Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 29
மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்..
பாட்டியோடு வம்படித்துக்கொண்டு மாலை வேளைக்காய் காத்திருந்தாள். ஆனால் பாட்டி  தான் தாத்தாவின் குணத்தை தத்தெடுத்து கொண்டிருந்தார்.. கொஞ்ச நாளாகவே பேச்சில் புதிதாய் ஒரு குத்தலும் வெறுப்பும்  வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் பிடித்தமின்மை சுதா வரை நீண்டுவிட்டிருந்தது.
“அந்த பையன நீ விரும்பரியா?”
சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று பாட்டி இப்படிக் கேட்கவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணனை அவர் இப்படி  எல்லாம் பேச இந்த ஜென்மத்தில் வாய்ப்பே இல்லை.
“எந்த பையன பாட்டி?”
“நீ ஒருத்தன் கூட மட்டும் தான் சுத்தறேனு நினைச்சேன்..” மீண்டும் ஒரு குத்தல்..
அவளுக்கு எத்தனை முறை இது போல் பேச்சு கேட்டாலும் இது பழக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பேச்சு சகிக்கத்தான் முடிவதில்லை. இன்று அது இன்னுமே அதிகமாயிருக்க, “நான் ஒருத்தன் கூடையும் சுத்தல. யார் கூட சுத்தினத பாத்தீங்க?” அவளிடமும் கோபம் எட்டிப் பார்த்தது.
“நேத்து வீட்டுக்கு வந்தானே அவன்ட விரும்பரதா சொன்னீயே.. நான் இன்னும் இந்த வீட்டில தான் இருக்கேன்.. நீ யார்ட்ட எல்லாம் பேசர, என்ன பேசரனு எனக்கும் தெரியும்.”
‘கார்த்தீட்ட… நானா? விரும்பரதா சொன்னேனா?’
“அவன் என் ஃபிரண்ட்..” என்றாள் தெளிவாய்.
“என்ன பழக்கம் இது? எவனோ ஒரு ஆம்பள பிள்ளையோட ஊர் சுத்தரது? லவ் பண்றதா அவனைக் கட்டி பிடிச்சு அவன் முகம் பார்த்து சொல்லிட்டு இப்போ இல்லனு சொன்னா? ச்சீ சீ.. என்ன வளர்ப்போ உன்னது? இதுல நீலிக்கண்ணீர் வேற.. எத்தனை பேர இப்படி அழுதே ஏமாத்த போரா?”
“அவன், எவனோ இல்ல.. என் பெஸ்ட் ஃபிரண்ட்.. பேரு கார்த்திக். அவன் ஆம்பள ஃப்ரெண்ட் இல்ல… ப்ரெண்டு ஆம்பளையா போய்ட்டான்.. நான் யாரையும் ஏமாத்தல.. அவனும் ஒரு ஃப்ரெண்டா தான் என்னை பார்க்கரான். யார் பத்தியும் ஒன்னும் தெரியாம ஏன் பேசரீங்கன்னே எனக்கு புரியலை!”
“அது எப்பிடி.. வேலைக்குப் போன நாலு நாள்ல ஃபிரண்ட் ஆனான்..”
“ஃபிரன்ஷிப்ங்கரது ஒரு வகையான ஃபீலிங். அது எப்போ வேணா, யார் மேல வேணா வரும்.. அதுக்கு வயசு செக்ஸ் எல்லாம் இல்ல..”
“அதுக்காக எதுக்கு அவன கட்டி எல்லாம் பிடிச்ச நேத்து? உன்ன கட்டிக்க போரவனுக்கு உண்மையா இருக்க வேண்டாமா? இதில செக்ஸ்-னு வேர அசிங்கம் அசிங்கமா பேசர.. என் வீட்டு மானத்தை வாங்கவே உன் அப்பன் உன்ன பெத்து இங்க அனுப்பிவச்சானா?”
“கட்டி பிடிச்சேனா? பாட்டி!! அது ஒரு ஹக்… ஏதோ அவன் மேல ஒட்டிக்கிட்ட மாதிரி பேசரீங்க? ஷோல்டர் மட்டும் தானே பட்டுச்சு? ஜஸ்ட் டு ஷோ மை அஃபெக்ஷன்… இதுல என்ன தப்பு இருக்கு? ப்ளீஸ் க்ரோ அப்.. பாட்டி.. ப்ளஸ் செக்ஸ்-னா ஆம்பளை பொம்பளைனு சொல்ர ஜெண்டர்…” எரிச்சல் எட்டிப் பார்த்தது.
