Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே – 00

என்றோ ஒரு நாள்… இன்றிலிருந்து சில மாதங்களுக்கு பின்…

“என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…”

காரில் மனதை வருடும்படி இதமாய் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அதை அவன் ரசித்து கொண்டிருக்கிறான் என்று அவன் உதடசைவு காட்டியது. முகத்தில் ஒரு வித கர்வம்.. கிடைக்க அரிதான வெற்றி பதக்கத்தை வென்றுவிட்டது போல.. அவன் வென்ற கோப்பை அவனருகில்.. ஆழ்ந்த நித்திரையில்.  

சாலையைப் பார்த்து ஓட்டிகொண்டிருந்தாலும் அவன் கண் அவ்வப்போது அருகில் உறங்கி கொண்டிருந்தவள் மேல் தழுவி சென்றது. அவன் உயிராய் உணர்வாய் போனவள்.

அவன், வீட்டின் செல்ல பிள்ளை. எப்படி கேட்டும் திருமணத்திற்கு சம்மதியாதவன், வயதிர்கேற்ற கேலி கிண்டல் இருந்தாலும் எல்லையை தாண்டாத குரும்பு மட்டுமே. பெண்களை ஈர்க்கும் காந்த சக்தி இயற்கையிலேயே அளவிற்கு அதிகமாய் கொட்டிகிடந்தது அவனிடம். ஆனால் பெண்களிடம் சினேகிதம் மட்டுமே!

இவளை காணும் முன் வரை யாரும் அவனை ஈர்க்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து, பழகி, புரிந்து கொண்டு பின் காதல் அரும்பி, அலுக்கும் வரை காதலித்த பின்பே திருமணம் என்ற கோட்பாடு தவிடு பொடி ஆனது இவளை கண்ட அன்றே. கண்டதும் காதல்! காதல் அரும்பிய வேகத்தில் வளரவும் செய்தது. வெரும் சில மாத காதலே!! ஆனால் என்ன மாயமோ ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை என்ற நிலை இன்று.

“என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்”

பாடல் வரிகளை அவளுக்காய் அவனே எழுதிய உணர்வோடு அதை ரசித்துகொண்டே அவனும் சேர்ந்து பாட

“உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்” என்ற வரி வரவும் உறங்கிகொண்டிருந்தவள் அவள் இனிமையான குரலில் பதில் கொடுக்கவும், இன்ப அதிர்ச்சியே அவனுக்கு.

புருவம் உயர்த்தி தலையை திருப்பி அவளை ஆவலாய் பார்க்கவும்,

“கழுத்து சுளுக்கிக்க போகுது ரோட்ட பார்த்து ஓட்டுங்க” கண்கள் திறவமாலே சொன்னவளை பார்த்து,

“ஓய்.. நீ தூங்கிட்டு இருக்கனு நினைச்சேன்..”

“ம்ம்.. நீங்க திறந்து விட்ட அருவி என்ன எழுப்பிடுச்சு..” அழக்காய் சிரித்துகொண்டே கண்ணை திறந்தவள் கண்களில் அப்படி ஒரு தூக்க கலக்கம்.

அவள் சென்னைக்கு வந்து சில காலமே ஆகிரது. வந்த இருதினங்களிலேயே அவனை பார்த்துவிட்டாள். பார்த்ததும் வழுக்கி அவன் கையில் விழ இருவரும் ஒன்றாய் காதல் கடலில் தொபுகடீர் என விழுந்தது தான்… இன்னும் அதிலிருந்து மீளவில்லை.  

ஏன், எதற்கு, எப்படி இந்த காதல்? இருவருக்கும் தெரியாது… இன்று வரை காதல் கசக்கவும் இல்லை தெவிட்டவும் இல்லை!

இப்படியே காதல் கடலில் வாழ் நாள் முழுவதும் நீந்தி கொண்டே ஒன்றாய் காலம் கடக்கலாமென அவர்கள் பகற்கனவு காண.. அது சற்று நேரத்தில் உண்மையிலேயே பகல் கனவாய் மாற போவது தெரியாமல் காரை நிரப்பியது அவர்கள் சிரிப்பலைகள்.

கீழ்வானத்தில் சிகப்பு முற்றிலும் தெரியாதிருக்கும் வண்ணம் கருமேகம் ஆங்காங்கே கூட்டம் கூடி இருக்க, சூரியன் மிக சிரமப்பட்டு அதனுள்ளிருந்து  எட்டி பார்க்க ஆரம்பித்தது.

