அத்தியாயம் – 4 (3)

அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா பவி…”

“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”

“பிரச்சனை மனிஷாக்கு தான்… ஆனா காரணம் வேற?”

“என்னங்க?”

“மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை”

“அண்ணா… நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்”

“அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு”

“மானவ்வை நான் சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கேன், என்னால அவன் மேல குறை கண்டுபிடிக்க முடியலை, அதுவும் இல்லமா அவன் உங்க பையன், அவனை இந்த விசயத்துல என்னால சந்தேகப்படற அளவுக்கு நினைக்க கூட முடியலை”

“பவி… உனக்கு ஏதாவது தெரியுமா?”

“ரெண்டு பேருக்கும் இடைல அப்பப்ப சின்ன சின்ன சண்டை வரும், அதுக்கு அப்புறம் நல்லாத்தான் இருப்பாங்க, என்னால எதுவும் யூகிக்க முடியலைங்க”

“நித்யா உனக்கு தெரிஞ்சதை சொல்லு”

“மனிஷா வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நான் பார்த்துருக்கேன், ஒரு தடவை கூட ரெண்டு பேரும் போன் பேசிக்கிட்டதே இல்லை, ரெண்டாவது மானவ் வர்றப்ப இவ ரூம்ல இருப்பா, கூப்பிட்டா தான் வருவா, சில நேரம் நைட் தான் மானவே வருவான், அதே மாதிரி மானவ் வந்தாலும் தனு கூட மட்டும் தான் பேசுவான், விளையாடுவான், எங்க மனிஷான்னு கேட்கவே மாட்டான்”

“இதெல்லாம் எப்ப இருந்து இருக்கு?”

“கல்யாணம் ஆனதுல இருந்து”

“நீ மனிஷாட்ட விசாரிச்சியா?”

“விசாரிச்சேன்…. இது தான் எங்க நேச்சர்… எப்பயும் கட்டிபிடிச்சுக்கிட்டு, கொஞ்சிக்கிட்டே இருக்க முடியுமா? அப்படின்னு கேட்டா… கூடவே இந்த மாதிரி பேசறமாதிரி இருந்தா நான் இனி இங்க வரவே மாட்டன்னு பிளாக்மெயில் வேற…”

“என்ன நித்யா நீ? இவ்ளோ நடந்திருக்கு எனக்கு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்ல? என்னை வெறும் சம்பந்தியா தான் பார்க்கறியா?”

“அப்படில்லாம் இல்லை பவி… அதான் சொன்னேனே… சில நேரம் ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்க… என்னன்னு சொல்ல?”

“சரி இப்ப என்ன நடந்துச்சு?”

சம்யுக்தாவிடம் தான் பேசியவற்றை தெளிவாக இருவருக்கும் சிவா சொன்னார்.

மற்ற இருவரும் யோசனையில் ஆழ்ந்துவிட,

“நம்ம வாழ்க்கையை நான் சரி பண்ண மாதிரி, அவங்களுக்குள்ள எந்த பிரச்சனை இருந்தாலும் அவன் தான் சரி பண்ணனும்”

“அவன்கிட்ட பேசப்போறீங்களா?”

“இல்லை…”

“அப்புறம்?”

“இன்னும் ஒரு வாரத்திற்கு மனிஷாக்கு லீவ்…”

 “சரிங்க…”

“ரெண்டு பேரையும் சம்யுக்தா சொன்ன மாதிரி கொடைக்கானல் அனுப்பி வைப்போம், நீ என்ன பண்ணு குலதெய்வம் கோவிலுக்கு போகச்சொல்லி, வேண்டுதல், பிரார்த்தனைன்னு ஏதாவது சொல்லி வை”

“அதெல்லாம் சரி… அங்க போயி உங்க பையன் எஸ்ட்டுக்கு போயிட்டா?”

“அங்க எல்லாமே கிளியரா இருக்கு… போனாலும் ரெண்டு மணி நேரம் தான் வேலை இருக்கும், அதிகபட்சம் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து இருந்தாலும் ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் தான் ஆகனும்”

“உன் பையன் முன்னாடி, பாப்பாக்கு குல்லா, ஸ்வெட்டர்ன்னு லிஸ்ட் போட்டு குடு, கூடவே மத்த வாண்டுகளுக்கும் போட்டு குடுத்துவிடு… எப்படியும் நீ தந்த லிஸ்ட்டை வாங்க ரெண்டு நாள் ரெண்டு பேரும் அலையனும், அப்பத்தான் எஸ்ட்டேட் போகாமா அவ கூட சுத்துவான்…”

“டிரைவரை கட் பண்ணி விடுங்க… அதே மாதிரி அங்க போய் மனிஷா டிரைவரை கூட்டிக்கிட்டு போகக்கூடாது”

