Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 20
சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை. துண்டை ஈரபடுத்தி முகத்திலும் மார்பிலுமாக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்வாய் படுத்துக் கொண்டாள்.
என்ன அடக்கியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இப்படி அடுக்கடுக்காய் துன்பங்கள்? இன்பம் கட்டை வண்டியில் பொறுமையாய் வர, துன்பம் அதை முந்திக் கொண்டு சூப்பர் ஃபார்ஸ்ட் மெயிலில் வந்தது!
அவனை நினைத்தாலே நட்டெலும்பு வரை குளிரெடுத்தது. இப்படி மோப்பம் பிடித்து வருவான் என்று தெரிந்திருந்தால் வீட்டை விடு வெளியே வராமலிருந்திருப்பாளே.. 
இரண்டரை வருடமாய் அவன் கண்ணில் அவள் படாமல் இருப்பதாய் கனவு கண்டிருக்க.. அவன் வெளிநாட்டிலிருந்து சில மாதம் முன் தான் வந்திருக்கிறான் என்பது செய்தியே. மீண்டும் இங்கிருந்து ஓட்டமா? மனம் தாளவில்லை. கவலை இல்லாமல் ஓடி இருப்பாள் கண்ணன் என்ற ஒருவனிடம் தன்னை தொலைக்காமலிருந்திருந்தால்.
தானும் காயப்பட்டு அவனையும் காயப்படுத்தி.. ச்ச.. என்னடா வாழ்விது என்றாகிவிட்டது சுதாவிற்கு. இப்படி அவனிடம் மாட்டிக்கொள்வாள் என்று தெரிந்திருந்தால் கழிப்பறைக்கும் சென்றிருக்க மாட்டாள், வனஜாவையும் பார்த்திருக்க மாட்டாள், அப்படியே அவளை பார்த்திருந்தாலும் பத்துவின் நிச்சயத்தைப் பார்க்கப் போயிருக்க மாட்டாள்.
“ஆண்டி.. அங்க வெளில ஃபோன் பேசிட்டு இருக்க அங்கிள் உங்கள வரச்சொல்லி கூப்பிட்டாங்க. அந்த பில்லர் பின்னாடி வெயிட் பண்றாங்க!” சொல்லிச் சென்ற சிறுமியிடம் இடம் கேட்டுச் சென்றவள் அஷோக்கை எதிர்பார்த்து தான் சென்றாள்.
அங்கு இவனைப் பார்த்ததும், வந்த வேகத்தில் பின் செல்ல நினைக்க மட்டுமே முடிந்தது. அவள் கல்லூரி நண்பர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான் என்று அவள் கனவா கண்டாள்? அவள் வனஜாவை அங்கு பார்த்தது அவளே எதிர்பாராதது. இன்னும் அவள் பழைய நட்பு வட்டாரங்களுடன் தொடர்பில் இருப்பாள் என்ற கணக்கை அவன் போட.. இவள் எதேச்சையாக அவர்களைப் பார்க்க.. இவன் வலையில் மாட்டிக் கொண்டாள்.
அவன் வேண்டா வார்த்தைகள் பேச இவள் கை ஓங்க அவள் இரு கைகளையும் பிடித்து மடக்கி அவள் பின்னால் அதைச் சிறைபிடித்திருந்தான்.
“கைய விடு இல்ல நான் கத்திடுவேன். எப்பொவும் பாவம் பார்த்து விட மாட்டேன்.” என மிரட்டியும் பார்த்தாள், ஆனால் அவன் அசைவதாயில்லை.
“நீயா? எப்போ பாவம் பார்த்த… நீ எல்லாம் எனக்குப் பாவம் பார்ப்பியா?”  சிரித்தவன், “உன் வாய் இருக்கே.. உன் வாய், அது தான் உனக்கு கேடு! அத வச்சிட்டு சும்மா இருந்திருந்தா இந்நேரம் ஒழுங்கா என் மனைவியா இருந்திருப்ப.. ஆனா உன்னால முடியல. இப்போ அனுபவிக்கர! கூப்பிடு.. யார வேணும்னாலும் கூப்பிடு எனக்கு ஒன்னும் இல்ல.. நமக்குள்ள நடந்தது நமக்குள்ள இருக்காது.. அப்புறம் டேமேஜ் உனக்கு தான்..” 
