Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 7
நாட்கள் சுதாவிற்கு நகர மருத்தது. அஷோக்கை என்ன தான் மறக்க நினைத்தாலும், எவ்வளவு வேலைகளை இழுத்து வைத்து கொண்டாலும், எல்லா வேலைகளின் நடுவிலும் ‘அவள் பனை மரம்’ அவள் மனதை அரித்துக்கொண்டே இருந்தான். நினைக்கக் கூடாதென்று நினைக்க நினைக்க அவன் நினைவில் மூழ்கினாள். அதுவே பெரிய அவஸ்தையாய் மாற ஆரம்பித்தது.
மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டால் பித்தம் தெளியலாம் என்று சமாதானம் செய்துகொண்டாள். பார்க்கவேண்டும் என்ற உந்துதல், இனம் புரியாத ஆர்வம். ஆனால் ‘எப்படி’ என்ற தயக்கம்.
பொறுக்கமுடியாமல், “பாட்டி.. அன்னைக்கே உங்க கண்ணனைப் பாக்க முடியல.. அவன் அம்மா ‘சுசிலா’.. அவங்களையும் பார்த்திட்டு வரலாமா? எனக்கு வீட்டுல ரொம்ப போர் அடிக்குது!” என்று அவர் முன் நின்றாள்.
புதிதாய் வந்த பழக்கம், மனதிலுள்ளதை மறைத்துப் பேசுவது, இனி அழையா விருந்தாளியாய் பொய் நாவும் சேர்ந்து கொள்ளும். ஆனால் இதெல்லாம் தவறென்று உணர்த்தவேண்டிய பாழாய்ப் போன மனதோ எப்பொழுதும் எதிலோ லயித்தே இருக்கும்.
“அவங்க ரெண்டு பேரும் இப்போ எல்லாம் அதிகம் வீட்டில இருகதுல்ல கண்ணு! கொஞ்ச நாளா அவ அப்பாக்கு ரொம்ப முடியலியா அதுனால நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ மும்பை கிளம்பிடுரா.. அவ இருக்காளனு ஃபோன் போட்டு பாக்குறேன். இருந்தாங்கனா மதியத்துக்கு அவனுக்கு பிடித்ததா சமச்சு எடுத்துட்டு போகலாம்..”
‘ஆண்டவா.. அம்மா இல்ல பையன் யாராவது இருக்கணுமே! அப்போ தானே அங்க போக முடியும்’ பாட்டி ஃபோன் பேசி முடிக்கும் வரை அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
‘பிளீஸ்.. பிளீஸ் கடவுளே..’ பலமான வேண்டுதல் நடுவில் பாட்டியை பார்ப்பதும், ஆர்வமில்லாமல்  இருப்பது போல் காட்டிக் கொள்ள அங்குமிங்கும் பார்ப்பதுமாய் நொடிகளை நகர்த்திக்கொண்டிருந்தாள்.
என்ன ஒரு இம்சையான உணர்வு இது? அவனிடம் என்னத்தை கண்டாளோ? இத்தனைக்கும் அவன் பெயர் கூட அவளுக்குத் தெரியாதே.. பின் ஏன்? இது தான் வயது கோளாரின் ஈர்ப்போ? மனிதக் குலம் தழைக்கப் படைத்தவன் ஏற்பாடோ?
ஃபோன் பேசி முடித்து அவளிடம் பாட்டி வரவும் ‘ஒண்ணும் கேக்காத சுதா.. பீ கூல்… கண்டுகாத மாதரி ஆக்ட் விடு’ என்று அவளுக்கே சொல்லிக்கொண்டு அருகிலிருந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டிருந்தாள்.
சொஃபாவில் அவள் எதிரில் வந்தமர்ந்த பாட்டி அவளைக் கூர்ந்து நோக்கி, “என்ன சுதா? வயரு எதுவும் சரி இல்லையா கண்ணு? பார்க்கவே மூஞ்சி ஒரு மாதரி இருக்கு? கஷாயம் காச்சி தரட்டுமா?”
‘ஆஹா.. சுத்தம்!! ஓவர் ஆக்டிங் குடித்து சொதப்பிட்டியே சுதா! சரி.. சமாளி!’
“ஒன்ணும் இல்ல பாட்டி.. நான் நல்லா தான் இருக்கேன்… யாரது ஃபோன்ல?”
பாட்டி அவளை இன்னும் கூர்ந்து பார்த்தவாறே, “நெஜமாவே உனக்கு ஒண்ணும் இல்லையே சுதாமா? டாக்டர் கிட்ட வேணும்னா போய் பார்போமா?”
