Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 23
நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில்.
நெற்றியைத் தேய்த்துக்கொண்டே அவளிடம் வந்தவன், “நான் நினைச்சத விட பெரியாளா இருப்ப போல! பார்த்தா பச்சை புள்ள மாதரி இருந்துட்டு… ஒரு பொண்ணு செய்யர வேலையா இது?”
‘கண்டிப்பாக என்னை ஏதோ தவறாக புரிந்து கொண்டான்..’ ஐயோ.. ஆண்டவா என்ற பாவத்தோடே அவனைப் பார்த்தவள், “நான் எந்த தப்பும் பண்ணலை!” திக்கி திணறிச் சொல்ல
“நீ தப்பு பண்ணினேனு நானும் சொல்லலியே.. குட்டி வானரங்களோட சுத்தி திருஞ்சுட்டு என்னைப் பார்த்ததும் பேசத் தெரியாத பச்சப் புள்ள மாதரி கண்ண உருட்டி முழுங்குற மாதிரி  பாக்கர நீ இவ்வளவு பேசுவியா? நான் கிட்ட வந்தாலே பல்லி மாதரி சுவரோட ஒட்டிக்கர.. பயந்த சுபாவம்னு பார்த்தா.. நாலு பேறு நடுவில வளந்த ஆம்பளைய கேவலமா பேசி அடிக்க வேற செஞ்சுருக்க! பெரியாள் தான் நீ!”
பொங்கி எழுந்தவள், “நான் ஒன்னும் சும்மா ஒருத்தன அடிக்கல.. அவன் என் தன்மானத்த சீண்டி விட்டான். நான் என்ன அப்படி பட்ட பொண்ணா? ஒரு பொண்ண.. அதுவும் என்னை?  நாலு பேறு முன்னாடி இப்படி தான் பேசுவானா?” என்று விட்டு அடுத்த நொடியே,
“இப்படி எல்லாம் பேசலாமா? தப்பில்லையா? அவன மாமாட்ட நல்லா மாட்டி விட்டிருக்கணும், பாவம் பாத்து விட்டது தப்பா போச்சு!” என கூறவும்
இவள் வளந்த குழந்தையா என்று தான் பார்த்து நின்றான். பார்த்த நாள்முதல் தோன்றிக்கொண்டே இருக்கும் கேள்வி தான் இது.
கலவரமாய் இருந்த அவள் முகத்தை பார்த்து வேண்டுமென்றே அவளைச் சீண்ட கேட்டான். “அப்போ நான் உன்ன பார்த்து கட்டிக்கவா வச்சுக்கவானு கேட்டா என்னையும் அடிப்பியோ?”
அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள், சின்ன புன்னகையோடு, “உங்கள கட்டிக்க கசக்குமா என்ன.. கட்டிகிட்டு வச்சுக்கோ-னு சொல்லியிருப்பேன்..” என்றவள் முகம் வாட. “ஆனா அது ஒரு வாரம் முன்னாடி!” என்று முடித்து கொண்டாள்.
“ஏன்.. ஒரு வாரத்தில நான் பிடிக்காம போய்டேனா?”
“ச்ச.. ச்சா.. நீங்க இல்ல.. நான் தான்..”
“ஓ..” என்று கூறிக்கொண்டே அவன் நெற்றி சுருங்க வந்து அவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவனுக்குப் புரியாத புதிராயிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டான்.
“எனக்கு ஒன்னு புரியல.. நீ சொன்ன கதைக்கும் இப்போ நீ இங்க இருந்து போகரதுக்கும் என்ன லிங்க்? அத்தை வீட்டுல தங்கி இருந்த.. அந்த பையனோட கல்யாணம் ஏற்பாடு நடந்தது. அவன் கூட மனஸ்தாபம் ஏற்பட்டுச்சு. அதனால ஏதோ உன் மேல இருந்த கோபத்தில வீட்டில நீ தனியா இருந்த நேரம் உன் கிட்ட தப்பா இருக்க முயற்சி செஞ்சான்.. நீ அங்க இருந்து வந்துட்ட! அவ்வளவு தானே.. அதுகெதுக்கு அவன பார்த்துப் பயந்து ஓடர? அது அவன் வீடு.. வெளியில வந்துட்ட.. இங்க எப்படி அவன் உன்ன தொந்தரவு செய்ய முடியும்? நீ எதுக்கு இங்க இருந்து போகணும்?”
