Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

அத்தியாயம் – 2

தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே.

‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா… மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான்.

அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம், உறக்கம் கலைந்து கொண்டிருந்தவளை எழுப்பி அமரச் செய்தது. சோம்பல் முறித்து விட்டு, கண்களை கசக்கியவாறே, “பாட்டி” என்று அவரை தேடிக்கொண்டு அடுக்களை சென்றாள்.

அவளைப் பார்த்தவர், “எழுந்துட்டியா? இது என்ன உடுப்பு? தோள்ள தங்காத சட்ட? சட்டைக்கு அடியில ஏதாது போட்டுருக்கியா இல்லையா?”

சட்டையைத் தூக்கிக் காட்டியவள், சிரித்துகொண்டே “இதோ.. போட்டுருக்கேனே..” என

“ச்ச.. ச்ச.. என்ன பண்ற… போய் கீழ ஒழுங்கா நீளமா எதையாவது போடு.. போ”

“பச்.. வீட்டுக்குள்ள தானே.. எதையாவது போட்டுட்டு போறேனே.. எதுக்கெடுத்தாலும் சத்தம் போடாதீங்க உடம்புக்கு ஆகாது!” செல்லம் கொஞ்சி கொண்டே வாகாய் பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வெளி உலகம் பார்த்திராமல் தனிமையில் வாழ்துவந்தவருக்கு, செல்ல மகளாக வளர்ந்த இவளிடம் பார்த்ததெல்லாம் புதுமையாகவே இருந்தது.

இது தான் வாழ்க்கை, இப்படி தான் வாழ வேண்டும் என்று பழக்கப்பட்டவருக்கு அவள் வெகுளியான விளையாட்டும், கள்ளம் கபடமில்லா பேச்சும், வீட்டிகுள் அணியும் நவ நாகரீக உடை பழக்கமும் அவளை அவரிடமிருந்து தள்ளியே வைத்தது.

மகளை மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்த்திருந்தனர். அதுவே அவர் மகளுக்கு இங்கிருந்து பறந்து செல்லும் ஆவலை ஏற்படுத்தியதோ?

“காலம் கெட்டு கிடக்கு! இந்த காலத்து பிள்ளைகளுக்கு சொன்னா புரியுதா? காபி கலக்கவா?”

“ம்ம்..கொஞ்சம் ஸ்ராங்கா! அப்பிடியே தூங்கினதுல கழுத்து, இடுப்பு எல்லாம் வலிக்குது!

யாரு பாட்டி.. கெஸ்ட்டா? எதோ கிளம்பரேனு கத்தின மாதரி இருந்தது?”

அது வரை சிடுசிடுத்தவர், “அவனுக்கு மட்டும் இப்போ நீ ‘கெஸ்ட்டா’-னு கேட்டது தெரியனும்… அவ்வளவு தான்.. மலை ஏறிடுவான்! அப்புறம் அவன் அம்மா தான் வரனும் அவனை மலை இறக்க!” என்று சிரித்தார்.

பாட்டியின் தன்மை ஒரே நொடியில் மாறியது சுதாவிற்கு ஆச்சரியமே.

“ஏன் பாட்டி?”

“அவனுக்கு நானா ரொம்ப இஷ்டம். சின்னதுல பாதி நேரம் என் கூடத் தான் இருந்தான். அப்புறம் ஸ்கூல் போர நேரம் தவிர எப்போதும் என் புடவையை பிடிச்சுகிட்டு தான் சுத்துவான். உன் தாத்தா காலமான பிறகு கண்ணனும் சுசிலாவும் தான் எனக்கு எல்லாமும். ‘பாட்டி..பாட்டினு என்னையே சுத்தி வருவான்.”

பாட்டிக்கு கண்ணனை பற்றி பேசும் ஆவல் சுதாவை அதிசயிக்க வைத்தது. அவனை பற்றிய பெச்சில் கொஞ்சம் கர்வம் எட்டி பார்த்ததோ?

“சுசியோட அம்மா இறந்த பிறகு அவனுக்கு நான் மட்டும் தான் பாட்டி. உன்ன பார்த்ததும் கொஞ்சம் பொறாமை…” அவர்கள் பேச்சு முடிவதற்குள் கதவை தட்டிக் கொண்டு சுசிலா உள்ளே நுழைந்தார்.

“மீனா மா.. கதவ திறந்து வச்சிட்டு எங்க போனீங்க…”

அவர் சத்தம் கேட்டதும் சுதா, “பாட்டி யாரோ வந்திருகாங்க… நான் முகம் கழுவீட்டு டிரஸ் மாத்திட்டு வறேன்” என்று கூறிக்கொண்டு அவள் அறைக்குள் புகுந்தாள்.