அவன் பேசிக்கொண்டே போக.. தூணில் சாய்ந்து நின்றிருந்தவள் மனதோ ‘கண்ணா எங்க போனீங்க.. பீலீஸ் வந்து என்னை இவன் கிட்ட இருந்து கூட்டீட்டு போங்க’ என கதறியது. 
அவன் பேச அவள் காதருகில் குனியும் போது, அவன் மது வாடை கலந்த மூச்சுக் காற்று அவள் கழுத்தில் படும் வேளை அவனை இழுத்து மூக்கை உடைக்கும் வெறி வந்தது. அவன் குனியும் போதெல்லாம் கண்ணை மூடி மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டாள். 
சிந்தனை கண்ணையே சுற்றி வர, காலையில் கண்ணன் மூச்சுக் காற்று பட்ட வேளையில் வயிற்றில் எழுந்த பட்டாம்பூச்சிகள் என்ன.. இப்பொழுது இவன் அருகில் வரவும் எழும் அருவருப்பு தான் என்ன? கம்பளிப் பூச்சியை அவள் மேல் உரசி உரசி எடுப்பது போல இருந்தது அவன் மூச்சுக் காற்று.
அவள் இரண்டு கையும் ஒன்று சேர அவன் ஓரே கையாய் அவள் பின்னால் சிறை பிடித்திருக்க அது வலியையும் எரிச்சலையும் சேர்த்தே கொடுத்தது. உணர்வுகள் வலித்தாலும் முகமோ எதையும் காட்டவில்லை. 
எதிரில் நின்றிருந்தவனை வெற்று பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘உன்னால் என்னை அசைக்க முடியாது’ என்பது போல்! அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கோ கோபம் தலைக்கேறியது.
“முதல்ல ஒன்னை நல்லா நினைவுல வச்சுக்கோ.. உனக்கும் எனக்கும் என்னைக்குமே எந்த உரவும் இல்ல! நீ என்னைப் பார்த்து  தப்பா பேசின.. நான் உன்ன திட்டினேன். அதுக்கு நீ ஒரு தரம் என்னைக் கேவல படுத்தியாச்சு.. அதோட விடேன்.. ஏன் என் பின்னாடியே வந்து என் நிம்மதியை கெடுக்கர?”
“அப்படி எல்லாம் உன்ன விட முடியாது… என்னன்ன பேசிட்ட… இன்னும் என் ஃப்ரெண்ட்ஸ் முன்னால என் அப்பா முன்னால என்னால தல நிமிர்ந்து நிக்க முடியல.. என்னை அசிங்க படுத்திட்டு நீ இங்க ஹாயா செவென் ஸ்டார் ஹோட்டல்ல சுத்திட்டு இருக்க..”
“என் அப்பா எனக்காக சம்பாரிச்சு வச்சார். நான் சுத்துறேன்.. உன் காசு இல்லியே.. அதனால அத பத்தி நீ பேசாத! இங்க பார்.. நீ என்ன தான் சந்தனத்தை பூசிகிட்டாலும் நீ சாக்கடை தான்.. நான் உன்ன பத்தி சொன்னதில்ல எந்த பொய்யும் இல்ல…  அது உனக்கே தெரியும். நீ ஒரு பொம்பள பொறிக்கி.. உன் கூட என்னால வர முடியாது. எனக்கு எங்க இருக்கணும்னு தோணுதோ அங்க தான் இருப்பேன்.. உன் வேலைய பார்த்து போ.. என் பின்னாடி சுத்தி, உனக்கிருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் கெடுத்துக்காத!”
கையை இன்னும் இருக்கி பிடித்தவன், “என்ன டி விட்டா பேசிட்டே போர! நீ இங்க இருந்தது போதும் வா வீட்டுக்கு.. ஊரரிய, என் ஃப்ரெண்ட்ஸ் முன்ன.. ‘நீ தல குனிஞ்சு’ என் கையால தாலி வாங்கணும்! மாட்டேணு அடம் பிடிக்காத.. விளைவ தாங்க மாட்ட!”
