Advertisement

அத்தியாயம் –11

 

 

ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப் போனான். இரண்டு மூன்று நாட்களாக உறங்காமல் இருந்ததில் அவனையறியாமலேயே உறங்கிப்போனான்.

 

அவன் தூங்காமல் இருந்ததை பார்த்திருந்தவள் அன்று அவனிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். ஆனால் இன்று பார்த்து அவன் சீக்கிரமாகவே உறங்கிப் போனதில் சற்று ஏமாற்றமாக உணர்ந்தாள். புரண்டு புரண்டு படுத்தவள் ஒருவாறு உறங்கிப் போனாள்.

 

வழக்கத்தைவிட சீக்கிரமாகவே எழுந்த ஆதித்தியன் ஆதிரா இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்டு ஆச்சரியமானான். ‘என்ன இவள் இன்று இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாள்’ என்று எழுந்து வந்து அவள் உறங்கும் அழகை பார்த்தான்.

 

சிறு குழந்தையாக காலை சுருக்கி கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்திருந்தவளிடம் தெரிந்த ஏதோ என்று அவன் மனதை பிசைவதாக இருந்தது. ‘என்ன எதுக்குடி கல்யாணம் பண்ணிகிட்ட, நான் உனக்கு தகுதியானவனா, உன் குணத்துக்கு உனக்கு எவ்வளவோ மாப்பிள்ளைங்க கிடைச்சு இருப்பாங்க, என்னை ஏன் நீ கல்யாணம் செஞ்சுகிட்ட, இப்படி ரெண்டு குழந்தைகளோட என்னை நீ எப்படி கல்யாணம் பண்ணிகிட்ட.

 

‘உன்னை மாதிரி ஒருத்தி எனக்கும் இந்த குழந்தைகளுக்கும் கிடைச்சது பெரிய வரம். உன்னை இனி என் வாழ்நாளில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது. என்னால் உன்னை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் திரும்பி படுக்க அருகே சென்று அவள் நெற்றில் முத்தமிட்டான். அவள் எழும் அரவம் தோன்ற சட்டென்று குளியலறைக்குள் புகுந்தான்.

 

அவன் அவளருகில் வந்து நின்றதை உணர்ந்தவளுக்கு அவன் நெற்றில் பதித்த முத்ததின் ஈரம் உணர்ந்தவளுக்கு உடனே விழிப்பு தட்டியது. கண்களை விழித்து பார்த்தவள் அவன் குளியலறைக்குள் வேகமாக சென்று மறைவதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே எழுந்தாள்.

 

அவளும் எழுந்து மற்றொரு குளியலறைக்குச் சென்று குளித்து வெளியில் வந்திருந்தாள். இன்னமும் அவன் வெளி வந்தது போல் தெரியவில்லை. நிலைக் கண்ணாடியின் முன் நின்று ஈரக்கூந்தலை சினுக்கோலியின் உதவி கொண்டு காயவைத்துக் கொண்டிருந்தாள். பின் அவள் லேசாக பவுடர் பூசி கண்ணுக்கு மையிடும் தருவாயில் அவன் வெளியில் வந்தான்.

 

நிலைக் கண்ணாடியின் முன் நின்றிருந்தவளை பார்த்து அவனுக்கு மூச்சடைத்தது. வேகமாக அவன் ஆடையை எடுத்துக் கொண்டு அடுத்திருந்த அறைக்குள் சென்று மறைந்தான். ‘என்னாச்சு இவருக்கு என்னை கண்டால் இப்படி தலை தெறிக்க ஓடுகிறார். நான் தூங்கும் போது முத்தமிடுகிறார். இவர் என்று தான் என்னை புரிந்து கொள்வார்’ என்று பெருமூச்செரிந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

 

காலை காபியுடன் அவன் முன் நின்றவளை இமைக்காது பார்த்தவனின் முகம் அவள் பார்க்கவில்லை. அவள் நிமிரும் முன் அவன் பார்வை வேறு எங்கோ தாவியது. அவள் சென்று சமையலை முடித்துவிட்டு வந்து குழந்தைகளை எழுப்பி குளிக்கவைத்து உணவளித்தாள். அதற்குள் ராஜீவ் அழைத்திருக்க ஆதி பத்து மணிக்கு மேல் வருவதாகக் கூறி போனை வைத்தான்.

 

அவனுக்கும் டிபன் எடுத்து வைக்க அவன் உணவருந்திவிட்டு சென்றான். மதிய உணவிற்கு பின் வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு குழந்தைகளிடமும் விடைபெற்று அவன் நண்பர்களை சந்திக்கச் சென்றான். அவன் சென்றதும் மதிய உணவிற்கு எல்லாம் தயார் செய்துவிட்டு வந்தவளுக்கு போரடித்தது. அப்போது அவளுக்கு நேத்ராவின் மடிகணினி அவளிடம் இருப்பது ஞாபகம் வர அதை அவளை வந்து எடுத்து செல்ல சொல்லலாம், அவள் இங்கு வந்தால் தனக்கும் பொழுது போகும் என்று நினைத்து அவளுக்கு போன் செய்தாள்.

 

“ஹேய் நேத்ரா வீட்டுக்கு வாடி” என்றாள். “அந்த பனைமரத்தை வரச்சொல்லி இருக்கியா” என்றாள் அவள் பதிலுக்கு. “யாரடி சொல்லற தம்பியா, ஏன் இப்படி சொல்ற. நான் அவரை வரச்சொல்லலை. என்னவர் எனக்கு லேப்டாப் வாங்கி கொடுத்துட்டார். அதான் உன்னோடது திரும்பி குடுக்கலாம்ன்னு நினைச்சு உனக்கு போன் பண்ணேன். நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்றாள் ஆதிரா.

 

“நேத்து அந்த பனைமரம் என்னை என்னவெல்லாம் பேசிச்சு தெரியுமா, நான் அங்க நேர்ல வந்து சொல்லறேன்” என்று கூறி போனை வைத்தாள் நேத்ரா. சிறிது நேரம் கழித்து அவள் ஸ்கூட்டியில் ஆதிராவின் வீட்டிற்கு வந்தாள்.

 

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்து சாக்லேட் கொடுத்துவிட்டு அவன் தோழியுடன் பேச அமர்ந்தாள். “என்னடி நேத்து என்ன ஆச்சு, உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்பி வைக்கறத்துக்குள்ள, நேத்து என்னை ஒருவழி ஆக்கிட்டீங்க, என்ன தான் பண்ணீங்க. சமாதானம் ஆச்சா இல்லையா” என்றாள் ஆதிரா.

 

“போடி நல்ல ஆளு பார்த்து என்னை அவன் கூட அனுப்பிச்ச, எப்படி திட்டுறான் தெரியுமா, நேத்து என்னை அழவைச்சு தான் வீட்டுக்கு அனுப்பினான். நான் கேட்டனா அந்த பனைமரத்துக்கிட்ட என்னை பார்க்குக்கு கூட்டிப் போன்னு. என்கூட சண்டை போட்டு என்னை அழ வைச்சான் அவன். இங்க நீ வெளிய போயிருக்கும் போது எப்படி மல்லுகட்டினான் தெரியுமா, நீ வந்ததுனால என்னை விட்டான். இல்லைனா அறை விட்டு இருப்பான் போல” என்று அவள் நடந்ததை கூறினாள். சிரித்துக் கொண்டே அவள் சொல்வதை கேட்டாள் ஆதிரா.

 

 

“நான் எதுக்கு வேலையை விட்டேன், எல்லாம் இவனுக்காக தானே. இவனை பிடிச்சதுனால தானே எதுவும் வேணாம்னு இருக்கேன். அதை அவன் என்னைக்கு தான் புரிஞ்சுக்குவான், அவனா என்னைக்கு என்னை புரிஞ்சு வர்றானோ அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்” என்று புலம்பியவளை பார்த்து மீண்டும் சிரித்தாள் அவள். “எதுக்குடி சிரிக்கற, நான் அழறது உனக்கு சிரிப்பா இருக்கா, சொல்லிட்டு சிரிடி” என்றாள் நேத்ரா.

 

“லூசாடி நீ, உன்னை பிடிக்காம தான் அவர் உன்கிட்ட பேசி இருப்பாரா இல்லை பார்க்குக்கு தான் கூட்டிட்டு போயிருப்பாரா. மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட தானே உரிமையா பேச முடியும், இது ஏன் உனக்கு புரியலை. நேத்து அவர் என்ன சொல்ல வர்றார்னு கேக்காம நீ தானே அழுத்துட்டு போயிருக்க, அப்புறம் ஏன் அவரை குறை சொல்லற. என்கிட்ட பேசின மாதிரி அவர்கிட்டயும் இப்படி தான் மரியாதை இல்லாம பேசினியா. தப்பு நேத்ரா, நாளைக்கு கல்யாணம் ஆனாலும் இந்த பேச்சு தான் உனக்கு சகஜமா வரும். மாத்திக்கோ” என்றாள் அவள்.

 

“அடி போடி என்னை புரிஞ்சு அவன் வந்து அப்புறம் எங்க கல்யாணம் நடந்து” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் நிழலாடியது. “அண்ணி” என்றழைத்தவாறே உள்ளே நுழைந்தான் ஆதவன். நேத்ரா தன் தோழியை முறைக்க, அவள் நான் எதுவும் செய்யவில்லை என்பது போல் கண்களில் அவளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

 

“வாங்க தம்பி” என்று வரவேற்றவளை, “அண்ணி இதை அம்மா உங்ககிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க. நம்ம வீட்டில இன்னைக்கு பிரியாணி அதான் உங்களுக்கு கொண்டு வந்தேன். அம்மா உங்களுக்கு போன் பண்ணி நான் வர்றதை சொல்லறேன் சொன்னாங்க, அவங்க உங்களுக்கு போன் பண்ணலையா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி அவள் எண்ணுக்கு அழைக்க, அவர்களிடம் ஒரு நிமிடம் என்றுவிட்டு கைபேசியுடன் அவள் வெளியே சென்றாள்.

 

ஆதவன் நேத்ராவை மேலிருந்து கீழ் வரை அளவெடுத்துக் கொண்டிருந்தான். ‘எப்படி பார்க்குறான் பார், வந்ததும் இவனுக்கு இவன் அண்ணி தான் கண்ணுக்கு தெரியறாளா. நாங்க நிக்கறது இவங்களுக்கு தெரியலையோ. எதுக்கு இப்படி பார்க்குறான். நேத்து மாதிரி இன்னைக்கு எதாச்சும் நம்ம வாயை பிடுங்குவானோ’ என்று அவள் நினைக்க அவன் அவளிடம் எதுவும் பேசாமல் சோபாவில் அமைதியாக அமர்ந்தான்.

