Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 4
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?
வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல் உள்ளத்தைக் கிளர, குளிரும் உஷ்ணமும் ஒன்றாய் தாக்க..
இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமோ? ஆனால் இதில் எதுவுமே அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது தான் நிஜம்.
தானாய் பேசிக்கொண்டே போன சுதா எதிரில் நிற்பவனை ஒருமுறையோடு ஏற இறங்கிப் பார்க்க முன் நினைத்த அதே நினைவு தான் மனதில், ‘இவன் பொண்டாட்டி..’
திருமணம் முடிந்தவனோ? கேட்கவேண்டும் என நா வரை வந்து விட்டது. மனைவி என்று ஒருத்தி இவனுக்கு இருப்பாளா? அவனிடம் கேட்டுவிட்டால் என்ன?  கேட்டே ஆக வேண்டும் என்ற பரபரப்பும்.. ஆனால் எப்படி?
‘ஆண்களும் தாலியோ மெட்டியோ போட்டிருக்கலாம்’ என்றே தோன்றியது சுதாவிற்கு.
“நீங்க மட்டும் தானா இல்ல… உங்க வைஃபும் இங்க தான் இருக்காங்களா?”
நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன், “தெரிஞ்சு என்ன பண்ணபோற?”
“ம்ம்.. எனக்கு ஜென்ரல் க்நாலேஜ் வளர்த்துக்க ரொம்ப பிடிக்கும்..” நக்கலாய் பதிலளித்தாலும் அவன் சொல்லவேண்டுமே என்றிருந்தது.
தெரிந்து என்ன தான் செய்யப் போகிறாள்? அவளிடம் பதிலில்லை. உள்ளுக்குள் எழுந்த ஆர்வம் அவ்வளவே.
ஆர்வத்துக்குக் காரணம்? படிக்காத பாடத்திலிருந்து வரும் கேள்வித் தாள் போல் இருவருக்கும் இது சம்பந்தமான எந்த கேள்விகளுக்கும் பதில் தெரியாது. அதனால்.. இதைப் பற்றிக் கேட்காமல் விட்டுவிடுவதே உச்சிதம்.
அவன் குரும்பு பார்வையும் இதழ் மூடிய சிரிப்புமே ‘இல்லை’ என்றது. மனதில் ஒரு ‘அப்பாடா’ என்ற உணர்வு.
வந்த வேலையைப் பார்க்க வேண்டாமா? ஞானம் வந்தவளாய், “சரி மேடம் இல்லியானு கேட்டேனே?”
அவனும் விடாமல், “நீ யாருனு நான் கேட்டேனே..” எனவும்
‘என்ன ஒரு வில்லத்தனம்? கேள்வி கேட்டா மறு கேள்வி?’
‘நீ தானே கேட்ட.. இந்தா பதில்’ என்னும் விதமாக, “மீனாட்சியோடு பேத்தி!” என்று மீண்டும் வீட்டில் யாரேனும் தென்படுகிறார்களா என்று கண்ணை சுழற்ற ஆரம்பித்தாள்.
அவன் அருமை மீனாட்சி பாட்டியின் பேத்தியா?  கொஞ்சமாய் மிகக் கொஞ்சமாய் உரிமை உணர்வு எட்டிப் பார்க்க ஆரம்பித்ததோ? பாட்டிக்கு இவள் தான் பேத்தி என்று சான்றிதழ் காட்டினாலும் நம்பும் படியாய் இல்லை. அவர் வடக்கு என்றால் இவள் கிழக்கு.. தோற்றத்தில் மட்டும் அல்லாது எல்லாவற்றிலும்.
அவள் கண், அதை அப்படியே பார்த்து நின்றான்.
‘என்ன முழி? என்ன வாய்?’
‘நேத்து பார்த்த பார்பி டாள்லா இது… அம்மாடியோ.. நேத்து பார்த்ததுக்கும் இன்னைக்கும் என்ன ஒரு வித்தியாசம்.. அவளும் அவ பேச்சும்’
அவன் எண்ணவோட்டத்தை கலைத்தது அவள் சத்தம்.
“ஹலோ தோட்டக்காரா…?”
“என்னது நான் தோட்டக்காரனா?” அதிர்ந்து தான் போனான்.
அவளை குற்றம் சொல்லுவதற்கில்லை… முதல் முறை அவள் பைனாக்குலர் மூலம் பார்த்தபோதும் மாடியில் செடிகளோடு ஐக்கியமாயிருந்தான்.
இன்று அருகில் பார்க்கையில் மடித்துக் கட்டி இருந்த லுங்கி, கை இல்லாத கட் பனியின், சவரம் செய்யாத முகம், தலையில் கட்டி இருந்த துண்டை அவளோடு பேசிக்கொண்டே கழட்டி இருந்தான், அதனால் கலைந்து போன கேசம், அவசரமாய் கை கால் கழுவியதின் பலனாய் ஆங்காங்கே ஒட்டி இருந்த செம்மண்!
