Advertisement

அவள் அவன் நட்பு வட்டாரத்தோடு இயல்பாய் பொருந்தியது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் மறு பக்கம் கொஞ்சம் நெருடலும். இந்த வகை பார்ட்டி அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குத் திண்ணம்.
சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்தவள், “எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். பொய்ட்டு வந்திடுறேன். மணி ஆச்சு.. பாட்டி இப்போ காள் போடுவாங்க. என்னால சமாதானம் சொல்ல முடியாது, நீங்களே பேசிக்கோங்க.. பேசின பிறகு ஃபோன வாங்கிகுறேன்” கூறிக்கொண்டே சலுகையாய் அவன் ஜக்கெட் பாக்கெட்டில் அவள் அலைபேசியை சொருவிவிட்டு சென்றாள்.
காலையில் பார்த்த சுதாவிற்கும் இப்பொழுது பார்த்த சுதாவிற்குமே நிறைய வித்தியாசம் இருந்தது. காலையில் பைக்கில் பயணிக்கையில் கூட அவன் தோள் தொடத் தயங்கியவள் இப்பொழுதோ உரிமையோடு அவன் டெனிம் ஜாக்கெட்டின் மேல் பாக்கெட்டை திறந்து அவள் அலைபேசியை வைத்துவிட்டுச் சென்றாள்.
“என்ன டா.. வாசலையே பார்த்துட்டு இருக்க?” அவன் தோளில் கை போட்டு அருகில் வந்த வெங்கட்டைப் பார்த்து வெறும் புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்தான்.
அஷோக்கிற்கும் வெங்கட்டிற்குமான பந்தம் வெறும் வார்த்தையில் விவரிக்க முடியாது. பள்ளி படிக்கும் சமயம் ஒரு மாணவனை மற்றொரு மாணவன் தள்ள, அவன் கீழே விழ, அடிபட்ட மாணவன் முட்டியிலிருந்து இரத்தம் வரவும் தள்ளியவன் பயந்து போய் அழ, அடிபட்டவன் தானே  தவறி விழுந்தாய் கூறி தண்டனையிலிருந்து மற்றவனைக் காப்பாற்ற அன்று உதையமானது தான் அஷோக்-வெங்கட் நட்பு. இதில் யார் யாரைத் தள்ளியது என்று கேட்டால் இப்பொழுதும் சிரிக்கவே செய்வார்களே ஒழிய ஒருவன் மற்றவனை கை காட்டமாட்டான். இது நடந்த சமயம் அவர்கள் வெறும் நான்கு வயது சிறுவர்களே. அன்று வெறும் விதையாய் இருந்த நட்பு இன்று வேரூன்றி நன்கு வளர்ந்துவிட்டது.
அஷோக்கை உள்ளும் புறமும் நன்கு அறிந்தவன், “நீ என்ன தான் லவ் பண்ணுரது ஊருக்கே தெரிஞ்சாலும், சுதாட்ட சொல்லுரது தான் சரி. உன்ன உணர்த்தரது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி உன் வாய திறந்து சொல்லவேண்டியதும் அவ்வளவு முக்கியம். சீக்கிரம் சொல்லிடு.. அவ வாயால அவ மனச கேட்டு தெரிஞ்சுக்கோ.. புரியுதா? நீ உன் மனசில ஆசைய வளர்த்துட்டு அப்புறம் நீ அவட்ட சொல்லும்போது நான் அப்படி நினைச்சு பழகலனு சொல்லிடகூடாது..”
“டேய்.. ஒரு பொண்ணு கண்ணுல இருக்க காதல் கூட கண்டுபிடிக்கத் தெரியாத.. அவ என்னை விரும்புராடா..”
“எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். பொய்ட்டு வந்துடுரேன்.” சொல்லிச் சென்றவள் வந்திருப்பாள் என அவன் நினைத்திருக்க அரை மணி நேரம் கழித்து அவளை தேடி பார்க்க அவளோ அங்கில்லை. அவளின் கைப்பேசியும் அவளிடம் இல்லாது போகவே அவளைத் தேடி ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றான். ‘அர மணி நேரமா எங்க போனா? ஹால் தெரியாம முழிச்சுகிட்டு எங்கையாவது நின்னுட்டு இருக்காளா?’ பல சிந்தனையோடு அவன் நடக்க, எதிரில் ஓட்டமும் நடையுமாய் புன்னகை முகமாய் வந்தவள் அவன் கை பிடித்து சுவர் ஓரமாய் நிறுத்த, ‘என்னாச்சு? எங்க போன?’ என்று கேட்க நினைத்தவனிடம், “இவ்வளவு நேரமா என்னைத் தேடி வர? சரி போகட்டும்.. எனக்கு அர்ஜென்டா உங்க ஃபிரெண்டு கிட்ட இருந்து ஒரு கிஃப்ட்ட சுட்டு தரணும்.. இப்போவே!” எனவும், அவனுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.
“என்ன பேசர நீ? எங்க போன இவ்வளவு நேரம்? கிஃப்ட சுடுரதுனா? யூ மீன்… திருடரது?” கேள்வியாய் அவளைப் பார்க்க
“நீங்க வேற நேரம் காலம் தெரியாம.. சொல்லுரத சட்டுனு புரிஞ்சுக்கோங்க! ரெஸ்ரூம் போய்ட்டு வர வழில என்னோட காலேஜ்ல படிச்ச வனஜாவ பார்த்தேன்.. என்னனு கேட்டா இங்க தான் எங்க ஃப்ரெண்ட் பத்துக்கு எங்கேஜ்மென்ட் ஃபங்ஷன்.. என்கூட யூ.ஞில படிச்ச ஃப்ரண்ட்ஸ் நிரைய பேரு வந்திருக்காங்க… என்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரம் அரட்ட அடிசிட்டு கிளம்பிடுவாங்க…”
கால் தரையில் பதிக்க முடியாமல், சிறு பிள்ளை தகப்பனிடத்தில் பலூன் கடை முன் நின்று துடிப்பது போல் நின்றவளைக் கேள்வியாய் பார்த்தவன், “சரி.. அதுக்கு?”
‘ஐய்யோ… இன்னுமா புரியலை..’ என்று பார்த்தவளை, “நீ சொன்னாதான தெரியும்.. முழிக்கரத விட்டுட்டு சொல்லு என்ன வேணும்?”
அவன் அருகில் வந்தவள், அவன் ஜாக்கெட் பொத்தானை சலுகையாய் திருக்கிக்கொண்டே, “எனக்கும் அவ காலேஜ் படிக்கும்போது நல்ல ஃப்ரண்ட்.. அதனால… அவளுக்குக் கொடுக்க எனக்கு கிஃப்ட் வேணும்… நீங்க உங்க ஃபிரண்ட் கிட்ட இருந்து ஒன்ன எடுத்து தாங்க!”
அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை, “எங்க இருந்து உனக்கு இப்படி எல்லாம் தோணுதோ?”
பாவமாய் அவனைப் பார்த்தவளை, “நீ நிஜமாதான் சொல்லுரியா?”
“ம்ம்” என்று மண்டை ஆட்டியவளிடம்
“நீ பட்டன்ல இருந்து கை எடு.. அத இந்த திருகு திருகின பிஞ்சு கையில வந்திடும்! நீ கேஷ் கொடேன். தீடீர்னு தானே தெரிஞ்சுது, யாரும் கிஃப்ட் எதிர் பாக்கமாட்டங்க!”
ஒருவழியாய் அவளுக்கு ஒரு கவரில் பணமிட்டு கொடுத்தவன் அவள் செல்லவிருக்கும் ஹாலின் விபரம் கேட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்திற்குள் வருமாறு சொல்லி அனுப்பினான். “லேட் ஆக்காதா.. போக ரெடி ஆனதும் காள் போடு” என அவள் கைப்பேசியையும் அவளிடம் கொடுத்தனுப்பினான்.
அவளை நினைக்கையில் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. சற்று முன் வரை பார்த்தவள் தானா என்றிருந்தது! ‘எப்பொழுதும் ஒரு சிறுபிள்ளை தனம் இருந்து கொண்டே இருக்கும் போல’ என்று எண்ணிக்கொண்டே அவனிருந்த அறையை நோக்கி நகர்ந்தான்.
