Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 26
சுதா எ.கெ.மில்ஸ் வந்து மாதம் ஒன்றாகி விட்டது. அது எ.கெ.மில்சின் தலைமை அலுவலகமாயிருக்கவே ஹெச்.ஆர், ஃபைனாஸ், டெக்ஸ்டைல் டிசைனைங், ஃபேஷன் டிசைனிங், ரிசர்ச் டிபார்ட்மென்ட், ஐ.டி செக்டார், ஜிம், ஓய்வறை, கேஃபிட்டேரியா இன்னும் பல என அந்த எட்டி அடுக்கு மாடிக் கட்டிடம் பல இலாக்காக்களுடன் நிரம்பி வழிந்தது. 
இளமை துள்ளும் இளவட்டங்களும் அனுபவம் பேசும் நரைத்த பெரியவர்களுமாய், வேலை பார்க்க ஏற்ற இடமாய் இருக்கவே சுதாவிற்கு அலுவலகம் பிடித்துப் போனது.
அங்கு அஷோக்கைத் தற்செயலாய் பார்ப்பதென்பதும் அரிதே. புடை சூழ வருவான்.. அவன் அலுவலக அறையிலிருப்பான்… பார்க்க வேண்டிய வேலையை பார்ப்பான். சென்றுவிடுவான். எப்பொழுது வருவான் எப்பொழுது செல்வான் ஒருவருக்கும் தெரியாது. அங்குள்ள பாதிப்பேர் அவனைப் பார்த்தது கூட கிடையாது. நினைத்ததும் பார்க்கவும் முடியாது. நெருங்க முடியாத உச்சத்தில் அவன். கீழ் நிலை பயிற்சியாளாய் அவள்.
அதனால் தானோ ‘நானே கண்டுபிடிப்பேன் உன்னைப் பற்றி’ என்றவள் இன்னும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள்?!
அஷோக் தொழிலில் நுழைந்ததும் அவர்கள் நிறுவனம் ஆண்களின் ஆடை உலகையும் கைப்பற்றியதோடு நிற்காமல் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாக்கப்படும் சர்வதேச பிராண்ட் ஆனது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான விலை உயர்ந்த இழைகள் இங்கு லக்ஷிரி ‘ஷர்டிங் அண்ட் சூட்டிங்’காய் மாறி ஏற்றுமதியானது.
அஷோக்கின் ஒரு வருட விடா முயற்சியால் லண்டனிலும், ஸ்விஸிலும் ஒரு பெயர்போன பெரிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. இது ஒப்பந்தமாகும் பட்சத்தில் ‘யூரோப்’ சந்தையில் கொடி கட்டி பறக்கும் நிலை. அதன் வேலையில் தான் இப்போது ஈடுபட்டுள்ளான். மிக மும்முரமாக!
முதலில் அஷோக் அலுவலகத்தில் அவனைச் சுதா நேரே பார்க்கும் சமயம் அவளின் முகத்தில் ஏற்படும் இன்ப அதிர்ச்சி காண ஆவல் கொண்டு, பின் அவளின் குனிந்த தலையாலும், அவனின் அதிகப்படியான வேலையாலும் அதை மறந்தே போனான்.
நேர்முக தேர்வின் போது பார்த்த கார்த்திக், இன்று அவளின் ஆருயிர் தோழன் பதவியில். அவளுக்கென்று தோழர் கூட்டமும் உருவாகியிருக்க நாட்கள் குதுகலமாகவே சென்றது.
என்றும் போல அன்றும் மதியம் 12:30 மணியளவில் கார்த்திக் அவளிருக்கும் இடத்திற்க்கு வந்தவன், “ஓய் பேரீச்சம்பழம் கான்டீன் போலாமா?” என்றாரம்பித்தான்.
அவனைத் திரும்பிப் பார்க்காமலே கையில் கிடைத்த பொருளினால் அவனை ஒரு மொத்து மொத்தி விட்டு, “அப்பிடி கூப்பிடாதனு எத்தன தடவ சொல்லுரது? நான் அந்த ஸ்கூட்டிய கொடுத்துட்டு புதுசா அக்டீவா வாங்கிடேன்.. “
“ம்ம்.. புது வண்டி, புது வேல.. அசத்து அசத்து பேரீச்சம்… இதே லிஸ்ட்ல என்னையும் உன்னோட புது பாய் ஃபிரண்டா சேத்துக்கோனு சொன்னா சேத்துகரியா?” கம்ளெயின்ட் வாசித்தான்.
