Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 19
கத்தி நெஞ்சில் இல்லை முதுகில்  குத்த பட்டுவிட்டதா? ஏமார்ந்துவிட்டேனா.. ஏமாற்றபட்டுவிட்டேனா? என் புரிதலில் தவறிவிட்டேனா? சுதா என்னைக் காதலிக்கவே இல்லையா? காலையில் கூட என் அருகாமையில் அவள் இதுபோல தானே நின்றாள்? எல்லாம் போய் தானோ? 
ஏதேதோ தோன்ற அங்கேயே.. அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான். எண்ண எண்ண ஏமாற்றத்தின்  வலி கூடியது. பூமி காலின் கீழ் நழுவ.. கண் பனிக்க அமர்ந்திருந்தான்.
எவ்வளவு நேரம் போனதோ? சூழல் எதுவும் மாறவில்லை ‘ச்ச.. ஒரு பெண் என்னை கலங்கடிப்பதா?’ அமர்ந்துகொண்டிருந்த அஷோக் பொறுமை இழக்க ‘இவளுக்கு இவனை பார்க்கனும்னா அவ போய் பார்த்துகட்டும் அதுக்கு நான் எதுக்கு இங்க காத்து கிடக்கணும்’ எனத் தோன்ற, வாயிலை நோக்கிச் செல்லாமல் அப்பொழுதும் அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல், அவர்கள் இருந்த இடம் நோக்கி நடந்தான். 
இன்னும் புதியவன் கை சுதாவின் இடையைச் சுற்றி! பார்த்த அஷோக்கிற்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. கோபம் எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.
எங்கோ அழைப்பவனைப் போல் அவளை இழுக்க அவள் அவனோடு செல்ல மறுத்துக்கொண்டிருந்தாள்.
அருகில் யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பியவள் அங்கு அஷோக்கைக் கண்டதும் அசையாமல் அவனையே பார்த்து நின்றாள். பார்வையில் அதிர்ச்சி இல்லை. பொறுமையாய் வந்துவிட்டாயா என்ற பார்வை. 
‘என்ன நெஞ்சழுத்தம்? வந்துட்டியா? பார்த்துட்டியா? அதனால என்னனு நினைக்கராளா?’ அவன் எல்லையில்லா கோபம் கொண்டு அவனால் ஒன்றே ஒன்று தான் நினைக்க முடிந்தது. அவளைத் தூக்கிப் போட்டு.. இல்லை இல்லை அது அவனால் முடியாது. அவள் கத்திக் கொண்டு உண்மையாகவே அவனைக் குத்தி கிழித்தாலும் அவனால் சுதாவைக் காயப்படுத்தவே முடியாது. அவன் காதல் அப்படி!
சுதா இவனை பார்த்து நிற்க, புதியவன் இதழ் அவள் இதழ் நோக்கு குனிய.. கோபம் எங்கே காட்டுவது என்ற குழப்பம் நொடியில் தீர்ந்தது. அடுத்த நொடி சுதாவின் வலது கை அவன் இடது கையில். புதியவன் கடைவாயிலும் மூக்கிலும் இரத்தத்தோடு தரையில். 
தன் மகள் ஒருவனைக் காதலித்தாலும், அடியும் மிதியும் அவளைக் காதல் செய்தவனுக்கு தானே.. தன் மகளை அடிக்க கை அவ்வளவு சீக்கிரம் ஓங்குவது இல்லையே..  
இவன் இழுப்பிற்குச் சுதா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவள் கையை பிடித்தவன், நிற்கவில்லை. 
நடக்க ஆரம்பித்தவன் காதில் மலையாளம் கலந்த தமிழில், “நீ யாரு டா புதுசா? 
சுதா வா வீட்டுக்கு.. எல்லாம் சரி பண்ணிடலாம். ஒரு தரம் நின்ன கல்யாணம் திரும்பவும் நான் நடத்தி காட்டறேன். அப்பாட்ட நான் பேசறேன்.. நீ வா.. 
எவ்வளவு நாள் ஓடிட்டே இருப்ப.. நடந்த எதுவும் நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. நீ ஏற்கனவே எனக்கு சொந்தமானவ.. எனக்கு மட்டும் தான். அப்படி எல்லாம் நீ போனதும் உன்ன விட்டுட மாட்டேன்..”
இதைக் கேட்ட அஷோக் சுதாவைத் திரும்பிப் பார்க்க அவளோ எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டவில்லை. அவனைப் பார்க்கவும் இல்லை.
“நடந்ததெதுவும் மாத்தமுடியாது. கோபத்த மூட்ட கட்டி வச்சிட்டு வீட்டுக்கு வா.. இந்தா உன் ஃபோன்… நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. முடிவெடுத்த தும் காள் போடு, வந்து கூட்டிட்டு போரேன்..” சுதாவின் கைப்பேசி தரையை தேய்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்த அஷோக்கின் காலில் இடித்து நின்றது. 
