Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 15
காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து அவள் கனவை ஆரம்பித்தாள்.  முன் தினம் அவன் உயரத்திற்கு அவள் ஸ்கூடியை அஷோக் தள்ளிக் கொண்டு வந்த அழகை எண்ணிச் சிரித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். காதல் உள்ளத்தில் நுழைந்தால் உப்பு பெறாத விஷயமெல்லாம் சிலிர்ப்பை தரும் போலும்!
மூன்று மணியளவில் பாட்டியிடம் சொல்லிவிட்டு துணிக்கடைக்கு சென்றவள், மேல்தளம் நோக்கிச் செல்ல கண்களோ, விரித்துப் போடப் பட்டிருந்த ஒரு பட்டுப் புடவையின் மேல் நிலைக்க,  அதைப் பார்க்க வந்தவள் கண்கள் அது, இது.. என்று பல புடவைகளைத் துழாவ எதிலும் நாட்டமில்லாமல் நகரவும் கடைசியாக அதோ அவள் கண்ணெதிரில் அவள் மனதை மயக்கும் விதமாய் ஒரு புடவை. நாவல் பழத்தை அரைத்த வண்ணத்தில்… ஆங்காங்கே வெளிறிய பழுப்பு பட்டு நூல் கைவேலைப்பாடோடு..
எல்லா விதத்திலும் பிடித்துப் போகவே அதை எடுத்து அவள் மேல் போட்டுப் பார்க்க முகம் புன்னகையைத் தழுவியது.
‘நீ கூட அழகு தான் சுதா குட்டி! பனை மரத்துக்கிட்ட இத கட்டிகிட்டு நின்னா..’ அவள் நினைவலைகள் கலைக்கும் வண்ணம் கடை சிப்பந்தி, “அம்மா.. அது இவங்க பிடிச்சதுனு எடுத்து வச்ச புடவைமா.. “ அங்கு வந்து நின்ற பெண்ணை காட்டி சொல்ல..
“இவங்க பிடிச்சதுனு எடுத்து வச்ச சேல மா… அதுக்கு தான் மடிச்சு வச்சேன், இவர் வேலைக்கு புதுசு.. இங்க வச்சத எடுக்க கூடாதுனு தெரியாம…” எங்கே அவள் எடுத்து விட்டால் அவர் பிரச்சினையில் மாட்டிகொள்வாரோ எனக் கலவரத்தோடு அவளை பார்க்க, ‘அதுதானே எனக்கு பிடிச்சது கிடைச்சிட்டாலும்..’ நினைத்தவள் உடனே நினைப்பை மாற்றிக்கொண்டாள்.
‘சுதா இது இல்லேனா.. இத விட சூப்பரா உனக்கு ஒன்னு கிடைக்க போகுதுன்னு அர்த்தம். ஸோ டொன்ட் வொரி டார்லிங்!’ ஆசைபட்டு எடுத்தது கையை விட்டு போகும் வருத்தம் நொடிப் பொழுதில் போக, முகத்தில் எந்த வித வருத்தமும் காட்டாமல், அருகில் நின்ற பெண்ணை பார்த்தாள். இருபதுகளில் இருப்பாள். மிக மிக அழகாகவே இருந்தாள். செதுக்கி வைத்த சிலை என்று வர்ணித்தால் அவள் அழகிற்கு நிகராகாது. வெண்னையும் மைதாவாவையும் குழைத்துச் செய்தாற்போன்ற மாசுமருவற்ற சருமம். அங்கிருந்த பலரின் பார்வை அவள் மீது.. ஆனால் அதற்கு அவள் புதிதல்ல என்பது விளங்குவதற்கு புத்திசாலித்தனம் அவசியமில்லை.
அவள் இவளைப் பார்த்துப் புன்னகைக்க, சுதா, “ப்யூட்டிஃபுள் சாரி.. உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்” என்று பதிலுக்குப் புன்னகைக்க
“தாங்க்ஸ்..” எனவும் “பிருந்தா.. சீக்கிரம் எடுத்துட்டு வா” என்று சற்று தொலைவிலிருந்த  பெண்மணியின் சத்தம் கேட்கவும், புன்னகை மாறாமல், “காட் டூ கோ.. பாய்” என்று நகர்ந்தவளைப் பார்த்து நின்றாள். அவள் தான் முதலில் பார்த்துப் பிடித்ததாய் எடுத்து வைத்த புடவை என்றாலும்,  எல்லா விதத்திலும் அந்த புடவை அவளுக்குத் தான் நன்றாய் இருக்கும் என்று தோன்றினாலும் புடவையை விட்டுக் கொடுத்தது மனதில் கொஞ்சமாய் வருத்தம் கொடுக்க தான் செய்தது.
