Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 11
காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது ஆரல்வாய்மொழி,  காற்றாலை மின்சாரத்திற்கு தமிழகத்தில் பெயர்பெற்ற இடம்.
கார்த்திக் சென்று கொண்டிருந்த பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை எட்டியிருந்தது
சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைக் கவரும் காட்சி! பச்சை வயல் வெளியும் அதன் மேல் பறக்கும் வெள்ளை கொக்குகளும். அந்த அழகிய ஓவியத்திற்குப் பின்னணி படமாக மங்கலான மலைத்தொடர்.
மனதிற்கு ரம்மியமான காட்சி. எத்தனை முறை கண்டாலும் அலுக்காது. கார்த்திக்கின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில். அம்மா, அப்பா, தங்கை என அழகான குடும்பம்.
கார்த்திகை விட இரண்டு வயதே சிறியவளான அவன் தங்கையை இன்று பெண்பார்க்க வருகின்றனர். அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்… ஏனென்றால் மாப்பிள்ளை வெளியூரில் இருக்க, பெண்பார்க்கும் படலம் மட்டும் தான் மிச்சம். மற்ற திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பித்தாகி விட்டது.
ஜான்சி ராணி, அவன் தங்கை.
அவள், ஜான்சியை ஆண்ட ராணி லஷ்மிபாய் போன்று   தைரியமாய் இருக்க வேண்டும் என்று அவள் அப்பா சூட்டிய பெயர்.
தேவசகாயம் – சாந்தா தம்பதியர் இருவரும் அரசு கல்லூரியில் தலைமை பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். போதுமான வசதி வாய்ப்போடு அளவான அமைதியான குடும்பம்.
கார்த்திக் காலை ஆறு மணிக்கு வந்துவிட, அவன் எதிர்பார்த்தற்கு மாறாக வீடே கோலாகலம் பூண்டிருந்தது. காலை ஒன்பது மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் வரவிருப்பதால் இந்த பரபரப்பு.
அவன் வீட்டில் நுழைந்ததும், ஓடி வந்து பேட்டியை வாங்கும் தங்கை மிஸ்ஸிங். சில மாதமாகவே இப்படி தான்.. காரணம் அவன் அறியாமல் இல்லை. அவனால் அதற்கு ஒன்றும் செய்ய இயலாதென்பதால் அதை கண்டுகொள்வதில்லை.  
வீட்டில் நுழைந்தவன், வந்திருந்த நெருங்கிய சொந்தங்களுக்கு ‘ஹாய்.. ஹல்லோ..’ சொல்லிவிட்டு காலை கடன்களை முடித்து, காப்பியோடு மொட்டை மாடிக்குச் சென்றான். ஒரு தளம் மட்டுமே உள்ள அழகான கேரள பாணியில் கட்டப்பட்ட வீடு.  மாடியில் புதிதாய் போடப்பட்டிருந்த தனி அறை ஒன்று.
வீட்டின் முன்னும் பின்னும் ஒன்றிரண்டு மா, பலா, வாழை மற்றும் தென்னை.
எதிர்பார்த்து வந்தது போலவே மாடி கைச்சுவரில் அவன் தங்கை. கால்கள் கைச்சுவரை சுற்றி கேரள பாணியில் வேயப்பட்ட சிகப்பு ஓடுகளில்.
அமைதியாய் அவள் அருகில் அவளைப் போலவே வந்து அமர்ந்து கொண்டான். அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
கார்த்திக், “காபி குடிச்சியா?”
வானத்தை வெறித்துக் கொண்டே, “ம்ம்” என்ற பதில் மட்டுமே.
“பேச மாட்டியா?”
“இனி பேச என்ன இருக்கு..”
“ஏன் ராணி இப்படி பேசர?”
“பச்.. ஒன்னும் இல்ல விடு ண்ணா.. அது தான் நான் பாரமா இருக்கேன்னு என்னை தொரத்தறீங்களே… இனி என்ன இருக்கு பேச?”
தோளோடு அணைத்துக் கொண்டான்.
“நீ அண்ணனை நம்பணும் ராணி.. நீ தான் எங்களுக்கு எல்லாமே.. நல்ல இடம் அதனால தான் டா.. புரிஞ்சுக்கோ..”
“ம்ம்.. புரிஞ்சுகிட்டேன்!” விரக்தியான பதில்.
“என்ன பதில் டா இது?”
“நொண்டிய யாரும் கட்டிக்க மாட்டங்கனு கிடச்சவன் தலைல கட்ட பாக்கரதானே… அப்போ தான் உனக்கும் செட்டில் ஆக முடியும்? அப்படி தானே?”
இப்படி எல்லாம் பேசுபவள் இல்லை. என்ன சொல்லியும் யாரும் அவள் வார்த்தை கேட்டவில்லை என்ற எரிச்சலை அவனிடம் காட்டி கொண்டிருக்கிறாள். அவனுக்கு அது தெரிந்ததால் கோபம் வரவில்லை. மாராக இன்னும் இருக்கமாய் அவள் தோளை அணைத்து கொண்டான்.  
