Advertisement

அத்தியாயம் – 1

 

 

திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை…….  இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க அய்யர் மந்திரம் ஓத கடவுளின் சந்நிதானத்தில்தாலியைவைத்துஎடுத்துக்கொடுக்கஆதிராவின்கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் ஆதித்தியன்.

 

அவன்கைகள்கூடபடாதவாறுதாலியைகட்டியது மனதிற்கு சங்கடம் கொடுத்தாலும் கண்களில்கண்ணீருடன்அவன்கட்டியதாலியைபிறர்அறியாதவாறுதொட்டுபார்த்துக்கொண்டாள்ஆதிரா. நெற்றியில் குங்குமம் வைக்கும் போதும் பட்டும் படாதவாறு அவன் விரல் தீண்டல் இருந்தது.

 

பாபநாசநாதரையும் உலகம்மையையும் வணங்கிவிட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் புடைசூழ கோவிலில் இருந்து வெளியே வந்தனர். தெருவோர சவுண்ட் சர்வீஸ் கடையில் தோதாக பாட்டிசைத்தது….

 

அம்மி மிதிச்சாச்சு

அருந்ததிய பார்த்தாச்சு…

பொம்மி பூ முடிச்சு

புருஷன் கையை கோத்தாச்சு…

 

எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்தை…

பாட்டு மழை பாடி வந்து தோக்கடிக்கும் குத்தாலத்தை

பாட்டு மழை பாடி வந்து தோக்கடிக்கும் குத்தாலத்தை…

 

அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அய்யர் ஹோட்டலு அல்வா மாதிரி

தாழம்பூவென தளதளவென வந்தா வந்தா பாரு…

அவனுக்கென்ன ஆழ்வாற்குறிச்சி அழகு தேவரு அருவா மாதிரி

பர்மா தேக்கென பளபளவென வந்தா வந்தா பாரு…

 

கும்மி ஆடி கும்மி ஆடி கும்மி ஆடி ஹோ…

கொத்து வள சத்தம் போட கும்மி ஆடி ஹோ…

 

கவின் அவளருகில் வந்து அவளை தொட்டு பார்க்க என்னிடம் வருவாயா என்பது போல் ஆதிரா அழைக்க அவளிடம் வந்து தூக்குமாறு கையை நீட்டினான். ஆதித்தியனுக்கு ஏதோ போன் வர அவன் தள்ளி சென்று பேசினான். ஆதிரா கவினியை அழைக்க அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

 

“நீங்க தான் சித்தியா” என்றான் குழந்தை. “நான் சித்தி இல்ல தங்கம் உங்களோட அம்மா” என்றாள் அவள் பதிலுக்கு. “அம்மா தான் சாமிகிட்ட போயிட்டாங்களே” என்றான் அவன் மீண்டும். “உனக்கு யார் சொன்னது” என்றாள் அவள். “ஆச்சி தான் சொன்னாங்க” என்றான் அவன்.

 

“சாமி தான் என்கிட்ட வந்து நான் கவின் கவினியோட அம்மா இங்க கூட்டி வந்துட்டேன். அதுனால நீ போய் அவங்களுக்கு அம்மாவா இருந்து பார்த்துக்கோன்னு சொன்னார், அதான் நான் உங்களை பார்த்துக்க வந்துட்டேன். இனிமே நீங்க என்னை அம்மான்னு தான் கூப்பிடணும், கூப்பிடுவதானே” என்றாள்.

 

சந்தோசமாக தலையை ஆட்டி “சரிம்மா” என்றவனை அள்ளி அணைத்துக் கொண்டாள் அவள். அங்கு நடப்பதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி நிறைவாக உணர்ந்தார். அவள் மீண்டும் கவினியை கை நீட்டி அழைக்க அவள் ஓடிச்சென்று அருகில் நின்றிருந்த வயதான பெண்மணியிடம் சென்று தூக்கச் சொல்லி நின்றாள். அவளை தூக்கிக்கொண்டு ஆதிராவின் அருகில் வந்தார் அப்பெண்மணி.

 

“அம்மா தப்பா எடுத்துக்காதீங்க. நான் தான் குழந்தைகளை பார்த்துக்கறேன். என் பேரு பேச்சியம்மா, குழந்தைங்க சின்ன வயசுல இருந்து என்கிட்ட தான் வளர்றாங்க. கவினி அவங்க அம்மாகிட்டயும் என்கிட்டயும் மட்டும் தான் வருவா அவங்க அம்மா இருக்கும்போது அவங்க தூக்குவாங்க இல்லைனா நான் தான் அவளை வைச்சு இருப்பேன். அவங்க அப்பாகிட்ட எப்பவாச்சும் போவா. வேற யார்கிட்டயும் அவ்வளவா போக மாட்டா. கவின் அப்படி கிடையாது எல்லார் கிட்டயும் நல்லா பழகுவான். பாப்பாவும் ரொம்ப பிடிச்சு போச்சுனா விடாதுங்க, தப்பா எடுத்துக்காதீங்க அம்மா. கொஞ்சம் பழகினா விடமாட்டா” என்றார் அவர்.

 

“என்னம்மா நீங்க என்கிட்டே போய் விளக்கம் சொல்லிக்கிட்டு எனக்கு புரியும்மா, நான் இப்படி எல்லாம் செஞ்சு தான் அவளை கூப்பிட்டு பார்க்கிறேன். அவளா எப்ப என்கிட்ட வரணும் நினைக்கிறாளோ அப்ப வரட்டும். ஆனா நான் எதாச்சும் செஞ்சு இப்படி தான் கவினி குட்டிய கூப்பிட்டுடே இருப்பேன். என்ன செல்லம் அம்மாகிட்ட வருவீங்களா” என்று மீண்டும் அவள் கைநீட்ட கவினி வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

 

‘அப்படியே அவள் அம்மா குணம் வந்திருக்கிறது இவளுக்கு’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் லட்சுமி. அவர் மனதின் ஓரத்தில் இருந்த சிறு சஞ்சலம் சற்று அகல்வது போல் இருந்தது அவருக்கு. ஆதிரா தன் பேரக்குழந்தைகளை அவள் பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை துளிர்விட்டது அவருக்கு.

 

போன் பேசிவிட்டு திரும்பி வந்தவன் லட்சுமியிடம் சென்று கிளம்பலாம் என்று பரபரத்தான். “அம்மா, இனிமே என்னம்மா கிளம்பலாம் தானே” என்றான். “போகலாம்ப்பா, நீங்க கார்ல வாங்க, நாங்க வேன்ல வந்துடுறோம்” என்றார் அவர். “என்னம்மா நாம எல்லாரும் ஒன்னா வேன்ல தானே வந்தோம், இப்ப என்னை மட்டும் கார்ல போக சொன்னா என்ன அர்த்தம்” என்று சிடுசிடுத்தான் அவன். “என்னப்பா சொல்ற, நீ, ஆதிரா, குழந்தைங்க ஒரு கார்ல வரபோறீங்க, நாங்க வேன்ல வரப்போறோம்” என்றார் லட்சுமி.

 

அப்போது தான் அவனுக்கு புரிந்தது, ஆதிராவின் கழுத்தில் அப்போது தான் தாலி கட்டியது அவன் நினைவுக்கு வர, வேறு வழியில்லாமல் காரில் ஏறினான். கவினியை பேச்சியம்மாவிடம் இருந்து வாங்கி தன் மடியில் இருத்திக்கொண்டான். கவின் ஆதிராவின் மடியில் அமர்ந்து கொள்ள கார் வீட்டை நோக்கிச் சென்றது.

 

அருணாச்சலத்திற்கு சொந்த ஊர் பாபநாசமாக இருந்தாலும் அவர் சொந்தங்கள் எல்லாம் தென்காசியில் தான் இருக்கின்றனர். தற்போது அவர்கள் லட்சுமியின் பூர்விக வீட்டிற்கு தான் சென்று கொண்டிருக்கின்றனர். லட்சுமியின் தாயார் காந்திமதி இரண்டு வேலையாட்களுடன் அந்த வீட்டில் தனித்து வசிக்கிறார்.

 

லட்சுமியும் அவர் தங்கை பார்வதியும் பலமுறை அவர்கள் தாயாரை அவர்களுடன் வந்து இருக்கச் சொல்லியும் அவர் தன் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டில் இருந்து வர மறுத்துவிட்டார். பார்வதி அதே ஊரில் அடுத்த தெருவில் வசிக்கிறார்.

 

ஆதித்தியனும் ஆதிராவும் வந்திறங்க ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். வீட்டிற்கு வந்ததும் ஆதித்தியன் கவினியை கீழிறக்கிவிட்டு வேகமாக படியேறி மாடிக்குச் சென்று விட்டான். தனித்து விடப்பட்ட ஆதிரா குழந்தைகளுடன் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தாள்.

 

சங்கரனும் கோமதியும் உள்ளே வர மகள் தனித்து நிற்பதைக் கண்டு வேகமாக வந்து அவளிடம் நின்றனர். “என்னம்மா மாப்பிள்ளை எங்க” என்றார் கோமதி அவளிடம். “இல்லம்மா அவருக்கு ஏதோ போன் வந்துச்சு அதான் மாடிக்கு போய் போன் பேச போயிருக்கார்” என்று சமாளித்தாள் அவள். லட்சுமி அவர்களை அவரின் அன்னையின் அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

 

“அம்மா உங்க பேத்திய பார்க்கணும் சொன்னீங்களே, நல்லா பார்த்துகோங்க நான் போய் மதிய சமையலுக்கு என்ன செய்யணும்ன்னு காளியண்ணன்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன். நீங்க உட்காருங்க சம்மந்தி, சூர்யா கூச்சப்படாதேப்பா இதுவும் உங்க வீடா நினைச்சுக்கோ உனக்கு எந்த கூச்சமும் வராது” என்று கூறி அவர்களை அமரச் செய்தார்.

