா, விடுமுறையா” என்றாள். “நல்லா கேட்ட போ, நாளைக்கு தீபாவளி இல்லையா, இன்னைக்கு எல்லாருக்கும், துணிமணி எடுத்து கொடுத்து இனிப்பு வாங்கி கொடுக்கறது தான் நம்ம வழக்கம். இன்னைக்கு கண்டிப்பா ஆபீஸ் போகணும்” என்றான் அவன். “என்னங்க நானும் உங்ககூட வரட்டுமா” என்றாள் அவள். “இம் வா” என்றவன் அவளை அதிசயமாக பார்த்தான். “என்னடி புதுசா ஆபீஸ் வர்றேன்னு சொல்ற” என்றான் அவன்.

 

“அன்னைக்கு வந்தப்ப சரியாவே பார்க்கலை, நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு, அதான் கேட்டேன்” என்றாள் அவள். “என்னங்க அப்புறம் நாம பைக்ல போகலாமா” என்றாள் அவள். “குழந்தைகளை என்ன பண்றது” என்றான் அவன். “அவங்க எல்லார்கூடவும் சேர்ந்துட்டாங்க, சூர்யாவும் இருக்கான் பார்த்துப்பான். நாம போய்ட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடலாம் தானே” என்றாள் அவள்.

 

“சரிடி பைக் நம்ம வீட்டில இருக்கே, என்ன செய்ய” என்றான் அவன். “சூர்யா பைக்ல போகலாம்” என்றாள் அவள். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்று சூர்யாவிடம் பைக் சாவி வாங்கியவனுக்கு உள்ளம் துள்ளியது, பின்னே ஆதிரா அவளாக பைக்கில் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறாளே. “ஹேய் இது என் பைக் மாதிரியே இருக்கு, உன் தம்பியும் இதை தான் ஒட்டுவானா” என்றான் அவன்.

 

“ஆமாம் இதை வாங்குறதுக்கு அவன் எவ்வளோ சண்டை போட்டான், கடைசியா நான் தான் அவனுக்கு இந்த பைக் வாங்கி கொடுத்தேன்” என்றாள் அவள். ஆதித்தியன் பைக்கை உதைக்க அவள் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள், அவன் வலது தோளில் அவள் கை வைத்து அவனை பிடித்துக் கொண்டு வந்தாள். சந்தோசத்தில் ஆதி பாடலொன்றை விசில் அடித்துக்கொண்டு வந்தான்.

 

“என்னங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்களா விசில் அடிச்சுட்டு வர்றீங்க” என்றாள் அவள். அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு மீண்டும் ஒரு பாடலை விசில் அடிக்க ஆரம்பித்தான். அவர்கள் அலுவலகம் வந்திறங்கினர், உள்ளே செல்லும் போதே எல்லோரும் அவனுக்கு மரியாதை செய்ய இடையில் ஒருவரை நிறுத்தி அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவனுக்கு கிடைத்த மரியாதையும் அவன் அந்தஸ்தும் அவளுக்கு பிரமிப்பாக இருந்தது.

 

எந்தவித அலட்டலும் இன்றி அவன் எல்லோரிடமும் சகஜமாக பேசுவதும், வேலை விஷயத்தில் கண்டிப்பாக இருப்பதும் தெரிந்தது. ஆதிரா வந்த விஷயம் கேள்விப்பட்டு ராஜீவ் அவர்களை தேடி அவர்கள் அறைக்கு வந்தான்….

 

 

மன்னவனே…

உன் ஒரு பார்வையில்

என் உயிர் உருகிப் போகிறேன்…

 

உன் ஒரு வார்த்தையில்

நான் உயிர்ப்பு கொள்கிறேன்…

 

உனக்கான என் நேசம்

இந்த அண்டம் தாண்டி நீள்கிறது…

 

உனக்கான என் காத்திருப்பு

உன் வரவை நோக்கி இருக்கிறது…

 

உனக்காய் என் விழி

உன் வழி நோக்கி காத்திருக்கிறது…

 

உனக்காய் என் சுவாசம்

உன் மூச்சு தேடி அலைகிறது…

 

உனக்காய் என் ஜீவன்

உன்னுள் கலந்துவிட துடிக்கிறது…

 

 

 

Advertisement