கரண், அவள் பேசவும்தான் திரும்பினான்.. அவள்புறம் “அதெல்லாம் சரி, என்ன.. அவ்வளவு தூக்கம்.. ஏதாவது முடியலையா” என்றான். மதியம் அவள் உறங்கியதை கொண்டு.

சுபி ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.

கரண் “இல்ல சாரதா சொன்னால்.. வேலை வாங்கிட்டனோ” என்றான் தயக்கமான குரலில்.

சுபி “பரவாயில்ல.. என்றோ ஒருநாள்தானே. அத்தோட.. ரொம்பநாள் ஆச்சு.. இப்படி பேசி.. வேலை பார்த்து.. அதில் கொஞ்சம் அசதி அவ்வளவுதான்” என்றாள்.

கரண், காரினை ஓரமாக நிறுத்தி.. மறுபுறம் வந்து அமர்ந்தான்.. சுபி டிரைவ் செய்தாள். கரண், ஒருமணி நேரம் உறங்கினான் நிம்மதியாக.

சாரதா அழைத்த பின்தான் எழுந்தான். ‘ஏதாவது சாப்பிடலாமா?’ என அழைத்தாள் அவள். பிள்ளைகளும் சரி என்க.. நல்ல ஹோட்டலாக பார்த்து நிறுத்தி.. பெரிய வண்டியையும் நிறுத்தி.. எல்லோருமாக இளைப்பாறினர். நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தனர்.

மெல்ல மெல்ல நாட்கள் இயல்பாக தொடங்கியது. விசாகன் குரு இருவரையும் ஸ்கூல் பஸ்’சில் சேர்த்து விட்டிருந்தனர். காலை மாலை இருவேளையும்.. பஸ்தான். அதன்பின் இரு வீட்டிலும் தாத்தா பாட்டிகள் பார்த்துக் கொண்டனர் பேரன்களை. சுபி, எப்போதும் போல கிளினிக் சென்றாள். கரண், முன்போல.. பிசி.. அதிகநேரம் ரிசார்டில் இருந்தான். திருமணம் முன்வரை.. அதில் கவனம் செலுத்தியதால்.. ரிசார்ட்டினை கவனிக்கவில்லை. இப்போது பதினோரு மணிவரை அங்கேதான் இருந்தான். நேரம் கிடைக்கும் போதுதான் பிள்ளைகளை கவனித்தான். சுபியோடு.. போனில் பேசுவதோடு சரி. இரவில் இவள் பிள்ளைகளோடு இருக்க.. கரண், நிம்மதியாக வேலையை பார்த்தான். 

நாட்கள் இயல்பாக தென்றலின் வேகத்தோடு கடந்தது.. அதே இதமான வேகம்தான். சுபி கரண் இருவரும்.. அவரவர் வேலையில் மும்முறமாக இருக்க.. லக்ஷ்மியின் திவசம். சுபிக்கு இந்தமுறை.. அவளின் முன்னாள் மாமனார் அழைக்கவில்லை. ஆனாலும் வினு ஸ்ரீ.. இருவரும் அழைத்தனர். சுபி, விசாகனோடு சென்று லக்ஷ்மிக்கு, காரியங்கள் செய்து வந்தாள்.

கரண், ‘நானும் வருகிறேன்..’ என்றான். ‘வேண்டாம்’ என்றுவிட்டாள். அவர்கள் அழைக்கவில்லையே.. அங்கே வந்து கரண் அசிங்கப்பட வேண்டாம் என்று விட்டுவிட்டாள். 

கரண், மாலையில் அவளும் விசாகனும் வரும்வரை.. வீட்டிலேயே இருந்தான். விசாகனுக்கு ஏதும் புரியாது.. அவன் காரிலிருந்து இறங்கியது “குரு..” என அவனோடு பேச சென்றுவிட.. பார்த்திருந்த அருணகிரி விசாலாட்சி கரண் எல்லோருக்கும் தொண்டையை அடைத்தது.

சுபி, லேசாக புன்னகைத்துவிட்டு.. தங்களின் அறைக்கு சென்றுவிட்டாள். தர்மசங்கடம்.. எதார்த்த வாழ்வியல் சிக்கல்.. இந்தநாள், சுபிக்கு. முன்னாள் கணவனுக்கு காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாள்.. கரண் ஏற்பது நேசம் என கொள்ளலாம். ஆனால், விசாலாட்சியிடம்  இருக்கும் மாற்றம்.. பெரிய விஷயம்தான்.

சுபி, ஊரிலிருந்து கிளம்பும் போது.. ‘நான் எங்க அம்மா வீட்டுக்கு போகிறேன்’ எனத்தான் சொன்னாள். கரண் பிடிவாதமாக இங்கேதான் வரவேண்டும்.. எனதான் வீட்டிலேயே இருந்தான்.

