Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 24
டேனியேல் நாகர்கோவில் வந்து வாரங்கள் ஓடிவிட்டன. மூன்று வார விடுப்பு முடியுமுன் அதை நீடித்து அதுவும் முடிந்து விடும் தறுவாயில் வீடே பரபரப்பில் மூழ்கி இருந்தது.
இனி என்று மகனைப் பார்ப்போமோ என்ற ஏக்கத்தோடு பெற்றோரும், கண்ணுக்குள் வைத்து தாங்கும் அண்ணன் கிளபுவதை காணபிடிக்காவிட்டாலும் அவனுக்கு வேண்டியதை எடுத்துவைத்துகொண்டு அனித்தாவும் பரபரத்துகொண்டிருந்தனர்.
இது பழகிப் போயிருந்தாலும் ஒவ்வொரு முறை டேனி செல்லும் பொழுதும் இந்த தவிப்பு வரத் தான் செய்கிறது. முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனையே கண் பனிக்கப் பார்த்து அவன் வெளிவரும் வரை என்ன ஆனதோ என்ற பதட்டத்தோடே பள்ளி வாயிலைப் பார்த்து நிற்கும் தாயின் அதே பரிதவிப்போடே ஷாலினி.
வலிகளும் உணர்வுகளும் ஒன்றாகவே இருந்தாலும்.. உறவு முறை பொறுத்தே அதன் தாக்கமிருக்கும். வீட்டிலிருந்த தாய் தகப்பன் அனி ஒரு வித பரபரப்போடே இருந்தால், இவை எதிலும் ஒட்டாமல்.. வேறு உலகில் வேறு உணர்வில் அவன் மனைவி ஜான்ஸி ராணி!
சில மணி நேரத்தில் கிளம்பிவிடுவான் என்றதுமே ஜான்சியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பெட்டியை அடுக்கி முடித்தவள் அவன் குளிக்கச் சென்றதுமே மொட்டை மாடிக்கு வந்து இருட்டில் நின்று கொண்டாள்.
‘என் வாழ்வில் இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது?’ என்ற எண்ணவோட்டம். பார்க்க அழகு தான் ஆனால் பேரழகெல்லாம் இல்லை. நடக்க முடிந்தது ஆனால் விந்தி விந்தி தான் நடக்க முடியும். குடும்பத்தில் வசதி இருந்தது ஆனால் கொழுத்த பணம் கிடையாது. இருந்தும் எப்படி இந்த திருமணம்? கண் நிறைந்த கணவனாய்.. இவள் தான் வேண்டும் என்ற பிடிவாதத்தோடு ஏன் மணந்தான்? என்னத்தைக் கண்டான் என்னில்? வேலை செய்யும் இடத்தில் அவன் தகுதிக்கேற்ற எத்தனை பெண்களைப் பார்த்திருப்பான்?
சில வாரங்கள் முன் ‘இவனோடு தான் என் வாழ்வா?’ என்று பார்த்து நின்றவளைக் கண்களில் காதல் வழியப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவள் மனம் கவர்ந்தவன்.
‘வருவேன்’ என்று சொன்னவன் வந்துவிட்டிருந்தான்.. அவளுக்குத் தான் தெரியவில்லை.
நான்கு வருடத்தில் நிறைய மாற்றமே. அவன் தோற்றதிலும் உடையிலும். முன்பே அப்படி ஒரு தேஜஸ்.. இப்பொழுது கேட்கவே வேண்டாம். 
மாறாமல் போனது அவன் சுண்டியிழுக்கும் கொஞ்சும் விழிகளும், வசிகரிக்கும் புன்னகையுமே..
அவளருகில் வந்தவன், “இப்பவும் பேசமாட்டியா? மௌன விரதமா?”
கம்பீரமான ஆண்மகன் அவள் பதிலுக்காய் தவம் போல் காத்து நிற்க, விழி விரித்துப் பார்த்து கொண்டிருந்தவளை நெருங்கி, “சொல்லேன்.. ஏதாவது சொல்லேன்..” யாசித்தான்.
அவள் மௌன விரத்தில் தான் இருப்பாள் போலும்.. பேசவெல்லாமில்லை. பார்வை மட்டுமே.
தயக்கத்தோடு அவனே மீண்டும், “என்னை பிடிக்கலையா?”
முறைத்தாள்.
“அப்போ பிடிச்சிருக்கா?”
முறைத்தாள்.
