Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க

அத்தியாயம் 5

அர்ஜுன் கண்களுக்குப் பழக்கப்பட்ட அமுதா, அவன் விழுங்கி தின்னும் பார்வையையும் கடக்கக் கற்றுக்கொண்டாள்.

அவன் அவளைப் பார்வையால் விழுங்க ஓடி ஒளிவதில்லை… நடுக்கம் வருவதில்லை. கண் நிலம் நோக்கி.. விரிந்த இதழ் கடித்து அங்கிருந்து சென்றுவிடுவாள்.

அவளைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே உரசிச் சென்றான். அவள் ப்ரணவை தோளில் போட்டிருக்க அவள் கன்னம் உரைய மகனை முகர்ந்தான். சின்ன சின்ன.. பட்டும் பாடாமலுமான எதிர்ப்பில்லாத உரசல்கள்.. கண்களில் ஏக்கம். இருந்தும் இல்லாத நிலை.

இருவருக்கும் பிடித்தம் என்பது இருவர் கண்களிலிருந்து தெறித்து விழுந்த இதயம் சொன்னது.   அவன் விருப்பம் வாய்மொழியாக வரும்வரை அவள் மௌனசாமி தான். அவள் விருப்பம் தெரிந்தும், ஏதோ ஒரு தடை அவன் மனதை தெரியப்படுத்த.

இவளைப் பற்றிய அந்த ஒரு விஷயம் மட்டும் அவனுக்குள் கொஞ்சம் உருத்தலாகவே இருந்தது. அவளைப் பற்றிக் கூறப்பட்ட அனைத்தும் பொய். அவள் ஒழுக்கம் பற்றி அவனுக்குக் கூறப்பட்டதும் பொய் தானோ? அப்படி தான் நம்பினான்.. 

இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு இடரல்.. அவளே ஒப்பு கொண்டாளே…

இரண்டு வருடம் முன், “உனக்கும் வந்துட்டு போனவனுக்கும் தொடர்பு இருக்கா?” என்றதற்கு, முகம் பார்த்து கூறினாளே… “இருக்கு!” என்று. 

மடையன்.. ‘என்ன தொடர்பு?’ என்று கேட்டிருக்க வேண்டாமா?

எண்ணவோட்டங்கள் அவனை இழுத்துக் கொண்டது. ‘இப்பொழுது அவனோடு தொடர்பு இல்லையா? அவன் என்ன ஆனான்? இவள் நடவடிக்கையை பார்த்தால் எங்குமே தவறாய் தோன்றவில்லையே? அப்பொழுது அவனோடு சுற்றித் திரிந்தாய் தான் சொல்லப்பட்டது.. பொய்யான தகவலா? பொய் என்றால் ஏன் அன்று ஒத்துக் கொண்டாள்? அதனால் அவளுக்கு தானே அன்று அவப்பெயர்? இந்த பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாதா?’

“கேட்டுவிடலாமா?” மூளைக் கேள்வி கேட்க, அவனே பதிலும் தந்துக் கொண்டான்.  “எதற்கு கேட்கவேண்டும்? என்னை பிடிக்காத பட்ச்சத்தில் தானே கேட்கவேண்டும்? இவளுக்கு தான் என்னை பிடித்திருக்கின்றதே..”

“அதெப்படி உனக்கு தெரியும்? அவள் உன்னிடம் சொன்னாளா?” மீண்டும் ஒரு கேள்வி…

‘என்ன செய்யலாம்?’ யோசித்தவனுக்கு தோன்றியதெல்லாம் இது தான்;- “அப்பொழுதெல்லாம் அவள் அருகில் சென்றாலே பார்வையால் கொளுத்திவிடுவாளே.. போய் பார்ப்போமா?” 

யேனோ இந்த கேள்விக்கு மட்டும் பதில் உடனே அவன் விருப்பபடி வந்து விழுந்தது.

அவள் இதழோர சிரிப்பு கொடுத்த தைரியம் அவள் மாடியில் மகனைத் தோளில் போட்டு நின்றுகொண்டிருக்க, “நான் தூக்குறேன்” என்று அவள் மேனி சிலிர்க்க.. அவன் கை அழுத்தமாய் அவள் மேல் உரைய மகனை தூக்கினான்.

கூச்சத்தால் ஓரடி பின் சென்றாள்.. எரிக்கவில்லை அவனை.

கொஞ்சத் தைரியம் அதிகமானது. 