அவள் அவனைப் பார்த்து விழித்து, “அவன்.. அவன் இங்கையும் வந்திடுவான்.. நான் போறேன்.” என்றது தான் தாமதம்.. அவன் பொறுமை போன இடம் தெரியவில்லை. அஷோக் எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி எட்டப் போய் விழ, அஷோக் முகத்தில் அப்படி ஒரு கோபம்.. சொன்னதையே எத்தனை முறை சொல்லுவாள்.. ‘சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு குடு.. சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு குடு….’ என்பது போல்!
ஒரு உருப்படியான காரணம் இருப்பதாய் தோன்றவில்லை அவனுக்கு.
பற்களை கடித்துக்கொண்டே அவள் அரண்ட முகமருகில் சென்று, “எனக்கு உன்ன நாலு சாத்து சாத்தினா என்னனு தோணுது.. என் வாய விட கை தான் சட்டுனு பேசும். உன் கிட்ட இப்படி கொஞ்சிட்டு இருக்கனால என்னை மாங்கா மடையனு நினைச்சுட்ட போல! நீயா வருவ சும்மா இருக்க மனசில காதல விதைப்ப அப்புறம் நீ பாட்டுக்கு உப்புக்கு  பெறாத காரணம் சொல்லி என்னைக் கழட்டி விட்டுடு போய்டுவ.. நான் உன்ன நினைச்சு தொண்டையில தண்ணிகூட இறங்காம தூக்கம் இல்லாம பைத்தியம் மாதரி சுத்தி திரியணுமா?”
அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று கூட தெரியவில்லை. ‘உப்புக்குப் பெறாதா விஷமா?’
கண்கள் பனிக்க, “சாரி.. நான்.. இப்படி, இத எதிர்பாக்கல.. ரொம்ப சாரி.. என்னை மறந்திடுங்க! நான் போகணும்.. அவன் இங்கேயும் வந்திடுவான்..” அவள் திக்கித் திணறிச் சொல்ல, அவன் மேசையில் ஓங்கி அடிக்க அதிலிருந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து சில்லுச் சில்லாய் சிதறியது.
அவன் கோபம் அதிகமே ஆக அவள் கன்னங்கள் அவள் மூன்று விரல்கள் நடுவில் மாட்டிக்கொண்டு தவித்தது. ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த கன்னம் இன்னுமே வலிக்க கண்ணீர் அவன் விரல்களைத் தொட்டது.
அவள் பயந்த விழிகளும், குவிந்த உதடும் அவனை என்ன செய்ததோ அப்படியே அவளிடமிருந்த கையை எடுத்தவன் முகத்தில் அப்படி ஒரு சலிப்பு..
அவள் அவனைப் பார்த்துக்கொண்டே கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க, அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விட்டவன், வறண்டக் குரலில், “பச்… அப்போ என்னை விட்டுட்டு போக போறியா?”
“எனக்கு வேற வழி இல்ல கண்ணன்..” என்றாள் பரிதாபமாய்
“வேற வழி இல்ல?! ஓ..”
யோசனாய் அவளைப் பார்த்தவன், “ஏன் எனக்கு, நீ இன்னும் உன் பிரச்சனையை என் கிட்ட சொல்லலைனு தோணுது?”
“ப்ளீஸ்.. என்னை எதுவும் கேட்காதீங்க! என்னை மன்னிச்சுடுங்க கண்ணன்.. ரொம்ப சாரி.. நான் போறேன்..”
எட்டிப் பார்த்த கோபத்தைப் பற்களை கடித்து அடக்கிக் கொண்டே, “அது தான் ஏன் சுதா? நான் உன்ன பார்த்துக்க மாட்டேனா.. நீ அவன பார்த்து ஓடறேன்னு என் கிட்டப் பொய் சொல்லாத.. நீ ஒன்னும் அவ்வளவு கோழை இல்ல…
உன் மனசில ஒரு ஓரத்தில கூட நான் இல்லையா.. என் கிட்டக் கூட உன்னால உண்மை பேச முடியாதா.. நான் அவ்வளவு தானா உனக்கு?”