“பாட்டி!!”
“இல்ல நீ சொல்லித்தானே சுசிலா கிட்டப் பேசினேன். நீ என்னவோ ‘யாரு ஃபோன்ல’னு கேக்கர.. அது தான் என்னவோ ஏதோனு பார்த்தேன்.”
‘ச்சா.. இப்படியா சொதப்புவ?’ உள்ளே நோந்துகொண்டாலும் வெளியில் காட்ட முடியாதே
“ஐயோ பாட்டி.. கண்ண கட்டுதே… நேர விஷயதுக்கு வாங்க இப்போ.. அவங்க இருக்காகங்களா இல்லையா?”
“இவ ஒருத்தி… உன் பேச்சைக் கேட்டு நான் ஃபோன் போடுவேனா? இன்னைக்கு சனிக்கிழமையா என்ன, அவ வீட்டில இருக்க?”
“ஏன்..?”
“ம்ம்ம்.. அவ என்ன உன்னையும் என்னையும் மாதரி சும்மாவா இருக்கா? வேலைக்கு போக வேண்டாமா? ஏதோ மீட்டிங் இருக்காம்.. முடிசுட்டு ஒரு அஞ்சரைக்கா வருவாளாம். நீ ஒரு ஆறு மணிக்கா போ..”
‘ஆறு மணிக்கா? ஆறு மணிக்கு மேல் தோட்டக்காரனுக்கு தோட்டத்தில் என்ன வேலை? அவன் இருப்பானோ என்னவோ?’ இவ்வளவு பாடுபட்டது வீண்போனதே என்ற கடுப்பு சுதாவிற்கு!
“ம்ம்கும்… ஆறு மணிக்கு! போ.. நீயே போ.. நான் வரலை!” ஏரிச்சலில் கத்த
“ஏன் டி… நீ சொல்லித் தானே சும்மா இருந்தவளைக் கேட்டேன்”
“கேட்ட இல்ல… நீயே போ! ஆறு மணிக்கு நல்ல நேரம் முடியும்தாம்.. அதனால நான் அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து போய்குறேன்! இப்போ ஆள விடுங்க!”
“ஆறு மணிக்கு மேல பனை மரம் இருக்குமோ என்னவோ? அப்புறம் யாரைப் போய் பாக்க?” முணுமுணுத்துக்கொண்டே அவள் அறையை நோக்கிச் செல்ல..
“பனை மரம் அவ வீட்டுல ஏது டி.. “
நின்று பாட்டியைப் பார்த்தவள் சிரித்துக்கொண்டே மீண்டும் அவரிடம் வந்து அமர்ந்து கொண்டாள். “பாட்டி .. இந்த வயசுலையும் உங்க கண்ணும் காதும் ரொம்ப நல்லவே வேல செய்யுது! அதுக்கு என்ன சாப்பிடுரீங்க? சொலுங்க நானும் தெரிஞ்சுகுரேன்!”
அதன் பின் பேச்சுகள் அதின் போக்கில் செல்ல ஆரம்பித்தது.
மாலை ஆறு மணியளவில் சுதாவிடம் தான் சுசிலாவைக் காணச் செல்வதாய் கூறிவிட்டு மீனாட்சியம்மாள் கிளம்பினார்.
“சுதா வந்து கதவ உள்ள தாழ்ப்பாள் போட்டுக்கோ கண்ணு… காலம் கெட்டு கிடக்கு. நான் போய் ரெண்டு பேரையும் பார்துட்டு வாரேன்…”
அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் வெருமனே கேட்டு வைத்தாள். “ஆமா.. பாட்டி, சுசிலா, அவங்க என்ன வேலை பாக்கராங்க?”
“துணி வியாபாரம். நாலஞ்சு இடத்துல கடை வச்சிருக்கா.. ரொம்ப பெருசு, அங்க இல்லாத துணி வகையே இல்லியாம். பாரம்பரிய பட்டுனா அவங்க கட தான்!  அவ தாத்தா காலத்துலயே பட்டுக்கு பெயர்போனது.. இவ அத பாத்துகவும் இப்போ எல்லா துணியும் வந்து, ரொம்ப ரொம்ப பெருசாகிடுச்சு!” ஐந்து வருடம் முன் இருந்த நிலையை அவருக்கு தெரிந்தவாறு கூறினார்.