இவர்கள் உறவு வெறும் புடவையோடு நின்றிருக்கலாம்.  
அங்கிருந்து நகர்ந்தவள் “சுதா..” என்ற சுசிலாவின் சத்தத்திற்குத் திரும்ப, “ஹாய்..” என முகமெல்லாம் பல்லாய் மாறியது.
“என்னமா ஏதாவது பிரச்சினையா? நம்ம கடை தான்.. ஏதாவது பிடிச்சிருந்தா எடுத்துக்கோ டா..” ஓரிரண்டு வார்த்தைகளாய் பேச்சு ஆரம்பித்தது. அங்கையே நின்று பேசி, பின் கடையை ஆராய்ந்து.. அடுத்த கடையை ஆராய்ந்து.. பல கடைகளைச் சாளரத்தின் வழியே வேடிக்கை பார்த்து, பின் இங்கும் அங்குமாய் நின்று, அமர்ந்து, சாப்பிட்டு, குடித்து என்றதோடு இருவரும் பேசி பேசியே நேரம் கழித்தனர்.
சுதாவோடு பேசப் பேச சுசீலாவிற்கு அவளை மிகவும் பிடித்து போனது. சுதாவிற்குக் கேட்கவே வேண்டாம். மீண்டும் அவள் அன்னையே அவளிடம் வந்துவிட்ட உணர்வு. கௌரியும் சுசிலா போலவே.. மகளிடம் தாயாய் மட்டுமில்லாமல், தோழியாய் சகோதரியாய் அவள் வாழ்வில் கலந்தவர்.
கண்ணன் பேச்சு பேசாமல் சுசிலாவால் இருக்கத் தான் முடியுமா என்ன? அவன் மழலை பருவம் பள்ளிப் பருவம் அவன் சுட்டித்தனகள் எனப் பேச்சு போகப் போக கண்ணனைப் பற்றி ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தாள். அவன் துடிப்பும் துடுக்குதனமும் கேட்கக் கேட்க தெவிட்டவில்லை சுதாவிற்கு!
யாருக்கும் நிகழ் காலங்கள் நினைவில் இருப்பதில்லை.. எப்பொழுது பேச ஆரம்பித்தாலும் அவர்கள் கடந்த காலங்களும் சாகசங்களும் தான் நினைவில். சுசிலா விதிவிலக்கல்ல. பிள்ளைகள் வாளருமுன் தாயே அவர்கள் உலகம். அந்த பருவம் தாய்மார்களுக்கு என்றுமே ஸ்பெஷல் தான்!
அவர்கள் கிளம்பத் தயாராக ஒன்றாய் போக முடிவெடுக்க, சுசிலாவின் வாகன ஓட்டுனர் அவர்கள் வாங்கிய பொருட்களோடு சென்றுவிட இருவரும் கிளம்பினர்.
சுதாவின் இளமை துள்ளல் சுசிலாவையும் ஒட்டிக் கொண்டது. அவர் வாழ்க்கையில் இப்படி சக தோழிகளோடு சுற்றித் திரிந்த அனுபவம் இல்லை. திறந்த வானம்,  முகத்தில் மாலை நேர உப்பு காற்று, கூந்தல் முகத்தில் உரசச் சுதாவின் பின் அவள் இருசக்கர வாகனத்தில் தன்னை மறந்து அமர்ந்திருந்தார். தங்கக் கூடு இல்லை அவரை சிறைபிடிக்க.. இரக்கை விரித்துப் பறப்பது போன்ற விடுதலை உணர்வு…
இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப் போக, அந்த மாலை பயணம் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமாகவே அமைந்தது. சுதாவிற்கு வாய் வலிப்பதற்கான அறிகுறியே இல்லை.
