Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 25
 
“காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க
“அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த
“தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச
“சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன் பிஸினஸ் பேச
“பச்.. எப்போ பார்.. பேரம் பேசரது… சுத்தி பசங்க இருக்காங்க!” அவள் முகம் செம்மை பூச
“தூக்க சொல்லும் போது இல்ல.. நான் கூலி கேட்டா மட்டும் உன் கண்ணுக்கு பசங்க தெரியராங்களா? போ போ.. பீச்சுக்கு வந்தா கால் நனையா தான் செய்யும்.. மண்ணு படத் தான் செய்யும்.. ஓடு ஓடு..” அவன் எப்பொழுதும் போல் அவளை விரட்ட..
“அக்கா வாங்க” செல்ல வானரங்கள் அவளை இழுக்க
“அச்சோ.. என் காலெல்லாம் மண்ணு!.. டேய் இரு டா நீ தானே என் கால மண் ஆக்கினது” பிள்ளைகளை அவள் துரத்த.. மீண்டும் சுதா அவள் பழைய அவதாரத்திற்கு மாறியிருந்தாள்.
அந்த மாலை வெயிலில் சுதாவையே கண்கொட்டாமல் புன்னகை முகமாய் பார்த்து நின்றான் அஷோக்.
‘ஹாப்பாடா..’ என்றிருந்தது அவனுக்கு. இவளை இப்படிப் பார்க்கத் தான் எத்தனைப் பாடு. இந்த பிள்ளைகளில்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் மனம் மாறியிருப்பாளா தெரியவில்லை அவனுக்கு.
இப்பொழுதெல்லாம் சுதா எந்த தயக்கமும் இல்லாமல்  அவள் அத்தை மாமாவோடு தொலைப்பேசி மூலம் பேச ஆரம்பித்திருந்தாள்.
கூட்டுக்குள் ஒளிந்திருந்தவளை வெளிக் கொண்டுவர அவன் பட்ட பாடு அவன் மட்டுமே அறிவான். கொஞ்சமும் தயங்கவில்லை.. யோசிக்கவில்லை.. வேலை மலையாய் குவிய, இரவு முழித்து அதைப் பார்த்தவன் பகலை அவளோடு கழித்தான்.
அவனை எதற்கும் படுத்தி எடுத்தாள். கொஞ்சினான், கெஞ்சினான்.. எதுவும் உதவாத போது கோபமாய் மலை ஏறுவான்.. அவள் தணிந்து போவாள்.
சுதா வேலையில் சேரவேண்டிய நாள் நெருங்கவும் அவளை அங்கு அனுப்புவதற்குள் மூக்கால் தண்ணீர் குடித்து விட்டான்.
மனம் எதையும் யோசிக்காத வண்ணம் வேலையில் மூழ்கடிக்கச் செய்தான். வீட்டில் வந்ததும் அவள் செல்ல வானரங்கள் அவளைச் சூழ்ந்து கொள்ள அவர்களோடு ஓட்டமும் ஆட்டமுமாய் நேரத்தைக் கழித்தாள்.
எவ்வளவு வேலை இருந்தாலும் வாரக் கடைசியில் அவளையும் பிள்ளைகளையும் ஷாப்பிங், மால், பீச், பார்க் என்று எங்காவது கூட்டிச் செல்வான்.
அவள் தன்னையே மறந்து பிள்ளைகளோடு சிரிப்பதைத் தன்னை மறந்து ரசிப்பான். சுதா, அவன் உள்ளும் புறமுமாய் மாறிப்போயிருக்க அவள் பார்வையும் அவனையே சுற்றியது.
இன்றும் அப்படி தான் அவர்கள் வீட்டின் பின்புறமிருந்த பீச்சில் ஒரே ஆட்டம் பிள்ளைகளோடு.