“உடம்பு சுத்தமில்லாம.. நான் சுத்தம்னு எப்படி சொல்ல முடியும்?
வயசு பொண்ணு நீ.. உன் வளர்ப்பு சரி இல்ல.. உன் அப்பன் இப்படி தான் இருந்தானோ?”
“பாட்டி? பேச்ச என்னோட நிருத்திக்கோங்க.. அப்பாவ பத்தி ப்ளீஸ் பேசாதீங்க.” ஏகத்துக்கும் கோபம் வந்துவிட்டது சுதாவிற்கு. ‘தன் தகப்பன் குணம் முன் இவர் கால் தூசி வருவாரா? அதுவும் இவர் பெண்ணை தானே உயிராய் நேசித்து வாழ்வின் எல்லா இன்பத்தையும் அள்ளி கொடுத்திருந்தார். தேவையில்லாமல் ஏன் அவரை பற்றி பேச்சு?’
“உடம்புங்கரது சுத்தமா இருக்கணும்.. இது என்ன பாக்கரவன எல்லாம் இழுசிகிட்டு? நான் உன் அத்தைட்ட பேசறேன்.. நீ அந்த பையன கட்டிக்கோ.. ஒழுங்கா ஒருத்தன் கூட குடும்பம் நடத்து… பிடிக்குதோ.. இல்லியோ அது தான் பண்பாடு..”
‘அந்த தறுதலையை இவர் ஏன் புதிதாய் கட்டிக்கொண்டு அழுகிறார்? அவன் இவரை வந்து பார்த்திருப்பானோ? அவனுக்கு என்னைத் திருமணம் செய்யும் எண்ணம் உள்ளதென்று இவருக்கென்ன புது கனவு?’
“வாயை மூ..டு…” என்று கத்தவேண்டும் போல் இருந்தது. ‘ஏன் இங்கு வந்து தொலைந்தேன்..’ கண்ணன்  ஒருவனைப் பார்க்காவிட்டால் கண்டிப்பாக இந்த பேச்சு கேட்பதுக்கு அனாதையாய் மும்பையே போயிருப்பாள். ‘அம்மா எப்படி தான் இங்க வாழ்ந்தாங்களோ?’ மலைப்பாய் இருந்தது.
பாட்டியும் விடாமல் பேசிக்கொண்டே போக.. அவள் கோபமும் எல்லையைக் கடக்க ஆரம்பித்தது. இரு கையும் தட்டினால் தானே சத்தம்.. வாயை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
‘என் புருஷனுக்கு என்னைக்குமே நான் உண்மையா தான் இருப்பேன்.. இருந்துட்டு தான் இருக்கேன்.. அது அவருக்கு தெரிஞ்சா போதும்!’ உள்ளுக்குள் அப்படி ஒரு கோபம்.. கண்ணனைக் காதலனாய் பார்ப்பதெல்லாம் தாண்டி கணவனாய் கண்டாள்.. என்ன தாலி இன்னும் கழுத்தில் ஏறவில்லை. அவளுக்கு ஆசை தான்.. அவன் தான் பிடிகொடுக்கவில்லை. ‘அது என்ன வேலையோ பொல்லாத வேலை.. ஏன் மற்ற ஆண்களெல்லாம் திருமணம் செய்து தொழிலில் கவனம் காட்டுவதில்லை? இவருக்கு மட்டும் என்ன தான் அந்த துணிக்கடையில் இருக்கின்றதோ?’ கண்ணனைச் சுற்றிய அவள் கவனத்தை மீண்டும் பாட்டி களைந்தார்.
“உன் அப்பன் என்ன சொல்லித் தந்தானோ தெரியல.. இங்கெல்லாம் உடம்பும் மனசும் ஒருதனுக்குக் தான்.. உடம்பு சுத்தமில்லாதவ எல்லாம் குடும்பம் நடத்த தகுதியில்லாதவ”…
“பாட்டி போதும்.. கொஞ்சம் நிருத்தி மூச்சை விடுங்க.. உங்கட்ட பேசி என்னால எதையும் புரிய வைக்க முடியாது! நமக்குள்ள ஜெனரேஷன் காப் ரொம்ப நிறைய இருக்கு.. கார்த்தி என் ஃப்ரெண்டு. அப்புறம் அந்த தீபக் என் அத்தை மாமாவோ மகன். அவ்வளவு தான்.. இவங்க ரெண்டும் பேரும் என் வாழ்க்கல வந்தவங்க.. ஆனா எப்பவும் இருக்க போரவங்க இல்ல. இவங்க என் வாழ்க்கைத் துணையா என்னைக்குமே இருக்க முடியாது. இனி மேல் இத பத்தி என் கிட்ட தயவு செஞ்சு பேசாதீங்க!”
