Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

அத்தியாயம் – 47-2

“அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?”

“ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க வந்தோம். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். அண்ணனோட கிளாஸ்-மேட். எப்போ பார் வீட்டில ‘அஷோக்’ புராணம் தான் ஓடும். அவன் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில ரொம்ப பாப்புலர். படிப்பு, விளையாட்டுன்னு எல்லாத்திலேயும் கெட்டிக்காரன். கேக்கணுமா.. எனக்கும் மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு க்ரஷ்.. அண்ணனோட ஃப்ரெண்டுங்கரனால என்னைப் பார்த்தா ஒரு மில்லி மீட்டருக்குச் சிரிப்பான்… இல்ல… சிரிப்பான்னு நினைக்குரேன்?!”

கேள்வியோடு யொசித்தவள், மீண்டும் ஆரம்பித்தாள்… எல்லாம் கூறினாள். அவனைப் பார்த்தது.. ராசித்தது… தன் இதயத்தை அவனிடம் கொடுக்க தவித்தது. அண்ணனின் தோழன் என்ற காரணத்தால், கூற தைரியமில்லாமல் போனது.. பின் அவன் பள்ளி முடித்துப் போனது வரை  அனைத்தையும் கூறினாள்.

“அவ்வளவு தானா.. அவர்ட்ட சொல்லவே இல்லையா நீ? அவருக்கு உன்னை தெரியாமலே போய்டுச்சா?”

“இரு பக்கி… சொல்றேன் பொறுமையா கேளு! அதுக்கப்புறம் ஒரு நாள், அவனையும் அவன் அம்மாவையும் ஷாப்பிங் பண்ணும் போது பார்த்தேன். தைரியத்தை வரவழச்சுகிட்டு ‘ஹாய்’ சொன்னேன். என்னை அடையாளம் தெரியாம முழிப்பான்னு நீனைச்சா.. ‘அம்மா.. இவ பிருந்தா, ஸ்கூல்-ல பழக்கம்’ன்னு சொன்னதும் அசந்துட்டேன்.

அதுக்கப்புறம் பல நாள் அவன பாக்கதுக்காகவே அந்த கடைத் தெருவையே சுத்தி சுத்தி வந்தேன்… ஆனா பாக்கவே முடியல! இருந்தாலும் அவன் மேல இருந்த ஆசை குறையவும் இல்ல.. அது தான் ஆச்சரியம்! ஒருத்தரை பாக்காம.. அவர்ட்ட பேசாம.. அவர் நினைப்பாவே.. எப்படி சாத்தியம்? ஆனா அஷோக் விஷயத்தில சாத்தியம் ஆச்சு!

ரெண்டு வருஷம் பார்க்கவே இல்ல. ஒரு நாள் வீட்டு ‘காலிங் பெல்’ அடிச்சுது, போய் பார்த்தா இவன் தான்!

செம்ம்ம்ம ஸ்மார்ட்டா,  கைல அவனோட பைக் சாவிய சுத்திகிட்டு, கண்ணுல கூளர்ஸ்சோட, சிரிச்சுகிட்டே ‘ஹாய் எப்பிடி இருக்க? வினோத் இருக்கானா?’ன்னு கேட்டுட்டு நிக்கரத பார்த்ததும் மயக்கமே வந்திடுச்சு. அந்த ஒத்த சிரிப்பில அப்படியே என்னை முழுசா முழுங்கிட்டான்.

ரொம்பா மாறிப் போயிருந்தான்.. சரியான ஹைட்.. பெரிய ஷோல்டரும், காலேஜ் பையனுக்கான ஸ்டைலும்.. அப்படியே மயங்கிடேன்!

ஏற்கனவே அவன் மேல ஒரு க்ரேஸ்.. அதுல அவன இப்படி பார்த்த பிறகு என்னால முடியல போ!

அண்ணனும் அவனும் ஒரே காலேஜ்!! அதுக்கப்பரம் எப்பவாது அண்ணனைத் தேடி வருவான்.. ஆனா என்ன கூப்பிட்டாலும் வீட்டுக்குள்ள வர மாட்டான். அவன் ‘டுகாட்டில’ உக்காந்திருக்கர ஸ்டைல பாக்கவே ஆயிரம் கண்ணு வேணும். எப்போவாது கொஞ்சம் தைரியம் வரும்.. கொஞ்ச கொஞ்சம் பேசியிருகேன். சிரிச்ச முகமா பேசுவான்.

