Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க – அத்தியாயம் 7(2)

“என்ட்ட கேட்டிருக்கலாமே… தப்பு தான்.  உங்கட்ட சொல்லாம.. நானா முடிவெடுத்தது என் மேல தப்பு தான்! ஆனா நான் தப்பானவ இல்லை. நான் சொல்லாமலே உங்களுக்கா தெரியவேண்டியது இது! உங்களுக்கு ஏன் அப்படி என்னைப் பத்தி தோணிச்சுனு கூட எனக்கு புரியலை.. நீங்க இல்லாதப்போ யாராவது என்னை தேடிவந்ததை பார்த்தீங்களா? இல்லை என்னை யார்கூடையாவது நெருக்கமா பார்த்தீங்களா? ஏன் இந்த சந்தேகம்?”

கோவமாய் பேசவில்லை. சத்தம் எழுப்பவில்லை. குற்றம் சாட்டும் பார்வையில்லை. ஆனால் அவனுக்கு அப்படி தான் தோன்றியது. அவன் குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல். இந்த லட்சணத்தில் அவள் தானே ‘சாரி’ கேட்டாள்?

“இங்க வந்த அன்னைக்கு கைக்குழந்தையை பார்த்தேன்… ஃபோட்டோல நீங்களும் ப்ரணவும்! ஒரு அழகான பொண்ணோட ஃபோட்டோவ பார்த்தேன்.. நான் ஒரு முடிவுக்கும் வரல. ஆனா நீங்க ஒரு அரைகுறை ஃபோன் பேச்சை வச்சு நான் யாருனு முடிவே எடுத்திட்டீங்க!”

அவன் கண் மன்னிப்பை யாசித்தது.

எடுத்த சாட்டையை கீழே வைக்கும் நோக்கம் இல்லை போலும்..

“ரெண்டு வருஷம் முன்ன.. உங்கள நம்பி வந்தவ.. நீங்க வீட்டில இல்லாத நேரம் காணாம போனதும்.. அவ எவன் கூடவோ ஓடிப்போய்ட்டதா நம்பியிருக்கீங்க… அதுவே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது.

அப்போ உங்களுக்கு என்னை தெரியல.. தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலனு விட்டிடலாம்.. என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தா அப்படி எல்லாம் நினைச்சிருக்க மாட்டீங்களோ…

ஆனா பாருங்க, நான் சொல்லவே இல்லை என்னைப் பத்தி.. அதனால இன்னுமே உங்களுக்கு என்னை தெரியல! சொல்லாம போனதுக்கு… ரொம்ப.. சாரி”  என்றாள் மீண்டும்.

“சொல்லித்தான் கணவன் மனைவிக்குள்ள புரிதல் வரும் போல.. அங்க உணர்வுக்கு எல்லாம் மதிப்பு இல்ல போல.. அவ நடத்தை வரைக்கும் அவளே சொல்லித் தான் தெரியனும் போல… எனக்கு அது தெரியலியா… அதனால நான் ‘இவள் நடத்தை கெட்டவள் இல்லை’ அப்படினு ஒரு சர்ட்டிபிகேட் வாங்காம வந்துட்டேன். அத வாங்கி உங்கட்ட காட்டியிருந்தா நீங்களும் என்னை நம்பி இருந்திருப்பீங்க!”

“இந்த மூனு மாசத்தில என் மனச தெரியவே இல்லியா? தெரியாம தான் கட்டி பிடிச்சு முத்தம் எல்லாம் குடுத்தீங்களா? இவ வேற ஒருத்தன் கூட போரவளா இருந்தாலும் பரவால.. அப்போ அப்போ உரசிக்கலாம்னு நினைச்சீங்களா? என்ன அர்த்தத்துல அப்போ எல்லாம் என்னை தொட்டீங்க? முழுசா அனுபவிக்க இருபதாயிரம்னா… உரசிட்டு போக? முத்தம் கொடுக்க.. இதெல்லாம் ஃப்ரீயா? ஒன்னுமே அப்போ எல்லாம் தரவே இல்லியே?”