சுதாவின் கையை அஷோக் விட, கீழிருந்து அலைபேசியை எடுத்தவள் அமைதியாய் அஷோக் பின்சென்றாள். 
போதையில் கீழே கிடந்தவன் சுதா அஷோக்கோடு செல்வதை பார்க்க பார்க்க கோபமாய் கத்த ஆரம்பித்தான், “நீ எனக்கு மட்டும் தான்.. எப்பவும்! கண்டவனோடா சுத்திட்டு இருக்காம சீக்கிரம் ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வா.. மறந்திடாத! சொன்னத எதையும் மறந்திடாத.. ஒரு வாரம் டைம் நீயா வந்தா உனக்கு மரியாதை! 
இதுக்கு மேல கண்டவனோட சுத்திட்டு இருந்த கால ஒடச்சு வீட்டுல போட்டுடுவேன்.. 
டேய் யாரு டா நீ, எங்களுக்கு நடுவுல? எவ வீட்டில இருந்து கோவிச்சுட்டு வருவானு நாய் மாதரி நாக்க தொங்க போட்டுட்டு பார்த்துட்டு இருப்பீங்களா..? என் மேலையே கை வைச்சுட்ட இல்ல.. உன் முடிவு என் கைல தான். “
மீண்டும் ஏதேதோ சொல்ல அஷோக்கின் முகம் மாறியதோடு காலும் திசை மாறியது. அடுத்து என்ன நடக்கும் என்று சுதாவிற்குத் தெரிய அஷோக்கின் கையை பற்றிக் கொண்டாள். ‘வேண்டாம்’ என்ற கெஞ்சும் பார்வை மட்டுமே.
அஷோக்கிற்கோ கண் மண் தெரியாத கோபம், ‘ச்ச..’ அவள் கையை தட்டிவிட்டு நகர்ந்தான். பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அவனைப் பார்த்ததும் எழுது மரியாதை செய்ய.. ஊர் பேர் தெரியாதவன் தன்னை எவ்வளவு கேவலமாய் பேசிவிட்டான்? அருவருப்பாய் தோன்றியது. 
கார் ஆளில்லா கடற்கரைச் சாலையில் பறந்தது. என்ன ஒரு மரியாதையற்ற பேச்சு? ஏதோ அவள் அவனுக்குச் சொந்தமான அடிமை போல என்ன ஒரு உரிமை?! அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதே அவன் எரிச்சலைக் கிளப்பியது. ‘நீ எனக்கு மட்டும் தான்.. கண்டவனோடு சுத்திட்டு இருக்காம..’ காதில் ஓயாமல் ஒலித்தது. அவன் மூக்கோடு பல்லையும் பெயர்த்திருக்கவேண்டும் என்றது மனம். 
‘யாரிவன்? என்ன உரவு இவனோடு? இவனை வரச் சொல்லிப் பார்த்தாளா? ஏதேச்சையாக பார்க்க நேர்ந்ததா? எதுவாக இருந்தாலும்.. இந்த நெருக்கத்திற்கு அர்த்தம் என்ன்?’ இப்பொழுதே தெரியவேண்டி இருக்க, போன வேகத்தில் சாலை ஓரம் சென்று பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். அவள் அதை உணர்ந்தாளில்லை. அவள் முகத்தைப் பார்க்கக் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
“அவன உனக்கு ரொம்பப் பழக்கமா?”
கண்திறவாமல் மெல்லத் தலையசைத்தாள்.
“நான் பார்த்தது.. அந்த நெருக்கம்.. உண்மையா?”
கண்திறவாமல் மெல்லத் தலையசைத்தாள்.
“நீ போட்டிருக்க ஒவ்வொண்ணும் ரொம்ப விலை… அந்த செருப்பு கூட ஒன்னரை லட்சம் இருக்கும்.. அந்த வாட்ச் அரக் கோடி கிட்ட.. இவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?” 
கண்திறவாமல் மெல்லத் தலையசைத்தாள்.
“உன்னால என் முகத்தைப் பார்த்துக்கூடப் பதில் சொல்ல முடியலை இல்ல.. அப்போ நான் என்ன கேனையா..? வேர ஒருத்தன் உன் வாழ்க்கையை இருக்க எதுக்கு இந்த நாடகம் என் கிட்ட?” ஆத்திரம் பொங்கியது. 
“என்ன நாடகம்?” என்றாள் அவன் முகம் பார்த்து, அமைதியாய்.
அடுத்த நொடி மீண்டும் கார் பறந்தது. என்ன ஒரு பதில்.. முகத்தில் அரைந்தார்போன்ற பதில். 