படிக்கர வயசில இது எல்லாம் வேண்டாத டிஸ்ட்ராக்ஷனு எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால அவன் நினைவுகளிருந்து வெளி வர முடியல. இருந்தாலும் படிச்சா தான் அவனுக்கு நிகரா இருக்க முடியும்னு.. படிக்கர நேரம் ஒழுங்கா படிச்சேன். அவன் நினைப்பில் சாகாம இருக்க எப்பவும் புக்கும் கையுமா சுத்தினேன்.

நான் காலேஜ் சேரதுக்கு முன்னாடி ஒரு நாள் தனியா ரோட்டோரமா போய்ட்டு இருக்கும் போது ‘தனியா இருட்டில எங்க போர? கார்ல ஏறு வீட்டில விடுறேன்’ன்னு கூட்டிட்டு போனான்.

அன்னைக்குத் தான் ‘உன்னை ரொம்ப விரும்புறேன்’ன்னு  மனசில இருந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

நான் சொன்ன எல்லாத்தையும் அமைதியா கேட்டான். அமைதியா பதிலும் சொன்னான்.

‘நீ சின்ன பொண்ணு. இந்த வயசில இந்த மாதரி தோன்றது ரொம்ப சாதாரணமும் கூட. உன் வேகத்தை உன் கனவைத் துரத்தப் பயன்படுத்து. அந்தக் கனவு உன் எதிர்காலமா இருக்கணும். எதிர்கால கணவனை தேடுரதா இருக்கக் கூடாது. வயசு பையனுங்க பின்னாடி போய் வாழ்க்கையை தொலைச்சிடாத.. நீ ரொம்ப நல்லா படிப்ப-னு வினோத் சொன்னான். மெடிசின் தான் உன் ட்ரீமாம். படிப்பில மட்டும் கவனம் செலுத்து. படிச்சு ஒரு நல்ல டாக்டரா, முன்னுக்கு வா.’”

“சரியா தான் சொல்லி இருக்கார்.. அப்புறம் உங்க அண்ணண் கிட்ட மாட்டிவிட்டுடாரா?”

“இல்ல இல்ல.. அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது. என்னைச் சொல்ல விடுறியா? நடுவில விழுந்து கேள்வி எல்லாம் கேக்காம கவனி! எங்க விட்டேன்.. ம்ம்ம்.. ‘என்னோட முடிவில எந்த மாற்றமும் இல்ல.. எனக்கு உன்ன தான் பிடிக்கும் எத்தன வருஷம் ஆனாலும் உன்ன மாட்டும் தான் பிடிக்கும்.. இது ரெண்டு வருஷ காதல்’ன்னு சொனேன். சின்னதா சிரிச்சிட்டு ’சரி.. நீ ஒழுங்கா படி அஞ்சு வருஷம் போகட்டும்.. அதுக்கப்பரமும் உனக்கு என் நினைவிருந்தா.. பிடிச்சிருந்தா.. அப்போ அதை யோசிப்போம் இப்போ வேண்டாம்.’னு சொன்னான்.”

“நீ அதுக்குள்ள வேற யாரையாவது காதலிச்சோ, கல்யாணமோ பண்ணி போய்டா?’ன்னு கேட்டேன்.

’இன்னைக்கு வரைக்கும் எனக்கு யார் மேலையும் காதல் வரல.. வருமானு தெரியல… நான் அதைப் பத்தி எல்லாம் யோசிச்சது கூட கிடையாது!! என்னால எந்த ப்ராமிசும் பண்ண முடியாது.. நீ முதல்ல உன் படிப்ப பார்.. இதுக்கமேல இத பத்தி பேச வேண்டாம்!’ன்னு சொல்லி வீட்டில விட்டுட்டு போய்டான்.“

“கொஞ்சம் பொறு பிருந்தா.. உனக்கு அவர  பிடிக்கும். அவருக்கு உன்ன பிடிக்க  வேண்டாமா? அன்னைக்கே உங்க அண்ணனுக்காக தான் உன் கிட்ட நிதானமா பேசி அனுப்பியிருகார்.

