Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 3
காலை வெயில் அதன் வேலையை நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தது. கோவிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய சுதா அப்படியே சுசீலாவைப் பார்த்துவிட்டு பாட்டி கொடுத்தனுப்பிய லட்டைக் கண்ணனிடம் கொடுத்து அவனோடு நட்புக் கரம் நீட்டும் எண்ணத்தோடு சுசிலா இல்லத்தை நோக்கி நடந்தாள்.
அந்த தெருவில் அஷோக்கின் வீடு தான் கடைசி வீடு. அதற்கு அடுத்து முழுதும் அடைக்கப்பட்டிருந்த ஒரு டென்னீஸ் மைதானம். இவன் வீட்டின் பின்புறம் கடற்கரை.
இவன் வீட்டின் பின் வாசலிருந்து சில அடி தூரத்தில் கடற்கரை. மீனாட்சி பாட்டியின் வீட்டிற்குப் பின் மற்றொரு வீடு இருக்க, அவர்கள் கடற்கரைச் செல்ல வேண்டுமென்றால், டென்னீஸ் மைதானம் தாண்டி சுற்றிக் கொண்டு தான் போகவேண்டும்.
இப்படியாக போகையிலும் வருகையிலும் அஷோக்கின் வீட்டுக் காவலாளியிடம் அவளுக்கு நல்ல பழக்கமே. அனைவரோடும் எளிதில் பழகிவிடும் குணமுடையதால் அந்த தெருவிலிருந்த பலரையும் அறிந்திருந்தாள்.
சுதாவைப் பார்த்ததும் வாயில் காவலாளி அவளுக்கு ஒரு வணக்கம் வைத்து “என்னமா எப்படி இருக்க? எங்க வீட்டு பசங்க சொல்லிசுங்க புதுசா வந்திருக்க அக்கா ரொம்ப நல்ல அக்கானு” என
“நீங்க வேர.. உங்க பசங்க தான் சூப்பர். அவங்க எல்லாம் இல்லேனா எனக்கு எங்க இருந்து பொழுது போகும்”
“ரொம்ப நன்றிமா.. எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லித் தரீங்களாமே..”
சுதா அங்கு வந்த முதல் நாளே அங்கிருந்த குட்டீஸோடு நட்புக் கரம் நீட்டியிருந்தாள். அந்த தெருவில் வசிக்கும் பிள்ளைகளோடு அங்கு வேலை செய்பவர் பிள்ளைகள் விளையாடுவது அங்கிருந்த பல பெற்றோருக்குப் பிடிக்காமல் போகவே, இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்பவர் பிள்ளைகளோடு மட்டும் தான் அவள் விளையாட்டு. நேரம் கிடைக்கையில் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஆரம்பித்திருந்தாள்.
சுசிலா ஏற்கனவே சுதாவையும் மீனாட்சி பாட்டிப் போல் எந்த கேள்வியுமின்றி உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருக்கவே காவலாளி கேட்டை திறந்து விட்டான்.
உள்ளே நுழைந்தவள், “அப்பா… என்ன வெயில். இது வரைக்கும் இருந்த ஊர்லையே இங்க தான் ஓவரா சுடுது… சென்னலையே இவங்க வீடு மட்டும் விதி விலக்கு போல.. பரவால தோட்டக்காரன் நல்லா தான் வச்சுருகான்.” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே தன் பார்வையைச் சுற்றி இருந்த பூ செடிகளிலும், அங்கங்கே நிழல் பரப்பிய மரங்களிலும் படரவிட்டாள்.
எங்கு திரும்பினாலும் கண்ணைக் கவரும் அழகு.
அஷோக் வீட்டிற்கு முன்னிருந்த தோட்டத்தின் மரத்தடியில் வேலையாய் இருக்க, தோட்டத்திற்கு நடுவில் போடப் பட்டிருந்த நடைபாதையில் கொலுசொலிக்க, எதையோ கொறித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்து வந்தாள்.