வீடு சேரும் வரை ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசவில்லை. இனி அவளிடம் அவனுக்குப் பேச எதுவும் இருப்பதாய் தோன்றவில்லை. அவனின் ஏதாவது ஒரு கேள்விக்காவது ‘இல்லை’ என்ற பதில் வந்திருந்தால்.. அவள் தன் நிலையை விளக்க முற்பட்டிருந்தால்.. அடுத்து ஏதேனும் யோசித்திருப்பானோ என்னவோ? ஆனால் அவளின் இந்த பதில், முகத்தில் எதுவும் நடவாதது போன்ற அமைதி.. அவனை அதிகமாய் அசைத்தது.
‘இவளையா உருகி உருகிக் காதலித்தேன்?’ கோபத்தில் பேசினால் கண்டிப்பாக தவராகிவிடும். வாழ் நாள் முழுவதும் அந்த வடு நின்றுகொண்டே இருக்கும். அதைச் செய்ய அவன் தயாராயில்லை. 
அப்படியே பேச நினைத்தாலும்.. அவளிடம் என்னவென்று பேச? பேசி? என்னை ஏன் ஏமாற்றினாய்? நான் உன் வாழ்வில் எங்கே என்று யாசகம் கேட்பதா? அவளிடம் இறங்கிப் போகவா? அப்படி பேச அவன் ஈகோ தான் இடம் கொடுக்குமா? இத்தோடு போய் தொலையட்டும் என்று விட்டுவிட்டான். அப்படி நினைக்கவும் வலித்தது. அவன் ஒவ்வொரு அணுவும் அவளை விரும்பியதே.. தாங்கவே முடியவில்லை அவனால்.
இருவரும் அவரவர் சிந்தனையில். என்னதான் சுதா வேண்டாம் என சொல்லிக்கொண்டாலும் அவள் ஏதாவது சொல்லுவாள், தன் நிலை விளக்குவாள் என நினைத்தவனுக்கு வெறும் ஏமாற்றமே.
கார் அவள் வீட்டு கேட்டின் முன் நின்றது. ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கூடப் பார்க்காமலே போனாள். அவள் போன பாதையே பார்த்து அமர்ந்திருந்தான். அவன் அருகில் இருக்கும் சமயம் அவன் சிறு தலையசைவு இல்லாமல் அவனிடமிருந்து நகராதவள் ஒன்றுமே சொல்லாமல் சென்றே விட்டாள். இதில் எது உண்மை?
சில மணி நேரம் முன் இருந்த மன நிலை என்ன.. தற்போதைய நிலை என்ன? மாயை.. எல்லாம் மாயை..
மலருமுன்னே அவன் காதல் மொட்டாய் கரிந்தது. இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. ‘என் அருகாமையில் அவள் முகம் வெட்கத்தைத் தழுவியதே.. அவள் கண்ணில் காதல் கசிந்ததே.. என்னிடம் எடுத்த உரிமை பொய்யா? அவனோடு அவளைப் பார்த்தது.. அதுவும் உண்மைதானே? இதில் எது பொய்?’ குழப்பங்களும் குறையவில்லை.. கேள்விகளும் குறையவில்லை. 
அவன் வாழ்வு ஸ்தம்பித்து நிற்பதால் உலகம் நிற்பதில்லையே.. 
சூரியன் எப்பொழுதும் போலவே விடியலைக் கொண்டுவந்தாலும், அவரவர் மனம் போலவே புலர்கிறது. இரவு சுதாவை அவள் வீட்டில் விட்டு வந்தவன் என்ன பாடுபட்டும் அவன் கண்ட காட்சியை கண்முன்னின்று நகர்த்தமுடியவில்லை. தூக்கம் போன திசை தெரியவில்லை. கண்மூடினாலும் திறந்தாலும் அவளே.. 
“அம்மா.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன்!” சொல்லிக்கொண்டே வந்தவனை வினோதமாய் பார்த்துவைத்தார் சுசிலா.
“கண்ணா.. ஞாயத்து கிழமை போய் முடிக்கர அளவுக்கு அப்பிடி என்னடா வேல.. எனக்கு தெரியாம?”
“கொஞ்சம் வேல இருக்குமா…”
“சரி இருக்கட்டும் அதுக்கு இப்படி காலைல ஏழு மணிக்கே போகணுமா? அதுவும் காபி கூட குடிக்காம? இன்னைக்கு காலைல ப்ரோடீன் ஷேக்கும் குடிக்கல.. வர்க்-அவுட் பண்ணல.. ஆர் யூ ஆள்ரைட்?”