இந்த ஏழு வருஷத்தில அவர் வாழ்க்கைல என்ன நடந்திருக்குனு உனக்குத் தெரியுமா? அவருக்குக் கல்யாணம் ஆச்சா? இல்ல வேற யாராவது அவர் வாழ்க்கைல இருக்காங்களா? ஒரு பொண்ணு அவரோட வந்துதே… அவருக்கும் அவளுக்கும் என்ன உறவு? ஏதாவது தெரியுமா?”

“அவருக்கு கல்யாணம்னா அது தான் ஊருக்கே தெரிஞ்சிடுமே.  அன்டிட்ட கேட்டேன்.. கல்யாணம் பண்ண விருப்பம் இல்லாம சுத்தரதா சொன்னாங்க! கேள் ஃப்ரெண்ட்.. அப்படி யாரும் இல்ல. இருந்திருந்தா இந்நேரம் வீட்டில சொல்லி மேரேஜ் பண்ணி இருப்பான். இல்ல அவ ஒரு தரமாவது இங்க வந்திருக்கணுமே.. வந்த எல்லாரும் வேல சம்பந்தபட்டவங்க. ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஆம்பளைங்க தான்.. மத்தபடி வந்தவங்க எல்லாம் சொந்தகாரங்க.. அதுலையும் அவனுக்காக உருகுர மாதரி எந்த  பொண்ணு கண்ணுல படல.. அவனோட அடிபட்ட பொண்ணு, அவன் அம்மாவோட ரொம்ப நெருக்கம் போல… பக்கத்து வீட்டு பொண்ணு.. அவன் அம்மாவ பாக்க கூட போச்சாம். ஆன்டி சொன்னாங்க.”

“சோ ஃபுள் டைம் ஜாபா அவர தான் கவனிச்சிட்டு இருந்திருக்க? நீ டாக்டர் ஆனதுக்கு பதில் ஒரு டிடெக்டிவ் ஆகி இருகல்லாம் போ..

சரி அவர் உன்னை காதலிக்கரார்னே வச்சுக்குவோமே.. உங்க வீட்டில ஒத்துப்பாங்களா? உங்க அப்பா பத்தி தெரியுமில்ல.. உன் அண்ணன் ஆசைப் பட்ட பொண்ண அவர் ஏத்துகவே இல்ல!”

“ம்ம்ம்.. அவங்களும் எங்காளுங்க தான். பூர்வீகம் ரெண்டு பேருக்கும் ஒன்னு தான். தாத்தா காலத்தில ஆளுக்கு ஒரு திசைனு போயிருக்காங்க.. அது பிரச்சினை இல்ல..

பிரச்சனை எல்லாம் அவருக்கு என்னை பிடிக்கணும்…? பிடிக்கும் இல்ல?”

‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே’

யாருடைய நல்ல நேரமோ… யாருடைய கெட்ட நேரமோ..?

அவர்கள் பேசிய ஒவ்வொன்றையும் இம்மி பிசகாமல் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடி காது. காதுக்கு சொந்தக்காரருக்குக் கண்ணனைக் காப்பதற்காகவே தான் பிறவி எடுத்திருப்பதாய் நினைப்பு!

“பிடிக்கும்! உன் நல்ல மனசுக்கு யாருக்கு தான் உன்ன பிடிக்காது? ஆனா.. எனக்கு புரியல பிருந்தா… உன் வாழ்க்கையில எல்லாமே சரியா போய்டு இருக்கு.. எப்பவோ ஒரு க்ரஷ்… எல்லோருக்கும் வரது தான்… அத மறந்தும் போய்ட… இப்போ அவர பார்த்தனால தானே இப்படி… வேண்டாமே.. யோசி.. எதுக்கு உன் வாழ்கையை காம்ளிகேட் பண்ற? மறந்ததை மறந்தாவே இருக்கட்டுமே… டாக்டர் ஜீவாக்கு என்ன குறைச்சல்? ”

“உனக்கு புரியல கவி… அவன் ஐஞ்சு வருஷம்னு சொன்னதும் நான் அவன மறந்துட்டேனு நீ நினைக்கரியா? அவன் சொல்லிட்டு போனதும் ரொம்ப நாள் பைத்தியம் மாதரி அவன் நினைவாவே இருந்தேன். அவன் ஐஞ்சு வருஷமும் யாரையும் பார்த்திட கூடாதுனு தினமும் ப்ரேயர் பண்ணுவேன்.. வேண்டாத தெய்வம் இல்ல.. இருக்காத விரதம் இல்ல.