எப்படிச் சொல்ல.. என்னவென்று சொல்ல..
மனது முழுதும் நீ மட்டும் தான் என்று எப்படிக் கூறுவாள். ஒருவன் என் தேகத்தைப் பாழாக்கிவிட்டான்.. உன்னோடு வாழ என் மனம் இடம் கொடுக்கவில்லை என்று எப்படிக் கூறுவாள். அவனிடம் நான் கறைபட்டது தெரியாமலே உன்னைப் பார்த்த அன்றிலிருந்தே உன்னிடம் என்னை இழந்தேன் என்று எப்படிக் கூறுவாள்..
மேசையிலிருந்த அவள் கைக்குள் முகம் புதைத்து கேவலோடே,
“ஏன்னா.. ஏன்னா.. நான் ஒரு எச்சில் இலைனு அவன் சொன்னான்!”
கண் சுருக்கி கேள்வியாய் அவள் கைகளை அவள் முகத்திலிருந்து பிரித்துக்கொண்டே, “வாட்? ஐ டோன்ட் கெட் இட்? அப்படினா?”
“அப்படினா.. அன்னைக்கு எனக்கு இருந்த உடம்பு வலிக்கும், கலைஞ்ச ட்ரெஸ்சுக்கும் அவன் தான் காரணம்னு சொன்னான்!”
அவனுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது, ‘நான் நினைப்பதாய் இருக்கக் கூடாதே என்ற வேண்டுதலோடு’ பொறுமை போக எரிச்சல் எட்டிப்பார்க்க,  “என்னடி சொல்ற.. நீ புரியரமாதரி பேசி தொலைய மாட்டியா? அவன் சொன்னான்.. அவன் சொன்னான்.. என்ன தான் அவன் சொல்லித் தொலைஞ்சான்? எச்சி இலை.. கலைஞ்ச டிரெஸ்-னு உயிர வாங்காத! நான் உன்ன ஏதாவது கோபத்துல செய்யரதுக்குள்ள மனுஷன் பொறுமையை சோதிக்காம நடந்தத சொல்லு” என இரைந்தான்.
அவள் முகத்தில் இரத்தமெல்லாம் வடிந்துவிட அவனை ஒரு இயலாமையோடே பார்த்து அமர்ந்திருந்தாள். அவனுக்கும் விஷயம் புரிந்து போகத் தொண்டை அடைத்தது. அடுக்களை சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தவன் நெஞ்சு அடைப்பு நீங்கும் வரை குளிர்ந்த நீரைக் குடித்தான். தொண்டை அடைத்துக் கொண்டு கண் இருண்டது.
‘என் சுதாவிற்கா.. ஐயோ.. லட்டு!’ நெஞ்சுக் கூடு காலியாகி விட, மனம் சற்றுமுன் நொறுங்கிய கண்ணாடி ஜாடியாய் நொறுங்கியது. அவள் வேதனை அவனுடையதாகிப் போக, வலித்தது.
குவளையில் குளிர்ந்த நீரை கொண்டுவந்தவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை. அவன் உணர்வைக் காட்டி அவளைக் கலவர படுத்த அவன் விரும்பவில்லை. சேர் நம் மீது பட்டுவிட்டால், குளித்து துணியை மாற்றிக் கொள்வதில்லையா? அப்படி தான் அவனுக்கு தோன்றியது. அவள் செந்தாமரை. அவனுக்குச் சொந்தமான தாமரை அதில் சேராவது சகதியாவது?!
“இந்தா.. இத குடி சுதா!” என்று அவளிடம் நீட்டினான்.
ஒரு வாய் குடித்துவிட்டு மேசை மேல் கோப்பையை வைக்கப் போகவும், “முழுசா குடி” என்றான்.
குரலில் இருந்த கடினம் அவளை கடைசி சொட்டுவரைக் குடிக்கச் செய்தது.