“போதும் அம்மூ.. ப்ளீஸ்.. நான் தப்பு தா..”

அவனைப் பேசவிடவில்லை. ‘போதும் நிறுத்து’ என்பது போல் கை காட்டி..

“நீங்க பேசிட்டீங்க… அப்போ நான் வாய் திறந்தேனா… இல்ல தானே! இப்போ நான் பேசறேன்”

‘நீ வாயைத் திறக்காதே’ என்ற பார்வை!

நோந்தே போனான். கொட்டிய வார்த்தை.. நாகமாய் படமெடுத்து ஆடி கொண்டிருக்க.. ‘

‘அனுபவி ராஜா அனுபவி’ என்று அவன் ‘மனம்’ அவனைப் பார்த்துக் கைகொட்டி சிரித்தது.

“இந்த தாலி என் கழுத்தில தொங்கினாலும்… இல்ல யாரவது இத பிடுங்கி வலுக்கட்டாயமா எடுத்துகிட்டு என்னை கழுத்த பிடிச்சு வெளில தள்ளினாலும்.. கேப்பார் இல்லமா தெருவில கிடந்தாலும், நான் உங்க மனைவி தான். அத நானோ.. நீங்களோ.. பிடுங்கரவங்களோ நினைச்சாலும் மாத்த முடியாது.

ஆனா ஊர் உலகத்துக்கு நான் இன்னொருத்தர் மனைவினு எப்படித் தெரியும்? என்னைப் பார்த்ததும் ஒதுங்கி போகனும்னு எப்படி தெரியும்.. இது இல்லாம?

அதுக்கு எனக்கு இது தேவை! நீங்க இல்லாத போதும்.. நான் உங்க மனைவினு எனக்கே சொல்லிக்க.. மத்தவங்களும் என்னைத் தப்பான பார்வை பார்க்காம இருக்க… இது எனக்குத் தேவை பட்டுச்சு! இந்த வீட்டுக்கு நான் வந்த பிறகு தான் இதைக் கழட்டினேன்.

மத்தவங்கள மாதரியே.. நான் வேற ஒருத்தன் கட்டின தாலிய போட்டிருக்கேன்னு நீங்க நினைச்சிட கூடாதில்லையா.. அதனால தான் கழட்டினேன்.  அட்லீஸ்ட் அத என் கழுத்தில பார்த்ததும்.. உடனே வந்து என்னடி இதுனு கேட்டிருக்கலாம்.. என்ன பண்ண உங்களுக்கு கூச்சம்.. கேட்கல…

இதுக்கும் நான் தான் சாரி சொல்லணும்… தாலி தொங்குர பொண்ணுகள சகோதரியா பாக்கர சமுதாயமா நம்மளுது…? நானே ஒரு தாலி கொடிய வாங்கி போட்டுக்காம இருந்திருந்தா உங்களுக்கு என் மேல சந்தேகமே வந்திருக்காது இல்ல… நான் இத போட்டுக்கரதே மத்தவன தேடி போரதுக்குனு நினைச்சிருக்க மாட்டீங்க தானே?”

அவன் மொழிந்த அதே வார்த்தைகள் தான்! அவள் வாயிலிருந்து வரவுமே அதிகமாய் சுட்டது. அதற்கு மேல் கேட்க அவனுக்கு திராணி இல்லை. கோபத்தில்.. சந்தேகத்தில் பேசியாயிற்று. இப்பொழுது இரண்டுமே இல்லை… அதனால் அவனால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அவளுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்… புரியாமல் இல்லை.. கொட்டிய வார்த்தைகளை எடுக்க முடியாதே..

“போதும் அம்மு!” என்றுவிட்டான்.

