Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

அத்தியாயம் – 13

ஒரு வருடமாய் வரன்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அது ஜான்சி வரை வந்ததில்லை. அம்மா, அப்பா பின் அண்ணன் என ஏகப்பட்ட வடிகட்டல்கள்.

இப்பொழுது வந்த வரன் அம்மா, அப்பா ஏன் அண்ணனுக்கே டேனியைப் பிடித்து விட்டது. அப்பாவின் தோழர் மூலமாய் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் கேட்டிருந்தனர்.

இது ஆரம்பித்து இன்றோடு ஆறு மாதமாகிறது. கார்த்திக்கிற்குத் தான் மிகவும் பிடித்துப் போனது. பையனைப் பற்றி அக்கம்பக்கம், வேலையிடம் என்று விசாரிக்க நல்ல விதமாகவே பதில் வந்தது. கார்த்தி அவன் அமெரிக்காவில் வசிக்கும் தோழர் மூலம் விசாரித்தும் விட்டான். வீட்டில் அனைவருக்கும் பரம திருப்தியானதும் ஜான்சியிடம் கேட்க, அவள் ‘வேண்டாம், விருப்பமில்லை’ என்ற பதிலால், மகளுக்கும் தாய்க்கும் பெரிய வாக்கு வாதம்!

எப்பொழுதும் அவளுக்குப் பரிந்து பேசும் அப்பாவும் அண்ணனும் இம்முறை வாய் திறக்கவில்லை.

“ஏன் வேண்டாம்”மென்றால், அதற்குப் பதிலில்லை. ‘அவனை’ பற்றி அவள் அறிந்திருக்கவில்லை, பார்த்ததோடு சரி. வேண்டுமென்றால் கல்லூரி தோழிகள் மூலம் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் எதற்கு? கானல் நீரைத் தேடிச் செல்லவும் மனமில்லை. வேண்டும் ஆனால் வேண்டாம் என்ற குட்டை கலங்கிய நிலை அவளுக்கு.

வீட்டில் என்ன சொல்லமுடியும்? “ஊர் பேர் தெரியாத, காதலிக்காத ஒருவனுக்காய்.. அவன் சொன்ன ஒரே வார்த்தையை பிடித்துக்கொண்டு காத்திருக்க விரும்புகிறேன்’ என்றா? ‘விரும்புகிறாளா?’ அப்படி தான் தோன்றினாலும் இல்லை என்றே சொல்லிக்கொண்டாள்.

அண்ணனிடம் செல்லமென்றாலும் ‘இதை அவனிடம் எப்படி?’ என்ற தயக்கத்தையும் பின் தள்ளி ஒரு நாள் அவனுக்கு அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

கார்த்திக்கிற்கு அவள் மனம் புரிந்தாலும் இன்னும் எத்தனை நாள் தான் காத்திருப்பது? அவன் யார்? மீண்டும் வருவானா?? மனதில் எழும் எந்த கேள்விக்கும் பதில் இல்லாது போகவே, அண்ணனாய் அவளுக்குப் புரிய வைத்தான்.

அவள் யார் பேச்சும் கேட்க தயாராயில்லை. மகளை திட்டுவதை நிறுத்திவிட்டார் சாந்தா.. ஏன் பேசுவதையே நிறுத்திவிட்டர்.

மகளுக்கு இப்படியொரு வரன் மீண்டும் அமையுமா? சொன்னால் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிப்பவளை என்ன செய்ய? ஒரு நல்ல காரணமாவது உண்டா? அதுவும் இல்லை. ‘இப்போது திருமணம் வேண்டாம். கொஞ்சம் நாளாகட்டும்!’ இது ஒரு பதிலா என்று அவர் மனம் கசந்தது.

பையனும் அவன் குடும்பமும் குணத்தில் தங்கம் என்றனர். இத்தனை நல்ல குடும்பத்தை வேண்டாம் என்கிறாளே என்ற மன உளைச்சல் சாந்தாவிற்கு!

“நீ ஒரு நல்லவனுக்கு வாழ்க்கை பட்டா தானே நாங்க நிம்மதியா இருக்க முடியும்? உன் கல்யாணம் நல்லபடியா நடந்தா தான் அவன் கல்யாணமே பண்ணிபேன்னு சொல்லிட்டான். ரெண்டு பேருமா சேந்து என்னை சாகடிகிரீங்க..” இன்னும் என்னென்னவோ சொல்லிப் பார்த்துவிட்டார். கல்லெனச் சமைந்திருந்தாள்.

