Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 6
காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது.
“டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி, நீ பாட்டுக்கு முழுங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
தாய் முகம் பார்த்தவன், ‘தினமும் நடக்கும் கதை தானே’ என்ற எண்ணத்தோடு, எந்த அலட்டலும் இல்லாமல், பொறுமையின் சொரூபியாய், “ம்மா.. நீங்க சாப்பிடுங்க முதல்ல.. அப்புறம் பேசலாம்!” என்றுவிட்டு, விட்டதைத் தொடர்ந்தான்.
அம்மா மகன் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாடுகள் இருந்தாலும் இருவரிடமும் தோழமை உணர்வே அதிகம். மகன் தலை எடுக்கும் முன் வரை கட்டுப்பாடுகளும் கண்டிப்பும் காட்டி வளர்த்தவர் அவன் தொழிலையும் அங்கு வேலை செய்பவரையும் கையாளும் திறம் பார்த்தே இளகிவிட்டார்.
அவன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் எல்லா தகுதியும் அவனுக்கிருப்பதாய் அவரால் ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை இருந்தும் ஒரு தாயாய் முயற்சிக்காமல் இருக்கவும் முடியவில்லை.
மகன் திறமைசாலிதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் விஷயம் அதில்லை. சிறுவனாய் இருக்கையில் ஒரு முறை கேட்டான் தன் தகப்பனை பற்றி! அன்று தான் முதலும் கடைசியும். தகப்பன் பெயர் கூட நினைவில்லை. கட்டிய மனைவியை நடு வழியில் நிர்க்கதியாய் விட்டுச் சென்றவனைப் பற்றி என்ன பேச்சென்று விட்டுவிட்டான்.
தாயின் தனிமை அஷோக்கைப் பாதிக்கத் தான் செய்தது. அவர் வாழ்வைக் கொண்டு மகனுக்குத் திருமண வாழ்வில் பிடித்தமில்லையோ என்று அவர் அஞ்சும் படி தான் காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. திருமண பேச்சு அவனுக்கு உவப்பாயில்லை.
சுசிலாவின் குடும்பம் பெரியது, கணவன் விட்டாலும் குடும்பம் அவரை தாங்கிக் கொண்டது. வயிற்றில் உள்ளதைக் கலைத்துவிடு வேரொருவனை வாழ்க்கைத் துணையாய் ஏற்படுத்திக்கொள் என்றதும், ‘ஒரு ஜீவனை அதுவும் தன் உயிரும் சதையும் கொண்ட சிசுவையா?’ என்று  அங்கிருந்து கிளம்பிவிட்டார். உறவுகளின் அனுதாப பார்வை அவரை வதைக்க, வயிற்றை தள்ளிக்கொண்டு அவர்கள் நடுவில் இருக்க முடியாமல் போகவே தன் அப்பாவின் வழி தாத்தா, கண்ணபிரானிடம் வந்தவர் தான்.
உலகத்தைப் பார்த்து அதன் ஏளன பேச்சைப் பார்த்துப் பயந்து ஒளிந்து கொண்டார். இளம் வயது, கண்ணைப் பறிக்கும் அழகு.. சுசிலாவிற்கு உலகம் நல்லதாய் இல்லை. சென்ற இடங்களின் தன்னை எல்லோரும் கீழாய் பார்ப்பது போன்ற உணர்வு. ‘கணவன் விட்டுச் சென்றான்.. இவ சரி இல்லையோ?’ என்ற பேச்சுகள் முள்ளாய்.. ஆண்களின் அனுதாப அலைகள் சுசிலாவை முடமாக்கி வீட்டில் அமரவைத்தது.
தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் மேல் கொலைவெறி வந்தது. பலமுறை அவன் தொட்ட தன்னையே அழித்துக்கொள்ளலாம் என்று நினைத்த காலங்கள் உண்டு.
சுசிலா கையில் கண்ணன் சிரித்த பொழுது அவருக்கு வயது இருபது. அப்படியே சுசீலாவைக் கொண்டு பிறந்திருந்தான். கண்கொள்ளா அழகு. அவள் வெண்பட்டு மேனியும், குறுகுறு விழியும், தேனொழுகும் சிகப்பு உதடுமாய் அவன் கொள்ளை கொள்ளாத உள்ளம் இல்லை.
