Advertisement

UD:7  

பூங்குழலி: “போற்றி பாடடி பொண்ணே….”

கனி: “ம்ம்ம்ம்ம்….”

பூங்குழலி: “தேவர் காலடி மண்ணே…”

கனி: “ம்ம்ம்ம்ம்…..”

“அப்புறம்….” என தாடையில் கை வைத்து யோசிக்க,

“பாட்றி ராசாத்தி….” என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள்,

“தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்…” என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்…

கனி, “எனக்கும் தெரியல புள்ள… வேற பாட்டு பாடுவோம்…” என்றதும் சரியென்று தலையை ஆட்டிய பூங்குழலி, அவள் மண்டையில் சட்டென தோன்றிய பாட்டை பாட தொடங்கினாள்…

“வா வெண்ணிலா…

உன்னை தானே வானம் தேடுதே…” என்று முடிக்கும் முன்பே அவள் மண்டையில் ஒரு அடி இடியென இறங்கியது…

“ஆஆஆஆ…. ஏன்டி லூசே என்னைய அடிச்ச…. ?” மண்டையை தேய்த்தபடியே கேட்க,

“ம்ம்… பொழுது விடிஞ்சு மணி ஒன்பதரை தான் ஆச்சு… அதுக்குள்ள வெண்ணிலா வா ன்னு சொல்லுத… சிச்சுவேஷன் பாட்டு பாடுடினா நிலா, பலா’ன்னு பாடிட்டு இருக்கா… ஒழுங்கா வேற பாட்ட பாடு…” என்று அதிகார தோரணையில் மிரட்டியபடி  வெட்டும் வெங்காயத்தில் கவனமாக இருந்தவள் ,தன்னை வெட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியை பார்க்க தவறினாள்…

‘என்ன சத்தத்தையே காணும்….’ என்று புருவம் சுருங்க தலை நிமிர்த்தி பார்த்தவள் லேசாக அதிர்ந்தாள்…

‘ஆத்தி… ஆர்வ கோளாறுல பேசிப்புட்டோமே… லூசு கிறுக்கி எறங்கி அடிக்குமே…’ என்று மனதில் அலறியபடி சற்று நகர்ந்து அமர்ந்தவள், பல் இளித்தபடி

“இல்ல பூங்குழலி… சும்மா வெளாட்டுக்கு சொன்னேன்… உனக்கு எதைய பாட தோணுதோ அதையவே பாடு புள்ள… ஈஈஈஈஈ….” என்று பல்லை காட்டினாள்…

ஏனோ பூங்குழலிக்கு அவளை பார்த்து சிரிப்பு வந்துவிட, “அடசீசீ… பல்லை காட்டாதா… பல்பொடி விளம்பரத்துக்கு போஸ் குடுக்குற மாதிரி…” என்றவள் தன் வேலையை பார்க்க தொடங்க, கனிக்கு அப்பொழுது தான் ‘அப்பாடா….’ என்றிருந்தது…

சற்று நேரம் அமைதியில் கரைய, பூங்குழலியின் எண்ணங்கள் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தது… கனியோ, “எம்புள்ள… இப்படி காலேஜு கட் அடிச்சுட்டு வூட்டுல இருக்குற சுகமே தனியில்ல…?” என்று கேட்டபடி நறுக்கிய வெங்காயம், காய் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, அவளை பின்பற்றி தன் சிந்தனையில் ஆழ்ந்த பூங்குழலியும் ‘ம்ம்ம்…’ கொட்டியபடி பின் தொடர்ந்தாள்….

அவளது யோசனை முகத்தை கண்டு, அவள் தோளை பற்றி உழுக்கி,”என்னபுள்ள ஆச்சு…? என்னதைய அப்படி யோசிக்குறவ…?” என்று கேட்கவும் நடப்பிற்கு வந்தவள், அவசரமாக

“ஆங்ங்… ஒன்னும் இல்ல…. ஆமா என்னதைய சொன்ன நீ இப்ப…?” என்று கேட்கவும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு, முன் சொன்னதை மீண்டும் சொல்ல,