பல முறை பல விதத்தில் கேட்டுவிட்டதாலோ என்னமோ அசராமல் அவளும், “ம்ம்ம் சரி… மண்டே டூ ஃப்ரைடே, காலைல 8:30-ல இருந்து இவ்னிங் 5:30 வரைக்கும் நீ இரு.. மத்த டைம்க்கு எனக்கு ஆளிருக்கு தம்பி!” என்றாள்.
“போடி.. கப்சா பேர்வழி..” அவன் நம்பவில்லை போலும்.
“இது தான் ஆஃபர்.. டேக் இட் ஆர் லீவ் இட்.. பாஸ்” எனவும்
கிடைத்ததே பெரிது என்பது போல், “ஓக்கே டார்லிங்.. வாட்டெவர் யூ சே! இப்போ வாயேன்.. சாப்பாட உள்ள அனுப்பிட்டு வேலைய பாக்க போணும்… தலைக்கு மேல வேல இருக்கு.. டூ மெனி நியூ பீஸ்.. வந்திருக்காங்க.. வேல நிறைய இருக்குப்பா..”
“2 மினிட்ஸ் கார்த்தி பையா..”
ஃபோனை நொண்ட ஆரம்பித்தவன், “என்ன கொண்டு வந்திருக்க?”
“சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா..”
“போடி இவளே.. எப்போ பார் ஹிந்தி காரி மாதரி.. சப்பாத்திய கட்டிட்டு அழர? ஒரு நண்டு மசாலா.. நாட்டுக் கோழி குழம்பு, பார்த்ததும் நாக்கில எச்சில் ஊருர மாதரி வஞ்சர மீன்.. இது எதுவுமே உனக்குத் தெரியாதா?”
“உன் வாய் ரொம்ப நீளுது கார்த்தி.. உனக்குச் சப்பாத்தி கிடையாது.. கான்டீன் ஃப்ரைட் ரைஸ் தான் டா இன்னைக்கு..”
“இந்த சப்பாத்திக்கு அதுவே மேல்.. போடி..
சரி.. சாப்பாட்டைப் பத்தி பேசி எனக்குப் பசி அதிகமாயிடுச்சு.. சட்டுனு வாயேன்.”
“நீ ரெண்டு நிமிஷம் கொஞ்சம் சும்மா இருந்தா.. வந்துடுவேன்… இல்ல லேட்டாகும்.. நீ இங்க வந்து உக்கார். கனி லீவ் இன்னைக்கு. ப்ரத்வியும் ஸ்ரீயும் இங்க வராங்கல்ல?.. லாவ் வேலை நிறைய இருக்கு கேன்டீன் வரலனு  சொல்லிட்டா” என அவள் அருகிலிருந்த இருக்கையை காட்டினாள்.
நான்கு நபருக்கு ஒரு கேபின், சுதாவும் கனிமொழியும் அருகருகே அமர்ந்திருப்பர். கனியின் இடம் காலியாய் இருக்க அதில் அமர்ந்துக் கொண்டான்.
கார்த்தி ஹெச்.ஆர் ஹெட்டாக இருந்தான். வயதை விடத் திறமைக்கே அங்கு மதிப்பென்பதால் இந்த உயர்பதவி.. இவன் மூலமே ப்ரத்வியும், ஸ்ரீதரும் பழக்கம். கனி அவளோடு ஃபைனாஸ் துரை. லாவன்யா கனியின் தோழி, டெக்ஸ்டைல் டிசைனராக பணி புரிந்து வருகிறாள்.
அவரவர் வேலையில் மூழ்கி இருந்தாலும், காலை காபி, மத்திய உணவு நேரம் மற்றும் மாலை  சிற்றுண்டி இடைவேளையில் சந்தித்துக் கொள்வர்.
இவர்களில் கார்த்திக்கிற்குச் சுதா மேல் அதிக பிரியம். முதன் முதலில் அவன் தான் அவளுக்கு இங்கு பரிட்ச்சையமானதாலோ என்னவோ அவளுக்கும் கார்த்தியே  அதிக பிடித்தம். இந்த நட்பு, பார்த்த முதல் தினமே ஆர்ம்பித்துவிட, அவர்கள் பழக்கம் மாதங்களைக் கடந்தது.