சுசிலா, மகன் மட்டுமே உலகமென்று நேரத்தை அவனோடு கழித்தார். தன் பொக்கை வாய் கொண்டு சிரித்து, கொழு மொழுவென்றிந்த கண்ணனைப் பார்க்கப் பார்க்க அசை அவருக்கு அடங்கவில்லை. மகன் நடக்க ஆரம்பித்தான்.. எழ எத்தனிக்கும் போதெல்லாம் விழுந்தான். ஆனால் விழ விழ எழுந்தவன் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான்.
மகன் தாய்க்கு ஆசானாய் மாறினான். விழுந்த சுசிலாவும் எழுந்து நின்றார். கணவன் என்ற ஒருவன் தன் வாழ்வில் யார்? அவன் வருமுன் நான் வாழவில்லையா? என் சுக துக்கத்தை அவனைக் கொண்டு நான் ஏன் நிர்னைக்க வேண்டும்?
கணவனை மனதார மன்னித்தார். தன் வாழ்வில் மூன்று மாதம் இருந்தவர் தன்னை தனியே விட்டுச் செல்லவில்லை, ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்தே சென்றிருக்கிறார். எங்கிருந்தாலும் சுகமாய் இருக்கட்டும். தன்னை கட்டி இழுத்த வெறுப்பையும் கோபத்தையும் களைந்து எழுந்தார்.
நாம் வீழ்வதும் வாழ்வதும் நம் கையில் தான். வெறுப்போடு நம்மை நாமே காயப்படுத்தி வாழலாம். மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்து சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் மேல் எழலாம்.
சுசிலா எழுந்தார். கண்ணபிரான் டெக்ஸ்டைஸ்-யை பெரிது படுத்தினார். எ.கே.மில்ஸ் அவரால் இந்திய அளவில் பெரிதாக்கப் பட்டது. இன்று அவரின் ‘சிறகு ட்ரஸ்ட்’டால் பல பிள்ளைகள் படிக்கின்றனர்., தனித்துவிடப் பட்ட பெண்களும் தடம் புரளாமல் நிமிர்ந்து வாழ்கின்றார்கள். பல   குடும்பங்களும் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாம் வாழ்ந்து பிறரை வாழ வைக்கலாம். அல்லது பழைய வலிகளைக் கிளறி நம்மை நாமே காயப்படுத்தி சுற்றி உள்ளவர்களையும் காயப் படுத்தலாம். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம்.
உண்டு கை கழுவி முடிக்கவும் அவர் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
“வசதி இருந்து என்ன பிரயோஜனம்? வீடு பிசினெஸ்சுனு எல்லாத்தையும் நானே  ஒத்த ஆளா பாக்க வேண்டி இருக்கு!”
“ஏன் மா காலைலயே? உடம்பு முடியலையா?” கூறிக்கொண்டே செய்தித் தாளோடு அங்கிருந்த சோஃப்பாவில் அமர்ந்து கொண்டான்.
“டேய்.. மனுஷிக்கு ஒரு நாள் ரெஸ்ட் இருக்காடா? சமயல பாக்கணும்.. உனக்கு யார் சமச்சாலும் தொண்டையில இறங்க மாட்டேங்குது! ஆஃபீஸ் வேலைய பாக்கனும்.. நீ வேற புதுசு புதுசா ஏதாவது செய்யர, வேல தான் அதிகமாகுது, என் அப்பாக்கு வயசாகிடுச்சு, உடம்பு முடியாதவர கூட இருந்து பாத்துக்க முடியுதா? அப்பப்போ கிடைக்குர நேரத்துல போய் தலைய காட்டவேண்டி இருக்கு!
இங்கையே வேலை முடியல அதுல இன்னைக்கு அடுத்த ஃபிலைட்டுல அப்பாவ பாக்க மும்பை கிளம்பணும்… முடியலடா..”
அம்மா அடுத்து என்னத்தைச் சொல்லப்போகிறாரென அவனுக்கா தெரியாது? தெரிந்ததால் வாயை டீ குடிக்க மட்டுமே திறந்தான்.
