Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா.
“டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக்.
அவனை முறைக்க மட்டுமே கண் இருப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு வாட்டம்.
“எவ்வளவு நேரமா கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட கருணை காட்ட மாடியா?”
“உன் பேச்சு கா… அது தான் நான் வேண்டாம்னு கிளம்பர இல்ல.. அப்புறம் என்ன?”
“ஏன் இப்படி எல்லாம் சொல்றா சுதா? வேற நல்ல வேல கிடைச்சிருக்கு.. கரியர் க்ரோத் வேணும் தானே.. நீயே சொல்லு?”
“ம்ம்…ம்ம்.. ஆமா ஆமா.. வேணும்.. உனக்குக் கரியர் க்ரோத் வேணும்.. ஆனா நான் வேண்டாம்.. போடா பேசாதா! என்ட்ட..”
சுதாவின் கையை தன் கைக்குள் எடுத்தவன், “நீ என்னைக் கல்யாணம் பண்ணிகரியா? நீ அதுக்கு மட்டும் ‘ம்ம்..’ சொல்லு.. உன் கூடவே இருக்கேன். இல்லையா என்னோட கூட்டிட்டு போறேன்..!”
அவன் விளையாட்டாய் சொல்கிறானா வினையாய் சொல்கிறானா.. அவள் அறியாள். அவளிடம் க்லோஸ்-ஆன நாளிலிருந்து இதையே தான் சொல்லிக் கொண்டிருகிறான்.
ஆனால் காதலை விட, பாதுகாப்பையும், பரிவையுமே அவன் காட்டி இருக்கிறான் அவளிடம். அவன் உடல்மொழியில் காதல் இருந்ததில்லை. அவளுக்கு அவன் தோழன், உயிர் தோழன் மட்டுமே.. அவனும் அதையே உணர்த்தினான்.
பிறகு ஏன் இதே பேச்சு? அவள் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்குமா… உன்ன என் கூடவே வச்சுகணும்னு ஆசை. தங்கையா இருந்தா உன்ன யாருக்காது கட்டி கொடுக்கணும்.. நீ போய்டுவ. உன்ன என் மகளா பார்த்தா.. அப்பவும் அதே தான்.. ஒரு ஃப்ரெண்டுனா.. அதே தான். அது தான் யோசிச்சேன்.. பேசாமா கட்டிகிட்டா.. அப்போ நீ என் கூடவே இருப்ப தானே..” கண்ணில் காதல் இல்லை ஆனால் அதையும் தாண்டி அன்பு.. அவள் இதயத்தை உருக்கி எடுக்கும் அன்பைப் பார்த்தாள். 
கையை உருவி அவன் தோளில் அடி வைத்தவள், “மர மண்டை.. எனக்கு ஆள் இருக்கு டா.. சும்மா இதையே பிணாத்திகிட்டு இருக்காத.. நான் இன்னொருத்தருக்கு மனசளவுல பொண்டாட்டி“
“என்னமோ சொல்ற, ஆனா ஆளத் தான் காட்ட மாட்டேங்குர.. பொய் தானே”
“ஐய்யோ நிஜமா தான் டா.. அவர் பேர் கண்ணன். என்னோட நெய்பர். என் மேல உயிரையே வச்சிருக்கார்.. நான் தான் அவருக்கு எல்லாம்..  துணி கடை வச்சிருக்காங்க. அவர் கொஞ்சம் பிஸி டா.. என்னாலையே பாக்க முடியரது இல்ல… இதில உன் கிட்ட எங்க காட்டுரது? அவர் ஊர்ல இல்ல டா..”
“…”
“சரி வா போலாம்.. என் இடத்துக்கு வா.. செல் அங்க தான் இருக்கு. ஃபோட்டோ காட்டறேன்?”
“செமையா இருக்க மாடல் எவனையாவது எடுத்துட்டு இவன் தானு காட்டுவ.. ஒன்னும் வேணாம் போ..”
