Advertisement

அத்தியாயம் –13

 

 

டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி போவதில் எந்த தவறுமில்லை என்று முடிவு செய்து அவளிடம் விபரம் உரைக்க எண்ணினான். “ஆதிரா என்ற அவன் அழைப்பில், “என்னங்க என்று திரும்பி அவன் முகம் பார்க்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பேச்சிழந்தான்.

 

அவளின் பல “என்னங்க என்ற அழைப்பில் கூட அசராதவன் அவள் அவனை தொட்டு உலுக்கவும் “என்ன என்றான் தூங்கி விழித்தவனை போல். “கூப்பிட்டீங்க, எதுவுமே பேசாம இருக்கீங்களே. அதான் கேட்டேன் என்றாள் அவள்.

 

“இல்லை அது வந்து நாளைக்கு நான் டெல்லி கிளம்பறேன், நீயும் குழந்தைகளும் அங்க நம்ம வீட்டில போய் இருங்க, உங்களுக்கு தேவையான துணியை எல்லாம் எடுத்து வைச்சுக்கோங்க. நான் சித்திகிட்ட பேசிவிட்டு வர்றேன்” என்றான்.

 

அவன் பார்வதிக்கு போன் செய்தான் “ஹலோ சித்தி, ஆதி பேசறேன்” என்றான்

“சொல்லுப்பா, எப்படி இருக்க, எல்லாரும் எப்படி இருக்கீங்க, பேரனும் பேத்தியும் எப்படிப்பா இருக்காங்க” என்று அவர் எல்லாரையும் விசாரித்தார். “சித்தி எல்லாரும் நல்லா இருக்காங்க, ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்கு தான் போன் பண்ணேன்” என்று நிறுத்தினான் அவன்.

“சொல்லுப்பா” என்றார் அவர். “சித்தப்பா இல்லையா சித்தி” என்றான். “பக்கத்துல தான் இருக்காங்க பேசுறியா” என்றார் அவர். “ஹ்ம்ம் கொடுங்க சித்தி” என்றான். “ஹலோ சித்தப்பா பேசுறேன்ப்பா, எப்படிப்பா இருக்க” என்றார். “நல்லாருக்கேன் சித்தப்பா, ஒரு முக்கியமான விஷயம் நம்ம அம்மு கல்யாண விஷயமா பேசலாம்னு தான் போன் பண்ணேன் சித்தப்பா” என்றார்.

 

“சொல்லுப்பா” என்றார் யோசனையுடன். “சரவணன் பத்தி தான் சித்தப்பா அவனுக்கு நம்ம மதியை பிடிச்சு இருக்கு, உங்களுக்கு அவனை பத்தி எதுவும் யோசனை வேண்டாம் நீங்க என்னை நம்புரீங்கள்ள சித்தப்பா அவனையும் அந்த அளவுக்கு நீங்க நம்பலாம்” என்றான். “இந்த விஷயம் உனக்கு எப்படிப்பா தெரியும்” என்றார் அவர்.

 

“சரவணன் போன் பண்ணி இருந்தான் சித்தப்பா, இப்போ தான் அவன் நம்ம அம்மு அவனுக்கு பிடிச்சுருக்குங்கற விஷயத்தை சொன்னான்” என்றான். “நாங்களும் சரவணனுக்கு நம்ம அம்முவை கொடுக்கறதா தான் முடிவு பண்ணி இருக்கோம் ஆதி” என்று சொல்லி அவர் நடந்ததை அவனுக்கு கூறினார்.

 

“பரவாயில்லையே நம்ம கீர்த்தி வாலு இப்படி நல்ல விஷயம் எல்லாம் கூட செய்யறாளா” என்று அவன் கூற அவர் சிரித்தார். “என்னப்பா அண்ணா என்ன சொல்லறாங்க, இந்த வாலுக்கு இப்படி நல்லது செய்யக் கூட தெரியுமான்னு கேக்குறாரா. அந்த போனை கொடுங்க நான் பேசறேன்” என்று கூறி போனை அவரிடமிருந்து பிடுங்கினாள்.

 

“என்ன அண்ணா அப்பாகிட்ட என்னை பத்தி என்ன சொன்னீங்க” என்றாள் அவள். “நான் என்ன சொன்னேன்னு தான் நீயே சொல்லிடேயே, சரி சித்தப்பாகிட்ட போனை கொடு எனக்கு இன்னொரு விஷயம் பேசணும்” என்றான். “அப்பா அண்ணா வேற ஏதோ முக்கிய விஷயம் பேசனுமாம், இந்தாங்க” என்று போனை அவரிடம் கொடுத்தாள்.

 

“சித்தப்பா ஆதவன் பத்தி சொல்லணும், நேத்ராவை ஆதவனுக்காக பொண்ணு கேக்கணும் சித்தப்பா” என்றான். “என்னப்பா சொல்லற நாம தான் ஏற்கனவே பேசினமே, அப்போவே தங்கச்சி வேணாம் சொல்லிடுச்சே ஆதி” என்றார். “இப்போ கேட்டா அப்படி சொல்ல மாட்டாங்க சித்தப்பா, ஆதவனுக்கும் நேத்ராவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு சித்தப்பா” என்றான்.

 

“என்னப்பா சொல்லற நிஜமா” என்றார் அவர் ஆச்சரியத்துடன். “ஆமா சித்தப்பா, எனக்கே இப்போ தான் விஷயம் தெரியும் சித்தப்பா” என்றான். “சரிப்பா, நான் சந்திராகிட்ட இதை பத்தி பேசறேன்” என்றார் அவர். “இல்லை சித்தப்பா நீங்க இப்ப எதுவும் பேச வேணாம், நம்ம அம்மு கல்யாணம் முடிவு பண்ணிட்டு அப்புறம் பேசிக்கலாம் சித்தப்பா” என்று கூறி முடித்துவிட்டான் அவன்.

 

“என்னங்க என்ன திடிர்னு ஊருக்கு போகணும் சொல்றீங்க” என்றாள். “நான் ஆபீஸ் வேலையா தான் ஊருக்கு போறேன், ஊர் சுத்தி ஒண்ணும் பார்க்க போகலை” என்றான் கிண்டலாக. “இல்லை நீங்க வர்ற வரைக்கும் நாங்க இங்கேயே இருக்கோமே” என்றாள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், சொன்னதை செய், சித்தி இங்க இருந்தாலும் பரவாயில்லை, உங்களை இங்க தனியா விட்டுட்டு நான் அங்க கிடந்து தவிக்கணுமா. நீ போய் தேவையான துணிமணி எல்லாம் எடுத்து வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் படுக்கச் சென்று விட்டான்.

 

‘நம்ம ஊருக்கு போறதுக்கு நாளைக்கு காலையிலேயே சீக்கிரம் எழுந்து எடுத்து வைச்சுக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு போய் படுத்துவிட்டான். படுக்கையில் விழுந்ததும் அவளை அணைத்து முத்தமிட்ட நினைவு வந்து அவனை சிலிர்க்க செய்தது, அந்த இனிய நினைவிலேயே சுகமான தூக்கம் அவன் கண்களை தழுவ உறங்கிப் போனான்.

 

குழந்தைகளை சாப்பிட வைத்து உறங்க வைத்தாள். அதன்பின் அவர்கள் செல்ல தேவையான துணிமணிகளை எடுத்து வைத்தாள், அவளும் சென்று சாப்பிட்டு வந்து படுக்க நினைத்த போது ‘அவர் துணிகள் எதுவும் எடுத்து அடுக்கவில்லையே, நான் எடுத்து வைத்து அவர் திட்டினால் என்ன செய்வது, காலையில் அவர் தாமதமாக எழுந்தால் அவர் அலுவலகம் செல்ல நேரமாகிவிடுமே, அய்யோ அவரை கேட்கவில்லையே அவருக்கு எத்தனை மணிக்கு விமானம் என்று தெரியவில்லையே. ஒருவேளை மாலையாகத் தான் இருக்கும். அவர் திட்டினால் திட்டிவிட்டு போகட்டும். அவர் துணிகளை எடுத்து வைப்போம்’ என்று நினைத்து பெட்டியை எடுத்து துணிகளை அதில் அடுக்கினாள்.

 

அவனுக்காக பார்த்து பார்த்து எல்லா துணிகளையும் எடுத்து வைத்தாள். சில துணிகள் தேய்த்து வைக்காமால் இருக்க, துணிகளை தேய்த்து வைத்து அதன்பின் அதை எடுத்து பெட்டியில் அடுக்கினாள். அவனுக்கு தேவையான இதர பொருட்களை ஒரு சிறு பெட்டியில் அடைத்து எடுத்து அதையும் பெட்டியுள் வைத்து மூடினாள். கைகளை நெட்டி முறித்து எழுந்தவள் மணியை பார்க்க அது நடுநிசியை தாண்டி இருந்தது. கண்கள் செருக விளக்கணைத்து படுத்தவள் உறங்கிப் போனாள்.

 

 

காலையில் சீக்கிரமாகவே விழிப்பு தட்டியது ஆதித்தியனுக்கு, விழித்து அருகே பார்த்தவனுக்கு வியப்பு மணி ஆறு ஆகிருந்தது, இன்னமும் ஆதிரா உறங்கிக் கொண்டிருந்தாள். எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்து அவன் பார்க்க வரிசையாக மூன்று பெட்டிகள் இருந்தது, ஒவ்வொன்றாக திறந்து பார்க்க அவனுடைய துணிகள் ஒரு பெட்டியில் அழகாக அடுக்கப்பட்டிருக்க, பேஸ்ட், பிரஷ், முகச்சவரம் செய்வதற்கு தேவையானவை என்று எல்லாவற்றையும் அடுக்கியிருந்தாள்.