பூங்குழலி, “ஆமா புள்ள… ஆனா இந்த ஆத்தாதேன் எத்தன வேலைய செய்ய சொல்லிபுட்டு போயிருச்சு… ம்ம்ம்… கொஞ்சம் கூட செரியில்ல புள்ள…” என்று புலம்ப, அவளது யோசனைக்கான கேள்வியை மறந்துவிட்டு அவள் கூறியதை தலையை ஆட்டி ஆமோதித்தாள்…

அதன்பின் இருவரும் பேசி, சண்டையிட்டு, புரளி பேசி இரண்டு மணி நேரத்தில் சாதம் வைத்து இரு பொறியலும் ஒரு கத்திரிக்காய் குழம்பும் வைத்து முடித்து சமையலறையை விட்டு வெளிவந்தனர்… பின் சற்று நேரம் உணவு சமைத்ததற்கு ஓய்வெடுத்து விட்டு, பல்லாங்குழி ஆட தொடங்கினர்…

“கனி….” என்று மெல்ல இழுத்தாள் உதடு கடித்தபடி…

“ம்ம்ம்….” குழியில் புளியங்க்கொட்டையை மும்முரமாக போட்டுக் கொண்டே பூங்குழலியின் அழைப்புக்கு செவி சாய்த்தாள்…

“டி கனிஇஇஇ…” என்று இழுக்க,

“ம்ம்ம்ம்ம்…..” என்று இழுத்தபடியே நிமிர்ந்து, “இப்ப நீதேன் புள்ள ஆடணும்…” என்றவளை ஒருமுறை உதட்டை சுழித்து லேசாக சிணுங்கியவள் பேருக்கு ஆடிவிட்டு, மீண்டும்

“கனிஇஇஇஇஇஇஇஇஇ………” என அழைக்க,

“அய்யோ…. ஏன் புள்ள ஈ ஓட்டுற… என்னனுதேன் சொல்லி தொலையேன்…” என்று கடுப்புடன் கனி கத்தவும்,

“இல்ல… அந்த கார் காரங்க யார்ன்னுட்டு உனக்கு தெரியுமா… ஊருக்குள்ள யாராச்சும் பேசி கேட்டியா புள்ள…?” மெல்லிய குரலில் தயங்கி தயங்கி கேட்க, அவளை சந்தேகமாக ஒரு பார்வையால் அழந்தாள் கனிமொழி…

“என்ன புள்ள… கேள்வி கேட்டா கேவலமா பாக்குத…?” திருட்டு தனம் செய்த குழந்தையை போல இருந்தது அவள் முகதோற்றம்…

“இல்ல உன் முழி செரியில்ல புள்ள அதேன் என்ன விஷயம்ன்னுட்டு பாக்குதேன்… அதுசெரி நீ எதுக்குவே அதைய கேட்குத…? அவங்களதேன் பழிவாங்கிட்டியே பொறவு அவிக யாரா இருந்தா உனக்கு என்ன…? ” என்று கேட்கவும் குழலியின் முகம் ஆர்வமாக மாற,

“அது அந்த கார்காரன எங்குட்டோ பார்த்த மாதிரியே இருக்கு புள்ள… ஆனா எங்குட்டுன்னுதேன் தெரியல…யோசிச்சா கூட நியாபகம் வர மாட்டீங்குது… நம்ம ஊர்குள்ள இதுக்கு முன்ன பார்த்த மாதிரியே இல்ல புள்ள… நானும் எங்குட்டும் போனது இல்ல… பொறவு ஏன் அப்படி தோணுதுன்னு விளங்கல புள்ள… ” என்று தீவிரமாக கேட்க,

“எனக்கு என்னமோ இது செரியா படல டி குழலி… தேவையில்லாம எதுக்கு நீ அவிகள பத்தி இம்புட்டு யோசிக்குறவ…? இதெல்லாம் ஐத்தக்கு தெரிஞ்சுது தோளை உரிச்சுப்புடும்…” என்று எச்சரிக்க, அப்பொழுது தான் பூங்குழலிக்கு தன் தவறு புரிந்தது…

‘சே… கூறு கெட்டவளே… கனி சொன்ன போல நான் இப்படியெல்லாம் யோசிச்சேன்னு ஆத்தாக்கு தெரியவந்தா  எம்புட்டு வேதன படும்… கொஞ்ச நேரத்துல என்ன எல்லாம் யோசன பண்ணிட்டேன்… தப்பு தப்பு… ஆத்தாவோட நம்பிக்கைய நான் காப்பாத்தனும்…’ என்று தன்னை தெளிவு படுத்திக் கொண்டவள் தன் ஆருயிர் தோழியை அணைத்துக் கொண்டாள் நன்றியில்…

