Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

அத்தியாயம் – 47-1

“நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..”

“வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட் வயிட்ல.. என்னால முடியல! நீங்க எப்பிடி இவ்வளவு அழகு.. உலகத்தில இருக்க மொத்த அழகும் உங்க மேல..”

“ம்மா.. உங்க மகன், மேல இருக்க பூவ பரிச்சு தர மாட்டேங்கரார்..”

“ம்மா.. பூ கட்டி வச்சு விடரீங்களா?”

“ம்மா… நம்ம மாமரத்தில புதுசா ஒரு பறவ கூடு கட்டி இருக்கு பாத்தீங்களா? அதுல மூனு குட்டி முட்ட இருக்கு.. என் குட்டி ஃப்ரெண்டு கேட்டான்.. அத சாப்பிடலாமானு? இந்த முட்டை எடுத்தா அது அம்மா தேடும் தானே… ஏன் கோழி முட்டையை எடுத்தா அது தேட மாட்டேங்குது?”

“ம்மா… நான் உங்க ஸ்டடி ரூம்ல பண்ணின பெயின்டிங்.. பிடிச்சிருக்கா?”

“ம்மா.. ம்மா…” வார்த்தைக்கு வார்த்தை ‘அம்மா’ போட்ட சுதா தான் சுசீலா மனம் முழுவதும்.

டாக்டர் அறையிலிருந்து வெளிவந்த சுசீலாவால் மூச்சு விடமுடியவில்லை. ‘சுதா…’ மனதில் மீண்டும் மீண்டும் அவள் பெயரைச் சொல்லிப் பார்த்து கொண்டார். எந்நேரமும் வாயை அரைத்துக் கொண்டே சுற்றும் அழகு குழந்தை. அவர் கண்ணுக்குச் சுதா ஒரு வளர்ந்த குழந்தை. வாலில்லா வானரம்… அவளுக்கென்று ஒரு வானர கூட்டமும், அவளின் இல்லாத வாலை பிடித்துக்கொண்டு!

சுசீலா முகத்தில் இரத்தவோட்டம் இல்லை. வெளிறிப்போன முகம். ஜீவனே இல்லாத நடை.

அவர் மடியில் முகம் புதைத்துத் தூங்கிய கும்பகர்ணி… அன்று போல் இன்றும் எழும்ப மறுக்கிறாள். என்ன ஒரு வித்தியாசம் என்றால், அன்றைய தூக்கத்திலிருந்து எழுப்ப சிசீலாவிற்கு மனமில்லை… இன்றைய தூக்கம் அவருக்கு மனவலியைக் கொடுத்தது.

‘என் சுதாவா என்னைவிட்டுப் போகப் போகிறாள்..?’ அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாய் கூறிய அதே மருத்துவர் தான். “எனக்குக் கடவுள் மேல நம்பிக்கை நிறைய இருக்கு.. பிழைக்கவே முடியாதுன்னு வந்த எத்தனையோ பேர் சாவுக்கு எதிரா போராடி பிழைச்சு போனதை நானே பார்த்திருக்கேன்.. அந்த நம்பிக்கையில் மட்டும் தான் சொல்றேன்.. அவங்க பிழைக்க வாய்ப்பிருக்குனு.

இருந்தாலும் உங்க எதிர்பார்ப்ப பொய்யா வளர்க்க விரும்பல. உண்மையான நிலைமையை நீங்க தெரிஞ்சிருக்கணும். நாங்க கொடுத்த எந்த ட்ரீட்மென்ட்டும் அவங்க உடம்பு ஏத்துகல.. நாளுக்கு நாள் நிலைமை இன்னும் மோசமாகிட்டே போகுது…

இப்படியே போன உடம்பு தாங்காது..  பிழைக்கனுங்கர ஆசை நமக்கு மட்டும் இருந்தா போதாது மா.. அவங்களுக்கும் ஒரு ஃபைட்டிங் ஸ்பிரிட் வேணும்”

அதைக் கேட்டதுமே சுசீலாவிற்குப் பதட்டம் ஒட்டிக்கொண்டது. இன்று வரை எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை இருக்க தான் செய்தது… மீண்டு வந்துவிடுவாள் என்று.