அவன் உடைகளையும் நன்றாக தேர்வு செய்து உள்ளே எடுத்து வைத்திருந்தாள். ஒரு ஜெர்கினும் அதில் இருக்க, அங்கு இப்போது குளிர் என்பதை அறிந்து அவள் அதை எடுத்து வைத்திருப்பதை அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

 

அவளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது, சமையலறைக்கு சென்று மேலேயிருந்த பில்டரை எடுத்தான், தண்ணீரை சூடு செய்து பில்டரில் காபி தூள் போட்டு அதில் டிகாஷன் இறக்கினான். பாலை சூடு செய்தான், அதற்குள் பாத்திரம் உருளும் சத்தத்தில் ஆதிரா அவசரமாக எழுந்து சமையலறை நோக்கி வந்தாள். அவனை குற்ற உணர்வுடன் பார்த்தவாறே, “சாரிங்க, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். ஒரு நிமிஷம் உக்காருங்க. டீ போட்டு கொண்டுட்டு வர்றேன்” என்றாள்.

 

“நேத்து எவ்வளவு நேரம் ஆச்சு படுக்க” என்றான். “அது… அது.. வந்து ஒரு மணிக்கு மேல ஆச்சு. சாரிங்க, நீங்க காலையிலேயே கிளம்ப வேண்டி இருக்குமோன்னு நினைச்சு நானே உங்க துணியையும் அடுக்கிட்டேன்” என்றாள். “அதுனால என்ன, சரி நீ போய் குளிச்சுட்டு வா” என்றான். “இல்லைங்க நான் டீ போட்டு குடுத்துட்டு போறேன்” என்றாள்.

 

“நான் இன்னைக்கு டிகாஷன் இறக்கி இருக்கேன், காபி போட்டு தர்றேன் குடிச்சுட்டு குளிக்க போறியா, இல்லை குளிச்சுட்டு வந்து குடிக்கறியா” என்றான். கண்கள் ஆச்சரியத்தில் விரிய “இல்லைங்க நான் குளிச்சுட்டு வந்துடுறேன்” என்று அவள் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று மறைய, அவன் அவள் வருவதற்குள் இட்லி அவிக்கும் பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்தான்.

 

சட்னிக்கு தேவையானதை எடுத்து சட்னி அரைத்துவிட்டு இட்லி ஊத்தி வைத்தான். குக்கரில் பருப்பை போட்டு சாம்பாரும் அவன் வைத்து முடிக்க ஆதிரா சத்தம் கேட்டு வேகமாக வந்தாள், ஈர தலையில் துண்டை சுற்றிக் கொண்டு.

 

“என்ன எதுக்கு இப்போ அவசரமா வந்த, நான் தான் பார்த்துக்கறேன் சொன்னேன்ல. என்னை யாருன்னு நினைச்ச, அய்யா நளபாக சக்கரவத்தியாக்கும். உனக்கு சந்தேகமா இருந்தா அம்மாகிட்ட கேட்டு பாரு. அவங்களுக்கு நான் நிறைய தடவை சமையலுக்கு உதவி செஞ்சு இருக்கேன். இப்போ தான் இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நான் இந்த பக்கம் வந்ததில்ல. இன்னைக்கு உங்களுக்கு செய்யறத்துக்கு ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சு இருக்கு. அதை விடுவேனா, அதான் என் திறமையை காட்ட நானே களத்துல குதிச்சுட்டேன். எல்லாமே செஞ்சுட்டேன், வா நாம போய் ஹால்ல உட்கார்ந்து காபி குடிக்கலாம்” என்று அவள் கைகளை தனக்குள் கோர்த்துக் கொண்டு அவளை அழைத்துச் சென்றான்.

 

“உட்கார், எனக்கு காபி நானே போட்டா தான் பிடிக்கும். எனக்கு டிகாஷன் காபி தான் ரொம்ப இஷ்டம், அதுவும் ஸ்ட்ராங்கா சக்கரை அளவா போட்டு குடிச்ச ரொம்ப பிடிக்கும், அம்மாக்கு அப்புறம் யாரும் அப்படி போடலை, அதுனால நானே  போடக் கத்துகிட்டேன். ஹரிணி ஒருநாள் போட்டு குடுக்கறேன்னு சொதப்பிட்டா, அதுல இருந்து டீ குடிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்றான் அவன். ‘இன்னைக்கு நிச்சயம் மழை தான் வரப்போகுது’ என்று நினைத்தாள் அவள்.

 

அவள் மனதில் நினைப்பதை உணர்ந்தவன் போல் “என்ன நினைக்கிற” என்றான் அவன். “இல்லை இன்னைக்கு மழை வரும்ன்னு நினைச்சேன், நீங்க இவ்வளவு பேசி இருக்கீங்க என்கிட்ட அதான் அப்படி நினைச்சேன்” என்றாள் மனதில் இருந்ததை ஒளியாமல்.

 

அவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு காபி கலந்து கொடுத்தான், “குடிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு” என்றான். அவள் முழுவதுமாக குடித்துவிட்டு பேசாமல் இருக்க, “என்னடி நல்லாயில்லையா, உனக்கு பிடிக்கலையா” என்றான் அவன். “ரொம்ப பிடிச்சு இருக்குங்க, எனக்கும் காபியை இப்படி குடிக்க தான் பிடிக்கும்” என்றாள்.

 

அவள் பதிலில் திருப்தியுற்றவனாக அவனும் காபியை குடித்து முடித்தான், “சரி நீ போய் தலையை துவட்டு, ஈர தலையோட இருந்தா உடம்புக்கு ஒத்துக்காது” என்றான். அவன் பேச்சில் அவளுக்கு தான் மயக்கம் வரும் போல் இருந்தது, இவ்வளவு கரிசனையாக அவன் இருந்தது அவளுக்குள் நம்பிக்கை வளர்த்தது,

 

அவள் மனதை அவன் புரிந்து கொள்வான் என்று உணர்ந்தாள், அவனிடம் மனம் திறந்து பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவள் மனம் ஒரு கணக்கு போட விதி வேறு கணக்கை போட்டுக் கொண்டு ‘என்னிடம் மாட்டாமல் நீ போய்விடுவாயா’ என்பது போல் விதி சிரித்தது.

 

அவள் தலை துவட்டி ஏதோ தோன்ற முகத்துக்கு பவுடர் போட்டபின் மையை எடுத்து அவள் கண்ணுக்கு இடும் போது அந்த அறைக்குள் நுழைந்தான் ஆதித்தியன். அவள் மையிடுவதை பார்த்து அவளை நோக்கி வந்தான், அவன் வருவது கண்ணாடியில் தெரிய அவள் மையிட்டு முடித்தாள், அவள் கைகள் நடுங்க அவன் அவளருகில் வந்து அவளை பற்றி தன் பக்கம் திருப்பினான்.

 

அவள் கண்களை ஊடுருவியவன், அதிலேயே தொலைந்து விடமாட்டோமா என்று நினைத்தான். அவளுக்கு உள்ளுர ஒரு உதறல் எடுத்தது, அவன் எதையும் யோசிக்காமல் குனிந்து அவள் இதழ்களை சிறை செய்ய அவள் கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து பின் மூடியதை ரசித்தவன் நீண்ட இடைவெளிக்கு பின் குழந்தை எழும் அரவம் கேட்டு மெதுவாக அவளை விடுவித்துவிட்டு அவளை அணைத்துவிட்டு வெளியில் சென்று விட்டான்.

 

நடந்ததை அவளால் நம்பவே முடியவில்லை, நேற்று போல் இன்றும் சாரி சொல்லிவிடுவானோ என்று நினைத்தவள் சற்று நிம்மதியானாள். அவன் அவளிடம் சாரி எதுவும் சொல்லவில்லை ஆனால் அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அவன் நடமாடியது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பின் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அவன் அலுவலகம் சென்றான்.

 

அவனுக்கு மாலை தான் விமானம் என்பதால் கொஞ்சம் வேலை முடிக்க வேண்டி அவன் அலுவலகம் சென்றான். மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு அவன் சற்று இளைப்பாறிவிட்டு மாலை ஆதவனை அழைத்தான். “ஆதவா, கிளம்பலாமா” என்றான். “போகலாம் வாங்கண்ணா” என்று அவனும் தயாராக ஆதிரா தயங்கி தயங்கி அவனருகில் வந்தாள்.

 

“ஆதி கார்ல தானே போறீங்க, ஆதிராவையும் கூட்டிப் போப்பா, வேணா நானும் வர்றேன் குழந்தைகளும் கூட்டிப் போகலாம்” என்று அவன் அன்னை ஆரம்பிக்க, ஆதர்ஷா “அம்மா அப்போ என்னை வீட்டில தனியா விட்டுட்டு போவீங்களா, நானும் வருவேன்” என்று அவள் சிறு குழந்தையாய் மாறி கேட்க, “ஆமாம்பா எதுக்கு நாம எல்லாரும் போயிட்டு வருவோம். வாங்க கிளம்பலாம்” என்றார் லட்சுமி.

 

“என்ன ஆதிரா இதெல்லாம் உன் வேலை தானா, நான் என்ன வெளிநாட்டுக்கு சுற்று பயணமா போறேன். இங்க இருக்க டெல்லிக்கு தானே போறேன். ஆளாளுக்கு நான் வர்றேன் நீ வர்றேன்னு என்ன நினைச்சுட்டு இருக்கீங்க” என்று அவன் குரல் உயர்த்த “அப்பா என்னப்பா நீங்களுமா” என்று அவன் அருணாசலத்தை பார்க்க அவர் அசடு வழிந்தார்.

