Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 5
“பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
.
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை”
தன் படுக்கையில் பாடிக்கொண்டே குப்புறப் படுத்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்த சுதாவின் நினைவலைகள் மீண்டும் மீண்டும் அஷோக்கை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
அன்று தோட்டத்தில் அவனைப் பார்த்துவிட்டு வந்த நாள் முதல் அவன் நினைவில் இதே பாடல் தான். படத்தில் பாடியவர் கூட இப்படி லயித்துப் பாடியிருக்க மாட்டார்.
“பேரு கூட கேக்காம வந்துடேனே.. யாரா இருக்கும்?” மீண்டும் மீண்டும் அதே கேள்விகள், தேய்ந்த டேப் ரெக்கார்டராய்!
“அம்மாவும் பையனும் மாட்டும் தானே இருக்கரதா பாட்டி சொன்னாங்க? அவ்வளவு வெயில்ல வேல செய்யரவன் முகம் மாதரியா இருக்கு…? பஞ்சத்துல அடிபட்டவன் மாதரியும் இல்ல.. கறியும் மீனும் தின்னுவான் போல.. உடம்ப மாடல் மாதிரி வச்சிருகான்!“
.
மும்பை விடுதியில் தங்கி முதுகலை பட்டப்படிப்பு படித்த காலங்களில் தோழிகளோடு ஆண்களைப் பற்றிப் பேசியதுண்டு. அதில் அழகான ஆண்மகன் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற கற்பனைகள் ஏராளம்.
அவள் அறையில் வசித்துவந்த மீரா, ஹாலிவுட் ஹீரோக்களின் விசிறி. சுவர் முழுவதும் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், க்ரிஸ் எவன்ஸ், ரயன் காஸ்லிங் என்று கட்டிளம் காளைகளின் போஸ்டர் ஒட்டி வைத்திருப்பாள்.
அவர்கள் எல்லோரையும் விட இவன் ஹான்ஸம்மாக தோன்றினான் சுதாவிற்கு! வேறு வேலையில்லாது போகவே மனம் அவனைப் பற்றிய ஆராட்சியில் இறங்கியது.
அவன் நீளமான கைகளை மார்புக்குக் குருக்காய் கட்டி மரத்தில் நின்ற தோரணை, திண்ணமான தோள்கள், முறுக்கேறிய இரும்புக் கைகள், இதழில் ஒட்டிக்கொண்டிருந்த குறுஞ்சிரிப்பு, சிரிக்கும்போது தெரிந்த முத்து வெண்பற்கள், அவளை குறும்பாய் பார்த்துச் சிரித்த கண்கள், புருவம் உயர்த்தி கண்களால் கேள்வி கேட்ட விதம்…
இப்படி ஒவ்வொன்றாய் மீண்டும் மீண்டும் அவனையே, மாடு புல்லை அசைபோடுவது போல், அசைப் போட்டுக்கொண்டிருந்தாள்.
காரணமே இல்லாமல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கப் பிடித்தது. பிடித்ததை மீண்டும் மீண்டும் அசைபோட இன்னுமே பிடித்தது.
.
வேறு உலகில் சஞ்சரித்திருந்தவளை பாட்டியின் சத்தம் உலுக்க, “ரூம்ல இருக்கேன், இதோ வரேன் பாட்டி” என்று திண்ணையில் காபியோடு அமர்ந்திருந்த பாட்டியிடம் போய் அமர்ந்து கொண்டாள்.
கையில் காபியோடு யோசனையாய் அமர்ந்திருந்தவளிடம், “என்ன டா கண்ணு எதோ யோசனையாவே இருக்க?” என
“உங்க கண்ணன் வீட்டு தோட்டக்காரர் பத்தி தான் யோசனை..”
“அவனுக்கு என்னமா?”
“சின்ன வயசு பாட்டி.. பாக்கவும் வாட்ட சாட்டமா இருக்கார்.. இங்க எதுக்கு இந்த வேலைல இருக்கார்னு யோசிசேன்”
“வயத்துப் பசிங்கர ஒன்னுக்காக எந்த வேலனாலும் செய்யலாம். அவன் குடும்பத்துக்காக அவன் உழைக்கிறான் அதுல என்ன இருக்கு யோசிக்க? அதுவும் சுசிலா, அவ கீழ வேல பாக்கரவங்க குடும்பத்தை நல்லா பார்த்துப்பாமா..”