“எல்லா சீசன்லையும் இங்க ஏதாவது மரம் காய்க்கும் போல… மாமரம், பலா மரம், கொய்யா மரம், சப்போடா, தென்னை… ஒரு குட்டி காடே இருக்கு.
இன்னைக்கு உனக்குத் தான் என்னுடைய அழகான வயிர பாக்க கொடுத்து வச்சிருக்கு” என்று கையிலிருந்த கொய்யாவைப் பார்த்து சிரித்தாள்.
புன்னகை முகமாய் அஷோக்கின் வீட்டை நோக்கி நடந்தவள் தன்னை தோட்டத்தின் ஓரத்திலிருந்து  அவளையே நோட்டமிட்ட அஷோக்கை கவனிக்கவில்லை.
அங்கிருந்த மரத்தின் பின் வைக்கப் பட்டிருந்த பதியங்களை அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தவன், கொலுசு சத்தம் கேட்க, தலையை மட்டும் சாய்த்து செடியின் இடுக்கின் வழி பார்க்க, முதலில் பெரிய பாவாடையும், அது அசைகையில் அந்த அழகிய கால்களை வருடிய கொலுசுமே தெரிந்தது.
“யாராது.. நம்ம வீட்டு வாசலைப் பாவாடையாலேயே பெருக்கிட்டு வரது?”, தலையை சற்றே உயர்த்திப் பார்க்க, அழகிய கை ஒன்று கண்ணாடி வளையலோடு ஆடிக்கொண்டிருந்தது.
கண்களை இன்னும் மேலே உயர்த்த, அடுக்கி வைத்த தாவணியை பின் செய்யாமல், அதை அப்படியே அள்ளி வாரி மேலிட்டிருந்தவள், அது கீழே விழாமலிருக்க முந்தியை இழுத்து பிடித்து அவள் கொடியிடையில் சொருகியிருந்தாள்.
அதற்கு மேல் அவனுக்கு நிலை கொள்ளவில்லை. தனித் தனியே அவளைப் பார்த்தவனுக்கு, அவளை முழுதாய் பார்க்கும் ஆவல் தலைக்கேற, “இந்த காலத்துல யாருடா நம்ம வீட்டுக்கு… அதுவும் நடந்து.. பாரதி ராஜா படத்து ஹீரோயின் கணக்கா ஹாஃப் சாரி எல்லாம் போட்டுகிட்டு?
தீபிகா படுகோன் கிட்ட க்ளாஸ் எடுத்திருப்பாளோ.. ஹாப் சாரியில கூட இவ்வளவு மார்டனா தெரிய முடியுமா என்ன?” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்தவனுக்கு அவள் முதுகையே தரிசிக்க முடிந்தது.
இடை வரை லேயரிங் செய்து நீண்டிருந்த அடர்த்தியான கூந்தலில் கொஞ்சம் முடியை மட்டும் கிளிப் செய்து, தலை நிரைய மல்லிகை பூ வைத்திருந்தாள்.
‘பார்த்த வரைக்கும் முன்னாடியும் பின்னாடியும் நல்லா தான் இருக்கு… யார் இவ? செக்கியூரிட்டி தாண்டி எப்பிடி வந்தா? அம்மாக்கு தெரிஞ்சவளோ? ரொம்ப சின்ன பொண்ணா தெரியரா?’, நினைத்த மாத்திரத்திலேயே அவன் உதட்டில் புன்னகை விரிந்தது.
‘டேய் அஷோக்… அடங்கு! அவ எப்படி இருந்தா உனக்கு என்ன? இப்படி எல்லாம் நல்லா இருந்தா, கண்டிப்பா அவ முகம் சகிக்காது… இங்கையே நின்று யோசிக்காமா, எப்படி இருக்கானு நேர்ல போய் பார்த்திடு’ தனக்கு தானே பேசிக்கொண்டு அருகிலிருந்த நீர் குழாயில் கைகளையும் கால்களையும் கழுவச் சென்றான்.
