Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 16
எதிர்பாரா சமையம், எதிர்பாரா இன்ப அலை தாக்கல் அஷோக்கிற்கும் சுதாவிற்கும். நிமிடங்கள் நொடிகளாய் தெரிந்த இன்ப தருணம்..
மூளை முற்றிலும் அதன் செயல்பாட்டை நிருத்துமுன் இருவரும் ஒரு வழியாய் விலகினர். உடல் விலகியது ஆனால் மனம்? நகமும் சதையுமாய் ஒட்டிகொண்டது.
கன்னத்தின் ஈரம் அவளை இம்சிக்க, கைவிரல்கள் தானாய் கன்னத்தை வருட, முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த உணர்வலைகள். விரிந்த கீழ் உதட்டை பல் கொண்டு தடை போட, தலை தானாய் கவிழ்ந்தது. அவளின் நாணம் அவனையும் பற்றிகொண்டதோ.. நின்ற இடத்தில் அவள் வேரூன்றி நிற்க, அவனோ  புன்னகைத்தவாரே பின்னந்தலையை கோதிக்கொண்டே நடக்க, கள்ளத்தனமாய் அவள் கண்கள் அவனை தொடர, திரும்பி அவள் முதுகை பார்த்துகொண்டே உடைமாற்ற சென்றவனுக்கு குதுகலம் ஒட்டிகொண்டது.
டி.ஷர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டே அவளருகில் வந்தவனை எதிர்கொள்ள முடியாமல் எங்கோ பார்க்க அவனோ, “என்ன லட்டு.. பிடிசிருக்கா?”
அவன் கேள்வியில் ‘அச்சோ அப்பட்டமா தெரியுதா?’ என்று அவனை பார்த்தவள் மலங்க மலங்க விழிக்க, ‘அந்த கண்களில் எத்தனை முறை வேண்டுமானலும் வீழ்ந்து மூழ்கலாம்’ என்று எண்ணியவன், “கண்ணால என்னை முழுங்காம பதில் சொல்லு… என் ரூம் பிடிச்சு இருக்கா?”
‘ப்ச்.. ரூமா?’ சிறு ஏமாற்றம்.. ‘என்னை பிடிச்சிருகானு கேட்க மாட்டானா? உன்ன பிடிச்சிருகுன்னு சொல்ல மாட்டானா.. எனக்கு இப்போ தோணினமாதரி அவனுக்கு எதுவும் தோணலியா?’ மனம் ஏங்க… ஒரு முறை அறையில் பார்வை ஓட்ட ஏதோ நினைவு வந்தவளாய், “நீங்க.. இங்க?” கேட்டவள் கண்கள் பெரிதாய் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தில் நிலைத்தது. அவன் சுசிலாவின் கழுத்தை கட்டிக்கொண்டிருந்தான்.. பளீரென்ற சிரிப்போடு!
“கண்ணா..” சுசிலா வரும் அரவம் கேட்டது.
சுதா முகத்தில் ஏகப்பட்ட கேள்விகள், “அப்போ நீங்க?” ஆரம்பித்துவிட்டாள்.. என்ன என்று கேட்பது? ‘உங்களுக்கு இந்த வீட்டோடு என்ன உறவென்றா?’ சுசிலாவோடு இவ்வளவு நெருக்கமான புகைப்படம் ஏகப்பட்ட குழப்பம்.. என்ன நினைப்பது என்று கூட தெரியவில்லை.. “அவங்க தம்பியா நீங்க?”.. ‘அப்புறம் எதற்கு வீட்டு வேலை செய்பவன் போல் அம்மா என்றான்?’ கலவரமும் கேள்வியுமாய் அவனைப் பார்க்க
“நீ இங்க இருக்கியாமா? ஸ்டடி ரூம்ல ஆள காணோமேனு பார்த்திட்டு வரவும், இங்க ஆள் நடமாட்டம் இருக்கவே இங்க வந்தேன். கண்ணா நீ வீட்டில தான் இருக்கியா? இவன் தான் சுதா என் மகன் கண்ணன்” அறிமுகப் படலம் முடிந்ததும் அடுத்த அறையில்  பலகாரத்தோடு நின்று கொண்டிருந்த மைதிலியிடம் அவர் இன்னும் ஒரு தேநீரோடு வரச் சொல்லச் சென்றார்.
