Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 22
வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஆரவில்லை. கல்யாண வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்க அதை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. ஏற்கனவே அத்தைக்குப் பலகீன இதயம். எந்த அதிர்ச்சியையும் தாங்கும் சக்தியில்லை. எப்படிக் கூறுவாள் அவரிடம் ‘உங்கள் மகன் நடத்தை சரி இல்லை. அவன் எனக்கு வேண்டாம்’ என்று?
மாமாவிடம் தான் கூற முடியும். தயங்கிக் தயங்கி நின்றவள் முகம் பார்த்த சதீஷிற்கு தெரிந்துவிட்டது ஏதோ சரி இல்லையென்று. “ஏன் டா ஒரு மாதரி இருக்க? எதனாலும் மாமாட்ட சொல்லுடா கன்னுகுட்டி..” என்ற அவர் தலை வருடல் தைரியத்தைத் தரக் கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கலந்து கூறி திருமணம் வேண்டாம் என்றுவிட்டாள்.
“கூர்க்-ல ஆத்தான பார்த்தேன் மாமா.. அவர் கூட ஒரு பொண்ணிருந்தா.. அவர் கேள்-ஃப்ரெண்டாம். நீங்க கண்டிஷன் போட்டதினால தான் கல்யாணம் பண்றாராம்.. வேண்டாம் மாமா இந்த கல்யாணம்.. இதுல யாரும் நிம்மதியா இருக்க முடியாது!”
இதைக் கேட்டதும் சதீஷ் மகனைப் பற்றி விசாரிக்க ஏதேதோ கேட்கக் கூடாத விஷங்களெல்லாம் கேள்விப்பட, மகனுக்கு அறிவிக்கப் படாமலே அவர் திருமணத்தை நிருத்தியிருந்தார். அவருக்கு மகன் மேல் கோபம்.. மனைவியிடம் உண்மையைச் சொல்லவும் முடியவில்லை. சுதா சொன்னது போலவே உண்மையும் பொய்யுமாய் அவரிடம் சொல்லி அவரை சமாதானப் படுத்தினார்.
அவனிடம் நேரில் பேச அவனை அழைக்க, அவனோ அவன் நண்பர்களோடு வந்து நின்றான். சுதாவை அங்குப் பார்க்கவுமே அவள் யாரென்பது நினைவில் வந்தது. அவனை ஒரு புழுவைப் போல் அவள் பார்த்துச் செல்ல, நண்பர்கள் முன் பெருத்த அவமானமாய் போனது.
போதாத குறைக்கு, “உனக்கெல்லாம் கல்யாணம் ஒன்னு தான் கேடு! சொன்னேன் இல்ல.. என்னை நீ கட்டிக்க முடியாதுனு!  உன் கனவுல கூட என்னை நினைச்சிடாத. உன் விரல் என் மேல பட விட மாட்டேன்.. இனி மேலாவது இந்த கேவலமான ஃப்ரெண்ஸ்ச விட்டுட்டு மாமா கூட சேர்ந்து பிசினஸ்ச பார்! மனுஷனா மாறு! நான் உன்ன பத்தி இன்னும் வீட்டுல சொல்லை. சொல்ல வச்சுடாத! வீட்டிலையும் உன் பேரை நீயே கெடுத்துக்காத!” என்ற அட்வைசை பொழிந்து செல்ல, இதுவும் அடுத்த அறையிலிருந்த நண்பர்கள் காதில் விழ தீபக் வெறி பிடித்தவன் போலானான்.
அம்மாவின் வற்புறுத்தலால் வீட்டில் ஒரு வாரம் தங்கினவன் நடப்பதைக் கவனித்து அமர்ந்திருந்தான். அவன் வீட்டில் அவன் விருந்தாளியாய் இருக்க அவள் இளவரசியாய் வலம் வந்தாள். எதற்கும் சுதா தான் தேவைப் பட்டாள் சதீஷிற்கும் நீலாவதிக்கும்.