அவன் சொன்ன மாதரி சாதிச்சுட்டு போய் தான் அவன் முன்னாடி நிக்கணும்னு முடிவு பண்ணினேன். அவனுக்காகவே படிப்பில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். படிப்பும் முடிஞ்சுது. ஐஞ்சு வருஷமும் முடிஞ்சுது! அடுத்து? அடுத்து என்ன பண்ணனும்னு கூட தெரியலை… தவம் இருந்தேன்.. என் காதல் அவன என் கிட்ட கொண்டு வரும்னு, தவம் தான் இருந்தேன்.

ஒரு லைஃப் டைம் காதல்.. ஆனா அவன் வரவே இல்ல. மனசு உடைஞ்சு போச்சு!

அதுக்கு நடுவில வீட்டில எனக்கு நிறைய ப்ரோபசல்… சமாளிக்க முடியல. என்ன சொல்லி வேண்டாம் சொல்லுவேன்? ஆனா என் அடிமனசு பூரா அவனை வச்சுட்டு வேற ஒருத்தனோட… நினைக்கக் கூட முடியலை. என்ன சமாதானம் சொல்லியும் மனசு ஆறவே இல்ல. நான் அவன எந்த விதத்திலும் பாதிக்கவே இல்ல… பேசி பழகினது இல்ல.. அவன் என்னைத் தேடி வரக் காரணமே இருக்கல. எங்களுக்கான தருணம் அவனுக்கு இருக்கவே இல்ல… அவன் வர வாய்ப்பே இல்லை. உண்மை ரொம்ப கசத்துது.

நான் போய் அவன பார்த்திருக்கலாம்.. ஆனா எதுக்கு? நான் வேண்டாம்னு போனவன போய் துரத்தவா முடியும் என்னை லவ் பண்ணுன்னு.. போக என் மனசு இடம் கொடுக்கல! என்னால அப்போதைய மனநிலைக்கு எத வேணும்னாலும் பண்ணிருக்க முடியும்… ஆனா சத்தியமா பிச்சை எடுக்க முடியல. அதுவும் காதல் பிச்சை!

அவன் என் வாழ்வில எட்டாத நிலவுன்னு மனசில இருந்த என் ஆசையெல்லாம் போட்டு புதைச்சு வச்சுட்டேன்.

‘அவன் உனக்கில்ல… மூவ் ஆன்’னு தினமும் நூறு தரம் சொல்லிப்பேன். ரொம்ப அழுதிருக்கேன் அவனுக்காக.. அவன் கூட ஒரு வாழ்க்கைக்காக ஏங்கி அழுதிருக்கேன். வருஷ கணக்க ஏற்படுத்திக்கிட்ட ஆசை… குழி நோண்டிப் புதைக்க முடியாம.. ரொம்ப அவஸ்தை. ஒரு கட்டத்துகப்பரம் என்னால ஹாண்டில் பண்ண முடியாதுனு தெரிஞ்சு போச்சு.

அவனை மறக்கணும்னா வேற ஒருத்தன் வாழ்க்கையில் நான் போகணும்-னு புரிஞ்சுது. இனி மேல் அவனை நினைக்கவே கூடாதுனு தான் ஜீவா வீட்டுலையும் முடியாதுனு சொல்லலை. இது நடந்து ஒரு மாசம் ஆகலை. விதிய பார்த்தியா? காதல் பொய்னு நினைச்ச அப்புறம் அது அவனை திரும்பவும் என் கிட்ட கூட்டிட்டு வந்திடுச்சு. ஒன்பது வருஷ காதல்.. ஏழு வருஷ காத்திருப்பு.. நினைச்சு கூட பாக்க முடியலை!

இந்த பிஸினஸ் பத்தி எல்லாம் ஒன்னுமே தெரியாது. அவனுக்காக அவன் முகம் வர எல்லா மேகசீனும் வாங்கி அடுக்கி வச்சுப்பேன்… அவன் பேட்டி எல்லாம் எழுத்து விடாம படிப்பேன்.. பலதும் மனப்பாடம்! இன்னும் கூட அத எல்லாம் வச்சிருக்கேன்.. அவன் வேண்டாம் நினைச்ச பிறகு கூட அத தூக்கிப் போட மனசில்லாம வச்சிருக்கேன் கவி!

