Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 12
“டி ராணி இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பராங்களாம். பத்து நிமிஷத்தில வந்திடுவாங்க. போ போ.. போய் எடுத்து வச்சிகிருக்கத உடுத்து” அம்மா காட்டு கத்தல் கத்தினாலும் அவள் காதில் விழுந்தால் தானே?
அவள் அசையாது இருக்கவும், “கார்த்தி.. டேய் அவளைக் கவனி” என்று அவர் சென்று விட்டார். அவள் ஒரு அண்ணா பைத்தியம். அவன் சொல் மட்டுமே அவளிடம் எடுபடும். இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவன் பட்ட பாடு அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவன் மட்டுமா? அம்மா அப்பா என அனைவரும் தான்! சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளுமுன் எப்படியோ ஒத்துக் கொண்டாள்.
“ஏன் டா கிளம்பமாட்டேன்ற?”
“பயமா இருக்குண்ணா. இது வேண்டாமே.. நீயாவது புரிஞ்சுக்கோயேன்!”
“மனச குழப்பிக்காத ராணி. இப்போ நீ ரெடி ஆகு. அவர நேர்ல பார்த்து பேசு.. அப்பவும் பிடிக்கலைனா… நான் பார்த்துகுறேன்.”
“முடியுமா? இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம்.. பிடிக்கலனா நிருத்திடுவ தானே?” நிறுத்தவா.. இத்தனை போராட்டம்? இத்தனை ஏற்பாடும்? மாட்டார்கள் என்று தெரிந்தும் கேட்டாள்.
“நீ போடா.. போய் கிளம்பு, எல்லாம் நல்ல விதமா நடக்கும்!”
“ம்ம்ம்..”, வேண்டா வெறுப்பாய் அறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.
ஜான்சியின் ஆறாவது வயதில், ரோட்டிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அவள் அண்ணனோடு கதை அடித்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் தோழனை மாடு முட்ட வர, அதைப் பார்த்த ஜான்சி அவனைக் காக்கும் பொருட்டு அவனைத் தள்ளி விட்டாள்.
மாடு தலை திருப்பி அவளை இடிக்க, அதிக கொம்பு இல்லாததால் சிறு காயத்தோடு போய் ரோட்டில் விழுந்தாள். கீழே விழுந்தவள் எழும்பும் முன் ரோட்டில் வந்த கார் அவள் கால் மேல் ஏறி நின்றது. அருகிலிருந்தவர்கள் அவள் கால், கார் சக்கரத்திற்கு அடியில் இருப்பதை உணராமல் அவளை இழுக்க, கணுக்கால் முற்றிலுமாய் முறிந்து போனது.
வாகனத்தைத் தூக்கி அவளைக் காப்பாற்றி இருந்தால் சிறு காயத்தோடு போயிருக்கும். விபரம் தெரியாமல் காக்கிறேன் பேர்விழி என்று அந்த சின்னஞ்சிறு பெண்ணின் காலை உடைத்தே விட்டனர்.
மாட்டால் ஏற்பட்ட காயம் ஆறிய பின்னும் வாகனத்தால் ஏற்பட்ட காயம் அவள் உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கணுக்கால் சேர்ந்தபின்னும் அதன் பலம் திரும்பவில்லை.
பல மாத பயிற்சியால் நடக்க ஆரம்பித்தாலும் பழைய துள்ளல் போன இடம் தெரியவில்லை. என்ன முயன்றும் நடையில் விந்துதல் இருக்கத்தான் செய்தது. பார்ப்பதற்கு இரு காலும் ஒரே மாதரி இருந்தாலும், ஒன்று போல் செயல் பட முடியவில்லை.
மனதளவில் ஒரு குறையுமில்லை என்றாலும்  திருமணத்திற்கு வரம் பார்த்த பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலே நிரந்தரமானது.