“உன் பூச்சாண்டி வேலைய வேற யார் கிட்டையாது காட்டு! நீ என்ன பண்ணினாலும் கண்டிப்பா நான் உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன்…” அவன் கையை இறுக்க இறுக்க வலியில் வார்த்தை பலவீனமாய் வந்தாலும், முடிவோடே கூறினாள்.
“அதுக்கு எனக்கு உன் பர்மிஷன் தேவ இல்ல.. தாலி கட்டி மனைவியானா உனக்கு மரியாதை… அம்மா அப்பாக்காக உன் கிட்ட பொறுமையா போறேன்..”
முழு வெறுப்பையும் அவள் கண்ணில் காட்டி முறைக்க,
“என்னடி, இவ்வளவு திமிரா நிக்குரா? சொல்லுரது எதுவும் மண்டையில் ஏரலையா? நீ எனக்குத் தான்.. எனக்கு மட்டும் தான். யாராலையும் அத மாத்த முடியாது.. நீயே நினைச்சாலும்! பார்த்த இல்ல நீ எங்க ஓடினாலும் கண்டுபிடிச்சுடுவேன்.”
“நான் ஏன் ஓடனும்? ஓட மாட்டேன்.. இங்க தான்.. இந்த ஊர்ல தான் இருப்பேன். எனக்கு பிடிச்ச ஒருத்தரை விரும்பி கல்யாணம் பண்ணி… அவருக்கு மனைவியா இங்க தான் இருப்பேன்.. போடா.. உன்னால ஆனதைச் செய்.. 
என்னைப் போக விடு.. உன்ன சும்மா விட்டுறேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் அவரே வந்திடுவார்.. வந்தா.. நீ என் கிட்ட மிஸ்பிஹேவ் பண்றத பார்த்தார்னா.. நடந்து வீட்டுக்குப் போக மாட்ட”
“ஓ அதுக்குள்ள அடியாளெல்லாம் செட் பண்ணிட்டியா? வெரி ஸ்மார்ட். அவனுக்குத் தெரியுமா நம்ம உரவு.. தெரியாட்டி இத காட்டு”
அவன் கைப்பேசியிலிருந்து எதையோ காட்டியவன், அவள் கைபேசியை வாங்கி அவளிடமிருந்து ஒரு மிஸ்ட் காள் ஒன்றை அனுப்பி கொண்டான். “வாட்ஸ் அப் வச்சிருக்க இல்ல.. அனுப்பறேன்!”
புகைப்படத்தைப் பார்த்தவள் சலிப்போடு, “பாத்ரூம்ல, துணிமாத்தும் போதுனு இன்னும் எத்தன நாள் தான் இதையே செய்ய போரீங்க? ச்ச.. நீ இவ்வளவு மட்டமா போகணுமா? உனக்கே கேவலமா இல்ல?
இது இல்ல.. இது மாதரி நூறு நான் உனக்கு தாரேன்.. உக்காந்து விடிய விடிய பார்..  ஏன் ஆன்லைன்ல கூட அப்லோட் பண்ணி பார்.. யூ திங்க் ஐ க்கேர்?
நான் ஸ்விம் பண்ணும் போது இத விட சின்னதா போட்டிருப்பேன்.. வந்து அத ஃபோட்டோ எடுத்துக்கோ.. யூஸ்லஸ் இடியட். உன் மட்டமான ஐடியாவ உன்னோடையே வச்சிக்கோ..”
அவன் என்ன சொன்னாலும் அசராமல் நின்றவளைப் பார்க்கப் பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. அவள் திமிர், அசைக்கமுடியா நிமிர்வு.. அதனால் தானே அவள் பின்னே காலைச் சுற்றிய பாம்பாய் சுற்றித் திரிகிறான். அவளை அடக்க வேண்டும். அடக்கி ஆளவேண்டும்.. அது தான் அவன் விருப்பம்! அதை அடையும் வரை அவன் ஓயப்போவதில்லை.
அவளையும் அசைத்துவிட்டான் அவன் பிரம்மா அஸ்திரத்தால்.