அவன் கையிலிருந்த செய்தித் தாளை பிடுங்கியவர்,
“டேய் கண்ணா.. என் செல்லமில்ல… ஒரு கல்யாணம் பண்ணிக்கோயேன்டா.. வர மருமக வாய்க்கு ருசியா உனக்கு சமச்சு போடுவா..  வீட்டுலயாவது எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்குமே“
“ம்மா… சாப்பாடு செய்ய ஆளுவேணும்னு நான் கல்யாணம் பண்ணனுமா? கொஞ்சம் ஓவரா இல்ல? இன்னைக்கு மட்டும் என்ன நீங்களா செஞ்சீங்க? நான் ஒன்னும் சொல்லாம சாப்பிடல?”
“அது தான் நீ சாப்ட லட்சனத்த பார்த்தேனே.. தின்ற மூனு இட்டிலியை நான் ஊத்தினா என்ன அவ ஊத்தினா என்னடா? மட்டனும் நான் சொன்ன அளவுல தான் அவ எல்லாம் பாத்து பாத்து செஞ்சா.. எனக்கு நல்லா தான் இருந்தது!”
“இட்டிலி சாஃப்டாவே இல்ல. கிரேவில ஒரே மசலா வாசம்! அப்புறம் இந்த டீ, இது டீ-னு இந்த கப்புல எழுதி தான் ஒட்டனும்? குடிக்கக் கொடுத்த தண்ணி மட்டும் ஓ.கே”
மூச்சை நான்கு முறை இழுத்து விட்டுக்கொண்டார். வரவழைத்த பொறுமையோடு,
“அது தான் நான் சொல்றேன். உனக்கு வாய்க்கு ருசியா செஞ்சு கொடுக்க எனக்குத் தெம்பில்ல.. பெரிய ஹோட்டல் செஃப் வரைக்கும் வச்சு பார்த்துடேன்.. எப்பாயாவதுனா ஓகே… தினமும் இவன் சமயல் வேண்டாம்னு வரவனையெல்லாம் தொரத்திடுர!
ஒருத்திய காலா காலத்துக்கு கல்யாணம் பண்ணினேனா இந்த பிரச்சினை வராது பார்! நம்ம குடும்பத்துல இருபத்தி ஐஞ்சு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க ஒருத்தன் நீ மட்டும் தான் டா.. ஊர் பக்கம் தலையைக் காட்ட முடியலை எல்லாரும் துக்கம் விசாரிக்கர மாதரி விசாரிக்கராங்க. நீலா அத்த, ‘பையனுக்கு ஏதாவது குறையா?’-னு என் கிட்டையே..”
“ம்மா.. ஆஃபீஸ் வேலையை நான் பாத்துகுறேன். ஒரு பத்து நாளுக்கு எல்லாத்தில இருந்தும் லீவ் எடுத்துக்கோங்க.. ராமு வீட்டை பார்த்துபான். மைதிலிய சமயல கவனிசுக்க சொல்லுங்க. நீங்க அந்த பத்து நாள் போய் தாத்தா கூட இருந்துட்டு வாங்க! பிராப்லம் சால்வ்டு!! ஊர்ல நாலு நாள் கேப்பாங்க அப்புறம் அவங்க வேலைய பாக்க போய்டுவாங்க.. அவங்களுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணமுடியாது!”
“அப்போ ராமுவும் மைதிலியும் போதும்?”
“ம்ம்.. இப்போதைக்கு!”
அஷோக்கின் தாத்தா காலத்திலிருந்து  ராமுவின் குடும்பம் இவர்கள் நிழலில் வாழ்ந்து வருகிறது! மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளத்தைப் பராமரிப்பவனிலிருந்து கேட்டில் இருக்கும் காவலாளி வரை ராமுவின் அதிகாரத்தில். இந்த குடும்பத்தின் விசுவாசி. அஷோக்கைவிட சில வருடங்களே மூத்தவன்.
எப்படிப் பாடுபட்டும் ராமுவிற்கு படிப்பு ஏறவில்லை. திறமைசாலி, அறிவாளி. வீட்டைத் திறம்பட நடத்தி வருகிறான்.
மைதிலி, ராமுவின் மனைவி. தாய் மகன், இருவரின் அறையைச் சுத்தமாய் வைத்திருப்பதும்,  வீட்டினுள் வேலை செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதோடு சமையலையும் கவனித்து வருகிறாள். இவர்கள் வீட்டின் பின் இருக்கும் வேலையாள் குடியிருப்பில் தங்கள் மகனோடு வசித்து வருகின்றனர்.