ஆனால் பாட்டி நிறுத்தினால் தானே.. ஒரு கட்டத்தில் அவளுக்கே தோன்றிவிட்டது ‘நீ சுத்தமானவளா சுதா? தீபக் சொன்னது மறந்திடுச்சா? சொல்லு… நீ, கண்ணனுக்குத் தகுதியானவளா?’ 
வந்து கொண்டிருந்த வேண்டாத எண்ணங்களை எல்லாம் விரட்டி விட்டு ‘அவரே என் மேல தப்பில்லனு சொல்லிட்டார். இவங்க பேச்சைக் கேட்டு குழப்பிக்காத’ என்று வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கால் வலி கொஞ்சம் இருக்கத் தான் செய்தது. ஆனால் அது அவளை எதற்கும் தடுப்பதாய் தெரியவில்லை.
அவளின் ஒரே வடிகால் அவளின் கண்ணன். அஷோக்கைப் பார்த்தே ஆகவேண்டும் என்றும் சீக்கிரம் வரவேண்டுமென்றும் மெஸேஜ் அனுப்பி இருந்தாள். மணி ஆறைத் தொடக் காத்திருந்தாள். அவனை வைத்தே பாட்டியை அழைக்கவும் செய்திருந்தாள். ஒன்று மட்டும் அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.. சில வாரங்களாகவே அவளிடம் எள்ளும் கொள்ளுமாய் வெடிப்பவர் கண்ணைக் கண்டால் எப்பொழுதும் போல் மெழுகாய் உருகினார். அவன் என்ன மாயம் செய்தானோ? சுசிலாவிடமும் அதே போல் தான்.. ‘ஏனோ நான் மட்டும் விதிவிலக்கு’ என்று நினைத்துக் கொண்டாலும் அவள் முடிந்தவரை அவரோடு சமாதானமாகத் தான் இருக்கப் பார்க்கின்றார்.
கிளம்பும் வரை பாட்டியிடம் பேசவே இல்லை. பாட்டியோடு செல்லவில்லை. அஷோக்கிடமிருந்து மெசேஜ் வரும் வரை வீட்டிலே இருந்தாள்.
குளித்து விட்டு வாட்ரோபின் முன் ஒரு போராட்டம். அவளிடம் இருந்த பாவாடை எல்லாம் ‘டிசைனர் வேர்’ போன்றது. அவள் அம்மா ஒரு ஃபேஷன் டிசைனர். அவரிடமிருந்து நிறையக் கற்றறிந்திருந்தாள்.
அம்மா அவளிற்காவே தைத்துத் தரும் பெரிய பாவாடைகள் மிகவும் பிடித்தம். பள்ளிப் பருவத்திலிருந்து பல மீட்டர் நீளத்தில் ட்ரெஸ் அணிய ஆரம்பித்திருந்தாள். தொடைவரை ஷாட்ஸ் எவ்வளவு விரும்பி போடுவாளோ அதே விருப்பம் தரை தழைய உடுத்துவதிலும் இருந்தது. தாவணி இங்கு வந்தே பழக்கம். பாட்டியின் தயவால்.
மும்பை போனதும் அந்த பெரிய கௌண் பழக்கம் நின்று போயிருந்தது. இங்கு வந்த பின், நேரத்தை நகர்த்த மீண்டும் தைக்க ஆரம்பித்திருந்தாள். என்ன கௌண் பாவாடை தாவணியாய் மாறியது. ஆசையாய் தைத்து அடுக்கியுள்ளாள். ஆனால் அதை எங்குப் போடுவது என்று மட்டும் தெரியவில்லை.
கையில் ஒரு பெரிய ப்ரின்டட் சில்க் பாவாடை எடுத்தவள் அதனோடு வைத்திருந்த சட்டையை விடுத்து, பாவாடைக்குத் தகுந்தார் போல பிளவுசும், தாவணியும் எடுத்துக் கொண்டாள். உடுத்தி விட்டு கண்ணாடியில் பார்த்தவளுக்குத் திருப்தி ஆகும் வரை தாவணியைச் சரி செய்து கொண்டாள். என்றுமில்லாமல் இன்று கண்ணிற்கு அதிக மை இட்டு, உதட்டிற்கு லிப் க்ளாஸ் அடர்த்தியாய் தீட்டிக் கொண்டாள். தலை முடி முற்றிலும் காயாமல் இருக்கவே கொஞ்சம் முடியை எடுத்து க்ளிப் செய்து கொண்டாள். மெஸேஜ் வரும் வரை அலங்காரம் செய்வது என்ற முடிவிலிருந்திருப்பாள் போலும்.