அடுத்த ஒரு மணி நேரம் கரைவது தெரியாமல் கரைய, “வெங்கி நான் கிளம்புறேன் டா. பாட்டி காள் மேல காளா போட்டு பாடா படுத்தராங்க. கூட்டிட்டு வந்த மாதரியே பத்திரமா வீட்டு வாசல்ல விடுறேன்னு சத்தியம் பண்ணியிருகேன். அவள தேடி பிடிச்சு கூட்டிட்டு போகணும்.. இப்போ போனா ஒரு பத்தரைக்காது வீட்டுல விட்டுடலாம்.. வரேண்டா..”
கூட்டம் குறைவதாய் தெரியவில்லை. வெங்கடிடமும் மற்ற தோழமைகளிடமும் விடை பெற்று அவள் சென்றிருந்த இடம் தேடிச் செல்ல, அதுவோ வெற்றிடமாய் கிடந்தது. வேலை செய்பவர் ஒரு சிலர் மட்டுமே அங்காங்கே தென்பட்டனர்.
‘எங்க பொய்டா இவ..’ எங்குத் தேடியும் பார்க்க முடியவில்லை. அலை பேசி ‘ஸ்விச்ட் ஆஃப்’ என்றது. மீண்டும் அவன் இருந்த இடத்திற்கே வந்து பார்த்தால் அங்குமில்லை. அங்கிருந்த ஊழியக் காரர்களை விசாரித்தும் பயனில்லை. மணி பத்தை தாண்டி அரை மணி நேரமாகிவிட பதட்டத்தோடு கோபமும் வந்து ஒட்டிக்கொண்டது.. அவன் இதய துடிப்பு அவனுக்கே கேட்டது.
‘எங்க டீ போனா?’ பயம் மனதைப் பிசைய, ‘ரெஸ்ட் ரூம்!’ மூளை எடுத்துக் கொடுத்தது. அங்கு சென்று பார்க்க ‘உள்ளே சுத்தம் செய்வதாயும்… அங்கு யாருமில்லை’ என்ற பதிலே வந்தது. அது சென்னையில் மிக பெரிய ஏழு நட்சத்திர ஹோட்டல். எங்கு சென்று தேடுவது என்பது அவனுக்கு புலப்படவில்லை.
அவளுக்கேதாவது? நினைக்கவே பிடிக்கவில்லை. பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.
நெற்றியை தேய்த்துக்கொண்டு, ‘காத்து பயனில்லை.. நேரம் வீணே போகிறது. ஹோட்டல் மேனேஜர கூப்பிட வேண்டியது தான்.. சி.சி.டீ.வில பார்த்து கண்டுபிடிச்சுடலாம்’ என எண்ணிக்கொண்டு நகரவும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி, “சார்.. ஒரு மேடம் கொஞ்சம் நேரம் முன்னாடி வந்தாங்க.. இங்க சுத்தம் செய்யவே… கீழ இருக்க பாத்ரூம்கு போச்சு சார்..”
“என்ன டிரெஸ் போட்டு இருந்தாங்க?”
“முட்டி வரைக்கும் இருக்குமே அந்த ஃப்ராக் சார்!”
அங்கிருந்த பாதி பெண்களும் அது போல் தானே உடுத்தியிருந்தார்கள்.
‘எதற்கும் அங்கு பார்த்துவிட்டு மேனேஜரை பார்ப்போம்!’ என்ற யோசனையோடு அவன் நடக்க, படி இறங்க வந்தவன் பார்வை தூரத்திலிருந்த ஆள் அரவம் இல்லாத தூண் பின் கருப்பு நிற துணி அசைவது போல் இருக்கவும் கால் தானாய் அங்கு ஓட்டமெடுத்தது. ‘சுதாவாய் இருக்கவேண்டுமே’ என்ற இதய வேண்டுதலுக்கு நடுவில், ‘யாருமில்லாத இந்த இடத்தில என்ன செய்யறா?’ என்ற நெருடல் வேறு!