 

டிவி சேனலை மாற்றி அவன் பாட்டு சேனல் ஒன்றை வைத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.ஆதிரா உள்ளே வந்ததும், அவள் மடிகணினியை எடுத்து வரச்சொல்லி நேற்று அவள் தயாரித்திருந்த திட்டத்தை அவன் பென் டிரைவ் உதவியுடன் அதில் பதிவேற்றிக் கொண்டிருந்தான். பொறுத்து பொறுத்து பார்த்த நேத்ரா அவன் கிளம்புவதாகக் காணோம் என்று முடிவெடுத்து “ஆதிரா நான் கிளம்புறேன்டி, நான் இன்னொரு நாள் வந்து நிதானமா உன்கிட்ட பேசறேன்” என்று விட்டு குழந்தைகளிடம் விடைபெற்று வெளியில் கிளம்பினாள்.

 

அவனிடம் அவள் போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை. ‘உனக்கு ரொம்ப தான் திமிர், பாரு நீ எப்படியும் என்கிட்ட தான் வருவ’ என்று அவளை நினைத்து கருவினான் அவன். வெளியில் சென்றவள் சென்ற வேகத்திலேயே மீண்டும் உள்ளே வந்தாள். “ஆதிரா என் வண்டில காத்து இறங்கி போச்சுடி நான் எப்படி வீட்டுக்கு போவேன். என்னடி செய்யறது” என்றாள் அவளிடம். ஆதவன் எனக்கென்ன என்று அமர்ந்திருந்தான்.

 

“என்னடி சொல்ற வரும் போது நல்லா தானே இருந்துச்சு” என்றாள் ஆதிரா. “தெரியலைடி இப்ப என்ன செய்யறது” என்றாள் அவள்.“சரி இரு, ஆனா கொஞ்சம் பேசாம இரு. சரியா” என்று விட்டு ஆதவனை நோக்கி, “தம்பி நேத்ராவை நீங்க அவங்க வீட்டில கொண்டு போய் விட்டுட்டு போறீங்களா. அவ வண்டியில காத்து இறங்கி போச்சு” என்றாள் அவள்.

 

“ஏன் அண்ணி அதை அவங்க கேக்க மாட்டாங்களா” என்றான் அவன். ‘திமிர் பிடிச்சவன், பனைமரம் இப்ப யார் கேட்டா என்ன. வரமுடியும் முடியாது எதாச்சும் சொல்லணும் அதைவிட்டு இவன் திரும்பவும் பஞ்சாயத்து வைக்கிறான்’ என்று அவள் யோசிக்க, “நேத்து மாதிரி இவங்க பாட்டுக்கு கிளம்பி போய்ட்டா நான் ஒருத்தன் நடுரோட்டில தனியா நிக்கணுமா. அவங்க வர்றதான ஒழுங்கா வரச் சொல்லுங்க” என்றான் அவன்.

 

‘பாவம் இவர் சூப்பர் பிகர் இவர் நடுரோட்டில நின்னா யாராச்சும் வந்து இவரை கொத்தி போவாங்க, ரொம்ப பேசாதடா’ என்று அவனை திட்டி தீர்த்தாள் அவள். “நேத்து நானா பிரச்சினை பண்ணேன், தேவையில்லாம இவர் பேசினதுனால தான் நான் கிளம்பி போனேன். அவர் வாயை திறக்காம இருந்தா நானும் இவர்கூட போக தயார் தான்” என்றாள் அவளும் விடாமல். “சரி வா” என்றான் அவளிடம். “சரிங்கண்ணி நாங்க கிளம்புறோம்” என்று அவன் விடைபெற்றான். வெளியில் சென்றவன் “ஒரு நிமிஷம் இரு” என்று நேத்ராவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் வெளியில் வந்தான்.

 

ஆதிராவும் வெளியில் வந்து அவர்களை வழியனுப்ப, “ஏறு” என்றான் அவன். “இந்த ஸ்டுல் போடுறது எப்ப தான் விடப்போற” என்றான் அவன் கிண்டலாக ஆதிரா சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டாள். செல்லும் வழி எங்கும் அவன் பேசாமல் அமைதியாக இருக்க ‘பரவாயில்லை இன்னைக்கு எதுவும் பேசாம வர்றான்’ என்று யோசித்துக் கொண்டே அவள் வர, அவன் பைக்கை ஒரிடத்தில் நிறுத்தினான். ‘அதானே பார்த்தேன், சைத்தான் பேசாம வந்தா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு யோசிக்காம விட்டுட்டனே’ என்று யோசித்தவள், “இங்க எதுக்கு நிறுத்தினீங்க” என்றாள். “எதுவும் பேசாம என்கூட வர்றியா. உன்னை எங்கயும் நாடு கடத்தல உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் கூப்பிடுறேன். வா” என்றான் அவன்.

 

“என்னன்னு சொல்லுங்க அப்போ தான் வருவேன்” என்றாள் அவள். “இது என்னோட ஆபீஸ் தான்டி ஏன் பயப்படுற உன்னை ஒண்ணும் செஞ்சுட மாட்டேன் வா பேசாம” என்றான் அவன். ‘இங்க என்னை எதுக்கு தனியா கூட்டி வர்றான்’ என்று பெண்களுக்கே உரிய பய உணர்வில் அவள் அவன் பிடித்திருந்த கையை தட்டிவிட்டாள்.

 

“இங்க எதுக்கு என்னை கூட்டி வந்தீங்க, நீங்க என்ன பேசுறதா இருந்தாலும் அதை ஆதிரா வீட்டிலேயே பேசி இருக்கலாமே. இல்லைனா இங்கயே சொல்லுங்க” நான் கேட்டுக்கறேன் என்றாள் அவள். “உன்னை எனக்கு பிடிச்சுருக்கு, I LOVE YOU இதை நான் நடுரோட்டில தான் சொல்லணுமா” என்றான் அவன் சளைக்காமல் அவளுக்கு பதில் கொடுத்தவாறே, நேத்ரா வாயடைத்து போய் நின்றுவிட்டாள்.

 

“இப்பவாச்சும் என்னை நம்பி என்கூட வர்றியா, உன்னை நான் ஒண்ணும் செய்யமாட்டேன் நம்பிக்கை இருந்தா என்கூட வா” என்று சொல்லிவிட்டு அவன் சாவியை எடுத்துக் கொண்டு அவன் அலுவல் அறையை திறக்கச் சென்றான். உறைந்து போய் நின்றவள் அவன் பின்னேயே சென்றாள், அதற்குள் உள்ளே சென்றிருந்தவன் மின் விளக்கை போட்டுவிட்டு ஏசியை ஆன் செய்துவிட்டு வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தான்.

 

மெதுவாக உள்ளே நுழைந்தவள் அவனை தேட அவன் சோபாவில் அமர்ந்திருப்பது கண்டு அவனருகில் சென்று அமர்ந்தாள். பத்து நிமிடம் எதுவும் பேசாமலேயே கழிய, அவனாக பேச்சை ஆரம்பிக்க போவதில்லை என்பதை உணர்ந்தவள் அவனை நெருங்கி அமர்ந்து அவன் கைகளை பற்றி தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டாள்.

 

முதலில் விரைத்த அவன் பின் அந்த கைகளை இறுக பற்றிக் கொண்டு அவளை நோக்கினான். “சொல்லுடி நெஜமாவே உனக்கு என்னை பிடிச்சுருக்கா. நான் நெறைய சம்பாதிக்கலை. ஆனா எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு, நான் எடுத்த முயற்சியில நான் கண்டிப்பா ஜெயிப்பேன். உன்னை நல்லா பார்த்துக்குவேன். உனக்கு அந்த நம்பிக்கை என்மேல இருக்கா, உங்க வீட்டில ஏன் அன்னைக்கு அப்படி சொன்னாங்க, நான் எப்படி துடிச்சு போனேன் தெரியுமா.

 

“ஒரு மனுஷனை காசு பணம் பார்த்து தான் கணிப்பாங்களா, அவன் எப்பவும் ஒரே மாதிரியே இருந்துடுவானா, நான் நினைச்சா எங்கப்பாவோட சேர்ந்து அந்த தொழிலை பார்க்கலாம். ஆனா அது என்னோட அடையாளமா இருக்காது, அந்த அடையாளம் எங்கப்பாவால கிடைச்சதா இருக்கும். எனக்குனு ஒரு தனி அடையாளம் வேணும் நான் தனிச்சு முயற்சி பண்ணி ஜெயிக்கணும் நினைச்சேன். நான் அருணாசலத்தோடா ரத்தம் அவர் மாதிரி நானும் தனியா உழைச்சு ஜெயிக்கணும் முடிவெடுத்தேன் அதான் எனக்கான அடையாளத்தை நான் தேர்ந்தெடுத்தேன். அது தப்பா” என்றான் அவன் ஒரு வலியுடன்.

 

அதுவரை அவன் பேசட்டும் அவன் மனதில் உள்ளவற்றை அவன் கொட்டட்டும் என்று காத்திருந்தவள் அவனின் கேள்வியில் அடிபட்டு போனாள், அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தவள் அவனை இறுக்க கட்டி அணைத்தாள்.

 

அவன் அவளை விடாமல் பற்றியவாறே கேட்டான் “சொல்லு நேத்ரா, நீ அண்ணிகிட்ட பேசினது எல்லாம் நான் கேட்டேன். நீ எனக்காக தான் வேலையை விட்டியா, உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு நீ அண்ணிகிட்ட சொன்னியே. என்கிட்ட சொல்லமாட்டியா, ஹேய் பனைமரம் உன்னை எனக்கு பிடிச்சுருக்குடான்னு சொல்லுடி” என்றான் அவன். ‘அடப்பாவி இவன் எல்லாமும் கேட்டுட்டனா’ என்று யோசித்தாள்.