மகளின் குறை டேனி குடும்பத்தில் யாருக்கும் குறையாகவே தெரியவில்லை. வரதட்சனையில் விருப்பமில்லை. உங்கள் மகள் உங்கள் விருப்பம் என்று விட்டனர். ஒரு மகன், ஒரு மகள். பெண்ணும் சின்ன பெண் என்பதால் நாத்தனார் என்ற ஆளுமை தொல்லை இருக்காது.

மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்ததில் நல்ல விதம் என்றே தெரிய, சாந்தாவிற்கு அவர் மகளைக் குறித்து வருத்தமே. வரும் நல்ல வாழ்கையை உதறினால்.. அடுத்து?

மகளை நினைத்து அவரால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. மகள் வாழ்க்கை பற்றிய வருத்தம் அவர் உடலில் தெரிய, கார்த்தி பேசி பேசி, ஜான்சிக்கு வாழ்வின் நிதர்சனத்தை விளங்க வைத்தான்.  கல்லும் ஒருவழியாய் கரைந்தது.

“என்னவோ செய்ங்க.. ஆனா இந்த கல்யாணம் முடியர வரைக்கும் எங்கிட்ட யாரும் இத பத்தி ஒரு வார்த்த பேச கூடாது. நான் எதுலையும் இன்வால்வ் ஆக மாட்டேன்.” என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

நாளாக எல்லாம் சரி ஆகும் என்று பார்த்தால் இன்று வரை அவள் எதிலுமே விருப்பம் காட்டவில்லை. புடவை, நகை, பத்திரிக்கை என்று எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.

திருமணம் பற்றிய அறிவிப்பு அவர்கள் திருச்சபையில் அறிவிக்கப் பட்டுவிட்டது. இரண்டு அறிவிப்புகள் முடிந்து இந்த வாரத்தோடு மூன்றாம் அறிவிப்பும் முடிந்து விடும். நாள் குறித்து பத்திரிக்கையும் வந்து அதை கொடுக்கவும் ஆரம்பித்தாயிற்று. திருமண களை முகத்தில் இம்மியில்லை. மீண்டும் சாந்தா தான் பயந்து போனார்.

“கல்யாணம் பண்ணிப்ப தானே? வேர பையன் யாரும் நிஜமா இல்ல தானே?” என்றதிற்கு ஒரு முறைப்பை மட்டுமே பதிலாய் கொடுத்தாள்.

ஒரு வாரத்தில் திருமணம். இன்று வெளியூர் மாப்பிள்ளை ஊர் வந்திருக்க, திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துப் பேசினால், இருவருக்கும் தயக்கம் இருக்காது என்று கூறி இன்று அவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர், ‘மாப்பிள்ளைக்காக’ பெண்ணபார்க்க!

இந்த நிமிடம் வரை எல்லாவற்றையும் விட்டுத் தள்ளி நின்றவளால், இப்பொழுது நிற்க முடியாதே! ‘ஐய்யோ’ என்றிருந்தது. முதல் முறையாய்

அழுகை வந்தது. எப்படியாவது இழுத்து பிடித்து மணம் புரிந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தான் நினைத்தாள். நெற்று வரை முடிந்தது. இன்று? நிஜம் வலித்தது.

‘இது முடியுமா.. என்னால் முடியுமா?’ மனம் கூப்பாடு பொட்டது. கோபம் கோபமாய் வந்தது. யாரிடம் காட்டுவது? “எல்லாம் இந்த ஆளால தான்.. மாப்பிள்ளையாம் மாப்பிள்ள! வரட்டும். நொண்டிகிட்டே போய் அவன் தலைலயே சூடா காப்பிய ஊத்திறேன்.. வந்த வேகத்திலேயே ஓடிடுவான்.”

.

மூடிய கதவுக்குள் இருந்தவளுக்கு, வீட்டின் பரபரப்பே சொல்லியது மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர் என்று. ஜான்சியின் தோழி அருணா வந்திருந்தாள்.