ஏனென்று தெரியாமலே இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம்.. அஷோக்கைப் பார்க்கும் முன் ஒருவேளை கார்த்திக் அவள் வாழ்வில் வந்திருந்தால் இந்த நட்பு, நடப்பைத் தாண்டி இருந்திருக்குமோ? தெரியவில்லை.. அது நடக்கவில்லை என்பதால் இப்போதைக்கு அது நமக்குத் தேவையில்லாத விஷயம்!
கார்த்தி அவன் ஃபோனை தட்டிக் கொண்டிருக்க ஸ்ரீயும் ப்ரத்வியும் வந்து சேர்ந்தனர்.
“அவனுங்களும் வந்தாச்சா…” என்று எழுந்து நின்று கொண்டே மடிக்கணினியை தட்டிக்கொண்டிருந்தாள். கார்த்தி அவள் மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டே.. “வெயிட் பண்றேன்.. அவசர படாம பார்த்துச் செய். ஒரு சீரோ தப்பா போட்டாலும் பிரச்சனைல மாட்டிப்ப!”
நின்றுக் கொண்டிருந்த ஸ்ரீ, கார்த்திக்கைப் பார்த்து, “டே மச்சான்.. என் ஃபிகர் டா.. பாஸ் கூட வரா டா” என்றான் வாய்பிளந்து.
அது வரை அமர்ந்திருந்தவன், அரக்கப் பரக்க எழுந்து முடியை கோதிக்கொண்டே, “எங்க டா.. உன் வருங்கால அண்ணிய பார்த்து ஜொல்லு விடாத மச்சான்..” என்றவாறே அவர்கள் ஜோதியில் ஐக்கியமானான்.
அஷோக்கும், அவன் ஒரு புறம் அவன் செக்கரட்டரி மாலினியும் மற்றொருபுறம் ஒரு வாலிபனும், ஒரு வயதானவரும் அந்த தளத்திலிருந்த கான்ஃபிரன்ஸ் ஹாளிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தனர். அவன் பின்னே ஒரு கூட்டம் கலைந்து சென்றுகொண்டிருந்தது.
அஷோக்கின் பார்வை அவர்கள் இருந்த இடத்தை தொட்டுச் சென்றது.  முக்கியமாய் அங்குக் குனிந்து நின்றுக் கொண்டிருந்தவளை… ஒருமுறையேனும் பார்க்க மாட்டாளா என்று!
கார்த்தி, “என்ன டா… புதுசா பாஸ் இந்த ஏரியா பக்கம் எல்லாம் வரார்? அவர் ஆஃபீஸ் ரூம்கடுத்து இருக்க கான்ஃப்ரெஸ்  ஹால்ல தானே அவர் மீட்டிங் இருக்கும்… இந்த மாசம் மட்டுமே ரெண்டு தரம் அவரை பார்த்துடேன் டா… அதுவும் இந்த ஃப்லோர்ல.. நீ கவனிச்சியா?” 
ஸ்ரீ, “இல்ல மச்சி.. நீ அவர் ஃபேன்.. அவரை கவனிப்ப.. எனக்கு அவரோட ஒருத்தி போராளே அவளைப் பார்க்கவே கண்பத்தல.. அவர எங்க பார்க்க!”
கார்த்தி, ஸ்ரீ முதுகை லேசாய் தட்டி, “பார்த்து.. வருங்காலத்து பாஸ்ச பத்தி பேசர.. அவ காதில விழுந்திடாம”
நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் அது சுதாவின் காதில் விழுந்தாலும்.. மனதில் பதிந்தாலும்.. கவனத்தை அது கவரவில்லை. நின்று கொண்டே இன்னும் அவள் மடிக்கணினியில் எதையோ தட்டிக்கொண்டிருந்தாள்.
அது ஒரு பெரிய அறை. அதன் ஒரு புறம் சுதாவின் இடம் இருந்தது. மறுபுறம் கான்ஃபிரன்ஸ் ஹாளும் மற்றும் பல பெரும் தலைகளின் தனி அறைகளுமிருந்தது.
கார்த்தி, “ஐயோ.. என்னம்மா இருக்காடா… சைஸ் சீரோ இருப்பாளா?.. படச்சவன் கஞ்சனா.. தாராள பிரபுவா? சரியான இம்போர்ட்டட் பீஸ் டா… எ.கெ கொடுத்து வச்சவர். அவர் கூடவே சுத்துறாளே..” பெருமூச்சு விட..