 

“என்ன இவன் எல்லாத்தையும் கேட்டுட்டனான்னு தானே யோசிக்கற, உனக்கு ஒரு விஷயம் சொல்லவா, உன் வண்டியில காத்து தானா இறங்கல, நான் தான் இறக்கிவிட்டேன். நீ பேசினது எல்லாம் கேட்டேன், உன்னை எப்படி என்கூட கூட்டிப் போறதுன்னு யோசிச்சேன், அதான் வண்டியில காத்தை இறக்கிவிட்டேன், நான் நினைச்சது நடந்துருச்சு. அண்ணிகிட்டயும் உண்மையை சொல்லி தான் உன்னை கூட்டி வந்தேன். போதுமா, இப்பவாச்சும் சொல்லுடி, எனக்கு உன்னை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும், ஆனா உங்கவீட்டுல என்னை வேணாம் சொன்னதும் எனக்கு பயங்கர கோபம். எனக்கு உன்மேலே தான் கோபம் வந்துச்சு. நீ தான் அதுக்கு காரணம் நினைச்சேன்” என்றான்.

 

“இல்லைங்க உங்க வீட்டுல இருந்து வந்து என்னை பொண்ணு கேட்டது எனக்கு தெரியாது, ஒரு தடவை கீர்த்தி வீட்டுக்கு வந்து இருக்கும் போது என்கிட்ட சண்டைக்கு வந்தா, எங்கண்ணனை எப்படி நீ வேணாம்ன்னு சொல்லுவ அப்படி இப்படின்னு பேசுனா. அப்போ தான் எனக்கு தெரிஞ்சுது, ஆனா அப்போலாம் எனக்கு உங்க மேல காதல் எதுவும் இல்லை. ஆனா அந்த விஷயம் கேள்வி பட்டு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்புறம் நான் ட்ரைனிங்க்கு ஊருக்கு போயிட்டேன். அன்னைக்கு ஆதிரா வீட்டுக்கு நான் வந்தது கூட உங்களையும் பார்க்கலாம்ன்னு தான், அப்போகூட நான் உணரலை நான் உங்களை விரும்பறேன்னு”

 

“இந்த விஷயத்தை ஆதிராகிட்ட சொன்னப்ப அவ தான் என்னை எனக்கு புரிய வைச்சா, யோசிச்சு பார்த்தா எனக்கும் உங்களை மாதிரி சின்ன வயசுல இருந்தே உங்களை பிடிக்குங்கற உண்மை எனக்கு உறைச்சுது. நேத்து ஏன் நீங்க என்கிட்ட அப்படி சண்டை போட்டீங்க, நான் ரொம்ப பயந்துட்டேன், என்னை உங்களுக்கு பிடிக்கலையோன்னு நினைச்சேன்” என்றாள் அவள். “லூசு அண்ணி சொன்னது உனக்கு புரியலையா, உன் மேல விருப்பமும் உரிமையும் இல்லாமலா நான் உன்னை கோவிச்சு இருப்பேன். யார் மேல உரிமை அதிகம் இருக்கோ அவங்க மேல தானே கோவிச்சுக்க முடியும்” என்றான் அவன்.

 

“நீங்க எங்க அப்பா அம்மா மேல” என்றவளை “கோவமில்லை எனக்கு அவங்க மேல எந்த வருத்தமும் கோவமும் இல்லை போதுமா” என்றான் அவன். ‘எப்படி’ என்பது போல் அவள் அவனை பார்க்க “அண்ணி சொன்னாங்க, பொண்ணை பெத்தவங்க அவங்க பொண்ணு போற இடத்துல நல்லா இருக்கணும், அவ புருஷன் அவளை கண்ணு கலங்காம பார்த்துக்கணும் அவனுக்கு நல்ல சம்பாத்தியம் இதெல்லாம் முக்கியம்னு நினைப்பாங்கன்னு, நாளைக்கு ஆதர்ஷா மாப்பிள்ளை பார்க்கும் போது நாமும் இதை தானே செய்வோம்னு சொன்னாங்க. அது உண்மை தானே” என்றான் அவன்.

 

நேத்ராவுக்கு அவள் தோழியை நினைத்து பெருமையாக இருந்தது, எப்படி ஒரு பிரச்சனையை சுலபமாக தீர்த்து வைத்துவிட்டாள் என்று பெருமிதம் கொண்டாள். “உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே, நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்டி, இப்பவாச்சும் சொல்லுடி என்னை பிடிச்சுருக்குன்னு” என்று ஏக்கமாக அவளைப் பார்த்தான். அவள் வெட்கமாக தலை குனிய “ப்ளீஸ்” என்றான் அவன்.

 

“நெட்டை கொக்கு உன்னை பிடிக்காமலா உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். போடா உனக்கு எல்லாம் வாயை விட்டு சொன்னாதான் புரியுமா” என்றாள் சத்தமாக. “அடிப்பாவி” உன்னை “அய்யோ உன்னை எதுவும் செய்ய மாட்டேன் சொல்லி இருக்கனே, நான் என்ன செய்வேன்” என்றான் பாவமாக.

 

அவனை பார்த்து சிரித்தவள், “நான் தான் எதுவுமே சொல்லலையே” என்றாள் எங்கோ பார்த்தவாறு, “ஹேய் அப்போ உன்னை” என்றவன் அவளை இழுத்து அணைத்து அவள் இதழுடன் அவன் இதழை பொருத்தினான். அவன் நெஞ்சோடு அவளை இறுக்கி அணைத்தான். அவளை கொண்டு அவள் வீட்டில் விட்டுவர அவள் அன்னை அவர்களை வித்தியாசமாக பார்த்தார், ஆனால் எதுவும் சொல்லவில்லை.

 

“வாங்க உள்ள வந்து காபி சாப்பிட்டு போங்க” என்றார் அவர். “இல்லை அத்தை நான் இன்னொரு நாள் வர்றேன், நேத்ரா வண்டில காத்து இறங்கி போச்சு, அண்ணி தான் கூட்டி வந்து விட சொன்னாங்க, அதான் நான் வந்தேன்” என்று தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு கிளம்பினான் அவன். சந்திராவுக்கு ‘நல்ல பிள்ளையாக தெரிகிறாரே, வேலையை காரணம் காட்டி நாம் தான் தேவையில்லாமல் பேசிவிட்டோமோ நாம் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ’ என்று யோசித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

 

____________________

 

அண்ணா நகர் அஞ்சப்பர் உணவகம்

 

“என்னடா இந்த வாரமாச்சும் நீ உன் மனைவி குழந்தைகளை கூட்டிட்டு வருவேன்னு பார்த்தா, ஏமாத்திட்டியே டா” என்றான் கதிர்.  “டேய் அதான் வந்ததுல இருந்து அதே தான் சொல்லிட்டு இருக்கனே, சாரிடா, விடுங்க இப்போ நாம சாப்பிடலாமா வேணாமா, டேய் ராகுல் நீ என்ன சொல்லற” என்று அவனை பற்றி அறிந்து அவனை இழுத்தான் அவன். “டேய் விடுங்கடா அவன் தான் அடுத்த வாரம் கூட்டிட்டு வர்றேன் சொல்றான்ல, நாம இங்க எதுக்கு வந்தோம் சாப்பிட தானே, வாங்கடா, சாப்பிடலாம் முதல்ல” என்றான் அவன். பேச்சு திசை மாறியது.

 

அவர்களுக்கு தேவையானதை சொல்லிவிட்டு காத்திருந்தனர். “டேய் ராஜீவ் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு நான் ஆராவை ஆபீஸ் கூட்டிட்டு வர்றேன்” என்றான் அவன். “ஆராவா, அது யாருடா” என்றான் ராஜீவ். “ஹேய் என்னடா விளையாடுறியா, ஆரா என்னோட மனைவிடா” என்றான் அவன். “ஏன் ஆதி அவங்க பேரு ஆதிரான்னு தானே சொன்னா” என்றாள் ராஜீவின் மனைவி ராதிகா. “ஆதிரான்னு கூப்பிட கஷ்டமா இருந்துச்சு அதான் ஆரான்னு சுருக்கி கூப்பிடுறேன்” என்றான் அவன்.

 

அவனையே இமைக்காமல் பார்த்தனர், அவன் நண்பர்கள், அவனிடம் இருந்து மேலும் வார்த்தைகளை வாங்க, “ஆதி நாளைக்கு அவங்க எதுக்கு நம்ம ஆபீஸ்கு வர்றாங்க” என்றான் ராஜீவ். (ராஜீவ் ஆதியின் அலுவலகத்தில் பொது மேலாளராக பணிபுரிகிறான்). “நான் ஆதவன் பற்றி சொன்னேன்ல, நம்ம ஆபீஸ்காக அவன் விளம்பரம் எடுக்கறது பத்தி நேத்து பேசினோம்ல, அதுக்கு ஆரா தான் அவனுக்கு உதவி பண்றா, அவ பேஷன் டிசைனிங் தான் முடிச்சு இருக்கா, ஆதவனுக்கு அவ தான் உதவி பண்றதா சொல்லி இருக்கா, அதுக்கு தேவையான எல்லா திட்டமும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தயாரிச்சுட்டாங்க, நாளைக்கு அவங்களை வரச்சொல்லி இருக்கேன்” என்றான் அவன்.

 

“பரவாயில்லையே உன் மனைவி ரொம்பவும் நல்ல மாதிரியா தான் தெரியறாங்க” என்றான் ராஜீவ். “ஹேய் அவ ஹரிணியைவிட ரொம்ப பொறுமையானவ எல்லாரையும் ஒத்து போகற குணம் அவளுக்கு” என்று மனதிலிருந்ததை வெளியில் கொட்டினான். ஆதிராவை பற்றி பேசும் போது மின்னிய அவன் கண்களை அவர்கள் கண்டு கொண்டனர். அனைவரும் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினர்.

____________________

 

நேத்ரா வீட்டிற்கு வந்ததும் தோழிக்கு போன் செய்து நன்றி கூறினாள். “ஹேய் ஆதிரா, ரொம்ப ரொம்ப நன்றிடி. எப்படி அவர் என்னை புரிஞ்சுக்குவார்ன்னு நான் ரொம்பவும் பயந்துட்டு இருந்தேன். எப்படியோ அவர் என்னை புரிஞ்சுகிட்டார், அவரோட தொழில் அவர் நினைச்ச மாதிரி வந்ததும் எங்க கல்யாணம்னு சொல்லி இருக்கார்டி. ஒரு ஆறு மாசம் டைம் கேட்டு இருக்கார்” என்று மகிழ்ச்சியாக உரைத்தவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவள் போனை வைக்க ஆதித்தியன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.