“சுசி… கொல்ல புரம் தின்னைல இருக்கேன்… இங்க வா”

வீட்டின் பின்னிருந்த திண்ணையில் அமர்ந்த சுசிலா, “எப்படி மா இருக்கீங்க? பேத்தி என்ன சொல்றா?”

“சந்தோஷமா இருக்கேன் சுசி. என் மக, கௌரியே திரும்பி வந்தா மாதரி இருக்கு… என்ன கொஞ்சம் வாலு” என்று சிரித்தார்

அவர்கள் பேச்சின் நடுவில் வந்தவள், “பாட்டி! மானத்தை வாங்காதிங்க” கூறிக்கொண்டே சுசிலாவைப் பார்த்து, “வாங்க.. காபி? டீ? என்ன குடிக்கரீங்க?” புன்னகை முகமாய் கேட்க

“வா வா கண்ணு.. பாரு சுசி… என் பேத்தி சுதா.

சுதாமா.. நான் சொல்லலை… என் வயத்தில பிறகாத பொண்ணு…?

அந்த சுசிலா தான் இவ” என்று இருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தார்.

“காபியா? டீயா?” என்றவளிடம் காபி வாங்கி குடித்துக் கொண்டே அவர்கள் பேச்சு நீண்டது.

பேசிய சிறிது நேரத்தில் சுதா கவனித்தது எல்லாம் இது தான். ‘கண்ணன்! இருவரின் சுவாசம்! அவனில்லாமல் இவர்கள் உலகம் சுற்றுவதில்லை. அவர்கள் பேச்சில் நிமிடத்திற்கு ஒரு முறை அவன் பெயர் வந்து விடுகிறது!’

‘நாளைக்கு முதல் வேலையா அந்த பயலைப் போய் பாக்கணும். அப்படி மூச்சுக்கு முந்நூறு தரம் அவன் பேர சொல்ர அளவுக்கு என்னதான் அவன் கிட்ட இருகுன்னு பார்கணும்!’ என்று எண்ணிக்கொண்டாள்.

சுசிலாவின் இளமையும் கண்ணனின் புராணமும் கேட்டவள் அவனை ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவனாகவே மதிப்பிட்டாள்.

அஷோக் கண்ணன், சுசிலாவின் ஒரே மகன். திருமணமான மூன்றே மதத்தில் மனைவி கர்ப்பமுற்றது தெரியுமுன்னே.. ‘பழைய காதலியை மறக்க முடியவில்லை’ என்று அவரை தனியே விட்டுச் சென்ற கணவனை நினைத்து அழாமல் எழுந்து நின்றவர் சுசிலா.

வளர்ந்த இடத்தில் சொந்தங்கள் நடுவே வயிற்றை நிரப்பிக் கொண்டு கணவன் இல்லாமல் இருக்கப் பிடிக்காமல் தன் தந்தை வழி தாத்தாவோடு இருக்கச் சென்னை வந்தவர். மகனைப் பெற்று அவனைக் கண்ணாய் பேணி வளர்த்தார். கண்ணன் தான் அவர் ஜீவ நாடி. அவன் பெருமைகளை பேசாமல் அவரால் இருக்க முடியாது.

வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவளை கண்ட சுசிலா, “என்ன சுதா.. அப்படி பாக்குர? எதாவது கேக்கனுமா?” என்று புன்னகைதார்.

வாயை மூடிவிட்டு ‘இல்ல’ என்பது போலத் தலையை ஆட்டிக்கொண்டே “இல்ல..” என்று இதழ் கடித்து, “இருக்கு.. சொல்லட்டா?” இளித்துவைதாள்..

“ம்ம்ம்… சொல்லுமா”

“நீங்க அநியாயத்துக்கு செம ஃபிகரா ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிசுகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. உங்க ஸ்கின், உங்க கலர், உங்க ஹேர்… எல்லாமே செம்…மையா இருக்கு! உங்களுக்கு ஒரு மகன் இருக்கானு நீங்க சொன்னா தான் தெரியும்!” கூறி விட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

கேட்ட சுசிலா வாய் விட்டுச் சிரித்து விட்டார்.

“ம்ம்ம்.. அப்புறம்?” கதை கேட்பது போல அவர் நாடியில் கை வைத்துக் கேட்க,

முகத்தை சுருக்கிக் கொண்டு, “நான் நிஜமா தான் சொன்னேன்.” என்றவளிடம்

“ஒஹ்.. ஒக்கே… த்..தாங்க்ஸ்” என்று அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, “தனியா இங்க என்ன பண்ற? பாட்டி கூட போர் அடிக்கலியா?”