“பேச பிடிக்கலையா? ரொம்ப கனவோட வந்தேன்.. பச்! நான் கிளம்புறேன்.” சலிப்போடு திரும்பியவன் அவள் குரலில் நின்றான்.
“ஏன் இப்படி பண்ணினீங்க?”
திரும்பி அவளைப் பார்த்தவன், “எப்படி?”
“ஒரு வார்த்தை என் கிட்டச் சொல்லி இருக்கலாமே.. இந்த கல்யாண பேச்சாரம்பிச்சதுல இருந்து எவ்வளவு மன கஷ்டம் எனக்கு! இத நிறுத்த என்னென்ன பாடுபட்டேன்.. நிருத்தியிருந்தா? ரெண்டு பேர் வாழ்க்கை பாழாயிருக்காதா?”
அவளை கட்டிலில் அமர வைத்து, ஒரு நாற்காலியை அவளருகில் போட்டமர்ந்தவன் “நாலு வருஷம் முன்ன உன் கிட்ட சொல்லிட்டு போன பிறகு எத்தன தடவ உன்ன காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினேன் தெரியுமா? நீ ஒரு தரம் கூட என் ‘காள்’ல அட்டெண்ட் பண்ணல.
ரெண்டு வருஷம் முன்னாடி ஊருக்கு வந்தபோது இருந்த வேலையெல்லாம் விட்டுட்டு உன்ன பாக்க ரெண்டு சண்டே சர்ச் வாசலையே தவம் கிடந்தேன்.. அப்பவும் உன்ன பாக்க முடியல.. அப்பரமும் எத்தன தடவ உனக்குக் கால் போட்டேன் தெரியுமா?
ஏதாவது சோஷியல் நெட்வர்க்-ல உன்ன பிடிக்கலாம்னா அதுக்கும் வழி இல்ல. ஒரு ‘வாட்ஸ் அப்’ கூட நீ வச்சிருக்கல! என்னை என்ன செய்ய சொல்ற?”
“ஓ..”
“ஒரு வருஷம் முன்னாடி உன்ன பிடிச்சிருக்கு, உன்ன தான் கல்யாணம் பண்ணுவேனு எங்க வீட்டில சொல்லி அவங்கட்ட சம்மதம் வாங்கரதுக்குள்ள எனக்கு போதும் டா சாமினு ஆகிடுச்சு. அமெரிக்கால இருந்து இங்க இருக்கவங்க கிட்ட பேசி பேசி என் மனச புரிய வச்சு இங்க அனுபரதுகுள்ள நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்.
இங்க, உங்க வீட்டுல.. பதில் சொல்றதுக்கே மாச கணக்காகிட்டாங்க! நீங்க சம்மதம் சொன்ன பிறகு உன் வீட்டு நம்பருக்கு எத்தன தரம் கால் போட்டேன். பேசினியா? இல்ல..! எப்பவும் ஏதாவது ஒரு ரீசன்.. ஒன்னு பாத்ரூம்ல இருப்ப, இல்ல தூங்கீட்டு இருப்ப இல்ல வெளியில போயிருப்ப. நீ இந்த நொண்டி சாக்கெல்லாம் உங்க அம்மாட்ட சொல்லுரது எனக்கு கேட்கும்! அத கேட்கரவன் மனசு எவ்வளவு புண்படும்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”
“எனக்கு எப்படித் தெரியும் அது நீங்க தாணு?”
“ஒரு தரம் பேசி இருந்தா தெரிஞ்சிருக்குமே… அந்த ஃபோட்டோவ பார்த்து அதுல இருந்த நம்பருக்கு கால் செய்வேனு பார்த்தா அதுவும் இல்ல.”
“எனக்கு உங்க மேல இஷ்டம் இருக்கும் போது நான் எப்படிக் கண்ட ஃபோட்டோவ பார்ப்பேன்?”
அவளின் இந்த பதிலே அவனுக்கு போதுமானதாக இருந்தது. பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லாதது போலிருக்க.. ‘ஹப்பா..’ என்று ஒய்யாரமாய் கைகளை தலைக்குப் பின் கோர்த்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
அவளுக்குள்ளும் அப்படி ஒரு நிம்மதி பரவியது. உள்ளுக்குள் இருந்த சஞ்சலம் நீங்க முகம் தானாய் புன்னகையைப் பூச ஆரம்பித்தது. கல்யாண களைக்கு ஃபேஷியல் தேவையில்லை போலும் !