எல்லா நம்பிக்கையையும் குழி நோண்டிப் புதைத்துவிட்டார் மருத்துவர்.

‘ஐயோ.. சுதா என்னை விட்டு போகாதே!   கொஞ்சம் போராடேன் சுதா.. என்னாலா தாங்க முடியலையே.. போராடு சுதா.. என்னை வந்து அம்மானு கூப்பிடு சுதா..’ எண்ணங்கள் கடல் அலை போல் முட்டி மோதிக்கொண்டு  மனதைக் கலங்கடிக்க, ஐ.சி.யு முன் அமர்ந்துவிட்டார். ‘நீ சரியாகி வா… நீ கேட்காமலே உனக்கு பூ வச்சு விடுறேன்… என் மடியிலேயே உன்ன படுக்க வச்சுக்கறேன்.. மைதிலி வேண்டாம், நானே என் கையால பக்கோடா… பணியாரம் எல்லாம் செஞ்சு தரேன்… நீ வா… என்னை ஏமாத்தாம வா சுதா..’ அவரை கேட்காமலே கண்கள் குளமாக தவியாய் தவித்துப் போனார்.

மகனைப் பற்றிய செய்தியும் அழையா விருந்தாளியாய் வந்து போனது.

“மிஸ்டர் அஷோக் தலையில அடிபட்டிருந்தாலும் மூளை பாதிக்கபடல. நினைவிழந்ததின் காரணம் தலைல அடிபட்டதினாலையும் இருக்கலாம் இல்ல நடந்த சம்பவத்தின் ‘ஷாக்’ஆ கூட இருக்கலாம்.

நினைவிழந்திட்டார்ன்னு சொல்லுரத விட மூளை நடந்த சம்பவங்களை வலி தெரியாம இருக்க சில நினைவுகளை புதைச்சு வச்சிருகுன்னு சொல்லலாம்! அதாவது ‘ரெப்பரெஸ்ட்  மெமோரி’ (Repressed Memory)

வலி தாங்கமுடியாத அளவுக்கு அதிகமாகும் போது அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க மூளை எடுத்துக்கர முயற்சி இது. அதனால பெரிய பதிப்பு இல்ல. கால போக்கில சில குறிப்பிட்ட வாசனையோ, நிகழ்வுகளோ, அவர் மனசை ரொம்ப பாதிச்ச காட்சிகளோ அவர் நினைவை திரும்பவும் கொண்டு வரலாம். கொண்டு வராமலும் போகலாம். இது அவர் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது. அதாவது நினைவு வந்தாலும், வராம போனாலும், அவருடைய நிகழ்காலம் எந்த விதத்திலும் பாதிக்கப் படாது.

அவசரப் பட்டு நீங்களா எதையும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். நாம அவர் பழைய நினைவுகளைத் திணிக்க நினைக்கும் போது அது அவர அதிகமா குழப்பிடும்!! அதன் விளைவு நமக்கு பிடிச்சதா இருக்காது. அதனால அந்த முயற்சியை தயவுசெய்து எடுக்கவேண்டாம்”

மகனின் உடல் நிலை பயமுறுத்தியது.. ஆனால் அவன் மறதி.. அவரை பாதிக்கவில்லை. ‘அப்படி ஒன்றும் பெரிதாய் அவன் தனிப்பட்ட வாழ்வில் நடக்கவில்லை.. அவன் நினைவு வைத்துக்கொள்ளும்படி! தொழிலில் நடந்த

முன்னேற்றம் மட்டுமே.. அதை மூர்த்தியின் மூலம் மெதுவாய் தெரிந்து கொண்டால் போகிறது’ என்று நினைத்துக் கொண்டார்.

சுதா, சுசீலாவின்  சிந்தனையை ஆக்கிரமித்திருக்க அவர் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

உறைந்து போன உள்ளத்தோடு தன் பேரனைக் காணச் சென்றார் பாட்டி. கணவனில்லை. மகளில்லை, மருமகனில்லை. இருந்த ஒரே சொந்தமும் தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்க அவருக்கும் வலி தான்.