“எஸ் மாம்.. ஐ ஆம் குட்”
“உன் கூட குடிக்கலாமேனு நான் இன்னும் காபி கூட குடிக்கல… நீ என்னடான கிளம்பி வந்து நிக்கர! இரு காபி கலக்குறேன்.. ரெண்டு வார்த்த இருந்து பேசிட்டாது போ…”
அவன் பேசும் மனநிலையில் இல்லாமல் போகவே, “சாரி மா.. அப்புறம் பேசலாமே.. நான் கிளம்புறேன் மா..” பாவமாய் பார்த்து நின்றான். உலகம் வெறுத்த நிலை. தனிமையை மட்டுமே விரும்பி அணைக்கும் நிலை..
“சரி பேச வேண்டாம்! ஆனா இரு. ஒரு வாய் ஏதாவது குடிச்சிட்டு போ!”
மகனிடம் ஏதோ சரி இல்லை என்று உணர முடிந்தும் கை கட்டப்பட்ட நிலை. தோள் மேல் வளர்ந்தவனிடம் பார்த்துத் தான் பேசவேண்டும்.. அவனோ பேசும் நிலையில் இல்லை. 
வெறும் வயிற்றோடு மகனை அனுப்ப மனமில்லாது ஜூஸரில் ஆப்பிள், கேரெட், பீட்ரூட் கலவை ஜீஸ் எடுத்து அவனிடம் நீட்ட அதைக் குடிக்கும்வரை ஒன்றும் பேசவில்லை. அவன் கிளம்பவும் அவனையே பார்த்திருந்தவர் இரண்டு நாள் போகட்டும் என விட்டுவிட்டார்.
காலையில் சென்றவன் இரவு பதினொன்று வரை வீட்டிற்கு வாரவில்லை. இதுவே அவன் வழமையாய் மாறியும் போனது. காலை முதல் இரவு வரை ஆஃபீஸே கதி என்று கிடந்தான். 
திருமணத்தில் அதிக நாட்டமில்லை. அவன் தகப்பன் என்ற ஒரு மனிதனின் செயலாய் திருமணம் பொய்த்துப்போய் சுசிலா துணையற்று நிற்பதை பார்க்கின்றான் தானே? திருமணம் என்ற பந்தத்தில் ஆர்வமில்லை. அதனால் பெண்கள் மேல் என்றுமே ஈர்ப்பு ஏற்பட்தில்லை, அவன் ஆர்வமாய் பார்த்த முதல் பெண் சுதா. காதலாய், உயிராய்.. உணர்வாய் போனவன்… 
அம்மா வாழ்வு போலவே தன் வாழ்வும் பொய்த்துப்போக மனம் தாளவில்லை. ஒரு உரவின் ஆழம் இவ்வளவு தானா? தன்னோடு பழகும் ஒருவர் காதலோடு இருப்பது தெரிந்தும் அதற்கு இசைவது போல் பழகி பின் தள்ளிச் செல்வது என்ன செயல்?  
நாட்கள் நகர்ந்தாலும் அவன் மனம் அந்த ஒரு இடத்தையே சுற்றி வந்தது. அவளோடு அவன் நிம்மதியும் போயிருக்க, இயல்பிற்கு வர வெகுவாய் பாடுபட்டான்.
காலத்திற்கும் காதலுக்கும் சக்தி அதிகம். கோபத்தைப் பிடித்துவைக்க முடியவில்லை. ஒரு வாரகாலத்தில் அவள் மேல் இருந்த கோபம் கேள்விகளாய் மாறி இருக்க.. அவள் அப்படிப் பட்டவள் இல்லை… இதற்கு ஏதேனும் காரணம் கண்டிப்பாய் இருக்கும் என்று கூறிக் கொண்டான். இருந்தும் அவளைப் பார்க்கவோ, பேசவோ முயலவில்லை.
அவளைப் பார்க்காமல்,, நினைக்காமலிருந்தால் கொஞ்சக் காலத்தில் கண்டிப்பாக மறந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். பார்க்காமலிருந்து விடலாம். நினைக்காமலிருக்க முடியுமா என்பது கேள்வியே..
ஒரு வாரம் இப்படியே போக சுசிலாவின் பொறுமையும்  கற்பூரமாய் கரைந்தது. சனிக்கிழமை காலை ஆறு மணிக்குக் கீழே வந்தவனை சுசிலா பிடித்துக்கொண்டார்.
“உனக்கு என்ன பிரச்சினை கண்ணா?” பொறுமையோடே ஆரம்பித்தார்.
“ஒன்னும் இல்ல மா.. கொஞ்சம் டென்ஷன்.. வேல கொஞ்சம் இழுக்குது…”
“ஓ.. அப்போ இன்னைக்கும் போரிய?”