‘அவளை தேடிய தருணம் மனம் பாடு பாட்டதென்ன..? கண்டதும் வந்து ஒட்டிக்கொண்ட அமைதியென்ன! சொல்லிவிட வேண்டும்.. இப்பொழுதே சொல்லிவிடவேண்டும்.. நீ என்னவள்.. என் இதயம் கவர்ந்தவள்.. நீ இன்றி இனி நான் இல்லை.. என் வாழ்வு நீ தான் என்று சொல்லிவிடவேண்டும். என் சொல்லாத காதலை அவளிடம் ஊற்றிவிட வேண்டும்..’
அவளை கண்ட நிம்மதியில் வந்துக் ஓட்டமும் நடையுமாய் வந்துக் கொண்டிருந்தவன் சிந்தனை முழுவதும் அவள் மட்டுமே.
அவளை மார்போடு அணைத்துகொள்ளும் வேகத்தோடு வந்தவன் அங்குத் தெரிந்த காட்சியில் உறைந்து நின்றுவிட்டான்.
கண்ணகள் தாவராய் கண்டுவிட்டதோ? எத்தனை முறை கண்ணை கசக்கிப் பார்த்தாலும் அதே காட்சி சம்மட்டியாய் இதயத்தில்!
நடை பாதை வளைவில் அவன் நிற்க அடுத்து ஒரு தூண் இருக்க.. அதில் சுதா சாய்ந்திருக்க.. அவள் மேல் சாய்திருந்தான் புதியவன் ஒருவன். உயரமாய்.. சிகப்பாய்.. கோட் சூட் அணிந்து.. பணக்கார களையோடு பார்க்க வசிகராமாகவே இருந்தான்.
அஷோக்கிற்கு அவர்கள் இருவரும் தெரிந்தார்கள். அவள் முகம் தெரியவில்லை. முகம் தெரிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சுதா திரும்பிப் பார்த்தால் தான் அஷோக் தெரிவான். அந்த புதியவன் தலையைத் தூக்கிப் பார்த்தாலே அஷோக் நிற்பது தெரியும்.
அவன் இடது கரம் அவள் இடுப்பைச் சுற்றி இருக்க, வலது கை மடித்து தூணில் பதித்திருந்தான்.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைப்பதும் எடுப்பதுமாய் இருந்தான் புதியவன். அவளிடம் எந்த அசைவுமில்லை. அவள் அவனை எதிர்ப்பதாயும் தெரியவில்லை.
அவள் நெற்றியில் அவன் நெற்றி உரசிக்கொண்டிருக்க அவன் ஏதோ சொல்லிப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
அவளின் முகம் அமைதியாய் இங்கும் அங்கும் அசைய அவன் உதடு அவள் முகத்தில் ஊர்வலம் சென்று கொண்டிருந்ததோ?
இருவரையும் பார்த்தவன் மனம் சுக்குநூறாய் உடைந்தது. பார்த்த கண்கள் ஏமாற்றியதோ? தன்னை சமன் படுத்திக்கொள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டான். அந்த குளிரிலும் வியர்த்தது. ஜாக்கெட்டை கழற்றிக்கொண்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் பொய், தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
‘சுதாவா? என் சுதாவா?’ இதயம் கனத்தது. ஆசையாய் எடுத்ததை யாரோ தட்டிப் பறித்த உணர்வு. நெஞ்சு வெடித்துவிடுமோ? கண்கள் ஈரமானது.
பல போராட்டம் அப்பாவிடம் போராடி வெயிலில் கால் கடுக்க நின்று, ஆசையாய் ஒரு கோனில் ஐஸ் வாங்கி, அதை வாயில் கொண்டு செல்லும் நேரம் யாரோ பெயர் தெரியாதவன் கையை தட்டி விட, ஐஸ் தார் ரோட்டில் விழுந்து கண் முன் உருகுமே.. அப்பொழுது ஐந்து வயது பிள்ளை ஏங்கி நிற்குமே.. அப்படி தான் நின்றான் அஷோக்கும்.
ஒரு ஆண் மகன் பார்க்க விரும்பாத காட்சி.. அவன் உயிராய், உணர்வாய் போனவள் மாற்றான் அணைப்பில் எந்த எதிர்ப்புமின்றி!!
கூர்மையான கத்தி கண் வழியே இதயம் கிழித்த வலி.
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ
உன் வாசல் நிலையும் மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே..  (திரைபட பாடல் வரிகள்)

Advertisement