ஸ்ரீ, “அவர் பி.ஏ. அவரோட தானே இருப்பா?”
இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருக்கக் கையிலிருந்த ஃபைலால் கார்த்திக் முதுகில் ஒன்று வைத்த சுதா, “டேய் எரும.. பக்கத்தில ஒரு பொண்ண வச்சுக்கிட்டு என்னலாம் பேசுர..?” எனவும்
“இரு இரு..” என் கார்த்தி சுற்றுமுற்றும் பார்க்க
சுதா அவனை முறைத்துக்கொண்டே, “நீ மட்டும் ‘பொண்ண தேடுரேனு’ மொக்க போட்டனு வச்சுக்கோ.. கொன்னுடுவேன் ஜாக்கரத!” என
“ஹீ ஹீ..” என்று அவன் சுதாவைப் பார்த்து பல்லைக் காட்ட
ப்ரத்வி, “டேய் மாலினி இங்க வர மாதிரி இருக்கு டா..”
நிமிர்ந்து பார்த்த கார்த்திக்குத் தெரிந்தது அவள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பது. சுதாவும் அப்பொழுது தான் தலை திருப்பிப் பார்த்தாள்.
பிசினஸ் சூட்டில் அதி நாகரீக இளம் பெண் வந்து கொண்டிருந்தாள்.
சுதா, “தம்பி கார்த்தி… நீ அவளப் பத்தி சொன்னதில தப்பே இல்ல டா.. செம்மையா இருக்கால்ல.. பார்பி டாள் மாதரியே.. அவ பார்பி-னா நீ என்ன கென்னா?”
“அது யார்டி கென்?”
“பார்பியோட பாய் ஃப்ரெண்ட்..!”
“அப்போ கென் நான் இல்ல.. நம்ம பாஸ்” என்று புன்னகைத்தான்.
பார்வையில் ஒரு அலட்சியம், இப்பொழுது தான் அழகுநிலையத்திலிருந்து வந்தார்போன்ற அடர்த்தியான உதட்டுச் சாயம், அளவான மேக்கப்போடு பளிச் முகம்,  நடையில் ஒரு திமிர், அவள் மேல் வைத்துத் தைத்தது போன்ற உடை, காலில் பென்சில் ஹீல்ஸ், அவள் நடைக்கேற்றாற் போல் தோள் வரை நீண்டு பெண்டுலமென ஆடிக் கொண்டே வந்த குதிரை வால் தலை அலங்காரம். கையை மடித்து அதற்குள் அடக்கி வைத்திருந்த கோப்பு…
பார்த்தவர்கள் பார்த்துக்கொண்டே இருக்க, கார்த்திக் அருகில் வந்தவள், “மிஸ்டர். கார்த்திக், பாஸ் 2:00 மணி மீட்டிங்குக்கு உங்களையும் வர்ஷாவோட வர சொன்னார். இன்னும் ஃபிப்டீன் மினிட்ஸ்ல டீடைல்ஸ் மெயில்ல அனுப்பறேன். உடனே ரிப்ளை வேணும் அதுக்கு தான் வந்து சொல்லிட்டு போறேன். பெட்டர் டோண்ட் பி லேட்”
வந்தாள், அங்கில துரை போல் மொழிந்தாள், சென்றாள்.
அத்தனை அலட்சியமாய் ஒருத்தியால் பேச முடியுமா? சுதா, “என்னடா இவளையா சைட் அடிக்கர?” நக்கலாய் கேட்க
கார்த்தி, “தப்பா பேசாதா.. இவளையும்” என்று திருத்தி கண்சிமிட்ட
சுதா, “நீ நிஜமாவே எரும டா.. என்ன திட்டினாலும் பல்ல காட்டு..” என்றாள் புன்னகை முகமாய். ஏனோ அவன் என்ன சொன்னாலும் அவளுக்கும் கோபம் வருவதில்லை.. அவள் எப்படித் திட்டினாலும் அவனுக்கும் கோபம் வருவதில்லை. அவர்கள் அப்படி தான்! பார்ப்பவர்கள் பொறாமை கொள்ளவைக்கும் பெயர் தெரியாத உறவு. ஒன்றாய் பிறந்து ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே டம்ளரில் குடித்து வளர்ந்த எஃபெக்ட் இருக்கும் அவர்களைக் கவனித்தால்.