“ஓ.. பிஸினஸ்ஸா? சரி நீங்க கிளம்புங்க!”
வாசலை நோக்கி நடந்தவர் பின்னோடு வந்தவளிடம், “இந்த கண்ணன் பையன் சும்மா இருக்கான பாரு. இருக்கத் தோட்டம் போதலையாக்கும்! ஏதோ புது தினுசா செடி வாங்கி இருக்கானாம்.. மரத்து மேல வளருமாமே… அத பார்த்து நடரதுக்காக நாலு மணியில இருந்து தோட்டக்காரனோட மாரடிசுட்டு இருக்கானாம்… இந்த வயசில இருக்க வேலையை எல்லாம் விட்டுட்டு இது என்ன வேலையோ அந்த பையனுக்கு!”
அவ்வளவு தான் அதற்கு மேல் சுதாவால் நிற்க முடியவில்லை! தோட்டக்காரன் என்ற வார்த்தை மட்டுமே அவளுக்கு போதுமானதாய் இருந்தது. இன்னும் வேலை நடக்கிறதோ.. போய் பார்க்க வேண்டுமே..  
“பாட்டி பாட்டி நானும் வாரேனே..” வெட்கம் மானாம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு குழைய
“நல்ல நேரம் பொய்டுச்சுனு சொன்ன..” கேள்வியாய் அவளை பார்க்க
“அது இன்னைக்கு இல்ல பாட்டி .. நாளைக்கு ஆறு மணி… வாங்க போலம் நேரம் ஆகுதுல்ல” அவள் கேவலாமாய் பல்லிளித்து கொஞ்ச
“என்னமோ கண்ணு ரெண்டு மூணு நாளா நீ ஆளே சரி இல்ல! வா வா”
“ஒரு ட்டூ மினிட்ஸ் இங்கையே வெயிட் பண்ணுங்க.. இதோ வந்துடேன்..” என்று பதிலையும் எதிர் பார்க்காமல் உள்ளே துள்ளிக் குதித்துச் சென்றவள் ஐந்து நிமிடத்தில் உடை மாற்றி சிறிது ஒப்பனையுடன் வெளி வந்தாள்.
அவளை மேலும் கீழும் பார்த்த பாட்டி, “அரை மணி நேரம் முன்னாடி தானே குளிச்சு தல வாரித் துணி மாத்துன? இப்போ எதுக்கு மறுபடியும்?”
‘இந்த பாட்டி கண்ணுல எப்படி தான் இந்த அம்மா மண்ண அள்ளி தூவீட்டு லவ் பண்ணிட்டு அலைஞ்சாங்களோ? என்னால உருப்படியா ஒரு சைட் கூட அடிக்க முடியலை!
இத்தன வருஷ வாழ்கைல இருந்திருந்து கண்ணுக்கு லட்சணமா ஒருத்தன பார்த்தேன்.. இன்னும் ஒரு தரம் பார்த்து அவன் குலம் கோத்திரம் விசாரிக்கலாம்னா.. எவ்வளவு கஷ்ட்டத்த சகிக்க வேண்டியிருக்கு!  என்ன கொடும் சுதா இது!!’ எண்ணி தலையைத் தானாய் ஆட்டிக் கொண்டு வந்தவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக்கொண்டு வந்த பாட்டி அவள் கண்ணில் பட்டால் தானே!?
வாசலில் அவர்களுக்காகக் காதிருந்த சுசிலா அவர்களைக் கண்டதும், “வாங்கமா.. வா சுதா..” என்று வரவேற்க அவள் கண்களோ ஆவலாய் தோட்டத்தையே நோட்டமிட்டது.
“என்னமா தோட்டத்தை பாக்கணுமா? கண்ணனோட கை வண்ணம். போ.. போய் பார்துட்டு வா..”
விட்டதே போதுமென்று அங்குமிங்கும் பார்த்தாள்… கண்கள் நாலத் திசையும் சுழன்றது. அவள் தேடிவந்தவனைப் பார்க்க முடியவில்லை. தோட்டத்தில் அவளை தவிர யாருமில்லை… எப்பொழுதும் இருக்கும் அறுபது வயது கணேசனைக் கூட காணவில்லை.
தோட்டக்காரனாயிருந்தால் தோட்டத்திலிருந்திருப்பான்.. அவனோ வீட்டுக்காரனாயிற்றே.. பூக்களின் நடுவில் தனியாக நின்றிருந்தவளை மாடி அறையிலிருந்து பார்த்த அஷோக் முதலில் அவள் பூக்களை ரசிக்கின்றாள் என்ற எண்ணத்தோடு அவனை அழைத்த கைப்பேசியோடு, வீட்டிலிருந்த அலுவலக அறையில் நுழைந்தான்.