மெஸேஜ் வந்ததின் அறிகுறி வரவே, கண்ணன் வந்திருப்பான் என்று ஃபோனை எடுக்க ஓட.. கட்டில் ஓரத்தில் அதே காலில் மீண்டும் இடித்துக் கொள்ள வலி உயிர் போனது. கண்ணில் வர இருந்த தண்ணீரை மை அழிந்து விடும் என்று உள்ளிழுத்துக் கொண்டு, “ஆன் மை வே” என்று மெஸேஜ் அனுப்பி விட்டு கிளம்பினாள்.
பதினைந்து நிமிடம் ஆகியும் அவளைக் காணாமல் போகவே வாசலுக்கு வந்து கதவைத் திறந்தவன் கண்களில் தூணை பிடித்துக் கொண்டு நின்றவள் தான் பட்டாள்.
“ஏய் லட்டு.. இங்கையே நின்னுட்ட.. வா” என்று அவளை இழுக்க
“ஆ..” என்று கத்திவிட்டாள்.
“கால் இடிசிடுச்சு.. வலிக்குது… சின்ன அடி தான்.. ஒரு ஃபை மினிட்ஸ்ல சரி ஆகிடும்..”
“சொல்ல கூடாதா.. நான் அங்க வந்திருப்பேனில்ல” சொல்லிக்கொண்டே குனிந்தவன் முதுகுக்கும் முட்டியின் கீழுமாய் கை கொடுத்து அப்படியே தூக்கிக்கொண்டான்.
“அச்சோ.. என்ன பண்றீங்க? யாராவது பார்த்திட போராங்க!”
“யாரும் பாக்காட்டி ஓக்கேவா?” அவன் கண்சிமிட்ட.. ஏதோ குஷி மூடிலிருப்பான் போலும்.. முகத்தில் ஒரு துள்ளல்
“பாட்டி மட்டும் பார்த்தாலே போதும்.. திட்டி தீத்துடுவாங்க.. இறக்கி விடுங்க.. அப்பிடி ஒன்னும் நான் வலில துடிகல. ஒரு டூ மினிட்ஸ் உக்காந்தா போதும்.”
“பாட்டியாது திட்டுரதாவது? அவங்களுக்கு சத்தமா பேச கூட தெரியாது.. என்ன பேச்சு பேசர?”
“ம்ம்கும்! உங்க பாட்டிக்குத்தானே.. பாவம் வாய்ல விரல் வச்சா கூட சூப்பத் தெரியாது.. பாப்பா..”
அதற்குள் படி வரை வந்திருந்தான்.
“வயசானவங்கட்ட சண்டை போட்டியாக்கும்? அப்பிடியே தொங்காம… கழுத்தை பிடிச்சுக்கோ..”
அவன் இறக்கி விடப்போவதில்லை எனத் தெரிந்தபின் அந்த நிமிடத்தை அனுபவிக்கும் விதமாய் அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
அவன் காதருகில், “வீட்டுல யாரையும் காணம்?”
“ம்ம்ம்.. ரெண்டு பேரும் கோவில் போய்ருக்காங்க.. பத்து .. பதினஞ்சு நிமிஷத்தில வந்திடுவாங்க..
தீபக் என்ன சொன்னான்? பயந்துட்டியா?” அஷோக் கேட்டகவும் அவள் விழிக்க..
“அங்க தான் இருந்தேன்.. நீ உன் ப்ரெண்டு கூட இருந்தியா.. அது தான் நடுவுல வரல.. தீபக் அங்க உன்ன தேடி வரல சுதா.. ஏதேட்சையா தான் பார்த்திருக்கான்.. நீ சும்மா அவனைப் பார்த்தா பயப்படாத.. புரியுதா.. அவன் பல்லு புடிங்கின பாம்பு. அவன்ட்ட பேசினேன்.. என்னைத் தாண்டி அவன் உன் கிட்ட வர விட மாட்டேன் தான், ஆனாலும் உன் கூடவே நான் இருக்க முடியாது.. அதுனால கொஞ்சம் தைரியமா இரு. புரியுதா? உன்ன எது காட்டியும் பயமுறுத்த முடியாது. அவன் உன் சொந்தக்காரன்.. நெருங்கின சொந்தம்.. அவன் அம்மா அப்பா காதுவரைக்கும் அவன் உன்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணினது போகாத வரைக்கும்.. அவன நீ பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்.. அதுனால அவன ஃபேஸ் பண்ண கத்துக்கோ.. பயப்படாம.”