சலிப்போடு அமர்ந்தவர், “போடா.. நீயும் யாரையும் விரும்பறேன் கட்டி வைனு கேட்க மாட்டேங்கற… நான் பார்த்தாலும் பிடிக்க மாட்டேங்குது!… எப்போ தான் கல்யாணம் பண்ண போர? பேரன் பேத்தியைக் கொஞ்ச வேண்டிய வயசுல உன்னை கெஞ்சிகிட்டு இருகேன்!”
“அம்மா உங்களுக்கு இன்னும் நாப்பத்தி அஞ்சு முடியலை.. நியாயமா பன்னெண்டு வயசு பையனோட நீங்க மாரடிசுட்டு இருக்கணும்.. பேரன் வேணுமாம்… கொஞ்சம் அடங்குங்கமா..”
அவன் பேச்சில் உண்மை இருந்தாலும் அதை எதுவும் கேட்கும் பக்குவத்தில் அவரில்லை. திருமணம் ஆக வேண்டும். அவன் வயது பிள்ளைகளெல்லாம் அவர் குடும்பத்தில் இன்று குடும்பமாய் இருக்க, எல்லா விழாக்களிலும் தன்னை போல் தன் மகனும் தனியே நிற்பது அவரின் நிம்மதியைக் குலைத்தது. இன்னும் சில மாதங்களில் அடுத்த திருமணம் இருக்க, மும்பை பக்கம் தலை காட்டவே சுசிலாவிற்கு தயக்கம்.
“இன்னும் எத்தன நாள் தான் என் முகத்தை நீயும் உன் முகத்தை நானும் பாக்கரது? உனக்குன்னு பார்த்த எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகி, குழந்தையும் குட்டியுமா இருக்காங்க! இதுக்கு மேல பொண்ணு ஃபோட்டோக்கு வேற ஊருக்குத் தான் போகனும்னு தரகர் சொல்லிடார்.”
அவன் வாய் திறந்தால் தானே. இப்படியே அமைதியாய் இருந்தால் சில நிமிடத்தில் சுசிலாவும் அமைதி ஆகிவிடுவார். எப்பொழுதாவது ஒரு நாள் எழும் இப்பேச்சு, சில மாதமாகவே அடிக்கடி நடக்கும் காரியங்களில் ஒன்றாகி விட்டது.
சுசிலாவும் எப்படியெல்லாமோ முயன்றுவிட்டார் இன்று வரை மகன் திருமண விஷத்தில் ஒரு முன்னேற்றமும் காணமுடியவில்லை.
சிறிது நேரம் அமைதியாய் கழிய, “மாலினி பத்தி என்ன நினைக்குர?” என மீண்டும் சுசிலா ஆரம்பித்தார்.
“எனக்கு ஒரு நல்ல செக்கரட்டரி. ரொம்ப ஸ்மார்ட். எந்த வேலையும் சொன்னதும்.. புரிஞ்சுப்பா, சட்டுனு செஞ்சுடுவா.. எங்க தட்டினா எப்படி வேல நடக்கும்னு ஈஸியா கணக்கு போட்டுடுவா, முடியாதுனு அவ அகராதியில ஒரு வார்த்த இல்ல… வேணும்னு நினைச்சா அடஞ்சே தீருவா.. அவ ஒரு சுப்பர் பிரைன்! அவளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும்! என் ரைட் ஹான்ட்.. ஏம்மா? உங்களுக்கு அவ வேணுமா?”
“நல்ல பொண்ணா தெரியரா? தெரிஞ்ச குடும்பமும் கூட.. போன தரம் ஜானகி கல்யாணத்தில அவளையும் அவ வீட்டாளுங்களையும் பார்த்தேன்.. வீட்டுக்கு வந்து போங்கனு சொல்லி இருக்கேன்.
ஆஃபீஸ்ல உங்க ரெண்டு பேரையும் சேத்து பேச்சு அடி படுதே…. எனக்கு அவள பிடிச்சிருக்கு. அவள உனக்கு பிடிசிருக்கா?  உடனே ஃப்ரெண்ட்லியா தான் பழகரேணு சொல்லாத! சுத்தி முத்தி அவ நமக்கு சொந்தம் தானே.. அவ கூட உன் கிட்ட நல்லா தானே பழகரா? யோசி, உனக்கு சரின்னா.. சேது அண்ணாட்ட பேசவா? அவங்க வழி சொந்தம் தானே.. உனக்கு முறையும் கூட என்ன சொல்லுர?”