“டேய் கார்த்தி.. எனக்கு மாசம் மாசம் வர வயத்து வலி டா… கொஞ்சம் வீடு வரைக்கும் கொண்டு விடேன்..” என்பாள் கூச்சமே இல்லாமல்
“அடியேய் நான் ஒரு ஆம்பள டி… என் கிட்ட இப்படி தான் பேசுவியா?” என்பான்.. இருந்தும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ் ஜூஸ் வாங்கி தந்து அலுங்காமல் குலுங்காமல் வீட்டில் சேர்த்துவிடுவான்.
“நீ பொண்ணா இருந்திருந்தா.. எல்லாருக்கும் வரது தான்… போய் வேலைய பாருனு தொரத்தியிருப்ப.. இப்போ பார் என்னை நீ தாங்கரத..”என்பாள். 
நட்பையும் தாண்டி, சகோதர பாசத்தையும் தாண்டி, தகப்பன் மகள் பிணைப்பையும் தாண்டி ஒரு வகையான உன்னதமான உறவில் பயணித்து வந்தனர்.
சில நிமிடங்களில் தான் செய்து கொண்டிருந்த வேலையை சுதா சேவ் செய்ய, மத்திய உணவையும் எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கிளம்பினர்.
மாலியின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ மீண்டும் ஆர்வகோளாராய், “கார்த்தி உன் ஹயிட் என்ன டா?”
“5.9.. ஏன்?”
“அவ உன்ன விட ஹயிட்டா இருந்தா டா..”
“ஹீல்சோட சைஸ்ச பார்க்கலியா நீ..”
சும்மா இருந்தவர்கள் வாயில் அவலாய் மாலினி மாற.. மாலினியின் மண்டையைத் தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு அடுத்த அறையில் இருந்த லிஃப்டின் முன் நின்று கொண்டிருந்த அஷோக்கின் அருகில் நின்று கொண்டாள்.
“அங்க பாரு மச்சி.. எ.கெ மட்டும் தான் அவளுக்குப் பொருத்தம்.” ஸ்ரீ ஏக்க பெருமூச்சு விட்டான். அவன் கூறவும் அனைவர் பார்வையும் கண்ணாடிக் கதவைக் கடந்தது.
300 அடி தூரத்திலிருந்த கண்ணாடிக் கதவிற்குப் பின் இவர்களுக்கு முதுகைக் காட்டி அடர் சாம்பல் நிற சூட்டில் நின்றுக் கொண்டிருந்தவன் மேல் சுதாவின் கவனம் விழுந்தது.
ஒருவன் எதுவோ சொல்ல அங்கிருந்து நகர்ந்தான் அஷோக். நடையில் ஒரு வேகம்.. கம்பீரம்.. ஸ்டைல். கண்ணனைப் போலவே தோன்றினான். அவன் உயரமும், விரிந்த தோளும்.. கூனில்லா நிமிர்ந்த நடையும் கண்ணன் தான் என்றது மனம். அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஒட்டிக்கொண்ட ஆர்வத்தோடு அவள் நடையின் வேகத்தை அதிகரிக்க, கூடவே வந்த கார்த்தி, “பேரீச்சம் பழம் இப்போ எதுக்கு அந்த பக்கம் ஓடர? நம்ம இந்த பக்க லிஃப்ட்ல போகணும்?”
அவள் கதவை திறக்கும் முன் அஷோக் அங்கிருந்து சென்றிருந்தான்.
“யாரு கார்த்தி அது?”
“யார கேக்கர?”
“அந்த கிரே சூட் …?”
“விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பாவானு கேட்ட கதையா இருக்கு உன் கத! இவ்வளவு நேரம் நாங்க பேசும் போது தூங்கிட்டு இருந்தியா?”
சுதா, “விஷயத்தை சொல்லுரியா.. இல்ல நான் போய் பார்த்துகட்டுமா?”
கார்த்தி, “போயேன் யாரு வேண்டாம்னு சொன்னாங்க? அப்பாய்ண்ட்மென்ட் இல்லமா யாரையும் அவர் பாக்க மாட்டார். ரொம்ப பிஸியான ஆளு.. மோர் ஓவர் அவர் இப்போ எங்க இருப்பார்னு மாலினி ஒருத்திக்குத் தான் தெரியும்.. அவளும் அவர் கூடவே அட்ட பூச்சி மாதரி சுத்துவா… யார் கிட்ட கேட்கப் போர?”