ஏதோ அவளுக்கு வாழ்க்கை தருவது போல் ஓட்டையும் உடைசலும் பல்லைக் காட்டிக் கொண்டு வந்தது. பார்க்க சுமாரயிருந்தால் வரதட்சணை என்ற பெயரில் ஒரு வங்கியையே சொந்தமாக்க முனைய, தேவசகாயத்திற்கும் சாந்தாவிற்கும் மனம் விட்டுப் போனது.
இத்தனைக்கும் ஜான்ஸி பார்க்க நல்ல முக லட்சணமும் அளவான உடல்வாகும் கொண்டு பார்க்க நல்ல அழகியாகவே இருந்தாள்.
கதவை தாழிட்டவள் மனமோ ஒருவித சலிப்போடே இருந்தது. புடவையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தவள் மனம் யோசனையில் விழுந்தது, ‘கண்டிப்பாய் வருவேன்.. காத்திரு என்று சொன்னானே? ஏன் வரவில்லை? என்னை மறந்திருப்பானோ? நான்கு வருடமாகிவிட்டதே..’
நினைவுகளைக் கலைக்கும் படி கதவு தட்டப்பட, “தோ.. கிளம்பீட்டு இருக்கேன்மா.. ரெண்டே நிமிஷம்” என்று வேக வேகமாய் புடவையைச் சுற்றிக் கொண்டு கதவைத் திறந்தாள்.
அவள் திறக்கும் வரை வாசலில் நின்றிருந்தவர், “என்ன ராணி நீ? சீக்கிரம் தல வாரு! இந்தா பூ வச்சுக்கோ.. உன் ஃபிரெண்டு எங்க? எந்நேரமும் இங்க தான் கிடப்பா.. தேவைக்கு ஆள காணம்! பேசிக்கொண்டே அடுக்களைக்குள் சென்றார்.
கண்ணாடி முன் அமர்ந்தவள் நீண்ட நாளுக்குப் பின் கண்ணுக்கு மை தீட்ட ‘உன் கண், உன் குரல் மாதரியே ரொம்ப அழகு’. அவன் நினைவே மீண்டும் வந்தது. ‘இது என்ன அவன் நினைவு வந்து பாடாய்ப் படுத்துகிறதே.. அவன் சென்றது போல் நீயும் என்னை விட்டுச் செல்’ என்று எண்ணத்திற்குக் கடிவாளமிட்டாள்.
மனிதனின் மனதை அடக்க தெரிந்தால் அவன் தான் யோகி ஆகிவிடுவானே! என்ன முயன்றும் அவளால் அவன் நினைவிலிருந்து வெளிவர முடியவில்லை. அவனை பற்றி நினைக்க கூட அதிக நினைவுகள் இல்லை. ஓரிரு சந்திப்பு.. அதில் புன்னகையே பஞ்சமாயிருக்க, எங்கே பேசுவது!?
கல்லூரி ஆண்டு விழாவில் தான் அவனை முதன் முதல் பார்த்தாள். அவள் முதலாம் ஆண்டு மாணவி. கல்லூரி ஆண்டு விழாவில் சகமாணவனோடு பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தாள். முதல் ஆண்டு மாணவர்கள் 1960 – 1980 பாடல்கள் பாட/ஆட வேண்டும் என்பது விதிமுறை.  
முதலாம் ஆண்டு மாணவர்களை ஒரு வழி படுத்தி கொண்டிருந்தனர், அமர்ந்திருந்த மாணவ மணிகள்.
மாணவ மாணவிகள் மத்தியில் ஒரே சலசலப்பு! அவள் பாட ஆரம்பித்துமே சபையில் சலசலப்பு அடங்கியது. அப்படி ஒரு இனிமை அந்த குரலில்.
“நீ வருவாய் என நான் இருந்தேன்  
ஏன் மறந்தாய் என நானறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்  
ஏன் மறந்தாய் என நானறியேன்..”