“அவனோட காரை எடுத்துகிட்டு போகச்சொல்லு”

“நல்ல ஐடியா”

“அப்பப்ப எங்க இருக்காங்கன்னு கேட்டு போட்டோ அனுப்ப சொல்லு…”

“அதை நாங்க பார்த்துக்கறோம்”

“எப்படியும் உன் மருமகள் சாப்பிட்டு இருக்க மாட்டா… நீங்க இங்க இருங்க… நான் போய் பார்த்துட்டு வரேன்…”

“இந்த விஷயத்தை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதிங்க”

“நான் பார்த்துக்கறேன்…”

“பாப்பாவை கூட்டிக்கிட்டு போங்க, இன்னும் அவ பார்க்கலை”

“தனு… அம்மாவை பார்க்க போலாமா?” என்று பேத்தியிடம் கை நீட்ட,

“ம்ம்ம்மா…” என்று அவளும் அவரிடம் தாவிக்கொண்டாள்.

மானவ் அறைக்கதவு திறந்தே இருக்க, உள்ளே நுழைந்தவர் முதலில் பார்வையிட்டது உணவுத்தட்டைதான்.

மனிஷாவைக் கண்ட தனு உடனே, “ம்மா” என்று சிவாவின் கையில் இருந்து இறங்கி உறங்கிக்கொண்டு இருந்த மனிஷாவிடம் ஓடியது.

மகளின் குரல் கேட்டு பால்கனியில் இருந்து மானவ் வெளியே வந்தான்.

“அப்பா….”

மனிஷா மகளின் செயலில் எழுந்திருக்க, மெல்லக் கண்கள் மலர்த்தி மகளை ஆசை தீரப் பார்த்தவள், அவளைக் கொஞ்சிக்கொண்டு இருந்தாள். மானவ்வின் அழைப்பில் தான் சிவா வந்ததை அறிந்தவள், எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.

“படும்மா… சாப்ட்டியா?” என்று கேட்டுக்கொண்டே தட்டைப் பார்த்தவர், மானவ்விடம் திரும்பி,

“உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடறதை விட போன் காலோ, பிசினஸோ முக்கியமில்லை மானவ்… ஒழுங்கா அவளுக்கு ஊட்டிவிடு”

“சரிப்பா…”

“இல்லை மாமா… நான் தான் போதும்ன்னு சொல்லிட்டேன்”

“ரெண்டு வாய் கூட சாப்பிடலை… ஒழுங்கா சாப்பிடு…”

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவள் அருகில் வர,

“இரு… இதெல்லாம் காஞ்சே போச்சு… போய் சூடா வேற கொண்டு வா”

“சரிப்பா…”

“மனிஷா… எல்லா பிராப்ளமும் சால்வ்ட்… கேஸ் ஸ்டிராங்கா போட்டாச்சு… நம்ம சைட் வக்கீல் ரெடி பண்ணி, நம்ம டிரஸ்ட் மூலமா கேஸ் டேக் ஓவர் பண்ணியாச்சு… இனி நீ கவலையே பட வேண்டாம், அவங்க பேரன்ட்ஸ் புல் போர்சா இருக்காங்க, தண்டனை கிடைக்காம ஓய மாட்டாங்க”

“தேங்க்ஸ் மாமா”

“நீ கவலை படாம ரெஸ்ட் எடு சரியா?”

“சரிங்க மாமா”

“நானும் தனுவும் கீழ போறோம்… நீ சாப்பிட்டுட்டு தூங்கு…”

“சரிங்க மாமா”

கீழே சென்ற மானவோ,

“அம்மா…”

“ஏன்டா?”

“அம்மா வேற டிபன் தாங்க”

“ஏன்டா அவ சாப்பிடலையா? ஏதாவது சொல்லி ஊட்டி விட வேண்டியாதானே”

“அதுக்குள்ள ஒரு போன்… இது காய்ஞ்சு போச்சு”

“எப்ப பாரு போன், சரி இரு வேற தரேன்…” என்று கைகளில் இருந்த தண்ணீர் ஜக்கை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தார்.

“அம்மா… அப்படியே அவளுக்கு ஊட்டிவிட்டுட்டு வரீங்களா? எனக்கு ஒரு கால் பேசனும்”

“டேய்… எனக்கு ஒரே டென்ஷன் இன்னிக்கு… உன் பொண்ணு சரி சேட்டை… மனிஷாக்கு தலை வாரி விட வரேன்னு சொன்னேன், அதை மட்டும் செஞ்சுட்டு வந்து படுக்கனும்… நீயே உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடு, நீ அதுக்கப்புறம் விடிய விடிய போன் பேசு” என்றவர், தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

புது தட்டைக் கொண்டு வந்து கொடுத்தவர், “நீ போ… நான் வரேன்…” என்று சொல்லிவிட்டு, அனைவருக்கும் இரவு உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தார்.