.
“ஓ..” என்றவள், எங்கேயோ பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் “பாட்டி, பார்த்ததும் ஒருதர பிடிக்குமா?”
“பிடிகரதுக்கு என்ன? உன்ன பார்த்ததும் எனக்கு பிடிகலியா?”
அவரை நன்றாய் முறைத்துவிட்டு சிணுங்கிக் கொண்டே, “பாட்டி! நான் கேட்டது அதில்ல… இந்த புராணத்தில வர மாதரி ‘தலைவனும் தலைவியும் பாத்ததும் ரெண்டு பேருக்கும் பிடிக்குமே அந்த மாதிரி?”
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா கேக்குர?”
பாட்டியை பார்த்து அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே, “நீங்க பெரியாளு தான்… ம்ம் அது தான் கேட்டேன்?”
“ஓ.. வருமே. ரெண்டு பேருக்கும் வேல வெட்டி எதுவும் இல்லாம இருந்தா… எல்லாம் வரும்!”
“விளையாடாதீங்க பாட்டி.. நான் சீரியஸ்ஸா கேக்கறேன்..”
“பார்த்ததும் காதல் வருமானு தெரியல. ஆனா ஒருதரை பார்த்ததும் பிடிச்சுபோக நிரைய வாய்பு இருக்கு. அப்புறம் பழக பழக அந்த ஈர்ப்பு காதலாகலாம் இல்ல ஒண்ணும் இல்லாமலும் போகலாம்”
“லவ் மேரேஜ் தப்பா?”
“நிஜமாவே மனசளவில பிடிசிருந்தா கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழரதுல ஒரு தப்பும் இருக்கரதா எனக்கு தோணல”
.
காதல் என்ற வார்த்தை பாட்டியின் முகத்தில் கசப்பை ஏற்படுத்தவில்லை. மற்றவர் காதலை எதிர்க்காதவர் தன் மகள் காதலுக்கு எதிரியானது ஏன்? ஏற்றிருந்தால், மகள் விருப்பப் பட்டவரையே மணமுடித்து வைத்திருந்தால்.. குடும்பம் பிரிந்து, உறவுகள் பிரிந்து உணர்வுகள் காயப்பட்டிருக்காதே? ஏற்கப்படாத காதலால் மிஞ்சியது வெறும் வலி மட்டும் தான்.
சுதா சொந்தம் என்று ஒருவரையும் அறிந்திருக்கவில்லை. தாயின் காலத்திற்கு பின்னரே அறிமுகமானவர் தகப்பன் வழி அத்தை. அவர் மட்டும் தான் அப்பாவின் ஒரே சொந்தம்.. ஆனால் பாட்டிக்கு சகோதரிகள் உண்டு, சொந்த பந்தங்கள் உண்டு. கௌரியை இவர்கள் விடாதிருந்தால் அவளும் சொந்தங்களோடு இருந்திருக்கலாம்.
.
தொண்டையில் மாட்டி நின்ற கேள்வியைக் கேட்டுவிட்டாள். “அப்போ அம்மா அப்பா காதல ஏன் பாட்டி நீங்க ஏத்துகல?”
பாட்டி எந்த பிகுவும் செய்யவில்லை. “கௌரி வேறு ஜாதி பையன விரும்பரதா சொன்னா.. மலையாளத்தான்! உன் தாத்தா கௌரிக்கு உன் அப்பாவ கட்டிக் கொடுக்க கௌரவ குறைச்சலா நினைச்சார்.
ஒரே பிடிவாதமா ‘அந்த பையன் நம்ம ஆளுங்க இல்ல! ஊர் உலகம் என்ன சொல்லும்? என் மானம் மரியாதை என்ன ஆகும்?’ன்னு கடைசி வரை ஒத்துக்கல!” பழைய யோசனையில் நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டார்.
காலங்கள் நகர்ந்தாலும் காயங்கள் காய்ந்தாலும் அது விட்டுச் சென்ற வடு..? நீங்கா நினைவுச் சின்னமாய் என்றும் மனதில்.
.
“சரி.. தாத்தா தான் ஒத்துக்கல, நீங்க சப்போர்ட் பண்ணி இருக்கலாமே.. நீங்களும் அம்மாவை விட்டுடீங்களே பாட்டி?”