ஈர முடியை வாசம் பிடித்தான். கன்னம் பழுக்கவில்லை.

இடையோடு கட்டி தோளில் முகம் புதைத்தான். கண்மூடி நின்றாள்.

கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்தான். கண்களில் தாபத்தை கண்டான்.

எல்லை மீறி இதழோடு அவள் மென்மையை உணர்ந்தான்.. கண் சொருக நின்றாள்.

அவளிடம் மனதைச் சொல்லி எல்லாவற்றையும் சரி செய்து விட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டான். 

‘தாலி’ அதை நினைத்ததும் இதயம் பரபரத்தது. இவன் கட்டும் தாலி அவள் கழுத்தில்.. நினைக்கவே பிடித்தது.

அவன் துணிகளுக்கு அடியில் வைத்திருந்த தாலியை எடுத்து கண்ணில் நீரி துளிக்கப் பார்த்தான். 

இதையே போடவா? புதிது வாங்கவா? மிக முக்கியமான யோசனையிலிருந்தான்! சிறுவன் போல் உள்ளம் துள்ளியது.

எல்லாம் நல்லபடியாகச் சென்றது அந்த மாதம் பாதி வரை.. அவளுக்குப்  பணத்தேவை எழும் வரை.

அன்னம் இப்பொழுதெல்லாம் வீட்டோடு தங்குவதில்லை. இவளாய் கூப்பிட்டால் வருவார். மற்றபடி எல்லா ஞாயிற்றுக் கிழமை காலை ஆறு மணியளவில் வந்து திங்கள் காலை அர்ஜுன் செல்லும் சமயம் சென்றுவிடுவார்.

ஞாயிறு காலை பத்து முதல் மத்தியம் மூன்று வரை அமுதவள்ளி வீட்டில் இருப்பதில்லை.. அது அப்படியே தொடர்ந்தது.

சில நாட்கள் மகனையும் கூடவே அழைத்துச் செல்வாள். அர்ஜுன் ஒன்றும் கேட்பதில்லை. சொல்லிவிட்டு மகனைத் தூக்கிச் செல்வாள். ப்ரணவ் அவளில்லாம் இருப்பதில்லை. அம்மு தான் இருவருக்கும் எல்லாமாகிப்போனாள்.

அது ஒரு வெள்ளிக்கிழமை; அர்ஜுன் அன்று சீக்கிரமே வீட்டுக்கு வர அவளையும் மகனையும் வெளியே கூட்டிச் சென்றான். 

“புள்ள அழகு கண்ண பறிக்குது. அப்படியே அவன்  அம்மாவை சாயல்ல உரிச்சு வச்சிருக்கு..” என்றார் கடைக்காரர்.

அர்ஜுனும் அம்மூவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். மூவருக்கும் புது துணி எடுத்தான். ஏன் என்று அவள் கேட்கவில்லை. கடையிலேயே பட்டுப் புடவைக்கு பிளவுஸ் தைத்து தருவதாய் கூறி அளவெடுத்துக் கொண்டார்கள்.

பீச்சில் சுண்டல் சாப்பிடும் தருணம் இதயம் திறக்க தயாரானான்.

அம்மாவும் மகனும் அவர்கள் உலகில். மணல் கோபுரம் கட்டி சிப்பியால் அலங்கரித்து கொண்டிருந்தார்கள்.

மூன்று சிப்பிகள் கோபுரம் மேல் இருந்தது. ஒன்று பெரிது.. ஒன்று அதை விட கொஞ்சம் சிறிது.. மற்றது மிகவும் குட்டி.. நம் ப்ரணவ் போல்..

“அம்மூ” என்றழைத்தான் மகனோடு மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தவளை பார்த்து.

கையை கோபுரத்திலிருந்து எடுக்காமலே முகம் உயர்த்தி, “என்னங்க?” என்றாள். இப்பொழுதெல்லாம் ‘சர்’ வருவதே இல்லை.

“நான் ஒன்னு சொல்லணும்!” என்றான். 

பதட்டமா அர்ஜுனிடமா?

கையை மணலிருந்து எடுத்து கை துடைத்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்னங்க?” அவன் கண்னை விட்டு கண் நகரவில்லை.

“வந்து.. இது நம்ம ரெண்டு பேருக்கான விஷயம்.. நமக்கு மட்டுமேயானது.. புரியுதா?”