“தேங்க்ஸ் புள்ள… நீ சொன்னது செரிதேன்… அவிக யாரா இருந்தா எனக்கு என்ன… ஆனா நீ நினைக்குறாப்புல நான் வேறேதும் யோசிக்கல கனி… எங்குட்டோ பார்த்த மாதிரி இருக்கேன்னுதேன் யோசிச்சேன்… அத தவிர வேற ஏதும் இல்ல புள்ள… என்னைய நம்பு…” என்று உள்ளத்தில் உள்ளதை உண்மையாக கூறிய தோழியை புரிந்து கொண்ட கனி,

“அட கூறுகெட்ட லூசே… உன்னைய நம்பாம வேற யாரல நம்ப போறேன்… நீ நெருப்புன்னுட்டு எனக்கு தெரியும் புள்ள… இருந்தாலும் நம்மதேன் சூதானமா இருக்கோணும்…” என்க,

தலையை ஆட்டி ஆமோதித்தவளுக்கும் தெரியவில்லை, தற்சமயம் தோழியை தெளிவுபடுத்தியவளுக்கும் தெரியவில்லை விதி அனைத்தையும் தலைகீழாக விளையாட போவதை…

“என்ன மச்சான் இங்க நிக்குற…?” என்றபடி ரோட்டோரத்தில் நின்றிருந்த குணாவை பார்த்துவிட்டு காரை விட்டு இறங்கினார்கள் கவியும் விக்கியும்…

“சும்மாதேன் மாப்ள… நீ எப்படியும் மில்லுக்கு போக இந்த பாத வழியாதேன் போவன்னு தெரியும் அதேன் பார்த்து பேசிட்டு போலாம்ன்னுட்டு நிக்குதேன்… ”

விக்கி, ” ஏன் பாஸ் அதுக்கு வீட்டுக்கே வந்துருக்கலாம்ல… பேசுறதுகாக இப்படி பாலத்து மேல உட்கார்ந்து இருக்கீங்க…?” என்று வினவவும், குணா கவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்… பின் கவியும் அப்பாலத்தின் தடுப்பு சுவர் மேல் அமர்ந்தவன்,

“மச்சான்… இது எல்லாம் ஒரு காலத்துல எங்க மீட்டிங் நடக்குற இடம்… ஸ்கூல் முடிஞ்சு இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு தான் அடுத்த வேலையே பார்போம்…” என்று குணாவின் தோள் மீது கைப்போட்டபடி கூறியவனின் முகத்தில் அத்தனை சந்தோஷம்…

காரின் மேல் சாய்ந்து நின்று கைகளை கட்டியபடி நண்பன் பேசுவதை பார்த்த விக்கிக்கு உள்ளுக்குள், ‘ச்சே… நம்ம இந்த மாதிரி எதுவுமே அனுபவிச்சது இல்லையே… சிட்டில இருந்தா எப்படி முடியும்? பக்கத்து வீட்டு ஆளுங்கள கூட தெரியாம தானே இருக்கோம்…’ என்று எண்ணியபடி இருந்தவனின் நினைவில் முன்தினம் கம்பெனியில் ஊர்கார்களை உறவு முறை வைத்து அண்ணா, அக்கா சித்தி, சித்தப்பா, பாட்டி,மாமா என்று கவியழகன் அழைத்தது நினைவிற்கு வந்து முகத்தில் புன்னகையை பூக்க செய்தது…

அதை கண்ட குணா, “என்ன மாப்ள, நீர் மட்டும் தனியா சிரிக்குறீக என்னனுட்டு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல….” என்று கேட்கவும் அவர்களை ஏறெடுத்து பார்த்த விக்கி,

“பெருசா எதுவும் இல்ல… சிட்டில இந்த மாதிரி எல்லாம் இருக்காது… அதுவும் இல்லாமல் இங்க யார் என்னன்னு தெரியாதவங்களை கூட வயசை வச்சு உறவு சொல்லி கூப்பிடுறதை நினைச்சு பார்த்தேன் தெட்சால்…” என்க, கவியும் குணா உடன் சேர்ந்து புன்னகை புரிந்தனர்…