முன்பு நின்ற இடத்தில் அதே போல் ஒரு காலை மடித்து சுவருக்குக் கொடுத்து கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டி நின்றுகொண்டான்.
அவள் குடித்து முடிக்கவும், “அன்னைக்கு ஐ.டி.சி. சோளால என் கிட்ட உன் ஃப்ரெண்ட பார்க்க போரதா சொல்லிட்டு போன.. அப்புறம் என்ன ஆச்சு? சொல்லு! ஆனா நல்லா ஞாபகம் வச்சிக்கோ… எதையும் மறைக்கவோ முழுங்கவோ கூடாது. சொல்லு!” என்றான்.
அவன் கண்ணில் என்னத்தைக் கண்டாளோ அவளும் ஒரு தீர்மானம் எடுத்தவள் போல் அன்று நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள். திக்கவோ திணறவோ இல்லை.
அஷோக் என்று நினைத்து ஓடியது.. தீபக்கைப் பார்த்தது.. அவனோடு சண்டையிட்டது.. அவள் உறங்கும் பொழுது அவன் எடுத்த புகைப்படத்தை காட்டியது.. அதற்கும் அசராமல் போகவே.. அவள் போதை மருந்தின் தாக்கத்தில் இருக்கும் பொழுதே அவளோடே உறவு கொண்டதாயும் அவளோடு இருந்தது உண்மை என்னும் விதமாய் முப்பது வினாடி நீள காணொலி ஒன்றைக் காட்டியது.. என எல்லாவற்றையும் கூறினாள். அழவில்லை. திக்கவில்லை. திணறவில்லை.
“எனக்கு அவன் பொய் சொல்றானு தோணுது..”
“நானும் நம்பல.. ஆனா அவன் எனக்கு மட்டுமேயான பர்சனல் விஷயம் சொன்னான் கண்ணன். அது பொயில்ல! அவன் உண்மையைத் தான் சொல்லி இருக்கணும்.”
“சோ.. எவனோ, உனக்கு தெரியாம உன் கிட்டத் தப்பா நடந்ததா சொன்னதும் நீ கிளம்பிடுவ..”
புரியாதா பார்வை ஒன்றை அவன் மேல் வீச
“சொல்லு சுதா.. அவன் சொன்னது உண்மை.. பொய்.. அது பத்தி நான் கேட்கல.. அது உண்மையாவே இருந்தாலும் அது உன் சம்மதமே இல்லாம முடிஞ்சு போன விஷயம்.. அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண நான் விரும்பல! எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் இது தான்- ‘அவன் அப்படிச் சொன்னதும் நீ என்னை விட்டுட்டு கிளம்பிடுவியா?’” ஒவ்வொரு வார்த்தையாய்.. பொறுமையாய் உச்சரித்தான்.
‘திரும்பவும் ஆரம்பத்தில இருந்தா’ என்றிருந்தது அவள் பார்வை.
“நான் கேட்ட கேள்விக்குப் பதில் எதிர்பார்க்கிறேன்.. சொல்லு சுதா? உன் வாழ்க்கையை.. என் வாழ்கையை டிஸ்ட்ரப் பண்ற மாதரி ஒரு விஷயம் நடந்திருக்கு. நீ என் கிட்ட பேசி தானே ஒரு முடிவெடுத்திருக்கணும்… அது எப்படி, நீயே ஒரு முடிவு எடுத்திட்டு என் அம்மாட்ட சொல்லிட்டு கிளம்பிடுவியா? என் மேல வச்சிருக்க மரியாதை அவ்வளவு தான? ‘நீ எக்கேடு கெட்டு போனா எனக்கென்னனு’ எப்படி உன்னால நினைக்க முடிஞ்சுது?”
“போதும் கண்ணன் நீங்கப் பாட்டுக்கு பேசிட்டே போகாதீங்க! நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது…”
அவள் தோள் பிடித்து நிறுத்தியவன் அவள் கண் பார்த்து, “சரி நான் கற்பனை பண்ணல.. இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் வேண்டாம். நான் நேராவே கேக்கறேன்.. சொல்லு நான் யாரு உனக்கு?”