“ரொம்ப தான் அலுத்துகர.. நீ சொன்னாலும் சொல்லாட்டீயும் அவர் மாடல் மாதரி தான் இருக்கார். நீ.. போர இடத்துல, அழகான ஃபிகர பார்த்திட்டு என்னை மறந்திடாதா”
“உன்ன என் உயிர் போர வரைக்கும் மறக்க மாட்டேன் சுதா.. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ… உனக்காக என்னைக்கும் நான் இருப்பேன்.” குரல் கர கரத்தது.
அவனையே கண்ணில் நீர் திரையிடப் பார்த்திருந்தாள். அவன் கைகளை ஆருதலாய் தட்டிக் கொடுக்க
“சாரி சுதா.. நீ இங்க வரதுக்கு முன்னமே த்ரீ மந்த்ஸ் நோட்டீஸ் கொடுத்துட்டேன்.. யு.எஸ் வேலை டா..”
“இப்போ அங்க வேல கன்ஃபர்ம்டா?”
“ம்ம்.. ரெடி.. நெக்ஸ்ட் வீக் கிளம்புறேன். இன்னைக்கு தான் இங்க லாஸ்ட் டே!”
“இதையே எத்தன தரம் சொல்லுவ.. நீ என்ன சொன்னாலும்.. நீ என்னை விட்டுட்டு போகப் போர.. அது தான் உண்மை.. நான் வேண்டாம்னு நினைச்சுட்ட.. போடா!”
“நீ கோவிச்சுக்காத.. என் செல்ல பேரீச்சம் பழம் நீ தாண்டி!”
“சரி விடு.. நான் அங்க வந்தா உன்ன வந்து மீட் பண்றேன் என் புருஷனோட… சுதா கண்ணனா.. நீயும் குழந்தையும் குட்டியுமா நல்லா இரு” என்று சிரித்து கொண்டே ஆசீர்வதித்தாள்.
“நீ ரொம்ப நல்லவ சுதா.. இதுவே உன் இடத்தில நான் இருந்திருந்தா… கண்டிப்பா இவ்வளவு சீக்கிரம் மன்னிச்சு இருக்க மாட்டேன்.”
“நாளைக்கு நான் லீவ் போடுறேன்.. என் கூட நீ ஒரு பாதி நாளாவது சுத்தணும்.. அப்புறம் வீக்லி ஒன்ஸ் என் கூட விடியோ சேட் பண்ணனும் சரியா.. இதுக்கு ஒத்துக்கிட்டா.. மன்னிப்பு. அப்புறம் நடு ராத்திரி எழுப்பினா எழுந்துக்கணும்!”
“டீல்… லவ் யூ டீ செல்லம்”
“சரி.. சாப்பிடு!”
அவன் முன் இருந்த வஞ்சர மீன் குழம்பு, வஞ்சரம் வருவல், நண்டு கட்லெட் எனக் கடை பரப்பியிருக்க, கண்ணில் நீ வழிய அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“ஏன் டா அழற? இனி மேல் எப்போ என்னைப் பார்ப்பேனா?”
“ம்ம்கும்.. தின்னத் தான் சமைச்சியா இல்ல நாக்கு வெந்து அவிஞ்சு போகவா?” என்று நீர் நிறைந்த கண்ணோடே அவளை ஏறிட்டவனைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. காலையில் சமைக்கும் அவசரத்தில் கொஞ்சம்.. கொஞ்சமே காரம் அதிகமாய் போய்விட்டது. அதனால் அவள் கன்டீன் சாம்பார் சாதம் சாப்பிட அவன் அவள் பங்கையும் சேர்த்தே மொக்கிக் கொண்டிருந்தான் கண்ணீரோடு.. வேறு வழியில்லாமல்.
சுதாவிற்கு வலிக்கத் தான் செய்தது. குறுகிய காலத்தில் அவளின் உயிர் தோழனானவன். ஸ்ரீ சொன்னது போல் கோழி அதின் குஞ்சை காப்பது பொல அவளுக்கு துணையாயிருந்தான். அவனைத் தாண்டி அவளிடம் யாரையும் வர விட்டதில்லை. அவள் வந்த நாள் முதல் ஒரு நாள் கூட அவன் விடுப்பெடுத்ததில்லை. அதனால் அவன் இல்லாத அலுவலகத்தை அவள் கண்டதில்லை. வேலையை விட்டு விடலாமா என்ற எண்ணம் எழும்பியது.
