Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 18
தான் கிளம்பி வருவதாக அஷோக்கிடம் சொல்லிச் சென்ற சுதா வரவை எதிர் பார்த்திருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையே. அவள் வரும் வரை நேரத்தைத் தள்ள வேண்டுமே என இங்கும் அங்கும் நடந்தான். தன்னை அமைதிப் படுத்த பிடித்த புத்தகமொன்றை கையிலெடுத்தவனுக்குக் கவனம் அதில் பதியவில்லை.
இருப்புக் கொள்ளாமல் நடந்தான், அமர்ந்தான், நின்றான்.. நிலைக் கண்ணாடியில் அவன் உருவத்தைப் பத்தாவது முறையாகப் பார்த்தவனுக்கு அவனை அறியாமலே சிரிப்பு வந்தது. காதல் வந்தால் மனம் பதினைந்து வயது சிறுவனைப் போல் துள்ளும் போலும். மீண்டும் தலைமுடியைச் சரி செய்தான். டி.ஷர்ட்டை மேலும் கீழும் இழுத்து விட்டுக்கொண்டான்.
அமைதியாய் சோஃபாவில் அமர்ந்தவன் கைப்பேசியில் விளையாட முற்பட்டு முடியாமல், அதை வைத்துவிட்டுக் கண்மூடி சாய்ந்தான். நிமிடமும் யுகமாய் ‘ஸ்லாத்’ (sloth) வேகத்தில் நகர்ந்தது.
அவனை அதற்கு மேல் தவிக்க விடாமல் சுதா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வர, அவன் மனம் துள்ளிக் குதிக்க, அவன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் தண்ணீர் குடித்துக்கொண்டே, “போலாமா?” என்றான் நிதானமாய்.
“ம்ம்.” என்று அவளுக்கே உரிய ட்ரேட் மார்க் தலையாட்டல் வர, “இரு உனக்கு ஒன்னு வச்சிருக்கேன்” என்று உள் சென்று கொய்யாப்பழம் ஒன்றை அவளிடம் தந்தான்.
அவள் கண் அப்படி விரியுமென அவன் எதிர்பார்க்கவில்லை.
“எனக்கா?” பிடுங்காதா குரையாய் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு பிடித்த பக்குவத்திலிருந்தது. காயுமில்லாமல், முற்றிலும் பழுக்காமல்..
“இது வாசல்ல இருக்க மரத்தோடையது தானே? உங்களுக்கு எப்படி தெரியும்?”
நீ போன தரம் வரும் போது தோட்டகாரன்ட இந்த காய அணில் கடிக்காம பத்திரமா பார்த்துக சொல்லிட்டு போனியே.. அவன் மூலமா தான்”
அவளுக்கு அப்பிடி ஒரு குதுகலம். அதை அப்பட்டமாக முகத்தில் காட்டவும் செய்தாள். அவளின் இந்த பரவச முகத்திற்காகவே அவளுக்குப் பிடித்ததாய் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு!
வாசலில் கப்பீரமாய் நின்றுகொண்டிருந்த பி.எம்.டபிள்யூ-வில் அமர்ந்துக் கொண்டான்.
“என்ன முழிச்சுகிட்டு நிக்குர, வா ஏரிக்கோ”
உரசிக் கொண்டு அமர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மலை போல் அவள் இருக்கை வானத்தைப் பார்த்திருக்கவில்லை. ஓட்டுபவனுக்கும் பின் அமர்ந்திருப்பவருக்கும் வசதியாய் இருக்க ஜம்மென்று பைக்கில் அமர்ந்து கொண்டாள். பின்னிருந்த சாய்வில்  முதுகைச் சாய்த்துக் கொண்டு!
வேகமாகச் செல்லும் பைக்கில் காற்று முகத்தில் அடிக்க மனதிற்குப் பிடித்தவனோடு பயணிக்க யாருக்குத் தான் பிடிக்காது? அவளும் அவனோடு இருந்த தருணங்களை விரும்பியே கழித்தாள். எந்த பிகுவும் இல்லை, எந்த வித அலட்டலும் இல்லை. அவரவர் இயல்பிலேயே இருந்தனர்.