“இங்குட்டு எல்லாம் அப்படிதேன் மாப்ள… சரி நாளமறுநாள், பக்கத்து ஊர்ல நம்ம குமரேசனுக்கு கல்யாணம்… வாரிகளா ரெண்டு பேரும்…?” என்று கேள்வியாக இருவரையும் பார்க்க,

“ம்ம்ம்…” என்று யோசித்த கனி விக்கியை பார்க்க, “போலாம் மாப்ள… அப்படியே ஊர் சுத்துன்ன மாதிரி இருக்கும்…” என்க,

“சரி மச்சான்…” என்று விக்கிக்கு பதிலளித்தவன், குணாவின் புறம் திரும்பி “போலாம் மச்சான்…ஆனா எப்படி எத்தன மணிக்கு…?” என்று கேட்க, குணாவும் அதற்கு பதில் அளித்து விட்டு,

“செரி மாப்ள… அப்ப நான் கிளம்புதேன்… இதைய கேட்கதேன் இங்குட்டு உங்களுக்காக காத்திருந்தேன்… அப்ப பொறவு சந்திக்கலாம்… ” என்றபடியே சுவற்றில் இருந்து இறங்கியவன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்…

பின் கவியும் ஒருமுறை அந்த பாலத்தை பார்த்துவிட்டு, இறங்கி காரில் ஏற விக்கியும் ஏறி அமர்ந்ததும் கார் தொழிற்சாலையை நோக்கி பறந்தது…

“என்னடா யோசனை எல்லாம் பலமா இருக்கு…?” காரை ஓட்டிய படி விக்கியை பார்த்து கேட்கவும்,

“அது யார் அந்த குமரேசன்…? குணாவும் எதுவும் சொல்லல நானும் கேட்கல கிஃப்ட் ஏதாச்சும் தரனுமா…?”

நண்பன் கூறியதை கேட்டு சிரித்த கவி, “டேய்… யாருனே தெரியாம கல்யாணத்துக்கு போலாம்னு சொல்லிட்டு இப்ப எதுக்கு இவ்வளவு ஆராய்ச்சி…?” என்று தோளில் தட்ட,

“ம்ப்ச்ச்… அப்ப ஏதோ ஊர் சுத்த போறோம்னு யோசனைல சரி சொல்லிட்டேன்.. இப்ப அழைக்காத கல்யாணத்துக்கு போறோமேன்னு தோணுது அதான் கேட்டேன்…” என்று அசடு வழிந்தபடி கூற, அதற்கும் சிரித்து வைத்தான் கவி,

“ரொம்ப யோசிக்காத மச்சான்… குமரேசன் எங்க கூட படிச்ச பையன் தான்… கிராமத்துல கல்யாணம் எல்லாம் சிட்டி மாதிரி இல்ல டா… எல்லாரையும் மனசார வரவேற்பாங்க…” என்று கூறி முடிக்கும் முன்,

“அப்ப நம்ம பிரண்டா… தென் நோ பிராபிலம்… கல்யாணத்துக்கு போறோம்… என்ஜாய் பண்ணுறோம்…” என்றவனை பார்த்து சிரித்தபடி காரை ஓட்டியவன் தொழிற்சாலையில் அடைந்திருந்தான்…

அலுவலக அறையில் அமர்ந்து இருந்த கவியழகனின் முகம் படுதீவிரமாக இருந்தது.. அவனை கண்ட விக்கியும், ஏதும் பேசாது அமைதியை கடைப்பிடித்தான்…

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்தார் முருகவேல், “என்ன ராசா… இங்குட்டு வந்து உட்கார்ந்துடீக…? ஏதாச்சும் குடிக்குறீகளா…?” என்று கேட்டபடி டேபிளின் மேல் இருந்த இன்டர்காமில் அழைப்பு விடுத்தார்…

அப்பொழுது, கவி “ப்பா… இனி ஃபேக்டரி, மில், எக்ஸ்போர்ட் எல்லாத்தையும் நானே பார்த்துக்கலாம்ன்னு இருக்கேன்…” என்றதும் முருகவேல் அதிர்ந்தார் என்றால் விக்கிக்கு பக்கென்றிருந்து…