சுபி, குளித்துவிட்டு வர.. கரண் அறையின் வாசலில் நின்று.. “அம்மா கூப்பிடுறாங்க” என்றான், அவள் அழுதிருக்கிறாளா.. என்ன நிலவரம் அவளிடம் என.. ஆராய்ச்சியாய் அவளை பார்த்துக் கொண்டே அழைத்தான். ஆனால், ஏதும் பிடிபடவில்லை அவனுக்கு.

சுபி ஹாலுக்கு வர.. அருணகிரி “ஊரில் எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்றார். விசாலாட்சி கையில் காபியோடு வந்து “என்னம்மா.. காரியம் நல்லவிதமா முடிஞ்சிதா.. உன் மாமனார் ஏதும் முறைச்சிக்கலையே” என்றார்.

சுபி “அப்படியெல்லாம் ஏதும் இல்ல அத்தை. அவர் எப்போதும் போல இருந்தார்.. விசாகனுக்கு எப்போதும் போல எல்லாம் செய்தார். என்கிட்டே பேசலை அவ்வளவுதான். நானும் அதை எதிர்பார்க்க கூடாதில்ல. சிலது அப்படிதானே அத்தை” என்றாள்.

ம்.. சிலது அப்படிதானே.. மாறலாம். சிலது அப்படித்தானே மாறாது. 

கரண் “காபி குடி” என்றான்.

அருணகிரி “கிளினிக் போய்ட்டு வந்தேன்ம்மா.. சும்மா ஒருமணி நேரம் இருந்துட்டு வந்தேன்” என்றார்.

சுபி “ஒ.. அதுதான் என்னை அழைக்கவேயில்லையா.. தேங்க்ஸ் மாமா” என்றாள்.

அவரோ “இதுக்கெல்லாம் எதுக்கும்மா.. சும்மாதானே வீட்டில் இருக்கேன்.. நீ சொல்லு தினமும் கிளினிக் வரேன்..” என்றார்.

சுபி புன்னகையோடு “வாங்க மாமா.. உங்க விருப்படி செய்ங்க” என்றாள். அவர்களின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறியது.

கரண், உணவு உண்டு.. மேலே செல்லாமல் சுபியையே பார்த்திருந்தான்.. அன்று போல.. எதோ சொல்லும் பார்வை. அதை பெண்ணவளால் ஊகிக்க முடிந்தும்.. அதை கவனிக்க முடியவில்லை. பிள்ளைகள் தூங்க என.. “ம்மா..” என விசாகன் அழைக்க.. குரு “சுபிம்மா” என அழைத்துக் கொண்டிருந்தான்.

கரண் இப்போது பசங்க இருக்கும் அறைக்கு வந்தான் “என்னாங்கடா.. உங்க அம்மாவை ஏலம் போடுறீங்க.. இன்னிக்கு நான்தான் உங்க ஸ்லீபிங் பார்ட்னர்” என்றான்.. குரு கெக்கபிக்கே என சிரிக்க.. விசாகன் கொஞ்சம் அரண்டு… குருவோடு சேர்ந்து சிரித்தான்.

கரண் தன் தாடையை வருடிக் கொண்டே “என்ன சிரிப்பு.. தூங்கலாமா” என்றான். 

விசாகன் “அம்மா…” என்றான்.. குரலில் லேசான பயம். சுபி அறையினுள் வந்தாள். கட்டிலின் மறுபக்கம் அமர்ந்து.. விசாகனை மடியில் சாய்த்துக் கொண்டாள்.

கரண் “விசா, வா கரண்டாட்  என்ன பண்ணேன்.. என்கிட்டே தூங்கமாட்டியா.. நாளைக்கு உன்னை.. ப்ளே ஏரியா கூட்டி போறேன்” என்றான் அமைதியான குரலில்.

விசாகன் கரண்’னை ‘என்ன சொல்லி அழைப்பான்’ என எல்லோருமே எதிர்பார்த்தனர்.. அம்மா என்பது எப்போதும் பாசத்தின் மொழி. ஆனால், அப்பா என்பது எல்லோராலும்.. அப்படி ஏற்க முடியாதே. அது  அடையாளத்தின்.. சாயலிலேயேதான் பார்க்க முடிகிறதே. அதனால், உள்ளுக்குள் எல்லோருக்கும் ஒரு குறுகுறுப்பு.

கரண் ஈசியாக அதை கையாண்டான் “கரண் டாட்” என சொல்லிக் கொடுத்தான்.. விசாகனுக்கு. சுபிக்கும் நிம்மதி. குருவும் அப்படியே அழைக்க தொடங்கிவிட்டான்.