கண்ணில் நீர் கோர்க்க, ‘ண்ணா.. ப்ளீஸ்’ என்பது போல் அவனைப் பார்க்க.. அவன் மனம் பதறியது. நடப்பது சரியாய் நடக்க வேண்டுமே என்றிருந்தது. அவன் உயிருக்குயிரான தங்கை.. அப்படி எல்லாம் கண்டவன் கையில் ஒப்படைப்பானா என்ன?
அவன் ஒன்றும் பேசவில்லை. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவள் நிலை புரிகிறது ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை.
காலில் முள் தைத்துவிட்டால், அதை அப்படியே விட்டுவிடுவதில்லையே.. வலித்தாலும் பிடுங்கித் தானே ஆக வேண்டும். ராணிக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தரவேண்டியது குடும்பத்தின் பொறுப்பாயிற்றே.. அவளுக்கு வலித்தாலும்!
அவள் ரோட்டை பார்த்துக் கொண்டிருக்கும் வேளை அவர்கள் வீட்டைத் தாண்டி சென்றது ஒரு வெள்ளை டாக்ஸி.
பத்து நிமிட பயணத்திற்குப் பின் அது ஒரு பெரிய வீட்டின் முன் நிற்க..
“அம்மா அண்ணா வந்தாச்சு” வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டுக் குதித்தாள் அனித்தா, டேனி எனப்படும் டேனியலின் ஒரே தங்கை. இருவருக்கும் பதினோரு வயது வித்தியாசம்.
கனனி பொறியியல் முடித்து இரண்டு வருடம் இந்தியாவில் பெரிய மென்பொருள் நிருவனத்தில் பணிபுரிந்து, அமேரிக்கா சென்றவன் இன்று திருமணத்திற்காக மூன்று வார விடுப்பில் வந்துள்ளான்.
ஓடி வந்தவள் அண்ணன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, அவளை ஒரு கையில் தூக்கிக் கொண்டு மரு கையால் பெட்டியை இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
“எக்க (என்னுடைய) பொன்னுமோனே (தங்க மகனே) வா… தாழ (கீழ) இற..க்க்கி விடு. இறங்கு டி குட்டி (சின்னவளே)” என்று மகனுக்கும் மகளுக்கும் ஒன்றாய் கூறிக்கொண்டே டேனியிம் வந்தவர்
(கன்னியாக்குமரி மாவட்டத்தின் பேச்சு வழக்கு தமிழ் புரிந்து கொள்வது கடினமென்பதால்,   சென்னை தமிழில் தொடர்கிறேன்!)
“அனி.. இன்னும் என்ன சின்ன குழந்தைனு நினைப்பா?” அம்மா மகளைக் கடிந்து மகனை தன் உயரத்திற்குக் குனியவைத்து உச்சி முகர
அம்மாவை அணைத்து விடுவித்தவன், “ம்மா.. எப்பவும் எனக்கு அனி சின்ன குட்டி தான் மா..”
“இன்னும் ஒரு வாரத்தில உனக்கு கல்யாணம்.. இவள கொஞ்சுரத அவ பார்த்தா.. தேவ இல்லாத ரகளை தான் நடக்கும். வயசு ஏற ஏற நம்ம நடவடிக்கைலயும் மாற்றம் இருக்கணும். அடுத்தவங்க கண்ண உறுத்தர மாதிரி நடந்துக்க கூடாது. புரியுதா?”
“மா.. விடுங்க மா.. காலைலயே லெக்சரா?” அனி முகம் சுளிக்க
“நீ வா டா என் செல்லக் குட்டி” என அவளை அவன் அருகில் அமர்த்திக் கொண்டான்
அனி, “கண்ணு உருத்தரவங்க எங்களைப் பாக்க வேண்டாம்!”
அம்மா, “வாய் பேசாத! வாய்லயே அடி விழும்!”
டேனி அம்மாவை கொஞ்சும் விழியில் ‘மா.. ப்ளீஸ்’ என டேனி பார்க்கவும்
“அது தானே.. அவன பார்த்திடக் கூடாது, தல மேல ஏறிடுவா.. அவ கெட்டு போராதே இவன் குடுக்கர செல்லத்தால தான்.” முணுமுணுத்துக் கொண்டே மகனுக்குக் காபி கலக்க உள்சென்றார்.
டேனி, “அம்மா.. அப்பாவ எழுப்புங்க! சொல்லு டா நீ.. ஸ்கூல் எப்படி போகுது?” வீட்டினரோடு பேச்சு ஆரம்பித்தது.
இரண்டு வருடம் முன் தன் தங்கை விசேஷதிற்கு இரண்டு வார விடுமுறைக்கு வந்தவன், இப்பொழுது தான் மீண்டும் இந்திய மண்ணை மிதிக்கிறான்.
வீட்டின் செல்லப் பிள்ளை. அவனின் பதினோராவது வயதில் தான் அனி பிறந்தாள். சின்ன சின்ன விரல்களும் சிவப்பு மேனியும்.. அவளைப் பார்த்ததும் அவளிடம் சரணடைந்தவன் தான். தங்கை சொல் தட்டாதவன். அவளும் அப்படி தான்.. அண்ணன் தான் அவள் எல்லாம்.