 

“வாங்க, உங்களை தான் நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள் அவள். “என்னாச்சு ஆரா, என்னை எதுக்கு தேடின, வாசல்லயே காத்திட்டு இருக்க அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்” என்றான் அவன் ஆவலுடன் அவளை நெருங்கியவாறே. ‘என்னாச்சு இவருக்கு இவ்வளவு பக்கமா வர்றாரு’ என்று அவள் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. “இல்லை எங்க ப்ராஜெக்ட் உங்ககிட்ட காட்டலாம்னு நினைச்சேன், அதுக்கு தான்” என்று அவள் பேசிக் கொண்டே உள்ளே சென்றாள்.

 

‘எதுக்கு இப்படி பயப்படுறா’ என்று நினைத்தவாறே அவனும் உள்ளே சென்றான். “ஆரா என்னோட தோழமைகள் எல்லாம் உன்னை கண்டிப்பா பார்க்கணுமாம், அடுத்த வாரம் நீயும் நம்ம பசங்களும் கண்டிப்பா என்னோட வரணும்” என்றான். “இம்… சரிங்க போகலாம்” என்றாள் அவள்.

 

மறுநாள் காலையில் அவள் குளித்துவிட்டு தயாராகி வந்து அவனை எழுப்பினாள். “என்னங்க எழுந்துருங்க, இன்னைக்கு ஆபீஸ்க்கு நானும் வரணும் சொன்னீங்க, நாங்க தயாராகிட்டோம். நீங்களும் எழுந்து குளிச்சு கிளம்பி வாங்க. போகலாம்” என்றாள். “என்ன ஆரா சொல்ற” என்று எழுந்தவன், “நாங்க தயாராகிட்டோமா, நீயும் நானும் தானே போகப் போறோம், ஆதவன் தனியா வந்துடுவான்” என்றான் அவன்

 

“என்னங்க குழந்தைங்க அவங்களை எப்படி விட்டுட்டு போறது, அத்தைகிட்ட விட்டுட்டு போகலாமா” என்றாள் அவள். “ஆமாம் அவங்களைக் கொண்டு போய் அங்க விட்டுட்டு நாம ஆபீஸ்க்கு போகலாம்” என்றான் அவன். “சரிங்க” என்று சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு காலை டிபன் கொடுத்தாள். “ஆரா நான் வெளியே போய் வண்டி எடுக்கறேன், நீ கவினையும் கவினியையும் கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டு வண்டி எடுக்கச் சென்றான்.

 

அவள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வர அவன் பைக்குடன் நின்றிருந்தான். “என்னங்க நாம இதுலயா போகப் போறோம், இடம் பத்துமாங்க” என்றாள். “அதெல்லாம் பத்தும், நீ கவினை கொடு” என்று அவனை தூக்கி அவனுக்கு முன்னிருந்த பெட்ரோல் டாங்கில் உட்கார வைத்தான். கவினியை இடையில உட்கார வைச்சுக்கோ. பயமா இருந்தா என்னை பிடிச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான்.

 

வழியில் ஓரிரு இடத்தில் அவன் வேகமெடுக்க அவள் வேறு வழி இல்லாது அவன் தோளை பற்றிக்கொண்டு சென்றாள். குழந்தைகளை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அவன் அன்னையிடம் விடைபெற அவர் ஒரு நிறைவுடன் அவர்களை அனுப்பிவைத்தார். “அம்மா அவனை சீக்கிரமா வரச் சொல்லுங்க” என்று போகும் தருவாயில் அன்னையிடம் உரைத்துவிட்டு சென்றான் அவன்.

 

 

“அம்மா அண்ணா எங்கம்மா, நான் அவரோட கார்ல போய்டலாம் நினைச்சேன்” என்று கீழே வந்தான் ஆதவன். “உங்க அண்ணன் இன்னைக்கு கார்ல போகலை, பைக்கில் போகிறான்” என்றார் லட்சுமி. “என்னம்மா சொல்லறீங்க அண்ணா பைக்கில போறாங்களா” என்று வாயை பிளந்தான் ஆதவன்.

 

அவர்களுக்கு தெரியும் ஆதித்தியன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் மட்டுமே அந்த வண்டியை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வருவான் என்று. அவனுக்கு பைக் ஓட்டுவது அவ்வளவு பிடிக்கும் என்று அறிந்த அந்த அன்னையும் அவன் தம்பியும் சிரித்துக் கொண்டனர்.

 

“என்னமா லட்சுமி, ஆதி எங்க. அவன் என்னை கூப்பிடாமேலே போய்ட்டான். இங்க வந்தா அவன் தானே என்னை கூட்டிட்டு போவான்” என்று நிதானமாக உள்ளேயிருந்து வரவேற்பறைக்கு வந்தார் அருணாசலம். தாயும் மகனும் ஒருவரையொருவர் பார்த்து சிரிப்பதை கண்டு, “என்ன சிரிப்பு ரெண்டு பேருக்கும் அதை என்கிட்டே சொல்லிட்டு சிரிக்கக் கூடாதா” என்றார் அவர்.

 

உங்க புள்ளை இன்னைக்கு அவன் பொண்டாட்டியை அவன் பைக்கில் கூட்டிட்டு போறான்” என்று லட்சுமி சொல்ல, “என்னது பைக்லயா எதுக்கு, ஏன்” என்று கேள்வி கேட்டவரை, லட்சுமி ஒரு பார்வை பார்க்க ஆதவன் “அப்பா நான் உங்களை கூட்டிட்டு போறேன், என்னோட வாங்க” என்றான்.

 

இதுவரை மூத்த மகனுடன் மட்டுமே அலுவலகம் சென்றிருந்தவர், முதன் முறையாக இளைய மகனுடன் அலுவலகம் சென்றார். அவருக்கு ஒரு நம்பிக்கை வந்திருந்தது, இளைய மகனும் தம் தொழிலை தனக்கு பின் பார்த்துக் கொள்வான் என்று.

 

அலுவலகத்துக்கு பைக்கில் வந்து இறங்கியவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். ராஜீவ் வாசலுக்கே வந்துவிட்டான். “ஆதி” என்று அவன் அழைக்க, அதீத உற்சாகத்தில் இருந்தவன் “ஹாய்டா ராஜீவ்” என்றவாறே, “வா ஆரா, முதல் முறையா நம்ம ஆபீஸ்க்கு வர்ற, வலது கால் எடுத்து வைச்சு வா” என்றான் அவன்.

 

ஆதிராவுக்கு மயக்கம் வராத குறை அவனின் இந்த செய்கையில் அவள் மொத்தமாக திகைத்துப் போனாள். ஒரு நேரம் சுட்டெரிப்பவன், மறுகணம் குளிர்நிலவாக அன்பை பொழிவதை கண்டு அவளால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவன் மனம் மாறி இருக்கிறது என்பதை அவள் உள் மனம் அவளுக்கு உணர்த்தியது, அவன் அவளை முழுதாக புரிந்து, அவள் மனம் அவனையே நினைப்பதை அவன் புரிந்து அவளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவள் விரும்பினாள். “வாடா என்ன ஒரே ஆச்சரியம், நீ பல வருஷம் கழிச்சு பைக்கில வர்ற, இது தான் தங்கச்சியா” என்றான் அவன் நிறைவாக. இம் என்பதாய் அவன் தலையசைக்க “வணக்கம் அண்ணா, எப்படி இருக்கீங்க, வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்றாள் அவள்.

“என்னடா எங்களை பற்றி எல்லாம் முன்னாடியே சொல்லி தான் கூட்டி வந்து இருக்கியா” என்றான் ராஜீவ். “நான் எதுவும் சொல்லலை இவ எப்போமே இப்படி தான் யார் வீட்டுக்கு வந்தாலும் வீட்டில இருக்க எல்லாரையும் விசாரிப்பா. நான் தான் சொல்லி இருக்கேன்ல இது தான் இவளோட குணம்” என்றவனின் கண்களில் ஆழமான காதல் ஒளிந்திருப்பதை ராஜீவ் கண்டுகொண்டான்.

 

இதுவரை அவன் இப்படி ஒரு ஆதியை பார்த்ததில்லை. அவன் மனதை ஆதிரா முழுவதுமாக ஆக்கிரமித்தது புரிந்தது, அவன் இதுவரை ஹரிணியை பற்றி என்றுமே குறைவாகவும் பேசியதில்லை, நிறைவாகவும் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று அவன் ஹரிணியுடன் ஒப்பிட்டு ஆதிராவை உயர்த்தி பேசிய போதே ராஜீவ்க்கு புரிந்தது, அவன் கண்களில் காதல் நிரம்பி வழிந்தது.

 

ஆதிரா பார்க்காத வண்ணம் அவன் அவளை பார்ப்பதை ராஜீவ் கண்டுகொண்டான். “ஏன் ஆதி நீ இதுவரை ஹரிணியை இப்படி கூட்டி வந்ததே இல்லைல” என்றான் ஏதோ ஒரு எண்ணத்தில், சட்டென்று அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைவதை ராஜீவ் கண்டுகொண்டான்.

 

இவன் இன்னமும் ஹரிணியை பற்றிய குழப்பிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. “ராஜீவ் நீ இவளுக்கு ஆபீஸ் சுத்தி காமிச்சுடு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருணாசலமும் ஆதவனும் உள்ளே நுழைந்தனர்.“என்னங்க மாமா” என்றவளை திரும்பிப் பார்த்தான், “ஆதி மருமகளை முதல் முறையா ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்து இருக்க, சுத்தி காட்டுப்பா” என்றார் அவர். “சரிப்பா” என்றான் அவன்.

 

நீ தந்த முத்தமெனக்கு

உன் மொத்தமும்

சொன்னது எனக்கு…

 

என் மேல் மயக்கமுனக்கு

ஆனாலும் அதை சொல்ல

தயக்கமுனக்கு…

 

உன் காதல் புரிந்தாலும்

அதை உன் வாய் மொழியால்

கேட்க விருப்பமெனக்கு…

 

காதல் மொழி

கண்கள் பேசினாலும்

உன் இதயம் திறந்து

நீ பேசும் வரம்

எப்போதெனக்கு…

 

அத்தியாயம் –12

 

 

“இல்லைப்பா ஆதவன் வந்தாச்சுல நாம மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர பிரிவு மேனேஜர் கூப்பிட்டு மீட்டிங் ஆரம்பிச்சுடலாம்ப்பா” என்றான் ஆதித்தியன். “அதுவும் சரிதான்பா” என்றவர் அதற்கு தயார் செய்யுமாறு சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

 

ஆதியும் அதற்கு மேல் அந்த இடத்தில் நில்லாமல் ராஜீவ்விடம் அதற்கு தயார் செய்யுமாறு சொல்லிவிட்டு சென்றான். தனித்து விடப்பட்ட ஆதிராவிடம் ஆதவன் மேலும் சில விபரங்கள் உரைக்க, அதற்குள் ராஜீவ் மீட்டிங்கிற்கு தயார் செய்துவிட்டு வந்து அவர்களை அழைத்தான்.