‘அடப்பாவி… கொஞ்சம் கொஞ்சமா பேசி எல்லாத்தையும் வாங்குவன்னு பார்த்தா பொசுக்குன்னு பேசிட்டான்….’ என்று எண்ணியவன் மெல்ல தலையை திருப்பி அவனது தந்தையை நோக்கினான்…

மகனது வார்த்தையில் அதிர்ந்தவர், விக்கியும் கவியும் தன்னை பார்ப்பதை உணர்ந்து, தன்னை நொடியில் நிலை படுத்திக் கொண்டார்…

பின் கேன்டீனுக்கு அழைத்து மூன்று டீயை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவர், இருக்கையில் சாய்ந்தமர்ந்து தாடையை நீவியபடி யோசிக்க தொடங்கினார் அடுத்து என்ன செய்வது என்று…

தந்தைக்கு வேண்டுமான நேரத்தை குடுத்துவிட்டு தன் ஃபோனை நோண்ட தொடங்கினான் கவி. விக்கியும் என்னங்கையா நடக்க போகுது என்னும் முழியுடன் தந்தை மகன் இருவரையும் பார்த்தபடி இருந்தான் முருகவேல் சொல்லிய டீ வரும்வரை….

மெல்ல டீயை பருகியபடி, “நீர் இப்படி கேட்குறது சந்தோஷமாதேன் இருக்கு ராசா… ஆனா பாரு இப்பதேன் இதையெல்லாம் பார்த்துக்கு போற நீங்க…எல்லா விஷயமும் என்ன ஏதுன்னுட்டு தெரியாதுல்ல…. அதனால கொஞ்ச நாளைக்கு எங்கூடவே இருந்து அம்புட்டையும் கத்துக்கோ பொறவு எல்லாத்தையும் உங்கிட்டையே ஒப்படைச்சுட்டு நா நிம்மதியா ஓய்வெடுக்கேன்… என்ன ராசா சம்மதமா…?” என்று கேட்டவரின் முகத்தில் துளிக்கூட சலனமில்லை…

தன் தந்தையிடம் இருந்து வாங்கிய பொறுப்பை இப்பொழுது தன் மகன் வாங்க போகிறான் அவ்வளவு தான் என்ற எண்ணம்… ஆனால் அவரது கவலையும் உறுத்தலும் வேறோரு விஷயம் குறித்து அது மகனது குணம் பற்றி…

ஆம், கவியழகன் அவன் தந்தையை போல் அல்லாது தாயை போல் இருப்பது தான் அவரது பிரச்சினையே… இதுனால் மகனுக்கும் இத்தனை நாள் கட்டி காத்து வந்த சொத்துக்கும் தான் பிரச்சினை என்ற எண்ணம் அவருள்…

அதனால் மகனை சிறிது நாள் தன்னுடன் வைத்து அவனது எண்ண போக்கையும், தொழில் கோட்பாடுகளையும் எடுத்து சொல்லி, பின் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று யோசித்து மகனிடம் கூற, கவியழகனோ

“இல்ல ப்பா… ஏற்கனவே நீ ரொம்ப நாளா தனியா இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டு கஷ்டபடுறீங்க… இனியும் வேண்டாமே… நான் பொறுப்ப எடுத்துக்குறேன்…  ஏதாச்சும் சந்தேகம்னா எனக்கு உதவி பண்ணுங்க… ” என்றவனின் பேச்சு தோரணையில் தெரிந்தது அவனது உறுதி…

“நீர் இம்புட்டு உறுதியா பேசுறது கேட்க சந்தோஷம்தேன் ராசா… ஆனா நீ இத்தன நாள் வேலை பார்த்த மாதிரி இல்ல… இதுக்கு கொஞ்சம் அனுபவம் வேண்ணும்… அதேன் சொல்லுதேன்… ” என்று கூறியது ஏதோ விக்கிக்கு சரியாக பட, தந்தைக்கு பதில் கூறும் முன் அவன் தோளில் கை வைத்து தடுத்தவன்,