இது வரை வாய் திறக்காத ப்ரத்வி சம்மன் இல்லாமலே ஆஜர் ஆனான். “டேய்.. அதெல்லாம் ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் டா..”
ஸ்ரீ, “பெரிய இடத்து பையனுங்க கொஞ்சம் அப்பிடி இப்பிடி தான் இருபாங்க.. உனக்கு எங்க வலிக்குது.. இவன் ஒரு பொறாமை பிடிச்சவன் டா கார்த்தி!”
‘என்னப்பேச்சிது’ என்பது போல் சுதா, “பச்..” என்று கார்த்தியை முறைக்க
“டேய்ய்ய்.. வாய மூடுறீங்களா?” அருகிலிருந்தவர்களை பார்த்துக் காய்ந்தவன், “அவர் நம்ம பாஸ் எ.கெ, சுதா. அவரோட குடும்ப பிஸினஸ் இது.. வீட்டுக்கு ஒரே வாரிசு! சென்னைல இருக்கும் போது இங்கேயும் மவுண்டு ரோட் ஆஃபீஸ்லயும் இருப்பார். அவர பாக்கரது ரேர். இப்போ தான் ஏதோ கொஞ்ச நாளா பாக்க முடியுது. எப்பவுமே ரொம்ப பிஸி..
பெரிய டீல் ஒன்னு சைன் பண்ண போரதா பேச்சு.. அதுக்குதான் ஏகப் பட்ட க்ளையன்ட் மீட்டிங் போயிட்டு இருக்கு. இந்த மாசம் தான் இந்த ஃப்லோர்ல பாக்கறேன். அவர் ஆஃபீஸ் ரூமே டாப் ஃப்லோர்ல, சரியான பீச் வியூவோட ஒரு வி.ஐ.பி ஸ்விட் மாதரி சூப்பரா இருக்கும்! ஒரு தரம் போயுருக்கேன். மனுஷன் ஒரு கலா ரசிகன்!
இவ்வளவு இன்ஃபோ போதுமா?”
“அந்த பொண்ணு?”
“இப்போ போனாளே ராங்கி.. அவ தானே? பேரு மாலினி. பாக்க அம்சமா இருப்பா.. பாஸ்ச மட்டும் தான் மதிப்பா.. மத்த யாரையும் மனுஷனா கூட நினைக்க மாட்டா. திமிர் பிடிச்சவ. பாக்க மட்டும் இல்ல ஆளும் ரொம்ப ஸ்மார்ட்.. பாஸ் எள்ளுனா எண்ணையா வேலை செய்வா.. அவரோட இன்னொரு ரைட் ஹாண்ட். அதாவது அவரோட செக்கெண்ட் பி.ஏ. இவ! எப்பவும் அவரோட இருப்பா. அவ என்ன செஞ்சாலும் அவரும் ஒன்னும் சொல்ல மாட்டார். தனி சலுக அவளுக்கு இங்க. அவரோட சொந்தம் போல. அவர் வீடு வரைக்கும் போககூடிய ஒரே ஆத்துமா.. குடுத்து வச்ச கட்ட! அவருக்கு அவள தான் முடிக்க போரதா பேச்சு.. நிச்சயமா தெரியாது..”
கார்த்தியின் கைப்பேசி அழைக்க, “சுதா.. நீங்க போங்க.. அம்மா ஃபோன்ல. பத்து நிமிஷத்தில வந்திடுறேன்”
அவன் போனபின் பேச்சு திசை மாறாமலே திசை மாறிச் சென்றது. ப்ரத்வி, “அப்பப்போ போய்டு வருவா.. பேசிகிட்டாங்க. அழகா இருக்கா.. அப்புறம் என்ன?” அப்படி ஒரு சிரிப்பு அவனிடம் மட்டும்.
ஸ்ரீ அவன் முதுகைத் தட்ட, “என்ன டா.. உனக்குக் கவலையா? வயத்தெரிச்சல் பிடிச்சவனே?”
“ஹ.. ஹ.. ஹா… நான் என்ன எ.கெ-வா? இவ என் கிட்ட மடங்க..” காரணமே இல்லாமல் மீண்டும் பலமாய் சிரித்து வைத்தான்.
எல்லா கூட்டத்திலும் ஒருவன் குட்டையைக் குழப்ப என்றே இருப்பான். அவன் தான் ப்ரத்வி! மற்றவர் வளர்சியில் பொறாமை. இயலாமையில் இப்படி தான் புறங்கூறுவான். நேரில் கண்டால் காலில் விழும் ரகம்.