திருமணமாய் நான்கு வருடத்திற்கு பின் பால்ராஜ்- ஷாலினிக்கு கடவுள் கொடுத்த வரம் டேனியல். எத்தனை மகவு பெற்றாலும் பால்ராஜ்-ஷாலினிக்கு டேனி தான் உலகம். கண்ணுக்குள் வைத்து வளர்த்திருந்தனர்.
அவர்களுக்கு அப்படி எல்லாம் வசதி இல்லை. பால்ராஜுக்கு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள். பெற்றவர்கள் இருந்தாலும் குடும்ப சுமை அவர் மேல். கூட பிறந்தவர்களின் கடமைகளை முடிக்கவே கடன் படவேண்டியதாய் போயிற்று.
பால்ராஜ் கீழ் நிலை அரசு ஊழியர். ஷாலினி, தனியார் மேல் நிலை பள்ளியில் கணக்கு ஆசிரியர்.
மகன் திறமை அறிந்து, தங்கள் தகுதிக்கு மீறின படிப்பையே மகனுக்கு கொடுத்தனர். கல்லூரியும் அப்படியே. டேனியும் பெற்றோர் கஷ்டம் உணர்ந்து நன்கு படித்து கேம்பஸ்சில் தேற்சியடைந்தான்.
கல்வி படிப்பு திருச்சியிலும், வேலையின் முதல் இரண்டு வருடம் சென்னை, பின் அமேரிக்காவிலுள்ள வெஸ்ட் வெர்ஜினியாவை சேர்ந்த ரிச்மண்டிலும்.
பத்து வருடமாய் வந்து போவது மட்டுமே அவன் வழமையாய் போனது. மகன் என்ன செய்தாலும் தடை சொன்னதில்லை. அருகிலோ தூரத்திலோ குடும்பத்தில் உள்ளவர் இதயங்கள் அன்பால் பிணைந்திருந்தது.
டேனியின் உழைப்பால் இன்று குடும்பத்தில் நல்ல வசதி வாய்ப்பு. வாடகை வீடு மாறி நான்கு கிரவுண்டில் நடுவில் நான்கு படுக்கையறை வீடு, ட்.வி.எஸ் 50 இடத்தில் ஹாண்டா சிட்டி! தங்கையை தங்கத்தில் குளிபாட்டும் அளவிற்கு நகை! மகனின் வளர்ச்சியில் பெருமையே.
“டேனி அவ கூட கத அடிச்சது போதும்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. காலைல ஒன்பது மணிக்கு வரதா சொல்லி இருக்கோம்” என்று அவன் கையில் மணக்க மணக்க ஃபில்டர் காபியை கொடுத்தார் ஷாலினி.
“அனி, அண்ணா ரெஸ்ட் எடுக்கட்டும். அவனுக்குப் பயண களைப்பு இருக்கும். கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரிகட்டும்.”
எழுந்து போக இருந்தவளை, “எனக்குத் தூக்கம் வரல மா… அனி அந்த பெட்டியை எடுத்திட்டு ரூம்க்கு வா டா.. நீ கேட்டதை வாங்கிட்டு வந்திருக்கேன் பிடிச்சு இருக்கானு பாரு” என்று ஒரு கையில் காபியும் மறு கையில் பெட்டியுமாய் அவன் அறை நோக்கிச் சென்றான்.
அண்ணனும் தங்கையுமாய் கொண்டு வந்தவற்றைக் கடை பரப்ப, கொண்டு வந்த சாமான்களை பட்டுவாடா செய்து முடித்தான்.
இப்பொழுதெல்லாம் இங்கேயே எல்லா வகை பொருட்களும் வாங்கக் கிடைத்தாலும் அண்ணன் கொண்டு வந்த பொருட்களுடனும் மிட்டாய்களுடனும் பள்ளியிலுள்ள தோழர்கள் மத்தியில் அலப்பறை செய்வதில் வரும் மகிழ்ச்சியே தனி!
ஒருவழியாய் அவனைத் தனியே விட்டு அனைவரும் அவரவர் வேலையில் ஈடுபட, தனியே விடப் பட்டவனின் கண்கள் அவன் வருங்கால மனைவிக்காய் வாங்கி வந்த பரிசுப்பொருளில் நிலைத்தது.
திருமணம் நெருங்கிவிட்டாலும் மணப்பெண்ணிடம் இன்னும் பேசவில்லை. அவளிடம் மணிகனக்காய் பேசுவதற்கென்றே புது மாடலில் ஒரு கைபேசி. திருமணம் முடிந்த பின் அவளிடம் கொடுக்க வாசனை திரவியம்!
பரிசுப்பொருளை கையில் எடுத்தவனுக்கோ முகமெல்லாம் புன்னகை. அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். அவள் சத்தத்தை கேட்கும் பேராவல்.
அவளும் இதே மனநிலையில் உள்ளாலா என்பது கேள்வி குறியே!

Advertisement