 

“அத்தை அதான் தம்பி போறாங்களே நாம வேற எதுக்கு அத்தை. நாம வீட்டுல இருப்போம்” என்றாள் தழுதழுத்த குரலில், அவருக்கு அவள் வருத்தம் என்னவோ போல் இருக்க, “ஆதி மருமகளையாச்சும் கூட்டிப் போப்பா” என்றார் அவர். அவன் மீண்டும் முறைக்க, “இல்லை அத்தை எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது அவர் போய்ட்டு வரட்டும். நீங்க பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க” என்றாள் அவள் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல்.

 

“கவின் கவினி அப்பாக்கு முத்தம் கொடுங்க” என்று அவன் கேட்க இருவரும் நான் நீ என்று போட்டியிட அவன் இருவரையும் இருக்கைகளில் தூக்கிக் கொள்ள அவர்கள் அவனுக்கு மாறி மாறி முத்தமிட்டு விடை கொடுத்தனர். “போயிட்டு வர்றேன்” என்று அவளிடம் தனியே உரைத்தவன் கிளம்பிச் சென்றான். ஆதவன் ஆதியை விமான நிலையத்தில் விட்டுவிட்டு அவன் விமானம் ஏறும் வரை பார்த்திருந்துவிட்டு கிளம்பினான்.

 

விமானம் ஏறி அமர்ந்தவனுக்கு வெறுமையாக இருந்தது, அவனுக்கும் அவர்கள் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினால் நன்றாக இருக்கும் போல் தான் தோன்றியது, அங்கேயே முகம் வாடியவள் இங்கு வரை வந்தால் நம்மால் சும்மா இருக்க முடியாது அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு டெல்லி போயிருப்போம் என்று தோன்றியது அவனுக்கு.

காலையில் நடந்த நிகழ்வு அவனுக்கு நினைவுக்கு வர அவன் முகம் பிரகாசமானது. நேற்று ஏதோ ஒரு புரியாத உணர்வில் அவள் இதழை தீண்டினான் அது முட்டாள்தனம் என்று நினைத்து அவளிடம் மன்னிப்பும் வேறு வேண்டினான்.

 

ஆனால் இன்று நடந்தது அப்படியல்ல, அவளை பிரிந்து இருக்கப் போகும் ஏக்கம் அவனுக்குள் வந்திருக்க, நேற்று அவள் அமைதி அவனுக்குள் தைரியத்தை விதைத்திருக்க துணிந்து தான் இன்று அவள் இதழ்களை தீண்டினான்.

 

முதலில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் என்று அவன் எதிர்பார்த்து அதை செய்யவில்லை. எப்போதும் போல் அவள் கண்களை பார்த்ததும் அவன் கிறங்கி போய் நேற்று போல் அல்லாமல் இன்று துணிந்து அவளை முத்தமிட்டது அவனுக்குள் போதையை ஏற்றி இருந்தது.

 

அவன் கண்ணயர அந்த பயணத்தின் முடிவில் விமான பணிப்பெண் வந்து அவனிடம் சீட் பெல்ட் போடச் சொல்ல அவனும் அதை போட்டுக் கொண்டான். விமானம் தரையிறங்கியது. அவன் மனமோ சென்னையிலேயே இருந்தது, அவன் உடல் மட்டுமே டெல்லியில் இருந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி அவன் ஒரு வாடகை கார் அமர்த்தி பார்க் ஹோட்டலுக்கு விரைந்தான்.

 

ஓட்டல் வரவேற்ப்பரையில் சாவியை வாங்கிக் கொண்டு வந்து அவன் அறைக்குள் சென்று விழுந்தவன் தாமதம் செய்யாமல் வீட்டுக்கு போன் செய்தான். அவன் தந்தையிடமும் தாயிடமும் பேசிவிட்டு அவன் பத்திரமாக வந்து சேர்ந்த விபரம் உரைத்துவிட்டு போனை வைத்துவிட்டு அவளுக்கு போன் செய்தான்.

 

அவள் போனை எடுத்து “ஹலோ” என்க, “என்ன ஒரு போனை எடுக்க இவ்வளவு நேரமா” என்றான். “இல்லைங்க நீங்க மாமா அத்தைக்கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் அங்க தான் இருந்தேன், நீங்க என்கிட்ட பேசுவீங்கன்னு பார்த்திட்டு இருந்தேன், ஆனா நீங்க என்கிட்ட கொடுக்கவே சொல்லலை அதான் குழந்தைகளை கூட்டிட்டு நம்ம அறைக்கு வந்தேன், போன் அடிச்சுட்டு இருந்துச்சு. சாரி” என்றாள் அவள்.

 

“நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன், அதை சொல்ல தான் போன் போட்டேன் வைச்சுடட்டுமா” என்று சொல்லிவிட்டு அவன் போனை அணைத்துவிட்டான். அவள் ஏமாற்றமாக உணர்ந்தாள். குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுத்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

 

மறுநாள் விரைவாக கிளம்பி அவன் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று அவன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தான், தினமும் ஒருமுறை அவன் வீட்டிற்கு அழைத்து பேச ஆதிராவுக்கு முயற்சி செய்தால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல அவன் அன்னைக்கு போன் செய்து பேசினான். அவள் போனில் ஏதோ பழுது அதை சரி செய்ய கொடுத்திருப்பதாக அவர் கூறினார். அவன் ஆதிராவிடம் போனை கொடுக்கச் சொல்லி ஒரு இரண்டு வார்த்தை பேசிவிட்டு வைத்தான்.

 

அந்த வாரம் இறுதியில் டெல்லியில் இருந்த அவன் நண்பன் ஒருவன் அவனை ஆக்ரா அழைத்து செல்வதாகக் கூற அவர்கள் அங்கு கிளம்பிச் சென்றனர், “ஆதி இன்னைக்கு என்ன விஷேசம் தெரியுமா இன்னைக்கு பௌர்ணமி இந்த இரவு நேரத்துல இந்த பளிங்கு மாளிகையை பார்க்கறது எவ்வளவு அழகு தெரியுமா. உனக்காக நான் சிறப்பு அனுமதி வாங்கி இருக்கேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான் அவன் நண்பன். அவன் சொல்லும் போது சுவாரசியமில்லாமல் கேட்டவன், அவன் சொன்னதை விட அது மிக அழகாக இருப்பதை உணர்ந்தான். ஷாஜஹான் மிகவும் கலாரசிகன் ஆயிரம் தப்பர்த்தங்கள் அந்த பளிங்கு மாளிகை பற்றி உலாவந்திருக்க அதை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அதை ஒரு படைப்பின் அழகாக பார்த்தான்.

 

உலக அதிசயத்தில் ஒன்று என்று அதை பற்றி நினைக்கும் போது மனம் சிலிர்ப்படைய இது போல் நம் இந்தியாவில் பல அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன என்று அவன் மனம் சொன்னது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் போல் கட்ட முடியுமா, தஞ்சை பெரிய கோவிலும் அதன் கலசமும், பெரிய லிங்கமும் எப்படி அவர்கள் அந்த கோவிலை கட்டினார்கள் என்று வியப்பின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்லும்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கோபுரம் தான் உயர்ந்த கோபுரமாகும், தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் உள்ள கோபுரமும் அது தான் என்று நினைக்கும் போது அவனுக்கு இன்னும் பெருமிதமாக இருந்தது.

 

ஆனால் அதெல்லாம் ஏன் இந்த அதிசய பட்டியலில் இல்லை என்ற சின்ன வருத்தம் அவனுக்கு எப்போதும் உண்டு. மதுரை கோவிலாவது உலக அதிசயத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது என்ற எண்ணம் தோன்றி அவனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

 

அவன் மீண்டும் அந்த பளிங்கு மாளிகையின் அழகை ரசிக்க ஆரம்பித்தான், யமுனை நதிக்கரையில் அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் மேலும் அழகாக தெரிந்த அந்த மாளிகை ஏனோ அவனுக்கு ஆதிராவின் நினைப்பைக் கொண்டு வர, அவள் போன் பழுதடைந்து போனது என்று அன்னை சொன்னது நினைவுக்கு வர, இப்போது சரியாகி இருக்கும் என்று நினைத்து அவன் கால நேரம் பார்க்காமல் போன் செய்ய அர்த்த ஜாமத்தில் கைபேசி அழைப்பு கேட்க என்னமோ ஏதோ என்று பதறியவள் பாய்ந்து டேபிளில் இருந்த போனை எடுத்தாள். அவன் எண்ணைக் கண்டதும் அவனுக்கு என்னமோ ஏதோ என்று பதறியவாறே அவள் “ஹலோ” என்றாள் நடுக்கத்துடன்.

 

“ஆரா என்ன செஞ்சுட்டு இருக்க, பேசலாமா” என்றான் அவன். அவனின் நிதானமான பேச்சு அவளுக்கு உரைக்க, அவள் மனம் சமாதானமடைந்தது. “சொல்லுங்க எப்படி இருக்கீங்க” என்றாள்.

 

“நல்லா இருக்கேன் ஆரா, நான் இப்போ எங்கே இருக்கேன் தெரியுமா, சொன்னா நம்பமாட்டே உலக அதிசயத்தில் ஒன்றை நான் பார்த்துட்டேன். ஹ்ம்ம் அதுவும் இல்லாம இன்னைக்கு பௌர்ணமி இந்த இரவு நேரத்துல இதை பார்க்கும் போது எவ்வளவு அழகு தெரியுமா. உன்கிட்ட இதை உடனே சொல்லணும் தோணிச்சு அதான் போன் பண்ணேன். ஆமா இப்போ மணி என்ன” என்றான் அவன் சுவாதீனமாக.