 

“சம்மந்தி இவங்க தான் எங்க அம்மா காந்திமதி, எங்க அப்பா இறந்ததுல இருந்து இந்த ரூமே கதின்னு இருக்காங்க. நாங்க எங்ககூட வர சொன்னா கூட வரல, நீங்க பேசிவிட்டு இருங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று கூறி வெளியே சென்றார். “வாம்மா ஆதிரா இப்படி வந்து உட்காரு” என்றார் அந்த வயதான பெண்மணி. சங்கரனிடமும் கோமதியிடமும் சம்பிரதாயமாக பேசிக் கொண்டிருந்தார்.

 

அதற்குள் பழச்சாறுடன் ஆதர்ஷா உள்ளே வந்தாள். எல்லாருக்கும் பழச்சாறை கொடுத்துவிட்டு அங்கேயே நின்றாள். சிறிது நேரம் கழித்து காந்திமதி “ஆதர்சு எல்லாருக்கும் வீட்டை சுத்தி காட்டும்மா போடா என் செல்லம்ல” என்று கொஞ்ச அவள் பதிலுக்கு “ஆச்சி உன்னை எத்தன தடவை சொல்றது என் பேரை ஏன் இப்படி கொலை பண்ணற, நீ என் பேரை இப்படி கொலை பண்ண இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன்” என்றாள். “சரி தங்கம் போய்ட்டு வாடா, எல்லாரையும் கூட்டி போ நான் சித்த நேரம் என் பேத்தி கூட பேசிவிட்டு இருக்கேன்” என்றார் அவர்.

 

‘ஆஹா இந்த ஆச்சி அண்ணிகிட்ட ஏதோ பேச நினைக்குது போல அதான் வீட்டை சுத்தி காட்டுற மாதிரி எல்லாரையும் வெளிய அனுப்புது’ என்று நினைத்துக் கொண்டாள். சங்கரனுக்கும் கோமதிக்கும் அதுவே மனதில் ஓட சங்கடத்துடனே அவர்கள் ஆதர்ஷாவுடன் வெளியில்  சென்றனர்.

 

சங்கரன் “என்ன கோமு இது அவங்க நம்ம பொண்ணுகிட்ட ஏதோ பேச நினைக்கிறாங்க போல, அவளை தனியா விட்டுட்டு வந்துட்டமோன்னு எனக்கு கவலையா இருக்கு” என்று காதை கடித்தார். “தெரியுங்க பெரியவங்க ஏதும் தப்பா பேசமாட்டாங்க, நம்ம பொண்ணு தைரியமானவ தான் அவ எதுனாலும் சமாளிச்சுகுவா” என்று கூறி அவர் வாயை அடைத்துவிட்டார்.

 

சூர்யாவுக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பமில்லை. ‘அக்கா ஏன் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாள், அதுவும் இரண்டாம் தாரமாக எப்படி சம்மதித்தாள். அவளிடம் கேட்டால் எனக்கு பிடித்து தான் ஒத்துக் கொண்டேன் என்கிறாள். அப்பாவும் அம்மாவும் கூட அவள் விருப்பம் என்று விட்டுவிட்டனர். இரண்டு பிள்ளைகள் வேறு இருக்கின்றனர். கடவுளே அவள் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனமார பிரார்த்தனை செய்தான் அவளின் அன்பு தம்பி.

 

இருவரும் வீட்டில் இருந்தால் எலியும் பூனையுமாக அடித்துக் கொள்வார்கள், ஆனாலும் சூர்யாவுக்கு அவளின் மீது மிகுந்த பாசம் உண்டு. அதை எப்போதும் அவன் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.

 

ஆதர்ஷாவுக்கு சூர்யாவை கண்டதில் இருந்தே ஒருவித பதட்டம் உருவாகியிருந்தது. மீண்டும் மீண்டும் அவனை பார்க்க தூண்டிய மனதை கட்டுப்படுத்தினாள். அவனை பார்க்கும் ஆவலில் தான் அவள் அன்னையிடம் வேண்டுமென்றே பழச்சாறை வாங்கி வந்தாள்.

 

வீட்டை சுற்றிக் காண்பித்தவள் பின்னால் இருந்த தோப்புக்கும் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தாள். அவள் விழிகள் சூர்யாவையே அளவெடுக்க சூர்யாவோ அவளை திரும்பிகூட பார்க்கவில்லை. ஆதர்ஷா இன்ஜினியரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி, சூர்யா படிக்கும் அதே கல்லூரியில் தான் அவளும் படிக்கிறாள்.

 

____________________

 

 

குழந்தைகள் அவளிடம் இருந்து இறங்கி வெளியே விளையாட சென்றனர். பேச்சியம்மாவை அழைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு உள்ளே வந்தவளை காந்திமதி ஒரு நிறைவுடன் பார்த்தார். “ஏம்மா ஆதிரா நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றார். “சொல்லுங்க ஆச்சி” என்றாள் அவள். “என் பேரனை உனக்கு பிடிச்சு இருக்காடா. உனக்கு பிடிச்சு தான் நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டியா” என்றார்.

 

“என்ன ஆச்சி இப்படி கேட்குறீங்க, அவரை பத்தி முழுசா தெரிஞ்சு தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். நான் குழந்தைகளையும் நல்லா பார்த்துப்பேன் ஆச்சி. உங்களுக்கு எந்த கவலையும் வேணாம். அவங்க இனிமே என்னோட பிள்ளைங்க” என்றாள் உணர்ச்சிவசத்துடன்.

 

இதை கேட்டு உச்சி குளிர்ந்தவர் “போதும்டா இது போதும் எனக்கு, என் பேரனோட வாழ்க்கை இப்படி பாதில முடிஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலையா இருந்தேன். நீ அதுக்கு உயிர் கொடுத்துட்ட, இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கு இத்தனை பேரபசங்க இருந்தாலும் ஆதின்னா எனக்கு உயிர். அவன் என்கிட்ட தான் ரொம்ப நாள் வளர்ந்தான். அவனுக்கும் நான்னா ரொம்ப பிடிக்கும், நான் என்ன சொன்னாலும் கேட்பான். இந்த கல்யாணத்துக்கு கூட நான் கடைசியா சொன்ன பிறகு தான் ஒத்துகிட்டான்” என்றார் அவர்.

____________________

 

ஆதர்ஷா அவர்களை சுத்திக் காண்பித்துவிட்டு உள்ளே அழைத்து வந்தாள். அருணாசலம் சங்கரனை கண்டதும் பேச்சு கொடுக்க கோமதி மகளை தேடி உள்ளே சென்றுவிட்டார். மீண்டும் தனித்து விடப்பட்ட சூர்யா என்ன செய்வதென முழிக்க ஆதர்ஷா அவனை அருகில் இருந்த சோபாவில் அமருமாறு கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

 

“அம்மா என்னம்மா அண்ணா எங்க தான் போனாங்க, பாருங்க மாமாகிட்ட அப்பா பேசிட்டு இருக்காங்க, அத்தையும் அண்ணிய பார்க்க உள்ளே போய்டாங்க. அவங்க தம்பி தனியா உட்கார்ந்து முழிச்சுட்டு இருக்காங்கம்மா. எங்கம்மா போய்ட்டாங்க ஆதி அண்ணாவும் ஆதவன் அண்ணாவும் போய் அவங்களுக்கு கம்பெனி கொடுக்க சொல்லுங்க” என்று கூறிய மகளை ஆச்சரியமாக பார்த்தார் லட்சுமி.

 

“ஏதேது உனக்குகூட பொறுப்பா பேச வருது, நானும் உங்க அண்ணனை தான் தேடிட்டு இருக்கேன். மாடியில தான் இருக்கான்னு நினைக்கிறேன். நீ போய் கூட்டிட்டு வா. அப்படியே இந்த ஆதவனுக்கும் போனை போட்டு சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லு. குற்றாலம் வரை போய்ட்டு வரேன் சொன்னான் இன்னும் ஆளை காணோம்.” என்றார் அவர்.

 

கோமதி உள்ளே நுழைய காந்திமதியும் ஆதிராவும் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்ததை பார்த்து மகிழ்ந்து போனார். காந்திமதிக்கு காலுக்கு மருந்து தடவ வென்று வேலையாள் அவரை அடுத்த அறைக்கு அழைத்துச் செல்ல, கிடைத்த தனிமையில் கோமதி மகளிடம் பேசினார்.

 

“ஆதிரா கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்த நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதுனால தான், எங்களுக்கு விருப்பமில்லைனாகூட உனக்காக நாங்களும் இதுக்கு ஒத்துகிட்டோம். இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை. இரண்டு குழந்தைங்க இருக்காங்க உனக்கு அதை மனசில வைச்சுக்கோ. அவங்களை உன் பிள்ளையா நினைச்சு நீ நல்லா பார்த்துக்கணும். யாரும் எந்த குறையும் சொல்லிடக் கூடாது. அதே சமயம் நீயும் சந்தோசமா இருக்கணும், எனக்கு அது தான் வேணும். மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு நினைக்கிறேன். அவர் மனசை புரிஞ்சு நடந்துகோ நீங்க சந்தோசமா இருக்கணும். இதை மனசுல வைச்சுக்கோடா, உனக்கு நாங்க எப்பவும் துணையா இருப்போம்” என்று கூறி கண் கலங்கினார் அவர்.