வெங்கட்டுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தவன் பாட்டியைக் கண்டதும் முகமலர்ந்து “பாட்டி..” என்று பூரிப்போடு கூப்பிட்டான்.

அவன் காயப்பட்ட தலையையும் கையும் மெதுவாய் வருடினார்.

“என்ன பாட்டி நீங்க… அம்மா மாதரியே நீங்களும் அப்போ அப்போ காணாம போய்டுரீங்க? ரெண்டு நாளா ஒழுங்கா வரதில்ல..” கொஞ்சலாய் கோபித்துக்கொள்ள அவருக்குப் பேச்சே வரவில்லை. சுதா பிழைக்க வழி இல்லை.. கண்ணன்-சுதாவின் விருப்பம் தெரிந்தவர். ஆனால் அவர்கள் நெருக்கம் தெரியாது. இன்று வரை சுதாவை அவனுக்கு நினைவில் இல்லை. இவன் நினைவில் அவள் வராமலே போனால் நன்றாய் இருக்கும் என்ற எண்ணம் தான் அவர் சிந்தனையில்.

காரணம் ஒன்றே ஒன்று அவர் பின்னிய சிலந்தி வலை கண்ணனைக் காக்க.. சுதா வளர்ந்த கலாச்சாரம் அவருக்குப் பிடிக்கவில்லை. அது அவர் பேரனுக்கு இழுக்காக நினைத்தார். வலையைத் தாண்டி அவளை உள்ளே விட அவருக்கு விருப்பமில்லை.

அவனருகில் அமர்ந்து கொண்டு அவன் தலையை வருடிக்கொண்டே அவர் சிந்தனையில்.

“பாட்டி…என்ன ஆச்சு? ஏன் வரலனு கேட்டேன்?”

உடைந்து போன குரலில்,  “உன்னை பாக்காம என்னால எப்படி கண்ணா இருக்க முடியும்? ஆஸ்பத்திரியே கதின்னு கிடக்கிறேன். நான் வரும்போதெல்லாம் நீ தூங்கிட்டு இருக்கனால நீ என்னை பாக்கறது இல்ல அவ்வளவு தான்.

இப்போ எப்பிடி இருக்க? வலி தாங்க முடியுதா?” கேட்கும் போதே நா தழுதழுத்தது.

பாட்டியின் தோற்றம் அவனுக்கு வேதனையைத் தர, “என்ன பாட்டி நீங்க.. இப்போ என்ன ஆகிடுச்சு எனக்கு? எதுக்கு இப்பிடி நீங்களும் அம்மாவும்  ஒரேடியா சோர்ந்து போய் இருக்கீங்க? நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவேன் அப்புறம் நீங்க எனக்குச் சூப்பா போட்டுத் தர.. நான் திரும்பவும் முன்ன மாதிரி ஆகிடுவேன்.” என்று பாட்டியை உற்சாகப் படுத்த முயன்றான்.

வெங்கட், “பாட்டி இப்போ சுதா எப்படி இருக்கா? நானும் வந்ததிலிருந்து பாக்க ட்ரை பண்றேன்.. உள்ளையே விட மாட்டேங்கராங்க!” என்று வெங்கட் குறை பட்டுக் கொண்டான்.

அஷோக், “யாரு பாட்டி சுதா? எங்க இருந்து.. திடீர் பேத்தி? இப்போ எதுக்கு வந்திருக்காங்க?”

டாக்டர் கூறியதை நினைத்தவர் ஏதோ யோசித்துவிட்டு, “என் மகளோட பொண்ணு.. இப்போ தான் என்னைப் பத்தி தெரிஞ்சுதாம்.. ஒரு நாலு நாள் தங்கிட்டு போக வந்தா.. வந்த இடத்தில படுத்துட்டா. எல்லாம் சீக்கிரம் சரி  ஆகிடும்.. நீ வீட்டுக்கு வரதுக்குள்ள அவ சரியாகி  அவ வீட்டுக்கு போய்டுவா… ஒண்ணும் பெருசா இல்ல..” வாய் கூசாமல் பொய்யை அள்ளி தெளித்தார், இல்லை… வாரி ஊற்றினார்.