“நான் படிகல மா.. என்னோடைய பதினாறு வயசில இவர் தான் உன் புருஷன் அவர் மனம்படி பார்த்து நடந்துகோன்னு சொல்லி விட்டுட்டு பொய்டாங்க. என்னைவிட அவர் பதிமூனு வயசுக்குப் பெரியவர். அவரை பார்த்தாலே எனக்குக் கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு!
உன் தாத்தா அடிச்சு உதைக்கர அளவுக்கு ஒண்ணும் மோசம் எல்லாம் இல்ல… அவர் சொன்னதை கேட்டுகணும்.. கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. நானும் அவரை எதிர்த்து ஒரு வார்த்த பேசினது இல்ல.
முத்தாட்டம் ஒரு பொண்ணு.. அவ தான் எனக்கு எல்லாமா இருந்தா! தீடீர்னு ஒரு நாள் கௌரி ஒருதர விரும்பரதா சொன்னா..  உன் தாத்தா ஒத்துகல..
ஒரே பொண்ணு.. அவ அழரத பாக்க சகிக்காம, நான் அவங்கள சேர்த்து வைக்கக் கேட்டதுக்கு.. ‘நீயும் அவ கூட செத்து பொய்ட்டதா தல முழுகிடுறேன்… நீ அவளுக்கு வக்காலத்து வாங்கரதா இருந்தா அவ கூடவே வெளில போய்டுனு சொல்லிடார்!
அவளும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தா.. அப்பனுக்கும் பெண்ணுக்கும் ஒரே பிடிவாதம்..
அவர் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார். அவர் பொண்ணுனு நிரூபிக்க ஒரு நாள் மாலையும் கழுத்துமா வந்து நின்னா…
அவர் அவ செத்துட்டதா தல முழுகீட்டார்! அவளும் கிளம்பிட்டா.. எங்க போனா.. எப்பிடி இருந்தானு கடைசி வரைகும் தெரியாமலே போச்சு!”
.
“உன் தாத்தா ரொம்ப கோபகாரர். பிடிவாதம். அவர் வச்சது தான் சட்டம். இந்த வீட்டில கௌரி தான் எனக்கிருந்த ஒரே பிடிப்பு.. அவளும் என்னை பத்தி யோசிக்காம விட்டுடு பொய்டா.. அவ போன பிறகு இந்த மனுஷன் என் கூட பேசரத நிருத்திட்டார். மனசு விட்டு போய்டுச்சு..
நீ நினைக்கர மாதரி நான் உன் அம்மாவை விடல அவ தான் அவ அம்மா வேண்டாம்னு போயே போய்டா”
.
காதல் யாரிடமும் கேட்டு வருவதில்லையே.. நீ வேண்டாம் என் வாழ்வில் என்று சொல்லி அதைக் கடந்து செல்ல.
காதல் மிகவும் வலியதாய் இருக்க வேண்டும் அதனால் தானோ தன்னை பெற்று கண்ணைப் போல் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோரின் அன்பைக் கூட உதாசினப் படுத்திக் காதலிப்பவனோடு செல்ல மனம் விழைகிறது.
வீட்டில் போராடினால் ஏற்பார்கள் என்று தெரிந்தால் இருந்து போராடலாம். வீட்டில் காதலைச் சொன்னதும் உடனே வேறு ஒருவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தால்?
ஒருவனைக் காதலித்து மற்றொருவனை மணப்பது ஒருவகை.
ஒரு வாழ்க்கை, அதை பிடித்தவனோடு வாழ்ந்தே தீருவேன் என்று காதலித்தவனையே மணம் முடிப்பது ஒரு வகை.
.
கௌரி, சசி பரதன் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாய் நேசித்தனர். தன் தாய் தகப்பனிடம் பார்க்காத அன்பைப் பரதனிடம் பார்த்தார் கௌரி. அப்பா, மதிவானன் என்றுமே கறார் பேர்வழி. வீட்டில் பொழுது விடிந்தால் அப்பாவின் சுடு சொற்கள். மதியினுக்குப் பயந்து மீனாட்சியம்மாள் வாய் திறக்க மாட்டார். என்றுமே கௌரிக்குப் போராட்டமாய் போனது வீடு!
வீட்டில் எதிர்ப்பு. தடைகளை மீறி கௌரி விரும்பியவரையே மணமுடித்து தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
இப்படி ஒரு வாழ்க்கை துணைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுமளவிற்குப் பரதன் கௌரியை நேசித்தார். மனைவியும் மகளுமே அவர் உலகம். மிகவும் அன்போடும் மரியாதையோடும் கௌரியை பார்த்துக் கொண்டார்.  