 

“தங்கச்சி வாங்க, ஆதவா போகலாமா” என்று ராஜீவ் வந்து அழைக்க அவர்கள் அந்த மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தனர். ஆதிராவுக்கு அந்த ஏசியிலும் வியர்த்தது. இது வரை அவள் இது போல் எதுவும் பெரிய இடத்தில் எந்த வேலையும் செய்ததில்லை. தன்னிடம் வந்து கேட்போர்க்கு மட்டுமே தன்னால் முடிந்த வேலையை செய்து கொடுத்திருக்கிறாள்.

 

ஆதவனுக்கு அவள் தைரியம் அளித்திருந்தாலும் அவளுக்குள் உள்ளுர ஒரு உதறல் இருந்தது. இதனால் தனக்கு எந்த பயனும் இல்லை என்றாலும், இதில் சம்மந்தப்பட்டிருப்பது ஆதவன் மற்றும் நேத்ராவின் வாழ்க்கை என்பது கண் முன் வர தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

 

எந்த அறிமுகமும் இல்லாமல் நேரடியாக அவர்களை பேசச் சொன்னார்கள். ஆதிராவும் அதை பற்றி விளக்கி ஆதவனும் அவளும் செய்திருந்த திட்டத்தை அவர்களுக்கு விளக்கினாள். விழியை இப்படி அப்படி அகலவிடாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மிக அழகாக திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

இதை ஒரு ஜோடி கண்கள் நோட்டமிட்டுக் கொண்டது. அவள் சார்ப்பில் அவள் என்ன என்ன விளக்கம் கொடுக்கமுடியுமோ அதை அவள் எடுத்துக் கூற ஆதவன் எழுந்து நின்று அவனுடைய பங்கு இதில் என்ன எப்படி செய்ய வேண்டும் என்று அவனும் விளக்கினான்.

 

விளம்பரத்துறை மேலாளர் அவர்களை வித விதமாக கேள்வி கேட்டு குடைந்தெடுத்தார். ஆதியும் அருணாசலமும் வெறுமென அதை வேடிக்கை பார்த்தனர். கடைசியாக ஆதியும் அவர்களை கேள்விகள் கேட்டு எப்படி என்ன என்று குடைந்தெடுக்க இருவரும் நிதானமாக அதற்கு பதிலளித்தனர்.

 

அவர்களை வெளியில் அமருமாரு சொல்லிவிட்டு உள்ளே மற்றவர்கள் பேச, “என்ன ஆதித்தியா சார் அவங்களை ரொம்ப கேள்வி கேட்டுட்டீங்க, பாவம் நீங்க எனக்கு மேல அவங்களை குடைஞ்சு எடுத்துட்டீங்க” என்றார் விளம்பரத்துறை மேலாளர் ரங்கநாதன்.

“நான் தப்பா எதுவும் கேட்கலை ரங்கன் சார், அவங்க எப்படி செய்யப்போறாங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா. அப்புறம் அவங்க பாதியில எல்லா வேலையும் விட்டுட்டு போய்ட்டா எப்படி சார். அதான் அவங்களை ரொம்ப கேள்வி கேட்டேன். என்னப்பா நான் கேட்டதும் எதுவும் தப்பா” என்றான்.

 

“இல்லை ஆதி நீ கேட்டதுல எனக்கு எந்த தப்பும் தெரியலை, அப்புறம் ரங்கநாதன் உங்க அபிப்பிராயம் என்ன. அவங்களுக்கு இந்த வேலையை கொடுக்கலாமா வேணாமா” என்றார் அருணாசலம்.

 

“உண்மை சொல்லட்டுமா சார், நீங்க இவங்களை நம்பி இந்த வேலையை கொடுக்கலாம். அந்த மேடம் கண்ணுல ஒரு ஒளி தெரியுது சார் சாதிக்கணும்னு நினைக்கிறாங்க, அதுவுமில்லாம நம்மோட தயாரிப்புகள் பெண்கள் சம்மந்தப்பட்டது, அவர்களை அன்றாட சமையலுக்கு தேவையான எண்ணெய், மசாலா போன்ற தயாரிப்புகள். அதுனால அவங்க அதுக்கு ஏத்த மாதிரி தான் அவங்களோட திட்டம் எல்லாம் தயார் செஞ்சு இருக்காங்க. ஆதவன் சார்கிட்டயும் உழைக்கணும் வெறி இருக்கு, இவங்க கண்டிப்பா நமக்கு நாம நினைச்சதுவிட நல்லா செய்து தருவாங்கன்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு” என்றார் அவர்.

 

“ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு ரங்கநாதன்” என்றார் அருணாசலம். “என்ன சார் நீங்க பெருமைப்படற அளவுக்கு நான் என்ன சொன்னேன் சார்” என்றார் ரங்கநாதன் புரியாமல். அதற்குள் ராஜீவ் “ரங்கன் சார் நீங்க பாராட்டின ரெண்டு பேருமே சார்க்கு ரொம்ப நெருங்கிய உறவுகள். ஆதிரா மேடம் சாரோட மருமகள் அதாவது ஆதியோட மனைவி. ஆதவன் நம்ம சாரோட ரெண்டாவது மகன். அப்படினா சார்க்கு சந்தோசமா தானே இருக்கும்” என்றான் அவன்.

 

“சார் என்ன சார் இது அவங்களை பத்தி எதுவுமே சொல்லாம, சாரி சார் நான் அவங்களை இங்கே பார்த்ததில்லை அதுனால அவங்களை எனக்கு தெரியாது. நான் ரொம்பவும் கேள்வி கேட்டுட்டேன்” என்று வருத்தமானார் அவர்.

 

“நீங்க சொல்றது சரி தான் சார், ஆதவன் நம்ம ஆபீஸ்க்கு வந்ததில்லை, ஆதிராவும் இப்போ தான் முதல் முறையா வந்து இருக்கா. நீங்க தப்புன்னு நினைக்கற அளவு எதுவும் நடக்கலை. ரங்கன் சார் நீங்க இப்படி எதுவும் செய்துட கூடாதுன்னு தான் நான் உங்ககிட்ட எதுவும் சொல்ல வேணாம் சொல்லி இருந்தேன். நீங்க அவங்க திறமை பார்த்து தான் இந்த வேலை குடுக்கணும் நினைச்சேன். அவங்க எங்களுக்கு உறவுங்கறதுனால இந்த வேலை கொடுத்தா அது தப்பாகிடும். அது அவங்களோட வளர்ச்சி நம்மோட வளர்ச்சி ரெண்டையும் ஒருவிதத்தில் அது பாதிக்கலாம். இப்போ அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் இதை எப்படி செய்யணும்னு அவங்க நிச்சயமா அதை நல்லா பண்ணுவாங்க” என்றான் ஆதித்தியன்.

 

ராஜீவிடம் சொல்லி அவர்களை உள்ளே அழைத்து வரச் செய்தான், அவர்களிடம் விஷயத்தை கூற இருவருமே முகம் மலர்ந்தனர். “அண்ணி எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் அண்ணி, எப்படி முன்னேறலாம்ன்னு யோசிச்சேன், அது எங்க இருந்து தொடங்கனும்னு நீங்க தான் எனக்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுத்திருக்கீங்க அண்ணி. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில ரெண்டு விஷயம் நல்லா அமையணும், ஒண்ணு அவனோட வேலை இன்னொன்னு அவனை கட்டிக்க போறவங்க. இந்த ரெண்டு எனக்கு நிலையா கிடைச்சதுக்கு நீங்க தான் காரணம்” என்று அவன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான் அவன்.

 

“என்ன அண்ணா அப்படி பார்க்கறீங்க நான் சொல்றது நிஜம் தான், நேத்ராவை எனக்கு சின்ன வயசில இருந்தே பிடிக்கும், எனக்காக நம்ம வீட்டில அவளை பெண் கேட்க போய் அவங்க என் வேலையை காரணம் காட்டி வேணாம்ன்னு சொன்னதுல எனக்கு பெரிய வெறியே வந்துச்சு, நாம கண்டிப்பா சாதிக்கணும்னு நினைச்சேன்.

 

“அந்த வெறி எனக்குள்ள நேத்ரா மேல அளவு கடந்த கோபத்தை கொடுத்துச்சு, என்னை மாதிரியே அவளுக்கும் என்னை பிடிச்சுருக்கும் நினைச்சேன், அவங்க வீட்டில என்னை பத்தி அப்படி சொன்னதும் அவ எதுவுமே சொல்லலைன்னு ரொம்பவே கோபமா இருந்தேன். ஆனா அண்ணி தான் எனக்கு புரியவைச்சாங்க, அதுவும் இல்லாம நேத்ராவும் என்னை விரும்பற. யோசிச்சு பார்த்தா இன்னொன்னும் எனக்கு இப்போ தான் புரியுது, அண்ணி என்னை பத்தி யோசிச்சு தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க செய்து இருக்காங்கன்னு தோணுது. அப்படி தானே அண்ணி” என்றான் அவன்.

 

அவன் மிகவும் புத்திசாலி என்பது அவளுக்கு புரிந்தது நேத்ராவிற்காக அவள் ஆதவனை வேலை விஷயமாக தூண்டிவிட்டதை அவன் அறிந்து கொண்டானே என்று வியந்தவள், “அப்படில்லாம் இல்ல தம்பி, உங்களுக்கு திறமை இருக்கு நான் அதை தூண்டி மட்டும் தான் விட்டேன். அப்புறம் நேத்ராவும் உங்களை விரும்பி இருக்கா, யார் தடுத்தாலும் நீங்க ஒன்னா சேர்ந்து இருப்பீங்க தம்பி” என்றாள் அவள்.

 

ஆதித்தியன் அவளின் இந்த பன்முகத்தில் திகைத்து போனான். தன் குடும்பத்திற்காக எந்த அளவுக்கு அவள் யோசித்திருக்கிறாள் என்பது புரிய அவள் மேல் மலையளவு அன்பு பெருகியது. ஆதவனை இருக்கச் செய்துவிட்டு ஒப்பந்தம் தயார் செய்து கையெழுத்திட சொல்லிவிட்டு அவன் ஆதிராவையும் கூட்டிக் கொண்டு அவன் தந்தையை நாடிச் சென்றான்.