அவள் கையிலிருந்த பக்கோடாவை பார்த்தவன், “இந்த கலவரதுலேயும், கிரைண்டர் கரெக்டா வேல செய்யுது..?” அவன் பேசியது அவள் காதில் விழுந்தால் தானே!
அவன் பெயரைக் கேட்டதும் கண்கள் முழுவதும் திறந்து சுதா விழிக்க,
“ஒரு நாளைக்கு எத்தன தரம் தான் இப்பிடி முழிப்ப..”
உதட்டை ஈர படுத்திக்கொண்டு தலையை நம்பாமல் அசைத்துக்கொண்டே, “நீங்க தான் அவங்க மகனா?”
“ம்ம்” அவன் தலை அசைக்க
“நிஜமா?”
சிரிப்பை அடக்க முடியாமல், “நிஜமா!” என
“கண்ணன்??”
“ம்ம்.. நானே!”
தான் ரசித்து ரசித்து கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை கேட்டாளே அந்த கண்ணனா? ஏழு மாத பிஞ்சாய் பொக்கைவாயோடு அவள் இதயத்தைச் சற்று முன் கவர்ந்தானே அந்த கண்ணனா? இவனைப் பற்றி இவனிடமே எத்தனை முறை..
சிரிப்பும் கண்ணில் நீரும் ஒன்றுசேர வந்தது.
கையிலிருந்த கைப்பேசியால் அவன் தோளில் அடித்தவள், “ஏன் என் கிட்டச் சொல்லவே இல்ல..” அவனை பொய்யாய் முறைக்க
பொய்யாய் முறைத்துக்கொண்டே, கண்ணீர் நிரம்ப சிரித்துக்கொண்டே அவனை பார்த்தவளை ரசிக்க ரசிக்கப் பார்த்தான். இதோ.. இந்த முக பாவம் பார்க்கத் தானே அவனும் இத்தனை நாள் காத்திருந்தான்.
“முதல் நாளே நான் தான் கண்ணன்-னு சொன்னதுக்கு நீ தானே ஏதோ லட்டு திருடனை பாக்கரமாதரி பார்த்த. அப்புறமும், நான் எத்தன தடவை கண்ணனை பாக்குரியா… பாக்குரியானு ஏலம் விட்டேன்… நீ தான் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்ட.. சரி தெரியும்போது தெரியட்டும்னு விட்டுடேன்! அது கூட நல்லா தான் இருந்துது!”  என்றான் கூளாய்.
“இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது..? என்னை ஒரு காமடி பீஸ்சாக்கீட்டீங்க! உங்களை தோட்டகாரன்னு சொன்னதுக்கு, பொடியன்னு நினைச்சு திட்டினதுக்குக்கெல்லாம் என்னால் சாரி கேக்க முடியாது..” முகத்தை உற்றென்று வைத்துக்கொண்டே சொல்ல
“வேண்டாம்.. சொல்லாத..”
கலவரத்தோடு அவள் நகம் கடிக்க, அவள் கையை வாயிலிருந்து எடுத்து அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் துடைத்து கீழே விட்டவன், “இன்னும் என்ன?”
மீண்டும் குதுகலம் திரும்ப, “என்னால நம்பவே முடியல.. ஷீ லூக்ஸ் ஸோ யங்! சத்தியமா நீங்க கண்ணனா இருப்பீங்கனு நான் எதிர் பாக்கல.”
“ஷீ இஸ் யங்! அம்மா ரொம்ப அழகா இருந்தனால.. சில பல பிரச்சினையைத் தவிர்க்க, டீன் ஏஜ்லயே எங்க தாத்தா.. அம்மாவை ஒரேயடியா பாழும் கிணத்தில தள்ளி விட்டுட்டார்..!” அவன் முகத்திலிருந்த லகு தன்மை மாறிப் போய் இறுக்கமடைய,
“ரென்று பேரும் அப்பிடியே பால்கனி வாங்கமா.. அங்கயே உக்காந்துகலாம்!” கூறிக்கொண்டே சுசிலா பால்கனிக்கு விரைந்தார்.