சுதா, “இது என்ன பேச்சு ப்ரத்வீ.. அடுத்தவங்கள பத்தி தப்பா?”
ப்ரத்வி, “சுதா.. நெருப்பில்லாம புகையாது தெரியுமா.. போன தரம் ஒரு பார்டில அவ அவர் மேல தான் விழுந்து கிடந்ததா சொன்னாங்க..”
ஸ்ரீ, “அது அவ குடிச்சிட்டு.. போதையில மட்டையாகிட்டானு சொன்னாங்க..”
ப்ரத்வி, “அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னா போனாங்களாம்…” ஏளன சிரிப்பு சிரித்தான்.
ஸ்ரீ, “அவர் மேரேஜ் பண்ண போர பொண்ணோட எங்கையாவது போரார்.. உனக்கு என்ன? வேர பொண்ணோட போன மாதரி பேசர?”
ப்ரத்வி, “உனக்கு இப்பிடி வேர ஒரு நினைப்பு இருக்கா.. நம்ம ஹெச்.ஆர்-ல இருந்த மஞ்சுஷா, செதுக்கி வச்ச சில மாதிரி இருந்தா… அவ கூட இப்பிடி தானே அவர் பின்னாடியே உருகி உருகி போனா? எப்போ பார் அவ கூட என்ன தான் மீட்டிங்கோ? அவ என்ன ஆனா? வயத்தில பிள்ளையோட காணாம போனா…”
ஸ்ரீ, “டேய்.. பாவி.. அவ கல்யாணமாகி மெட்டர்னிட்டி லீவ்ல போனா டா.. அசிங்கம் பிடிச்சவனே..”
ப்ரத்வி, “நீ என்ன வேணும்னாலும் சொல்லு ஸ்ரீ.. எ.கெ. மாலினியைத் தான் மேரி பண்ண போரார்.. அது ரெண்டு விட்டிலையும் பேசி முடிவு பண்ணியாச்சாம்… அதுல சந்தேகமே இல்ல. ஆனா கல்யாணத்துக்கு முன்ன எவளாவது ஏமாந்தா அவர் வேண்டாம்னு சொல்ல மாட்டார்..”
இன்னும் ஏதேதோ அவன் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி கொண்டே போக அவளால் அங்கு இருக்கத் தான் முடியவில்லை.
இவை எல்லாம் உண்மையா பொய்யா என்று ஆரய கூட பிடிக்கவில்லை. தவறான நேரத்தில் தவறான மனிதனோடு தவறான பேச்சுகள் என்றுமே வாழ்க்கைக்கு நன்மை பயப்பதில்லை. ஒரு கண்ணாடியை சிறு கல் உடைப்பதில்லையா.. அப்படி தான் நம் நாவும். 
பேசிக்கொண்டிருந்த ப்ரத்வி சுதாவை நடுவில் இழுக்கவும், “..இதோ… சுதாவ கூட மொதல்ல அவர் தான் பார்த்தார். நானும் கார்த்தியும் அங்க தான் இருந்தோம் அப்போ.. பாக்க அம்ஸமா ஒரு ஃபிகர் வந்திடக் கூடாது.. எல்லாம் அவருக்கு வேணும்! அவர் சொல்லி தானே கார்த்தி…” அவன் சொல்லி முடிக்கவில்லை, ‘பட்டார்..’ என அவன் முதுகில் ஒன்று வைத்தான் கார்த்திக்.
கார்த்தி சுதாவைப் பார்த்து, “சாப்டாசில்ல, நீ..? கிளம்பு” எனவும் சிந்தனையில் இருந்தவள் அருவருப்போடே அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் நகர்ந்ததும் ப்ரத்வியிடம், “ஃப்ரண்டா போய்ட்ட.. சுதாவைப் பத்தி உன் வாயால எதுவாது பேசின.. ஃப்ரண்டுனு பாக்க மாட்டேன், பல்ல தட்டிடுவேன்.
சுதா பத்தி எப்படி டா பேச உனக்கெல்லாம் மனசு வருது? பொண்ணுங்க நம்மள ஒரு நல்ல துணையா நம்பி தானே ஃப்ரெண்டா பழகுராங்க.. உன் கூட இருக்கும் போதே அவள பத்தி பேசினா.. அவ இல்லாதபோ என்னலாம் பேசுவ? இனி மேல் அவ பேர் உன் வாயில வரக்கூடாது. உன்னலா மத்தவங்கள பத்தி தப்பா பேசாம இருக்க முடியலனா எங்க கூட வர வேண்டாம்.