அவனுக்கு அலுத்து விட்டது. விடாமல் தினமும் இதே பேச்சா? அதுவும் அவன் உதவியாளுடனா? “ப்ச்!! ம்மா..!!! போதும் மா இந்த பேச்சு!”
“பாக்க அம்சமா நல்லா இருக்கா..ளே..டா?”
“உங்களுக்கு பாக்க நல்லா இருந்தா?? அவள போய்… ப்ச்! நீங்களும் உங்க டேஸ்ட்டும்! எங்க சாப்பாட பார்த்தாலே வெயிட் போட்டுடுவோமோனு.. இலையும் தழையும் தின்னுட்டு அலையரா!! ஹெல்த் கான்ஷியஸ்னஸ் கண்டிப்பா வேணும்.. ஆனா இவ டூ மச்! அவள மாதிரி ஒருத்தி எனக்கு வேண்டவே வேண்டாம்! சிக்ஸ் பேக் வச்சிருக்க என்னால கூட இவள மாதரி சாப்பிட முடியாது!
நீங்க சொல்லுர எல்லா பொண்ணுங்களும் ஓவர் ஃப்லாஷியா இருகாங்க! எனக்கு உங்கள மாதிரி அன்பா, அமைதியா, என்னை மட்டுமே விரும்பர பொண்ணா வேணும் மா! கிடைக்கர நேரமெல்லம் ஷாப்பிங், பார்லர்னு சுத்துரதுங்க எனக்கு வேண்டாம்!”
“அவள கல்யாணம் பண்ணிகிட்ட பிஸினஸ்லயும் ஒத்தாசைய இருப்பா கண்ணா..”
“எனக்கு தனியா பிஸினஸ் ரன் பண்ணத் தெரியும். உங்களுக்குப் பொழுது போகுமேனுதான் இன்னும் உங்கள வர விடுறேன்.
அதுக்காக வர போரவளும் பிஸினஸ் பாக்க தெரிஞ்சவளா இருக்கனும்னு அவசியமில்ல! ..ம்மா என் ஆசைக்கு மரியாதை குடுங்கமா..”
“ரெண்டு வருஷமா உன் பின்னாடி தொங்கிட்டு இருக்கேன்! நீ போடுர கண்டிஷன்ஸ் கல்யாணம் பண்ணவா இல்ல பண்ணாமலே இருக்கவா? உன் கண்டிஷன்ஸ் கேட்டு வரவ எல்லாம் தெரிச்சு ஓடுரா! என்ன டா உன் ஆச? பிரம்மச்சாரியா வாழரதா?” பாவமாய் கேள்வியோடு பார்த்தவரை
“எனக்கு மனைவியா வர போரவள பார்த்ததும் என் மனசு சொல்லனும்மா ‘இவ தான் டா உன்கிட்ட மாட்டிட்டு முழிக்க போரவனு’. அவ கூட இருந்தா நேரம் நிமிஷமா கரையனும். கஷ்டப் பட்டு நெட்டி தள்ளக் கூடாது.
நல்லா சிரிச்சு பேசனும்.. சிரிக்க வைக்கணும்.. எப்போடா ஆள விடுவானு தோணக்கூடாது.
ஜடமா இல்லாமா லைவ்லியா.. கொஞ்சம் குறும்பா இருக்கனும்..
எல்லாத்துக்கும் மேல அவளுக்கு என்னைப் பத்தி தெரியக் கூடாது, பழகி, என்னை எனக்காக மட்டும் பிடிக்கணும்.. என்னோட வர சொத்துக்காகவும் புகழுக்காகவும் இல்ல.. ”
அவன் முடிக்கவில்லை, “டே..ய் போதும் டா.. உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகுமா? எப்பிடி எல்லாம் ஒருத்தியை நீ பார்க்கவே முடியாது.. கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி.. உன்ன யாருனே தெரியாத ஒருத்தி உன்ன எதுக்கு கண்ணா தேடி வருவா?!