அஷோக்கின் மிகப் பெரிதாயிருந்த அறையைப் பார்வை இட்டுக்கொண்டே நகர அதிலிருந்த கலை நுட்பம் அவளை கவராமலில்லை. அந்த தளத்தில் பாதி இடமும் அவன் அறையே நிறைத்திருக்க, ஒரு பக்கச் சுவர் முழுவதும் கண்ணாடி சாளரத்தால் அடைக்கப் பட்டிருந்தது. மாலை வெயில் உள்ளே வாராமல் இருக்க அந்த முழு கண்ணாடிச் சுவரிலும் திறை சீலை அலங்கரித்து கொண்டிருந்தது. சுற்றி “ட” வடிவில் பால்கனி பரந்து விரிந்து காணப்பட்டது.
பால்கனி, புல் தரையாலும் பூ செடிகளாலும் அலங்கரிக்க அது ஒரு நவீன மாடித்தோட்டமாகக் காட்சியளித்தது. நிழர்கூடமும், பூ பந்தல்களும், இருவர் படுக்கும் அளவுக்குத் தேக்கு மர ஊஞ்சலும், பெரிதாய் வளர்ந்து விரிந்து, மாடிக்கு நிழலும் மணமும் பரப்பிய செண்பக மரம், அதன் கிளை ஒன்றிலிருந்த குருவிக் கூடு என ஒட்டு மொத்த அழகைத் தாங்கி இருந்த ‘சரணாலயம்’ போன்ற இடத்தில் தன்னையே மறந்து நின்றுவிட்டவளை, “இன்னும் இங்கேயே இருக்கியா.. வா டீ குடிக்கலாம்..” என அவன் ஃப்ரென்ச் சாளரம் ஒட்டி இருந்த பால்கனி பக்கம் அழைத்துப் போக, மலைத்துப் போய் நின்றுவிட்டாள். ‘உலகின் தலை சிறந்த ஓவியனின் பிழை இல்லா உள்ளம் கொள்ளை கொள்ளும் ஓவியமா இது? இந்த கலவையில் கூட நிறங்கள் அழகாக இருக்க முடியுமா?’ எண்ணாமல் அவளால் இருக்க முடியவில்லை.
மாலை மங்கும் வேளை சூரியன் அதின் மொத்த அழகுடன் அந்த கடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது, கடல் அழகை மறைக்காத வண்ணம் அந்த இடம் முழுவதும் சிறிய வகை செடிகளே இருந்தது.
தேநீர் முடிந்தும் பேச்சு நீண்டது. நேரம் மறந்து சுசிலாவும் சுதாவும் பேச்சும் சிரிப்புமாய் அந்த வீட்டை நிரப்ப, அஷோக்கோ தன் முழு நேர வேலையாய் உள்ளங்கையை நாடிக்குக் கொடுத்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.
கடற்காற்றில் பறந்து கொண்டிருந்த அவள் கூந்தல், வெண்பற்கள் தெரிய உதடு விரிந்து விரிந்து மூட உதட்டோடு போட்டியிட்டு சிரித்துக்கொண்டே அவனை அடிக்கடி வருடிச் சென்ற அவள் விழிகள், பேச்சின் நடுவில் எழுந்து மேலே சென்றும் கீழ் இறங்கியும் வளைந்தும்  என நாட்டியம் புரிந்த அவள் வளைந்த புருவம், அபிநயம் புரிந்த அவள் நீளமான விரல்கள் என பார்த்துக்கொண்டிருந்தவன் உலகை மறந்து அவளுள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசியது எதுவும் அவன் காதில் விழவில்லை..  கண்களோடு அவன் இதயத்திற்கும் இதமாகவே இருந்தாள். பார்க்கப் பார்க்க காதல் கூடுமா என்ன? கூடுவது போல் தான் தோன்றியது.
வெறும் ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்தவனுள் உடல் முழுவதும் ஒரு பரவசம் படர ஆரம்பித்தது. ‘எதற்கு அவளை இப்படிப் பார்த்து வைக்கிறேன்? அவளிடம் எதைக் கண்டு என்னையே இழக்கிறேன்? கொஞ்சி பேசும் கண்னைக் கண்டா? பேச்சினிடையே முத்துப் பற்கள் கடித்த பவழ இதழை கண்டா? பௌர்ணமி நிலவைக் காட்டிலும் வசிகரிக்கக் கூடிய அவள் முகத்தை கண்டா? ஐய்யோ.. இவளை பார்த்தா கவிதையா வருதே..’ அவன் எண்ணம் அசை போட, கண்கள் அதன் வேலையை செல்வனே செய்துகொண்டிருந்தது.