 

 

“என்னம்மா நீங்க, இதை நீங்க எனக்கு சொல்லணுமா, கவினும் கவினியும் என் பிள்ளைங்க மாதிரி இல்லைம்மா, அவங்க என் பிள்ளைகளே தான்ம்மா. நீங்க வருத்தபடற மாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன். நான் சந்தோசமா இருக்கறதை நீங்க பார்க்க தான் போறீங்க” என்று கூறி அவள் அன்னையை சமாதானப்படுத்தினாள்.

 

அவர்களை சாப்பிட அழைக்க வந்த லட்சுமியின் காதில் அவர்கள் பேசுவது விழுந்தது. இதை கேட்டு பூரிப்படைந்தவர் “சம்மந்தியம்மா நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் நீங்க பேசுறதை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னடா ஆதியோட வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சேன்னு, ரெண்டு குழந்தைகள் வைச்சுட்டு அவன் என்ன பண்ணுவான் யோசிச்சு தான் அவனுக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ண நினைச்சோம். அப்பவும் விவாகரத்தான பொண்ணோ இல்லைனா விதவை பொண்ணோ தான் பார்த்தோம். எதுவுமே அவனுக்கு ஒத்து வரல, எங்களை தேடி வந்த…..” என்று அவர் கூறும் போதே இடைமறித்தாள் ஆதிரா.

 

“விடுங்க அத்தை எதுக்கு அதெல்லாம் பேசிட்டு, உங்களுக்கு என் மேல இருக்க நம்பிக்கையை நான் கண்டிப்பா காப்பாத்துவேன்” என்றாள். “இல்லம்மா, நான் கூட முதல்ல யோசிச்சேன் இந்த சம்மந்தம் சரியா வருமான்னு, ஏன்னா அவ்வளவு சீக்கிரம் இதுபோல யாரும் ஒத்துக்க மாட்டாங்க. நீங்க எல்லாரும் சம்மதிச்சு இந்த கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சதுல எங்களுக்கு பூரண திருப்தி. இதுக்கு ஒருவகையில் என்னோட தங்கச்சி பார்வதி தான் காரணம்” என்று முடித்தார் அவர்.

 

அந்த நேரம் சரியாக பார்வதி அவர் குடும்பத்துடன் உள்ளே நுழைந்தார். “எங்க மதினி கோவில்ல இருந்து அப்படியே வீட்டுக்கு போய்டீங்களா, சந்திராக்கா எங்க அப்படியே கிளம்பிட்டாங்களா” என்றார் கோமதி. “ஆமாங்க மதினி சந்திரா மதினியும் அண்ணனும் இன்னொரு கல்யாணத்துக்கு போகணுமாம் தென்காசில. அதான் கோவில்ல வைச்சு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க, உங்ககிட்ட போன் பண்ணி பேசறேன்னு சொன்னாங்க” என்றார் பார்வதி.

 

“சரியான நேரத்துக்கு தான் வந்த பார்வதி இப்பதான் உன்னை பத்தி பேசிட்டு இருந்தேன் நீ வந்துட்ட. சந்திராக்கு என்ன அவசரமாம் இந்த கல்யாணம் நடக்கவே அவங்க தானே காரணம், அவங்க மட்டும் இல்லைனா இப்படி ஒரு பொண்ணு எங்களுக்கு மருமகளா கிடைச்சு இருப்பாளா” என்று சிலாகித்தார் அவர்.

 

“அம்மு, கீர்த்தி மதினிய உள்ளே கூட்டி போங்க நான் போய் எல்லாரையும் சாப்பிட கூட்டி வரேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க” என்று லட்சுமி அங்கிருந்து நகர்ந்தார்.

 

உள்ளே திரும்பச் சென்ற ஆதிராவின் கண்களில் சூர்யா தனித்து அமர்ந்திருந்தது கண்ணில் பட்டது, அவனுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்பதை அவள் அறிவாள். இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை நினைத்து பெருமிதம் கொண்டாள். வீட்டில் இருவரும் அடித்துக் கொண்டாலும் அவனுக்கு அவள் மேல் உள்ள பாசத்தை நினைத்து கண் கலங்கினாள்.

 

அவர்களிடம் சொல்லிவிட்டு சூர்யாவை நாடிச் சென்றாள், செல்லும் முன் கவினையும் கவினியையும் தூக்கிக் கொள்ளச் சென்றாள். கவினி அவளிடம் வரமாட்டேன் என்க, கவினை தூக்கிக்கொண்டு சூர்யாவை நாடிச் சென்றாள்.

 

“சூர்யா, ஏன்டா இப்படி உம்முன்னு இருக்க, உனக்கு எத்தனை தடவை சொல்றது நான் மனப்பூர்வமா தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். புரிஞ்சுக்கோடா, இப்படி இருக்காத. இங்க பாரு கவின் இது தான் சூர்யா மாமா நீ போய் அவன்கிட்ட என்ன வேணா கேளு அவன் எல்லாம் வாங்கி தருவான்” என்று சூழ்நிலையை கலகலப்பாக்க முனைந்தாள்.

 

“ஹைய் மாமாவா ஜாலி என்ன வாங்கி தவ்வா, என்னை தூக்கு” என்று குழந்தை அவனிடம் பேச கொஞ்சம் இயல்புக்கு வந்தவன் கவினை தூக்கிக்கொண்டான். “சூர்யா இவன் தான் உனக்கு அக்கா மகன் கவினி தான் உனக்கு அக்கா மகள் புரிஞ்சுகோ சரியா” என்றாள். “சரிக்கா” என்றான் அவன் பதிலுக்கு. “என்னது என்ன சொன்ன அக்காவா, என்னடா இது நீ எப்பவும் என்னை இப்படி கூப்பிட மாட்டியே. எப்பவும் போல கூப்பிடுடா” என்றாள்.

“அக்கா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் இப்பவும் உன்னை பெயர் சொல்லி கூப்பிட முடியாது. இது நம்ம வீடும் இல்லை” என்றான். “இது நம்ம வீடா இல்லாம இருக்கலாம். ஆனா நீ என் தம்பி தான் நீ எப்பவும் போல கூப்பிடு” என்றாள். “சரிடி” என்றான். “என்னது இருக்க இடம் கொடுத்தா மடத்தை புடுங்கற பார்த்தியா” என்றாள்.

 

“ஆதி” என்று யாரோ அழைக்க ஆதிரா திரும்ப எதிரில் ஆதித்தியன் வந்து கொண்டிருந்தான். “அக்கா எதுக்கு வம்பு நான் இனி உன்னை அக்கான்னு கூப்பிடுறேன். அத்தானை அவங்க வீட்டில ஆதின்னு தான் கூப்பிடுவாங்க போல” என்றான். “சரி நான் உள்ள போறேன்” என்றாள் அவள்.

 

“கவின் குட்டிக்கு என்ன வேணும், வாங்க மாமா உங்களை கடைக்கு கூட்டி போறேன்” என்று அவனை தூக்கிக் கொண்டு வெளியில் சென்றான். கவின் அவனுடன் வளவளத்துக் கொண்டே செல்ல அவனுக்கு கவினை மிகவும் பிடித்துப் போனது. கவினுக்கும் கவினிக்கும் சாக்லெட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் கவினியிடம் ஒரு சாக்லெட் பாரை நீட்ட தயங்கிபடி அவள் அதை வாங்கிக் கொண்டாள்.

 

அம்முவும், கீர்த்தியும் ஆச்சியின் அறைக்குள் நுழைய “வாங்கடா என் தங்கங்களா உள்ளே வாங்க, காந்திமதி என்ன தாயி இப்ப தான் உனக்கு என்னைய பார்க்கனும்னு தோணுச்சா. கீர்த்தி நீயாச்சும் ஒரு எட்டு வந்து பார்த்துருக்கலாம்ல பிள்ள” என்று அவர் கூற, “ஆச்சி எத்தன தடவை சொல்றது என் பேரு கோபிகா, நீ அப்படி தான் கூப்பிடணும்” என்று அம்மு என்ற காந்திமதி சிணுங்க.

 

“என்னலே உனக்கு உங்க அம்மை என் மேல உள்ள பாசத்துல அந்த பேரு வைச்சுட்டா. யாருமே உன் பேரு சொல்லி கூப்புடுறது இல்ல அதான் நான் உன்னை அப்படி கூப்பிட்டேன். ஆதர்சு எங்க போய்ட்ட” என்று அவர் மீண்டும் பேத்திகளுடன் விளையாட தொடங்க. “ஆச்சி” என்று பற்களை நற நறத்தாள் ஆதர்ஷா.