உனக்கு புரியாது கவி… ஒரு வலியோட ஒரு காதல். ஒரு நாள் கூட நான் அழுது யாரும் பார்த்திருக்க மாட்டாங்க… ஆனா நான் இந்த ஏழு வருஷத்தில அழாத நாளே இல்ல… அவன் என் மனசு பூரா இருக்கான் கவி. விவரம் தெரியாத போதே உள்ள வந்தது அப்படியே இருந்து போச்சு.

என் கண்ணீரெல்லாம் துடைக்கக் கடவுள் அவனை திரும்பவும் எனக்கு காட்டியிருக்கார் கவி…

‘வீ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்’ கவி! இப்போ திடீர்னு அவன பார்த்ததும் எனக்கு அதே படபடப்பும், வயதில பட்டாம்பூச்சியும் தான். ஆனா வலி மட்டும் குறையவே இல்ல.. குறையணும் தானே? ஆனா இப்போ பயத்தில இன்னும் வலிக்குது..பா. ரொம்ப பயம்.. திரும்பவும் என்னை விட்டுட்டு போய்டுவானோனு…

போகமாட்டான் தானே?

இப்போ என் நிலமை முன்ன விட மோசம். எப்படினு கேக்கரியா? நான் இப்போ பிச்சை எடுக்கவும் தயார் கவி… காதல் பிச்சை. எனக்கே எனக்காக இருப்பியானு ஒரு பிச்சை. பிச்சை கேட்டா அவன் மாட்டேனு சொல்லவே மாட்டான். அவன் கர்ணன் மாதரி.. கண்டிப்பா மறுக்க மாட்டான்…

மாட்டான் தானே கவி?” கண்ணெல்லாம் நீர் வழிய.. அதைத் துடைக்கவும் தோணாமல்,

“என்னை தரேன் எடுத்துகரியா-னு யாசிக்கவும் தயார் கவி. வேண்டாம் சொல்லிட்டா என்ன பண்றதுனு கூட தெரியல கவி… இருக்க ஒரு மனசும் பயந்து பயந்து சாவுது. அவன் நினைப்பாவே இருக்கு. என்னால அவன் நினைவில இருந்து வெளி வர முடியல கவி. கூடவே சொல்லாம போனா, மறுபடியும் விட்டுட்டு போய்டுவானோனு ஒரு பயம். என்னால முடியல கவி.. மனச போட்டு பிசையுது.. என் காதல் அவனுக்கு புரியுதானு கூட தெரியல! வலிக்குது கவி.. உள்ள போட்டுப் பூட்டவும் முடியாம.. சொல்லவும் தைரியம் இல்லாம.. வேண்டாம்னு சொல்லிடுவானோனு பயந்து!

தினம் தினம் செத்துச் செத்து பிழைக்கறேன்… அவன இப்போ பாக்க போறேன்னு தெரிஞ்சா.. மனசு உடனே பக்கி மாதரி அவன் கனவ காண ஆரம்பிச்சுடுது.. நான் ஒரு பைத்தியம் கவி.. அவன் மேல பைத்தியம்..

தையல் போட்ட காயம் ஆரதுக்குள்ள அதே இடத்தில அறுத்துகிட்டா எப்படி வலிக்கும்.. அப்படி தான் என் மனசும் அறுபட்டு துடிக்குது என் அஷோக்காக..

கடவுள் என் கிட்ட இந்த உலகத்தில இருக்க அத்தனை சுகமும் வேணுமா.. அஷோக் மட்டும் வேணுமானு கேட்டா… எனக்கு என் அஷோக் மட்டும் போதும்னு சொல்லிடுவேன் கவி..”

பிருந்தாவின் கண்ணிலிருந்த வலியைக் கவியால் பார்க்கவே முடியவில்லை. இது என்ன விதமான காதல் புரியவில்லை. கண் மண் தெரியாத காதல் என்பது இது தான் போலும். பார்க்கவே பாவமாய் தோன்றியது. வலிக்க வலிக்க இந்த காதல் கர்மத்தில் ஏன் இவள் மாட்ட வேண்டும்.. கொஞ்சம் கொஞ்சமாய் இவள் உயிரைக் குடிக்கும் இந்த காதலை ஏன் செய்ய வேண்டும்.. ஒரு ஆறு மாதம் இவன் இவள் கண்ணில் படாமல் போயிருந்தால் கூட இவள் இங்கிருந்து போயிருப்பாளே… விதி வலியதா? இவன் தான் இவளுக்கானவனா?