கைதேர்ந்த சிற்பியின் பதுமையை ரசிப்பது போலக் கண்ணிமைக்காமல், இதழில் உறைந்த புன்னகையோடு பார்வை அகற்றாது அவளை அவன் பார்வையால் விழுங்க, அதைக் கவனித்த சுதா, “இப்போ எதுக்கு இவர் இப்படி பாக்கரார்? பக்கத்தில அம்மா இருக்கது மறந்து போச்சா? அவங்க கவனிச்சா.. என்ன நினைப்பாங்க..” என்ற எண்ணத்தில் திணற, அதற்கு மேல் அவளுக்கு பேச்சு வந்தால் தானே?
மகனின் பார்வை தீண்டலையும், அதற்கு அவள் அவஸ்தையாய் நெளிவதையும் கண்டும் காணாதவர் போல் சுசிலா, “மல்லி வாசம் வருது.. வா அந்த பக்கம் போகலாம். நீ பிச்சு தா.. நான் கட்றேன்.” என்று இருவருக்கும் சொல்லாமல் தான் அங்குதான் உள்ளேன் என்பதை  உணர்த்தினாலும் அவருக்கு உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள்.
அஷோக்கை வந்த நேரம் முதல் கவனித்துக் கொண்டிருந்த சுசிலாவிற்கு ‘தன் மகனா இப்படி.. பெண்களையே பார்க்காதவன் போல் ஒரு பெண்ணில் லயித்து நிற்கிறான்’ என்பது போய்.. ‘எப்படியோ இப்பொழுதாவது என் மகனுக்கும் ஒருத்தியைப் பார்க்க தோன்றியிருக்கிறதே’ என்றிருந்தது. அதுவும் சுதாவே அவருக்கு மருமகளானால் இதை விட வேரென்ன வேண்டும். அவரின் நீண்ட நாள் கனவாகிய மகனின் திருமணம்… ‘இரு இரு.. உன் நினைப்புக்கு கொஞ்சம் பிரேக் போடு.. உன் மகன் தானே.. ‘அம்மா சும்மா சைட் அடிச்சேன் அவ்வளவு தான்’-னு சொல்லிடுவான்.. அவனா சொல்லுற வரைக்கும் எந்த முடிவுக்கும் வராத!’
இதோடு அந்த நினைவை புறம் தள்ளினார்.
சுதா, மீனாட்சியம்மாளின் பேத்தி என்பது மட்டுமே அவர் அறிந்திருக்க அவளிடமே அவளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார்.
“கண்ணன் பொறக்கரதுக்கு முன்னாடியே உங்க அம்மாக்கு ஒரு மகன் பிறந்ததா ஒருத்தர் மூலமா கேள்விப் பட்டதா மீனாட்சியம்மா அப்போவே சொன்னாங்க. அவன் இப்போ என்ன செய்யறான்?”
சுசிலாவின் கேள்வி அவளுக்கு உவப்பாக இல்லையென்றாலும் அவர்களுக்குத் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லித்தானே ஆக வேண்டும். அவர்கள் கேட்ட தகவலோடு அவள் பெற்றோர் பற்றியும் சொல்ல ஆரம்பித்தாள்.
“தெரியலை நான் பார்த்தது இல்ல. வெக்கேஷன் வந்த இடத்தில, பேபி ரொம்ப குட்டியா இருக்கும் போதே காணாம போச்சுனு அம்மா அடிக்கடி சொல்லி அழுவாங்க. என்ன தேடியும் கிடைக்கலியாம். அதனால நான் ரொம்ப செல்லம் எங்க வீட்டுல.
அம்மாக்கும் அப்பாக்கும் நான் தான் எல்லாமே.. என்னை நல்லா பார்த்து கிட்ட அம்மா அவங்கள ஒழுங்கா பார்த்துகல போல.. நான் ஸ்கூல் லீவ்ல அம்மா கூட வீட்டுக்குப் பின்னாடி டென்னிஸ் விளையாடும் போது மயங்கி விழுந்தாங்க.
ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா.. அம்மா இறந்துட்டதா சொல்லிட்டாங்க. சன் ஸ்ரோக் அண்ட் டீஹைட்ரேஷனாம். காலைல எட்டு மணி வேயில் தான்! எனக்கும் அப்பாக்கும் பித்து பிடிச்சமாதரி ஆகிடுச்சு.