 

அதற்குள் ஆண்கள் அனைவரும் உண்டு முடிக்க, பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சின்ன காந்திமதியும் கீர்த்தியும் ஆதர்ஷாவுடன் பேசிக் கொண்டிருந்தனர். கீர்த்தி சூர்யாவை பற்றி வளைத்து வளைத்து விசாரித்துக் கொண்டிருக்க ஆதர்ஷாவுக்கு கோபம் வந்தது. “ஏண்டி அவரை பத்தியே கேக்குற, எனக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

 

ஆதவன் குற்றாலம் சென்று விட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தான். ஆதவனை பற்றி சொல்லவில்லையே, ஆதவன் அவன் நண்பர்களுடன் சேர்ந்து விளம்பரத்துறையிலும் பங்கு வர்த்தகத்திலும் அவனுக்கு ஆவல் இருக்க அதிலும் தனித்து இறங்கி ஓரளவு வெற்றி பெற்றான். இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அவனுக்கு போட்டோகிராபியிலும் ஆர்வம் உண்டு.

 

“வாப்பா ஆதவா, எங்கடா உன்னை காணமேன்னு நினைச்சுட்டு இருந்தேன் வந்துட்ட, முதல்ல வந்து சாப்பிடுப்பா” என்று கூறி அவனை தனியே அழைத்துச் சென்று உணவருந்தச் செய்தார். சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த ஆதவன் சூர்யா தனித்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவனுடன் சென்று பேசிக் கொண்டிருந்தான். சூர்யாவிற்கு மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது, ‘சே நம்ம அத்தான் இவங்க மாதிரி நம்மகிட்ட பேசமாட்டேங்குறாங்களே’ என்று அவன் மனம் நினைத்தது.

 

ஆதித்தியன் எங்கோ வெளியே கிளம்புவது போல் இருக்க லட்சுமி அவசரமாக அவனிடம் ஓடினார். “தம்பி எங்கப்பா வெளிய கிளம்பிட்ட எல்லாரும் இருக்காங்க நீயும் வீட்டில இருந்தா தான் நல்லா இருக்கும்ப்பா” என்றார்.

 

“என்னமா இன்னும் என்ன இருக்கு, எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கும்மா, நான் சரவணனை போய் பார்க்கணும், பார்த்துட்டு சாயங்காலம் வந்துடுறேன், ப்ளீஸ்மா புரிஞ்சுகோங்க என்று கிளம்பியவனை லட்சுமி பரிதாபமாக பார்த்தார்.

 

ஆதித்யா, நீயே வந்து எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போப்பா, அப்புறம் எல்லாரும் வந்து என்னை தான் கேட்பாங்க உன் பொண்டாட்டிகிட்டயாச்சும் நீ வந்து சொல்லுப்பா என்று அவர் கெஞ்சி கொண்டிருக்கும் போதே அருணாசலம் வந்துவிட்டார். என்னாச்சு என்று அவர் கேட்க லட்சுமி விஷயத்தை சொல்ல அவரும் லட்சுமியின்  கூற்றை ஆமோதித்தார்.

 

ஆதித்யா நீ போய் ஆதிராகிட்டயும் உன் மாமனார் மாமியார்கிட்டயும் சொல்லிட்டு போ என்று அவர் கூற வேறு வழியில்லாமல் அவன் ஆதிராவை சந்திக்கச் சென்றான்.

 

அவள் அவனுடைய ஆச்சியின் அறையில் இருக்க அவளை தேடிச் சென்றவன் அவளிடம் தனியே பேச அழைத்தான். நான் கொஞ்சம் வெளிய வேலையா போறேன், சாயங்காலம் வந்துடுவேன் என்றான். சரிங்க என்று தலையாட்டி விடை கொடுத்தாள் அவள். அவன் அவளிடம் சொல்லி சென்றது மனதிற்கு சந்தோசத்தை கொடுத்தது அவளுக்கு.

 

மாமா எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நான் போய்ட்டு சாயங்காலம் வந்துடுவேன் என்றான். என்ன மருமகனே இன்னைக்கும் வெளிய போகணுமா என்று அவர் வருந்தினார். இல்லை மாமா இங்க என்னோட மாமா பையன் சரவணன் இருக்கான். நானும் அவனும் சேர்ந்து ஒரு விவசாய நிலம் வாங்கி இருக்கோம். அதுல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விவசாயம் செய்ய போறோம், என்ன விதைக்கலாம் என்ன செய்யலாம்னு அவன்கிட்ட பேசிவிட்டு மண்ணை கொண்டுபோய் பரிசோதனைக்கு குடுத்துட்டு வரலாம்னு போறோம் மாமா, இங்கஇன்னும்ரெண்டுநாள்தான்இருப்போம், அதுக்குள்ளஇந்தவேலைஎல்லாம்முடிக்கணும்அதான்என்றுஇழுத்தான்அவன்.

 

சங்கரன்அகமகிழ்ந்துபோனார். மருமகனே ரொம்ப சந்தோசமா இருக்குங்க. சென்னையில பெரிய ராஜாங்கம் கட்டி ஆள்றீங்க. இங்க விவசாயம் பண்ணனும் சொல்றீங்க” என்றார். “இல்ல மாமா சென்னையில வேலை செய்யறது எல்லாம் அப்பா அம்மாவோட சந்தோசத்துக்காக. ஆனா எனக்கு உண்மையான சந்தோசம் விவசாயத்துல தான். இப்ப தான் அதுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்து இருக்கு. அதான் அதுல இறங்கிட்டேன் மாமா, கொஞ்ச நாளைக்கு தான் சென்னை வாழ்க்கை எல்லாம். அப்புறம் நாங்க இங்க தான் வந்து இருக்கணும்னு நான் முடிவு பண்ணி இருக்கேன். பார்க்கலாம் மாமா” என்றான் அவன் நீளமாக.

 

“மருமகனே நீங்கதப்பாஎடுத்துக்கலானநானும்உங்ககூடவரலாமா, நாங்கசென்னைக்குவர்றதுக்குமுன்னவிவசாயம்தான்பார்த்துட்டுஇருந்தோம், என்பொண்ணுஆசைபட்டாளேன்னுதான்நிலத்தைகிரயத்துக்குவிட்டுட்டுநாங்கசென்னைவந்தோம். ரொம்பநாளாச்சுமருமகனே, என்னாலஉங்களுக்குஏதாச்சும்உதவமுடிஞ்சாநான்செய்யறேன்என்றார்அவர்.

 

மிகவும்மகிழ்ந்துபோனவனாககண்டிப்பாமாமாநீங்கவந்தாரொம்பஉதவியாஇருக்கும், அம்மாநான்மாமாவையும்கூட்டிபோறேன். ஆச்சி கிளம்பறேன் வந்து உங்ககிட்ட பேசறேன் ஆச்சிஎன்று போகும் தருவாயில் சொல்லிவிட்டு போனான். எப்படியோ மாமனாரிடம் சேர்ந்துவிட்டான் என்று மகிழ்ந்து போனார் லட்சுமி. வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப இரவாகிவிட்டது. மாமனாரிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தவனை உள்ளறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா திருப்தியுற்றாள்.

 

அவன் அறைக்கு வேகமாக விரைந்து சென்றவன் ஏறிய சிறிது நேரத்திலேயே கீழிறங்கி வந்தான். லட்சுமியை தேடியவன் அவர் ஆதிராவிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து “அம்மா” என்றழைத்தான். “என்னப்பா ஆதி” என்று வெளியே வந்தார் அவர்.

 

“என்னம்மா பண்ணி வைச்சு இருக்கீங்க மேல ரூம்ல, இந்த அலங்காரம் எல்லாம் இப்ப தேவையா. ஏன்மா இப்படி பண்றீங்க” என்று அவரிடம் சிடுசிடுத்தான். “எனக்கு தெரியாதுப்பா நீ இதை பத்தி உங்க அப்பாகிட்ட கேட்டுக்கோ” என்று கணவரின் மேல் பழியை தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர்.

 

‘அப்பாவா அவரிடம் போய் என்ன கேட்பது’ அவனுக்கு அவன் தந்தையின் மேல் மரியாதை உண்டு அவர் செய்வது எதுவும் சரியாக இருக்கும் என்று நம்புபவன். இனி ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவன் அவனுடைய அறைக்கு திரும்பச் சென்றான்.

அவனுடைய அறைக்கு சென்றவன் சிறிது நேரம் தலையில் கையை வைத்து உட்கார்ந்தான். எல்லாருடைய கட்டாயத்திற்காக இந்த கல்யாணத்திற்கு தான் ஒத்துக் கொண்டிருக்க கூடாது என்று அவன் மனம் நினைத்தது. ஒரு முடிவெடுத்தவன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.

 

“அம்மா” என்றழைத்தான், “கவின், கவினி எங்க அவங்கள கொடுங்க நான் என்னோட படுக்க வைச்சுக்கறேன்” என்றான். “என்னப்பா ஆதி குழந்தைங்க எப்பவும் போல பேச்சியம்மாகூட படுத்துப்பாங்க. நீ உன் ரூமுக்கு போப்பா” என்று அருணாசலம் அவனுக்கு பதில் கொடுக்க, தலையை தொங்க போட்டவாறே மேலே சென்றான்.

 

அவனுடைய நண்பன் ராஜீவ்க்கு போன் செய்தான். இந்த நேரத்தில் யார் போன் செய்வது என்று அலுத்துக் கொண்டே “ஹலோ” என்றான். “ஹலோ நான் தான்டா பேசறேன்” என்றான். “என்னடா இந்த நேரத்துல போன் பண்ற, என்னா முதலிரவு கொண்டாடுறியா” என்று சிரித்தான்.