“இது வெறும் ஸாம்பிள் தான்.. உனக்கு ஒன்னு தெரியுமா… நல்லா கேட்டுக்கோ..” என்று அவள் காதில் ஏதோ சொல்ல, 
“என்ன உளருரா?”  சந்தேகமாய் அவனைப் பார்க்க
“நம்பலையா.. அதுக்கும் ப்ரூப் வேணுமா?” காது மடலில் இதழ் உரைய அவன் கூறியது.. அவள் உயிரை பிடுங்கி எடுத்த வலியைக் கொடுக்க, 
‘ச்சீ.. ஏன்?’ என்று அவனைப் பார்த்து நின்றாள். 
அவன் வெகு நேரப் போராட்டம் வெற்றியில் முடிந்தது. அவளை அசைத்து விட்டான்.
“நீ… நீ பொய் சொல்ர! நான் நம்பமாட்டேன்.” அவள் இதயத்தோடு குரலும் உடைந்தே வெளி வந்தது. “எனக்கே தெரியமா எப்படி? நான் நம்பமாட்டேன்!”
“நான் சொல்லப் போரது உண்மையானு பாரு.. என் பேச்சில பொய் இல்லனு தெரியும்.. அன்னைக்கு உனக்கு..” அவன் சொல்ல சொல்ல அவளுக்கு  ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலிருக்கவே அமைதியாகிவிட்டாள்.
“நான் எதுவும் காட்டாம உனக்கு புரியவைக்கலாம்னு தான் நினைச்சேன்.. நீ தான் என் வாயக் கிளறின. நீ கை கால வச்சிட்டு சும்மா இரு நான் சொன்னது உண்மைனு ப்ரூவ் பண்றேன்..”
அவள் கைகளை விடுவித்தவன் அவளிடம் எதையோ அவன் கைப்பேசியில் மீண்டும் காட்ட அவள் துவண்டு போய்விட்டாள். அவள் வாய் பசையால் ஒட்டிக்கொண்டது. 
கண்ணனைக் கண்ணும் இதயமும் தேடவில்லை. இதற்கு மேல் என்ன என்பது போல் நின்றுவிட்டாள்.
இடையோடு கட்டிக் கொண்டு, அவள் முகத்தில் அவன் இதழ் ஊர்வலம் போகச் செத்துப் போய்விட்டால் என்ன என்று தான் தோன்றியது சுதாவிற்கு. அவள் எதிர்ப்பு அவனை நிறுத்தவில்லை.
“சரி வா.. போலாம்.. இங்க தான் தங்கி இருக்கேன், எனக்குத் தான் நீனு ஆகிடுச்சு..  வந்து கம்பனி குடேன்.. என்ன யோசனை.. வா என் கூட..” என அவளை இழுக்க, அவளோ உடைந்தே போனாள்.
கண்ணன் வாராது போயிருந்தால்.. நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 
சற்று முன் கண்ணனைக் கண்டாளே, கண் நிரைய.. உள்ளம் நிரைய..
‘பாவம் அவன் முகத்தில் தான் எப்படி ஒரு களைப்பு, வலி.. என்னை மறந்து அவனாவது நன்றாய் இருக்க வேண்டுமே’ என்ற வேண்டுதலோடே படுத்திருக்க, அவள் அறியவில்லை அவன் அவளை மறக்கபோவதில்லை என்பதை!
கையில் கற்றாழை சாற்றோடு சுதா வீட்டை அடைந்தவன் மனம் குழப்பத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. ‘நெருப்பு கொன்னுரும்னு தெரிஞ்சே பொய் விழுர விட்டில் பூசிட நீ!’ மூளை ஏகமாய் சாட, ‘உள்ளே செல்லவா? வேண்டாமா? என்ற பட்டிமன்றத்திற்கு, ‘செல்’ என்ற பதிலை அவனே வரவழைத்துக்கொண்டு கதவைத் தட்டக் கைவைக்கவும் கதுவு தானாய் திறந்து கொண்டது. ‘என்ன சொன்னாலும் இவங்க ரெண்டு பேருக்கும் மண்டையில் உரைக்கவே உரைக்காது போல!’
உள்ளே ஊசி விழுதால் கூட கேட்கும் அமைதி நிலவ தயங்கித் தயங்கியே நடந்தான். அவள் அறை வாயிலில் தவணி கிடக்க அதை எடுத்து அரையிருந்த துணி கூடையில் போட்டான். குளியலறை வாசல் முதல் அறையின் பாதி இடம் வரை ஈரமாய் இருக்க, ‘பாவம் ரொம்ப எரிஞ்சிருக்கும் போல அது தான், வந்ததும் தண்ணில நின்னுருப்பா’ மனம் பரிந்து பேச, கண் கட்டிலில் தலை முதல் இடை வரை ஈரத் துண்டால் மூடி இருந்தவள் மேல் நிலைத்தது.