தலைசிறந்த கலைஞன் மூச்சு காற்றை ஒரு குழலில் அனுப்ப, அதிலிருக்கும் துவாரம் வழியாய் வெளியில் வரும் இசை போல், புல்லாங்குழல் இசையாய் அவள் கானம் காதில் தேனாய் பாய்ந்தது. வான் பார்த்த பூமி போல் சபை கவனம் அவள் மேல்.
மேடைக்குப் பின் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தவன் முதல் முறையாய் அங்கிருந்தவர்கள் போல் தன்னை மறந்து பாடல் வரிகளையும் அந்த தேன் கலந்த குரலையும் ரசித்தான். கண்கள் மூடியிருந்தவன் மனம் லயித்து போனது. அவள் குரலில் தன்னையே அவன் மறந்த தருணம் அது. கள்ளுண்டு கிறங்கி காற்றில் மிதந்த உணர்வு அவனுள்.
“தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ…” என்ன வரிகள்… மனம் அவன்வசமில்லை. என்ன குரல்வளம்.. இப்படி ஒரு தாலந்தோடு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவள்.. என்று தான் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. இன்னும் இரண்டு முறை “வாராயோஓஓஓ..” அவள் பாடியிருந்தால் அப்பொழுதே அவளிடம் சென்றிருப்பான்!
குரலுக்கேற்ற அழகும் அவளிடம் இருக்கக் குரலோடு அவளையும் சேர்த்தே பல கண்கள் ரசித்தது.  
பாடி முடித்து அவள் விந்தி விந்தி நடந்து செல்வதைக் கண்ட கண்களில் சில பாவமாய் பார்க்க, சிலது அவள் அருகிலிருந்த அவள் தோழிகளுக்குத் தாவியது.
மேடைக்குப் பின் வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “சான்சே இல்ல உன் வாய்ஸ்.. ரொம்ப எமோஷனலா பாடின. இதுவே காம்படீஷனா இருந்தா, உனக்குத் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்!” புன்முருவலோடு கூறியவன் அவள் பதிலளிக்கும் முன் சென்று விட்டான்.
உயரமாய், பளீரென்று இருந்தான். கண்களில் அலைபுருதல் இல்லை. அவள் கண்களைப் பார்த்து பேசினான். வசிகரன். அவன் தலை மறைந்ததும் தான் தாமதம், “ரொம்ப சைட் அடிக்காத டி.. நம்ம சீனியர் தான். ஃபைனல் இயர். எல்லார்ட்டையும் நால்லா பேசுவார். அதுனால தான் உன் கிட்டையும் பேசிட்டு போரார்.. ரொம்ப நினைச்சுக்காதா!” கேட்காத தகவல்களை அருகிலிருந்தவள் காதில் புகையோடு வாரி இறைக்க,
‘உன் கிட்டக் கேட்டேனா?’ என்றே பார்த்துச் சென்றாள்.
முதல் ஆண்டு விடுமுறையின் போது ஒரு ஞாயிறன்று அவனை மீண்டும் அவள் செல்லும் தேவாலயத்தில் பார்த்தாள்.
பேசவெல்லாமில்லை, எதிரெதிரே இருவரும் பார்த்துக் கொண்டனர். புன்னகை கூட இல்லை.
அவள் காலை ஐந்தரை மணிக்கு ஆரம்பித்த ஆராதனை முடித்து வெளியில் செல்லவும் அவன் எட்டு மணி ஆராதனைக்காய் உள்ளே சென்று கொண்டிருந்தான்.
மற்றொரு முறை எட்டு மணி ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வந்த கூட்டத்தில் அவளிருந்தாள்.
மயக்கும் அந்த குரல் வெண்ணையில் குழைத்ததுபோல் வழுக்கி கொண்டு உள்ளிறங்க தெளிதேனாய் இனித்தது. கூட்டத்தோடு அவள் பாடினாலும் அவனுக்கு அவள் குரல் மட்டும் தனியே கேட்டது.