திருமணம் முடிந்து கணவனோடு இருந்த நிமிடங்கள் இனிக்கவே செய்தது. எந்த உறவோடும் அவள் இப்படி ஒட்டியதில்லை. அவளை கைக்குள் வைத்துத் தாங்கினான் என்று தான் சொல்லவேண்டும். அவன் காட்டிய புது உலகம்.. அது சொர்கமாய் தோன்றியது. புகுந்த வீடு என்று யாருமே அவளை நினைக்க விடவில்லை.
அனி கூட, “மைனி.. மைனி” என்று அவளையே சுற்றி வந்தாள். அவன் இல்லாமல் இங்கே நரகமாய் உணரப்போவதில்லை. ஆனால் அவள் சொர்கம் தான் இருக்கப் போவதில்லை.
இருட்டில் தென்னங்கீற்றுக்கிடையில் தெரிந்த நிலவை வெறித்துப் பார்த்திருந்தாள். அழகான நிலவும், மேனியை தழுவிச்சென்ற தென்றலும் இன்னுமே அவளைப் படுத்தி எடுத்தது. எத்தனை இரவுகள் கணவன் மடியில் இதே இடத்தில்… நிலவைக் கேட்டால் கதை கதையாய் சொல்லும் இவர்கள் நடத்திய காதல் லீலையை. நெஞ்சு கனத்தது! திருமணத்திற்கு முன் மன நிம்மதிக்காய் மாடியில் தனித்து நிற்பாள். இன்று தான் மீண்டுமாய் நிலவை வெறித்து நிற்கிறாள்.
மனம் அடைப்பது, தொண்டைக்குள் ஏதோ சிக்கி வலிப்பது, மனம் எதையும் யோசிக்காமல் தெரியாத எதையோ வெறிப்பது என எல்லாவற்றையும் ஒன்றே அனுபவித்து நின்றாள்.
“ஜானு.. இங்க என்ன டா பண்ற?” பின்னனிருந்து இடையோடு கட்டிக்கொண்டு, பின்னங்கழுத்தில் அவள் கணவன் இதழ் பதித்தது தான் தாமதம், அவள் உடல் குலுங்க ஆரம்பித்தது.
ஒரு நொடியில் அவன் பயந்து அவளை திருப்பிக்கொண்டே, “ஜானுமா? என்ன டா.. என்ன ஆச்சு? யாராவது ஏதாவது சொல்லிடாங்காளா?” அவன் எதிர்பார்க்கவில்லை அவள் இப்படி அழுவாளென்று.
அவன் தான் முதல் இரவிலிருந்து முன் தினம் வரை அவள் அருகாமையில் கரையும்போதெல்லாம்  பினாத்தி கொண்டிருந்தான், “நீ அங்க வர வரைக்கும் எப்பிடி இருக்கப்போரேனோ”
“நான் லீவ் இன்னும் எக்ஸ்டென்ட் பண்ண முடியுதானு பாக்குறேன்..”
“லூசு மாதரி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு வாரம் வேஸ்ட் பண்ணிட்டேன்..”
“நான் போயே ஆகனும்மா?” என்று விதம் விதமாய் தினமும் அவள் மடியிலும், மார்பிலும், கழுத்திலும் முகம் புதைத்து.
அவள் அசராமல் அவன் தலை கோதி, இதழ் பதித்து, “இருபது நாள்… இல்ல மேக்ஸிமம் ஒரு மாசத்தில வந்துடுவேன்.. இதுக்கு எதுக்கு ஓவர் சீன் போடுரீங்க.” என்பாள்.
அவளை திருப்பி நாடி பிடித்து முகம் தூக்க நிலவொளியில் அவள் கண்ணீர் மின்னியது.
குளியலறையிலிருந்து வந்தவன் அவளைத் தேடி, இடையில் துண்டோடும், பட்டனிடாமல் ஒரு சட்டையை மட்டும் மாட்டிக் கொண்டு மாடிக்கு வந்திருந்தான்.
கண்ணை மூடியிருந்தவள் முகத்தை இரு கையில் ஏந்தி பெருவிரலால் இமையை வருடிக்கொண்டே, “என்னை பாறேன்..” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“உனக்கு நான் போரதில வருத்தம் இல்லனு நினைச்சேன். ஒன்னு உனக்கு என் மேல அவ்வளவு தான் விருப்பமா இருக்கணும்.. இல்ல நீ ரொம்ப காட்டிக்காத டைப்பா இருக்கனும்னு நினைசேன்.. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருந்துது. நான் உனக்கு அவ்வளவு தானானு..”