 

“இரண்டு மணி ஆகுதுங்க” என்றாள் அவள். “என்னது இரண்டு மணியா, சாரி ஆரா நான் நேரம் பார்க்காம உன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிட்டேனா. நான் ஒரு முட்டாள் நீ தூங்கு ஆரா. நான் காலையில பேசறேன்” என்றான் அவன் அவளை பேசவே விடாமல். அவன் பேசியதில் அவள் கேட்ட “எப்போ வருவீங்க” அமிழ்ந்து போனது.

 

‘வேணுமின்னே தான் நான் நீ பேசுறது கேட்காத மாதிரி போனை வைச்சேன், நான் எப்போ வர்றேன்ங்கறது உங்களுக்கு சொல்ல மாட்டேன், திடீர்ன்னு வந்து உங்க முன்னாடி நிற்க போறேன்’ என்று நினைத்துக் கொண்டு அவன் நண்பனுடன் மீண்டும் ஒருமுறை தாஜ்மகாலை வலம் வந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

 

அவன் வந்த வேலை இரண்டு நாட்கள் முன்னதாக முடிந்திருக்க அவன் அதை பற்றி அவன் தந்தைக்கு கூட தெரிய படுத்தவில்லை, வேறு ஒரு புது ஒப்பந்தம் பற்றி விசாரித்துவிட்டு வருவதாக அவருக்கு போனில் உரைத்திருந்தான்.

 

வீட்டில் இருப்பவர்களுக்கு எதாவது வாங்கலாம் என்று நண்பனிடம் கேட்டு அவனுடன் அவர்களுக்கு துணி வாங்க கடைக்குச் சென்றான். குழந்தைகளுக்கு பொம்மை எல்லாம் வாங்கிக் கொண்டு கடைசியாக ஆதிராவுக்கு அவனுக்கு பிடித்த மாதிரியான ஒரு டிசைனர் சேலையை வாங்கினான்.

 

காந்திமதி, கீர்த்தி மற்றும் ஆதர்ஷா என்று மூவருக்கும் துணிகள் வாங்கினான். எல்லாமும் வாங்கிக் கொண்டு அவன் அதை வைக்க ஒரு பெட்டியையும் வாங்கினான். வெளியில் வந்த போது அருகில் ஒரு கடையில் அழகு சாதனப் பொருட்கள் விற்க அங்கு சென்றவன், அதில் குறிப்பிட்ட ஒன்றை தேடி அதையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

 

மறுநாள் காலை அவனுக்கு சென்னைக்கு விமானம் ஏற வேண்டும் என்பதால் நேரமாகவே அறைக்கு வந்து சேர்ந்தான். ஹோட்டலின் அறை சேவைக்கு அழைத்து அவனுக்கு தேவையான உணவு வகைகளை சொல்லிவிட்டு அவன் காத்திருந்தான், வீட்டிற்கு போன் செய்யலாம் என்று நினைத்தவன், வேண்டாம் என்ற யோசனையில் தொலைக்காட்சியை உசுப்பினான். தமிழ் பாடல் சேனல் ஒன்றை வைக்க அன்று போல் இன்றும் எதாச்சும் சூழ்நிலை பாடல் வருமோ என்று அவன் நினைக்க, ஒரு அருமையான பாடல் அவன் மனதை கொண்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

 

முன்பேவாஎன்அன்பேவா
ஊணேவாஉயிரேவா
முன்பேவாஎன்அன்பேவா
பூப்பூவாய்பூப்போம்வா
நான்நானாகேட்டேன்என்னைநானே
நான்நீயாம்என்நெஞ்சம்சொன்னதே

 

அடுத்த பாடலாக

கவிதைகள்சொல்லவா,
உன்பெயர்சொல்லவா
இரேண்டுமேஒன்றுதான்ஓஹோ

ஓவியம்வரையவா,
உன்கால்தடம்வரையவா
இரேண்டுமேஒன்றுதான்ஓஹோ

யார்அந்தரோஜாப்பூ,
கண்ணாடிநெஞ்சின்மேல்,
கல்வீசிசென்றாள்அவள்யாரோ

உள்ளம்கொள்ளைபோகுதே,
உன்னைகண்டநாள்முதல்,
உள்ளம்கொள்ளைபோகுதே, அன்பேஎன்அன்பே...

 

‘என்னை நல்லா மயக்கி வைச்சு இருக்கடி, கண்ணா அது நல்லா உருட்டி உருட்டி என்னை பார்த்து பார்த்தே என்னை உன் வசம் இழுத்துட்டடி. எனக்குள்ள நீ வந்துட்ட ஆரா, உன் கண்ணை பார்த்தேலே நான் என்னை மறந்து போறேன், உனக்குள்ள நான் இந்த அளவுக்கு நிறைஞ்சு இருக்கேனாடி.

 

‘உன் கண்ணை பார்த்து உன் கண்ணில் இருக்க காதலை என்னால கண்டு பிடிக்க முடியலைடி. என்னை பற்றி உன் எண்ணம் தெரியாமல் நான் என் மனதை உன்னிடம் வெளியிடப் போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டான்.

 

‘உன்னை நான் காதலிக்கிறேன் இதை நான் உன்கிட்ட எப்படி சொல்லப் போறேன்னு தெரியலைடி, இவ்வளவு நாளா எனக்குள்ள பல குழப்பம் ஹரிணியை பற்றிய எண்ணங்களில் உன் மனதையும் நான் காயப்படுத்தி இருக்கிறேன். ஆனா இந்த ஒரு வாரமும் எனக்கு உன்னை தவிர வேற எந்த நினைவும் வரவே இல்லை. அப்படினா நீ முழுசா என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டன்னு தானே அர்த்தம். இனிமே நான் உன்னை எப்போதும் பிரிய மாட்டேன். இந்த ஒரு வார பிரிவவே எனக்கு நரகமாயிருக்குடி’ என்று அவன் தன்னுள் வாதிட்டுக் கொண்டிருக்க அழைப்பு மணி ஒலி கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தான்.

 

சாப்பிட்டுவிட்டு மறுநாள் விமானம் ஏறவேண்டி சீக்கிரமே கண்ணயர்ந்தான் அவன். அன்றைய இரவில் அவனுக்கு அழகான கனவொன்று அது அவனும் ஆதிராவும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்துக் கொண்டு அவன் அவள் கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்வது போல் தோன்றியது.

 

சென்னைக்கு சொல்லாமல் கொள்ளாமல் அவன் கிளம்பிச் செல்ல அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது….

 

இதுவரை ஆதிராவின் நாட்குறிப்பில் இருந்த பக்கங்களை புரட்டினோம், முதல் முறையாக ஆதியின் நாட்குறிப்பும் இதோ கீழே உள்ள வரிகளால் நிரம்பி இருக்கிறது…

 

 

அஞ்சனை விழியாளே…

உன் அஞ்சனை விழியாலே…

என்னை கட்டி போட்டாயே…

 

அஞ்சாமல் கண் பார்த்து

பேசுபவன் அஞ்சினேன்…

உன் மை விழி கண்டு

பேச்சிழந்து போனேன்

அது பேசிய மொழியில்

 

விழியாள்…

உன் விழியால்

அது பேசும் மொழியால்

என்னை கட்டிப் போட்டதேன்

பெண்ணே…

 

உன் முகம் கண்டு

என் உணர்விழந்து

சிந்தை மறந்து

செயலிழந்து

மெய் சிலிர்த்து

போகிறேனடி…

 

 

 

 

 

அத்தியாயம் –14

 

அதிகாலையிலே ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியவன் விமான நிலையம் வந்தடைந்தான். விமானம் ஏறி அமர்ந்தவனுக்குள் எப்போது சென்னை வரும் என்றிருந்தது, இதற்கு முன் இது போன்றதொரு தவிப்பு அவனுக்குள் இருந்ததில்லை, தன்னை நினைத்தே அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

 

வந்த கொஞ்ச நாட்கள்ல எல்லாருடைய மனசையும் கவர்ந்துட்டாளே என்று எண்ணினான். விமானம் தரையிறங்க இறங்க அவனுக்குள் ஏதோ ஒரு பயம் விதைத்தது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவனுக்குள் வந்தது, ஒருவழியாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் ஒரு காரை அமர்த்திக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

 

வீட்டு வாசலில் இறங்கியவன் காருக்கு தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான். வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்கும் அரவம் கேட்டு லட்சுமி வெளியில் வந்து பார்த்தவர் திகைத்து நின்றார். வேகமாக உள்ளே விரைந்தவர் அருணாசலத்திடம் சென்று நின்றார்.

 

“என்னங்க ஆதி ஊர்ல இருந்து திடீர்ன்னு வந்துட்டான், நீங்க அவன் வர்றதை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே, ஒரு வேலை அவனுக்கு விவரம் தெரிஞ்சு தான் வந்து இருக்கானா, எனக்கு பயமா இருக்குங்க என்றார் அவர்.

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நான் ஆதிக்கிட்ட எதுவும் சொல்லவே இல்லை, அவன் என்கிட்ட இன்னும் இரண்டு நாள் ஆகும்னு தான் சொல்லி இருந்தான். சரி வா போய் பார்க்கலாம் என்று கூறி இருவருமாக வெளியில் வர ஆதி சிரித்தவாறே உள்ளே நுழைந்தான்.