கலவரம் அவளையும் ஒட்டிக்கொள்ள, “ம்ம்..” என்று தலையை ஆட்டிவைத்தாள்.

“ப்ரணவ் என் சாயல் இல்ல.. கவனிச்சியா?” என்றாரம்பித்தான்.

‘இதுக்கு தானா’ என்பது போல்.. “அவன், அவன் அப்பா இல்ல அம்மா மாதரி தானே இருப்பான்.. உங்கள மாதரி ஒன்னு வேணும்னா நீங்க தான் ரெடி பண்ணனும்” என்று வீடுக் கட்ட சென்றுவிட்டாள்.

அப்படியே அமர்ந்துவிட்டான்.

பொறுமையாய், “பையன் இருக்கு.. ஒரு பொண்ணு வேணும், பெத்துக்கலாமா?” என்றான்

“ஒன்னு போதுமா?” என்றாள்

கையை தலைக்கு கொடுத்து கண் மூடி மண்ணில் படுத்துக் கொண்டான். நீண்ட பெருமூச்சு.. மூச்சு வெளி சென்றது. நிம்மதி வந்து ஒட்டிக்கொண்டது… அம்மூ வடிவில்!

“போலாமா? ரொம்ப நேரம் பீச்சுக் காத்துக்கு குட்டிமாக்கு ஆகது” என்று மகன் கையிலிருக்கும் மணலை தட்டி தூக்கிக் கொண்டாள்.

கிளம்பும் வேளை “த்..தாங்க்ஸ் அம்மு” என்றான் அவள் கைபிடித்து!

“குழந்தை பிறப்பு பத்தி என்னால சொல்ல முடியாது அம்மு!” என்றான் தயங்கி தயங்கி! 

‘யாரைக் காப்பாற்ற? ப்ரணவையா? இல்லை அவனை பெற்றவர்களையா?’ நினைத்தாள்.. “ம்ம்” மட்டும் வேளிவந்தது.

“கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?”

“அவனுக்கு நான் அம்மா.. நீங்க அப்பா…” என்றாள்.

“கோபமா?”

நடந்து கொண்டிருந்தவள் நின்று அவன் கண் பார்த்து, “கோப பட எத்தனையோ இருந்தது.. அப்போ எல்லாம் கோப்பபடல.. எனக்கு உடம்பும் மனசும் மரத்து போச்சு! கோபம் எல்லாம் வராது! கொஞ்சம் தன்மானம் மட்டும் பாக்கி இருக்கு!” உள்ளத்தின் வலி பெருமூச்சில் கரைந்தது.

அவனுக்கு அவள் பேசியது புரிந்ததா புரியவில்லையா எதுவும் விளங்கவில்லை. ஆனால் இருபத்தி ஐந்தாம் தேதிக்காகக் காத்திருந்தான். புது துணி வாங்கியாயிற்று.. அவளிடம் சொல்ல வேண்டும்.. பழைய தாலியே போட முடிவு செய்துவிட்டான். கோவிலுக்கு கூட்டிச் சென்று தாலி கட்டவேண்டும், அன்னத்தின் தலைமையில்.. அவனுக்காக இறங்கும் ஒரே ஜீவன். வீடு வந்து சேர்ந்தபின்னும் இதே எண்ணம் தான்.

அன்று இரவு சுமார் பதினோரு மணி அளவில் ஆஃபீஸிலிருந்து ‘ப்ரொடக்ஷன் இஷ்யூ’ என்று அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. அரை மணி நேரம் ஆனது வேலை முடிய. நல்ல உறக்கத்திலிருந்து தீடிரென விழிக்கவும் தலை வலிக்கக் காற்றோட்டமாய் இருக்க வேண்டும் போலிருக்கவே மொட்டை மாடிக்குச் சென்றான்.

நடு கூடத்துச் சீரோ வாட்டே போதுமானதாயிருக்க விளக்கை போடாது மாடிக்குச் சென்றான். மொட்டை மாடியை அடையவில்லை பேச்சு குரல் அவன் வேகத்தைத் தடைசெய்ய.. ‘நடு ஜாமத்தில இவ இங்க என்ன பண்றா?’ யோசனையோடே சென்றான்.

கைப்பேசியில் பேசிகொண்டிந்தாள். கேட்ட முதல் வரியே ஸ்தம்பிக்க வைத்தது.

“ஏன் மாமா இவ்வளவு லேட்டாச்சு கூப்பிட..”

“..”