“மாப்ள… அப்பா சொல்லுறதும் சரியாதான் தோணுது… கொஞ்சம் பொறுமையா தான் இரேன்… எல்லாத்தையும் கத்துக்கிட்டு அப்புறம் கைல எடுத்துக்கோ உனக்கு கஷ்டம் இருக்காது பாரு…” என்று புரிய வைக்க முயன்றவனை எரிச்சலாக பார்த்தார் முருகவேல்…

‘யாரு என்னனுட்டு தெரியாத பரதேசி கிருக்கனுங்க எல்லாம் என்ற மவனுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டானுங்க… ச்சை…’ என்று சலித்துக்கொண்டவருக்கு புரியவில்லை போலும் அவன் தான் கூறியதை ஆமோதித்து மகனிடம் பரிந்து பேசுகிறான் என்று…

“ம்ப்ச்ச் … என்ன விக்கி பேசுற… நீ இப்ப எவ்வளவு பெரிய தொழிலதிபர்… உங்க அம்மா தனியா எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தப்ப படிப்பு முடிச்சதும் நீ உடனே எல்லாத்தையும் மேக்ஓவர் பண்ணல…? அதுமாதிரி தானே நானும்… உனக்கு எப்படி உன் இரத்துல தொழில் முறை ஊறியிருக்கோ அதே மாதிரி தான் எனக்கும்… என்னால முடியாதுன்னு நினைக்குறியா…?” என்று விக்கியை மடக்கவும் திருதிருவென முழித்தான் விக்கி….

‘ஆஹா… பையன் ஒரு முடிவோட தான் இருக்கான் போல… எதுக்கு வம்பு, இருக்குன்னு சொல்லி வைப்போம்…’ என்று எண்ணி சட்டென, “டேய்… என்ன பேசுற… இப்ப நாம ஆரம்பிச்ச புது கம்பெனிய நீதானே பார்த்ததுட்டு இருந்த இத்தனை நாளா… எனக்கு தெரியாதா உன்னால முடியும்னு …”

“அப்புறம் என்ன மச்சான் பிரச்சின…?”

“பிரச்சன இல்ல… அப்பா சொன்னது சரின்னு தோணுச்சு சொன்னேன்… அவ்வளவுதான்…”

“ம்ம்ம்…. ப்பா நீங்க சொல்லுங்க… ” என்று கவி தந்தையின் புறம் திரும்ப, அவரோ மகன் விக்கியை பற்றி கூறியதை கேட்டு யோசனையில் ஆழ்ந்திருக்க, மகனின் அழைப்பு அவரை சுயவுணர்வு அழைத்து வந்தது….

“ஆங்ங் என்ன ராசா…?” என்றவரை ஒரு சில நொடி உற்று பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன்,

“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு சொன்னேன்…  நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன் எனக்கு தேவைனும் போது உங்க கிட்ட ஆலோசனை கேட்டுக்குறேன்…” என்று தீர்மானமாக பேசிய மகனிடம் கண்ட ஒருவகை உறுதியும், நிமிர்வும் ஏதோ ஒருவகையில் அவருக்கு நம்பிக்கையை உண்டாக்கியது, அது இவன் பார்த்துக்கொள்வான் என்று…

“செரி ராசா… நீ கேட்ட மாதிரி இனி நீயே பார்த்துக்கோ… முறைப்படி என்ன பண்ணனுமோ அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன்… ” என்று வாக்களித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க சென்றுவருக்கு தெரியவில்லை மகன் தன் எண்ணத்தை பொய்யாக்கி அடுத்தடுத்து அவர் தலையில் இடியை இறங்க போவதை…

முருகவேல் அறையை விட்டு வெளியேறியதும், கவி உரிமைகளும் பொறுப்புமும் தன் கைக்கு வந்ததும் செய்ய வேண்டியதை வேகமாக பட்டியலிட தொடங்க, அதை கலைக்கும் விதம் விக்கி

“ஏன்டா இப்படி அவசர படுற… கொஞ்சம் பொறுமையா தான் அடியெடுத்து வையேன்….”

“ம்ப்ச்ச்… என்னடா லூசு தனமா பேசுற… நீயும் தானே நேத்து பார்த்த… எல்லாத்தையும் பார்த்துட்டு சும்மா இருக்க சொல்லுறியா…?” தந்தை மேல் உருவாகியுள்ள கோபம் லேசாக எட்டிப் பார்த்தது அவனது பதிலில்….