 

“என்னம்மா என்னடா இவன் வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும் சொன்னான், முன்னாடியே வந்து நிற்கிறான்னு ஆச்சரியமா இருக்கா. எங்க போய்ட்டாங்க எல்லாரும், குழந்தைங்க ஆதிரா, ஆதவன் எல்லாம் எங்கம்மா. ஆதர்ஷா காலேஜ் போயிட்டாளா என்றவாறே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் அவன்.

 

“இருப்பா ஆதி அம்மா உனக்கு காபி கொண்டு வர்றேன், குழந்தைங்க எங்க அறையில தான் படுத்து இருக்காங்க. நான் போய் எழுப்பறேன் என்று நழுவப் பார்க்க ஆதியோ “அம்மா எனக்கு காபி வேண்டாம், பசிக்குது சாப்பிடுறேன். ஆதிரா எங்கம்மா, என் குரல் கேட்டு கூட வராம இருக்கமாட்டாளே என்றான் அவன்.

 

கணவனும் மனைவியும் கண்களாலே ஜாடை பேசிக் கொள்ள அதை கவனித்துவிட்டான் ஆதித்தியன். அவன் உள்ளுணர்வு பதற, “என்னம்மா என்னாச்சு, என்கிட்ட சொல்லுங்க என்று எழுந்து நின்றான் அவன். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அவனுக்கோ டென்ஷன் அதிகரித்தது. மாடியில் இருந்து ஆதவன் கீழே இறங்கி வர, “அண்ணா எப்போ வந்தீங்க என்றான் அவன் பதட்டத்துடன்.

 

“என்ன ஆதவா என்னாச்சு என்கிட்ட எதையாச்சும் மறைக்குறீங்களா, என்ன பிரச்சினை உங்க யார் முகமுமே சரியில்லையே. ஆதிரா எங்க போனா என்று கேட்டவாறே உள்ளே வேகமாக விரைந்தான்.

 

“ஆதி, ஆதிராக்கு டைபாய்டு ஜுரம்ப்பா, நீ ஊருக்கு போன மறு நாள்ல இருந்து அவளுக்கு நல்ல ஜுரம், ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தோம் இப்போ தான் ஒரு இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம் என்றார் லட்சுமி ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

 

“என்னம்மா சொல்றீங்க, இதை ஏன் யாருமே என்கிட்ட சொல்லவே இல்லை, அதுனால தான் ஆதிரா என்கிட்டே சரியாவே பேசலையா என்று சொல்லிக் கொண்டே வேகமாக அவர்கள் அறைக்குள் நுழைந்தான். அவன் குரல் கேட்டு அதற்குள் அவள் சிரமத்துடன் எழுந்து வந்து வாசல் கதவின் மேல் சாய்ந்து நின்றாள்.

 

அவளை பார்த்தவனுக்கோ தன்னையுமறியாமல் கண்களில் லேசாக ஈரம் எட்டிப் பார்த்தது. உடல் இளைத்திருந்தாள், முகம் வெளித்து ரத்தபசையின்றி இருந்தது, ஜீவன் இழந்திருந்த கண்கள் அவனைக் கண்டதும் சிரித்தது போல் தோன்றியது அவனுக்கு.

 

அவளை தாங்கியவாறே கூட்டி வந்து படுக்கையில் படுக்க வைத்தான். “என்னங்க அவங்களை எதுவும் சொல்லாதீங்க, நான் தான் உங்ககிட்ட எதுவும் சொல்லவேணாம்னு சொன்னேன் என்றாள் அவள். அதற்குள் மற்றவர்களும் அறைக்குள் நுழைந்திருந்தனர்.

 

“ஆதிரா உன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொன்னதுனால தான்பா நாங்க உன்கிட்ட எதுவும் சொல்லலை என்றார் லட்சுமி. அவன் எதுவும் பேசவில்லை. “என்னடி உனக்கு கொழுப்பா, எதுக்கு என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொன்னே என்று அவளிடம் சீறினான் அவன்.

 

அவர்களை பேசவிட்டு மற்றவர்கள் வெளியே செல்ல அவன் அவளை துளைத்து எடுத்தான். “அப்போ அன்னைக்கு ஆக்ரால இருந்து நான் போன் பண்ணனே அன்னைக்கு கூட நீ எதுவுமே சொல்லலையே என்றான் அவன். “இல்லைங்க நீங்க போன் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சு தான் நான் அதை ஆன் பண்ணவே இல்லை, அன்னைக்கு தான் நான் ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்தேன், எதுக்கும் அதை ஆன் பண்ணி வைப்போம்ன்னு நினைச்சு ஆன் பண்ணேன். நீங்க போன் பண்ணீங்க என்றாள்.

 

 

“என்கிட்ட ஏன் மறைச்சீங்க, உனக்கு ஒண்ணுனா நான் வந்து பார்க்க மாட்டேனா, அதுக்கு கூட எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறியா, நான் என்ன ராட்சஸனா, என்னை மனசாட்சி இல்லாத மிருகம்ன்னு நினைச்சுட்டியாடி என்று பொரிந்தான் அவன்.

 

“இல்லைங்க நீங்க இதுவரைக்கும் இப்படி போனதில்லைன்னு மாமா முத நாள் தான் சொல்லிட்டு இருந்தாங்க, நல்லபடியா நீங்க முடிச்சுட்டு வருவீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க போன வேலை நல்ல படியா முடிச்சுட்டு வரணும் இல்லையா, என்னை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறதா சொன்னா, நீங்க உடனே வந்து நிப்பீங்க அதுனால தான் எதுவும் சொல்ல வேணாம்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன்.

 

“பாவம் அத்தை உங்ககிட்ட சொல்லணும் சொல்லி புலம்பிட்டே இருந்தாங்க. ப்ளீஸ் புரிஞ்சுகோங்க, எனக்கு ஒண்ணும் இல்லை வெறும் ஜுரம் தானேங்க, இப்போ சரியா போச்சுங்க என்றாள். “என்னங்க கவினையும் கவினியையும் பார்த்து நாளாச்சுங்க, கூட்டிட்டு வர்றீங்களா என்றாள்.

 

“நீ என்ன சொல்லற என்றான் அவன். “நான் தான் எனக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்களை என் பக்கத்துல அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன், பாவம் அவங்க என்னை ரொம்ப தேடினாங்களாம் என்றாள் அவள். “சரி இரு வர்றேன் என்று வெளியே வந்தான் அவன்.

 

வெளியில் சோபாவில் அருணாசலம், லட்சுமி, ஆதவன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆதித்தியனும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். சில மணித்துளிகளிலேயே சோர்ந்து போனவனை ஒரு வருத்தத்துடன் பார்த்தார் லட்சுமி.

 

“என்னம்மா நீங்களாச்சும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா, ஹரிணியை நான் சரியா பார்த்துக்காம தான் அவ நம்மை விட்டு போயிட்டாளோன்னு எனக்கு இன்னமும் ஒரு குற்ற உணர்வு இருக்கும்மா. இவளை நான் நல்லா பார்த்துக்கணும் நினைக்கிறேன்மா, நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் ஒரு எட்டு வந்து பார்த்துட்டு கூட போயிருக்க மாட்டேனா, ஏன்ப்பா நீங்களுமா என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

 

“இல்லைப்பா ஆதி மருமக சொல்லும் போது எதுவும் சொல்ல முடியலைப்பா, தப்பு தான்ப்பா என்றார் அருணாசலம். “ஏன்பா அம்மா ஆதிராவை நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைச்சுட்டியா என்றார் லட்சுமி. அவன் வருத்தத்தை மாற்ற வேண்டும் என்றால் இப்படி பேசினால் தான் சரியாக இருக்கும் என்று அவர் பேச அது நன்றாக வேலை செய்தது.

 

“என்னம்மா நீங்க, நான் உங்களை அப்படி சொல்வேனா, நீங்க மருமகளை உங்க மகளா தான் பார்பீங்கன்னு எனக்கு தெரியாதா, நான் ஒரு தடவை உங்களை எல்லாம் பிரிஞ்சு செஞ்ச தப்பு போதாதா. உங்களை புரிஞ்சுக்காம நான் இந்த வீட்டை விட்டு போய் தப்பு செஞ்சுட்டேன். அப்போ கூட நீங்க என்கிட்ட எதுவும் அதை பத்தி குறையா சொல்லவே இல்லையே என்றான் அவன்.

 

 

லட்சுமிக்கு ஆச்சரியமாக இருந்தது, அவர் அவனை ஏறிட, “என்னம்மா எனக்கு எப்படி தெரியும்ன்னு பார்க்குறீங்களா, கொஞ்சம் தாமதமா தான் தெரியும். ஹரிணி அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்த போது நான் கேட்டேன்மா, அவ உங்ககிட்ட மன்னிப்பு கேட்டது பத்தியும் சொல்லிட்டு இருந்தா.

 

“அப்போ தான் எனக்கு உண்மை புரிஞ்சது, என்னால அவளை ஒரேடியா வெறுக்க முடியலை, அவளே தப்பை உணர்ந்து உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கா. அதையும் மீறி இதெல்லாம் எதனாலன்னு யோசிச்சா அது அவ என் மேல வைச்ச அளவுக்கு அதிகமான அன்புல தானேம்மா.

 

“ஆனாலும் எனக்கு உங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்க தயக்கமா இருந்துச்சு. எனக்கே என்னை நினைச்சா கேவலமா இருந்துச்சும்மா. எத்தனையோ நாள் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கலைன்னு நான் வருத்தப்பட்டு இருக்கேன்மாஎன்றான் அவன். எழுந்து வந்து அவர் காலுக்கு கீழே உட்கார்ந்துக் கொண்டு “என்னை மன்னிச்சுடுங்க அம்மா என்றான் வருந்திய குரலில்.