 

“அப்பா நான் ஆதிராவை வீட்டில விட்டுட்டு வந்துடுறேன்” என்றான் அவன். மகனின் மாற்றத்தில் எதைக் கண்டாரோ எதுவும் சொல்லாமல் “சரி” என்றார் அவர். “என்னடா கிளம்பியாச்சா” என்று வந்து நின்றான் ராஜீவ். “ஆமாடா நான் தானே கூட்டிட்டு வந்தேன், அதான் கொண்டு போய் வீட்டுல விட்டு வரலாம்னு” என்று இழுத்தான் அவன். ராஜீவிற்கு இதற்கு முன் அவன் ஹரிணியை தனியே வீட்டுக்கு கிளம்பி செல்ல சொன்ன நினைவு வந்தது. தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன் “அதெல்லாம் இருக்கட்டும் தங்கச்சி இந்த வாரம் நீயும் எங்ககூட வர்ற, நாங்க ஆதிகிட்ட பேசியாச்சு” என்றான் ராஜீவ்.

 

“அண்ணா ஒண்ணு செய்வோமா, நீங்க எல்லாரும் ஒண்ணா போங்க, நான் உங்க எல்லாருக்கும் சமைச்சு வைக்கறேன். நீங்க வெளிய தானே போய் சாப்பிடுறீங்க அது எதுக்கு, இந்த வாரம் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க” என்றாள் அவள்.

 

“என்னடா இது நாங்க அவங்களை கூப்பிட்டா அவங்க எங்களை கூப்பிடுறாங்க” என்றான் ராஜீவ். “அதான் ஆரா சொல்லிட்டா இல்லை எல்லாரும் ஒழுங்கு மரியாதையா வந்து சேருங்க, அந்த சாப்பாட்டு ராமன்கிட்ட முக்கியமா சொல்லிடுடா” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவர்கள் விடைபெற்றனர்.

 

பைக்கில் ஏறி அவனருகில் அவள் அமர்ந்ததும் அவன் பைக்கை செலுத்தினான். வழியில் ஒரு பள்ளத்தில் அவன் தெரியாமல் வண்டியை விட ஆதிரா கெட்டியாக அவன் இடுப்பை வளைத்துக் கொண்டாள் பயத்தில். அவனுக்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரு உணர்வு தோன்ற இன்பமான அவஸ்தையாக உணர்ந்தான் அவன்.

 

வேண்டுமென்றே அடுத்து ஒரு பள்ளத்தில் அவன் வண்டியை விட அவள் அணைப்பு மேலும் இறுகியது, “கொஞ்சம் மெதுவா போங்களேன் எனக்கு பயமா இருக்கு” என்றாள். லேசாக சிரித்துவிட்டு தலையை சிலுப்பியவன் அவளை வீட்டில் இறக்கிவிட்டு மதிய சாப்பாடு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

 

மாலை வந்து அவர்களை அழைத்து செல்வதாகக் கூறி கிளம்பிச் சென்றவனின் அருகில் தயங்கியவாறே வந்தாள். “தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க வண்டியை கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க. நாளைல இருந்து நீங்க கார்லயே போங்க. எனக்கு பயமா இருக்கு” என்றவளின் கண்களில் தெரிந்த கலக்கத்தில், சரி என்று தலையசைத்தான் அவன்.

 

____________________

 

பாபநாசம் பார்வதி இல்லம்

 

“அம்மா நான் கோவிலுக்கு போய்ட்டு வர்றேன்” என்று கிளம்பினாள் சின்ன காந்திமதி. “என்னலே நீ மட்டும் தனியா கிளம்புற, இரு நானும் வர்றேன்” என்று கிளம்ப அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. தெய்வமாக அவள் தந்தை எதிரில் வந்தார், “பார்வதி நாம ரெண்டு பேரும் போய் அத்தை பார்த்துட்டு வந்துடுவோம், இப்போ தான் கடைல சொல்லிடு வந்து இருக்கேன். போவோமா” என்றார் அவர்.

“சரிங்க போகலாம்” என்றவர் காந்திமதியை எப்படி தனியாக கோவிலுக்கு அனுப்புவது என்று யோசிக்க, கல்லூரிவிட்டு வந்த சின்ன மகள் எதிரில் வர அவளை அழைத்து “ஏலே கீர்த்தி அக்கா கோவிலுக்கு கிளம்புறா, தனியா போக வேணாம், நீயும் கூட போனா ஒருத்தருக்கொருத்தர் துணைகாச்சு. சரியா போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்றுவிட்டு அவர்கள் கிளம்பினர்.

 

இவ கண்ணுல மண்ணைத் தூவிட்டு நாம எப்படி என்று காந்திமதி வழியெங்கும் யோசித்துக் கொண்டே வர அவர்கள் பாபநாசம் சிவன் கோவிலை அடைந்தனர். கோவிலுக்கு சென்று பாபநாசனாதரையும் உலகம்மையையும் வணங்கிவிட்டு வெளியில் வந்தனர்.

 

“என்னட்டி பேசாம வர்ற, என்னாச்சு உனக்கு” என்றார் கீர்த்தி. “நீ பேசாம உன்னை வேலையை பாருட்டி” என்று சீறினாள் அவள் பதிலுக்கு, ‘என்னாச்சு இவளுக்கு இன்னைக்கு மூஞ்சி தூக்கி வைச்சுட்டு இருக்கா’ என்று கீர்த்தி யோசித்தாள். “கீர்த்தி நாம அந்த படித்துறையில போய் உட்காருவோமா” என்றாள் அவள்.

 

“சரி வா” என்று அவளும் சென்று அமர்ந்தாள். படித்துறை மண்டபத்தில் அமர்ந்து அங்கிருந்த தாமிரபரணி தீர்த்தத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்த கீர்த்தியின் கண்களில் சின்ன காந்திமதி யாருக்கோ சைகை காட்டுவது புலப்படவில்லை.

 

தாமிரபரணி தண்ணீரில் தாமிரம் அதிகமாக கலந்து இருப்பதால் அதை தாமிரபரணி என்று அழைப்பர், அவளுக்கு எப்போதுமே இப்படி படித்துறையில் அமர்ந்து அதன் அழகை ரசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று அதனால் தான் சின்ன காந்திமதி கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்தாள். எதையோ யோசித்துக் கொண்டே அவள் திரும்ப தூணிற்கு பின் யாரோ மறைவது போல் இருந்தது, சின்ன காந்திமதியின் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

 

“அக்கா நான் கொஞ்சம் அந்த கடை வரைக்கும் போய்ட்டு வர்றேன். ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்றாள் அவள். காந்திமதியோ எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை சரியென அவளுக்கு தலையாட்டினாள். அவள் சென்றதும் தூணின் பின்னிருந்து வந்தான் சரவணன்.

 

“என்ன மதி எதுக்கு என்னை அவசரமா கோவிலுக்கு வரச்சொன்ன” என்றான். “என்ன அத்தான் நீங்க எங்க வீட்டுல என்ன நடந்துட்டு இருக்கு தெரியுமா, எங்க சந்திரா அத்தை இன்னைக்கு காலையில போன் பண்ணாங்க, அவங்க பையன் கார்த்திக்கு என்னை பெண் கேட்டாங்க.

 

“அவங்க வந்து கேட்பாங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை, எங்க அத்தை கொஞ்சம் வசதியானவங்க, அவங்களே தானா வந்து பெண் கேட்டதும் எங்க வீட்டில யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க, எங்க ஆச்சிகிட்ட போய் இதை பத்தி பேசறதுக்கு தான் அவங்க போய் இருக்காங்க. இங்க பாருங்க அத்தான் எனக்கு உங்களை பிடிச்சுருக்கு இது உங்களுக்கும் தெரியும், நீங்க என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கன்னு தெரியாது நீங்க தான் உங்க வீட்டில எல்லாரையும் கூட்டிட்டு வந்து என்னை பெண் கேளுங்க.

 

“எனக்கு இன்னைக்கு காலையில இருந்து இருப்பே கொள்ளலை. என்னை புரிஞ்சுகோங்க அத்தான், நீங்க அரசாங்க உத்தியோகம் கிடைச்ச பிறகு தான் கல்யாணம் சொல்லிட்டு நாளை கடத்துனீங்க, அது எவ்வளோ பெரிய தப்பாகி போச்சு பாருங்க. எங்க வீட்டில எதாச்சும் ஒரு முடிவேடுக்கறதுகுள்ள நீங்க என்ன பண்ணனும் யோசிங்க அத்தான்” என்றாள் அவள்.

 

“சரி மதி நீ கவலைபடாதே நான் ஆதிகிட்ட பேசறேன். அவங்க சொன்னா உங்க வீட்டுல எதுவும் மறுப்பு சொல்லமாட்டாங்க நினைக்கிறன். நான் பார்த்துக்கறேன், நீ கவலையை விடு கொஞ்சம் சிரியேன். வந்ததுல இருந்து அழுது வடிஞ்சுட்டே இருக்க” என்றான்.

 

“போங்க அத்தான் நீங்க வேற நேரம் காலம் தெரியாம அந்த கீர்த்தி பிசாசு எங்கோ போறேன்னு சொல்லிச்சு, இப்ப வந்துரும் நீங்க கிளம்புங்க அத்தான். நான் வீட்டுக்கு போய் போன் போடுறேன்” என்றாள் அவள். “சரி” என்று அவளிடம் விடைபெற்று சென்றான்.