 

“டேய் வாயை மூடுடா” என்று பல்லைக் கடித்தான். “டேய் ரொம்ப சீரியஸா பேசுறீயேன்னு நான் சும்மா பேசுனேன்டா, சரி சரி விடு சொல்லு என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க” என்றான் ரஞ்சித். “ராதிகா தூங்கிட்டாளா, ரஞ்சித் என்ன செய்யறான்” என்று விசாரித்தான் ஆதி.

 

“அவங்க ரெண்டு பேரும் தூங்கியாச்சு, நீ தான் நேரம் காலம் தெரியாம எனக்கு போன் பண்ற, சொல்லுடா” என்றான் அவன் பதிலுக்கு. “ஹேய் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பா போச்சுடா” என்றான். “என்னடா திடிர்னு இப்படி சொல்ற” என்றான்.

 

“பின்ன என்னடா இங்க பர்ஸ்ட் நைட்க்கு எல்லாம் தயார் பண்ணி வைச்சு இருக்காங்கடா. இதெல்லாம் தேவையாடா. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. என்னோட கவலை யாருக்கும் புரிய மாட்டேங்குது” என்றான்.

 

ராஜீவ்க்கு அவனின் சங்கடம் புரிந்தது, மனைவி இறந்தபின் வேறு எண்ணாதவனை கட்டயாப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததில் அவனுக்கும் பங்கு இருந்தது. என்ன செய்து அவனை சமாதானப்படுத்துவது என்று யோசித்தான்.

 

“சரி விடுடா இன்னும் பழசையே நினைச்சுட்டு இருக்காதடா. கவின் கவினியை யோசிச்சு பாரு அவங்களுக்காக தானே நீ வேற கல்யாணம் பண்ணிக்கிட்ட, அதை மட்டும் மனசுல வைச்சுக்கோ, சரியா. சரிடா நாளைக்கு பேசலாம்” என்றான். “சரி” என்று போனை அணைத்தான் ஆதித்தியன். நண்பனின் வாழ்க்கை நல்லபடியாக இருக்க எடுத்த முயற்சிகள் எதுவும் வீணாகக் கூடாது என்று யோசித்துக் கொண்டே படுக்கையில் விழுந்தான் ராஜீவ்.

 

 

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவன், அவளிடம் எப்படியும் அவன் மனதில் உள்ளதை பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்தான். அறையின் சூழல் அவனுக்கு பழைய நினைவுகளை கிளறியது. கதவு தட்டப்பட எழுந்து சென்றான்…………….

 

 

சேருமா இந்த இரு துருவமும்

அவன் நெருப்பாக இருக்க…

அவள் குளிர் நிலவாய் இருந்து

அவன் மனம் குளிர்விப்பாளா…

 

 

அத்தியாயம் – 2

 

“ஆதி, ஆதி, ஆதித்தியா என்று வெளியில் இருந்து லட்சுமி கூப்பிட்டுக் கொண்டிருக்க, “இதோ வந்துட்டேன்ம்மா என்று கதவை திறந்தான் அவன்.

 

“என்னப்பா எவ்வளோ நேரமா தட்டிட்டு இருக்கேன், நீ கதவை திறக்காம என்ன பண்ணிட்டு இருந்த என்றார் அவர். “இப்போ தான்மா குளிச்சுட்டு டிரஸ் பண்ணிட்டு இருந்தேன் சொல்லுங்கம்மா என்ன விஷயம் என்றான் அவன்.

 

“இந்தாப்பா, இந்த போட்டோ எல்லாம் பாரு உனக்கு எந்த பொண்ணு பிடிச்சுருக்குன்னு சொல்லு போய் பார்த்துடலாம் என்றார் லட்சுமி.

 

“அம்மா எனக்கு எதுக்கு இப்போ கல்யாணம், முதல்ல தங்கச்சி கல்யாணத்தை முடிப்போம். அப்புறம் நான் கல்யாணம் பண்றது பத்தி யோசிக்கலாம் என்று மறுத்தான் அவன்.

 

“ஏன்பா, உன் தங்கச்சி இப்போ தான் பத்தாவது படிக்கற, அவ படிச்சு முடிச்சு உனக்கு கல்யாணம் பண்ணணும்னா நீ அறுவதாம் கல்யாணம் தான் பண்ணனும் பரவாயில்லையா. சொன்னா கேளுப்பா உனக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சு மருமக வந்துட்டா அப்புறம் அவளே உன் தம்பி கல்யாணம் தங்கச்சி கல்யாணம் எல்லாம் என் கூடமாட இருந்து பார்த்துப்பால, சரின்னு சொல்லுய்யா என்றார் லட்சுமி.

 

“எதாச்சும் பண்ணுங்க போங்க என்று ஆதித்தியன் கூற, “போட்டோ பாருய்யா, அப்புறம் சொல்லு உனக்கு எந்த பொண்ணு பிடிச்சுருக்குன்னு என்று கூறி அவன் கையில் போட்டோக்களை திணித்தார். மனசுக்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறக்க ஒரு ஒரு போட்டோவாக எடுத்து பார்த்தான். மனதிற்குள் திடிரென்று ஒரு மின்னல் அடிக்க அந்த போட்டோவை மட்டும் வெகுநேரமாக அவன் பார்க்க சட்டென்று உள்ளே நுழைந்த ஆதர்ஷா “ஹைய் இது தான் பொண்ணா, நல்லா இருக்காங்க என்று அவனிடம் இருந்த போட்டோவை பிடுங்கினாள்.

 

இந்த பெண்ணின் முகம் ஏற்கனவே எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே, எங்கு பார்த்திருப்போம் என்று யோசனை செய்ய அவனுக்கு நினைவுக்கே வரவில்லை. “ஆதர்ஷா அந்த போட்டோவை கொடு என்று அவளிடம் இருந்து அந்த போட்டோவை வாங்கி அவர் பார்க்க அந்த பெண்ணை அவருக்கும் பிடித்திருந்தது. “என்னப்பா இந்த பொண்ணு உனக்கு ஓகே தானா பொண்ணு பார்க்க வர்றோம்ன்னு சொல்லிடவா என்றார் அவர்.

 

“இம் சரிம்மா சொல்லிடுங்க என்றான் அவன். அடுத்த வாரயிறுதியிலேயே பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டிற்கு தகவல் அனுப்பினர். அன்று காலை அவசரமாக எழுந்து குளித்து அவன் அறையில் இருந்து வெளியே வந்தவனை ஆதவன் எதிர்கொண்டான்.

 

“என்ன அண்ணா காலையிலேயே எங்க கிளம்பிட்ட, இன்னைக்கு தான் ஆபீஸ் கிடையாதே” என்றான். “டேய் இன்னைக்கு ஞாயிறு கிழமை என் நட்பு வட்டத்தை பார்க்க போறேன்டா. ஹேய் நில்லு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா” என்று ஆதவனை நிறுத்தினான்.

 

“சொல்லுங்கண்ணா என்ன விஷயம்” என்றான் அவன். “நீ எப்ப ஆபீஸ்க்கு வரப்போற அதை முதல்ல சொல்லு. நீயும் காலேஜ் முடிச்சு ஒரு வருஷமாச்சு, நீ வந்து கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கிட்டா நானும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருப்பேன் ஆதவா, என்ன உன் ஐடியா” என்றான் பெரியவன்.

 

“அண்ணா நான் தனியா பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன். எனக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கணும்னு நினைக்கிறேன்” என்று இழுத்தான். “சரிடா, நம்ம ஆபீஸ்லயே நீ அதை செய்யலாமே. நீ என்ன மாற்றம் செய்யணும்னு நினைக்கிறியோ அதை செய். உனக்கே தெரியும் அப்பா எவ்வளோ கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்து இருக்காங்க. நீயும் நானும் அதை நல்லா பார்த்து இருக்கோம். அந்த தொழிலை நாம ரெண்டு பேரும் சேர்ந்து விருத்தியடைய வைக்கவேண்டாமா” என்றான் ஆதித்தியன்.

 

“அண்ணா அப்பாவோட தொழிலை தான் நீ கவனிச்சுக்கிறயே, நான் எனக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அப்பாவை போல நானும் எல்லா கஷ்டமும் அனுபவிச்சு என் சொந்த உழைப்பில்நான் சாதிக்கணும் நினைக்கிறேன். தப்பா அண்ணா” என்றான்.

 

ஆதிக்கு புரிந்தது ஏனெனில் அவனுக்கும் இது போன்று தனித்து ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சிறுவயதில் இருந்தே அவனுக்கு விவசாயத்தின் மீது ஒரு தனி நாட்டம் அவன் சிறுவயதில் காந்திமதியின் வீட்டிலேயே வளர்ந்ததால் அவன் தாத்தாவுடன் சேர்ந்து வயலுக்கு போவது அங்கு அவர் ஏர் பிடிப்பதையும் கலப்பையை பிடிப்பதையும் பார்த்து பார்த்து அவனுக்குள் அந்த எண்ணம் ஊறியிருந்தது.

 

பெற்றவர்களின் விருப்பத்திற்காக இன்ஜீனியரிங் படித்தாலும் அவன் அறை முழுவதும் வேளாண்மை சம்பந்தப்பட்ட புத்தகங்களை தான் வாங்கி அடுக்கி இருப்பான். கல்லூரி படிப்பு முடிந்ததும் அருணாசலத்திற்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட அது முதல் அவருடன் சேர்ந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தவன் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறான். அவன் தந்தையின் தொழிலை அவரை விட அவன் பன்மடங்கு பெருக்கியிருந்ததால் அவனுக்கு என்று தனி கௌரவம் இருந்தது தொழில் வட்டாரத்தில்.