“ஆமா மா..” என்று தயங்கியவனை
“நீயே எல்லாம் செய்ய எதுக்கு இத்தனைப் பேருக்குச் சம்பளம் கொடுக்றோம்?”
“..”
“சரி.. எனக்கும் ஒரு வழி சொல்லிட்டுப் போ. நான் என்ன பண்ணட்டும்? நீயா உன் பிரச்சினையை சொல்லுவனு காத்து கிடக்கவா.. இல்ல நானும் உன்ன மாதிரியே கிளம்பி எங்கையாவது போய்டவா?”
“மா..” பாவமாய் பார்த்தவனை
“நீ யார பார்த்து ஓடர? எதுக்கு உன் லாப்டாப் பின்னாடி மறைஞ்சு இருக்கன்னு எனக்கு தெரியலை. ஆனா ஒன்னு மட்டும் நினைவுல நல்லா ஞாபகம் வச்சுக்கோ… இது உன் இடம்… இது உன் வாழ்க்கை. வாழ கத்துக்கோ.. உன்னோடே பயத்தை ஃபேஸ் பண்ணு. அதுல நீ ஜெயிக்கலாம் இல்ல தோத்தே போகலாம். ஆனா கண்டிப்பா நீ தொலைச்ச நிம்மதி திரும்பவும் கிடைக்கும்..”
“..”
“என்ன காபி போடவா?”
“இல்ல மா.. நானே போட்டு ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு வரேன்.”
அவன் நார்மலாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள சிரமப்படுவதைப் பார்த்தவர் அதற்கு மேல் அவனை சிரமப்படுத்த விரும்பவில்லை. அமைதியாய் காபியை அருந்தியவன் தோட்டத்தில் போய் தஞ்சம் புகுந்தான். 
மாலையில் கடற்கரையைப் பார்த்து பால்கனியில் நின்றவன் கண்ணில் பட்டடு ஒரு உருவம்.. சுதா! அவளே தான்.. அமர்ந்திருந்தாள். அமைதியாய் நின்றிருந்தவன் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. ஒரு வாரமாய் மனதிலிருந்து அவளை நீக்க எடுத்த முயற்சி எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை. ஒருத்தியிடம் தான் முற்றிலும் தொலைந்து தோற்று நிற்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘அதுவும் தன்னை ஏமாற்றியவளிடம் இன்னும் மனம் பாய்கிறதே என்ன ஒரு கேவலம்?’ என்ற கழிவிரக்கம் தோன்ற ஒருவித வலியோடே அவளைப் பார்த்து நின்றான். 
காதலின் அவஸ்தை.. முள் தொண்டையில் மாட்டிய அவஸ்தை. விழுங்கவும் முடியவில்லை.. துப்பவும் முடியவில்லை. இதில் எதை முயன்றாலும் வலித்தது!
‘என்னை அவள் விரும்பவே இல்லையா? எதற்குத் தணலை என் தலையில் கொட்டினாள்?’ ஏமாற்றத்தின் வலி..
பைத்தியம் பிடிக்காத குறை! அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான். முதல் முறை அவளைக் கண்டதும் தன்னை அவளிடம் தொலைத்ததும், கள்ளம் கபடமில்லாது போல் தோன்றிய அவள் பேச்சும், சிரிப்பும், முக பாவனைகளும் வந்து போனது. அவள் நினைவிலிருந்து எப்படி விடுபடுவதென்று தெரியவில்லை. ‘பாவி என் இதயத்தை குத்தி கிழித்துவிட்டாளே..’
தொலைக்காட்சியில் தன்னை தொலைக்க நினைக்க அதில் வந்த செய்தி இன்னுமே மனதைப் பிசைந்தது. “பத்து மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்தால் மரணம்” 
நாடு எதை நோக்கிச் செல்கிறது? பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையிடம் எப்படி இப்படி ஒரு எண்ணம் எழமுடியும்? ஐந்தறிவு மிருகம் கூட இது புரிந்தால் செய்தவனைக் கடித்துக் குதறி விடும்… ஆனால் நாமோ? ஏன் பொருத்து போகிறோம்? கொஞ்ச நாட்களாகவே இதே போன்ற செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றது.. இன்னும் ஒரு தீர்வு அரசாங்கத்திடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. இவனையெல்லாம் நடு ரோடில் நிற்க வைத்துக் கல்லெறிந்து கொல்லாமல் விடலாமா?