 

“ஆதி நீ எதுக்குப்பா என்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு விடுப்பா, எதுக்கு அதை எல்லாம் பேசிகிட்டு. நான் ஆதிரா பத்தி உன்கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான்பா. எனக்கு என்னோட பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம், உன்னோட வேலையை கெடுக்க எனக்கு மனசில்லை, ஆதிராவோட கோரிக்கையை நிராகரிக்கவும் எனக்கு மனசில்லை. போதும் விடுப்பா, நீ சாப்பிட்டியா, வா வந்து முதல்ல சாப்பிடு என்று அவனை அழைத்தார் அவர்.

 

“இல்லைம்மா ஆரா குழந்தைகளை பார்க்கணும்னு சொன்னா, நான் அவங்களை கூட்டிட்டு போறேன். ஆராக்கு என்னம்மா சாப்பாடு என்றான் அவன். “ஆதிராக்கு கஞ்சி வைச்சு இருக்கேன்ப்பா, நீ போய் குழந்தைகளை பாரு என்று அவர் எழுந்து உள்ளே சென்றார். “அய் அப்பா வந்தாச்சு என்று குதித்துக் கொண்டே வந்தான் கவின்.

 

“அப்பா ஊக்கு, பாப்பா ஊக்கு என்றான். “என்னடா பேசுற நீ, உன்னோட பிறந்தவ தானே கவினியும் அவ எவ்வளவு தெளிவா பேசறா என்று சிரித்துக் கொண்டே அவனை தூக்க, “அப்பா எங்கப்பா போனீங்க நீங்களும் அம்மாவும். எங்களை விட்டுவிட்டு ரெண்டு பேரு மட்டுமே ஊருக்கு போயிட்டீங்களா என்றாள் கவினி.

 

அவன் புரியாமல் பார்க்க, “அண்ணா அண்ணி ஆஸ்பத்திரில இருந்தது இவங்களுக்கு தெரியாது, அவங்களும் உங்ககூட ஊருக்கு வந்திருக்கறதா தான் நினைச்சுட்டு இருக்காங்க என்றான் அவன். இருவரையும் இரு தோள்களில் தூக்கிக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

வாடிய மலராக அவள் படுத்திருந்தது, அவன் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. கவினும் கவினியும் அவனிடமிருந்து இறங்கிச் சென்று அவளை கட்டிக் கொண்டனர். “எங்கம்மா போன, நான் உன்னை தேடினேன் என்றாள் கவினி. “அம்மா உங்களை விட்டு எங்கயும் போகமாட்டேன் செல்லம், நீங்க இப்போ தான் எழுந்தீங்களா, போய் முதல்ல பிரஷ் பண்ணிட்டு வாங்க என்று அவர்களை விரட்டினாள்.

 

“என்னடி என் பிள்ளைங்களை விரட்டுற என்றான் அவன் சிரிப்புடன். “அவங்க உங்க பிள்ளைங்களாச்சே அதான் நான் சொன்னா எதுவும் கேட்க மாட்டேங்குறாங்க, இப்படி அதட்டி சொன்னா தான் கேக்குறாங்க என்றாள் அவள். “அப்போ இனிமே நீ என்னை அதட்டுவியா என்றான் அவன்.

 

“அப்படி சொன்னா தான் கேப்பீங்கன்னா அப்படி தான் சொல்லணும் என்றாள் அவள். அவள் முகத்தில் அந்த பழைய குறும்பும் தெளிவும் வந்திருந்தது. அன்று அவளை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அவன் அழைத்துச் செல்ல, அவர்கள் வழக்கமாக காட்டும் மருத்துவரிடம் அவன் அவளை அழைத்து சென்றான்.

 

ஆதித்தியனை பார்த்ததும் அந்த பெண் மருத்துவர் “என்ன ஆதி இப்போ தான் உங்களை பார்க்குறேன், பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னா கூட இருக்க மாட்டீங்களா நீங்க என்றார் அவர் அதிகார தோரணையுடன், அவன் அவளை பார்த்து முறைக்க, “என்ன ஆதி எதுக்கு அவங்களை பார்த்து முறைக்கறீங்க, அவங்க இங்க சேர்த்திருக்கும் போது ஒரு நாள் கூட நீங்க வந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை.

 

“அதுனால தான் கேட்டேன், உங்க அம்மாகிட்ட கேட்டேன் அவங்க நீங்க ஊருக்கு போய் இருக்கறதா சொன்னாங்க. ஊருக்கு போனா உங்களால ஒரு எட்டு உங்க மனைவியை வந்து பார்க்க முடியாதா, அவங்களை நீங்க கவனிக்க மாட்டீங்களா என்றார் அவர்.

 

“டாக்டர் சாரி அவர்க்கு நான் ஆஸ்பத்திரியில இருந்த விஷயமே தெரியாது, நான் தான் அவர் வேலை கெட்டுடும்னு அவர்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அவர் பேர்ல எந்த தப்பு இல்லை என்றாள் அவனுக்கு ஆதரவாக.

 

“அவங்க சொல்லிட்டா உங்க தப்பு சரியாகிடுமா, நீங்க எப்பவும் வேலை வேலைன்னு இருக்கற ஆளுன்னு எனக்கு தெரியும் ஆதி. நான் ஏற்கனவே உங்களை பார்த்து இருக்கேன். உங்களுக்காக அவங்க பார்க்குறாங்க, நீங்க அவங்களுக்காகவும் கொஞ்சம் பாருங்க என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவள் உடல் நலம் சீராக இருப்பதாகவும் வழக்கமான உணவுகள் அவள் உட்கொள்ளலாம் என்று கூறி சில உணவுகளையும் அவள் சில நாட்கள் வரை உட்கொள்ளக் கூடாது என்பதையும் விளக்கிவிட்டு ஆதியை ஒரு அர்த்த பார்வை பார்த்தார்.

“நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் டாக்டர், கண்டிப்பா இனிமே இவளுக்கு எதுவும் வராம நான் பார்த்துக்கறேன். போதுமா என்றான் அவன். தன்னாலேயே பின்னால் அவள் மனம் புண்படப்போவது அறியாமல் மருத்துவரிடம் பேசிவிட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.

 

அவன் தந்தைக்கு போன் செய்து இரண்டு நாட்கள் அலுவலகம் வர முடியாது என்று உரைத்துவிட்டு அவளை அருகிருந்து கவனித்துக் கொண்டான். இரண்டு நாட்கள் கழித்து அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் அவன். லட்சுமிக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும் ஆதி ஆதிராவை நன்றாக பார்த்துக் கொள்வதை இந்த இரண்டு நாட்களில் அவர் கண்டிருந்தார். அதனால் ஏதும் பேசாமல் அவர்களை அனுப்பி வைத்தார்.

 

அவள் மருத்துவமனையில் இருந்த போது தினமும் வந்து பார்த்துவிட்டு சென்றனர் அவள் பெற்றோர் சங்கரனும், கோமதியும். ஆதி வந்த அன்றும் அவர்கள் அவளை வந்து பார்த்துவிட்டு போயினர். மகளை மருமகன் தாங்குவதை கண்ட பெற்றோருக்கு மனம் குளிர்ந்தது, அவன் பேரில் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலக, இனி மருமகன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று உணர்ந்து மகிழ்ந்து போயினர்.

 

ஆதிராவையும் குழந்தைகளையும் வீட்டிற்கு கூட்டி வந்த மறுநாள் காலை ஆதி அசந்து தூங்கி விட வழக்கம் போல் காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு அவனுக்கு பிடித்த பில்ட்ர் காபியை போட்டு வைத்துவிட்டு ஈரத் துண்டுடன் வந்து எழுப்பினாள். “என்னங்க எழுந்திருங்க இன்னும் உங்களுக்கு விடியலையா என்றாள் அவள்.

 

“நான் இப்போ தானே தூங்கினேன், அதுக்குள்ள விடிஞ்சு போச்சா என்று புரண்டவன் மெதுவாக எழுந்து அமர்ந்தான். “என்னடி என்னை எழுப்பிட்டு எங்க போய்ட்ட என்றான் சுற்று முற்றும் பார்த்தவாறே. அவள் கண்ணாடி முன் நின்று தலையை துவட்ட, வேகமாக எழுந்து அவளருகில் வந்தவன்.

 

“என்னடி கொழுப்பா உனக்கு, இப்போ என்ன அவசரம்ன்னு நீ சீக்கிரம் எழுந்த. உன்னை யார் தலைக்கு குளிக்க சொன்னது, இப்படியா ஈர தலையோட இருப்ப என்றவன் துண்டை அவளிடம் இருந்து பிடுங்கி அவளை கட்டிலில் உட்கார வைத்து தலையை துவட்டினான்.

 

“என்னங்க என்ன இதெல்லாம், அய்யோ தலையை நான் துவட்டிக்க மாட்டேனா, விடுங்க நான் துவட்டிக்கறேன். நீங்க போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் உங்களுக்கு பில்ட்ர் காபி போட்டு வைச்சு இருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்….. என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “என்ன நினைச்சுட்டு இருக்க நீ, உன்னை யாரு இந்த வேலை எல்லாம் பார்க்கச் சொன்னது, நீ எதாச்சும் இழுத்து போட்டுட்டு செய்வ அப்புறம் டாக்டர் என்னைய புடிச்சு சத்தம் போடுவாங்க. நீ குழந்தைகளை பார்த்துக்கற வேலை மட்டும் பார்த்துக்கோ, இந்த வேலைக்கு தான் ராணி இருக்கா, அவ பார்த்துப்பா என்றான் அவன். அவன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையை மட்டும் பார் என்றதும் அவள் முகம் வாடியது.