பணம் அவளுக்குப் பெரிய விஷயமே இல்லை. அவளின் தேவைக்கு அதிகமாய் அவளின் தந்தை விட்டுச் சென்றிருக்கிறார். மாதாமாதம் அவள் மாமா அவளின் செலவிற்கு பணம் அனுப்பிடுவார். இங்கு வந்தது ஒரு ஆத்ம திருப்திக்காக. அவளின் கனவு ஒரு பொடீக் வைப்பதே.. ஆனால் இங்கு வந்த பின் கனவு கூட மறந்து போயிருந்தது. 
விடிந்த வியாழன், அவள் வாழ்வில் கார்த்திக்குடன் மறக்க முடியாதா நாளாய் அமைந்தது. காலையே கார்த்திக்கைப் பார்க்கக் கிளம்பி விட்டிருந்தாள். ஒவ்வொரு நொடியும் ரசித்துச் செலவிட்டனர்.
அவள் கதறக் கதற ரோல-கோஸ்டர், ஜயன்ட் வீலென அழைத்துச் சென்றான். எதைப் பார்த்தாலும் அவனை அவள் நினைக்கும் படியாய் எல்லா அட்டகாசமும் செய்தனர்.
மாலை வரை அவனோடு சுற்றித் திரிந்தாள். ‘மால்’லிற்குச் செல்ல அங்கு அவனுக்காய் பார்த்துப் பார்த்து டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷர்ட், ஃபார்மல்ஸ், செல் ஃபோன் என வாங்கி குவித்தாள்.
அங்கு வேலையாய் வந்த அஷோக்கின் கண்களுக்கு அவர்கள் தப்பவில்லை. அந்த மாலும் அஷோக்கிற்குச் சொந்தமானது. அதில் இரு தளத்தில் அவர்களின் கண்ணபிரான் டெக்ஸ்டைச்ஸ் இருக்கவே அங்கு தான் வேலையாய் வந்திருந்தான். மாடியிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவர்கள் வாட்ச் கடைக்குள் நுழையவும் அங்கிருந்த மேனேஜர் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“இவ்வளவு விலையா? வேண்டாமே.. எதுக்கு இவ்வளவு… ஏதாவது ஒன்னு வாங்கி குடு போதும்.. உன் ஒரு வருஷ சம்பளத்தை எனக்கே காலி பண்ணிடாத சுதா… அப்புறம் செலவுக்கு என்ன செய்வ?” என்றதிற்கு வயரு வலிக்கச் சிரித்தாள்.
“என்ன ஜோக்கா சொன்னேன்?” கடுகடுத்தவனிடம்
“ஹெல்லோ.. பாஸ்.. நான் ஒரு பில்லினியர் பொண்ணு.. ஒரே பொண்ணு.. காசெல்லாம் மேட்டரே இல்ல… ரொம்ப ஃபீல் பண்ணாத வா..” மலைப்பாய் அவன் பார்க்க,
“நிஜம் தான். எல்லாம் டாலர்ஸ்-ல!! இப்போ வாங்க பாஸ்..” என அவனை இழுத்துக் கொண்டு, இருவருமாய் ஐஸ்க்ரீம் கடைக்குள் சென்றனர்.  அவளை அமர வைத்து அவளுக்குப் பிடித்ததை வாங்கி கொடுத்துவிட்டு தான் வாஷ் ரூம் சென்று வருவதாய் இடத்தை விட்டு அகன்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் முன் ஒரு உருவம் நிழலாட, “என்ன டா அதுகுள்ள வந்துட்ட?” சிரித்துக்கொண்டே தலையைத் தூக்கி நின்று கொண்டிருந்தவனைப் பார்த்ததும் ஏ.சி அறையிலும் வியர்வை அரும்ப ஆரம்பித்தது.
அவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், “என்ன சுதா.. எப்படி இருக்க? மிஸ் மீ?” என்றான் கூலாய்.
பேய் அறைந்தார் போல அறண்டு போயிருந்தவளிடம், “என்னமா.. இன்னைக்கு பாடி கார்ட் வரலியா? ஐஸ் க்ரீம் மெல்ட் ஆகுது பார்.. சாப்பிடு” என அவளுக்கு ஊட்ட, சுதாரித்தவள் அதை அப்படியே தட்டி விட, அது அவன் மேல் சிதறியது.
“ஷிட்… இடியட்… “ என அங்கிருந்த டிஷ்யூ பேப்பரால் அவன் துடைக்க, அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, அருகில் வைத்திருந்த ஷாப்பிங் பேக் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓட, எதிரே இருந்த இரும்பு ஸ்டூளில் முட்டியிலிருந்து மூன்று இன்ச் கீழே நன்றாய் இடித்துக் கொண்டாள். அவசரத்தில் ஒரு பையும் நழுவி கீழே விழுந்தது.
தப்பித்தோம் பிழைத்தோம் என அவள் ஓட்டமும் நடையுமாய் நகர, அவனும் அவளை பின் தொடர்ந்தான். அது ஒரு பெரிய ‘மாள்’. கூட்டமும் இருக்கத் தான் செய்தது. அவனால் அவளை ஒன்றும் செய்ய இயலாது என்றபோதும் அவளின் பயம் அவளை யோசிக்கவிடவில்லை. கால் வேறு வலித்துக் கொன்றது. கண்கள் தானாய் நீர் கோர்க்க ஆரம்பித்தது. கண்ணனைத் தான் மனம் தேடியது.
பின்னால் பார்க்காமல் விருவிரு என நகர, இரு கால்கள் அவளை நெருங்கி வந்துவிட்டதை உணர, கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் தோள்களைப் பற்றிய கை அவளை திருப்பிக்கொண்டே, “ஓய்.. பேரீச்சம் பழம்… அவசரமா எங்கப் போர? ஐஸ் க்ரீம் அதுக்குள்ள முடிச்சுட்டியா?” கேட்க, ‘ஹப்பா..’ அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
முகமும் உடலும் வியர்த்து, கை கால் நடுங்க நின்றிருந்தவளை, “டேய் என்ன டா பண்ணுது? ஆர் யூ ஆல்ரைட்? வா, முதல்ல அங்க பொய் உட்க்காரலாம்” எனத் தலையை வருட, தீபக் இவர்களைப் பார்த்துக் கொண்டே வந்தான். அன்று ஹோட்டலில் அவன் போதையிலிருந்ததினால், அடித்தவன் முகம் தெரியவில்லை. அடித்தவன் கையை உடைக்க வேண்டும் என்ற எண்ணம்.
அவர்களை ஒன்றாய் பார்க்கவும், அன்று ஹோட்டலில்  பார்த்தவன் இவன் தான் என்று கணக்கு போட்டுக்கொண்டான்.
தீபக் அருகில் வரவும் சுதாவிற்குப் பயம் உச்சத்தை அடைந்தது. புதிதாய் ஏதாவது ஃபோட்டோவையோ, வீடியோவோ காட்டி விடுவானோ என்ற பயமே. அஷோக் அவளிடம் ‘வேலை முடிந்தது’ என்று ஏற்கனவே கூறி இருந்தான். இருந்தும் இவன் ஏன் தன்னையே சுற்றிவருகிறான் என்ற புது குழப்பமும் சேர்ந்து கொண்டது.
கார்த்திக்கின் கையை இறுக பிடித்துக்கொண்டே அவன் முதுகின் பின் ஒளிந்து கொள்ள, அவன் எதிரில் வருபவனைப் பார்த்தே பயப்படுகிறாள் எனப் புரிந்தது.