வீதியின் இருபுறத்தையும் ஆக்கிரமித்த சரக்கொன்றையின் மஞ்சள் மலர்கள், இரவு மழையால் வீதியை அலங்கரித்திருந்தது.

தன் வரவிற்காகவே  சாலையில் மஞ்சள் கம்பளி விரிக்கப்பட்டது போல சொகுசு கார் ஒன்று அவர்களை சுமந்தவண்ணம் சீறீப்பாய்ந்து, தன் முன் காய்கறிகளை சுமந்து வேகமாய் சென்று கொண்டிருந்த ‘திறந்த சரக்கு வண்டி’யை(டெம்போ வேன்) தாண்டிச் முன் சென்றது.

நான்கு வீதி சந்திப்பில் மஞ்சள் விளக்கு போடப்பட்டதும் கார் சட்டென்று அதன் வேகத்தை குறைத்து ‘ஸ்டாப்’ கோட்டின் முன் நிற்க, பின் வந்த சரக்கு வண்டி, கார் சென்ற வேகத்திற்கு அது நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும். ‘டமார்’ என்ற சத்தத்தோடு இடித்து அதை ஐந்து அடி முன் தள்ளிவிட்டு நின்றது.

வலது பக்கம் ஒரு திருப்பமும், இடது பக்கம் ஒரு திருப்பமும் இருக்க, இவன் வாகனம் இடிவாங்கியதும், நேரே சென்று நடு ரோட்டில் நின்றிருந்தது.

காரின் இடது புற ஜன்னல் கீழிரங்க அந்த இளம்பெண்ணின் தலை வெளிவந்து மறு விநாடி உள் சென்றது. ஓட்டுனர் கதவு திறக்கப்பட்டது.

உள்ளிலிருந்து இறங்கியவன் ஆறடிக்கு சற்று அதிக உயரம். உயரத்திற்கேற்ற கம்பீர உடலமைப்பும், பண செழுமையின்  பளபளத்த தேகமும் பார்பவரை ஈர்க்க தவராது. மேல்தட்டு வர்கத்தை சேர்ந்தவன் என்று முகத்தில் எழுதி ஒட்டியது போன்ற தோற்றம்.

வாகனத்தை பார்வையிட்டவன், தரமான வாகனம் என்பதால், சிறு சிராய்ப்புகள் மட்டுமே காணப்படவும், ஒரு கையால் கண்ணிலிருந்த கருப்பு கண்ணாடியை கழட்டி கொண்டு, உரமேரியிருந்த மற்ற கையாயால் அடர் கேசத்தை கோதி கொண்டே சரக்கு வண்டி ஓட்டுனரை தனது ஊடுருவும் பாரவையாய் கீலி பரவ செய்தான்.

நடப்பதை ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துகொண்டிருந்தது இரு கண்கள். கண்களுக்கு சொந்தகாரன் இடது பக்க சாலையில் ஒரு ஓரமாய் தள்ளி நின்றிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையில்!

பழம் நழுவி பாலில் விழுந்த நிலை அவனுக்கு. முகத்தில் வியர்வை, பார்வையில் கொடுரம், இதழில் ஏளன சுழிப்பு. ஏதோ முடிவுக்கு வந்திருப்பான் போல.. கண்களில் வேட்கை தீவிரம் ஆக, கை லாரியின் ‘கியரை’ மாற்றியது!

பயத்தில் வியற்வை சொறிய அமர்திருந்த சரக்கு வண்டி ஓட்டுனரை வெற்று பார்வை பார்த்துவிட்டு மீண்டும் காரினுள் சென்று கதவை மூடுமுன் இடது பக்கத்திலிருந்து இவன் வரும் தருணத்திற்காகவே காத்திருந்தது போல லாரி, காரின் வயிற்றை நோக்கி தன் முழுவேகத்தில் பாய்ந்து வர ஆரம்பித்தது.

ஒரு கால் மட்டுமே காரினுள் இருக்க, அவளிருந்த பக்கமாய் வந்துகொண்டிருந்த லாரியை அவன் பார்த்துவிட, நடக்க இருக்கும் விபரீதமும் அதனால் அவளுக்கு நேரவிருக்கும் சேதமும் அவனை நிலைகுலைய செய்தது.