காலைல என்னை கொஞ்சி பால் குடிக்கச் செஞ்ச அம்மா, பிரேக் ஃபாஸ்டுக்கு ஏங்கக் கூட இல்ல.. இன்னுமே நினைச்சா மனசு வலிக்குது. எனக்கும் அப்பாகும் அம்மா விட்டா வேற உலகமே இல்ல..
அம்மா கூடவே அப்பா கண்ணுல இருந்த உயிரும் போயிடுச்சு. அம்மா என்னை விட்டு போனதுல நான் அழுதே கரைய அப்பாவோ அழவே இல்ல. அப்பாவோட ஃப்ரெண்டு லீசா ஆண்டி என் கிட்ட சொன்னாங்க அப்பா நிலையை. அன்னைக்கு நைட் அப்பா மடில படுத்துட்டு சொன்னேன்.. ரொம்ப செல்விஷ்ஷா.. “நீங்களும் என்னை விட்டுட்டு போகபோறீங்களாபா? சாப்பிடாம அழாம இருந்தா உங்க ஹார்ட் நின்னுடுமாமே.. நீங்களும் இல்லாம நான் என்னப்பா பண்ணனும்? நானும் சாப்பிடமா இருகேன்பா.. ஆனா அழமா இருக்க முடியல பா.. என்னப்பா பண்ணட்டும்?”
பதினாலு வயசில எனக்கு ரொம்ப பயமா இருந்துது.. அப்பாவும் இல்லாம ஒரு வாழ்க்கை ரொம்ப பயமா இருந்துது. நான் அப்பா பத்தி யோசிக்கவே இல்ல. ஆனா என் அப்பா அப்பவும் என்னை மட்டும் தான் யோசிச்சாங்க! என் கன்னத்தில அப்பா கண்ணீர் விழுந்த பிறகு தான் எனக்குப் பயம் போச்சு!
அப்பாவால பாவம் அம்மா இல்லாம தாக்குப் பிடிக்க முடியல. எனக்காக எவ்வளவோ அவரை தேத்திக்க முயற்சி பண்ணினாலும் அவரால முடியல. அப்பிடி கூட ஒரு மனுஷனால ஒருதரை லவ் பண்ணமுடியுமானு இருக்கும் எனக்கு! தாடி வளர்த்து, குடும்பத்த மறந்து குடிக்கல. அப்பா என் கூடவே இருந்தாங்க. ரொம்ப அன்பா பார்த்துகிட்டாங்க. உலக வாழ்க்கைய பத்தி சொல்லி தந்தாங்க.. அப்பா வேலையை விட்டுட்டு அங்க அங்க இருந்த சொத்தெல்லாம் வித்து என் பேர்ல போட்டாங்க. ரெண்டு வீடு மட்டும் விக்கலை.. அதுல இருந்து வாடகை வருது. அப்பாவோட ஃபிரண்ட் லீசா தான் அத இப்போ பார்த்துகராங்க.
இருந்த ஊர விட்டுட்டு நாங்க அத்தை வீட்டுகிட்டேயே ரீலொகேட் ஆனோம். தானும் போய்ட்டா பொண்ணு அனாதையாகிட கூடாதுனு நினைச்சிருப்பார் போல.. கேரளால இருக்க அவங்க அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போய் அத்தை மாமா, அவங்க மகன் கூட என்னை பழக்கி விட்டாங்க.
ஒரு நாள் தூங்க போகரதுக்கு முன்ன, அப்பா மடில நான் தல வச்சு கத பேச, அன்னைக்கு அப்பா, அம்மா வீட்டைப் பத்தியும் அவங்க மேரேஜ் பத்தியும் சொன்னாங்க. நான் எதுக்கும் பயப்படக் கூடாது.. எப்போவும் தைரியமாவும் தன்னம்பிக்கையோடும் இருக்கனும்னு சொன்னாங்க.
கண்டிப்பா நல்லா படிக்கனும்னு சொன்னாங்க. எதுக்குப்பா இப்போவேனு கேட்டதுக்கு.. நான் இருந்தாலும் இல்லாட்டியும் என் பொண்ணு நல்லா வாழவேண்டாமா.. நீ ரொம்ப நல்லா இருப்ப என் லட்டு குட்டினு சொல்லிட்டு தலைய தடவி கொடுத்தாங்க.