அவள் அந்த சிறுவர்களை மிகவும் நேசிக்க அவனும் எப்பொழுதும் அவர்களை தங்களோடே கூட்டிக்கொண்டு சுற்றினான். தனிமை கிடைக்கவில்லை.  சின்னச் சின்ன சீண்டல்களும், விரல் தீண்டல்களுமே போதுமானதாக இருக்க வாழ்வு இருவருக்கும் எல்லாவிதத்திலும் இனித்தது.
தீபக் தன்னை இங்குத் தொட்டிருப்பானோ.. பார்த்திருப்பானோ என்ற எண்ணங்களெல்லாம் அஷோக்கின் ஆசை பார்வையாலும் சீண்டல்களாலும் மறந்தே போனது!
தீபக் என்பவன் அவள் வாழ்வில் முன் ஜென்மமாய் மாறிப்போயிருந்தான்.
தீபக் அவளோடு தகாதவாறு நடந்தது எதுவுமே சுதாவிற்கு தெரியாதென்பதால் அவள் மனதை மாற்றுவது அவ்வளவு கடினமாய் இருக்கவில்லை அஷோக்கிற்கு!
“நீ காற்று நான் மரம்.. என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்..
நீ மழை.. நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்.. நீ இருக்கும்வரை தான் நான் இருப்பேன்..” என்றேயானது இருவரின் நிலை!
 
என்ன நடந்ததோ, என்ன மாயம் அஷோக் செய்தானோ திபக்கிடமிருந்து சுதாவிற்கு அதன்பின் எந்த தொந்தரவும் வரவில்லை. அஷோக் செய்த மாயம் எதுவும் சுதா கவனத்திற்கு வரவில்லை. ஆனால் அவனை இந்த ஒரு மாத காலமாக அஷோக் அருமையாய் கவனித்து வருகிறான். முகத்தில் வழியும் வியர்வையைத் துடைக்க கூட நேரமில்லாதவனுக்குச் சுதா என்ற ஒருத்தி மறந்தே போனாள்.
அஷோக் அவள் நம்பரையும் ஃபோனையும் மாற்றியிருக்க அவளுக்குத் தொந்தரவு ஃபோன் மூலம் வர வாய்ப்பில்லாமல் போனது.
இவை எதுவும் ஒரு நாளில் நடக்கவில்லை. முழுதாக ஒரு மாதம் எடுத்திருந்தான். அவள் மாற்றம் அவனுள் அப்படி ஒரு நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் அன்று  சுதாவை ஆறுதல் படுத்தி வீட்டிற்கு வந்தவன் மனம் அமைதியைத் தழுவவில்லை.
அவள் எல்லாவற்றிலும் அவளுக்குத் துணையாய் அவன் இருப்பான் என்ற நம்பிக்கையை அவளுக்குத் தந்த மறு நாள் அவன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தவன் சுதாவின் கைப்பேசியைத் தான் வெறித்து அமர்ந்திருந்தான். புது எண் என்பதால் தீபக் அனுப்பியதெதுவும் தரவிறக்கம் (டவுன்லோட்) ஆகாமலிருக்கவே… அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 
சுதாவை தட்டி தேற்றி ஆருதல் படுத்திவிட்டு வந்தவன் உள்ளமோ உலைக்களமாய் இருந்தது. தீபக்.. தீபக் அவன் மட்டும் தான் இவன் எண்ணம் முழுவதும்! அவன் கை காலை உடைப்பதில் விருப்பமில்லை. அப்படிப் படுக்க வைத்தால் எல்லோர் அனுதாபமும் சம்பாதித்து, தினம் தினம் வேளா வேளைக்கு உண்டு உறங்கி அடுத்து சுதாவை என்ன செய்வது என்ற யோசனையில் மூழ்கிடுவான் என்பதால் அவனை வேரோடே சாய்க்க முடிவெடுத்தான்.
அஷோக்கின் முன்னிருந்தது தீபக்கின் வாழ்க்கை வரலாறு.. அவன் முன்தினம் சென்ற ஹோட்டல் பெயர் வரை அதில்!