சேர்ந்திருந்த நேரம் அவர்களுக்குள் மாயம் செய்ய, வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ மாட்டோமா என்ற எதிர்பார்ப்பை இருவருக்குள்ளும் தூண்டி விட்டது.
‘நான் உன்னைக் காதலிக்கின்றேன்’ என இருவரும் கூறிக்கொள்ளவில்லை ஆனால் இருவருமே அதை உணர்ந்தனர், உணர்த்தினர்.
உணவகத்தில் உணவை பரிமாறிய பரிமாறுநர் அவள் மேல் உணவை சிந்த, எந்த வித ஆர்ப்பாட்டமும் அவள் செய்யவில்லை. அன்பைப் போலவே மன்னிப்பையும் அனைவருக்கும் அள்ளி தந்தாள்.  
படம் பார்க்க அழைத்துச் சென்றான். முதலில் வயிற்றைப் பிடித்து சிரித்தாள். கூடவே அவனுக்கு தோளில் அடியும் விழுந்தது.
பின் திரையில் அழுபவரைக் காட்டிலும் அதிகமாய் அழுதாள். அவன் சட்டை நனைந்தது. பிஸ்தா பச்சை கருப்பு மை பூசிக்கொண்டது.
படம் பாதி முடியவில்லை, பயத்தில் அவன் கை பின் ஒளிந்து பார்த்தாள்.. இடைவெளிக்கு வெளி வந்தவர்கள் மீண்டும் உள்ளே செல்லவில்லை. ரெஸ் ரூம் கண்ணாடியில் அவள் முகம் பார்க்க, அவளால் முடியவில்லை. திரையரங்கில் வேலை பார்க்கும் பெண்மணி வெளியே அழைத்தும் வரவில்லை. கடைசியாக அவனே அந்த பெண்ணின் உதவியோடு உள் சென்று  அவளை அழைத்து வரும்படியாய் போனது. மை கசிந்து, நாசி சிவந்து, கண் வீங்கி..
அடக்கமுடியாமல் அவன் சிரிக்க.. இம்முறையும் அவனே அடி வாங்கினான். அவளோடு கலந்தாலோசித்து இனி அவளோடு படம் பார்ப்பதில்லை என்ற அறிவுப்பூர்வமான முடிவை எடுத்தான்.
ஷாப்பிங் முடித்து, மதிய உணவை முடித்து வீட்டில் வந்து விட்டவன் மாலை பார்ட்டிக்குச் செல்லவிருக்கும் இடமும் நண்பர் பட்டாளம் பற்றியும் கூறி அவளை அவன் வந்து அழைத்துச் செல்லுவதாய் கூறி சென்றான்.
“வாசல இருகேன்.. வா” அவளிருந்த அழகு நிலயம் முன் நின்று மெசேஜ் அனுப்பினான்.
அவன் சிகப்பு நிற ஆடி ஆர் 8 ஸ்போட்ஸ் காரின் கதவில் சாய்ந்து நின்றுகொண்டு அவன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாலும் மனதில் கொஞ்சமாய் கலக்கம். அவன் செல்லவிருக்கும் கூட்டம் அப்படி.
‘இவளைப் போல் அங்கு வெள்ளை மனம் ஒட்ட முடியுமா?’ ஆனால் அது தான் அவன் நட்பின் வட்டம். அதை மாற்ற முடியாது அவனால். அவளால் அதில் இணைய முடியவில்லையென்றால்?
எல்லாவற்றிக்கும் மேல் அவள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள். இவன் மற்றவர்களோடு பழகும் விதம் பிடிக்காமல் போனால்?  அங்கிருப்பவர் கலாச்சாரம் பிடிக்காமல் போனால்? வருபவர்கள் இவள் உடை.. அலங்காரம் பார்த்து இவளோடு பழகாமலிருந்தால்… மண்டை குடைந்தது.
எது எப்படி என்றாலும் இவனுக்குச் சுதா தான். அதில் சந்தேகமில்லை. எல்லாம் சரியாய் செல்லவேண்டும். ‘அவளுக்கு செட் ஆகணுமே’ என்ற வேண்டுதலோடு வாயிலைப் பார்க்க, படியில் இறங்கிக் கொண்டிருந்தவளை விழுங்கி விடலாமா என்றிருந்தது அவனுக்கு.