 

நிகழ்வுக்கு வந்தவன் “சரி உன் விருப்பம், நீ சாதிக்க வேண்டும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ என்ன செய்யப் போறேன்னு கேட்கமாட்டேன், நீ ஜெயிப்ப நான் நம்புறேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க நீ இப்படி எந்த ஒரு வேலையும் இல்லாம இருக்கியேன்னு. அதான் நான் உன்கிட்ட பேசினேன். அவங்ககிட்ட நான் பேசிக்கறேன். ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தினான்.

 

“ஆதி எங்கப்பா கிளம்பிட்ட சாப்பிட்டு போப்பா” என்று உள்ளிருந்து வெளியில் வந்தார் லட்சுமி. “அம்மா இன்னைக்கு சண்டே, உங்களுக்கு தான் தெரியுமே நான் இன்னைக்கு என்னோட பிரிண்ட்ஸ்கூட வெளிய போவேன்னு நான் அவங்ககூட சாப்பிட்டுகறேன்ம்மா” என்று கிளம்பினான் அவன்.

 

“அண்ணா அப்போ உன் கல்யாணத்தை ஞாயிறுக்கிழமை வைச்சா என்ன பண்ணுவ, கல்யாணத்துக்கு வராம உன் நண்பர்களை பார்க்க போயிடுவியா” என்றாள் ஆதர்ஷா.

 

“சரியா சொன்ன குட்டிம்மா, அண்ணன் அன்னைக்கும் வெளிய போய்டுவேன், அம்மா இவ சொல்றதும் சரி தான் கல்யாணத்தை ஞாயிற்றுக்கிழமைல வைக்காதீங்கம்மா” என்று போகிறபோக்கில் அவன் சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

“வாயை வைச்சுட்டு சும்மா இருக்கமாட்ட நீ” என்று மகளை அதட்டினார் அவர். “அம்மா இவள் வாய்க்கு திண்டுக்கல் பூட்டு ஒண்ணு பெரிசா வாங்கி போட்டாலும் இவ அடங்கவே மாட்டாம்மா” என்று ஆதவன் கூற, “சீ போடா” என்றாள் ஆதர்ஷா.

 

“ஹேய் என்ன இது அண்ணனை மரியாதை இல்லாம போடான்னு பேசறே, சின்ன பொண்ணாச்சேன்னு உனக்கு செல்லம் குடுத்தா அளவுக்கு அதிகமா தான் நீ விளையாடுற. கொஞ்சம் அடக்கமா இருக்கணும் புரிஞ்சுதா” என்று மீண்டும் ஏசினார் அவர்.

 

“அம்மா விடுங்க சின்ன பொண்ணு தானே ஏதோ தெரியாம பேசிட்டா, என்னடா அப்படிதானே” என்று ஆதவன் அவளுக்காக பரிந்து வர, “எல்லாம் உன்னால தான், என்னை அம்மாகிட்ட திட்டு வாங்க வைச்சுட்டு இப்போ நீயே எனக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி நடிக்கிறியா, போ, நான் உன்கூட பேசமாட்டேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அவள். “இவ இன்னும் வளரவே இல்லைமா” என்று உள்ளே சென்றுவிட்டான் ஆதவன்.

 

 

ஸ்பென்சர் பிளாசா… உணவு வளாகம்….

 

‘எங்க இவனுகள இன்னும் காணோம், எப்ப பார்த்தாலும் இப்படி தான் செய்யறானுக. சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டேங்கறாங்க’ என்று யோசித்தவன் அப்போது தான் நினைவுக்கு வந்தவனாக சட்டைப்பையில் இருந்து ஹரிணியின் போட்டோவை எடுத்துப் பார்த்தான்.

 

இதற்கு முன் இவளை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே, இவளை எங்கு பார்த்திருப்போம். ஒருவேளை பூர்வஜென்மத்தில் பார்த்திருப்போம் போலும். எதற்கு இந்த ஆராய்ச்சி இப்போது, பெண் பார்க்க போகும் போது அவளிடமே கேட்டுவிட்டால் போகிறது என்று நினைத்துக் கொண்டு ஒரு கோக் சொல்லிவிட்டு காத்திருந்தான்.

 

அவனுடைய நட்பு வட்டங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தது. ராஜீவ், ராதிகா, கதிர், அனு, அர்ச்சனா, ராகுல் மற்றும் வெற்றி – இவர்கள் தான் ஆதித்தியனின் நட்புகள். ராஜீவ்-ராதிகா, கதிர்-அனு இவர்கள் காதல் மணம் புரிந்து கொண்டவர்கள்.

 

“ஏன்டா எப்பவும் இப்படி தான் லேட்டாவே வருவீங்களா. ஏன் ராதி நீயாச்சும் சொல்ல மாட்டியா. அனு நீயுமா” என்றான் ஆதி. “உன்னோட பிரண்ட்ஸ் இவனுங்கன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. உன் சுறுசுறுப்பு இவனுங்களுக்கு எங்க வரப்போகுது. காலேஜ்ல லவ் பண்ணப்ப மட்டும் சுத்தி சுத்தி வந்தானுங்க, நாங்க சொன்னது எல்லாம் கேட்டான்னுங்க. இப்ப என்னடான்னா அப்படியே தலைகீழா இருக்கு. இவன் சொல்லறது தான் நான் கேட்டுக்கறேன்” என்று பொருமினாள் அனு.

 

“ஹேய் அர்ச்சனா, ராகுல் நீங்களும் என்னை மாதிரி பிரம்மச்சாரி தானே, உங்களுக்கு என்ன ஆச்சு, நீங்களாச்சும் சீக்கிரம் வந்து இருக்கலாம்ல” என்றான் ஆதி. “விடு மாம்ஸ் இதெல்லாம் பெரிய விஷயாம பேசிட்டு வாங்க நாம வந்த வேலையை பார்ப்போம். அப்புறம் சொல்லுங்க இந்த வாரம் என்ன ஸ்பெஷல், எதாச்சும் நல்ல விஷயம் இருக்கா. ஆதி எனக்கு ஒரு கோக், சிக்கன் பர்கர் சொல்லேன்” என்று ஆரம்பித்தான் ராகுல்.

 

“எப்பப்பாரு நீ சாப்பிடுறதுலயே இருடா. இங்க ஒரு மனுஷன் ஒரு மணி நேரமா இந்த கோக்கை குடிச்சுக்கிட்டு தனியா உங்களுக்காக காத்திட்டு இருந்தேன் அதை பத்தி எல்லாம் உனக்கு கவலை இல்லை. நீ வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சுட்ட. எல்லாவனும் வந்து என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு போய்ட்டாங்க. ஒரு கோக் வைச்சுட்டு சீன் போடறேன் நினைச்சு இருப்பானுங்க எல்லாரும். போங்கடா” என்றவனை, “டேய் மச்சி கூல்டா, கூல்டா, விடு நாம எதுக்கு மீட் பண்ண வந்துருக்கோம். ஜாலியா இருக்க தானே. அப்புறம் சொல்லுங்க நண்பர்களே இந்த வாரம் என்ன என்ன நடந்துச்சு. எதாச்சும் விஷேசம் இருக்கா” என்றான் ராஜீவ்.

 

அவர்களுக்கு சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு “டேய் இந்த வாரம் நான் பொண்ணு பார்க்க போறேன் அது தான் விஷேசம், நீங்க சொல்லுங்க வேற ஏதும் புது விஷயம் வைச்சு இருக்கீங்களா” என்றான் ஆதி சாதாரணமாக.

 

“ஏன்டா இவ்வளவு பெரிய விஷயம் சொல்லிட்டு எங்கள போய் என்ன விசேஷம்னு கேக்குற. எப்படிடா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்ச, நீ பெருசா கதை எல்லாம் சொன்ன, உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் தான் உனக்கு கல்யாணம் அப்படி இப்படின்னு சொன்னவன். பொண்ணு பார்க்க எப்படி ஒத்துகிட்ட சொல்லு மச்சி” என்றான் கதிர்.

 

“இல்லடா அம்மா ரொம்ப வற்புறுத்துனாங்க, என் தங்கச்சி கல்யாணம் முடிச்சு நான் முடிக்கணும்னா எனக்கு அறுவதாம் கல்யாணம் தான் முடிக்கணுமாம். அதான் சரின்னு சொல்லிட்டேன்” என்றான் ஆதி.

 

“அப்பாடா நல்ல வேளையா அம்மா எங்க வயத்துல பால் வார்த்தாங்க, இல்லைனா எங்களுக்கு அறுவது வயசுல தான் குழந்தை பிறந்து இருக்கும்” என்றாள் ராதி. “ஏன் ராதி இப்படி சொல்ற என்னாச்சு” என்றான் ஆதி.

 

“அதை என்கிட்ட கேளு உனக்கு கல்யாணம் முடிஞ்சதும் தான் நாங்க எல்லாரும் குழந்தை பெத்துக்கலாம்ன்னு இருந்தோம். ஒரு வழியா நீ கல்யாணத்துகு சம்மதிச்சுட்ட, இப்ப தான் எங்களுக்கு நிம்மதி. உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா, அடுத்த கல்யாணம் நம்ம செட்ல அர்ச்சனாக்கும் ராகுல்க்கும். எப்படி தெரியுமா, அவங்களும் காதலிச்சுட்டாங்க. எங்களை மாதிரியே நீயும் பேசாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கலாம்” என்று அங்கலாய்த்தான் கதிர்.