அவனை பற்றி, அவன் குடும்பம், தோழர்கள், அவர்கள் பின்புலம் என்று அக்குவேறு ஆணிவேராக அவன் ஜாதகம் முதற்கொண்டு அனைத்தும் அஷோக்கிற்கு மனப்பாடம்.
கல்லூரி பருவம் வரையிலுமே ஒழுங்காய் இருந்த தீபக் வாழ்க்கை திசை திரும்பியது அவன் படிப்பிற்காக லண்டன் சென்ற பின் தான். அவன் தங்கியிருந்த இடத்தில் பழக்கப் பட்டவன் தான் குணா என்ற குணம் கெட்ட குணசேகர், கட்சியிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட அமைச்சர் துரைபாண்டி மகன்.
அங்குத் துவங்கிய பழக்கம் பெங்களூரு வந்தபின்னும் தொடர அவன் நண்பர் கூட்டமே காரணமாய் தோன்றியது. அப்பாவின் வசதி, அவன் லண்டன் உழைப்பின் பணம், பணக்கார குணா.. ஆகிய இவை அவன் அப்பாவின் தொழிலைக் கவனிக்காமல், நல்ல வேலை ஒன்றிலிருந்து கொண்டே வாழ்வை இன்பமாய் கழித்துக்கொண்டிருக்கக் காரணமாய் அமைந்தது. அந்த நாட்களில் தான் சுதாவை அவன் கூர்கில் சந்தித்தது.
அதன்பின் சதீஷிடமிருந்து பணம் கிடைப்பதில்லை. இவன் மூளை, லண்டனில் இரண்டு வருடம் சேர்த்தது அதிகமில்லை என்பதால் குணாவின் முதலீடு; இதைக் கொண்டு அவன் சுயதொழில் துவங்கியுள்ளான்.
நலிந்து கிடந்த ஒரு நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதைத் திறம்பட நடத்தி வருகிறான். ஆறே மாத்தில் நல்ல வளர்ச்சி! திறமையான ஊழியர்களால் நிறுவனம் நிறைந்திருந்தது. மூல பொருட்களை வாங்கி அதைக் கொண்டு வாகன உதிரிப் பாகங்கள் செய்வது தான் தொழில். ஓரளவுக்கு நல்ல லாபம் பார்க்க ஆரம்பிக்கவும், சுதாவைத் தேடி வந்திருக்கின்றான்.
கெட்ட சாவகாசம் இருந்தாலும் அவன் ஒன்றும் கெட்டவனாய் தெரியவில்லை அஷோக்கிற்கு. அவனிடம் சுதாவின் இந்த சில புகைப்படங்களைத் தவிர வேறு வேண்டாத படங்கள் ஒன்றும் இருக்கவில்லை. இது எதுவுமே தீபக் தானே யோசித்துச் செய்த வேலையாய் அஷோக்கிற்குத் தோன்றவில்லை. தீபக்கை சுற்றி இருக்கும் களைகளை பிடுங்கினாலே அவன் மாறிவிடுவான் என்பது தெளிவாய் தெரிந்தது.
மிகச் சிறந்த ஹேக்கர் மூலம் தீபக்கின் சகல மென்பொருள் தகவல்களும் இப்பொழுது அஷோக் வசம்.
அவன் கைபேசி முதல் அவன் வைத்திருந்த ‘ஆன்லைன் டேட்டா ஸ்டோரேஜ்’ வரை சகலமும் அலசி ஆராய்ந்தாகி விட்டது. சுதாவிற்கு அனுப்பிய புகைப்படங்களோடு இன்னும் கொஞ்சப் புகைப்படங்களும் காணொளியும் அவன் வசம் இருந்தது. அனைத்து புகைப்படங்களையும்  காணொளிகளையும் முற்றிலுமாய் அழித்துவிட்டான்.