அடுக்களையிலிருக்கும் கடுகிலிருந்து அவர்கள் கம்பனி ஷேர்ஸ் வரை சுதாவின் கரம் நீண்டது. வீட்டு வேலையாட்கள் அவள் விழி அசைவில் வேலை செய்தனர். சதீஷ் வேலைக்கு செல்லும் வரை அவர் வால் பிடித்து சுற்றுவாள். அவர் சென்றதும் அத்தை மடி மெத்தை என்று அவரிடம் செல்லம் கொஞ்சி கிடப்பாள். மொத்தத்திற்கு. அவள் உலகம் நிம்மதியாய் சந்தோஷமாய் தான் இருந்தது.
இருபது வருடம் மும் சதீஷ் தொழில் பின்னடைய, பல கோடிகளால் அதை எழுப்பி நிற்க வைத்தது சுதாவின் தகப்பனே. அந்த  நன்றியை சதீஷ் மறக்கவில்லை. மகனுக்கு அவர் தொழிலில் விருப்பமில்லாது போகவே சுதாவை அவர் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார் அடுத்த எம்.டி-யாக!
எப்பொழுதும் வீட்டில் அவள் சிரிப்பு சத்தம்! எல்லாம் அவனை வெறியேற்றியது. ஆனால் அவன் அவளிடம் எதுவும் பேசவுமில்லை அவளிடம் எந்த வித பிரச்சினையும் எழுப்பவில்லை.
அவன் பெற்றோர்களின் சிரிப்புக்கும் நிம்மதிக்கும் அவள் காரணம் என்பதெல்லாம் அவனுக்கு உரைக்கவில்லை. அவன் இருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை அவள் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுக்கிறாள் என்பது அவன் அறிவை எட்டவே இல்லை.
அவளை பழிவாங்க நேரம் பார்த்துக் காத்திருந்தான். அவன் அவளிடம் எந்த வம்பிக்கும் போகாமலிருக்கவே அவளும் எப்பொழுதும் போல் இருந்தாள். அவன் மேல் சிறு சந்தேகம் கூடப் படவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்ற குணம் படைத்தவள், அவன் அமைதியைத் தவறாகப் புரிந்து கொண்டாள். புலி பதுங்குவது பாய என்பதை அவள் அறியவில்லை.
கல்லூரி தேர்வு முடிந்திருக்க வீட்டிலேயே அவள் முழு நேரமும் இருக்க நேர்ந்தது. தீபக்கும் அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.
வழக்கம் போல அந்த வெள்ளிக் கிழமையும் கோவிலுக்கு நீலாவதி கிளம்ப, அவளுக்கு அடுத்த நாள் மாத விலக்கு ஆரம்பிப்பதால் அவரோடு செல்லவில்லை. “இன்னைகே இடுப்பு வலி, ஸ்பாட்டிங் ஆரம்பிச்சிடும் அத்த.. நான் வரல.. பத்துவோட வெளில போரேன்..” என்றவள் தோழியோடு சென்று விட்டு மதியம் போல் வீட்டிற்கு வர, கோவிலுக்குச் சென்று பின் அப்படியே விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்த நீலாவதி வந்திருக்கவில்லை.
காலை முதல் மாலை வரை வீட்டிலேயே இருக்கும் உதவியாட்களும் இருக்கவில்லை. அசதியாய் இருக்கவே எதையும் கவனிக்காது அவள் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு கிளாஸ்சில் பழரசம் காத்துக் கொண்டிருக்க, அதைக் குடித்துவிட்டு உடைமாற்றச் சென்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் தூக்கம் சொக்க, படுத்து உறங்கியும் விட்டாள்.