அவளுக்கு அவனையே தெரியாத பட்சத்தில் அவனைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. சுதா ஒரு ‘கண்ணுக்கு பட்டாயிட்ட குதிரை’ போல! அவளைச் சுற்றி உள்ள காரியங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியது இல்லை. இது என்றால் இது.. அவ்வளவு தான். அதற்கு மேல் அதைப் பற்றி என்ன என்று கூட கேட்டுப் பழக்கப்பட்டதில்லை.
எல்லோரிடமும் பழகுவாள் ஆனால் அவர்களைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியது இல்லை. அவளுக்குத் தெரியவேண்டிய விஷயம் மட்டும் கேட்டுக்கொள்வாள் அவ்வளவு தான். ஊர் வம்போ தேவையில்லாத ஆராட்சியோ பிடித்தமில்லை.
அஷோக் கண்ணன், சுசீலாவின் ஒரே மகன். பிக பெரிய நிறுவனமான எ.கே மில்ஸ், கண்ணபிரான் டெக்ஸ்டைல்சின் அடுத்த வாரிசு. வெளி உலகிற்கு அஷோக் என்று அறிமுகம். வீட்டுச் சொந்தங்கள் மத்தியில் கண்ணன்.
சாகுபடியில் ஆரம்பித்து, பல தரப்பட்ட நூல்களால் நெய்ய பட்ட துணி வகைகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதில் இந்திய அளவில் பெயர்போன நிறுவனம்.
சுசிலா அதை நடத்தி வர, அஷோக் அதில் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) பணியாற்றி வருகிறான். கோடிகளில் புழக்கம் இருந்தாலும், சுசிலா எப்பொழுதுமே ஆடம்பரம் விரும்பமாட்டார். அதானால் அவரை பார்த்து ஒருவரும் அவரின் வசதியை எடைபோட முடியாது.
சின்னதாய் ஒரு வைர கம்மல், ஒற்றை வைரக் கல் தொங்கும் மெலிதான் கழுத்து சங்கிலி, வைரங்கள் பதித்த மெலிதான ஒற்றை வளையல், எண்களுக்குப் பதில் வைரங்கள் பதித்த கண்ணை உறுத்தாதா கைக்கடிகாரம். ஒற்றை கல் வைர மோதிரம். மடிப்பு கலையாத ஆடம்பரமாய் தெரியாத வகை புடவை. ஒருவரும் ஒரு குறை எதிலுமே கண்டுபிடிக்க முடியாது அவரிடம். நேர்த்தியான கம்பீர தோற்றம் சுசீலாவிற்கு.
“பின்ன தோட்டக்காரன வேற எப்பிடி கூப்பிட? சரி, இப்படியே முறைக்கரத விட்டுட்டு கேட்டதுக்குக் கொஞ்சம் பதில் சொல்றியா?”
“நீ என்ன கேட்ட?” புருவம் சுருக்கி கேட்டவனை
“மரியாதை இல்லாம பேசுர.. இரு உன்ன வச்சுகிறேன்..”
“வச்சுகோ.. யாரு தடுத்தா?” பட்டென்று சொல்லிவிட்டான்
‘பேச்ச பாரு.. மனசில சினிமால வர ஹீரோனு நினைப்பு’ அவள் அவனை முறைக்க,
அவனோ அவன் மனதோடு கதை அடித்துக் கொண்டிருந்தான்.
‘டேய் என்னடா உன் பிரச்சினை… வந்தவ கிட்ட விஷயத்தைக் கேட்டு அனுப்பாம… இப்படி பொண்ணுங்களையே பார்த்ததில்லாத அல்பம் மாதிரி அவ வாயயே பார்த்துட்டு நிற்கிற?’ என்று அது  கேள்வி கேட்க,
‘அடங்கு இவளைவிட சூப்பர் ஃபிகர் எல்லாம் பார்த்திருக்கிறேன்.. என் சன்னியாசம் இவளாலா எல்லாம் கலையாது நீ பயப்படாத’ மனதிற்கு ஆருதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ம்ம்கூம் நீங்கச் சரி பட மாட்டீங்க, வேலையை விட்டுத் தூக்க வேண்டியது தான்… நான் கிளம்புறேன்”
அவளும் அப்படி தானே அவனை மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்? அதைக் கவனித்து விட, அடுத்து வந்த பேச்சில் மரியாதை தானாய் ஒட்டிக்கொண்டது.
அவனை பயமுறுத்துவதாக நினைத்து மிரட்டிக் கொண்டே அவள் வெளியில் செல்ல, அவள் பேசியதெல்லாம் அவன் காதில் விழுந்தால்தானே?
அவள் வெளியே செல்ல, “ஒன்னும் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என
கோபம் எட்டி பார்க்க, “ம்ம்.. நீங்க நின்னுட்டே தூங்கரதா அர்த்தம்!”
“சாரி.. சாரி.. ஏதோ யோசனை… சொல்லு… நீ பக்கத்து வீட்டு பொண்ணு.. இங்க எதுக்கு வந்த?” கேட்டுக் கொண்டே வந்தவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஷ்ப்பா.. கண்ண கட்டுதே.. திரும்பவும் முதல இருந்தா?” என்று அலுத்துக்கொண்டே,
“இந்த வீட்டுப் பொடியனை பார்கணும்!”