வீட்டிற்குச் சென்றபின்னும் அவனுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது. ‘எனக்காக மட்டுமே பாட மாட்டாளா?’ என்ற ஆசை முதன் முதலாய் அவனுள் தோன்றி மறைந்தது.
பின் எப்பொழுதாவது தேவாலயத்தில் பார்த்துக் கொள்வர். பேசியதில்லை. சிறு புன்னகை சிந்த ஆரம்பித்திருந்தான். அவளிடமிருந்து புன்னகை எதிர்பார்த்ததாய் தோன்றவில்லை.
ஒரு வருடம் கழித்து பெரிய ஜவுளிக் கடை ஒன்றில் அவள் தோழிகளோடு நுழையவும்  வாயில் நின்றிருந்த பெண்ணொருத்தி அவர்களிடம், “எங்க ப்ராடக்ட் ப்ரோமஷனுக்காக, மேக்கப் ஃப்ரீயா போடுறோம்.. போட்டு பார்த்திட்டு பிடிச்சா நீங்க வாங்கலாம். மஸ்காரா, காஜலுக்கு டிஸ்கவுண்ட் தரோம்..” என்று மூளைச் சலவை செய்ய, தோழிகளுக்குக் குஷியாய் போனது.
சோதனை எலிகளுக்கு மேக்கப் போடவந்தவள் கைதேர்ந்தவள். சுமார் மூஞ்சியையும் அழகாய் காட்டத் தெரிந்தவள். அழகாய் காட்டத் தெரிந்தால் தானே அவர்கள் அழகுப் பொருட்களை விற்க முடியும். அழகான ஜான்ஸி கண்ணைக் கவரும் அழகாய் தெரிந்தாள்.
“எனக்கு எனக்கு” என்று உள்ளே நுழைந்தவன் கையை பிடித்து அவனோடு வந்த பெண் உலுக்க, “சரி போ.. ஓவரா பூசிட்டு வந்து பயமுருத்தாத!” என்று கூறிவிட்டு அங்கிருந்தவளைப் பார்த்தவன் பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவளும் அவனை விட்டு கண்களை எடுக்கத் தான் முற்பட்டாள்.. அவள் அருகில் வந்தவனை மை விழி விரித்துப் பார்த்தாள்.
“உங்க வாய்ஸ் கேட்டுருக்கேன்.. மெஸ்மரைசிங் வாய்ஸ். ஆனா இன்னைக்குத் தான் கவனிச்சேன். உங்க வாய்ஸ் மாதிரியே நீங்களும், உங்க கண்ணும் ரொம்ப அழகு”. அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டு பதிலுரைப்பதற்கு முன் அவன் நகர்ந்து விட்டிருந்தான்.
அடுத்த முறை ‘காபி டே’யில் அவள் தோழிகளோடு அமர்ந்திருக்க, “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று வந்து நின்றவனை அவளோடு இருந்த தோழிகள் பட்டிக் காட்டான் போல் வாய் திறந்து பார்த்தாலும் மனதில், ‘கை கால் நல்லா இருக்க நம்மை பார்க்க ஒருத்தன் இல்ல. இவ லக்க பாரேன்’ என்பதே!
ஒரு கோல்ட் காபி அருந்தும் நேரம் தான் அவர்கள் பேசியது. சாரி.. மன்னிக்கவும்.. அவன் பேசியது.
அவள் எப்பொழுது அவனிடம் பேசியிருக்கிறாள்?
‘மா.. வா மா மின்னல்..’ என்ற பாணியில் தான் அவன் வந்து போய்விடுகிறானே.. அவள் யாரிடம் பதில் பேச?