நான்கு மணி வரை சுதா விழிப்பதற்காய் காத்திருந்த நீலாவதி அவள் எழும்பாமல் அசந்து தூங்கவும், சதீஷிடம் சுதா உறங்குவதாயும், தான் திருமண அழைப்பிற்கு செல்வதால் சீக்கிரம் வீட்டிற்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
பதுங்கியிருந்த புலியும் மானை வேட்டையாட வெளி வந்தது. ஏனோ தீபக்கிற்குத் தூங்கிக் கொண்டிருந்தவளிடம் அவன் வீரத்தைக் காட்டப் பிடிக்கவில்லை. அவள் விழித்திருக்கவேண்டும், அவனை அருவருப்பாய் பார்த்தவள், அவளையே அருவருப்பாய் உணரவைக்க வேண்டுமென்றிருந்து.
அறையில் அமர்ந்துகொண்டவன் அவள் விழிக்கக் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தை வீணாக்காமல் சில கோணங்களில் அவனுக்குச் சாதகமாய் புகைப் படங்களையும், காணொளிகளையும் எடுத்துக் கொண்டான். மாத்திரையின் வீரியம் அவளை மயக்க நிலையிலேயே வைத்திருக்க, நேரம் செல்ல செல்ல அவன் மனமும் மாற ஆரம்பித்தது.
நிலவு வந்த பின்னே அவள் கண் விழிக்க, அறையில் மங்கலாய் வெளிச்சம் பரவி இருந்தது. தூக்கம் கலைந்து விழித்தவளால் அசைய முடியவில்லை.
இடுப்பெல்லாம் நல்ல வலி.. கால்கள் துவள, அசைய முடியவில்லை. உடைகளும் கலந்திருக்க அவைகளைச் சரி செய்து கொண்டே எழும்ப நினைத்தவளுக்குத் தலை  வின்னென்றது.
“என்ன ஆச்சு எனக்கு.. காலைல ரொம்ப சுத்தியிருக்கக் கூடாது. எவ்வளவு நேரம் தூங்கியிருகேன்!” என்று எண்ணி கொண்டே முகம் கழுவி வந்தவள் அத்தையை தேடிப் போக, வாசலில் நின்றிருந்தான் அத்தை மகன்!
“இங்க என்ன பண்ற? தள்ளு” என்றவளை அவன் பார்த்த பார்வையும் சிரிப்புமே சொன்னது ஏதோ சரியில்லை என்று.
“பாத்ரூம்ல பார்த்தியா உனக்காக டெட்டால், ஃபினையில் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்! நிறைய இருக்கு.. டப்ல ஊத்தி ஆசை தீரப் படுத்துக்கிட!” எனவும் சுதாவிற்குத் தொண்டையில் பய உருண்டை மாட்டிக்கொண்டது.
ஏற்கனவே நடக்கச் சிரமம்.. பயத்தில் கால் தரையை நழுவ விடாமல் கட்டியாகப் பிடித்துக் கொண்டது. “என்ன உள..ர்ர? நகரு தீபக்..” எனவும் “நான் நகரதுக்கு தான் இவ்வளவு நேரம் காத்துக் கிடந்தேனா?” என்று அவளை பிடிக்க வரவும், பாவாடையை வாரி சுருட்டிக்கொண்டு மாடிப்படியில் அவள் இறங்க, அவன் பின்னே வந்தான்.
“வீட்டுல யாரும் இல்ல.. தேவ இல்லாமா ஓடி பிடிச்சு விளையாடி என் நேரத்த வேஸ்ட் பண்ணாத.. எப்பிடி…? என்னைக் கல்யாணம் பண்ண மாட்ட…? நான் தொட்ட இடத்தை பினாயில் ஊத்திக் கழுவணுமா? நீ சொன்படி பார்த்தா இன்னைக்கு பினாயில தான் குளிப்ப போல..”
“தீபக் வேண்டாம். தப்பு பண்ற.. அத்தை மாமாக்கு தெரிஞ்சுது உன்னை மன்னிக்கவே மாட்டாங்க!”