 

“டேய் நீங்க வெற்றிய மறந்துட்டீங்களாடா அவனும் இன்னும் கல்யாணம் ஆகாம தான் இருக்கான். எந்த நாட்ல சுத்திட்டு இருக்கானோ” என்றான் ஆதி.

 

“அதெல்லாம் இருக்கட்டும் நீ முதல்ல பொண்ணை எங்களுக்கு காட்டுடா” என்றாள் அர்ச்சனா. “ஆமா அர்ச்சு நான் கூட கேட்கணும் நினைச்சேன். நீ கேட்டுட்ட” என்றான் ராகுல் அவளை பார்த்து அசடு வழிந்தவாறே. “போதும் அசடு வழிந்தது, அதான் நான் கேட்டேன்ல. அப்புறம் என்ன நானும் நினைச்சேன், காயப்போட்டேன்னு. பேசாம நீ சாப்பிடுற வேலையை பாரு லூசு” என்றாள் அவள்.

 

“ஹேய் அர்ச்சனா என்ன பழக்கம் இது அவனை ஏகவசனத்தில பேசற, கொஞ்சம் வாயை குறை” என்று அதட்டினான் ஆதி. ஆதி எப்போதுமே இப்படித்தான் என்ன தான் அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் இப்படி பேசுவது அவனுக்கு பிடிக்காது, உடனே கண்டித்துவிடுவான். ராகுல் பேசியதில் ஏதும் தவறு இருந்ததாக அவன் எண்ணவில்லை, அதனால் அர்ச்சனாவை கண்டித்தான்.

 

“சரி விடுங்க, நீங்க எல்லாரும் கேப்பீங்கன்னு தெரியும் அதான் போட்டோ எடுத்து வந்தேன், இது தான் பொண்ணு பேரு ஹரிணி” என்று அவன் சட்டைப்பையில் இருந்த போட்டோவை எடுத்து நண்பர்களுக்கு காண்பித்தான். “பரவாயில்லடா உனக்கு ஏத்த மாதிரி பொண்ணை தான் பிடிச்சு இருக்க, பொண்ணு நல்ல அழகா தக்காளி பழம் மாதிரி இருக்காடா” என்றார்கள் ராதியும் அனுவும்.

 

“சிஸ்டர் நல்லா தான் இருக்காங்க மாம்ஸ். பரவாயில்லை சீக்கிரமா கல்யாணத்தை வைச்சுடுங்கடா நாங்க ஹனிமூன் போற நேரத்துல வைச்சுட்டா அப்புறம் எங்களால வரமுடியாது” என்றான் ராகுல். “இதுக்கு தான்டா அர்ச்சனா உன்னை திட்டறா, நீ இப்படி தான் அப்பப்ப கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம பேசற” என்று கடிந்தான் கதிர்.

 

“ஆனாலும் இவன் வாய் தான்டா இவனுக்கு பெண் கொடுக்க வைச்சு இருக்கு, இல்லேன்னா அர்ச்சனா அப்பாகிட்ட போய் இவன் பொண்ணு கேட்ட மாதிரி வேற எவனும் கேட்டு இருக்கமாட்டாங்க” என்றான் ராஜீவ்.

 

“ஹேய் ராஜீவ் நீ வேற அதையேன் ஞாபகப்படுத்தற அந்த ஒரு விஷயத்துக்காக தான் எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுது, அதுனால தான் இவன் என்ன பண்ணாலும் நான் கொஞ்சம் பொறுமையா இருக்கேன்” என்றாள் அவள் சிறு வெட்கத்துடன்.  “என்ன தான்டா ஆச்சு, எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கடா. என்கிட்ட மட்டும் சொல்லவே இல்லை நீங்க” என்றான் ஆதித்தியன்.

 

“உனக்கு விஷயமே தெரியாதா, இவன் நம்ம காலேஜ் டைம்லயே நம்ம அர்ச்சுக்கு ரூட் விட்டு இருக்கான். அர்ச்சனா தான் ஒரு தடவை இவனை கூப்பிட்டு நமக்கு தெரியாம இவனுக்கு அறிவுரை எல்லாம் வழங்கி இருக்கா. காலேஜ் முடிஞ்சு இத்தனை வருஷம் கழிச்சும் நம்ம தலைவருக்கு அந்த காதல் குறையல, நல்ல வேலைக்கு போக ஆரம்பிச்சதும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சு இப்போ தான் 2 நாள் முன்னாடி தான் அர்ச்சு அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்க போயிருக்கான். அங்க என்ன நடந்துச்சுதெரியுமா அந்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர் இவனுக்கு பொண்ணு கொடுக்க சம்மதிச்சுட்டார். இந்த விஷயத்தை இந்த மடையன் இப்ப தான் வரும் போது கார்ல சொல்லிட்டு வந்தான்” என்றான் ராஜீவ்.

 

“எப்படிடா, ஆமா அர்ச்சு நீ எப்படி இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச” என்றான் ஆதி வியப்புடன். “இவன் என்னை அவ்வளோ இம்ப்ரெஸ் பண்ணிட்டான் ஆதி, இவன் முதல்ல போய் யார்கிட்ட தெரியுமா லவ் சொல்லி இருக்கான். எங்க அம்மாகிட்ட போய் என்னை லவ் பண்றத சொல்லி இருக்கான். அவங்களை எப்படியோ தாஜா பண்ணி அவங்க ரெகமண்டேஷனோட எங்க அப்பாவை பார்த்து அவரோட சம்மதமும் வாங்கிட்டு வந்து தான் என்கிட்டே லவ் சொன்னான். பாவம் எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டான், அதுக்கு மேல அவனை காக்க வைக்க எனக்கும் விருப்பம் இல்லை அதான் ஓகே சொல்லிட்டேன்” என்றாள் அர்ச்சனா.

 

“அர்ச்சு நீ ஒருத்தி தான் எனக்கு துணையா நல்ல பொண்ணா இருந்த, இப்ப நீயும் காதலிக்கறேன்னு சொல்ற. ஏன் கதிர் அப்படி என்ன தான்டா இருக்கு இந்த காதல்ல. காதலிக்கறது அவ்வளவு ஈசியா, கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் அதை பற்றி தெரிஞ்சுக்கறேன்” என்றான் ஆதித்தியன்.

 

“டேய் சாமியார் நீ எதுக்குடா இதை பத்தி கேக்குற, உனக்கும் அதுக்கும் காத தூரம், நீ காலேஜ் டைம்லயே எதுவும் வேணாம்னு இருந்த, எங்கள பார்த்துகூட நீ மாறலையே. அது ஒரு நல்ல உணர்வுடா, அதெல்லாம் அனுபவிச்சா தான் புரியும். கல்யாணத்துக்கு அப்புறமாவது உன் பொண்டாட்டிய லவ் பண்ணு, சரியா” என்றான் ராகுல்.

 

“எனக்கு வரப்போற பொண்ணு மேல நான் பாசமா இருப்பேன், அதுக்கு பேரு தான் லவ்வா” என்றான் அவன். “நீ சரியான சாமியார் தான்டா உனக்கு சொல்லி விளங்க வைக்க எங்களுக்கு சக்தி இல்லை. நீயா அதை உணர்ந்து ஒரு நாள் எங்ககிட்ட சொல்லுவ, அப்போ சொல்லறேன் எது காதல்ன்னு” என்று உணர்ச்சி வசப்பட்டான் ராஜீவ்.

 

“சரி இந்த டாபிக்கை விட்டுடுவோம் ஓகேயா யாரோட கல்யாணம் முதல்ல வரப்போகுது தெரியல, ரெண்டும் ஒரே சமயம் வைக்காம நாம தான் பார்த்துக்கணும் ராகுல். எனக்கு தேதி முடிவு பண்ணிட்டா நான் உன்கிட்ட சொல்லறேன் ராகுல், நீங்க அதை பார்த்து உங்க தேதி முடிவு பண்ணுங்க சரியா” என்றான்.

 

“சரி மாம்ஸ் அப்படியே கிளம்பிடாதடா, எங்களுக்கு இன்னைக்கு நீ தான் ட்ரீட் கொடுக்கற சரியா. உனக்கு பொண்ணுலாம் பார்த்துட்டாங்க, எனக்கும் கல்யாணம் முடிவாகிருச்சு ரெண்டுக்கும் சேர்த்து நீயே ட்ரீட் கொடு மாம்ஸ் ஓகேவா” என்றான் ராகுல்.

 

“சரியான சாப்பாட்டு ராமன்டா நீ, அர்ச்சு ரொம்ப கஷ்டம் நீ யானையை கட்டி தீனி போடப் பார்க்குற, உன் பாடும் உன் வீட்டார் பாடும் திண்டாட்டம் தான், விருந்துன்னு சொல்லி இவன் உங்க வீட்டிலேயே டேரா போட்டுடுவான், பார்த்துக்கோ” என்று அவனை தாக்கினான் ஆதித்தியன். நண்பர்களிடம் பேசிவிட்டு அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று கூறி விடை பெற்றான்.

____________________

 

 “ஆதி கிளம்பிட்டியாப்பா, சீக்கிரம் வீட்டுக்கு வாப்பா, பொண்ணு வீட்டில 5 மணிக்கு இருக்கறதா சொல்லி இருக்கோம் என்று லட்சுமி போன் செய்தார். “கிளம்பிட்டேன்ம்மா இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டில இருப்பேன் சரியா என்று போனை வைத்தான்.