“ப்லீஸ் கண்ணன்.. வேண்டாம் விட்டுங்க.. என்னை மறக்கிறது தான் உங்களுக்கு நல்லது.”
“பதில் தப்பு சுதா.. ட்ரை அகேய்ன்!”
“நீங்க ஆழம் தெரியாம பேசிட்டு இருக்கீங்க கண்ணன்.. அவன் ஒரு மல்டி மில்லினியர்.. அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொசைட்டில பெரிய ஆட்கள் பசங்க! அவன் கூடவே சுத்துவான் ஒரு கேடுகெட்டவன்.. பேரு குணா.. மினிஸ்டர் பையன். அவன் எதுக்கும் துணிஞ்சவன்.. கொலை பண்ணக் கூட தயங்க மாட்டான். அவன் ஆசைப் பட்ட ஒரு பொண்ணுக்காக.. நான் சொல்றது ஆசை.. காதல் இல்ல! அவளுக்குக் கல்யாணமான மறுநாளே அவ புருஷனை வெட்டி கொன்னவன்.. அவன் தான்னு தெரியும்.. இருந்தும் ஆதாரம் இல்லனு சொல்லிட்டாக. நான் பேசரது புரியுதா உங்களுக்கு?
தீபக் காட்டின வீடியோல என் முகம் மாட்டும் தான் இருக்கு.. அவன் முகம் சுத்தமா தெரியல! அவன் சேஃப்! ஆனா நான்? அவன் வெளில காட்டினான்…? உங்க ஆட்கள் முன்னாடி மானமா நிக்க முடியுமா? இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்… உங்க குடும்பத்த யோசிச்சு பார்த்தீங்களா?
நான் கெட்டு போனவ கண்ணன்… உங்களுக்கு மனைவியா எப்படி முடியும்? நம்ம காதல் சொல்லப் படல.. அது அப்படியே போகட்டும்.. என்னை மறந்துட்டு வேற நல்ல பொண்ணா பாருங்க கண்ணன்.. நான் சொன்ன மாதரி நான் உங்க வாழ்க்கையில வந்த கெட்ட கனவா மறந்திடுங்க கண்ணன்.”
“வாய மூடு சுதா! இடியட் மாதரி பேசாத! இன்னும் ஒரு தரம் ‘நான் வேண்டாம்… மறந்திடுங்க.. போறேன்.. கெட்ட கனவு… வேற பொண்ணு..’ இப்படி ஏதா…வது சொன்ன.. நிஞமா உன் கடைவாய் பல்லு பேந்திடும் ஜாக்கரதை! கெட்டுடாளாம் என்னடி கெட்டுட்ட? நீ என்ன தின்பண்டமா கெட? திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு! ஆமா, நடக்கக் கூடாதது நடந்திடுச்சு.. இப்போ என்ன அதுக்கு? அத தல முழுகித் தொலையேன்! தெரு நாய் நக்கினா கழுவிட்டு போகறதில்ல? லூசு மாதரி அதையே உளறிட்டு! தாலி கட்டின பிறகு தெரிஞ்சிருந்தா இப்படி தான் விட்டுட்டு போறேனு நிப்பியா?
நான் உனக்காக இருக்கேன்னு சொல்றேன்.. காது குடுத்துக் கேக்க மாட்டேன்னு ஒத்த கால்ல நிக்கர…” முறைப்போடு அவளை ஏறிட, ‘எப்படி இவனுக்குப் புரியவைப்பது’ என்ற எண்ணத்தோடே மீண்டும், “என்னால முடியாது கண்ணன்.. அவனுக்கு தெரிஞ்சா உங்களையும் உங்கத் துணிக் கடையையும் கூட.. வேண்டாமே.. எனக்குப் பயமா இருக்கு.. அவ” அவள் முடிக்கக் காத்திருக்கவில்லை.. அப்படி ஒரு கோபம் அவனுக்கு
“ஏஏஏய்… நிறுத்து! நீ முதல்ல வாய மூடு! நாலு கேடு கெட்ட ஜென்மத்த கூட்டிட்டு சுத்தர கழிசடைய பார்த்து நீ பயப்படுவியா? என்னைப் பார்த்து வேண்டாம்னு சொல்லிடுவியா? ச்சி… இவனுகள கூட என்னால சமாளிக்க முடியாதுனு என்னை பயந்து உன்ன விட்டுப் போக சொல்ற?