எண்ண அலைகள் சுதாவைப் பற்றிய சிந்தனையை பின் தள்ள சில மணிநேரம் கழித்து பால்கனி வந்தவன் கண் கட்டுபாடில்லாமல், பீச்சின் அதே இடத்தை நோக்க, உருவம் அங்கேயே அமர்ந்திருந்தது. ஆளரவமற்ற பீச்சில், நிலவொளியில் தெரிந்த உருவம் தனிமையில் ஆதரவற்று இருப்பது போலவே இருந்தது. ‘என்ன பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்னு சிலர் இருப்பாங்க.. நீ அந்த லிஸ்ட் தான் டா.. அவ தனியா இருந்தா என்ன.. சேர்ந்து இருந்தா உனக்கு என்ன?’
சுதா மேல் வருத்தம் தான்.. ‘ஏமாற்றிவிட்டாளே’ என்ற கோபமும் அதிகமாய் உள்ளது. ஆனால் அவள் மேல் இருந்த காதலோ என்ன முயன்றும் குறைந்தபாடில்லை. தொலைக்காட்சியில் வந்த செய்தி நெருட நாட்டு நடப்பே இவளுக்குத் தெரியாதா என்று அவனுக்குள்ளே கடிந்து கொண்டாலும் ராமுவை அழைத்து அவளை வீட்டிற்குப் பத்திரமாய் அனுப்ப தவறவில்லை.
மறுநாளும் வீட்டிலிருந்தவன் அதிகம் எதிலும் ஈடுபாடு காட்டவில்லை. அவனிடம் கேள்வி கேட்காமல் அவனுக்கு நிம்மதி தரக்கூடிய தோட்டத்திற்குள் நுழைந்துகொண்டான்.
செடிகளுக்கு நடுவிலிருந்தாலும் நடைப்பாதையில் அரவம் கேட்க, பார்க்காமலே அது யாரென்று அவனுக்குத் தெரிந்தது. கொலுசு சத்தமும் இல்லை. நடையில் துள்ளலும் இல்லை. 
அவளைப் பார்க்க அவன் விழையவில்லை. வலித்துக்கொண்டிருந்த இதயம் இன்னும் அதிகமாய் வலிப்பது போன்ற உணர்வு! இப்படி ஏமார்ந்து போனேனே என்ற கோபம்.
‘என்ன தைரியத்தில் இங்கு வந்தாள்.. குடும்பத்தையே ஏமாளினு நினைச்சுட்டாளோ?’ கோபம் கோபமாய் வந்தது. அவள் முகத்தில் முழிக்கவே கூடாது என்ற முடிவிலிருந்தவன் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டார் சுசிலா.
“கண்ணா உன் மனசில என்ன தான் நினைச்சுட்டு இருக்க? மணி பத்து ஆகுது.. இன்னும் சாப்பிடாம அப்பிடி அந்த வெயில என்ன தான் வேல? நீ உள்ள வா முதல்ல.. குளிச்சிட்டு சாப்பிடு வா”
அம்மாவின் சத்தம் கடுமையாய் இருக்கவே, “பசி இல்ல மா” என்று வீட்டிற்கு வந்தவன் எங்கும் பார்க்காமல் மாடி ஏறினான்.
“டேய் சுதா லட்டு எடுத்துட்டு வந்திருக்கா பாரு… ரெண்டு வார்த்த பேசிட்டுப் போடா”
‘லட்டா அல்வாவா?’ என்று நினைத்தவன் “எனக்கு எதுவும் வேண்டா மா.. தல வலிக்குது அப்புறம் பேசுறேன் மா.. ப்ளீஸ்” நிற்காமல் படி ஏறி அறைக்குள் மறைந்தான்.
சுதா அவன் போவதையே பார்த்து நின்றாள். மேலே சென்றவன் வியர்த்த உடலைக் கழுவவா இல்லை கொதிக்கும் உள்ளத்தை குளிரவைக்கவா என்று தெரியாமலே நேரே குளியலறைகுள் புகுந்தான்.
பின்னால் அவனுக்குக் குடிக்க பழரசத்தோடு சுசிலா செல்ல, “மா ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரேன்மா.. காபியும் டிஃப்பனும் எடுத்து வைங்க!” என்ற பதிலே வந்தது. அரை மணி நேரமாகியும் மகனைக் காணாமல் போகவே சுடச் சுடக் காபியோடும் காலை உணவோடும் செல்ல, அவரின் கைப்பேசி சிணுங்கியது. 
வெளியே கிளம்பிக்கொண்டிருந்த சுதாவை அழைத்தவர், “மா.. இத கொஞ்சம் அவன்ட்டப் கொடுதுட்டு போமா.. ஒரு வாரமா வீட்டுலையும் இருக்கருதில்ல, சாப்பிடுரதும் இல்ல, தூங்கரதும் இல்ல.. இடி விழுந்தாலும் அவன் எக்ஸர்சைஸ் பண்ணாம இருக்க மாட்டான்.. ஒரு வாரமா மேல ஜிம் பக்கத்தில கூட போகல.. எதையோ தொலச்சவன் மாதிரி இருக்கான். பாக்க சகிக்கல.. காலைல எட்டுக்குள்ள சாப்பிடுர பிள்ள இன்னும் சாப்பிட வரல.. என் கிட்ட முகம் கொடுத்துப் பேச கூட மாடேன்றான்! உன் ஃப்ரெண்டு தானே அவன்.. ரெண்டு வார்த்த நல்லதா சொல்லிட்டு போமா..” 