 

 

சொன்னது போல் பத்து நிமிடத்தில் வீட்டில் இருந்தவன் அவன் அறைக்குச் சென்று குளித்து வெளியே வந்தான். என்ன சட்டை போடலாம் என்று யோசித்து அவனுக்கு பிடித்த இள நீல ஆகாய வண்ண முழுக்கை சட்டையை எடுத்து அணிந்து கண்ணாடியில் நின்று அப்படியும் இப்படியுமாக திரும்பி பார்த்தான். திருப்தியுற்றவனாக கிளம்பி வெளியில் வந்தான்.

 

“பாருடா எங்கண்ணனுக்கு கல்யாண களை வந்துருச்சு டோய் என்று கூவினான் ஆதவன். “பின்ன உனக்கா கல்யாண களை வரும் ஆசைய பாரு, வெவ்வே என்று ஒழுங்கு காட்டினாள் ஆதர்ஷா. “போடி நான் உங்கிட்டயா பேசினேன், நீ எதுக்குடி நடுவுல வர்ற என்று அவளை அதட்டினான் ஆதவன்.

 

“ஆதவா எத்தனை தடவை சொல்றது பொம்பள பிள்ளையா வாடி போடின்னு பேசக்கூடாதுன்னு. ஹேய் வாலு அண்ணாங்கற மரியாதை இல்லையா உனக்கு என்று இருவரையும் அதட்டினான்.

 

எல்லோருமாக கிளம்பி பெண்ணின் வீட்டை அடைந்தனர். ஹரிணியின் பெற்றோர் அவர்களை வரவேற்று அமரச் செய்தனர். ஹரிணியின் தந்தை ஈஸ்வரன் எக்ஸ்போர்ட் பிசினஸ்ல் கொடிகட்டி பறப்பவர், ஹரிணியின் அன்னை மீனாட்சி வீட்டுத் தலைவி, ஹரிணி அவர்களுக்கு ஒரே பெண் என்பதால் அவளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர். ஈஸ்வரன் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஊரையே ஒன்றாக்கி விடுவார். அவருக்கு மகளின் மீது அதீத பாசம் உண்டு.

 

போட்டோவில் அவனை பார்த்த அந்த கனமே கட்டினால் இவரைத் தான் கட்டுவேன் என்று அவள் தந்தையிடம் கூறிவிட்டாள். மகள் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பவர் அவளுக்கு பிடித்தவனையே கட்டி வைக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். அருணாசலம் ஈஸ்வரனிடம் பெண்ணை அழைத்து வருமாறு கூற அவர், அவரின் மனைவி மீனாட்சிக்கு கண்ணிலேயே ஜாடை காட்ட ஹரிணியை அழைத்து வந்து அவர்களின் முன் அமர்த்தினார்.

 

ஹரிணியை பார்த்த அந்த கணம் மீண்டும் அவனுக்குள் யோசனை குமிழியிட்டது. எல்லோருக்கும் பெண்ணை பிடித்துப் போனது, இருந்தும் வீட்டு பெரியவர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுவதாகச் சொல்லி அங்கிருந்து கிளம்பினர் அருணாசலம் குடும்பத்தினர். வீட்டில் நடக்க போகும் முதல் நல்ல காரியம் என்பதால் ஊருக்குச் சென்று குலதெய்வம் கோவிலில் பூ போட்டு பார்த்துவிட்டு பின் இந்த பேச்சை தொடரலாம் என்று அருணாசலமும் லட்சுமியும் நினைத்தனர்.

 

ஆதித்தியனுக்கு வீட்டிற்கு வந்தும் அவளின் நினைவே, அவனுக்குள் கல்யாணக் கனவுகள் உற்பத்தியாகி இருக்க அவளின் போட்டோவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். இதை தான் காதல்ன்னு சொல்றானுங்களா நம்ம நண்பர்கள் என்று நினைத்துக் கொண்டான்.

அருணாசலமும் லட்சுமியும் அந்த வாரயிறுதியில் ஊருக்கு கிளம்புவதாக முடிவு செய்திருந்தனர். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆதித்தியன் அலுவலத்தில் இருந்து அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் அறைக்கு சென்று உடை மாற்றி வந்து கட்டிலின் மீது அமர்ந்த அந்த வேளை அவனின் கைபேசி சிணுங்க அதை எடுத்தான்.

 

“ஹலோ சொல்லுங்க ஆதித்தியன் பேசறேன்” என்றான். எதிர்முனையில் ஒரு வினாடி தயக்கத்திற்கு பின் இனிமையான குரலில் “ஹலோ, நான் ஹரிணி பேசறேங்க” என்றது. ஒரு வினாடி ஒன்றும் புரியாமல் போனது அவனுக்கு, பின் சுதாரித்தவன் “சொல்லுங்க ஹரிணி” என்றான்.

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா, தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றாள் அவள். “அப்படிலாம் ஒண்ணும் இல்லை நீங்க தயங்காம நீங்க என்ன பேச வந்தீங்களோ அதை பேசுங்க” என்றான் அவன்.

 

“உங்க வீட்டில இருந்து எந்த பதிலும் இல்லை, நீங்க பார்த்த பார்வையிலேயே எனக்கு புரிஞ்சுடுச்சு உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்குன்னு. அதுபோல தான் எனக்கு உங்களை பிடிச்சு இருக்குன்னு உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன். என்னடா இப்படி வெளிப்படையா பேசறேன்னு நினைக்க வேணாம். மனசுல பட்டதை எனக்கு கேட்டுட்டா தான் திருப்தி.

 

“இந்த சம்மந்தம் உங்களுக்கு பிடிக்கலானா நீங்க வீட்டுக்கு போய் மறுநாளே போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. நீங்க வந்து போய் ஒருவாரம் ஆச்சு ஒரு தகவலும் வரல. அப்பாக்கு போன் பண்ணி கேக்க ஒரு சின்ன தயக்கம், நானே அவங்களுக்கு தெரியாம தான் போன் பண்ணேன். உங்க நம்பர் உங்களை பத்தின தவகல் குடுத்து இருந்தீங்கள்ள, அதுல தான் பார்த்தேன்.

 

“உங்களை வேறா என்னால நினைக்க முடியல, அதான் உங்களுக்கு போன் பண்ணேன். நான் பேசினது எதுவும் தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க, நான் போன் வைக்கறேன். நான் சொல்ல வந்ததை நீங்க இவ்வளவு நேரம் பொறுமையா கேட்டதே எனக்கு சந்தோசம். நல்ல செய்தி வரும்ன்னு எதிர்பார்த்து காத்திருப்பேன்” என்று கூறி போனை வைத்தாள் அவள்.

 

“அம்மா, அம்மா” என்றழைத்தான் ஆதித்தியன். “என்னப்பா ஆதித்தியா” என்றவாறே அவன் அறைக்குள் நுழைந்தார் லட்சுமி. “அம்மா நாம போய் பொண்ணு பார்த்தோமே நீங்க கூட ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு செட் ஆச்சு சொன்னீங்களே, என்னாச்சுமா. நம்ம ராகுல்க்கு கல்யாணம் வைக்க போறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணா வைச்சுடக்கூடாது. அதுக்கு தான் கேட்டேன்” என்றான் நாசுக்காக.

 

“இல்லப்பா ஆதி நம்ம வீட்டு முதல் கல்யாணம் கோவில்ல பூ போட்டு பார்த்துட்டு அவங்க கிட்ட பேசலாம்னு இருக்கோம்” என்றார் லட்சுமி. “என்னம்மா சொல்றீங்க, அப்ப நீங்க இன்னும் அவங்க வீட்டுல எதுவும் சொல்லலையா, அவங்க நம்ம பதிலுக்காக காத்திருப்பாங்கலம்மா. நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குமா, பொண்ணு பார்த்துட்டு போயிட்டு நாம எந்த பதிலும் சொல்லலைனா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா. எனக்கு பொண்ணை பிடிச்சு போச்சு, அந்த பொண்ணு வீட்டுலயும் அப்படி தான் நினைக்கிறேன். இன்னும் ஏன்மா லேட் பண்ணிக்கிட்டு. அவங்ககிட்ட பேசிடுங்கம்மா, ஜாதகம் பார்த்தாச்சு, அப்புறமும் பூ கட்டி பார்க்கறேன்னு வேற சொல்லிட்டு இருக்கீங்க” என்றான் ஆதித்தியன்.

 

‘புள்ளைக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு போல, அதான் சிக்கிரம் பேசி முடிக்க சொல்லறான் போல’ என்று மனதுக்குள் நினைத்தவர். “சரிப்பா, நான் அப்பாகிட்ட பேசிட்டு உடனே அவங்ககிட்ட பேசிடறேன்” என்று கூறி அவர் நகர்ந்தார். உடனே கணவரிடம் பேசி பின் பெண் வீட்டில் பேசி வரும் சுபமுகூர்த்தத்திலேயே அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 

காத்திருந்தாள் ஒரு கன்னி

இவன் வரவிற்காய்…

கைப்பற்றினான் இவன்

வேறு ஒரு கன்னிகையை…

காத்திருந்தவள்

தனி மரமாய் நிற்க…

இவன் தோப்பானான்…

 

Advertisement