முட்டி வரையிலான கருப்பு ‘காக்டெயில் டிரெஸ்’ சரியான அளவில் அவள் வளைவுகளை இன்னும் அழகாய் காட்டிய உடை! மார்பு வரை கண்ணை உறுத்தாத தங்க நிற வேலைப்பாடு.
அதற்கு இணையாய் அவளுக்கே உரியத் தேன் நிற கண்கள். வேலைப்பாடு செய்யப்பட்ட கூந்தல்.
3.4 இன்ச் ஹீல்சில் ‘CK சேண்டில்ஸ்’ அவள் உயரத்தை கூட்டியதோடு அவளையும் ஒரு படி அதிக அழகாய் காட்டியது அதிலிருந்த ‘க்ரிஸ்டஸ்’ கண்ணைப் பறித்தது. அதற்கு இணையாய் கையில் YSL என்று பதிக்கப்பெற்ற ‘பர்ஸ்’.
கழுத்தில் காதில் மின்னிய ‘புல்கரியின் டீவா கலெஷனின் சாண்டிலியர்’ வகை அணிகலன்.
இவை எதுவும் அவளை நடுத்தரவர்கத்தில் நிறுத்தவில்லை.
“ஹாய்..” என்று அழகானாய் புன்னகையை உதிர்த்து நின்றாள்.
கையோடு கொண்டு வந்திருந்த பூக்கொத்தை அவளிடம் நீட்ட அவள் அதை வாங்கவும் அவள் வலது கையிலிருந்த கைக்கடிகாரம் அவன் கவனத்தை ஈர்த்தது.
“நைஸ் வாட்ச்!” எனவும்
“யா.. ஐ க்னோ.. ரைட்.. இட்ஸ் அ கிஃப்ட்..” என்றாள். முதன் முறை அவனிடம் ஒரு முழு ஆங்கில வரி. முற்றிலும் அமெரிக்க வாடை அதில்.
காற்றில் பறப்பதற்காகவே விட்டிருந்த  ஒரு கொத்து முடி நெற்றியில் அசைய அதை ஒதுக்கி விட்ட கையில் வைரம் பிரேஸ்லட்டாய் மின்னியது…
காது, கழுத்து, கைக்கடிகாரம், பிரேஸ்லெட் எல்லாமே ஒரே ‘ப்ராண்டின் கலெக்ஷனைச் சேர்ந்தது’ என்பது அதன் வேலைப்பாட்டிலேயே தெரிந்தது.
எல்லாமே அவளிடம் புதுமையாய் தோன்றியது அவனுக்கு.
“போலாமா?” அவள் சத்தம் கேட்டு சுயநினைவு வந்தவன் மென்னகையோடு, “ரொம்ப அழகா இருக்க!” எனவும்
“பூவோடு சேர்ந்து நாரும் மணக்குது” அவளும் புன்னகைத்தவாறே சொல்ல, அவனுக்குத் தான் பொருள் விளங்கவில்லை.
புரியாமல் புருவம் சுருக்கியவனைப் பார்த்து, “ஒண்ணும் இல்ல.. நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்கனு சொன்னேன்.. போலாமா?”
காரில் பயணித்தவன் மனதில் கலக்கம் எட்டிப் பார்த்தது. கலக்கத்திற்குக் காரணம் அவள் போட்டிருந்த அணிகலன்களின் ‘ப்ராண்ட்’. அவள் மேலிருந்து வந்த மனதை மயக்கும் மணம். அதன் விலை அவனாய் ஊகிக்கமுடிந்தது.
கார் வேகமெடுக்க அதற்கு நிகரான வேகத்தில் அவன் மனமும் ஓட ஆரம்பித்தது.
அவன் மாமா வைர வியாபாரி என்பதால் வைரங்கள் அவனுக்குப் புதிதல்ல. அவள் கழுத்திலும் காதிலும் கையிலும் உள்ளது மட்டுமே கோடியைத் தொட்டிருக்கும் என்பது நிச்சயம். கேட்டுவிடலாமா என்று தோன்றிய சிந்தனையை, தவராகிவிடும் என்று உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டான்.