நான் காலைல எழுந்ததும் தான் கவனிச்சேன்.. இன்னும் அப்பா மடியில தான் இருக்கேனு! அப்பா அசையவே இல்ல. என்னோடைய கடைசி சொந்தமும் போயிடுச்சு..
முகம் பார்க்காத அண்ணன், உலகத்தில இருக்க மொத்த பாசமும் அள்ளி கொடுத்த என்னுடைய அம்மா, என்னுடைய அம்மாவா, அப்பாவா, பெஸ்ட் ஃபிரெண்டா, குருவா,  எல்லமுமா இருந்த அப்பா.. யாருமே இல்ல இப்போ.. இதோ தனியா யாருமே இல்லாத அனாதையா.. இந்த வலிய யாருக்கும் சொன்னா புரியாது. ஆனா அந்த மாதரி வலி புரியாம போரதே மேல்.. எனக்கும் இந்த வலி புரியமலே போயிருக்கலாமே..” அவளால் முடிக்க முடியவில்லை. அவள் பேச்சு நிற்க, கண்கள் அருவியாய் மார.. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் இதயமும் பாரமாய் கனத்தது.
அவள் கண்ணீர் அஷோக்கின் மனதைப் பிசைய அவன் கண்ணும் கசிந்தது. அவன் அப்பாவை அவனுக்குத் தெரியாது. ஆனால் அப்பா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்தது.
அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியுமா? ஆறுதல் சொன்னால் போகக்கூடிய வலியா இது? அவள் தனிமையை உணராத வண்ணம் அவளுக்காக இருக்க வேண்டும் போல இருந்தது. ‘நான் உனக்காக இருப்பேன்’ என்று தோளோடு சேர்த்து அணைத்துச் சொல்லுவேண்டும்.. உன் உயிராய் நானிருப்பேன் என்று உணர வைக்கவேண்டும் என்ற ஆசை மேலோங்கியது.
கண்களை துடைத்துக்கொண்டே சுசிலா சுதா அருகில் சென்று அவள் கண்ணீர் துடைத்து, “அழாத சுதா.. உன்ன விட்டு அவங்க போனத பத்தி யோசிக்காத. உன் கூட அவங்க இருந்ததை நினைச்சு சந்தோஷ படு. இப்பிடி ஒரு அன்பான பேரன்ஸ் உனக்கு கிடைச்ச பிளஸ்ஸிங். அவங்க நீ என்னைக்கும் சந்தோஷமா இருக்கரதான் விரும்பினாங்க. அதே மாதிரி இரு. உனக்கு யாரும் இல்லேனு மட்டும் நினைக்காத.
கண்ணன் பிறந்ததும் கையில வாங்கின அந்த நிமிஷமே என் உயிராகிட்டான். அவன் மட்டுமே என் உலகமாகிட்டான். ஒரு நிமிஷத்துல எப்படி அந்த மாதரி நான் உணர்தேனு எனக்குத் தெரியாது. அது வரைக்கும் என்னோட வாழ்க்கை வேற, அவன் வந்த பிறகு அப்பிடியே மாறி போச்சு. அவன் தான் எல்லாமே.. அது ஏன் எப்படினு தெரியாது. அவன் கண்ணுல தண்ணி வரதா நான் என்னைக்குமே விரும்ப மாட்டேன். நீயும் உன் அம்மா அப்பாக்கு அப்படி தான்.. நீ மனச தளர விடாமா இருக்கத பார்த்தா எனக்கே பெருமையா இருக்கு. உன் அம்மா அப்பாவும் உன்ன பார்த்துட்டே இருப்பாங்க.
உன்ன இந்த கொஞ்ச நாளா தான் எனக்குத் தெரியும். இருந்தும் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். என்னால கண்டிப்பா உன் அம்மாவா ஆக முடியாது. ஆனா அம்மா மாதிரி உன் மேல அன்பு காட்ட முடியும்.
உனக்கு தோணினா அம்மானு கூப்பிடு.. கண்டிப்பா ஒரு நல்ல அம்மாவா, ஃபிரண்டா இருப்பேன். நீ என்னை ஏத்துகிட்டா உன் கூட நானும் சந்தோஷ படுவேன்.”