 

அவள் முகம் வாட்டம் மனதில் பதிய, கவலையுடன் அவளை நோக்கினான். இதற்கு முன் தான் இது போல் பேசிய போது அவள் வருந்தியது நினைவுக்கு வர “ஹேய் சாரிடி நான் இதுக்கு முன்னாடி பேசின மாதிரி நினைச்சு எதுவும் பேசலை. உனக்கு உடம்பு கொஞ்சம் குணமாகற வரைக்கும் நீ எந்த வேலையும் செய்ய வேணாம். சொல்றது கேளுடி.

 

“ராணியை வேலைக்கு வரச் சொல்லி இருக்கேன் வந்திடுவா, அதுவரைக்கும் எல்லாம் நானே செஞ்சு வைக்கறேன். நீ அடுப்படி பக்கம் போன அவ்வளோ தான் என்று அவளை மிரட்டி விட்டு குளியலறைக்குச் சென்று காலைக் கடனை முடித்து குளித்துவிட்டு வந்தான் அவன்.

 

அவள் சும்மா இல்லாமல் சமையலறையில் உருட்டிக் கொண்டிருக்க, “உனக்கு சொன்னா புரியாதா, பேசாம அங்க போய் உட்காரு என்று அவளை பிடித்து அவன் இழுக்க அவள் மொத்தமாய் அவன் மேல் சரிய அவளை விழாமல் பிடித்துக் கொண்டான் அவன்.

 

“என்னங்க காபி போட்டா கூட தப்பா, என்னால எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே அவள் அவனை ஏறிட அவன் கைகள் அவளை இன்னமும் சுற்றி இருப்பதை உணர்ந்தாள். அவள் உடலில் ஒருவித உஷ்ணம் பரவ அவள் இப்போது அவனின் அணைப்பில் வெகு நெருக்கமாக இருந்தாள்.

 

அவள் விதிர்த்து போய் அவனை பார்க்க அவன் கண்கள் அவளையே நோக்கிக் கொண்டிருந்தது. அவன் முகம் அவள் தோள் வளைவில் புதைந்து அவள் ஈரக் கூந்தலின் வாசம் பிடித்தது. அவன் கைகள் தன்னையுமறியாமல் அத்துமீறிக் கொண்டிருக்க அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. அவனின் இறுக்கமான பிடியில் மூச்சடைத்தது அவளுக்கு. அவனுடைய பனியனை இரு கைகளாகும் இறுக்கப் பற்றினாள்.

 

அவளும் அவன் பிடியில் இளக ஆரம்பித்த வேளை அழைப்பு மணி அவர்களின் ஏகாந்தத்தை கலைத்தது. முதலில் சுதாரித்தவன் தன்னை நொந்துக்கொண்டு வழக்கம் போல் அவளிடம் மன்னிப்பு கேட்டான். “சாரி ஆரா, ச்சே நான் ஒரு முட்டாள்” என்றவாறே அவன் அவர்கள் அறைக்குச் செல்ல அவள் முகம் மீண்டும் வாடியது.

 

‘என்று தான் நீ என்னை உன் மனைவியாக நினைப்பாய்’ என்று அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது. அவள் தவிப்பை ஒதுக்கி வாசலுக்கு விரைந்தாள் கதவை திறக்க. ராணி வேலைக்கு வந்திருக்க அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவள் அவர்கள் அறைக்குச் சென்றாள், அங்கு அவன் கட்டிலில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான். “என்னங்க கிளம்பலையா, ஆபீஸ் போக வேணாமா” என்றவள் அப்போது தான் அதை கவனித்தாள். “என்னங்க இப்படியேவா ஆபீஸ் போகப் போறீங்க” என்று சிரித்தாள்.

 

என்ன என்று சுற்று முற்றும் பார்த்தான் அவன். அவள் இறுக பற்றி இருந்ததில் அவன் பனியன் ஒரு பக்கம் அறுந்து தொங்கியது. அப்போது தான் அதை கவனித்தவன் முகம் அசடு வழிய அவன் வேறு ஒன்றை மாற்றிக் கொண்டு அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான். “சாரிங்க, நான் தெரியாம என்னால தான்” என்று அவள் இழுக்க, இப்போது வருத்தப் படுவது அவன் முறையானது, அவள் மனதில் அவள் இன்னும் என்னை கணவனாகவே நினைக்கவில்லை, அதனால் தான் மன்னிப்பு கோருகிறாள் என்று அவன் வருந்தினான்.

 

அவன் அலுவலகம் கிளம்பு முன் ராணியை அழைத்து ஆதிரா எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றான். அலுவலகம் சென்று விட்டானே ஒழிய அவன் மனம் முழுதும் அவளை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 

காலையில் அவன் அவளிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து அவனுக்கு சங்கடமாகவும் அதே சமயம் சந்தோசமாகவும் இருந்தது. உடம்பு சரி இல்லாதவளை கஷ்டப் படுத்தி விட்டோமே, அவள் மனதை முழுவதுமாக அறியாமல் உடல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டேனே’ என்று வருந்தினான். அவள் உடலில் தோன்றிய நடுக்கம் இப்போதும் அவன் உணர்ந்தான்.

 

கிழிந்த அந்த பனியனை பொக்கிஷமாக பத்திர படுத்தியது நினைவுக்கு வர தன்னை நினைத்தே அவனுக்கு சிரிப்பாக இருந்தது. அவன் இப்படி அவன் அறையில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் ராஜீவ். “என்ன சார் ஒரே சிரிப்பா இருக்கு, எதை நினைச்சு இந்த ரகசிய சிரிப்பு” என்றான்.

 

“இல்லையே, நான் எதுக்குடா சிரிக்கப் போறேன்” என்று மழுப்பினான் ஆதித்தியன். “இல்லை நீ பொய் சொல்ற, உன் கண்ணுலேயே தெரியுது, சொல்லு என்ன விஷயம். நீ ஊருக்கு வந்து ரெண்டு நாள் ஆச்சு. இன்னைக்கு தான் ஆபீஸ்க்கு வர்ற, ஆதிராக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னாங்களே இப்போ எப்படி இருக்காங்க” என்றான்.

 

“நல்லா இருக்காடா, பாவம் பாதியா இளைச்சு போய்ட்ட அதான் கஷ்டமா இருக்கு” என்று முகம் வாடியவனை கண்டதும் ராஜீவ் யோசனையானான். திருமணம் ஆன அன்று இரவு அவனுக்கு போன் செய்து பேசிய ஆதித்தியனா  இது என்று ஆச்சரியமானான்.

 

“நாங்க இந்த வாரம் வந்து அவங்களை பார்க்கறோம்” என்றான் ராஜீவ். “அப்புறம் இன்னொரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் உன்னோட நண்பனா” என்று ராஜீவ் நிறுத்த, “என்னடா” என்றான் ஆதி. “நீ ஆதிராவை விரும்பறியா, ஆமாம் இல்லைன்னு ஒரு வரில பதில் சொல்லு” என்றான் அவன். எதுவும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்த ஆதியின் தோற்றமே அவனுக்கு புரிந்தது அவன் மனதில் ஆதிரா குடியேறியது, இருந்தும் நண்பன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை அறிய விரும்பினான். அவன் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட “ஹுர்ரே” என்று உற்சாகமானான் ராஜீவ்.

 

“நினைச்சேன்டா, ஆதி அது நீயாடா. நீயே தானா, அன்னைக்கு எங்க எல்லாரையும் எப்படி கிண்டல் பண்ண, நல்லா மாட்டினியா. சந்தோசமா இருக்குடா, ஆமா இதை பத்தி தங்கச்சிகிட்ட பேசிட்டியா” என்றான் அவன். “இல்லை ராஜீவ், அவளோட மனசை நான் நல்லா புரிஞ்சுக்கணும், நான் அவளை தெரிஞ்சும் தெரியாமலும் நிறைய காயப்படுத்தி இருக்கேன். அதெல்லாம் முதல்ல சரியாகணும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் அவனுக்கு போன் வர அவசரமாக எடுத்து “ஹலோ சார் சொல்லுங்க சார்” என்றான். அப்புறம் பேசலாம் என்பதாக அவனுக்கு கையசைத்து விடை கொடுத்தான்.

 

வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஆதிரா அவள் மடிகணினியை உசுப்பினாள். ஆதவனும் அவளும் செய்ய வேண்டிய வேலைகள் நினைவுக்கு வர குழந்தைகளை விளையாட சொல்லிவிட்டு அவள் கணினியில் ஆழ்ந்தாள். அவள் எதிர்பார்த்ததைவிட அந்த திட்டம் அருமையாக வந்திருந்தது. ஆதவனுக்கு போன் செய்து விபரம் உரைத்தாள்.