பரதன் ஒரு உழைப்பாளி. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அந்த வசதியை அதிகப் படுத்தவும் அறிந்திருந்தார். கௌரியின் கடைசி மூச்சு வரை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார் அவர் கணவன். கௌரி, திருமணத்திற்குப் பின் அவர் மரணம் வரை, வாழ்வை அனுபவித்தே வாழ்ந்தார். அவர் வாழ்கையின் வசந்த காலம் மீனாட்சியம்மாளின் இருண்ட காலமாய் மாறி போனது.
.
மீனாட்சியம்மளின் பல வருட உள்ள குமுரல்கள்  வெளிவர ஆரம்பித்தது, “ஜாதி, மதம், அந்தஸ்து! எங்க இருந்து இதெல்லாம் வந்தது? யாரு உருவாக்கினது இத? நமக்கு நம்ம குடும்பத்தை விட, பெத்த பொண்ண விட எங்கையோ இருக்க நாலு பேரப் பத்தி எப்பவும் ஒரு கவல… அவங்க என்ன நினைப்பாங்களோ என்ன சொல்லுவாங்களோன்னு!!
பெரிய ஜாதி… புண்ணாக்கு! உன் தாத்தாவும் நானும் ஒரே ஜாதி தான்.. என்னை ஒரு மனுஷியா ஒரு தரம் மதிச்சிருப்பாரா?
சுசிலா.. அவளுகில்லாத அந்தஸ்தா.. இல்ல அவளை கட்டினவனுகில்லாத அந்தஸ்தா.. அந்த பாழா போன அந்தஸ்து அவளுக்கு என்ன பண்ணிச்சு? வாழ வேண்டிய வயசில பிள்ளையோட நிக்கரா… தனியா!!”
.
சலனமில்லாத அந்த முகத்தில் வேதனை படர, “உன் தாத்தா வாழ்க்கையோட நிஜத்தைக் கொஞ்சம் புரிஞ்சிருந்தா.. என் பொண்ணோட சந்தோஷமான வாழ்கைல நானும் இருந்திருப்பேன். நீ குழந்தையா இருக்கும் போதே உன்ன ஆசை தீர என் நெஞ்சில போட்டிருப்பேன்! என் மக சாகும் போது கூட அவளுக்கு இல்லாம போயிருக்க மாட்டேன்..”
“எல்லாம் இந்த பாழப்போன அந்தஸ்தும், வறட்டு கவுரமும் தான், என் பெண்ணையும் அவ கூடவே என் சந்தோஷத்தையும் ஒரேடியா பிரிச்சிடுச்சு! கண்ணன் ஒருத்தன் என் வாழ்கையில வரலைனா நான் என்னைக்கோ வேதனையில செத்து போயிருபேன்!”
.
ஒரு வாழ்க்கை! நமக்கென்று இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை! அதை நம் விருப்ப படி வாழ நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறதா என்றால் சந்தேகமே! கொடுக்கப் படும் உரிமைகள் சரிவர பயன்படுத்தப்படுகிறதா? அதுவும் சந்தேகம் தான்!
சமுதாயங்களில் ஏதேதோ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிலது சமுதாயத்தை சீர்குலைப்பதும் சிலது சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதுமாய் இருகின்றது.
திருமணம் முன் கணவன் மனைவியாய் சேர்ந்து வாழ்வதும், ஓரின திருமணங்களும் இதில் எந்த வகையைச் சேர்ந்தது? ஆண்டவன் தான் வெளிச்சம்.
.
விரக்தியாய் ஒரு சிரிப்பைச் சிரித்துவிட்டு மௌனத்தைப் பாட்டியே கலைத்தார்.
“காதலோ கன்றாவியோ.. யார யார் கல்யணம் பண்ணினாலும் ரெண்டு வருஷத்துக்குள்ள பிள்ளை குட்டி.. அப்புறம் அதை வளத்து ஆளாக்கி விட்டதும் நம்மளை விட்டு போய்விடும்.. இதுல எங்க இருந்து வந்தது காதலும் கத்தரிக்காவும்?”
‘இவங்க என்ன இப்படியும் பேசராங்க அப்படியும் பேசராங்க?’ சுதாவின் மனம் குழம்பிவிட்டது.