அருகில் வந்த தோட்டக்காரனிடம், “நீங்க குரூ கூட மொட்டை மாடில இருக்க ரோஜாச் செடிக்கு உரம் போட்டுட்டு மத்த வேலையை முடியுங்க, நான் உள்ள போறேன்”.
அவன் பேசி முடித்துவிட்டு வருவதற்குள், சுதா வீட்டின் கதவை தட்ட அது தானாய் திறக்க, மெதுவாய் தலையை உள்ளே விட்டு, “ஹலோ.. யாராவது இருக்கீங்களா?” என்று கூப்பிட்டாள்.
பதில் எதுவும் வாரது போகவே, கால்களையும் உள்ளே நுழைத்தாள். நான்கடி உள்ளே சென்றவளுக்கு வீடு சற்று இருட்டாகவே தெரிந்து. வெளிச்சத்திலிருந்து வந்ததாலோ இல்லை வீட்டைச் சுற்றி காடு போல் மரங்கள் இருப்பதாலோ.. கண்களை மெல்ல கசக்கி விட்டபின்பு இன்னும் மங்கலாய் இருட்டாய் தெரிந்தது.
மங்கலோடு அமைதியும் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்த, “ஹலோ..லோ.. தம்பி?…. கண்ணன்… யாரவது இருக்கிங்களா?” தெம்பாய் ஆரம்பித்தவள், ஒரு வித பயத்தோடு முடித்தாள்.
முன் இரவு பார்த்த பேய் படம் வேறு சம்பந்தமில்லாமல் அவள் நினைவில் வர, அதற்கும் மேல் அங்கு நிற்கத் தைரியம் வரவில்லை.
இருட்டு அவளுக்கு பயம் அதிலும் பேய் இன்னுமே பயம்.. பயந்துகொண்டே தான் பார்த்தாள். அது ஒரு கொடூரமான திகில் நிறைந்த ஆங்கில பேய் படம். ஏதேட்சையாக பார்க்க ஆரம்பித்தாள். ஆர்வத்தில் ஆரம்பித்ததைப் பார்த்து முடிக்கக் கூட தெம்பில்லாமல் பாதியிலேயே அணைத்தும்விட்டாள்.
ஆனால் அதன் தாக்கம் விட்டபாடில்லை. எப்பொழும் காதருகே யாரோ பேசுவது போல்.. சில்லென்று எலும்பு வரை உரையவைத்தது.
இரவு தனியாய் தூங்கவும் பயம்.. பாட்டியிடம் திட்டு வாங்கி எல்லா விளக்குகளையும் போட்டுக்கொண்டே தூங்கவேண்டியதாய் போயிற்று.
காற்று மெதுவாய் வீச, திரைச் சீலை அசைந்து கொடுக்க அதனோடு வந்த மல்லிகையின் மணம் பயத்தை அதிகரித்தது. பேய் சுற்றும் இடத்தில் ஒரு வித மணம் வருமாமே..  யாரோ சொன்னதாய் நினைவு!
கால்கள் நகர மருத்தது. மெதுவாய் ஒரு காலின் பின் மற்றொரு காலை வைக்க, எங்கிருந்தோ சலங்கை சத்தம் வேறு கேட்டது.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்..
அவள் இதயம் வேகமாய் துடிக்க வெயிலினால் முகத்தில் அரும்ப ஆரம்பித்திருந்த வியர்வை இப்பொழுது அதிகமாக, பின்னங்கை கொண்டு துடைத்துக் கொண்டே பின்னோக்கி அவள் நகர நகர தீடீர் என்று வீட்டில் வெளிச்சம். கூடவே அவள் பின்னால் ஒரு நிழல் வருவது போலத் தோன்றவும் இதய படபடப்பு அதிகமானது.