 

“ஹலோ தம்பி, நம்ம விளம்பரத்துக்கு தேவையான எல்லாம் தயார் பண்ணிட்டேன். இப்போ அதுக்கான வேலை எல்லாம் தொடங்கிடலாம். அதுக்கு தேவையான துணி, நகை இன்னும் இதர சாமான்கள் எல்லாம் வாங்கணும். இதை ஒரு பென் டிரைவில் நான் நேத்ராகிட்ட கொடுத்து அனுப்பறேன். இதுக்கு தேவையான துணியை வாங்கி நம் மாடலை கூட்டிச் சென்று அர்ச்சனாவிடம் சென்று கொடுத்துவிடுங்கள் அவள் சரியாக தைத்து தருவாள்”

 

“அண்ணி அர்ச்சனா யாரு” என்று இடைமறித்தான் அவன். “சாரி தம்பி அர்ச்சனா தான் நான் பார்த்துட்டு இருந்த கடையை பார்த்துட்டு இருக்கா. அவ தான் இப்போ ஓனர் நான் அவகிட்ட எல்லாம் பேசிட்டேன். நீங்க மாடல் கூட்டி வர அன்னைக்கு சொல்லுங்க நானும் வந்து பார்க்குறேன். இப்போ நீங்க இதுக்கு தேவையானது எல்லாம் நேத்ராவைக் கூட்டி போய் வாங்கிடுறீங்களா.

 

“உங்கண்ணன் என்னை எங்கயும் போக வேணாம் சொல்லி இருக்கார், இல்லைனா நானே வந்துடுவேன்” என்றாள் அவள். அவனுக்கு இது மிகவும் பிடிக்கும் என்று தெரிந்தே “தம்பி உங்களுக்கு அவகூட போக ஒண்ணும் கஷ்டம் இல்லையே” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். “அய்யோ அண்ணி தெரிஞ்சுட்டே கேக்குறீங்க” என்று அசடு வழிந்தான்.

 

“சரி தம்பி நான் அவளுக்கு போன் பண்ணி இங்க வரச் சொல்லறேன், நீங்களும் வந்துடுங்க. அவகிட்ட நான் எல்லா விவரமும் சொல்லிடுறேன், அவ தேவையானது எல்லாம் பார்த்துப்பா. அப்புறம் தப்பா எடுத்துக்காதீங்க, உங்ககிட்ட இதெல்லாம் வாங்க பணமிருக்கா. இல்லைனா தயங்காம சொல்லுங்க என்னோட ATM கார்டு தரேன்” என்றாள் அவள்.

 

“அண்ணி அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் பார்த்துக்கறேன். நான் இப்ப உடனே கிளம்பட்டுமா இல்லை கொஞ்சம் நேரம் கழிச்சு கிளம்பணுமா” என்று இழுத்தான். “நீங்க ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க, நான் அதுக்குள்ள அவளை வரச் சொல்லி விவரம் சொல்லி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். நேத்ராவுக்கு போன் செய்து விபரம் சொல்லி அவளை வீட்டிற்கு வரச் சொன்னாள்.

 

நேத்ரா அவள் வீட்டிற்கு தான் வந்து கொண்டிருப்பதாக கூறி போனை வைத்தாள். வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ஆதிரா வந்து கதவை திறந்தாள் “வாடி ஆஸ்பத்திரிக்கு வந்து போனதோட இப்போ தான் வர்ற, உனக்கு இப்போ தான் வழி தெரிஞ்சுதா” என்று அவளை வரவேற்றாள் ஆதிரா.

 

“வீட்டுக்கு எப்படி வர்றதாம், அங்க வந்தா அந்த பனைமரம் இருப்பான், சும்மாவே என்னை கலாட்டா பண்ணுவான். வீட்டுக்கு வந்தா சும்மா இருக்க மாட்டான். அதான் வரலை, நீ இங்க வந்த பிறகு வரலாம்ன்னு தான் உனக்கு போன் பண்ணதோட விட்டுட்டேன்” என்றாள் அவள்.

 

“ஹேய் என்ன அவன் இவன்னு பேசுற மரியாதை இல்லாம” என்று அதட்டினாள். “இவன் ஒண்ணும் உன் முறைமாமன் மாதிரி இல்லைடி, பெரியத்தான் அழுத்தக்காரரு எங்க ஆளு எல்லாத்துலயும் அடாவடி தான் கோபமா இருந்தாலும் சரி, குழையறதுலையும் சரி” என்று அவள் அவனை வாரிக் கொண்டிருக்க “ஹேய் போதும் நிறுத்துடி, அவர் வந்துற போறார்” என்றாள் ஆதிரா.

 

“அதெப்படி வருவான், நான் தான் இப்போ போன் பண்ணி நீ எங்க இருக்கன்னு கேட்டேனே அவன் தான் ஆபீஸ்ல இருக்கேன்னு சொன்னான். இல்லைனா அன்னைக்கு மாதிரி நான் அவனை பத்தி பேசிட்டு இருக்கும் போது வந்து நின்னாலும் நிப்பான்” என்று சொல்லி அவள் சிரிக்க, ஆதிரா அவள் வாயை பொத்தினாள்.

 

“போதும் நிறுத்துடி அவர் இப்போ இங்க தான் வந்துட்டு இருக்கார்” என்று கூறி அவள் விபரம் கூற “என்னது இங்க தான் வந்துட்டு இருக்காரா, நான் அவன் கூட தான் போகணுமா. என்னடி சொல்ற” என்றாள் அவள். “நல்லவேளை அவன்…” என்று அவள் சொல்ல ஆதிரா முறைக்க “சரி அவன் வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். நான் தப்பிச்சேன், இல்லைனா அவன் அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் நான் பேசுனது எல்லாம் கேட்டுட்டு என்னை ஒருவழியாக்கி இருப்பான் , இருப்பார் போதுமா” என்றாள் நேத்ரா.

ஆதிரா என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்கு விளக்கி கொண்டிருந்தாள். அவள் எல்லாம் சொல்லி முடிக்கவும் ஆதவன் அழைப்பு மணியை அழுத்தவும் சரியா இருந்தது. “ஹேய் அவன் வந்துட்டான்டி” என்றாள் நேத்ரா. “வாங்க தம்பி உட்காருங்க” என்று அவனை உள்ளே அமர வைத்துவிட்டு காபி போடச் சென்றாள் ஆதிரா.

 

“ராணி என்றழைத்தவள் “தம்பி வந்து இருக்காங்க, எங்க எல்லாருக்கும் காபி போட்டு குடுக்கறியா. உனக்கும் சேர்த்து போடு ஓகே வா” என்றுவிட்டு அவள் குழந்தைகளை பார்க்க உள்ளே சென்றாள்.

 

ஆதவன் ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க ‘என்னாச்சு இவனுக்கு நான் பக்கத்துல இருக்கேன், ஒரு ஹாய் ஹலோ எதுவும் சொல்லாம பேசாம உட்கார்ந்து இருக்கான்’ என்று நினைத்தவள் ‘சரி நாமே அவனை பார்த்து சிரிச்சு வைப்போம்’ என்று அவனை பார்த்து முறுவலித்தாள் அவள். அவனோ யாரோ வேற்று ஆளை பார்ப்பது போல் பார்த்து வைக்க, “என்னடா” என்றாள் அவள் சத்தமாக.

 

 “யாரு நீங்க என்னை பார்த்து என்னடான்னு கேக்குறீங்க” என்றான் அவன். “உனக்கு ரொம்பவும் திமிர் தான்” என்றாள் அவள். “உன்னை விடவா நான் இல்லன்னா என்ன வேணாலும் பேசுவியா” என்று அவன் பாய அதற்குள் ராணி காபி கோப்பைகளுடன் வந்தாள்.

 

‘இவன் என்ன சொல்லறான் ஒருவேளை நான் பேசியதை கேட்டு இருப்பானோ, என்ன செய்யறது, ச்சே இருக்காது நாம் பேசும் போது தான் இவன் இங்கிருக்கவில்லையே’ என்று நினைத்து அலட்சியமானாள் அவள்.

 

ஆதிரா கவினை தூக்கிக் கொண்டு வந்தாள், “தம்பி இந்தாங்க பென் டிரைவ் இதுல எல்லா விபரமும் இருக்கு. நேத்ராகிட்ட எல்லாம் சொல்லிட்டேன், நீங்க இப்போவே கிளம்புங்க” என்றாள். அவர்கள் காபியை குடித்துவிட்டு கிளம்பினர். “ஆதிரா நான் ஸ்கூட்டியை இங்க விட்டுட்டு அவர்கூட பைக்கில போறேன் வரும் போது எடுத்துக்கறேன்” என்றாள் நேத்ரா.

 

“சரி அப்புறம் அர்ச்சனாவையும் போய் பார்த்துட்டு வாங்க, அவகிட்ட எல்லாம் பேசிட்டேன் சரியா” என்று அவர்களுக்கு விடை கொடுத்தாள் ஆதிரா. நேத்ரா அவள் ஸ்கூட்டியை ஆதிராவின் வீட்டில் விட்டுவிட்டு அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவனோ வாயை திறந்து எதுவும் பேசவில்லை.

 

“என்னாச்சு என்கிட்ட பேசமாட்டீங்களா” என்றாள் அவள். “இந்த பனைமரம் அடாவடிக்காரனாச்ச்சே என்கிட்ட உனக்கு பேச எதுவும் இருக்கா” என்றான் அவன். ‘அய்யோ இவன் எல்லாமே கேட்டுட்டனா, இனி இவனை எப்படி சமாளிக்கப் போறோம்’ என்று விழித்தாள் நேத்ரா.

 

சாரலாய் நீ

அதில் சுகமாய்

நனைவேன் நான்…

 

தென்றலாய் நீ

எனை தீண்டிடும் போது

சிலிர்ப்பேன் நான்…

 

வானமாய் நீ

உன்னை தழுவிடும்

மேகமாய் நான்…

 

சுகந்தமாய் நீ

அதை நுகர்ந்து

மணம் வீசுவேன் நான்…

 

ஆழியாய் நீ

உன்னில் அதிர்வை

ஏற்படுத்தும் சுனாமியாய் நான்…

 

 

 

Advertisement