.
சுதாவிற்கு சுத்தமாய் பாட்டியை புரியவில்லை. பாட்டிக்கு தன்னிடமும் ஒட்டுதல் இல்லை என்று நினைத்திருந்தாள். ஆனால் அவருக்கு எதையுமே பிடிக்காத நிலையில் இருப்பதாய் தோன்றியது.
வாழ்க்கையின் ஏமாற்றங்களும் தோல்விகளும் அவரை சாய்த்திருந்தது.. ஏதோ சொந்தம் என்று வந்து சேர்ந்த சுசிலா, கண்ணன் என்ற இரண்டு ஜீவன்களால் இவர் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றியது.
இறந்த காலம், அதை அப்படியே விட்டு விட வேண்டும். அதைப் பிடித்துத் தொங்குவதால் யாருக்குத் தான் என்ன பயன்?
மீனாட்சி பாட்டிக்கு அது தெரியவில்லை. அவர் சிறகு விரித்துப் பறக்க வேண்டிய வயதில் திருமணம் என்ற பெயரில் சிறகருக்கப்பட்டார். சிறகை அருத்த பெருமை அவர் பெற்றோருக்கும் அவரை திருமணம் செய்த மதிவானனுக்குமே சேரும்!
தனக்கென்று ஒரு வாழ்வை வாழ முடியாமல் மகள் வாழ்வைத் தனதாக்கிக் கொண்டார். மகள் தன்னை விட்டுச் சென்றதும் அவர் கோட்டை அவர்மேல் விழுந்து அவரை நொறுக்கி விட, இன்று வாழ்கையில் பிடித்தமில்லை.
மகள் வீட்டை விட்டு சென்றதற்கு மீனாட்சியம்மாளின் வளர்ப்பே காரணமென்று முதலில் வார்த்தையால் வதைத்த கணவன், பின் பேசாமல் ஒதிக்கி வைத்து வதைத்தார்.
.
வாழ்கையில் கோபங்களையும் ஏமாற்றங்களையும் மட்டுமே பார்த்த மீனாட்சியம்மாள், அவர் அறியாமலே உள்ளுக்குள் எரிச்சலும் கோபமும் வெளிவராத எரிமலையாய் புதைத்து வைத்திருக்க, யாரிடமும் நம்பிக்கையுமில்லை அதனால் ஒட்டுதலும் இல்லாமல் போய்விட்டது. சொந்த பந்தங்கள் பிடிக்காமல் போய்விட, ஒரு சிலரோடு மட்டுமே பேச்சு வார்த்தை.
வெளியே பார்க்க அமைதி. ஆனால் உள்ளுக்குள் காயங்களை ஆறவிடாமல் தானே மீண்டும் மீண்டும் பழைய நினைவுகாளாலும் தனிமையாலும் அதைக் கிழித்து மேலும் மேலும் புண்ணாக்கிக் கொண்டார் மீனாட்சியம்மாள்.
.
கடந்த இருபத்தி ஐந்து வருடமாய் அவரோடு சேர்த்து சுசிலாவையும் கண்ணனையும் சுற்றி ஒரு வலையைப் பின்னி வைத்து கொண்டார். அது சிலந்தி வலையாய் போனது தான் சுதாவின் துரதிஷ்டம்.
ஏதோ அவர் வாழ்வில் எதிர்பாராதவிதமாய் சுதா. நாள் முழுவதும் சுதா அவர் கூடவே இருக்க, இப்போதெல்லாம் பழைய காயங்களை கீறிக்கொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கையின் அழகைச் சுதா அவருக்குக் காட்ட ஆரம்பித்திருந்தாள்.  குறும்பு இருந்தாலும், சுதாவிற்கு ஒரு புரிதல் இருந்தது. அவரை மென்மையாய் கையாண்டாள். புழுக்கமான அவர் வாழ்வில் தென்றலாய் அவள்..
வறண்ட அவர் வாழ்வில் சுனையாய் சுதா.. ஆனால் அவள் வாழ்வு? காலத்தின் கணக்கு வேறாகிப் போனது.
.
மீனாட்சியம்மாளின் இரணங்களின் விளைவால் சுதாவின் இதயம் சுக்குநூறாய் போகப் போவது நாம் மட்டுமே அறிந்த இரகசியம்.

Advertisement