“எது போதும்? எனக்கு போதாது! சந்தேகம் வந்தா கேட்டுத் தெளிவு படுத்திகணும். என் மேல தப்பிருந்தா.. தன்மையா சொல்லி இருக்கணும்.. இப்படி தான் உங்கள நம்பி வந்தவள பேசுவீங்களா? ஏன் உங்களுக்கு மட்டும் தான் நாக்கு இருக்கா? அன்னைக்கும் நீங்க எனக்காக ஒரு புருஷனா நிக்கல.. இன்னைக்கும் எனக்காக புருஷனா  யோசிக்கல! ஆனா புருஷன் உரிமை மட்டும் எடுக்க தெரியுது!

நீங்க கேட்டுத் தான் ஆகணும் நான் பேசரத! நான் கேட்டேன்.. வலிக்க வலிக்கக் கேட்டேன். என் மனசெல்லாம் ரணமானாலும் கேட்டேன். என் கனவெல்லாம் கருகினாலும் கேட்டேன். காசுக்காக உங்க கூட படுக்கரவ மாதரி நீங்க என்னை நினைச்சு பேசின போதும் நான் கேட்டேன்.. உயிரோட என் இதயத்தை கை வச்சு நீங்க பிடுங்கின மாதரி வலிச்சுது.. அப்போவும் கேட்டேன்!

இதெல்லாம் நீங்க பேசின பிறகும் உங்க முன்ன நிக்கறேனே.. மான ரோஷம் இல்லாம.. அதுக்காகவாது நீங்க நான் பேசரத கேட்டே ஆகணும்!

அப்போ தானே இந்த மாதரி பேச்செல்லாம் இந்த குடும்பத்தில கடைசியா இருக்கும்!”

“அம்மூ.. நான் புரிஞ்சுக்காமா பேசி…”

“நீங்க பேசாதீங்கனு சொன்னேன்..

நான் பேசரத கேக்க உங்களுக்கு விருப்பம் இல்லனா.. நானும் நம்ம மகனும் இங்க இருந்து போறோம்.. உங்க விருப்பம்!” பேசிவிட்டு அவன்  முகம் பார்த்து நின்றாள், அமுதவள்ளி.

யார் மேல் தவறு? யார் மேல் தவறு இருந்தால் என்ன? வார்த்தைகளைச் சிந்தியாயிற்று.. ஏற்பட்ட காயம் ஏற்பட்டது தான். இரண்டு நாளில் பார்த்தவளைக் காதலித்து.. ஒரு மாதத்தில் மணமுடிந்து… ஒரு நாளும் சுகித்து பேசி பழகாமல்.. அன்னையால் தவறாய் போதிக்கப் பட்டு.. அவன் அடி மனதில் ஆழமாய் விதைக்க பட்ட விஷம் அவளோடு அவனையும் கொன்றது அவன் குற்றமா? இதில் அவன் குற்றம் மட்டும் தானா? இன்று உறைத்ததை மூன்று மாதத்தில் என்றோ ஒரு நாள் அவள் உறைத்திருந்தால் இந்த வலியை தவிர்த்திருக்கலாமே… இதில் யார் குற்றம்?

அவனை சொல்லியும் குற்றமில்லை அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. வாழ்வில் வந்த அச்சுப் பிழை.. குற்றத்தைப் பார்க்காமல் இருவருமாய் சேர்ந்து திருத்திவிடலாமே…

அமைதியாய் மனைவி முகம் பார்த்தான்.. கண்ணில் மன்னிப்பை யாசித்து… அவள் கண்ணில் மிதமிஞ்சிய வலி இருக்கவே அவன் யாசிப்பு அவளுக்குத் தெரியவில்லை.. 

அவன் பார்வைக்கு தவமிருந்து.. அவன் விரல் தீண்ட தன்னை மறந்து.. இரவு அவன் மார்பில் குழந்தையாய் படுத்திருந்தவளா இவள்?

அவன் அம்மூவை அவன் வார்த்தையால் எங்கோ தொலைத்துவிட்ட உணர்வு..

Advertisement