அவர்கள் வசிக்கும் தெரு வந்ததும் சுசிலா, “சுதா … நிறுத்து நிறுத்து” எனவும்,
குழப்பத்தோடே வண்டியை ஓரம் நிருத்தி, “என்ன… என்ன ஆச்சு?” என்றவளிடம்
சுசிலா, “ரோட்ட பாரு எனக்காகவே காலிய இருக்கு… நீ இறங்கு, நான் ஓட்டுறேன்!”
“நீங்களா? ஓட்டுவீங்களா?” கேட்டுக்கொண்டே வண்டியை அவரிடம் கொடுத்துவிட்டு பின் அமர்ந்து கொள்ள, வண்டி ஒருவாறு ஆடிக்கொண்டே சென்றது.
“ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு.. ஆசையா கத்துகிட்டேன். இந்த கண்ணன் பையன் என்னை ஓட்ட விடுரதே இல்ல.. நான் ஒன்னு சொன்னா கேக்குரது இல்ல.. ஆனா அவன் சொல்லுரத மட்டும் நான் கேட்கனும்.. நான் அவனுக்கு அம்மாவா.. இல்ல அவன் எனக்கு அம்மாவானு தெரியலை. பொல்லாத பய..”
கேட் அருகில் வரவும் காவலாளி கதவை திறக்க, வாசல் வரை வந்த வண்டியின் பிரேக்கை மட்டும் பிடிப்பதிற்குப் பதிலாய் ஆக்சிலேட்டரையும் சேர்த்து திருவ, வண்டி நிற்காமல் வாசலிலிருந்த தூணில் இடித்துச் சாய்ந்தது.
வண்டி சாய்வதை உணர்ந்ததும் இருவரும் குதித்து விட, வண்டி தனியே சாய்ந்து விழ, சிரித்துக் கொண்டே “ம்ம்ம்.. என்னை மாதிரியே சூப்பரா ஓட்டுரீங்க.. இப்போ தெரியுது உங்களை ஏன் உங்க மகன் வண்டி ஓட்ட விடுரது இல்லனு!” உள்ளே வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்த காவலாளி வண்டியை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு சாவியைக் கொடுத்துச் செல்ல, இருவரும் மீண்டும் அவர்கள் பேச்சைத் தொடர்ந்து கொண்டே உள்ளே நுழைந்தனர்.
வீட்டினுள்  நுழைந்த சுசிலா, “நீ இன்னும் என் மகனைப் பார்த்து பேசலை இல்ல?”
“ம்ம்ம்.. ஹும்ம்.. இல்ல”
“இன்னைக்கும் இல்ல.. வெளிள போயுருக்கான். அடுத்த தரம் வரும் போது இன்றொடுயூஸ் பண்ணுறேன்… இப்போ சுத்தி பாரு…”
அவள் இருமுறை வந்த வீடு தான்.. ஆனால் இருமுறையும் அவள் கவனம் அங்கிருக்கவில்லை தலையைச் சுழல விட்டவளை வீடு வெகுவாய் கவர்ந்தது. பழமையும் புதுமையும் ஒன்றாய் இழைந்தோடியது.. “வீடு கலை நயத்தோடு இருக்கு.. மார்டனாவும் இருக்கு.. பழமை டச்சும் கூடவே  இருக்கு.. உங்க டேஸ்ட் அட்டகாசம்..!”
“இது.. என்னுடைய தாத்தா வீடு.. இப்போ எங்க வசதிக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி இருக்கோம்.. இன்டீரியர் எல்லாம் கண்ணன் விருப்பம். அந்த கெஸ்ட் ரூம் பாத்ரூம்ல போய் ஃப்ரெஷனப் ஆகட்டு வா.. மைதிலியை ஸ்னாக் ரெடி பண்ண சொல்லிருந்தேன்.. அவள பார்த்துட்டு வரேன்..” என கூறிக்கொண்டே அவரும் பக்கத்து அறையில் நுழைந்துகொண்டார்.
வீட்டின் அலங்காரமும் ஆங்காங்கே இருந்த மழலையின் புகைப்படங்களும் கண்ணை மட்டுமல்லாது அவள் இதயத்தையும் கொள்ளைக் கொண்டது.
ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தில் சுசிலா, தன் தலையை பின் சாய்த்து நிற்க, மாலை சூரிய கதிர்கள் அவர் மயிரிழைவழி வெளி வர, அவர் இரு கைகளினால் அவர் முகத்துக்கு நேராய் தூக்கியிருந்த ஏழு மாதமே ஆன கண்ணன் எச்சிலில் பளபளத்த பொக்கை வாய் திறந்து சிரித்துக்கொண்டே அவன் பிஞ்சு கையை அவன் தாய் முகத்தில் பதித்திருக்க, பின்னனிருந்த காட்சிகலென்லாம் மங்கலாயும் இவர்கள் இருவர் மட்டுமே காண்பவர் கண்ணை ஈர்க்க, சுதா அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டாள்.
“என்னமா அப்பிடியே நின்னுட்ட?”
கண்ணை எடுக்காமல், “வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட வயிட்ல.. என்னால முடியல! நீங்க எப்பிடி இவ்வளவு அழகு.. உலகத்தில இருக்க மொத்த அழகும் உங்க மேல.. ஐய்யோ… பாட்டிய கூப்பிட்டுச் சுத்தி போட சொல்லணும்… நீங்க தான் சூப்பர்னா.. உங்க மகன்.. அச்சோ.. உங்கள விட அசத்தலா.. அந்த கண்ணு, பையனுக்கு எவ்வளவு பெரிய ஐ-லேஷ்! அந்த பட்டு கன்னம், ஆரஞ் பழம் மாதரி உதடு.. லிப் க்லாஸ் போட்ட மாதிரி.. அத அப்பிடியே கடிச்சு வைக்கணும் போல இருக்கு.. “
அவள் முகத்தில் தெரிந்த ஆர்வமும்.. சுவாரசியமும் சுசிலாவால் அடக்க முடியவில்லை. வெகுவாய் அடக்கிக்கொண்டு விளையாட்டாய், “உன் விருப்பத்தை.. கண்டிப்பா அவன் கிட்ட சொல்லுறேன்..”
பத்து வயது பிள்ளையிடம் சொன்னால் அவன் என்ன நினைப்பான் என்று தோன்ற “ஐய்யயோ.. ஒரு ஆர்வத்தில குழந்தையைப் பத்தி சொல்லிடேன்.. நீங்க வேர..” சிரித்துக்கொண்டே.. காற்றில் வந்த செண்பகத்தின் வாசத்தை உள்ளிழுத்து “இங்க இருந்தா வாழ்கைல வேறெதுவுமே வேண்டாம்.. நீங்க,  இந்த வீடு, இந்த தோட்டம் எல்லாமே மனசுக்கு இதமா… எதுவுமே திகட்டாது..”
சுதாவின் மேல் துளிர்த்த அன்பின் பிரதிபலிப்பாய், “அன்னைக்கு நீ மீனாட்சியம்மா பேத்திங்கரதுனால தான் வரச் சொன்னேன்… ஆனா இன்னைக்கு அதனாலா இல்ல… உன்ன எனக்கு நிறைய பிடிச்சிருக்கு. அன்னைக்குச் சொன்னதே தான்.. இது உன் வீடு மாதரி தான் சுதா, நீ எப்போ வேணும்னாலும் தயங்காமா வந்து போகலாம்..”
நேரம் நகரவும், “அம்மா.. பணியாரம் ஆகிடுச்சு, பக்கோடா இப்போ ஆகிடும்.. மசாலா டீயா இல்ல வெறும் டீ போடட்டுமா?” அடுப்பு வேலை செய்யும் மைதிலி வந்து நிற்க,
“சுதாமா.. நீ மாடில ரைட் சைடு இருக்க ரூம்கு போ.. என்னுடைய ஸ்டடி ரூம்.. அங்க நிரைய ஃபோட்டோஸ், பெயின்டிங் இருக்கும்.. உனக்கு கண்டிப்பா பிடிக்கும். பார்த்திட்டு இரு.. டீ ரெடி ஆனதும் எடுத்துட்டு வரோம்..”
பக்கோடா என்று சொன்னப்பின் சுதா வெறுங்கையோடு செல்வதா? அவரோடு அடுக்களைக்குச் சென்று வலது கை கொள்ளும்மட்டும் பக்கோடாவை நிரப்பிக் கொண்டு, பணியாரத்தை வாயில் திணித்துக் கொண்டாள்.
மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தவள் வாயிலிருப்பதை அரைத்துக்கொண்டே பாட்டிக்குத் தான் அங்கிருப்பதை கைப்பேசியின் மூலம் அழைத்துச் சொல்லிவிட்டு கைப்பேசியை ஒருகையால் நோண்டிக்கொண்டே பக்கோடா கையால் சாத்தியிருந்த கதவைத் தள்ளவும், உள்ளிருந்து கதவு திறக்கவும் சரியாய் இருக்க அவள் சுதாரிக்குமுன் நிலை தடுமாறி கதவைத் திறந்தவன் மேலேயே விழுந்தாள்.
முன் நின்றவனைப் பார்த்துவிட்டபின் விழுவதைத் தவிர்க்க முடியவில்லையோ… விழையவில்லையோ அவள் தான் அறிவாள். அவள் மனம் கவர்ந்தவனையல்லாமல் வேறுயாரவதாக இருந்திருந்தால் கைப்பேசியையும் பக்கோடாவையும் விட்டுவிட்டு விழாமல் இருக்க முயற்சித்திருப்பாளோ..?
குளித்து விட்டு இடுப்பில் ஒரு துண்டோடு, தலையை துவட்டிக்கொண்டே அறைக்குள் வந்த அஷோக், வெளியே பேச்சு சத்தம் கேட்கவும் கதவைத் திறக்க, பூக்குவியொலொன்று பொத்தென்று அவன் மேல் விழ அவனுக்கு இன்ப அதிர்ச்சியே. கீழே விழாமல் ஒருவழியாய் அவன் சுதாரித்து திறந்திருந்த கதவை, ஒரு கையால் பிடித்து சுவரில் சாய்ந்துகொண்டான்.
அவன் மார்பில் சாய்ந்திருந்தவளைச் சுற்றியிருந்த கையை அவன் எடுக்காமலே அவளைப் பார்க்க, தலை தூக்கி அவனைப் பார்த்தவள் முகத்தில் அத்தனை கலவையான உணர்வு. ஆச்சரியம், ஆனந்தம், நிம்மதி, படபடப்பு, வெட்கம் எல்லா உணர்வையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தாள்.
அவனுக்கும் அது ஒரு புது அனுபவமே. அவன் மேல் கொடியாய் அவள்! முதன் முதல் ஒரு பெண்ணின், அதுவும் அவன் மனதை முற்றிலும் கவர்ந்தவளின் ஸ்பரிசம்.. அணைப்பு.. ஆம் அணைத்திருந்தாள். அவள் நெருக்கத்தில் நொறுங்கித்தான் போனான். காதல் போதையா இல்லை காதலி தந்த போதையா அவனுக்குத் தெரியவில்லை. உடலெல்லாம் மழைச் சாரல். புது இரத்தவோட்டம்!
தினமும் காலை மாலை என உடற் பயிற்சியில் உரமேற்றியிருந்த அவன் மார்புக்கும் கைக்கும் நடுவில் சிக்கியிருந்தவள் மனம் ஒரு நிலையிலில்லை. அப்போது தான் குளித்து வந்திருந்தால் அவன் உடம்பிலிருந்த குளிர்ச்சியும், அவனோடே சேர்ந்து வந்த நறுமணமும், அவள் கன்னத்தை வருடிய ஈர நீர்த்துளியும் அவள் யோசனைகளை மாற்ற, பெண்மை விழிக்க நாணம் வந்து ஒட்டிக்கொள்ள, அவள் கால்கள் வலுவிழந்தது.
இருவரும் இம்மிகூட அசையவில்லை. எங்கே அசைந்தால்… இமைத்தால்… மூச்சுவிட்டால்.. இந்த நிமிடம் கடந்துவிடுமோ என்று உரைந்த நின்றனர்.
காடு பற்றிகொள்ள ஒரு சிறு பொறி மட்டுமே போதுமானதாய் இருக்க..  இவர்கள் எம்மாத்திரம்?
மேகம் மலைச் சிகரத்தை உரசிச் செல்ல நினைத்தது, ஆனால் தன்னையே மறந்து மலையோடே ஒட்டிக் கொண்டது.

Advertisement