அருகில் சென்றவன் அவளைப் பார்த்து நின்றான். அடுத்து? கூப்பிடுவதா? வேண்டாமா? கேள்விக்கு மனம் பதில் தரவில்லை. அவள் மூச்சு சீரக இல்லை. அவள் தூங்கவில்லை என்பது தெரிந்தது. ‘கதவையும் பூட்டாமா.. வீட்டுல ஆள் நடமாட்டம் கேட்டபிறகும் எப்பிடி அசையாம படுத்திருக்கா பார்! எல்லாம் கொழுப்பும்.. அசட்டுத் தைரியமும்!’ மனம் சாடியது.
அவளோ அவனின் வார்த்தை தந்த வலியும் அவள் இன்ப வாழ்வின் முடிவின் வலியுமாய் படுத்திருக்க, அவளைச் சுற்றி நடப்பது கவனத்தில் சேரவில்லை. ‘இது என்ன வாழ்க்கை? அனாதையாய்.. ஆதரவு இல்லாமல், என் வேதனையைக் கூட யாரிடமும் பகிர முடியாத வாழ்க்கை.. இது எதற்கு?’ என மனப்போராட்த்தில் கண்மூடி படுத்திருந்தாள்.
அவளிடம் பாட்டி மருந்து வாங்கி வருவதாய் சொல்லிச் சென்றது மட்டுமே தெரியும். கதவைத் திறந்து வைத்து விட்டுச் செல்லும் வழக்கம் அவரிடம் இல்லை என்பதால் அதைப் பற்றி அவள் எண்ணவில்லை.
மெல்ல அவள் முகத்தை மூடி இருந்த ஈரத் துண்டை அவன் நீக்க, வெளிச்சம் படவும் கண்களை இருக மூடிக்கொண்டாள். பாட்டி என்றே நினைக்க அவள் அசையவில்லை. பேச விருப்பமில்லாது போகவே கண்களை மூடியே படுத்திருந்தாள். 
ஒரு வாரமாய் எவ்வளவு முயன்றும் அவளால் சாதாரணமாய் இருக்க முடியவில்லை. பாட்டி எப்படி எல்லாமோ கேட்டுவிட்டார், அவளிடமிருந்து பதில் இல்லை. அதனால் இருவரும் தேவைக்கு மட்டுமே பெசிக்கொள்ள, அமைதியாய் துண்டை நகர்த்தவும் பாட்டி மருந்தோடு வந்திருப்பதாய் நினைத்துப் படுத்திருந்தாள். 
ஈர முடியிலிருந்து நீர் சொட்டி கொட்டிருந்தது. ஒரு புர கன்னமும்  ஆங்காங்கே தோல் சுருங்கி சிவப்பேறியிருந்தது. கை விரலிலிருந்து முழங்கை வரை வெந்து போயிருக்க,  அவன் நிலை மறந்து அவளுக்காய் மனம் வாடியது. ‘அறிவு கெட்டவனே.. என்ன பண்ணிவச்சிருக்க.. இப்போ நிம்மதியா? அவளுக்கு வலிச்சதும் உனக்கு வலி போய்டுச்சா?’ மனம் ஏசியது.
கையின் காயத்தின் மேல் அவன் மென்மையாய் வருடவும், அவள் உணர்வு முழித்துக் கொண்டது. அவன் பிரத்தியேக நறுமண திரவியமும் அவன் ஸ்பரிசமுமே நிற்பது யாரென்று உணர்த்த உடல் சட்டென்று விறைத்தது. 
கற்றாழை சாற்றில் தோய்த்த பஞ்சியை சிவப்பேறியிருந்த இடத்தில் தாயின் கரிசனத்தோடே வைத்தவன் மனம் சுற்றம் மறந்து, அவன் உள்ளத்தின் வலி எல்லாம் மறந்து, காயத்தின் எரிச்சல் போய் கொப்பளம் வராது ஆறவேண்டும் என்று மட்டுமே யோசித்தது.