“ஹெல்லொ.. மிஸ்டர்? என்ன உன் பிரச்சினை?” குரலில் அத்தனை கோபம். அடித்து விடுவதற்கு உடல் தயாரானது. நெஞ்சை விரித்துக்கொண்டு அவன் நின்ற தோரணையைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ.. “நோ படி… இத அங்க விட்டுடாங்க.. கொடுக்க வந்தேன்… இந்தாங்க” என்று அவள் விட்டு வந்த பேக்கை குடுத்துவிட்டு சென்று விட்டான்.
ஒரு வழியாய் அவளைத் திடப் படுத்தி, தைரியம் பேசி கை தாங்கலாய் கூட்டிச் சென்றவன் வீடு வரை வந்து விட்டுவிட்டே சென்றான்.
அவளை விட்டுச் செல்லும் அவனைச் சஞ்சல படுத்த மனதில்லாமல், தீபக் பற்றி அவள் வாய் திறக்கவில்லை. அவன் துரத்தவே பயந்ததாய் கூறி விஷத்தை அத்தோடு முடித்துவிட்டாள்.
“உன் கொஞ்சும் தமிழும், அமெரிக்கன் இங்கிளிஷும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் சுதா..”
“நான் நல்லா தான் பேசறேன்..”
“நீ தான் சொல்லிக்கணும்.. ‘த்’ சொல்லவேண்டிய பாதி இடத்தில ‘ட்’ போடுர.. ரொம்ப தெரியாட்டியும்.. தெரியுது… இது தான் கொஞ்சும் தமிழ் போல…” எனச் சிரித்தான்.
“நீ தான் சொல்ர.. யாரும் சொன்னது இல்ல.. போ..”
“யாரும் சொன்னதில்லையா? ம்ம்ம்… பாவம் அழு மூஞ்சி அழுமேனு சொல்லி இருக்க மாட்டாங்க!..”
“உனக்கு நான் ஆசீர்வாதம் தரேன் கார்த்தி.. நீ பேசர பேச்சுக்கு.. உனக்கு ஒரு கொஞ்சும் தமிழ் அமெரிக்கன் தான் பொண்டாட்டி.. அது பலிக்கும் போது.. தெரிஜுக்கோ எல்லாம் நீ விதச்ச விதையோட பலனு!!”
“ஆமா இவ பெரிய ரிஷி.. போடி போடி..”
ஒரு வழியாய் பேசி, பொய் சண்டையிட்டு, சிரித்து அவன் கிளம்ப எழும்பவும், “டேக் குட் கேர் கார்த்தி.. லவ் யூ டா..” அவனை ஹக் செய்து விட்டாள். இருவரின் முகமும் சோகத்தைப் பூச ஆரம்பித்தது.
இன்முகமாய் அவனை அனுப்பி வைக்க நினைத்தவள், அவன் கிளம்பவும் வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் வாழ்வில் ஏன் யாரும் நிலைப்பதில்லை.. என்ற எண்ணமே. அவன் கைக்குள் முகம் புதைத்து அழுது கண்ணீரோடு அனுப்பி வைத்தாள்.
அவனுக்கும் அவளை விட்டுச் செல்வதில் வருத்தமே.. ஆனால் வாழ்க்கை வாழ்ந்து தானே ஆக வேண்டும். சேர்வதும் பிரிவதும் விதியின் விளையாட்டோ?
இழுத்துப் பிடித்துப் புன்னகைத்துவிட்டுச் சென்று விட்டான். தன்னை விட்டு போயே பொய் விட்டான். என்ன விதமான நட்பு இது? இருவருக்கு மட்டுமே தெரியும்.. நட்புக்கும் மேலே.. ஆனால் காதலும் இல்லை! கடைசி வரை இனம்புரியாத உறவாகவே முடிந்து விட்டது.
நிஜமாகவே முடிந்து விட்டதா? அவன் ஆசை போல்.. அவள் ஆசீர்வதித்தது போல்.. ஏதேனும் நடந்தால்…? நடக்க வாய்ப்புகள்? இன்று இல்லை.. ஆனால் வாழ்வு என்றும் ஒன்றுபோல் இருப்பதில்லையே.

Advertisement