இந்த காதல் கரையைக் கடக்குமா? கடக்காத பட்சத்தில்? பிருந்தாவின் கண்ணைத் துடைத்து விட்டவள்… “ஏய்.. அழாதப்பா… உன் மனசுக்கு உன்ன வேண்டாம்னு சொல்ல அவருக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கணும். ஆனா… ரொம்ப ஆழத்தில கண்ணமூடிட்டு கால விடுர பிருந்தா… எனக்கு இது ஆபத்தில முடியுமோனு பயமா இருக்கு..பா. அவர் முடியாதுனு சொல்லிட்டா? நீ தாங்குவியா?”

“அவன் திரும்பவும் என்னை விட்டு போய்ட்டா… என் மனசு வெடிச்சே செத்திடுவேன்.. ஒன்பது வருஷத்தில வராத உணர்வு எல்லாம் இப்போ வருது. என்னன்னவோ தோண ஆரம்பிடுச்சு… கண்ண மூடினா… திறந்தா.. அவன் தான். அவன் சிரிப்பு தான். உன் கிட்ட சொல்ல முடியாத மாதரி எல்லாம் கனவு வருது.

அவனுக்கு ட்ரெஸ்சிங் பண்ணினா கை நடுங்குது. நாடி நரம்பெல்லாம் வெடிச்சிடுமோனு இருக்கு. நர்ஸ் அவன் கிட்ட போனா கூட பிடிக்க மாட்டேங்குது. நான் அவனுக்கு எல்லாமுமா இருக்கணும்னு ஆசையா இருக்கு.

அவன இனி மேல் என் மனச விட்டு எடுக்கணும்னா என் இதயத்தை கிழுச்சு தான் எடுக்கணும்… என்னை சாகடிச்சு தான்.. அவன் இல்லாம இந்த வாழ்கைய வச்சு என்ன பண்ணட்டும் கவி? இந்த தீராத காதல நான் என்ன பண்ணுவேன் கவி. அவன் மடி வேணும்னு ஏங்கர என் கன்னத்துக்கு என்ன பதில் சொல்லுவேன் கவி… என் கண்ணீர் எல்லாம் அவன் துடைச்சிடுவான் தானே?”

இவள் கேள்விக்குக் கவியிடம் விடை இல்லை.

பாலைவனத்தில் தாகத்தில் துவண்டவன் கானல் நீரை பார்த்த கதையாகி விடுமோ இவள் கதை.

பிருந்தாவின் கேவல்கள் கேட்ட முடியவில்லை. அவள் கண்ணில் தெரிந்த வலியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கவியின் மனதும் கனத்து போனது. ஆஷோக் அவளை விரும்பாமல் போனால்? கவிதாவிற்கும் அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது.

பெற்ற பிள்ளை இறந்தது தாய்க்குத் தெரிந்தது…  ஆனால் மார்பில் கட்டி நின்ற பாலுக்குத் தெரியவில்லை… அஷோக் மனதில் தான் இல்லை என்பது பிருந்தாவுக்குத் தெரியும்… இருந்தாலும் வலியோடு பால் சொட்டச் சொட்ட மார்பு அதன் பிச்சு வாய்க்காய் தவம் கிடக்கிறது.

கண்கொண்டு பார்க்க முடியாத காதல்.. கண்கொண்டு பார்க்க முடியாத வேதனையை இவள் இதயத்தில் விதைத்திட… வலி நிவாரணியாய் அவள் அஷோக் மட்டுமே.

இவள் காதல் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தவும் முடியாது.

காதல் பிருந்தாவை ஏமாற்றும் பட்சத்தில்? அந்த காதல் இவளை அரவணைக்கும் பட்சத்தில்?

காதல் ஒரு மரண வேதனையை யாரோ ஒருவருக்கு பொறுமையாய் தயார் செய்து கொண்டிருக்கிறது! அது யாரென்று காலம் தான் பதில் கூறவேண்டும்!

தொலைவிலே வெளிச்சம்.. ம்ம்..

தனிமையில் உருகும் அனிச்சம்

கனவு தான் இதுவும்

கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்

தினம் வருதே அச்சம்…

Advertisement