 

‘நான் உனக்கு பிசாசா இருக்குடி உனக்கு’ என்று கருவியவளாக தூணின் மறைவில் இருந்து வெளியில் வந்தாள் கீர்த்தி. வேண்டுமேன்றே கடைக்கு போவதாக காந்திமதியிடம் சொல்லிவிட்டு அவள் தூணின் மறைவில் வந்து நின்றதை பேச்சு சுவாரசியத்தில் இருவரும் கவனிக்கவில்லை. அவர்கள் பேசுவதை முழுதும் கேட்டவள் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

 

“அக்கா கிளம்பலாமா” என்றாள், இருவரும் நேராக கிளம்பிச்சென்று அவர்கள் வீட்டை அடைந்தனர். “ஏட்டி நீ வீட்டில இரு நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்” என்று கிளம்பினாள் கீர்த்தி. “ஹேய் எங்கட்டி கிளம்புற அம்மா வந்தா என்ன சொல்லறது. பொழுது சாஞ்சு தனியா போகக் கூடாதுன்னு தான் நம்ம ரெண்டு பேரா கோவிலுக்கு போகச் சொன்னாங்க. இப்போ நீ மட்டும் ஆம்பிள பிள்ளை கணக்கா வெளியா போறேன் சொல்ற. பேசாம வீட்டில இருடி” என்றாள். “பேசிட்டியா, நீ உன் வேலையை மட்டும் பாரு” என்று அவள் முதலில் அவளிடம் சொல்லியதை திருப்பி படித்துவிட்டு அவள் காந்திமதியின் இல்லம் நோக்கி நடையை போட்டாள்.

 

காந்திமதியின் இல்லம்

 

“வாங்க மருமகனே, வா பார்வதி” என்று அவர்களை வரவேற்று, “கோமு மாப்பிள்ளையும் பொண்ணும் வந்து இருக்காங்க, போய் சூடா கருப்பட்டி காபி போட்டு கொண்டுவா” என்று பணித்துவிட்டு அவர்களை அமரச் சொன்னார். “என்ன விஷேசம் ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கிய, என்னல பார்வதி எதாச்சும் முக்கியமான விசயமா சொல்லு” என்றார் அந்த பெரிய மனுஷி. “ஆமாம் அத்தை காலையில சந்திரா போன் போட்டுச்சு, நம்ம பெரியவளை அது புள்ளைக்கு தருவீங்களான்னு கேட்டுச்சு, நான் உடனே எதுவும் பதில் சொல்லலை அப்புறம் சொல்லறேன் சொல்லிட்டேன். நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தை” என்றார் உலகநாதன்.

 

“என்ன பார்வதி நீ என்னலே நினைக்கிற” என்றார் அவர் மகளின் முகம் நோக்கி, “பையன் நல்ல பையன் தான்மா, ஆனா” என்று இழுத்தவர், “என்ன” என்றார் காந்திமதி.

 

“இல்லைம்மா உங்களுக்கே தெரியும் நேத்ராவை நாம ஆதவனுக்கு கேட்டோம் அப்போ அவனுக்கு நல்ல வேலை இல்லை அது இதுன்னு சொல்லி மறுத்துட்டாங்க, நாம அவங்க அளவுக்கு வசதி இல்லை தான் ஆனா நம்ம புள்ளைக்கு சிறப்பா செய்வோம். நாளைக்கு எதுவும் ஒரு சொல் வந்துடக் கூடாதுன்னு மனசுக்கு படுது அவரும் அதை தான் நினைக்கிறார்.

 

“கூடபிறந்த தங்கை மகனுக்கு கொடுக்க விருப்பம் இருந்தாலும் அங்க வாழப் போறது நம்ம புள்ளையாச்சேன்னு யோசிக்கறார். இவளோ கிராமத்துல பிறந்து வளர்ந்தவ அந்த ஊரு இவளுக்கு தோதா வருமா அப்படி இப்படின்னு என்னன்னமோ யோசனை வந்துச்சு. எதுக்கு போட்டு குழப்பிக்கணும் அதான் உங்ககிட்ட பேசிட்டு உங்க அபிப்பிராயத்தையும் தெரிஞ்சுட்டு போகலாம்ன்னு நினைச்சோம்” என்றார் பார்வதி.

 

“நீ சொல்றது எல்லாம் சரி தான் பார்வதி, ஆனா சந்திராவை நீங்களா தேடித் போய் காந்திமதிக்கு கேக்கலையே. அவங்க தானே வர்றாங்க, சந்திராக்கு அண்ணன் பொண்ணை கட்டணும்னு விருப்பம் போல, எவ்வளவு தான் வசதி, வாய்ப்பு இருந்தாலும் பிறந்த வீட்டையோ அதை சேர்ந்தவங்கலையோ மறக்க முடியுமா. எனக்கு என்னமோ அவங்க கேக்கறதுக்கு சரின்னு சொல்லலாம்னு தான் படுது” என்றார் காந்திமதி. “வேணாம்” என்ற ஒற்றை சொல்லில் திரும்பி பார்த்தவர்கள் முன் கீர்த்தி வந்து நின்றாள்.

 

 

“நீ யாருட்டி பெரிய மனுஷி நாட்டமை பண்ண வந்துருக்க” என்று அவளை பார்வதி ஏசினார். “ஆச்சி நீங்க அக்கா எப்படி இருக்கணும் நினைக்கிறீங்க” என்றாள் அவள். பேத்தியை பார்த்தவர், “அதையும் நீயே சொல்லுத்தா” என்றார் அனுபவம் வாய்ந்த அந்த முதிய பெண்மணி. “நீங்க உங்களுக்கு பிடிச்ச மாப்பிள்ளை பார்க்குறீங்களா, இல்லை அக்கா மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளை பார்க்குறீங்களா” என்று மீண்டும் கேள்வி எழுப்பினாள் அவள். “ஏலே என்னலே சொல்ல வர்ற” என்றார் உலகநாதன்.

 

“கீர்த்தி உனக்கு என்ன சொல்லணுமோ அதை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லு” என்றார் காந்திமதி. “அக்காவுக்கு சரவணன் அத்தானை தான் பிடிச்சு இருக்கு, அத்தானுக்கும் அக்காவை பிடிச்சு இருக்கு” என்றாள் அவள். “என்னடி காதலா பண்றா அவ, அதுக்கு நீ தான் தூதா” என்று வெகுண்டார் பார்வதி. “அம்மா பேசாம இருங்க, நான் ஒண்ணும் தூது எல்லாம் போகலை. அக்கா மனசுல இருக்கறதை நான் உங்களுக்கு சொன்னேன். அதை புரிஞ்சு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுங்கன்னு தான் கேக்குறேன்” என்றாள் அவள். அவளை அடிக்க கையை ஓங்கிய பார்வதியின் கையை பிடித்து தடுத்தார் உலகநாதன்.

 

“அத்தை நீங்க” என்று ஆரம்பித்தவரை, “நீங்க நினைக்கறது தான் மருமகனே நானும் நினைக்கிறேன். சரவணன் நல்ல பையன் அவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கறதுல எனக்கு முழு சம்மதம்” என்றார் அவர். “ரொம்ப நன்றி அத்தை” என்றார் அவர்.

 

“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன், சரவணனுக்கு வசதி குறைவு நாளைக்கு என் பொண்ணு அங்க போய் கஷ்டபடுவா. என்னால அதை பார்க்க முடியாது. என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது” என்றார் அவர் திட்டவட்டமாக. “ஏம்மா உங்களுக்கும் சந்திரா அத்தைக்கும் என்னம்மா வித்தியாசம். சந்திரா அத்தை நம்ம ஆதவன் அண்ணாவை ஒரு நிரந்தர வேலையை இல்லாதவருக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன் சொன்னாங்க. இத்தனைக்கும் பெரியப்பா, பெரியண்ணன் எல்லாம் நல்லா சம்பாதிக்குறாங்க. அவங்களுக்கு இல்லாத வசதியா, ஆனாலும் அத்தை எதை பார்த்தாங்க ஆதவன் அண்ணா வேலை சரியில்லைன்னு சொல்லி மறுத்திட்டாங்க. அப்போ நமக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு”.

 

“இந்த உலகத்துல எல்லாமே பணத்தை வைச்சு தான் எடை போடுறாங்க அப்படி இப்படின்னு நீங்களும் பேசலை. இப்போ உங்க பொண்ணுன்னு வந்ததும் நீங்களும் அதே மாதிரி தான் பேசறீங்க, எப்படிம்மா” என்றாள் அவள் நறுக்கு தெரிந்தாற்போல்.

 

“என்னலே பார்வதி இன்னும் என்ன யோசிக்க கீர்த்தி சொல்றது எல்லாம் சரி தானே. நீ எதையும் யோசிக்காத, சரவணன் ரொம்ப நல்ல பையன் தான் நம்ம ஆதியே அவன்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறான்னா அவன் திறமை தெரிஞ்சு தானே, அவனும் ஏதோ அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கான். அதுவரைக்கு சும்மா இருக்கக் கூடாதுன்னு அவன் என் பேரனோட சேர்ந்து வயல் வரப்பை எல்லாம் பார்த்துக்கறான். ரொம்பவும் பொறுப்பான பையன் தான் அவன் என்ன யாரோவோ நம்ம காந்திமதிக்கும் கட்டிக்கற முறை தானே. எதுவும் யோசிக்காத பார்வதி. எல்லாம் நல்லா வரும், என் பேத்தியை சரவணன் நல்லா பார்த்துகிடுவான்” என்றார் அவர்.

 

“நீங்க எல்லாரும் சொல்றீங்க எனக்கும் சம்மதம் தான், ஆனா இப்போ சந்திரா

மதினிகிட்ட என்ன பதில் சொல்றது” என்று கவலையானார் அவர். “என் தங்கச்சிகிட்ட நான் பேசிக்கறேன்” என்று பதில் கொடுத்தார் உலகநாதன். “அப்புறம் என்னல உனக்கு சந்தோசம் தானே, போய் ஆகற வேலையை பாரு, சரவணன் அப்பா அம்மாகிட்ட பேசறேன். அப்படியே உன் அக்காளுக்கும் ஒரு போனை போட்டு விவரத்தை சொல்லிடு, ஆதிகிட்டயும் பேசிடு. சரியாலே” என்றார் அவர். “

 

என்ன கீர்த்தி சந்தோசமா, உங்க அக்கா மேல உனக்கு அம்புட்டு பிரியமா, நீ உங்க அம்மா மாதிரி இருக்க இந்த விஷயத்துல, அந்த காலத்துல உங்கம்மையும் இப்படி தான் உங்க பெரியம்மைக்காக என்கிட்ட வந்து நின்னா, உங்க பெரியம்மைக்கு உங்க பெரியப்பா மேல ஒரு விருப்பம் அதை தெரிஞ்சுகிட்டு நாங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறது தெரிஞ்சு எங்களை ஒரு வாங்கு வாங்கிட்டா. உங்க தாத்தாவும் இவ பேசினதுல உடனே சரின்னுட்டாங்க. அப்புறம் உங்க பெரியம்மா கல்யாணம் அவ விருப்பம் போலவே நடந்துச்சு. உனக்கு தான் கூட பிறந்தவ மேல எவ்வளவு பிரியம்” என்று சிலாகித்தார் அந்த பெரியவர்.