ஒரு முறை அவனை பார்க்க மாட்டோமா என்று இடம் முழுவதும் சுற்றிப் பார்த்தாயிற்று. இருந்த மரத்தையெல்லாம் சுற்றியும் பயனில்லாது வீட்டை நோக்கி நடந்தாள். மனமும் முகமும் சோர்ந்துவிட்டது. இருப்பான் என்று எண்ணிவந்து இல்லாமல் போகவும் ஒரு வித ஏமாற்ற உணர்வு.
“என்னம்மா செடி எல்லாம் பார்த்துட்டியா? வரும்போது பளிச்சுனு இருந்த.. அதுக்குள்ள முகம் வெயில்ல வாடி போச்சு.. வா வந்து உக்கார்..”
அவளுக்கு சுசிலாவை எப்படி கூப்பிடுவதென்று தெரியவில்லை. ‘பத்து வயசு பையன் அம்மாவை என்னவென்று கூப்பிட? இவங்களுகென்ன ஒரு முப்பது வயசு இருக்குமா?’ யோசித்தவள்.. அன்று ‘அக்கா’ என்று சொன்னாலும் ஏனோ அப்படிக் கூப்பிடவும் மனம் வராமல் மரியாதைக்குரிய வர்த்தைகளோடு நிருத்தி கொண்டாள்.
“பாட்டி ஏதோ புது வித செடி நடுரதா சொன்னாங்க.. அத பார்க்கலாம்னு நினைச்சேன்!”
“ஆர்கிட்ஸ்ஸா? அது கொல்லபுரதுல இருக்க மரத்தில வச்சிருக்கு.. செடி நடர வேல முடிஞ்சு ஒரு மணி நேரமாச்சு! போ பொய் பாரு!”
‘ஓ, வீட்டிற்குப் பின்னும் தோட்டம் உள்ளதா?’ கால்கள் தன்னால் வேகமெடுத்தது.
வீட்டின் பின் புறம் மிகவும் அழகாகவே இருந்தது! பெரிய பெரிய மரங்களும்.. வாசனை மலர்களை தாங்கிய செடி கொடிகளும் மனதை மயக்கியது. சலசலபோடு ஒரு செயற்கை அருவி அதனோடு ஒரு நீரோடை வீட்டைச் சுற்றி! வீட்டின் சுவர் அருகே வளர்ந்த மாமரத்தைச் சுற்றி பெரிய மல்லி கொடி மொட்டை மாடி வரை உயர்திருந்தது! முதல் மாடியில் இருந்த பால்கனியினுள் மல்லி கொடி படரபட்டிருபது போலக் காட்சி அளித்தது.  இடம் முழுவதும் நிழலோடு மணம் கமழும் தென்றல் காற்றோடு மனோகரமாய் இருந்தது.
அங்கும் அவனில்லை. ஆனால் அந்த அழகிய இடத்திலிருந்து நகர மனமில்லாமல் அங்கிருந்த வராண்டாவில் அமர்ந்துக்கொண்டாள். ஏனோ அவளுடைய ‘தோட்டக்காரனே’ இதை எல்லாம் செய்தது போன்ற உணர்வு!
“இங்கையே உக்காந்துட்டியா? இந்தா காப்பி! நைட்டுக்கு என்ன சாப்பிடுவ?” கேட்டுக்கொண்டே அவளிடம் காப்பியைக் கொடுத்தார் சுசிலா.
“வீட்டுல நைட்டுக்கு மாவு பிசைஞ்சு வச்சிருகேன். குர்மாவும் ரெடி பண்ணியாச்சு. அடுத்த தரம் வரும் போது சாப்பிடுரேன்.”
அவளை பார்த்துப் புன்னகைத்த சுசிலா, “நீ ரொம்ப ஃபார்மலா இருக்காத… நானும் கண்ணனும் அங்க வந்தா எங்க வீடு மாதிரி தான் இருப்போம்..