லாரியை கண்டு அவன் கண்கள் விரியுமுன்னே.. அந்த ஷண நேரத்தில்.. அவன் கண்முன்னே.. லாரி காரின் வயற்றை இடித்து மோதியது!

அவன் ரோடின் மறுபக்கம் வீசி எறியப்பட்டான். ரோட்டை தேய்துகொண்டே போனவன் உடல் அங்கிருந்த கம்பதில் இடித்து நின்றது!  எல்லாம் நொடிபொழுதில் நடந்து முடிந்தது.

ரோட்டில் அந்த மூன்று வாகனம் தவிர வேரு வாகனம் இல்லாது போகவே, அங்கிருந்த இரண்டு வாகனமும் இருந்த சுவடு தெரியாமல் மறைந்தது.

கீழே கிடந்தவன் தலையிலிருந்து இரத்தம் ‘குபு குபு’ என்று ரோட்டை நனைத்தது. அவனருகில் தேங்கியிருந்த மழை நீர் இரத்த குளமாய் மாறிகொண்டிருந்தது.

அவன் கண்கள் காரின் பக்கம் நிலைத்து நிற்க, காரினுள் அமர்ந்திருந்தவள் இரத்தத்தால் தோய்க்கபட்டு அசைவற்று இருந்ததைக் கண்டான்.

அவளால் இம்மிகூட அசைய முடியவில்லை. கைகள் கால்களை அசைக்க முடியாத வண்ணம் செயலிழந்து  போயிருந்தது. அவன் பக்கமாய் திரும்பி இருந்த தலையை அசைக்க முடியாமல் அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்… அவனிடம் ஒரு அசைவும் தெரியவில்லை. அவனை காண காண அவள் நெஞ்சு இறுகி வலியை அதிகபடுத்தியது.

“முன் காலத்துல ‘அன்றில்’னு ஒரு பறவை இருந்துதாம். ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் பிரிஞ்சு வாழவே வாழாதாம். தூங்கும் போது கூட பிரிஞ்சு இருக்காதாம்! அப்படியே.. ஒண்ணு மாட்டும் இறந்து போனா, அதோட துணை பறவையும் தன்னோட  உயிர விட்டுவிடுமாம்! நான் கூட அப்படி தான்.. உன்னை பிரிய நேர்தா அதுக்கு முன்னாடி என் உயர் பிரிஞ்சுடும்! உன்னோட மூச்சுல தான் என் உயரே இருக்கு தெரியுமா?”

அவன் கூறிய வரிகள் அவள் இதயத்தை கிழித்து, மூச்சு குழாயை அடைத்தது.. ‘நானும் அப்படி தான்.. நான் கூட உங்க அன்றில் தான்! நீ இல்லாமல் போனால் நான் இல்லை’ அவள் மனம் பறைசாற்றியது.

வலியால் கண்கள் மடை திறக்க, நெற்றியில்  வழிந்த இரத்தம் அவள் கண்களை தொட, அவனை, இரத்த வெள்ளத்தில் அசையாமல் படுத்திருந்தவனை,  பார்த்த வண்ணம் அவள் கண்கள் மூட ஆரம்பித்தது.

அசைவற்று அமர்ந்திருந்தவளை அவனால் அந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. இரத்ததில் குளித்திருந்தாள். எந்த அசைவுமே அவளிடத்தில் இல்லாதது அவன் உயிர் அவனை விட்டு போனது போன்ற உணர்வை அவனுள் கொடுத்தது.

சிறுது நேரத்தில் அவளையே பார்த்திருந்தவன் கண்களும் தானாய் மூட.. காணகூடாத கோர காட்சியை கண்டது போல சூரியன் கருமேகம் பின் ஒளிந்து கொள்ள, மேகங்கள் வானத்தை மூட பலமாய் இடி இடிக்க ஆரம்பித்தது.

“நாம் பழகிய ஒருவரை மறப்பதற்கு ஒரு ஆயுசு காலம் ஆகும்” என்பது ஒரு கணிப்பு.. அதுவே ‘அந்த ஒருவர்’ காதலித்வராய் இருந்தால்? அவர் உருவம் இதயத்தில் புதைந்து அணுவில் கலந்திருந்தால்? இதை எதையுமே உணராமல் மற்றவர் இருந்தால்?

இது தான் “சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே..”

Advertisement