“ம்ம்..சரி. கார்த்தியா பார்த்தீங்களா? அவனுக்கு உங்களை பாக்கனும்னு ஆசை.. நேத்து ஒரு ஹாய் சொல்லி இருக்கலாம் தானே..”
“கடைல வேலையா வந்தேன்.. கொஞ்சம் பிரச்சினை அங்க.. மூர்த்தி தான் வழக்கமா கடை வேலையைக் கவனிப்பார்.. நான் அங்க வரவே உங்களை பார்த்தேன்..” அதோடு பேச்சு முடிய.. வீட்டின் அமைதி அவர்களையும் ஆட்கொண்டது.
வீட்டில் தனியே அவனும் அவளும்.. நினைக்கவே அவனுக்கு இனித்தது. தேவையில்லாத பேச்சைப் பேச விருப்பமில்லை அவனுக்கு.
“சுதா லட்டு…” எங்கிருந்து அவ்வளவு குழைவோ அவன் வார்த்தையில்
அவன் கண்ணை பார்த்துக்கொண்டே புருவம் உயர்த்தி, “ம்ம்?” எனவும் அங்கேயே அவளிடம் விழுந்துவிட்ட உணர்வு
“அன்னைக்கு மாதிரி ஒன்னே ஒன்னு.. குடேன்” கொஞ்சலாய் இதழ் குவிக்க,
“ம்கும்… அதெல்லாம் சும்மா சும்மா கொடுக்க முடியாது.. அதுக்குனு தனியா மூட் வரணும்”
“சரி.. நீ குடுக்க வேண்டாம்.. எனக்கு மூட் இருக்கு.. நான் தரேனே…”
“தருவீங்க தருவீங்க.. அதுக்கு நான் முகத்த காட்டணும்!”
“ஒன்னே ஒன்னு லட்டு..” அவன் கண் கொஞ்ச
அவன் கழுத்தைச் சுற்றிய கையோடு வாகாய் பூமாலையாய் அவன் கையில், காலை ஆட்டிக்கொண்டே, “ரொம்ப கெஞ்சரனால உதட்டுக்குப் பதிலா அடிபட்ட கால வேணும்னா காட்டுறேன்.. அங்க குடுங்க.” காலை தூக்கி காட்டி இறக்கினாள்.
“இல்ல இல்ல.. என் சுண்டு விரல காட்டுறேன்.. கிஸ் பண்ணிக்கோங்க…” சுண்டு விரலை அவன் உதடு வரை கொண்டுசென்று, “இல்ல இல்ல இந்த சுண்டுவிரல் நகமில்ல அது தான் உங்களுக்கு..” மாற்றி மாற்றி ஒவ்வொரு இடமாய் சொல்லி அவள் வாயடிக்க
‘அங்கெல்லாம் இதழ் படித்தால் தான் என்ன?’ என்ற எண்ணம் அவனில்.
அவள் பேசிக்கொண்டே வந்த வார்த்தைகளில் அவன் கவனம் பதியவில்லை. அழக்காய்  அசைந்த இதழை பேச்சற்றதாய் மாற்ற அவன் கண்கள் கெஞ்ச, அவன் ஆண்மையும் அதன் எல்லையைக் கடக்கக் கோரிக்கை வைக்க.. அவனால் அவனாய் இருக்க முடியவில்லை. ஏதேதோ சொல்லி எண்ணத்திற்குக் கடிவாளமிட்டான்.
அவளை கட்டிலில் இறக்க மனமே இல்லாமல் இறக்க, எண்ண அலைகள் சூறாவளியாய் மாறாமல் அதை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவனுக்கு.
காந்த பார்வையால் அவள் அவனைப் பார்க்க, அவன் கட்டுபாடெல்லாம் காற்றில் கரைந்துவிடும் அபாயம்… புயல் கரைகடக்கும் அபாயம்.. யாருக்கும் சேதமில்லாமல் கடக்குமா?

Advertisement