 அவர் தந்த தட்டை வாங்கிக்கொண்டு மானவ் மேலே ஏற, சிவா குழந்தையுடன் கீழே வந்தார்.

“நித்யா நீ பாப்பாக்கு ஊட்டிவிட்டுட்டே உன் அண்ணனுக்கு பரிமாறு. நான் போய் மனிஷாக்கு தலை வாரிவிட்டுட்டு வரேன்”

“சரி பவி… நீ போ… நான் இங்க பார்த்துக்கறேன்”

“என்னங்க நீங்க சாப்பிட்டுட்டு இருங்க நான் வந்துடறேன்”

“சரிம்மா… நீ பொறுமையா வா…” என்றவர் நித்யாவிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு கைகழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு மனிஷாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

அவன் அமரவும், பவித்ரா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“மனிஷா எழுந்து உட்கார்… டேய் அப்படியே அவளுக்கு ஹெல்ப் பண்ணு” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய சீப்பை எடுக்கச் சென்றார்.

அவனும் அவளுக்கு உதவி செய்ய, மெல்ல எழுந்து உட்கார்ந்தவளின் அருகே வந்து நின்றவர், “மனிஷா கொஞ்சம் திரும்பி உட்கார்” என்று அவளை சற்று இடம் மாற்றி உட்கார வைத்தவர், “டேய் நீ ஊட்டிவிடு”

“அத்தை வேண்டாம்… வாயெல்லாம் ஒரு மாதிரி இருக்கு…”

“காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடலைன்னா அப்படித்தான் இருக்கும், நீயே ஒரு டாக்டர்… உனக்கு நான் சொல்லித்தரனுமா? ஒழுங்கா சாப்பிடு, டேய் நீ உன் பொண்டாட்டி முகத்தை அப்புறம் விடிய விடிய பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இரு, இப்ப ஒழுங்கா ஊட்டிவிடு”

அவருடைய அதட்டலில் மானவ் ஊட்டிவிட, மனிஷா உண்ண ஆரம்பித்தாள்.

பவித்ரா தலை சீவி முடித்துவிட்டு, “சரிடா… தட்டை கீழ கொண்டு வந்துடு” என்று மானவுக்கு கட்டளையிட்டவர், “மனிஷா நீ ஒழுங்கா சாய்ந்து உட்கார்” என்று சொல்லி, அவளைக் கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்துவிட்டு கிளம்ப எத்தனிக்க,

“அத்தை ஒரு நிமிஷம்”

“என்னடா?”

“எனக்கு பாத்ரூம் போகனும், தலை பயங்கரமா சுத்துது… கொஞ்சம் இருங்களேன், சாப்பிட்டதும் போங்களேன்…”

“அதான் மானவ் இருக்கான்ல… அவனைக்கூட்டிக்கிட்டு போ” என்றவர், அவனிடம் திரும்பி, “டேய் அப்பா டைனிங் டேபிள்ல உட்கார்ந்து இருக்கார். பாவம் நித்யா, பாப்பாக்கும் ஊட்டிவிடனும், அவருக்கும் பரிமாறனும், நான் கீழ போறேன்… நீ அவளை பாத்ரூம் கூட்டிட்டு போயிட்டு, படுக்க வைச்சுட்டு வா” என்றவர் இருவரின் பதிலையும் கேட்காமல் கீழே செல்ல ஆரம்பித்தார்.

அவர் வெளியேறியதும் மானவிடம் கையை நீட்டியவள், “குடுங்க நானே சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்ல, அவனோ அதை சட்டை செய்யாமல், தட்டில் இருந்த உணவை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.

அவனது செயலில், அவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டவளின் கண்களைப் பார்த்தவன், “வாயைத் திற” என்று சொல்ல, அந்த குரலில் தானாக அவளது செவ்விதழ்கள் திறந்து கொண்டன.

முழு உணவையும் அவனே ஊட்டி முடித்து, வாயயையும் துடைத்துவிட்டு, தண்ணீரும் புகட்டிவிட்டான்.

பாத்ரூம் செல்ல, போர்வையை விலக்கித், தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவளின் அருகில் வந்தவன், அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

சட்டென்று விலகியவளை, “நானே கூட்டிட்டு போறேன், வா, அப்புறம் கீழ விழுந்து வைச்ச, என்னால பதில் சொல்ல முடியாது” என்று சொல்லி மீண்டும் தோளோடு அணைத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நகர்ந்தான்.

இதே திருச்சியின் மற்றொரு மூலையில், சம்யுக்தா கணவனுடன் போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள்.

ராகம் இசைக்கும்….