எங்கிருந்தோ வந்த பூனையின் சத்தம் கேட்கவும், ‘இதுக்கு மேல இங்க இருந்த அடுத்து நீ தான் இங்க ஆவியா சுத்துவ… ஓடு!’ என்று மனம் எச்சரிக்க, வேகமாய் திரும்பவும், “ஹாய்..” என்ற சத்தம் தந்த உருவத்தின் மேல் இடிக்காமல் இருக்க பின் நகரவும்  கால் பாவாடையில் சிக்கி நிலைகுலைய… அவ்வளவு தான், கத்தவும் நா எழவில்லை. ‘இன்னையோட நீ செத்த சுதா.. ஆண்டவா… காப்பது’ என்று கண்களை இருக்கமாய் மூடிக் கொண்டாள்.
அவனை பார்த்த மாத்திரத்தில் விழப்போனவளை தன் ஒற்றைக் கையில் தாங்கி பிடித்திருந்தான் அஷோக்.
அஷோக்கின் கையில் அடங்கி இருந்த சுதாவின் முத்து முத்தாய் வியர்வை அரும்பிய கழுத்தும், பயத்தில் கடிக்கப் பெற்றிருந்த கீழ் உதடும், இழுத்து மூடிய கண்களும், நெற்றி வியர்வையில் ஒட்டி இருந்த முடியும் அவளை ரசனையாய் பார்க்கச் செய்தது. ‘நல்லாவே இருக்கா டா அஷோக்!’
கால்களில் பலமில்லாமல் கண்மூடி அவன் கரத்தில் சரிந்து நிற்பவளை விட்டால் விழுந்து விடுவாளே என்று, “ஹலோ.. யூ ஒ.கே?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் அவன் கேட்க…
அருகில் பேசுவது கேட்கவும், ‘ஐயோ… பேசுதே… கண்ண திறக்காத.. திறக்காதா.. கோரமா நிக்க போது..’ கருவளையத்திற்கு நடுவில் சிகப்பேரிய பேய் கண்கள், வரண்ட நிலம் போல் வெடித்து, அதிலிருந்து இரத்தம் வழியும் முகம், கூடவே நீளமான இரத்தம் சொட்டும் கோர பற்கள்.. நினைக்க நினைக்க  பாவடை நனைந்துவிடும் அபாயம் வேரு!
ஏக பட்ட போராட்டத்திற்குப் பின் மெள்ள ஒற்றை கண்ணைத் திறந்து பார்த்தவள் கண்ணெதிரில் கோரப் பற்கள் இல்லாமல் ஒரு ஆண் மகன்!
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டவள் ‘இப்போ எல்லாம் படத்தில் வில்லன் தான் அழகா இருக்கானு பார்த்தா.. பேய் கூட ஹான்சமா மாறிடுச்சு போல..’ எண்ணியவள் இதழ் ஓரம் சிரிதாய் புன்னகை கீற்று வந்து மறைந்தது.
‘அச்சோ.. ‘ட்வைலைட்’ படத்தில வந்த ரத்த காட்டேறி எல்லாம் என்ன அழகா இருந்துச்சு.. இதுவும் ரத்த காட்டேறியா?’ அடுத்த நிமிடம் கண்களில் இன்னும் இருக்கம்.. முகத்தில் அப்பட்டமா பயம்.
உலகில் மிகவும் வேகமாய் பயணிக்க கூடியது நம் எண்ணவோட்டங்கள். வேகமாய் உலகில் இருக்கும் எல்லா பயங்கரங்களையும் அசை போட்டு விட்டது அவள் மனம். முழுதாய், நீளமான பத்து நொடிகள் நகர இன்னும் அவள் கழுத்து கடிபடவும் இல்லை.. ரத்தம் உரியப்படவும் இல்லை.
முகம் தெளிவு பெற்றது.
‘ஆ..ஹா.. பேய் இல்ல சுதா..’ என்று அவள் அறிவு எடுத்துக் கொடுக்க, சட்டென்று அவள்  முகம் ‘ஐய்யோ.. மானம் போச்சு..’ அவமானத்தில் கன்றியது. கண்களைத் திறந்தாள்.
மான்விழி முழுதுமாக விரிந்து அவனை படம் எடுத்துக் கொண்டது.