“பொடியனா? அது யாரு?”
கடியானவள், “இவ்வளவு நேரம் நான் பேசும் போது கனா கண்டுட்டு இருந்தீங்களா?”
“அது தான் சாரி கேட்டேனே… இப்போ சொல்லு…”
“ஒழுங்கா கவனீங்க! நேத்து பாட்டிட்ட உங்க கண்ணன் வந்து சண்டை போட்டானாம். நான் அங்க இருக்கரது அவனுக்கு பிடிக்கலை போல.. அது தான் இப்போ, நான் கண்ணனைப் பார்த்து இத குடுத்திட்டு… அவன் வழியில நான் வரமாட்டேன், கொஞ்ச நாள் இருந்திட்டு போய்டுவேன், அந்த கிழவி மொத்தமும் அவனுக்கு தான்னு சொல்லிட்டு போக வந்தேன்“ என்றவள் இவ்வளவு நேரம் மறந்து கையில் வைத்திருந்த கொய்யாவைக் கடித்துக் கொண்டே மற்ற கையால் லட்டு டப்பாவை அவனிடம் காட்டினாள்.
“பாட்டி குடுத்தனுப்பீனாங்களா? அத முதல்ல சொல்லவேண்டியது தானே?” என்று வாங்க வந்தவனிடம் கொடுக்காமல்
கையிலிருந்ததைக் கொறித்துக் கொண்டே கண்களை உருட்டி, “ம்ம்.. ஆனா உங்களுக்கு இல்ல.. கண்ணுக்கு” என்று தலை அசைத்தவளிடம்,
“நான் தான் கண்ணன்.. அதைக் கொடு” கூறிக்கொண்டே கை நீட்டவும், அவளோ அவனை மேலும் கீழும் ‘இந்த வயசில ஏன் இப்படி?’ என்பது போல விசித்திரமாய் பார்த்து,
“தப்பு செய்யறீங்க! வயத்து பசிக்கு பொய் சொன்னா கூட பரவால.. நாக்கு ருசிக்கு பொய் சொல்ல கூடாது. எதுனாலும் உண்மை சொல்லிக் கேட்டு வாங்கணும்..
ப்ளஸ் உங்களைப் பார்த்தா ஒன்னும் பஞ்சத்தில அடிபட்ட மாதிரி இல்லையே.. பாடி பிள்டர் மாதரி உடம்பை வச்சுகிட்டு, அப்புறம் ஏன் இப்படி?” தலையை இடமும் வலமுமாய் ஆட்டிக்கொண்டாள்.
‘யாரு டா இவ’ என்று தான் பார்த்து நின்றான்.
அவளோடு வாயடிப்பது பிடித்துப் போக, வம்பிழுகும் பொருட்டு,
“சரி.. கேட்டு வாங்கியே சாப்பிடுறேன்.. குடு!”
“அப்படி எல்லாம் ஒருத்தருக்கு கொண்டுவந்ததை இன்னொருத்தட்ட கொடுக்க முடியாது.. அதுவும் சும்மா எல்லாம் தரவே முடியாது! உங்கட்ட குடுத்துட்டு அந்த பையனுக்கும், பாட்டிக்கும் யாரு பதில் சொல்றது?”
அவள் கொரித்துகொண்டே பேசியதை கவனித்தவன், “என்ன கொய்யா ருசியா இருக்கா?”
“ம்ம்.. நல்ல டேஸ்ட்.. நல்லா தான் தொட்டத்தை வச்சிருக்கீங்க.. இந்த வெயில்ல கூட மொத்த இடமும் குளுகுளுனு இருக்கு”
“கீழ பிய்க்கர தூரத்தில பழம் எதுவும் இல்லையே.. எப்படி பிச்ச?”
“ஏறி தான்.. இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு உங்க கேள்வி?” வடிவேலு பாணியில் அவள் கேட்க
‘இது வேரையா..’ என்று எண்ணியவன், “நாங்களும் சும்மா எல்லாம் எதையும் தர முடியாது. சாப்பிட்டதுக்கு கூலியா.. ரெண்டு நாளைக்குத் தோட்டத்துக்கு தண்ணீ பாய்ச்சி, களை பிடுங்கு!”
கொறித்துக் கொண்டிருந்ததை நிருத்தி விட்டு வாயில் அடைத்திருந்த கொய்யாவோடு  தோட்டத்தைப் பார்த்தாள்.
மதில் சுவர் கேட்டிலிருந்து வீட்டின் முன் இருந்த திண்ணை வரை இருந்த தோட்டம், எப்படியும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இருக்கும்.
இரண்டு கார் ஒன்று சேர வருவதிற்கேற்ப பேரிய பாதை.. அதன் இருபுறமும் பல வண்ண செடிகளால் நிறைந்திருந்தது. நடுவே புல்வெளி அதில் சிறு கூடாரமும் இருக்கைகளும். தோட்டத்தின் சுற்றி செயற்கை நீரோடை.. அதில் அல்லி மலர்கள்.

Advertisement