அத்தியாயம் – 4 (2)

“அதை ஏன் மானவ் செய்யலை?”

இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார்.

“ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி இருக்கோம், ஏதாவது பங்கசன், கேஸ் விஷயமா, மெடிக்கல் கேம்ப் இந்த மாதிரி, சில நேரங்கள்ல ஷாப்பிங் பண்ணும்போது கூட மீட் பண்ணி இருக்கோம்… அவங்கக்கிட்ட எனக்கு எதுவோ மிஸ் ஆகற மாதிரி இருந்தது, கடமையேன்னு இருந்தாங்க, ஒரு சாரி எடுக்கக் கூட கைக்கு வந்ததை செலக்ட் பண்ணி எடுத்தாங்க, அப்புறம் ஓவ்வொரு தடவையும் அவங்களை கவனிச்சு பார்க்கும் போது தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு…”

“இதை நீ முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமேம்மா?”

“இது ஒரு யூகம் தான் அங்கிள், கூடவே நான் உங்க பேமிலிக்கு தேர்ட் பெர்சன், என்னதான் மனிஷாக்கு அறிமுகமானாலும் அவங்க பெர்சனல் லைப்ல இன்வால்வ் ஆகற அளவுக்கு நெருக்கம் இல்லை, அஸ் வெல் அஸ் உங்களுடைய அறிமுகமும் எனக்கு இல்லை”

“இப்ப என்ன பண்ணலாம்? நாமளே பேசிப்பார்ப்போமா? இல்லை சைக்கார்டிஸ்ட் டிரை பண்ணலாமா?”

“உங்க பொண்ணு கூட டாக்டர்ன்னு கேள்விப்பட்டேன், அவங்களை இங்க வரச்சொல்லுங்க, உங்க இன்னொரு பொண்ணையும் வரச் சொல்லுங்க அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண விடுங்க, மனதளவில் ரிலாக்ஸ் ஆக வாய்ப்பு இருக்கு, கண்டிப்பா கணவன் மனைவிக்குள்ள ஏதோ பிராப்ளம், அது என்னன்னு தெரியனும், அதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் யோசிக்க முடியும்… அவங்க உங்க பொண்ணுங்ககிட்ட ரிலாக்ஸா பேசற மாதிரி என்கிட்ட பேச முடியாது, பேமிலி பிராப்ளம் இருக்கலாம், அவங்க டிஸ்டர்ப்டா இருக்கறது இப்போதைக்கு மத்த டாக்டர்ஸ்க்கும் தெரிய வேண்டாம்.”

“ரெண்டு பேரும் வர்ற ஐடியால தான் இருக்காங்க”

“ஓகே அங்கிள்… பல வகையான ஸ்டிரெஸ் அவங்களுக்குள்ள இருந்திருக்கு, கூடவே இந்த டென்ஷன் வேற… ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவாங்க, இது என் கணிப்பு”

“அவ அப்பா சாகறதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்தாம்மா… இப்பத்தான் இப்படி இருக்கா… அவர் சாவு அவளை மாத்திடுச்சு… ஸ்கூல் லைப்போடையே அவ துறுதுறுப்பு மறைஞ்சிடுச்சு”

“சோ டீன் ஏஜ்ல நடந்த அதிர்ச்சி தான் மெய்ன் காரணமா இருக்கும்”

“புரியுதும்மா… இந்த நாலு நாளா ஒழுங்கா தூக்கம் இல்லை, வேலை வேலைன்னு ஹாஸ்பிட்டலே கதின்னு இருக்கா, கூடவே சமபந்தமே இல்லாம கரஸ்ல தமிழ் லிட்டரேச்சர் படிக்கறா, இப்ப பாப்பா ஊருக்கு போனதால, பாதி நேரம் லைப்ரரில, மீதி நேரம் ஹாஸ்பிட்டல்ல”

“ஒன்னு பண்ணுங்க அங்கிள், அவங்களை சார் கூட ஒரு ஒன் வீக் டூர் அனுப்பி வைங்க… சரியாகிடுவாங்க”

“தேங்க்ஸ் ம்மா… நீ மனிஷா பத்தி பரத்கிட்ட சொன்னதை பரத் சொன்னார், அதான் உன்கிட்டே பேசுவோம்ன்னு முடிவு பண்ணேன்”

“நான் அவர்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்குவேன்… நான் மட்டும் இல்லை என் ஹஸ்பன்ட் கூட அப்படித்தான்… அவரைப் பார்த்து நானும் பழகிக்கிட்டேன்… இப்ப எதுக்கு அவர் போனார் தெரியுமா? நீங்களும் நானும் பேசும் போது டிஸ்டர்ப் இருக்கக்கூடாதுன்னு தான். நீங்க பெர்ஸ்னலின்னு சொன்னதும் கிளம்பிட்டார்… இப்ப நானா நம்ம பேசினதைச் சொன்னா உண்டு, இல்லன்னா அவர் என்கிட்ட கேட்கவே மாட்டார்.”

“சரிம்மா… நீ சொன்னதை முயற்சி பண்றேன்… உன் நம்பர் தரியா?”