அவள்  முகத்தில் தான் எத்தனை உணர்வு கலவைகள். ரசனையாய் பார்த்து நின்றான். முகத்தை ஆர்வத்தோடு மட்டும் தான் பார்த்தான். அவள் வேல்விழி திறக்கவும் சட்டென்று ஒரு முறை இதயம் நின்று துடித்ததோ?
ஒன்று அவள் விழி இயற்கையிலேயே அவ்வளவு அழகானவையாக இருக்க வேண்டும். இல்லை அவள் கண்களை மிகவும் அழகு படுத்த தெரிந்தவளாக இருக்க வேண்டும்.
ஊதா நிற பாவாடை, அதற்கு தகுந்தார்போல் கண்ணை சுற்றி ‘ஸ்மோக்கி அய்ஸ்’ என்பார்களே அது போல் மெட்டாலிக் பர்புளில் வர்ணம்.
பெரிய மேல்நோக்கி சுருண்ட மஸ்காரா இமைகள்.
அந்த கருமணியிலும் சொல்லொண்ணா ஈர்ப்பு சக்தி.
கண்களாலேயே அவனை சுண்டி இழுக்க ஆரம்பித்திருந்தாள்.
அப்படி எல்லாம் அவளை இடையோடோ இல்லை தன் அருகிலோ அவன் பிடித்திருக்கவில்லை. கீழே விழாமல் இருக்க ஒற்றைக் கையாய் அவள் முதுகை கூந்தலோடு பிடித்திருந்தான். அவள் கூந்தல் மட்டுமே அவன் கையை வருடியது. அவள் உயரத்திற்குச் சற்று குனிந்து நிற்க வேண்டிய நிலை.
அருகில் அவனைப் பார்த்தவள் கண்கள் தானாய் விரிந்தது. இன்னும் இன்னும் அவன் மனம் அவளிடம் பாய்ந்தது.
அவனை அருகில் பார்த்தவள் சுதாரித்து கொண்டாள். கேவலாமக பயந்தது ஒரு பக்கம் அது வெளியில் தெரிந்தால்? இன்னுமே தன் நிலை மட்டமாக போய்விடுமே.. ‘ஏய்.. சுதா, என்ன டீ பண்ற? இவனுக்கு மட்டும் இப்போ நீ பயந்தேனு தெரிஞ்சுது.. மானம் போய்டும். மானம் போகாம மெயின்டெயின் பண்ணு!’
அப்பொழுது தான், அவன் பிடித்திருப்பதை கவனித்தாள். அவன் அருகாமையை உணர்ந்த அந்த ஒரு நொடி உடல் கூசியது.
“ஹலோ மிஸ்டர்… என்ன பண்ணீட்டு இருக்கீங்க? கை எடுங்க!”
அவள் முகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களை ஒரு வித பரவசத்தோடு பார்த்து கொண்டிருந்தவன் அவள் சொன்னதும் அப்படியே அவளை அவன் பிடியிலிருந்து விடுவித்தான்.
‘தொப்’பென்று விழுந்தவள்.. ‘ச்சே.. என்ன இவன் சொன்னதும் கிழ விட்டுடான்! மடையன்!’ மனசுக்குள் திட்டிக்கொண்டே எழுந்தவள்,
“ஒரு அழகான பொண்ண பார்த்திடக் கூடாதே.. எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு..“ அவள் முடிப்பதற்குள் அவன் ஒற்றை புருவம் உயர்த்தி தலையைச் சரிக்க.. அதுவே ‘என்ன சொன்ன?’ என்பது போலிருக்க..
“சரி சரி.. கொஞ்சம் அழகான பொண்ணு?” என்று குரலில் சுருதி இறங்கி, கேள்வியாய் அவனைப் பார்க்க
“பச்..” என்று அவன் ‘இல்லை’ என்பது போலத் தலை ஆட்ட
‘இவன் பாக்க நல்லா இருக்காங்கரதுக்காக.. எல்லோரும் இவன் கண்ணுக்கு மட்டமா தெரிவாங்க போல..’ மனதில் மட்டுமே எண்ணவோட்டம்
“ஒக்கே. ஒக்கே.. இதுக்கும் மேல குறைக்க முடியாது… உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… சுமாரான பொண்ணு…?” முகத்தைச் சுளித்துக் கொண்டே பாவமாய் அவனைப் பார்க்க
அடக்கமாட்டாமல் வந்த சிரிப்பை முழு முயற்சியில் அடக்கிக்கொண்டு, “ம்ம்… மேல பேசு” என்பது போலச் செய்கை காட்ட..