தெரியுமா நான் யார்னு? தெரியமா..?
என் அந்தஸ்துக்கு என் முகம் பார்த்து நிக்கரவன் பையன பார்த்துப் என்னை பயப்பட சொல்ற?
உனக்கு வாய் மட்டும் தான்… கண்ண திறந்து பார்.. நான் யார்னு இன்னும் உனக்கு தெரியல இல்ல? என்னவோ ‘நீங்க உங்கள பத்தி சொல்ல வேண்டாம் நானே கிழிப்பேன்னு’ சொன்ன.. அவன பத்தி, அவன் கூட்டாளிங்க பத்தி தெரிஞ்ச உனக்கு என்னை தெரியல இல்ல..
போடி… போ.. எங்க வேணும்னாலும் போ.. நான் உன்ன தேட மாட்டேன்.. இப்படி என் உயிர தொலச்சமாதரி பிணமா சுத்த மாட்டேன்… நீ என்ன சொல்றது வேண்டாம்னு.. நான் சொல்றேன்.. உன்ன மாதரி முதுகெலும்பு இல்லாத ஒரு கோழை எனக்கு வேண்டாம்.
உன்னையும் நம்பாம.. உன்ன பாதுகாக்க என்னால முடியும்னு என்னையும் நம்பாத நீ வேண்டாம்.. குடும்பத்தையும் பொண்டாட்டியையும் பாத்துக்க தெரியாதா ***ப்பயனு நினைச்சுயா என்னை? போடி..போ எங்கையாவது போ” ஆத்திரம் முழுவதையும் வார்த்தையாய் கொட்டிவிட்டு அவன் வாயிலை நோக்கி நகர ஆரம்பித்தான்.
‘பொண்டாட்டியா சொன்னான்? என்னை மனைவி என்றா சொன்னான்?’ அவன் போக பின்னோடு ஒடி வந்தவள், “கண்ணா” என்று அலறவும் திரும்பிப் பார்த்தவன் கண்டது காலில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒற்றைக் காலில் நின்றிருந்தவளைத் தான்.
அவளைத் தூக்கி, கண்ணாடி துண்டில்லாத இடம் நோக்கி, அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தவன் காலை சுத்தம் செய்து கட்டுப் போட்டு, அவள் காலின் கீழ் அமர்ந்த வண்ணமே அவள் முகம் நோக்கினான்.
அவனை விழுங்கிய விழியைக் கண்டவன், “கொல்ரடி என்னை.. சத்தியமா என்னால முடியல! பாடா படுத்தர! உயிரோடேயே என்னை தின்றடி நீ!”
எழுந்தவன், ஒரு சலிப்போடே நகரவும் அவன் ஒற்றைக் கையை அவள் இருக்கைகளாலும் பிடித்துக் கொண்டாள். பேச்சு வரவில்லை. இவ்வளவு நேரம் இல்லாத அழுகை முட்டிக் கொண்டு வந்தது. என்னன்னவோ சொல்ல மனம் துடித்தது. வார்த்தைகள் மறந்து போனது. அவள் பேச வேண்டிய காதல் மொழியை, அருவியை அடக்கிய அவள் விழி பேசியது.
அவள் கண் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சொல்லாமலே அவனுக்குப் புரிந்தது. அவள் கையை உயர்த்தி அவன் குனிந்து அதில் ஆழ்ந்த முத்தம் வைக்க, தேங்கி இருந்த காவேரி தடைகளையெல்லாம் உடைத்துக் கொண்டு கடல் சேர்ந்தது. அவன் இடையைக் கட்டி கொண்டு அவள் உடல் குலுங்க, அவனும் பனித்த கண்ணோடே அவள் தலை வருடி நின்றிருந்தான்.
நெருப்பிற்கு ஏது கறை?
காட்டாற்று வெள்ளத்திற்கும் காதலுக்கும் ஏது தடை?

Advertisement