“நோட் பண்ணிக்கோங்க அங்கிள்”

அவள் சொல்லச் சொல்ல சிவா நோட் செய்து கொண்டார்.

வீட்டிலோ மனிஷாவை மானவ் தூக்கி வருவதைக் கண்ட அடுத்த நொடி நித்யாவும், பவித்ராவும் பயந்துவிட்டனர்.

“என்னப்பா? என்னாச்சு?”

“ஒன்னும் இல்லை பயப்படாதிங்க…” என்றவன் மேலே அவர்களது அறைக்குச் செல்ல, பின்னாலேயே சென்ற இருவரும் அறைக்கதவைத் திறந்துவிட்டனர்.

உள்ளே கட்டிலில் அவளைப் படுக்க வைத்து, ஏசியை ஆன் செய்தவன், அவளுக்கு ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு, கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.

“என்னப்பா? என்னாச்சு அவளுக்கு?”

“ஒன்னுமில்லை… பயப்படாதிங்க… அந்த பாப்பா இறந்ததை அவளால தாங்க முடியலை. ரொம்ப ஸ்டிரெஸா இருந்தா, பி.பி வேற ஹை ஆகிடுச்சு, அதுதான் தூங்க ஊசி போட்டு இருக்கு, நல்லா தூங்கட்டும், காலைல இருந்து எதுவும் சாப்பிடலை, வெறும் காப்பியை குடிச்சே ஓட்டிட்டா… எழுந்ததும் சாப்பிட ஏதாவது குடுப்போம்… இப்ப தூங்கட்டும்…”

“சரிப்பா… பயந்துட்டோம்…”

“பாப்பா எங்க?”

“கீழ பிளே ரூம்ல இருக்கா…”

“சரி மனிஷாட்ட ஒருத்தர் உட்காருங்க… நான் பாப்பாவைப் போய் பார்த்துவிட்டு வரேன், நான் வந்ததுக்கு அப்புறம் நீங்க கீழ போகலாம்…” என்று அவன் கீழேச் சென்றான்.

“டேய் கை கால் கழுவிட்டு தூக்கனும்… டிரெஸ்ஸ மாத்து…”

“உங்க ரூம் யூஸ் பண்ணிக்கறேன்ம்மா… மேல இருந்து என் டிரெஸ் எடுத்து போடுங்க…”

மானவ் கை கால் கழுவிவிட்டு, உடை மாற்றிக்கொண்டு மகளுடன் விளையாட அமர்ந்துவிட்டான்.

நித்யா மகளுடன் இருந்து கொள்ள, பவித்ரா மற்ற வேலையைப் பார்க்கப்போய்விட்டார்.

ஸ்டேஷனில் வேலையை முடித்துவிட்டு, மூவரும் வெளியில் வந்தனர்.

“ஜாக்கிரதையா இரும்மா”

“எனக்கென்ன அங்கிள்… அதான் சேப்டி ஆகியாச்சே”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி இல்லாம எங்கேயும் போகாதே”

“கண்டிப்பா அங்கிள்…”

“சரிம்மா ஒரு நாள் வீட்டுக்கு வா…”

“அவர் வரட்டும் அங்கிள்… அவர் கூட வரேன்…”

“ஏன் தனியா வந்தா உள்ள விட மாட்டோமா?”

“அப்படி இல்லை அங்கிள்… ஒரு நாள் கண்டிப்பா வரேன்.”

“ஓகேம்மா…”

“மாமா போலாமா?”

“போலாம்மா…”

“ஓகே மிஸ்டர் சிவா… மறுபடியும் சந்திக்கலாம்…” என்று பரத் கை நீட்ட, சிவாவும் “ஓகே பரத்” என்று அவரது கரம் பற்றிக்குலுக்கினார்.

அவரிடம் இருந்து விடைபெற்று இருவரும் அவர்களது காரை நோக்கிச் சென்றனர்.

“மாமா என்ன சொன்னார் உங்க பிள்ளை?”

“உன்னை ஸ்கூட்டி எடுக்காதைன்னு சொன்னேனே கேட்டியா?”

“அதான் மறுபடியும் வாங்கி வைச்சுட்டிங்களே”

“உன்னை உன் புருஷன் போன் பண்ணச் சொன்னான்… ஒழுங்கா போன் பண்ணி பேசிடு… அவன் பண்ணப்ப நீ எடுக்கலையாம்.. அதுக்கும் சேர்த்து குதிக்கறான்”

“வாங்க மாமா… பார்த்துக்கலாம்…”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு செல்வதையேப் பார்த்திருந்த சிவாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.

அதே புன்னகையுடன் அவன் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்த புன்னகை துணி கொண்டு துடைத்தார்ப் போல மறைந்து போனது.

மானவ் மகளுடன் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தான், பவித்ரா மனிஷாவுடன் இருக்க, நித்யா இரவு உணவு ஆயத்தத்தில் இருந்தார்.

“தாத்தா….” என்று தனு அவரிடம் தாவ,

“என் செல்லக்குட்டி…” என்று அவளைத் தூக்கிகொண்டார்.