‘இவன் வேர.. என்ன சொல்ல வந்தேனே மறந்து போச்சு.. யாரு இந்த முசுடு… இங்க என்ன பண்ணுது.. பாக்க செம ஸ்மார்டா இருக்கானே..
கண்ணனோட சொந்தமா இருக்குமோ? இருக்கும் இருக்கும். சுசிலாக்கா சாயல் இவன்ட்ட தெரியுதே. கஷ்ட்ட ஜீவனத்துக்கு சொந்தகாரங்க வீட்டுலயே வேலை செய்யரானா இருக்கும்’
அவனை ஒருமுறை கீழிருந்து மேல் வரை பார்த்தவள் ‘ஒரு தரம் முழுசா பார்த்தாலே கழுத்து சுளிக்கிக்கும் போல.. பனை மரம்! பனை மரம்! என்னத்தை சாப்பிட்டு இப்பிடி வளந்தானோ.. பாவம் இவன் பொண்டாட்டி..’  என்று அவள் சிந்தனை வேறு திசை நோக்கிச் செல்ல.. ‘லூசு அடங்கு டி’. தலையைச் சிலுப்பிக்கொண்டாள்.
உதட்டோர புன்னகையுடன் தொண்டையைக் கனைத்து அவள் கவனத்தைத் திருப்பி, “என்னமோ சொல்லிட்டு இருந்த..” என்று எடுத்துக் கொடுத்தான்.
“ஒண்ணுமில்ல!” என்றாள் சலிப்போடு, நின்றுகொண்டு பார்வையைச் சுற்ற விட்டவளை கேள்வியோடு பார்த்தவன்,
“நீ யாருன்னு இன்னும் சொல்லலியே..” என
“நான் யாருன்னு அப்புறம் சொல்லுகிறேன்.. இப்போ உங்க மேடம் வீட்டில இல்லையா? சனிக்கிழமை அம்மாவும் பையனும் வீட்டில இருப்பாங்கனு பாட்டி சொன்னாங்க..
ஆமா, இந்த வீட்டுல நீ மட்டுமா வேல செய்யர? தனியாவே தோட்டத்தையும் பார்த்துக் கிட்டு வீட்டையும் பார்த்துக் கிட்டு இருக்கீயா?
பொடுசு எங்க? பாட்டி அப்போவே சொன்னாங்க ஃபிரென்ஸ்சோட இருப்பான்னு!” கண்களை விரித்து உயரத்திலிருந்த அவன் முகத்தைப் பார்ப்பதும் பின் அப்படியே வீட்டைப் பார்ப்பதுமாய் பேசிக்கொண்டே போனவளைப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல மென்னகையோடு பார்த்து நின்றான்.
ஏன் அவனிடம் இப்படி உளரி கொண்டே இருக்கின்றாளென்று அவளிடம் கேட்டால் அவளுக்கே தெரியாது.
ஏதோ அவள் நிலையில் அவளில்லை. இப்படி முன் பின் தெரியாத ஒருவனோடு எதற்கு வாயடிக்க வேண்டும்.. அவளுக்கு தான் வெளிச்சம்.
உறைந்த வெண்பனி மேல் நிலையில்லாமல் உருண்டுகொண்டிருந்த கோலிக் குண்டாய் அவள் விழி…
சூரிய கதிரென அவள் பார்வை பனிதுளியான அவன் மேல்..
முதல் பார்வையிலேயே அவனை உறையவைத்து முழுதாய் அவனை அவள் விழி வழி விழுங்கிக் கொண்டிருந்தாள்.

Advertisement