சுசிலாவின் வருத்தம் தோய்ந்த குரலைக் கேட்ட சுதாவிற்கு ‘ஐய்யோ.. இது வேரா?’ என்றிருந்தது. ‘அவனிடம் இன்றே பேசிவிட வேண்டும்’ என்று சிற்றுண்டியோடும் காபியோடும் மாடி ஏறினாள்.
அலமாரியில் புத்தகம் எடுத்துக் கொண்டிருந்தவன் பின்னால் வந்து நின்றவள் “நீங்க எதுக்கு இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க?” எனவும், கோபமும் எரிச்சலும் மேலோங்கச் சட்டென்று திரும்பினவன் கைதட்டி அவள் கையிலிருந்த காபி பறந்தது கூடவே அடுத்த கையிலிருந்த காலை உணவும்.
அவள் சுதாரிக்குமுன் அவள் கையிலும் முகத்திலும் கழுத்திலுமாய் சூடு காபி கொட்ட, “அம்மா” என்று அலறிவிட்டாள்.
தாவணியில் விழுந்த காபி உடலில் இறங்குமுன் அதை உருவி கோபத்தில் விட்டெறிந்தவன் அதே கொபத்தோடு அருகிலிருந்த துண்டை அவள் மேல் எறிந்து விட்டு, “செஞ்சது வரைக்கும் போதாதா? என் தலைல ஊத்த வந்தியா? உன் மூஞ்சீல முழிக்கக் கூட பிடிக்கல… நான் ஒதுங்கித் தானே போறேன்.. ஏன் தொரத்திட்டே வர? என் உயிர எடுக்காம பொய் தொலை” என்று கத்திய வேகத்தை விட வேகமாய் பால்கனியை அடைந்தான்.
காபியின் சூட்டை விட அவன் வார்த்தை அவளுக்கு வலித்தது. கையிலும், கன்னத்திலும், கழுதிலும் வழிந்து மார்பு வரை சென்றிருந்த காபியின் சூட்டினால் அவை அனைத்தும் எரிந்தது.  
ஐஸ் தண்ணீரில் மூழ்கிவிட மனம் துடித்தது. ‘போய் விடலாமா’ என்று கண் கரிக்க எண்ணியவள் அவனிடம் பேசி பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு கீழே கிடந்த தாவணியை மீண்டும் எடுத்து உடுத்திக் கொண்டாள். 
எதைக் கொடுத்தால் இவன் பித்தம் தெளிவான் என்று எண்ணியவாறே பால்கனிக்குச் சென்றாள்.
பால்கனியில் நின்றவனுக்கோ அப்படி ஒரு கோபம். கை முஷ்டி இறுக நரம்பு புடைத்து வெடித்து விடும் அளவு கோபம். மீண்டும் மீண்டும் அன்று அவள் அந்த வாலிபனோடு நின்ற காட்சியே முன் வந்து நின்றது. ‘போனவ பொய் தொலைய வேண்டியது தானே.. இப்போ எதுக்கு இங்க வந்து நல்லவ வேஷம் போடணும்! இதில நான் ஓவரா ரியாக்ட் பண்றேனா?’ 
கோபத்தின் விளிம்பில் அவனிருக்க, மீண்டும் அவன் பின் வந்து நின்றவளின் நிதானமாய் ஒலித்த “கண்ணா”, அவன் எரிச்சலை உச்சத்திற்கே கொண்டு சென்றது.
அவளைப் பார்த்தவன் பல்லைக் கடித்து வரவழைத்த பொறுமையோடு, “இப்போ என்ன?” என அடிக்குரலில் கேட்க
“இப்போ எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம்?”
“உனக்கு தெரியாதில்ல? ஒன்னும் தெரியாத அப்பாவி மாதரி பேசாதா.. அறைஞ்சேன்.. மூஞ்சி முகரை எல்லாம் பேந்திடும்.. இங்க இருந்து போய்டு!”