அந்த ஸ்ருதி பொண்ணாவது இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம். அவளும் மிஸ்சாகிட்டா! அவ மட்டும் வேர ஒருத்தனை பிடிசிருக்குனு சொல்லாம இருந்திருந்தா, உன்ன தரதரனு இழுத்துட்டு போய் மணமேடைல உக்கார வச்சிருப்பேன். எனக்குத் தான் குடுத்து வைக்கலை. இனி எங்கபோய் உனக்கு பிடிச்சவள நான் தேட?” கோபத்தோடு ஆரம்பித்து பரிதாபமாய் முடித்தார்.
“நீங்க ஒன்னும் தேட வேண்டாம்.. எனக்குனு பிறந்தவ என்னைத் தேடி வருவா.. அப்போ அவள கோழி அமுக்குரா மாதிரி அமுக்கி கூட்டிட்டு வாரேன்! கட்டிவைங்க!”
“ம்கும்.. இங்க காட்டுர பொண்ணு எதுவும் வேண்டாமாம்.. இவன தேடி வருவாளாம் ஒருத்தி அவள கோழி அமுக்கரமாதிரி அமுக்கிடுவானாம்.. நடகுர விஷயமா? எல்லாம் என் தல எழுத்து!” வாயுகுள்ளே முணகியவர்,
“நீ கூட்டிட்டு வந்து கட்டிகிட்டாலும் சரி.. கட்டிட்டு கூட்டீட்டு வந்தாலும் சரி! கல்யாணம் செஞ்சு குடும்பமா வாழ்ந்தா சரி தான்! எனக்கு உடம்புல தெம்பிருக்கும் போதே ரிட்டயர் ஆகி காலா காலத்துல பேரன் பேத்திய கொஞ்சணும் அவ்வளவு தான்” முணுமுணுது கொண்டே எழுந்து சென்றார்.
அவர் அடங்கவும் எப்பொழுதும் போல அவரை வெருப்பேத்தி கொண்டே “ஒரு நல்ல அம்மா மாதிரியா பேசுரீங்க” அவர் பின்னே சென்றான்.
பின்னோடு வந்தவனை பார்த்து, “ஏன்டா நம்ம ஆஃபீஸ்ல அழகான பொண்னுகளுக்கா பஞ்சம்.. அதுல ஒருத்தி கூடவா சைட் அடிக்கரமாதரி இல்ல உனக்கு.. ஒரு வயசு பையன் மாதரி ஒருத்தி பின்னாடியாது சுத்தியிருக்கியா நீ? கேக்கரேனு தப்பா நினைக்காத.. பொண்ணுங்க பிடிகும் தானே?”
நாட்டின் நிலை அப்படி.. பாவம் அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. பெண் வேண்டாம் என்று பைய்யனோடு வந்து நின்றுவிட்டால்? யோசிக்கவே அவரால் முடியவில்லை.
சிரிப்பை அடக்க மாட்டாமல் அவர் தோளை சுற்றி கை போட்டுகொண்டு, “அம்மா.. நீங்க பேசரது வெளில தெரிஞ்சுது.. இது ஒரு கேவலமான குடும்பம்னு நினப்பாங்க.. போங்க மா.. அப்புறம் கிடைக்க இருக்க பொண்ணும் இடைக்காது.. நேரமாச்சு இப்போ..”
“ஆஃப்பீஸ் கிளம்பலாம். நாளைக்கு தானே மும்பை? என்ட்ட பொய் தானே சொன்னீங்க?” அவரை தள்ளி கொண்டே வாயிலை நோக்கிச் சென்றான்.
“பொய் இல்ல.. ஒரு ஃப்லோ-ல சொன்னேன்..” இருவருமாய் பேசிக்கொண்டே அன்றைய வேலையைக் கவனிக்கச் சென்றனர்.
அஷோக் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளச் சுதாவின் நிலை தான் மோசமாகிக் கொண்டிருந்தது. தண்ணீரும் கசக்க.. கண்களும் தூக்கத்தை மறக்க.. மூடிய இமைக்குள்ளும் அவன் வந்து சிரிக்க.. தேய்ந்த டேப் ரெகார்டராய் அதே கேள்விகளுமாய் மண்டை காய்ந்து அமர்த்திருந்தாள்.
இதற்கு மேல் இந்த கொடுமையான நிலையில் இருக்க முடியாதென்று, பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்காக விண்ணப்பிக்க ஆரம்பித்த கையோடு அஷோக்கைக் காண மாஸ்டர் ப்ளானையும் வகுக்க ஆரம்பித்தாள்.

Advertisement