“போ.. மாமா.. உனக்கு என் மேல வர வர அக்கரையே இல்ல..”

“..”

“ம்ம்.. இருக்கேன்.. இருக்கேன்.. எனக்கென்ன கேடு? சொல்லு மாமா.. இந்த வாரம் முடியுமா? அவசரமா இந்த வாரம் கொஞ்சம் பணம் வேணும்..”

“..”

“நான் வேலைல இருக்கேன்… குழந்தை இருக்கு. அப்படி எல்லாம் நினைச்சதும் வர முடியாது.”

“..”

“என்ன விளையாடுரியா? அங்கெல்லாம் சின்ன குழந்தையைத் தூக்கிட்டு போக முடியாது!”

“..”

“இது தான் என் நிலமை… நீ பார்த்து சொல்லு. ஞாயறு எனக்கு லீவ். பழைய முக்கு தெருல இருப்பாரே.. கருணாகரன்.. அவரை கேளு.. அவங்க ஞாயறுக்கு மட்டும்னா சரி சொல்லுவாங்க! மத்த நாளுக்கு ஒரு பொண்ணு வந்து போகும். அவ ஞாயறு வரமாட்டா! நான்னா அவருக்கு ரொம்ப இஷ்டம். 

எங்கனாலும் காலைல 8:00-கு வந்திடுவேன். டானு ஆறுக்கு கிளம்பிடுவேன்.. நினைவுல வச்சுக்கோ.. எனக்கு வாக்கு முக்கியம். இங்க குழந்தையை பாக்கணும்! ரொம்ப நேரம் நான் இல்லேனா குழந்தை ஏங்கிடும்!”

“…”

“என்ன மாமா நீ.. நேத்து இன்னைக்கா என்னை பாக்கர.. அதே தான். நைட் ஒரு ரேட்.. பகல ஒரு ரேட். அதுவும் ஆள பொருத்தது. கருணாகரன் எல்லாம் பெண்டு நிமிந்திடும். அடுத்த சனி நைட்.. ஞாயறு பகல்.. நீ பார்த்து சொல்லு. நான் அன்னத்துட்ட சொல்லிவைக்கறேன். எனக்கு கண்டிப்பா இந்த மாச கடைசிகுள்ள பத்தாயிரம் வேணும்.. சம்பள பணம் பத்திரமா இருக்கு.. அது மட்டும் பத்தாது. மொத்தம் ஒரு லட்சம் வேணும் மாமா..”

“..”

“ம்ம்ம் சரி மாமா.. நீ கூப்பிடு. எனக்கு இங்க பிரச்சினை இல்ல. அவர் அப்படி எல்லாம் கேள்வி கேக்க மாட்டார். சரி வை..”

“..”

“இல்ல மாமா.. சொல்லல.. நீ என்ன லூசா.. அவருக்கு தெரிஞ்சுது நான் செத்தேன்…”

படியில் அப்படியே அமர்ந்துவிட்டான். ‘அப்போ மாறவே இல்லையா இவ? பத்தாயிரமா? அப்படியென்ன செலவு இவளுக்கு.. வாங்குவது போதவில்லையா? இவள் என்பதால் தானே இவ்வளவு.. இன்னும் வேண்டுமா? என்னிடம் கேட்டிருக்கலாமே? என்னத்திற்கு இவளுக்கு லட்சம்? இவளைப் பற்றிச் சொல்லப்பட்டது உண்மையா?’

ஒன்றும் புரியாமல் இருந்தவன் அவளிடமே கேட்டுக்கொள்ள எழுந்து மாடிக்குச் செல்ல, இவனைப் பார்த்ததும் பேயறைந்தார் போல் நின்றுவிட்டாள். அவள் அதிர்ந்த முகத்தைக் கண்டவன் எதுவும் கேட்கவில்லை.

அவளிடம் கேட்டிருக்கலாம்.. சொல்லி இருப்பாள். உண்மை மறையாமல். ஆனால் கேட்கவில்லை. அது தான் எல்லாம் கேட்டுவிட்டானே.. இனி கேட்க ஒன்றுமில்லை அவனிடம்.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்திருக்க வேண்டுமோ? 

அணையாது இருந்த கங்கின் மேல் காய்ந்த சருகு விழ பற்றிக்கொள்ள ஆரம்பித்தது,.. சந்தேகம் என்னும் தீ! அது யாரை எல்லாம் எரிக்கப் போகிறதோ?

Advertisement