அவளை அழகாய் அலங்கரித்தவள், “தேவ இல்லாம உன் தலையில நீயே மண்ண அள்ளி போட்டுக்காத ராணி. சும்மா யாரோ ஒருத்தன் விளையாட்டுக்குக் கூட உன் கிட்ட வந்து சொல்லி இருக்கலாம். இல்ல சொன்ன பிறகு வேற காரணத்தால வேற பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கலாம்..

எதனாலும் நாலு வருஷம் ரொம்ப ஜாஸ்தி. லூசு மாதரி எதுவும் செய்யாம. வரவரக் கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ற வழிய பார். இருக்க ஒரு வாழ்கைய வாழ பாரு ராணி.. யாருக்குத் தெரியும் உனக்கு இவர ரொம்ப பிடிச்சு போகலாம்.

அடுத்த வாரம் கல்யாணம்.. இன்னும் நீ வேற யாரையோ நினைக்கரது தப்பு.. உன் கூட வாழ ஆசையா காத்திட்டிருக்கவருக்கு நீ செய்யர துரோகம். அது தான் நீயா?”

தோழி சொல்லுவதை பொறுமையாய் கேட்டவளுக்கோ ‘ஓ’வென அழ வேண்டும் போல் இருந்தது. அண்ணனும் இதைத் தானே சொன்னான்? மனதை ஒருவாறு அமைதிப் படுத்தியவள், “ம்ம்.. இனி அவர நினைக்கல.. போதுமா?”

“போதாது! ஒரு பிள்ளையை பெத்தவ சொல்லுறேன் கேட்டுக்கோ.. கண்டிப்பா நீ உன் புருஷன விரும்பி வாழுவ. இந்த தருணம் வாழ்கையில ஒரே ஒரு முறை தான் வரும். சிரிச்ச முகமா வா.. இந்த நிமிஷத்த என்சாய் பண்ணு..”

“சும்மா சும்மா இதையே பேசாதா.. நான் ட்ரை பண்றேனு சொன்னேல்ல..”

அருணா வெளியே செல்லவும் அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

வெளியே பேச்சும் சிரிப்புமாய் இருக்க உள்ளே அமர்ந்திருந்தவளுக்கு இதயம் ஏதோ செய்தது. மாப்பிள்ளை அமெரிக்கா வாசம் என்பது மட்டுமே தெரிந்திருந்தது.

‘என் ஃபோட்டோ பார்த்துத் தான் சம்மதித்திருப்பான். ஆனால் அமெரிக்காவில் இருபவனுக்கு இது மட்டும் போதுமா? நேரில் பார்க்காமல் திருமணம் வரைக்கும் எப்படிச் சம்மதித்தான்? பெற்றோர் பேச்சு தட்டாத மகனா? அவ்வளவு நல்லவனாடா நீ? கால் பற்றிய உண்மை தெரியுமா?’ மனம் என்னவோ யோசிக்க ஆரம்பித்தது.

‘பெயர பாரு ஜான்சி ராணி.. பெரிய தைரிய சாலினு நினைப்பு! ஒண்ணு கல்யாணம் வேண்டாம்னு சொல்லத் தைரியம் வேணும். இல்லியா.. அவனை மறந்திட்டு புதுசா ஒரு வாழ்கையை அமைசுக்க தைரியம் வரணும்..

நீ தான் எதுக்கும் சரி பட மாடேங்கரியே! போனா போகுது போ.. பெத்தவங்களுக்காகவும், அண்ணனுக்காகவும் இத கூடச் செய்ய மாட்டேனா.. இவனையே கட்டிப்போம்..’ மனதோடு பேசிக்கொண்டவளிடம் அறைக்குள் வந்த அருணா, “வா.. அம்மா வெளில கூட்டிட்டு வர சொன்னாங்க! நினைவில வச்சுக்கோ.. உன் பெத்தவங்க மான மரியாதை இதுல அடங்கி இருக்கு!”

வெளியே சென்றவள் அறையின் சுவரோடு பல்லி போல் ஒட்டிக்கொண்டாள். பொதுவாய் ‘வணக்கம்’ வைத்தவள் ‘நகர்வேனா’ என்று நின்றுகொண்டாள்.

மனதில் சொல்லிக்கொண்டாள் ஸ்லோகம் போல் ‘நான் நம்பிக்கைத் துரோகி இல்லை.’