 

“ஏம்மா நீயும் என்னை போலவே இருந்துட்டு உன் பொண்ணுன்னதும் சுயநலமா யோசிச்சியா” என்றாள் கீர்த்தி. “போடி வாயாடி நீயும் ஒரு அம்மாவா ஆகும் போது தான் என்னோட நினைப்பு உனக்கு புரியும். இப்போ எங்க அம்மாவோட நினைப்பு எனக்கு புரிஞ்ச மாதிரி” என்று சேர்த்து சொன்னார் அவர். ஒருவழியாக அவர்கள் அங்கிருந்து கிளம்பி வீடு சென்றனர்.

 

“அம்மா நீங்க ரெண்டு பேரும் பேசாம இருங்க, ஒரு சின்ன விளையாட்டு” என்றுவிட்டு அவள் முதலில் வீட்டுக்குள் நுழைந்தாள். “அம்மா சந்திரா அத்தை போன் பண்ணாங்களே சரின்னு சொல்லிட்டீங்களா, முதல்ல ஓகே சொல்லுங்க அத்தான் நல்லா படிச்சவர் வெளிநாடு எல்லாம் போய் படிச்சுருக்கார், இவளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை அமைய அவ கொடுத்து வைச்சு இருக்கணும். என்னம்மா” என்றாள் சின்ன காந்திமதியின் முகத்தை பார்த்தவாறே.

 

அவள் முகம் ஏகத்தும் சிவந்தது, விட்டால் அவள் கீர்த்தியை அடித்து துவைத்து போட்டிருப்பாள் அவளுக்கு அவ்வளவு கோபம். இந்த குரங்கு கொஞ்சம் பேசாம இருக்கக் கூடாது இவங்களை இவளே ஏத்தி விடுறாளே’ என்று நினைத்தாள்.

 

 “அம்மா நாம அக்கா கல்யாணத்தை ஒரு மாசத்துல நடத்திடலாம்ல, எனக்கும் புது துணி எல்லாம் கிடைக்கும். ஜாலி காலேஜ்க்கு லீவ் போடுவேன். கல்யாணம் எங்கம்மா வைப்போம், சென்னையிலையா, பாபநாசத்துலையா” என்று மேலும் மேலும் சீண்ட அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சின்ன காந்திமதி வெடித்தாள்.

 

“ஏண்டி என் மனசு என்னன்னு தெரியாதா. சரவணன் அத்தானை எனக்கு பிடிக்கும் தெரியாது, அது தெரியாமலா அன்னைக்கு தோப்புல அவரை கிண்டல் பண்ண. அப்புறம் எப்படிடி இப்படி ஒரு கேள்வி கேட்குற” என்றாள் அவள்.

“அம்மா கேட்டுகோங்க அப்பா நீங்களும் தான் ஏதோ நான் தான் சொல்லறேன்னு நினைச்சு இருப்பீங்க, இப்போ அவ வாயால உண்மை ஒத்துக்கிட்டா, போதுமா” என்றாள் கீர்த்தி. பார்வதி சின்ன காந்திமதியை முறைக்க அவளோ அய்யோ வாயை விட்டுவிட்டோமே என்று பதறிக் கொண்டிருந்தாள்.

 

“அக்கா ரொம்ப பயப்படாதே உன்னை பத்தி எல்லாம் சொல்லியாச்சு. இனி உன் கல்யாணம் உன் விருப்பப்படி தான் போதுமா, கொஞ்சம் சிரியேன் இந்த பிசாசை பார்த்து சிரிக்க மாட்டியா” என்றாள் அவள். ‘அய்யோ இவள் இதை வேறு பார்த்திருக்கிறாளா, நான் அத்தானை பார்த்ததை சொல்லிடாதே என்பது போல் கண்களால் கெஞ்ச ‘எல்லாம் எனக்கு தெரியும் நீ பயப்படாதே’ என்பது போல் அவளை ஆறுதல்படுத்தினாள் அவள்.

 

____________________

 

 

“ஆதி நான் சரவணன் பேசறேன்” என்றான். “சொல்லு சரவணா, என்ன விஷயம்” என்றான் ஆதித்தியன். “நான் நேரடியாவே பேசிடறேன், எனக்கு மதியை பிடிச்சுருக்கு, மதிக்கும் என் மேல ஒரு விருப்பம் இருக்கு. மதி வீட்டில…..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தான் ஆதித்தியன். “மதியா யாருடா அது” என்றான் அவன்.

 

“காந்திமதி தான் ஆதி” என்றான் அவன். “என்னது” என்று வாயை பிளந்தவனை ஆதிரா என்ன என்பது போல் நோக்க அவன் குனிந்து அவள் காதில் விஷயத்தை சொன்னான். ஆதிராவுக்கு அப்போது தான் நினைவு வந்தது, வயலுக்கு சென்றிருக்கும் போது சரவணனின் பார்வை சின்ன காந்திமதியின் மீது ஒரு மையலுடன் படிவத்தையும் அதைக் கண்டு அவள் நாணியதும் ஞாபகம் வந்தது. அவன் அவளை மதி என்று அழைத்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

 

ஆதி இவளிடம் விஷயத்தை சொன்ன வேளையில் சரவணன் இரண்டு மூன்று முறை அவனை அழைத்திருக்க அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் போனை கட் செய்து மீண்டும் முயற்சித்தான். ஆதிரா ஆதித்தியனிடம் ஊரில் நடந்த விஷயத்தை சொல்ல ஆதி யோசித்தான். அதற்குள் சரவணன் மீண்டும் அழைத்திருக்க “சொல்லு சரவணா, இப்போ என்ன பிரச்சனை” என்று அவனும் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

 

“ஆதி சந்திரா சித்தி வீட்டில இருந்து மதியை பெண் கேட்டு இருக்காங்க, அவங்க வீட்டிலையும் சம்மதம் போல தான் தெரியுது. இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலை. மதி இன்னைக்கு இதை என்கிட்டே சொல்லி கண் கலங்கிட்டா. என்னால மதியை தவிர வேற யாரையும் நினைக்க முடியாது ஆதி. நான் உன்னை தான் நம்பறேன் நீ எனக்காக பேசுவியா” என்றான் அவன். “சரி சரவணா நீ இந்த பிரச்சனையை என்கிட்ட விடு நான் பார்த்துக்கறேன்” என்று விட்டு மேலும் அவனை சமாதானப்படுத்திவிட்டு போனை வைத்தான். “பாவங்க சரவணன் அண்ணனா பார்த்தா நல்ல மாதிரியா தெரியறார் அவருக்கு மதியை கல்யாணம் பண்ணி வைக்கணும். நீங்க தான் அத்தைகிட்ட பேசணும்” என்றாள் அவள்.

 

“நீ எப்பவும் இப்படி தான் இருப்பியாடி, எல்லாரையும் பத்தி இவ்வளவு யோசிக்கற, ஆதவனுக்காக சத்தமே இல்லாம அவ்வளவு செஞ்சு இருக்க, இப்போ சரவணனுக்காகவும் அம்முகாவும் பேசற….” என்று வியந்தவனை ஏறிட்டாள் அவள். சிறு இடைவெளியில் நின்றிருந்தவளின் அருகில் சென்றான், என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவனை ஆட்படுத்த அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.

 

அவன் விழிகளால் அவள் விழிகளுக்குள் ஊடுருவினான். அதில் மயங்கியவன் அவளின் வெற்றிடையில் கைகோர்த்து தன்னோடு அணைத்தவன் அவள் இதழ்களில் அழுத்தமானதொரு முத்திரை பதித்தான். “அய்யே அப்பா சீ என்ன செய்யற” என்ற கவினியின் குரலில் திடுக்கிட்டவன் அவளை சட்டென்று உதறினான். ‘ச்சே நான் என்ன செஞ்சு வைச்சு இருக்கேன், அவ என்னை தப்பா நினைச்சு இருப்பாளே’ என்று நினைத்தவன் “சாரி” என்று ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு வேகமாக சென்று குளியலறைக்குள் மறைந்தான்.

 

அவனின் முத்தத்தில் கிறங்கி நின்றவளை அவன் உதறிவிட்டு அவளிடம் அவன் சாரி சொன்னது அவள் மனதை தைத்தது. ஏதோ தெருவில் செல்லும் பெண்ணை முத்தமிட்டு விட்டதை போல் என்னை உதறிவிட்டு சாரி சொல்கிறாரே என்று வேதனை கொண்டாள். இவருக்கு எப்போது தான் நான் இவரின் மனைவி என்ற நினைப்பு வரும் என்று நினைத்தவள் சமையலறைக்குள் சென்றாள்.

 

குளியலறைக்குள் சென்றவனோ ‘இனி இவ முன்னாடி நாம ஜாக்கிரதையா இருக்கணும், இவளை பார்த்தாலே என்னன்னமோ ஆகுது, நான் என்ன வேலை செஞ்சுட்டேன்’ என்று தலையில் அடித்துக் கொண்டான் அவன். இது வேலைக்கு ஆகாது என்ற முடிவெடுத்தவன் தந்தைக்கு போன் செய்தான் “அப்பா ஆதி பேசறேன், அந்த புது ஒப்பந்தம் போட டெல்லிக்கு போகணுமே. நான் உங்ககிட்ட சொன்ன மாதிரி நானே போயிட்டு வந்திடறேன்ப்பா. அதுவரைக்கும் ஆதிராவும் பசங்களும் நம்ம வீட்டில இருக்கட்டும். சரிப்பா என்னைக்கு கிளம்பணும்” என்றான் அவன்……..

 

 

உன்னுடன் பயணித்த

அந்த இனிய பொழுது

நீங்காமல் என் நெஞ்சில்…

உறைகிறது…

 

என்னையறியாமல்

உன்னை இறுக பற்றிய

எனக்கு உன் நினைவுகளில்….

சுவாசம் கொடுத்தாய்…

 

ஆரா என்ற உன் அழைப்பு

ஆறாமல் நின்றது

என் உள்ளத்தில்…

என் உயிர் வரை தீண்டியது

உன்னழைப்பு….

 

என் முகத்தை கைகளில்

ஏந்தி எனை அணைத்து

நீ தீண்டிய

அந்த இதழ் தீண்டலில்….

என் உணர்வை தீண்டி

என்னையே

மறக்கச் செய்தாய்….

 

 

Advertisement