“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. எவ்வளவுனா? என்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் உன் கூட வாழனும்னு நினைக்கர அளவுக்கு! இது காதலானா.. எனக்கு தெரியல. ஆனா காதலா இருந்த நல்லா இருக்கும்னு தோணுது. அதுவும் ஒன் சைடா இல்லாம இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு மனசு சொல்லுது. உனக்கு இன்னும் படிப்பு முடியல.. முடியரதுக்கு முன்னாடி என் மனசை சொல்லி உன்ன ட்ரபுள் பண்ணவேண்டாம்னு நினைச்சேன்.. ஆனா இப்போ சொல்லாம போக மனசில்ல. எனக்குக் கொஞ்சம் கடமைகள் இருக்கு.. அதனால காதல்னு மரத்த சுத்திட்டு இருக்க எனக்கு டைம் இல்ல.
நீ என்னுடைய வாழ்க்கை துணையானா என் வாழ்கைலயே அது தான் பெரிய சந்தோஷம். கண்டிப்பா உனக்கு என்னைப் பிடிக்கும். நம்பிக்கை இருக்கு! எனக்கு என்னமோ.. என் கூட நீ இருந்தா நீயும் என்னை மாதரியே சந்தோஷம இருப்பேனு தொணுது.
இப்போவே பதில் சொல்லுனு சொல்லலை. உன் படிப்பு முடியட்டும். அது வரைக்கும் உன்ன டிஸ்ட்ரப் பண்ண மாடேன். உனக்கு மேரேஜ் பேச்சு எடுக்கும் போது என் நினைவு வந்தா எனக்காகக் காத்திரு. நான் கண்டிப்பா வருவேன் உனக்காக!”
இப்பொழுதும் பதில் சொல்லாமல் அவள் அவனையே பார்த்திருந்தாள். “ஏதாவது சொல்லேன்?” என்று அவளைப் பார்க்க, அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.
தோழி ஒருத்தி மூக்கை நுழைக்க வரவும், “அப்புறம் பார்க்கலாம். வரேன்” என்று கூறி சென்றவன்தான். வருடம் நான்காகியும் இன்னும் வந்து கொண்டிருக்கிறான்!
அவனைப் பார்த்திருக்கிறாள். பேசியது கூட இல்லை. அவனும் அவளை ஆர்வமாய் பார்த்ததாய் தெரியவில்லை. அவன் பேச்சு மண்டையில் உரைக்கவே நேரம் பிடித்தது. அவள் அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் அவனுக்கு என்ன அவசரமோ.. ஆளைக் காணவில்லை.
அவ்வப்போது ‘அவசரத்திற்கு பிறந்தவன்’ நினைவுகள் வந்து செல்லும். அப்படி தான் அவனை எண்ணிக்கொண்டாள். ஆனால் அவனை பார்க்காததினாலோ என்னமோ அது வெறும் சிந்தனையோடு சென்று விடும். ஒரு வருடம் முன் வீட்டில் திருமண பேச்செடுக்கவும் அவன் அவளுள் நிரந்தர இருப்பிடம் பெற்றுவிட்டான்.
காதலாவென்றால்.. ஜான்ஸி, “இல்லை” என்பாள். முதலில், அவனாய் இருந்தால் நன்றாய் இருக்கும் என்ற எண்ணம். நாட்கள் நகர அவன் தான் வேண்டும் என்று எண்ணத்தில் ஒரு மாற்றம். ஏனென்று தெரியாது, அவனை நினைத்து கொண்டே இருந்ததால் இருக்கலாம். ஒருவனை மனதில் ஏற்றிவைத்த பின் வேரொருவனை அதே இடத்தில் ஏற்க மனம் ஒப்பவில்லை.
தெளிந்த நீரில் கல்லை போட்டவன் அதன் பின் காணவில்லை. அதனால் அவன் சொன்னதை எப்படி எடுத்து கொள்ள? வெரும் குழப்பம் மட்டுமே. குட்டையை குழப்பியவன் மேல் எரிச்சலாய் வந்தது. ஒரு முறை.. ஒரே ஒரு முறை அவனை பார்த்து பேசினால் தேவலாம் போல் இருந்தது. ஆனால் அதற்கு வழி தான் தெரியவில்லை.

Advertisement