“வாமா.. வந்து உக்கார்ந்துக்கோ..” கூப்பிட்டவரை புன்னகையாய் பார்த்து, “இல்ல.. பரவால” என்று தயங்கவும், அவளை அதற்கு மேல் யாரும் தொந்தரவு செய்யவில்லை. திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அவள் இப்படி தான் யாரிடமும் ஒட்டுவதில்லை. கூச்ச சுபாவம் என்று விட்டுவிட்டனர்.

அமர்ந்திருந்தவர்கள் கைகளில் காபி கப்புகளும் தின்பண்டமும் பார்த்தவள் மனதில், ‘ஓ.. கொடுத்தாச்சா?… வட போச்சே’ என நினைக்க, தானாய் முகம் புன்னகையைப் பூசியது.

‘இதில யாருடா என்னைக் கல்யாணம் செய்ய துணிஞ்ச மகான்?’ கண்கள் கூட்டத்திலிருந்த வாலிபர்கள் முகம் பார்க்க, அதில் ஒருவரும் அவளை வாஞ்சையோடு பார்க்கவில்லை. பார்த்துக்கொண்டிருந்த டேனியின் பெரியம்மா, “தம்பிய தேடரியா மா?” என்றதும் அவளுக்கு பகிரென்றிருந்தது.

‘இந்தம்மா.. எதுக்கு என்னையே பாக்குது!’ வெகு பிரயத்தனத்திற்குப் பின் தூக்கிய தலை மீண்டும் கவிழ்ந்தது.

“தம்பி இப்போதான் ஃபோன் பேசப் போனான்.” வேண்டிய தகவலைத் தந்தவரைப் பார்க்க, ‘இந்த கிழவியோட தம்பியா அந்த தியாகி? அப்போ வயசானவனா? இந்த அம்மா மாதிரி ரொம்ப சுமாரா இருப்பானோ? அவன் இல்ல… அவன கடிக்கப் போர நான் தான் தியாகி..’ நீண்ட பெருமூச்சு.. ‘அது தானே பார்த்தேன்! என்னடா பார்க்காமலே கல்யாணம் வரைக்கும் போச்சேனு நினைச்சேன்..’

அவளைப் பார்த்த பால்ராஜோ, “நீ ஏம்மா நின்னுகிட்டு.. உள்ள போய் உக்கார்” என்று அவளை தர்ம சங்கடமான நிலையிலிருந்து விடுவித்தார்.

அறைக்கு வந்தவள் முதல் வேலையாய் அலமாரியிலிருந்த மணமகன் ஃபோட்டோவை தேடி எடுத்தாள்.

“ப்ளீஸ் ஆண்டவரே.. பாக்க கொஞ்சமாவது நல்லா இருக்கணும். கொஞ்சம் நல்லவனாவும் இருக்கணும். இந்த சினிமல வர மாதரி அவர் ஃபோட்டோவே உள்ள இருந்தா இன்னும் நல்லா இருக்கும்”

வேண்டுதலோடு ஃபோட்டோவை எடுத்தவள் முகம் அஷ்ட்ட கோணத்துக்கு மாறியது.

வேண்டுதலோடு ஃபோட்டோவை எடுத்தவள் அதில் இருந்த ‘கால் மீ’ என்றும் கூடவே ஒரு கைப்பேசி எண்ணும் பார்த்தவள் முகம் அஷ்ட்ட கோணத்துக்கு மாற

“ஒரு வழியா போட்டோ கவர எடுத்துட்ட போல!” அவள் பின்னால் வந்த குரலைக் கேட்டவள் நடுநடுங்கியே போனாள்.

கார்த்திக் போலவே நல்ல உயரம். திடமான தோளும், பரந்து விரிந்த மார்பும், உள்ளடங்கிய வயிறும், அடர் கேசமும், அமெரிக்க வாசம் கொடுத்த மெருகேரிய பொன்னிறமும், கூர்நாசியும், அழகாகப் பராமரிக்கப் பட்ட மீசையுடன் கூடிய மாடர்ன் தாடியும், ஆளைத் துளைக்கும் பார்வையுமாய் அசத்தலாய் இருந்தான்.

ஹாலில் அமர்ந்திருந்த ஒரு முகம் கூட சுமாராய் இருக்கவில்லை. இவனோ?

மூச்சு முட்டியது.

‘இவன் தான் மாப்பிள்ளையா? இவனோடு தான் என் வாழ்வா?’ என்று கண்ணில் நீர் தளும்பப் பார்த்து நின்றாள்.

Advertisement