சுதா அவருக்கு பேத்தி தான். நேற்று அறிமுகமான பேத்தி! ஆனால் கண்ணன்? இருபத்தி ஐந்து வருடப் பந்தம். அவன் பிறந்த அன்றே.. அவர் கையில் ஏந்தியவன் ஆயிற்றே.. தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தவன் ஆயிற்றே. சுதாவா? கண்ணனா? என்ற கேள்வி எழும்பினால் கண்ணை மூடிக்கொண்டு அவர் கண்ணன் தான் என்பார். அவனுக்குப் பாதிப்பு எங்கிருந்து வந்தாலும் அது அவனை நெருங்க விட அவர் தயாரில்லை.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதெல்லாம் பாட்டி விஷயத்தில் பொய்யாய் போனது.. விதியின் சதியோ?

வெங்கட்டிற்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்தது, ஆனால் என்ன என்பது தான் புரியவில்லை. தனிமையில் பாட்டி அவனுக்குப் புரியவைத்தார்.

….. …. ….

“கவி போலாமா… இன்னும் எவ்வளவு நேரம்? டையர்டா இருக்கு…” பிருந்தா கேட்க, முக வாட்டத்தோடு காணப்பட்ட தன் தோழியை ஒரு முறை பார்த்துவிட்டு, “டூ மினிட்ஸ் தா.. இதோ வந்துட்டேன்”, என்று செய்து கொண்டிருந்த வேலை முடிந்ததும் இருவருமாய் கிளம்பினர்.

“ஒரு கப் காபி குடிச்சிட்டு போலாமா கவி? தலையை வலிக்குது. மனுஷிய ஒரு நிமிஷம் உட்கார விட்டா தான் என்ன? குடி முழுகி போய்டுமாக்கும்? பைத்தியம் பிடிகரதுக்குள்ள இங்க இருந்து கிளம்பணும்”

“உன் மாமா ஆஸ்பத்திரியில் வேல பாக்க உனக்கு வலிக்குது?… அப்போ எங்க நிலைமையை யோசி டார்லிங்!! இது தான் நித்தம் நடக்குர கூத்தாச்சே… இப்போ உன் முக வாட்டத்துக்குக் காரணம் சொல்லு..”

“அது தான் சொன்னேனே.. வேல ஓவரா இருக்குனு.. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு  ராமன் சித்தப்பாவன்னு கேட்ட கதையால இருக்கு”

“ம்ம்ம்.. நான் ஒண்ணும் உன் அம்மா இல்ல நீ சொல்லரத எல்லாம் அப்படியே நம்பரதுக்கு! இப்போ எதுக்கு மூஞ்சியைத் தூக்கிட்டு வர.. அத முதல்ல சொல்லு”

பிருந்தா, கவியைப் பார்த்து சிரித்தவாறு கேட்டாள், “நீ விட மாட்ட இல்ல?”

“ம்ஹும்..”

“அது ரொம்ப பெரிய கதை”

“பரவால கான்டீன் மூடுர வரைக்குமே டைம் இருக்கு… நிதானமாவே சொல்லு”

அது இருபதி நான்கு மணி நேர காண்டீன் என்பதால் அவள் தோழியைப் பார்த்து, “அப்போ முழு கத கேக்காம விட மாட்ட..?”

“அது என்ன எனக்கு தெரியாம.. சொல்லு எல்லாத்தையும். கேக்காம போரது இல்ல!” என்றாள் உறுதியாய்.

கேன்டீனில் ஆளுக்கொரு காபியும் கொறிக்கத் தீனியும் வாங்கி வந்து காலி இருக்கையில் அமர்ந்தனர்.

“அன்னைக்கு எமர்ஜெஞ்சில முகம் பூரா இரத்ததோட சுயநினைவு இல்லாம ஒருத்தர் வந்ததா சொன்னேனே.. நினைவிருக்கா ?”

“பிஸினஸ் மேகனெட் மிஸ்டர்.அஷோக் கண்ணன்?”

“ம்ம்.. அவரே தான்!! என்னோட அஷோக்” ஒரு பெயர் உச்சரிப்பு உள்ளத்திலும் முகத்திலும் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்ன?

“அவருக்கென்ன?” கேள்வியாய் பார்த்தவளிடம்..