“அவங்களுக்கு எப்படித் தெரியும்? நான் சொல்ல மாட்டேன்! நீயும் சொல்லாத! சொன்னா அம்மாவால தாங்க முடியாது! ஏற்கனாவே உனக்கு அம்மா இல்ல.. சோ நீ சொல்ல மாட்ட!” 
நாலே எட்டில் வீட்டின் ஹாளில் இருந்த அவளருகில் வந்தவன் அவள் சட்டையைப் பிடித்து இழுக்க, அவள் ஓட, சட்டை கிழிய, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் சதீஷ். அவன் எதிர்பார்க்கவில்லை. அவர் வழக்கமாய் வருவதை விட இரண்டு மணி நேரம் முன்பே வந்திருந்தார்.
தாயைப் பார்த்த குழந்தை போல அவரை பார்த்தவள் “மாமா…” என்று கதறிக்கொண்டே அவரிடம் தஞ்சம் அடைந்தாள்.
இது நடந்தபின் சதீஷ் மகனை வீட்டை விட்டு அனுப்பிவிட, அங்கிருப்பது இனி சரிபடாது என்று அவள் மேற்படிப்பிற்காக மும்பை சென்றுவிட்டாள்.
மகன் மேல் இருந்த கோபத்தில் சொத்தை முழுவதையும் சுதாவிற்கு எழுதப் போவதாய் சதீஷ் சொல்ல, செல்லாகாசான உணர்வு! நண்பர்கள் முன் அசிங்கப்பட்டு, தகப்பன் முன் கேவலப்பட்டு, சொந்த வீட்டிலே இடம் இல்லாமல் போக தீபகிற்கு வலித்தது. இதே வலியை அவளுக்குத் தராமல் ஓய்வதில்லை என முடிவு செய்தான்.
படிப்பு முடியவும், மீனாட்சி பாட்டியை நோக்கி பயணப்பட்டாள். நீலாவதிக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. மீண்டும் மகன் லண்டன் அவன் விருப்பப்பட்டு சென்றதாயும் சுதா படிப்பிற்காகவும் பின் பாட்டிக்காகவும் சென்றதாய் நினைத்துக்கொண்டிருக்கிறார் நீலாவதி.
மும்பைக்குச் சென்றாலும் அவள் நடுக்கம் குறைந்தபாடில்லை. வந்துவிடுவானோ.. தனியாய் மாட்டிக்கொள்வேனோ? என்ற பயம் உள்ளுக்குள் உறைய ஆரம்பித்தது. அவன் இல்லையென்றாலும் அவன் ஏற்படுத்திய தாக்கம் அவளை உயிரோடு மென்று  தின்றுகொண்டிருந்தது. அவளோடு விடுதியில் தங்கியிருந்த மீரா ஒருவருடம் பாடுபட்டு ராகுலின் உதவியோடு அவள் நத்தை கூட்டிற்குள்ளிருந்து வேளிக்கொணர்ந்தாள்.
கண்ணன் அவள் வாழ்வில் வந்த பின் அவன் மேல் ஒரு பிடிப்பு, நம்பிக்கை. பயம் போன இடம் தெரியவில்லை! தீபக் என்ற ஒருவனின் எண்ணம் பின்னுக்குப் போய்விட்டது. ஆனால் இன்று?
இரு கைகளையும் கோர்த்து மடியில் வைத்திருந்த சுதாவின் பார்வை அவள் விரல் நகத்தை விட்டு நகரவில்லை. நடந்ததைச் சொல்லியாயிற்று.
‘சொன்னதை ஒழுங்காகப் புரிந்து கொண்டானா? தன்னை பற்றி என்ன நினைத்தானோ?’ என்ற மன கேள்விகளுக்கு நடுவே அவன் ஏதாவது சொல்ல மாட்டானா என்று அவன் முகத்தைப் பார்க்க, அஷோக் அவளைக் கேள்வியாய் பார்த்துக் நின்றிருந்தான்.
அவள் அவனைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல்.

Advertisement