இப்போது, விசாகன் லேசாக ஆசை கொண்டான்.. ஆனாலும் பயம் போகவில்லை.. சுபி “டாட் எப்போவாது தானே கூப்பிடுறாங்க.. குருவோடு போய் தூங்கு.. நான் இங்கேதான் இருப்பேன்” என்றாள்.

கரண் கட்டிலின் நடுவே வர.. குரு ஒருபக்கம், விசாகன் அன்னையின் கையை பிடித்துக் கொண்டு.. கரணின் தோளில் சாய்ந்து கண்மூடினான்.. மறுபக்கம். பயம்தான் குழந்தைக்கு. 

கரண் லைட் ஆப் செய்துவிட்டு.. கதை சொல்ல தொடங்கினான். விசாகன் கதை கேட்டும் வேகத்தில் “என்னாச்சு டாட்.. பாண்டா.. விழுந்திடுச்சா” என்றான். விசாகன் டாட் என அழைத்ததில்.. பெரியவர்கள் இருவரும்.. அதை கவனித்ததில் சின்னதாக பார்வை பரிமாறிக் கொண்டனர், அந்த இருட்டில்.

கதை என்னமோ இன்று முடியவேயில்லை.. நீண்டுக் கொண்டே இருக்க.. சுபி.. கீழே படுக்கையை விரித்துக் கொண்டே “என்ன இது ரெண்டுபேரும், க்கொஸ்ட்டீன் கேட்டுட்டே இருக்கீங்க.. ரொம்ப நேரமாச்சு.. சீக்கிரம் தூங்குங்க..” என அதட்டிக் கொண்டே படுக்கயில் விழுந்தாள்.

சுபி, காலையில் நடந்தவைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள். லக்ஷ்மியின் நினைவு.. நிழலாக வந்து போனது. இப்போது ஒருகுரல் “சுபி.. தூங்கிட்டியா” என்றது.

சுபி வெடுக்கென எழுந்து அமர்ந்தாள்.. கட்டிலிலிருந்த கரணின் குரல் “என்ன பயந்துட்டியா” என கேட்டுக் கொண்டே.. இரு பிள்ளைகளையும் தலையணையில் கிடத்திவிட்டு.. கீழே சுபியின் அருகே வந்தான்.. “பக்கத்தில்.. இங்க.. உன்கூட.. படுத்துக்கவா” என்றான்.

சுபி சற்று நேரத்திற்கு முன் விசாகன் அரண்டு போய் பார்த்தது போல பார்த்துக் கொண்டே.. ‘ம்..’ என்றாள்.

கரண் “என்ன கரண் எப்போவாவதுதானே கேட்கிறேன்..” என சொல்லி அமர்ந்தான் அவளருகில். அவள்.. பிள்ளைக்கு சொன்னது போல.. சொல்லிக் கொண்டே.

சுபி கட்டிலின் விளிம்பில் சாய்ந்துக் கொண்டாள்.. கரண் அவளின் அருகில் அமர்ந்து.. அவளின் தலையை தோளில் சாய்த்துக் கொண்டான்.. “என்ன லக்ஷ்மி ஞாபகமா” என்றான், இதமான குரலில்.

சுபி ஏதும் சொல்லவில்லை.. கரண் அவளின் கையினை தன்னோடு எடுத்துக் கொண்டு.. “சரியாகிடும்..” என சொல்லி.. மற்றொரு கையால்.. அவளின் தலை கோதினான்.. ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

சுபிக்கு எதற்கோ அழுகை வந்தது.. அடக்க முடியாத அழுகை. அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டாள். கரண் அவளை அழவிட்டான்.. ஏதும் பேசவில்லை.. அதுவே ஆறுதல் தானோ என்னமோ.

சில மாற்றமுடியாதவைகளை எண்ணி அழுதாள் போல.. இந்த மாற்றத்தையும் எண்ணி அழுதாள் போல. நடந்தவிட்டவைகளை எண்ணி.. தேற்றிக் கொண்டாலும்.. வலியோடு சிலநாட்களை கடந்துதானே ஆகவேண்டும். ஏற்றுக்கொள்வதுதானே.. புரிதலின் உச்சம்.. வாழ்வின் மிச்சம். நெடிய அழுகை.

கரண் “போதும்.. தலைவலிக்க போகுது.” என்றான்.

சுபிக்கு புரிய.. லேசாக தன்னை தேற்றிக் கொண்டாள். 

கரண் “இரு.. சூடா ஏதாவது எடுத்துட்டு வரேன்” என எழுந்து சென்றான் கிட்செனுக்கு.

“வா.. வந்து என்னை சேர்ந்திடு..

எந்தன் தோள்களில் சாய்ந்திடு..

சொல்ல வந்தேன்.. சொல்லி முடித்தேன்..

வரும் திசை பார்த்து இருப்பேன்..

நாட்கள் போனாலும்..”