கண்ணீரைத் துடைத்து அவர் தோளோடு சாய்த்து உச்சந்தலையில் முத்தமிட்டார். அந்த நிமிடம் சுசிலா ஒரு தாயாய் சுதாவிற்குத் தெரிந்தார். தாய்மைக்கு மட்டும் தான் பிறர் வலியை தனதாக்கிக்கொள்ள முடியும். தாய்மை என்பது ஒரு உன்னதமா உணர்வு, அதை அனைவரிடமும் பார்க்க முடிவதில்லை.
பெற்றோர் இறப்பிற்குப் பின் முதல் முறை அவள் இதயம் திறந்திருந்தாள். உள்ளிருந்த அழுத்தம் குறைவது போல் இருந்தது. தன்னை நசுக்கி கொண்டிருந்த தனிமை வெறுமை அவளை விட்டு செல்வது போல உணர மனம் லேசாக ஆரம்பித்தது.
எத்தனை நாள் ஒரு அன்பு தோளுக்காக ஏங்கியிருப்பாள்?
அஷோக்கிற்கு அதுவரை வந்த கண்ணீர் போன இடம் தெரியவில்லை.
’ஆஹா.. இந்த அம்மாக்கு என்ன பிரச்சினை? அத்தைனு கூப்பிட சொல்லாம.. அம்மானு கூப்பிடச் சொல்லி என் வாழ்க்கைல விளையாடுராங்களே..’
கனத்த மனதோடு அவரவர் சிந்தனையில் இருக்க, நேரம் தெரியாமல் சுதாவின் அலைபேசியும் சிணுங்கியது!
ஃபோன் பேசியவள், சுசிலாவிடம், “பாட்டி தான்! நான் கிளம்புறேன்”
“ம்ம்.. பொய்ட்டு வா டா.. இது உன் வீடு.. எப்போவும் நாங்க இருக்கோம்.” கூறிக்கொண்டே கையிலிருந்த பூவை அவள் தலையில் சூடிவிட்டார்.
அவ்விடம் விட்டு நகர்ந்தவள், அஷோக்கின் புறம் தலையைத் திருப்பி ஒரு சிறு புன்னகையுடன்  தலையசைத்துக் கிளம்பினாள்.
அவள் போன பின்னும் அவள் போன திசையை வெறித்து கொண்டே நின்றிருந்தான். அவனுக்குப் புரியவில்லை.. இவ்வளவு பாரமா அவள் மனதில்.. ஆனால் அதை இது வரை அவள் முகத்தில் காட்டியதே இல்லையே.. எப்படி!
“கண்ணா அவ ஷாப்பிங் பேக் மறந்திட்டோம் பாரு, சோஃபா பக்கத்துல இருக்கு.. அத அவ கிட்ட குடுத்திடு.. இன்னும் வேளில பொய்ருக்க மாட்டா.. ”
அவர் சொல்லி முடிக்கும் முன், படிகளில் தாவித் தாவி கீழே இறங்கினான். அவள் கதவைத்  தாண்டவும், “லட்டு.. லட்டு நில்லு!” என்ற குரல் கேட்டு நின்றாள்.
“என்ன” என்பது போல் அவனை பார்த்து புன்னகைக்க, இதழ் மட்டுமே விரிய, கண் கண்ணீரைச் சொரிந்தது.
அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே, “நீ என் கிட்ட ஏன் சொன்னது இல்ல?”
“எத?”
“உன்ன பத்தி?”
“என் வாழ்கையோட சந்தோஷமா தருணம் எல்லாம் சொன்னேனே.. இது வெறும் வலி! வலி மட்டும் தான்! வலிய கிளறினா இன்னுமே வலிக்கும்னு சொல்ல!”
“உன் சந்தோஷத்த மட்டும் இல்ல சுதா.. உன் துக்கதிலும்.. உன் கண்ணீரிலும் எனக்கு பங்கு வேணும்..”
அவள் பதில் சொல்லவில்லை. கண்ணீர் கண்ணை மறைக்க மீண்டும் வலியோடே ஒரு புன்னகை.
அந்த புன்னகைக்குள் இன்னும் என்ன என்ன புதைத்து வைதிருக்கிறளோ?