இன்னும் அவரைப் பத்தி தான் பேசிட்டு இருக்கியா? எதனாலும் உண்மை தெரிஞ்சா மட்டும் சொல்லு… சும்மா இவன் சொன்னான் அவன் சொன்னானு கண்டதையும் சொல்லி ஒருத்தர் பேரைக் கெடுக்காதா..
பாஸ பத்தி உனக்கு என்னாடா தெரியும்? மடையா.. அவர பத்தி ஒருத்தர் தப்பா பேசுவாங்களா? இனி மேல் இந்த மாதிரி எங்க கிட்ட பேசாதா.. புரியுதா? ஒரு நாள் இது அவர் காதுவரைக்கும் போகும்.. அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி.. அத நினைவில வச்சுகிட்டு அவர பத்தி பேசு!
உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிக்கிட்டு!” வார்த்தைகள் காரமாகவே வந்தது.
கார்த்தி அங்கிருந்து சென்றுவிட ப்ரத்வி, “என்ன டா ரொம்பத் தான் பேசரான்.. அவன் கூட தானே பேசிட்டு இருந்தான்?”
ஸ்ரீ, “நாங்க பேசினது கிண்டல் பேச்சு, யாரையும் டேமேஞ் பண்ணாது. நீ அப்படி தான் பேசனியா? அதுவும் நம்ம ஃப்ரெண்ட பத்தி நீ பேசியிருக்கக் கூடாது தான். நான் கார்த்தி கட்சி இதில. அந்த பொண்ணு இந்த ஆஃபீஸ் வந்ததில இருந்து கோழி அது குஞ்ச பாத்துக்கரமாதரி அவள பாத்துக்கரான்.. இதோட விட்டானேனு சந்தோஷ படு!”
ப்ரத்வி எ.கெ. பற்றிக் கூறியது எதுவுமே சுதாவிற்கு ரசிக்கவில்லை. ‘ஏன் நான் கேள்விப்படும் வசதியானா ஆண்கள் எல்லாம் தருதாலைகளாக உள்ளனர்?’ என்றே எண்ணினாள். ‘அப்பாக்கு இல்லாத வசதியா? அதுவும் அமெரிக்காவிலிருந்தவருக்கு கெட்டுப் போக எத்தனை வழி. ஆனால் அப்பாவிற்கு இது போல் ஒரு பழக்கமும் இல்லையே..
இதற்குப் பணம் காரணம் இல்லை. சுயமாய் சம்பாரிக்காமல் பரம்பரை சொத்தில் திளைத்து நல்ல நண்பர் கூட்டம் இல்லாதது தான் காரணம்.’ என்று ஏதேதோ எண்ணங்கள்..
‘பாக்க கண்ணன் மாதிரி இருந்தாலுமே.. அவருக்கும் இந்த ஆளுக்கும் எவ்வளவு வித்தியாசம்.  பாக்கரவளோட எல்லாம் கேவலமா நடந்துப்பான் போல.. இப்படி ஒரு கம்பனியோட முதலாளி.. ஒரு பொறுக்கி! ச்சா.. இவன எல்லாம் நம்பி இவன பெத்தவங்க எப்படி இவ்வளவு பெரிய கம்பனிய கொடுத்தாங்களோ? இவன வேற கண்ணனாயிருக்குமோனு நினைச்சேன் பாரு.. என்னை சொல்லனும்! நல்ல வேளை இவன் மூஞ்சியெல்லாம் பார்த்து தொலையல!’
ஏற்கனவே பணக்கார ஆண்கள் மேல் ஒரு ‘நல்லெண்ணம்’ அவளுக்கு.. இப்பொழுது அந்த நல்லெண்ணம் முகம் தெரியாத எ.கெ. மேல் வந்து ஒட்டிக்கொண்டது.
‘ஊர் பார்வைக்குப் பெரியவன் தோரணையில் இருக்கும் மாலினியின் வருங்கால புருஷன், எ.கெ. ஒரு ப்ளே பாய்’ என்று!
அதோடு அவனை மறந்து விட்டாலும் அவனைப் பற்றி வந்த விஷயங்கள் மட்டும் ஆணி போல் உள்ளிறங்கி விட்டிருந்தது.

Advertisement