“இல்ல தெரியல.. நீங்க கோபப்படுர அளவுக்கு என்ன நடந்துதுனு நிஜமா தெரியல! நீங்க கூப்பிடீங்கனு தான், ஒரு ஃப்ரெண்டா.. உங்க கூட பார்ட்டிக்கு வந்தேன். அதுக்காக நான் யாரையும் பார்க்க கூடாதுனு நீங்க நினைக்கரது ரொம்ப தப்பு. இதுக்கெதுக்கு… “
அவள் முடிக்கவில்லை, எங்கோ பார்த்து நின்றவன் அவள் முகம் பார்த்து, கண் நோக்கி, “என்னது? ஃப்ரெண்டா? நான் உனக்கு ஃப்ரெண்டா தெரிஞ்சேனா? நல்ல வேள… அண்ணன்னு சொல்லாம போனியே!  ரொம்ப தாங்க்ஸ்!
தயவு செஞ்சு என் கண்ணுமுன்னாடி நிக்காத.. உன்னால நான் பட்டவரைக்கும் போதும். உனக்கு எதுவும் புரியலனா பரவால.. ஆனா தயவு செஞ்சு என் கண் முன்னாடி இனி மேல் வராத.. உன் டைம் பாஸுக்கு நான் ஆளில்ல!” கோபமா இல்லை வலியா..  அவனுக்கே தெரியவில்லை. 
அவள் முகத்தில் வேதனை எட்டிப்பார்த்துச் சென்றாலும் குரலில் ‘இப்போ என்ன’ என்ற த்வனியே, “இது தான் நான் கண்ணன்! சாரி.. இதுல நான் எங்க தப்பு செஞ்சேனு இன்னுமே புரியல… எப்படியோ உங்க மனசை வேதனை படுத்தியிருக்கேன்னு புரியுது! நிச்சயமா வேணும்னு பண்ணல.. ஆனா இது இனி கண்டிப்பா தொடராது. நமக்கு ஃப்ரெண்ஷிப் செட் ஆகலைனு நினைக்கிறேன்… கண்டிப்பா உங்களை இனி பாக்க வர மாட்டேன். நான் நாளைக்கு சென்னைல இருந்து கிளம்புறேன். சொல்லிட்டு போகாம இருந்தா நல்லா இருக்காதில்ல.. உங்க அம்மாட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன். 
முடிஞ்சா என்னை மன்னிச்சிடுங்க.. நான் இங்க இருந்த நாட்களை ஒரு கெட்ட கனவா நினைச்சுக்கோங்க! பாய்..” கூறிவிட்டு அவள் போய்விட்டாள். அவனுக்குத் தான் எப்படியோ இருந்தது. 
‘என்ன திமிர் பேச்சில்? என்னன்ன பேசிவிட்டாள்?’ என்று ஆரம்பித்தவன் கொஞ்ச நேரத்திர்கெல்லாம், ‘அவள் கெட்டகனவா? என் வாழ்வின் வசந்தம் என்று தானே எண்ணினேன்.. ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாள்..’ என்று எண்ண ஆரம்பித்தான்.
‘கண்டிப்பா உங்கள இனி பாக்க வர மாட்டேன்’ ‘நான் நாளைக்கு சென்னைல  இருந்து கிளம்புறேன்’ தேய்ந்த டேப் ரெக்கார்டர் போல் அதுவே அவன் காதில் ரிங்காரமிட, அவள் முதல் முதலாய் அவனை பார்த்து விழித்த முகம் கண்முன் வர அவன் கோபம் எங்கு போனதோ.. எவ்வளவு முயன்றும் அவனால் அவளை வெறுக்கத் தான் முடியவில்லை. இப்பொழுது வலி மட்டுமே மிச்சமாய் இருந்தது. அவள் முக பாவங்களையே மனது அசை போட்டது. 
எவ்வளவு தான் திமிராக பேச நினைத்தாலும் அவளால் அவள் முகத்திலிருந்த வலியையும் வேதனையும் மறைக்க முடியவில்லை. அவள் கண்கள் அவனிடம் ‘என்னை நம்பு’ என்று கெஞ்சுவது போலவே இருந்தது. ‘இந்த முகமா துரோகம் செய்யத் துணிந்தது?’, ‘இருக்காது’ என்றது மனம்.
‘பின் ஏன்?’ என்ற கேள்விக்குப் பதிலில்லை. பதில் தெரிந்தவளோ இனி இங்கு இருக்கப் போவதில்லை. அவனிடம் எந்த ஒட்டும் உரவும் இல்லாதது போல் பேசி சென்றுவிட்டாள்.
யார் அவன்? அவன் வரவு ஏன் எங்கள் வாழ்வின் திசையை மாற்றவேண்டும்?
வெந்து சிகப்பேறிய முகமும், கழுத்துமே அவனைக் கொல்லாமல் கொல்ல, அப்படியே கட்டிலில் கண்மூடி படுத்துவிட்டான். 
மூடிய விழிக்குள்ளும் அவளே.. கடல்-பச்சை கண் மின்ன.. சிரித்து நின்றாள்!

Advertisement