உன் அம்மாவை எனக்கு நல்ல பழக்கம். இது என்னுடைய தாத்தா வீடு. சின்ன வயசில ஸ்கூல் லீவுக்கு இங்க தான் வருவேன். அப்படி தான் உன் அம்மா எனக்கு ஃப்ரெண்டானாங்க! அவங்க மூலமா தான் உன் பாட்டி எனக்கு சினேகிதம். கண்ணன் பிறந்ததுல இருந்து ஒரு அம்மாவா அவன பாத்துக்கராங்க. ரெண்டு வீட்டுல இருந்தாலும் நாங்க ஒரே குடும்பம் மாதரி தான்.
கண்ணனும் நானும் எத்தனையோ தரம் உன் பாட்டிய இங்கையே இருக்க சொல்லி கேட்டாச்சு.. அவங்க தான் வாழ்ந்த வீட்ட விட்டு வரமாடேன்னு அடம் பிடிக்கராங்க!
நீ வேற கண்ணன் வேற இல்ல எங்களுக்கு.. கூச்ச படாம இரு..என்ன?”
“ம்ம்ம்..” என்னத்தை கவனித்தாளோ பூம் பூம் மாடு போலத் தலை ஆட்டி வைத்தாள்.
“கண்ணன் ரெண்டு நாளா ஒரே பிஸி… தோட்ட வேலையை முடிசிட்டு இப்போ தான் குளிச்சு ரெஸ்ட் எடுக்க மாடி ரூமுக்கு போனான்..  நான் வேணும்னா அவனை எழுப்பட்டுமா.. அவன் கூட நீ பேசிட்டு இருக்கலாம். எனக்கு உள்ள கொஞ்சம் வேல இருக்கு!”
“இல்ல இல்ல… வேண்டாம்..” என்று மறுத்தவள், “ரெஸ்ட் எடுகட்டும். எனக்கு இங்க இப்பிடி சும்மா வேடிக்கை பாக்கவே ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா பூவும் பூக்கர நேரமா.. வாசன மூக்க துளைக்குது. நீங்க போங்க.. நான் இப்பிடியே தோட்டத்தில இருக்கேன்.”
அவள் வராண்டா மேடையில் காலாட்டிக்கொண்டே அமர்ந்திருக்க,
தோட்டத்தின் அழகும் மணமும் அவளை வாவென்று அழைப்பது போலவே இருந்தது. மா, வேம்பு, வாழை, பலா, தென்னை, காய்கறி செடிகள், மருத்துவ செடிகள் என்று பல வித மரம், சேடி, கொடிகள் எனத் தோட்டத்தை அலங்கரித்தாலும் எங்கிருந்தோ வந்த ஒரு வகை மணம் அவள் மனதை மயக்கவே செய்தது.
மல்லி, முல்லை, இருவாட்சி என்று மூக்கை துளைக்க ஒவ்வொன்றின் அருகிலும் சென்று மணத்தை உள்ளிழுத்து தன்னையே மறந்து நேரம் போவது தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“இது மனோரஞ்சிதம்… அப்பிடி செடிக்குள்ள தலையை விட்டு, பூவ உரிஞ்ச கூடாது! பூகுள்ள பூச்சி இருக்கும்”
அமைதியான வெறும் அருவியின் சலசலப்பு மட்டுமே கேட்ட இடத்தில் கண்மூடி தென்றல் கொண்டுவந்த மணத்தை நுகர்ந்து கொண்டிருந்தவள், எதிர்பார திடீர் ஆண் குரலில் திடுக்கிட்டு, பின்னனிருந்த மரத்தில் இடித்துக்கொண்டு நின்றாள்.
அந்தி மாலை தங்கக் கதிர்களில் தங்கசிலயாய் தெரிந்தவளைக் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தவனை அவளும் கண் இமைக்காமல் பார்க்கத்தான் செய்தாள். இவனை காண தானே இத்தனை பாடு!
இன்று பார்க்க முடியாது என்று மனதைச் சமாதான படுத்தி நின்றவளுக்கு அவனைக் கண்டதும், அலை அலையாய் ஏதேதோ உணர்வுகள் முந்திக் கொண்டு வந்தது.
ஒரு நாள் முழுவதும் பட்டினி கிடந்தவனுக்கு முன் இராஜ விருந்தாய்… தெவிட்டா தேனாய்.. புன்சிரிப்போடு நின்றிருந்தான். கண்ணிமைக்குள் சிரித்தானே அதே சிரிப்போடு இன்னும் இன்னும் வனப்பாய் பளிச்சென்று!
அவள் உள்ளம் அவளைக் கேட்காமலே இடம் பெயரத் தயாரானது.
காப்பியத்தில் மட்டும் தான் கண்டதும் காதல் வருமா என்ன?

Advertisement