“மானவ்… மனிஷா எங்க? எப்படி இருக்கா?” என்ற அவரது குரலில் கோபமும் கலந்து வந்தது…

“தூங்கிக்கிட்டு இருந்தாப்பா… எழுந்துட்டாளான்னு தெரியலை…”

“மேல அவ கூட யார் இருக்கா?”

“அம்மாப்பா”

“அண்ணா… வந்துட்டீங்களா? டிரெஸ் மாத்திட்டு வாங்கண்ணா… பவியை அனுப்பறேன்”

“மனிஷா எப்படி இருக்காம்மா?”

“எழுந்துட்டாண்ணா… தலை பாரமா இருக்குன்னா… உடம்பெல்லாம் வலிக்கற மாதிரி இருக்குன்னா… அதான் சுடு தண்ணீரில குளிக்க வைச்சு படுக்க வைச்சிருக்கோம்… இன்னும் அந்த ஊசியோட பவர் குறையல… தலையெல்லாம் சுத்தற மாதிரி இருக்காம்… அவளுக்குத்தான் இட்லியும், காபியும் கொண்டு போறேன்”

“ஏம்மா? ரொம்ப சோர்வா இருக்காளே, உடம்புக்கு வேற ஏதாவதான்னு விசாரிச்சிங்களா? தனுவை உண்டாகி இருக்கும் போது கூட இப்படித்தான் இருந்தா” என்று நித்யாவைக் கேட்டுக்கொண்டே மகனைப் பார்த்தார்.

அவரது கேள்வியில் மானவ் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்க்க, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு நித்யாவைப் பார்த்தார்.

“இல்லைன்னா… இன்னும் விசாரிக்கலை… எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு… டிபன் சாப்பிட்டதும் கேட்கலாமேன்னு இருந்தேன்…”

“ஏன்டா உனக்கு ஏதாவது தெரியுமா?”

“இல்லைப்பா… அப்படியெல்லாம் எதுவும் இல்லை… அடுத்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம்ன்னு தள்ளிப்போட்டு இருக்கோம்”

“சரி நீ போயிட்டு அம்மாவை வரச்சொல்லு, நித்யா இதை அவன்கிட்ட குடுத்துவிட்டுட்டு எனக்கு ஒரு காபி ஸ்டிராங்கா போட்டுட்டு வாயேன்…”

“சரிங்கண்ணா…” என்றவர் “மானவ் அப்படியே அவளுக்கு ஊட்டி விட்டுடுப்பா… சாப்பாடே வேண்டாம்ன்னு சொன்னா… உட்கார கூட முடியலை” என்று சொல்லியவர் தட்டை அவன் கையில் தந்துவிட்டு சமையலறைக்குள் செல்ல, சிவா அவனைப் பார்த்துக்கொண்டே அவரது அறைக்குள் நுழைந்தார்.

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குச் சென்றான்.

“அம்மா…”

“ஏம்பா?”

“அப்பா வந்துட்டாங்க… உங்களை வரச்சொன்னாங்க”

“ம்ம்..”

“மனிஷா… டிபன் சாபிட்டுட்டு தூங்கு… பாப்பாவை நாங்க பார்த்துக்கறோம்”

“பிளீஸ் அத்தை… கூட்டிக்கிட்டு வந்து காமிச்சுட்டு கூட்டிக்கிட்டு போங்களேன்… பிளீஸ்….”

“சரி நீ சாப்பிடு… எப்படியும் மாமா மேல வருவார்… தூக்கிட்டு வரச் சொல்றேன்… இன்னிக்கு பாப்பா எங்க கூட படுத்துக்கிட்டும்”

“ம்ம்… சரிங்கத்தை…”

அவர் வெளியேற, மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவளருகே சென்று அமர்ந்தான்.

அவள் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன் உதவி செய்ய முயல, அதை மறுத்துவிட்டு தானே அமர்ந்து கொண்டாள்.

அவனிடம் இருந்து தட்டை வாங்கியவள், மெல்ல உண்ணத்தொடங்க, அவன் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

ஓரிரு வாய்க்கு மேல் உணவை விழுங்க முடியாமல் சிரமப்பட்டவள், தட்டை அப்படியே வைத்துவிட்டு, காபியை இரண்டு மடங்கு குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

“என்னங்க? கூப்பிட்டீங்களா?”

“உட்கார்… நான் டிரெஸ் சேஞ் பண்ணிட்டு கூப்பிடறேன், ரெண்டு பேரும் நம்ம ரூமுக்கு வாங்க”

“சரிங்க”

“இந்தா பாப்பா”

“தனு பாட்டிக்கிட்ட வா”

“மாத்தேன்… தாத்தாத்த…”

“தனு… தாத்தா போன் பேசிட்டு வந்ததும் போலாம்… சரியா? பாட்டியும் நீயும் பில்டிங் கட்டலாமா?” என்று பேத்தியை கீழே உட்கார வைத்துவிட்டு, அவரும் அமர்ந்து அங்கிருந்த பில்டிங் பிளாக்குகளை கையில் எடுக்க, அவளும் அமர்ந்து கொண்டாள்.