“இல்ல.. ஏதாவது செஞ்சுட்டே இருப்பேன். என் ரூம் பூரா இப்போ தான் ம்யூரல் முடிச்சேன்”

பாட்டி, “ரூம் சுவர் பூரா கிருக்கிட்டு அலையரா.. கேட்டா ‘அவ தான் ஏதோ அடுத்த ஆங்கலோவாம்’. அவ கலையோட அரும பெரும தெரியாம திட்டுரதா என்ட்ட கோவிச்சுக்கரா!”

சுதா, “சும்மா ஒரு பேச்சுக்கு அடுத்த மைக்கேல் ஆஞ்சலோனு சொன்னேன்… இத வேர யார்ட்டையும் சொல்லிடாதீங்க.. கல்லால என்னை அடிப்பாங்க..”

சுசிலா, “ஓ.. வாள்-ல பெயின்டிங் எல்லாம் பண்ணுவியா? நம்ம வீட்டுல நிறைய சுவர் வெரும் வெள்ளையா இருக்கு.. வந்து உன் திறமைய காட்டு”

சிறிது நேரம் பேசியவர், “கண்ணன் தனியா இருக்கான். எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்பறேன், அடுத்த வீடு தான்.. செக்யூரிட்டிகிட்ட சொல்லி வைக்கிறேன்.. நீ எப்போ வேணுனாலும் உன் வீடு மாதிரி வா.. சரியா?”

மண்டையை நன்றாக ஆட்டி வைத்தாள்.

வாசல் வரை கூடவே நடந்தவள், “உங்களுக்கு உங்க பையனா ரொம்ப இஷ்டமா?” என்று கேட்டாள்.

சுசிலாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், “ம்ம்.. ரொம்ப… ரொம்ப இஷ்டம்!”

புன்னகைத்தவரே “உங்கள மாதரி நிமிஷத்துக்கு ஒரு தரம் மகனை நினைக்குர பாசமான அம்மா கிடைக்க உங்க பையன் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.” என்றவளிடம் விடை பெற்றுச் சென்றவர் மனம் முழுவதும் சுதா தான்.

அவள் முகத்தில் தெரிந்த ஏக்கம் அவரை அதிகமாய் அசைத்தது. ‘எதற்கு இப்படி ஒரு ஏக்க பார்வை’ என்றே எண்ணினார். வாய் விட்டு கேட்கவில்லை.

கண்ணனுக்காவது சுசிலா மட்டும் தான். அன்போடு கண்டிப்பும் கலந்தே வளர்த்தார். சுதா அப்படி அல்ல. அம்மா அப்பாவின் செல்ல தேவதை. அவளை எதற்காகவும் சிணுங்கக் கூட விட்டதில்லை.

வீட்டில் ஒரே பெண்ணாயிருந்தாலும் பெற்றவர் இருந்தவரைத் தனிமையைக் கண்டதில்லை.  இப்பொழுதெல்லாம் அதை மட்டும் தான் உணர்கிறாள்.

பாட்டி அரவணைத்துக் கொண்டாலும் அவளிடம் ஒட்டுதல் காட்டவில்லை. ஒரு விலகல் இருந்து கொண்டே இருக்க, தனிமை அவளை கொல்லாமல் கொன்றது. நீரில் யாரோ அவளை முக்கிப் பிடித்திருப்பது போன்ற உணர்வு.

நம்மை சுற்றி ஒருவரும் இல்லாமல் இருப்பது ஒரு வித தனிமை என்றால் கூட்டத்தின் நடுவே, சிரிப்பொலிகள் மத்தியில் யாருமில்லாத உணர்வு, மற்றொரு வகையான தனிமை.

தனிமை பிடிக்கவில்லை. இங்கு இருக்கவும் பிடிக்கவில்லை. கை பிடித்து யாராவது வெளியில் தூக்க மாட்டார்களா என்ற ஏக்கம் குறைந்த பாடில்லை.

பெற்றவர்கள் இறந்த பின் அத்தை வீட்டு நினைவுகளும் உவப்பாயில்லை. அதுவும் அவனை நினைத்தால் நட்டெலும்பு வரை சில்லிட்டது. கூடவே, அவன் என்னை இங்கு கண்டுவிட கூடாதே என்ற வேண்டுதலும்.

எண்ணங்கள் கருவண்டாய் குடைய உள்ளுக்குள் வருத்தம். தனியாய் விட்டுச் சென்ற பெற்றவர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது. கூடவே அழையா விருந்தாளியாய் கண்ணீரும்.

‘வானத்தில் இருப்பார்களோ?  என்னை பார்ப்பார்களோ?’ என்று  அதைத் தான் வெறித்துப் பார்த்து நின்றாள். கண்ணீர்  கன்னத்தைத் தொடவில்லை. எப்பொழுதும் போல் அதை மௌனமாய் உள்ளிழுத்துக் கொண்டாள்.

Advertisement