அவன் சொல்லவும் கண்ணைத் திறந்தவள் முறைத்தாள். முறைக்கும் பொழுதே கண்ணோரம் கண்ணீர் மடை திறந்து கொட்ட ஆரம்பித்தது. அவள் அழுகை அவனுக்குச் சாரலாய் ஒரு இதத்தை பரப்பியது.
“ஜானு குட்டி..” அவன் குழைய, அவளுக்கு இன்னும் முட்டிக் கொண்டு வந்தது. அவன்  வெற்று மார்பு மீண்டும் ஒரு முறை குளித்தது. அவனுக்குள் அப்படி ஒரு நிம்மதி.
‘என் மனைவி என்னை நேசிக்கும்படி.. தேடும்படி நான் அவளை வைத்துள்ளேன்’ என்ற நிம்மதி.
அவள் கண்ணைத் துடைத்து விட்டு, “ஜானு குட்டி.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கிளம்பிடுவேன்.. நீ அங்க நம்ம வீட்டுக்கு வர வரைக்கும் தனியா இருப்பேன்.. அப்படி தனியா இருக்கும் போது நீ இப்படி கண்ணீர் விட்டா.. உன் கண்ணீர் தான் என் நினைவில வந்து டார்ச்சர் பண்ணும். நான் நினைச்சு சந்தோஷ படுர மாதிரி ஏதாவது..” என்று அடுத்த மணி நேரத்தைத் தனிமையில் அவர்கள் அறையில்…
அவள் இதழரோம் குழி விழ அவள் நிறைவான வெட்க சிரிப்பைச் சிரித்த பிறகே அவளை விட்டான். இனி அடுத்து அவளைப் பார்க்கும் வரை இது போதும் அவனுக்கு!
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விமானநிலையத்தில் கார்த்தியோடும் அனியோடும் வந்து நின்றவளிடம், “அழுது என்னையும் அழ விட கூடாது. உனக்காவது இங்க ஆட்கள் இருக்காங்க.. நான் அங்க தனியா இருப்பேன். சிரிச்ச முகமா அனுப்பு.
நாலு வருஷம் உன்ன நினைச்சு தனியா இருந்த போது இப்படி கஷ்ட்டமா இருக்கல.. ஆனா இன்னும் ஒரு மாசம் உன்னை விட்டு இருக்க போரத நினைச்சாலே வெறுப்பா இருக்கு.
உடம்ப பார்த்துக்கோ.. எதனாலும் எனக்கு கால் போடு. நேரத்தைப் பத்தியெல்லாம் யோசிக்காத! உனக்கு எப்போ எல்லாம் உங்கம்மா நினைப்பு வருதோ.. போய் இருந்துட்டு வா. எங்க இருந்தாலும், டேய்லி நீ தூங்க போரதுக்கு முன்ன வீடியோ கால்ல வரணும்.. வீசா கிடைச்சதும் டிக்கெட்.. உடனே கிளம்பி வந்திடனும்..” என்று சொன்னவன் அறிந்திருக்கவில்லை அவள் இப்போதைக்கு அவனைத் தேடி அங்கு போகப் போவதில்லை, அவனே மீண்டும் வருவானென்று. 
கை கோர்த்து, கால் வலிக்க நடந்து,  மணிக் கணக்கில் வாய் வலிக்கப் பேசி, அலுக்கும் வரை காதலித்து, உடல் உரசி, இதழி மோதி, பெண்மையும் ஆண்மையும் விழித்து, இனி காக்க பொறுமையில்லை என பெற்றோர் கையில் காலில் விழுந்து.. சண்டையிட்டு ஒரு வழியாய் ‘ஹப்பாடா’ திருமணம் முடிந்தது.. என்ற காதல் இல்லை இவர்களுடையது.
கண் பார்த்து உள்ளம் மோதி, காத்திருந்து… காத்த காலம் முழுவதும் இதயத்தில் வலியோடே கைச்சேருமா காதல் என்று ஏங்கி, ஒன்றாய் இணைந்த காதல். காதலும் திகட்டவில்லை.. அதனோடு இலவச இணைப்பாய் வந்த காமமும் திகட்டவில்லை. ஆசை அடங்கும் முன்னே இதோ இருவரும் மீண்டும் தனித் தனியே.. அடுத்து ஒன்று சேரும் நாளை எதிர்நோக்கி!

Advertisement