கடைசியாக முன் இருந்த சுதாவின் கைப்பேசியை வெறித்து அமர்ந்திருந்தான். அவனின் தங்கப் பதுமை நிலைகுலைந்து கிடந்தாள். 
எப்படி இவனால் முடிந்தது? தங்களை நம்பி தங்கள் வீட்டில் வசிக்கும் பெண்ணை.. எப்படி முடிந்தது இவனால்? தோழர்களுக்குக் காட்டி இருப்பானோ? இருக்காது என்றது மனம். நினைக்கவே கசந்தது.
அடுத்த சில நாட்களில் தீபக்கின் இடங்களின் திடீர் ரெயிட் வர தீபக் ஆடிப்போனான். அதை ஒருவாறு சரி செய்து வர அவனிடம் வேலையிலிருந்த சிறந்த மூளைகள் வேறு நல்ல வேலை கிடைத்ததாய் கொத்து கொத்தாய் ராஜினாமா செய்ய ஆரம்பித்தனர். பலர் அவசர விடுபெடுக்க, வேலை தடைப்பட ஆரம்பித்தது.
திடீர் என்று பழைய அமைச்சர் துரை பாண்டிக்கு, மேல் இடங்களிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வர, அடுத்த தேர்தலில் அமைச்சர் பதவி வேண்டும் என்பதால் அவர் மகன் குணா, தீபக்கோடு ஆரம்பித்த தொழிலிருந்து விலக வேண்டி வந்தது. கூடவே அவருக்கு தீடீர் பணத்தேவை வேறு!!
குணாவிற்குப் பணத்தை திருப்பி கொடுக்க உதவிக்கு வர வேண்டிய மற்ற தோழர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை இவனாய் ஒருவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களிடம் அங்கு வேலை செய்யும் ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாய் பேச்சு அடிபட போலீஸ் வந்து போனது. செய்தியில் தீபக்கின் நிறுவனம் பெயர் அதிகம்  அடிவாங்க ஆரம்பித்தது.
இவன் நிலை ஒரே மாதத்தில் குலையவும் உதிரிப் பாகங்கள் வாங்கிய ஒரு நிறுவனமும் அதற்கான பணத்தைப் பரிசல் செய்யாமலே இன்று நாளை என்று இழுத்தடித்தனர்.
மூலப் பொருட்கள் கொடுத்தவர்கள் திடீரென்று அடுத்த மாதம் தரவேண்டிய பாக்கியைக் கேட்டு மூலப் பொருள் தருவதை நிறுத்தினர்.
தீபக்கால் நிமிர முடியவில்லை. உணவிழந்து உறக்கமிழந்து பணமிழந்து… எப்படி இதை எல்லாம் சரி செய்வதென்று முழு நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
வாங்கிய கடன் வந்து கழுத்தை நெருக்கியது. பைத்தியக் காரனாய் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்தான். ஒரே மாதத்தில் அவன் வாழ்வு தலைகீழாக, தீபக் ஓய்ந்தே போனான். அப்பாவிடம் போய் நிற்பதா? தன் மானம் தடுத்தது.
“ஏன் இப்படி? என்னை சுற்றி என்ன நடக்கிறது?” கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. அதை அலசி ஆராய அவனுக்கு நேரம் போதவில்லை.
அப்பொழுதும் அவன் விதைத்த வினை அவனை எரித்துக் கொண்டிருப்பதையும்  அறியவில்லை.. அவன் பகைக்கக்கூடாத ஒருவனைப் பகைத்துள்ளான் என்பதையும் அவன் அறியவில்லை என்பது தான் அவன் துரதிஷ்ட்டம்.
இதெல்லாவற்றுக்கும் சுதா தான் மூல காரணம் எனத் தெரியும் பட்சத்தில்.. அஷோக்கால் அவளைக் காக்க முடியுமா?
 

Advertisement