பாட்டியிடம் அப்படி எல்லாம் வசிதி இல்லை. கைக்கும் வாய்க்கும் சரியாயிருக்கும். அவளைப் பற்றி இன்னும் தெரியவில்லையோ? பெற்றோருக்கு அவ்வளவு வசதியா? அவள் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே..
இவ்வளவு மதிப்புக்குரிய பொருளைப் பரிசளிக்கக் கூடியவர் யார்? அவ்வளவு நெருக்கமாய் ஒருவர் உண்டென்று அவள் கூறியதே இல்லையே..
கேட்டிருக்கலாம்.. அவளைப் பற்றியும் அவள் வசதி, தேசம், வீடு, என எதையாவது கேட்டிருக்கலாம்..
சுதாவின் வாயாவது சும்மா இருப்பதாவது? பேச ஆரம்பித்தாள்.. அவன் சிரிக்க மனம் அமைதியடைய.. அவன் கலக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
சேர வேண்டிய ஏழு நட்சத்திர ஹோட்டல் வரவும், இருவருமாய் அங்கிருந்த பல அறைகளைத் தாண்டி அவர்களுக்கான அறையினுள் நுழைய, அங்குப் பெரிய கூட்டமே இருந்தது.
அவனைப் பார்த்த அவன் நண்பர் கூட்டம், “டேய் மச்சான்.. “, “பாஸ்”, “மாப்பிள்ள..” என்று அவன் பெயரைத் தவிர மற்ற எல்லா வார்த்தையாலும் அவனைக் கட்டி தழுவி வரவேற்றனர்.
“என்ன டா.. இந்த ஊர் தானே.. ஆளே பாக்க முடியரது இல்ல..” என ஆளுக்காள் புகார் வாசிக்க
“டேய் டேய்… அடங்குங்கடா.. வெங்கட் எங்க?”
அவன் கேட்கவும், “இங்கே உள்ளேன் ஐயா!” என் அவன் தோளில் கைபோட்டுக்கொண்டு வந்து  நின்றான். வெள்ளை பணியாரம் போல் பால்வடியும் முகமாய் வெங்கட்.
வந்து நின்றவனை நலம் விசாரித்துவிட்டு, அருகிலிருந்தவளைக் காட்டி, “வெங்கி இவங்க தான்..” அவன் முடிக்கவில்லை, அதற்குள் ஒரு கூட்டம், “சுதா..” என கோரஸ் பாடியது!
வெங்கட்டை அவன் திரும்பிப் பார்க்க, “நான் இல்லா டா.. எல்லாம் இந்த வாணி பிசாசு செஞ்ச வேலை. இவ கேட்டாளேனு நீ உன் ஃபிரெண்ட் சுதா கூட வரதா சொன்னேன்.. அவ தான் ஊர் பூரா தம்பட்டம் அடிச்சிருக்கா!”
ஜுஸ், சிற்றுண்டி, டிரிங்க்ஸ் என ஒன்றன்பின் ஒன்றாய் வர, அவர்களுக்கான வட்ட மேஜையைச் சுற்றி அமர்ந்தனர். அவளும் இயல்பாய் பொருந்திக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம், “வா சுதா எங்களோட.. நாம புப்பேல இருக்க ஃப்ரூட் சாலட் சாப்பிடலாம்..” ஒருத்தி வந்து அவளை இழுக்க, அவன் முகத்தை பார்த்துவிட்டே சென்றாள்.
அவளுக்கென்று ஒரு கூட்டமும் கூட, பேச்சும் சிரிப்பும் அவளைச் சுற்றி களைகட்டியது.
அங்கிருந்த பல பெண்களின் கண்கள் அவனை மொய்க்க, அவன் அதை மதித்தால் தானே. அதை அவள் கவனிக்கத் தான் செய்தாள். ஊரெலாம் அவனைப் பார்க்க, அவன் பார்வையோ ‘சுதா’ என்னும் பாவைமேல் இருந்தது.

Advertisement