அவள் முகம் நோக்க அவளோ அவனையே பார்த்துச் சாய்வாய் படுத்திருந்தாள். கண்ணிலிருந்து வெளியே விழுந்துவிட நீர் துடித்து நிற்க அவள் அதை வெளியில் அனுப்பாமல் இருக்கப் பாடுபடவேண்டியிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். பேசவில்லை. பேச தோன்றவில்லை. மௌனம் பேசியது. அவள் நடிக்கத் தான் செய்தாள்.. தெள்ளத்தெளிவாய் புரிந்தது. அவள் காதல் நடிப்பல்ல. காதல் இல்லை என்றாளே அது தான் நடிப்பு!
மீதமிருந்த சாற்றை அருகிலிருந்த மேஜை மேல் வைத்தவன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு அறையை விட்டு நகரவும் அவளுக்குத் தவறு செய்வது போன்ற உணர்வு. ‘இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ இந்த வாழ்வில்’ என்றிருந்தது. 
அவன் உணர்ச்சியற்ற முகம் அவளை அசைக்க, ‘என்னோடு இவனும் துன்பம் அனுபவிப்பதா?’ என்ற எண்ணமே மேலோங்கியது.
‘நீ நல்லவன்.. உயர்ந்த குணம் படைத்தவன்.. சுத்தமானவன்.. நான் அப்படியல்ல! சாமிக்கு எச்சில் இலையில் படைக்கக் கூடாது.. நான் உனக்குத் தகுதியானவள் இல்லையே.. நான் உனக்கு வேண்டாம் கண்ணா’ நெஞ்சு குழிக்குள் இதயம் ஓலமிட்டது.
‘என்னை நினைக்காதே.. மறந்து விடு! நான் சகதி என்னை பூசிக்கொள்ளாதே.. என் அருகில் நீ வந்தால் என்னோடு புதை குழியில் நீயும் புதைந்து விடுவாய்.. தள்ளி போ..’ உள்ளுக்குள்ளே அழுதுகொண்டாள்.
இவ்வளவு சொல்லியும் காயத்திற்கு மருந்து போட வந்தவனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் இருக்க.. இனி அவன் தனக்கில்லை என்ற உண்மையை விழுங்க முடியாமல் அவன் பின் சென்றாள்.
வாயில் வரை சென்றவன் அவள் இப்பொழுதாவது வாய் திறப்பாளா என்று திரும்பிப் பார்க்க அவள் அவனை பார்த்தவாறு அறையின் மூலையில் நின்றிருந்தாள். 
‘என்னிடம் உண்மை உரைக்க மாட்டாயா’ எனக் கேட்ட அவன் உயிரற்ற பார்வை..  
‘உண்மையைச் சொல்லிப் பிரிவதே அவனுக்குக் கொடுக்கும் மரியாதை’ எனத் தோன்றவும் சொல்லிவிட முடிவெடுத்தாள்.
எல்லாம் சொல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாலும் வார்த்தைகள் பஞ்சம் ஆகிப் போனது!  ‘ஏதாவது கேளேன்..’ என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.
அவன் கதவைத் திறக்கவும் ‘இதுவே அவனைக் கடைசியாகக் காண்பது’ என மனம் அலாரம் அடிக்க எல்லா தைரியத்தையும் திரட்டி, “அவன் பேர் தீபக்” என்று நிறுத்தினாள். அஷோக் அங்கேயே அப்படியே நின்றுவிட்டான். திரும்பவில்லை.  
டைனிங்க் மேசையை சுற்றியிருந்த நாற்காலி ஒன்றில் போய் அமர்ந்து கொண்டாள். வறண்டக் குரலில் ஆரம்பித்தாள் “யாருக்குப் பயந்து இங்க ஓடி வந்தேனோ, யார இனி என் வாழ்க்கைல சந்திச்சிடவே கூடாதுனு இருந்த ஒரே சொந்தத்தையும் விட்டு இங்க வந்தேனோ அவன தான் நீங்க பார்த்தது…”
“தீபக், என் அத்தையோட ஒரே வாரிசு.. அவங்களுக்கு உயிர். எனக்கு எமன்!” என்று நிருத்த அஷோக் உள்ளே வந்தான்.

Advertisement