“உன் கஷ்ட்டத்தை வெளில சொல்லணும் லட்டு.. அப்போ தான் மனசுல இருக்க பாரம் குறையும்.. உள்ளையே போட்டு புழுங்கிக்காத. எதுனாலும் நான் இருக்கேன்..”
“ம்ம்.. டைம் ஆகுது.. கிளம்பட்டா?” அவன் முகம் நோக்கி நிற்க,
“உங்க அப்பாவும் உன்ன லட்டுனு தான் கூப்பிடுவாரா?”
‘ஆம்’ என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டியவளிடம், “நான் அப்பிடி கூப்பிடுறது உனக்குக் கஷ்டமா இருந்தா.. நான் சுதானே கூப்பிடுறேன்!”
“வேண்டாம் வேண்டாம்.. நீங்க இப்பிடியே கூப்பிடுங்க.. என்ன செல்லம் கொஞ்சும் போது மட்டும் கூப்பிடுவார். நீங்க அப்பிடி கூப்பிடுறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னுடைய அப்பாக்கு அப்புறம் என்னை யாரும் ஆசையா கூப்பிட்டதே இல்ல..”
நேரத்தைப் பார்த்தவள், “கிளம்பட்டா?” என
“உன்னுடைய ஷாப்பிங்க் பேக் வேண்டாமா?” என்று கேட்க, அதை வாங்க நீட்டிய கையை பிடித்துக்கொண்டான்.
‘நான் இருக்கேன்’ என்பது போல அதில் அவன் கட்டை விராலால் தடவி கொடுக்க. அவள் கண்கள் லேசாகத் திரையிட, “உங்க அம்மா என்ன மகளா தான் பாக்க ஆச படுராங்க, ‘அம்மா’னு கூப்பிட சொன்னாங்க!” முடிக்கும்முன் தொண்டை அடைத்து கொண்டது.
“என்னொடைய சொந்ததுல ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி வந்திருக்கா. அவ அத்தையை அம்மானு தான் கூப்பிடுரா. அவ கிட்ட அவங்க, அம்மா மாதிரியே பாசமா இருக்காங்களாம். நீ கூட உனக்கு பிடிச்சா அம்மானே கூப்பிடு..”
“ம்ம்..” என்று தலையை உருட்ட
“நல்லா பூம் பூம் மாடு மாதரியே தலையை எப்பவும் ஆட்டு.. சரி கிளம்பு! எதுனாலும் என் கிட்ட தயங்காத.. சொல்லிடு. மனசுல போட்டு அத கஷ்ட்ட படுத்தாத, எனக்கு புழுக்கம் பிடிக்காது. எப்போவும் நான் இருக்கேன். புரியுதா? என்னைத் தள்ளி வைக்காத.. மனசைப் போட்டு குழப்பிக்காத. நிம்மதியா தூங்கு.. எல்லாம் சரி ஆகிடும். குட் நைட்” கூறிக்கொண்டே அவள் கையை மனமில்லாமல் விடுவித்தான்.
அங்கிருந்த ஸ்கூட்டியில் அவள் பேகை வைத்து வழி அனுப்பி அவள் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றான். வாயிலில் நின்ற செக்யூரிட்டியை இன்டெர்க்காமில் அழைத்து அவள்  வீட்டிற்குள் போகும் வரை பார்க்க சொல்லிப் பணித்து விட்டே உட்சென்றான்.
அவள் கண்ணீர் அவனைப் பாடாய்ப் படுத்தியது. அவனோடே அவளை வைத்துக் கொள்ளவேண்டும். வாழ்நாள் முழுவதும். வாழ்வின் அனைத்து இன்பத்தையும் அவளுக்கு அள்ளி தர வேண்டும்.. உள்ளம் கூப்பாடு போட்டது.
அவளைத் தூங்கச் சொன்னவன் தூக்கத்தைத் தொலைத்தான். அவளும் தன்னை விரும்புவதை உணர்ந்தபின், அவளைப் பார்க்காத நிமிடங்களில் தேனும் கசந்தது, பஞ்சு மெத்தையும் அவஸ்தையைத் தந்தது.
காதல் தந்த இன்ப அவஸ்தையும் இனிக்கவே செய்தது அவனுக்கு!
மலரைத் தேடும் வண்டாய் – என்றும் அவள் நினைவாய்
பருவக் கோளாரின் பேருதவதியோடு காதலெனும் மாயவலையின் – அவனும்…

Advertisement