“நாளைக்கு ஒரு நாள் அப்செர்வேஷன்ல வச்சுட்டு.. எல்லாம் ஓ.கேனா மறுநாள் டிஸ்ச்சார்ஜ் ஆரார்!! நாளைக்கு வீட்டில விசேஷம் ஹாஸ்பிட்டல் வர முடியாது. அடுத்த நாள் காலைல அவர் கிளம்பிடுவார்!” கூறிக்கொண்டே நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள்.

“நல்ல விஷயம் தானே.. அதுக்கெதுக்கு இவ்வளவு பெரிய பெருமூச்சு?”

“நல்ல விஷயமா? யாருக்கு? “

“அவருக்கு?”

“அவருக்கு வேணும்னா நல்ல விஷயமா இருக்கலாம்… எனகில்ல! அவர் பாட்டுக்கு கிளம்பி போய்டா அப்புறம் நான் எப்பிடி அவரை பார்ப்பேன்?

என்னனு சொல்லி மீட் பண்றது? இன்னும் ஒழுங்கா பேசக் கூட முடியலை… யாரவது ரூம்ல இருந்துட்டே இருக்காங்க!!”

“நினைச்சேன்.. இப்படி எதுவாது இருக்கும்னு.. லூசு உனக்கேன்டி இந்த வேண்டாத வேல? வேலியில போர ஓணானை வேட்டியில பிடிச்சு விட பாக்குற…”

“உன் பல்ல பேக்கப் போறேன் இப்ப… யார ஓணான் சொல்ற? அஷோக்கையா? ஒழுங்கா.. மரியாதை கொடுத்துப் பேசு!” பிருந்தா முறைக்க

“ம்ம்கும்… ஓணான்னு நான் சொன்னது பிரச்சினையை. இங்க பாரு.. உனக்கு மேல் படிப்புக்கு லண்டன் போகணும். அது உன் கனவு. கண்டிப்பா இன்னும் எட்டு மாசத்தில கிளம்பிடுவ! இதுக்கு நடுவில உனக்கு ஜாதகத்தில தோஷம்னு உங்க வீட்டுல உனக்கு சட்டுனு கல்யாணம் முடிக்கணும்னு நிக்கராங்க… உன் நல்ல நேரம் டாக்டர்.ஜீவா உன்னை விரும்பரார். அவங்க வீட்டுல வந்து பேசவும் செஞ்சுட்டாங்க.. எப்படியும் நீ லண்டன் போகும் போது அவர் மனைவியா தான் போகப் போர.. உன் படிப்பையும் அங்க இருந்தே பார்த்துக்கலாம்… இது வரைக்கும் எல்லாமே சரியா தானே போய்ட்டு இருக்கு… இப்போ நீயா எதுக்கு பிரச்சினையை இழுத்து விட்டுக்க நினைக்கிற?”

“நான் ஜீவாக்கு ஒன்னும் சரி சொல்லையே… யோசிக்க டைம் கேட்டிருந்தேன்… யோசிச்சேன், செட் ஆகாதுனு சொல்லிடுவேன். அவ்வளவு தான்!”

“ஒரு மனசை நோகடிக்கரது உனக்கு அவ்வளவு ஈசியா?”

“நீ தான் கவி உளர! நான் ஜீவாவ விரும்பலை. அவங்க விருப்பத்துக்கும் சரி சொல்லலை.”

“பிடிக்கலனும் சொல்லியே…”

“அப்போ அஷோக்க நான் திரும்பவும் பார்ப்பேன்னு நினைக்கல! அவர பார்த்த பிறகு என்னால நார்மலா இருக்கக் கூட முடியல..”

“அவருக்கு பிடிச்சிருக்குனு சொன்னாரா?”

“மச்.. அஷோக் தானே? ம்க்கும்!!! சொல்லிட்டாலும்.. நீ அவர பார்த்தது இல்லையே.. மனுஷனை பார்த்துட்டு பேசு! முன்ன எல்லாம் கணக்கு பார்த்து பேசுவார். எதோ இப்போ தான் அத்திபூத்தாபுல நாலு வார்த்தை சேந்தாபல பேசரார்!” என்று அலுத்து கொண்டாள்.

Advertisement