“இப்ப ஏன் டென்ஷன் ஆகுற… நீ ஏன் இப்படி பண்ணுறன்னு எனக்கு புரியுது ஆனா அவசரமா பண்ண வேண்டிய தேவை என்னன்னு கேட்குறேன்…? எப்படி இருந்தாலும் நீ எது பண்ணாலும் அதோடு பலன் கடைசியா தான் தெரியும் அதுக்கு கொஞ்சம் பொறுமையா பண்ணலாம்ல… நீ இத்தனை நாள் வேலை பார்த்தது ஒரு கம்பெனியை நாம் உருவாக்குனதுன்னு எல்லாம் ஐ.டி ஃபீல்ட்ல இப்ப நீ பாத்துக்க போறது விவசாயம், அரிசி மில் பழம் ஏற்றுமதி இறக்குமதின்னு அதுல எல்லாம் கொஞ்சமாச்சும் அனுபவம் வேண்டும்ல… அதை உன் அப்பா கூடவே இருந்து கத்துக்கிட்டு அப்புறம் உன் வேலைய காமின்னு தானே சொல்லுறேன்…” என்ற நண்பனை திரும்பி பார்த்தவன் பொறுமையான நிதான குரலில்,

“நீ சொல்லுறது கரெக்ட் தான் விக்கி… ஆனா எனக்கு அதுக்கான நேரம் இல்ல… ஒரு அவசர வேலை இருக்கு… அதுனால தான் இப்ப இந்த முடிவ எடுத்தேன்… இல்லாட்டி நீ சொன்ன மாதிரி தான் பண்ணியிருப்பேன்…” என்றவனை புருவம் சுருங்க பார்த்தான் விக்கி…

அவனது பார்வையின் பொருள் உணர்ந்து, இன்று காலை நண்பனை அலுவலக அறையில் காத்திருக்க சொல்லிவிட்டு மில்லை பார்க்க சென்ற  கவியழகன் அங்கு நிகழ்ந்ததை கூற, விக்கியின் முகம் சற்று இறுகி தான் போனது…

“இப்ப சொல்லு மச்சான் நான் அவசர படுறது தப்பா…?”

நண்பனை திரும்பி பார்த்தவன், சிறு புன்னகையுடன் ‘இல்லை…’ என்பதை போல் தலையை மறுப்பாக ஆட்டி வைத்தவன் சட்டென ஆச்சர்யமான குரலில்,”ஆனா உங்க அப்பா இப்படின்னு என்னால் நம்ப முடியல டா…” என்று கூற அவனை கூர்ந்து பார்த்தவன், “உண்மையா நம்ப முடியலையா…?” என்று சந்தேகமாக கேட்வனை பார்த்து முழித்த விக்கி,

“டேய்… இப்படி எல்லாம் கேட்கதா டா… டக்குன்னு பதில் சொல்ல முடியல…” என்று திணறிய குரலில் கூறி சிரிக்க, அவனுடன் இணைந்து சிரித்தான் கவியழகனும்…

“சரிடா… நான் ஃபேக்டரிய ஒரு ரௌண்டு பார்த்துட்டு வரேன்… நீயும் வரியா…?” என்று கேட்டபடி இருக்கையை விட்டு எழ,

“ம்ம்ம்… வரேன் மாப்ள…. காலைல இருந்து இதே ரூம்ல இருக்கேன்… போர்(bore) அடிக்குது…” என்று பேசியபடி இருவரும் ஃபேக்டரியை நோக்கி நடந்தனர்…

அப்பொழுது, “ஆமா ரூம்ல உன் அப்பா கூட பேசும் போது எதுக்கு நீ ஃபீரியா என்னை விளம்பரம் பண்ணுன…?” என்று கேட்கவும், முதலில் சிரிப்பை பதிலாக தந்தவன் பின் நண்பனின் தோளில் கை போட்டு,

“அப்பா இனி உன்னை எதுவும் சொல்ல கூடாதுன்னு…” என்று வெகு சாதாரணமாக தன் மரியாதையை காப்பாற்றுவதற்காக என்று கூறியவனை வியப்புடன் பார்த்து வைத்தான் விக்கி….

முருகவேல் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தொடங்கி இருந்தார்… தன் மனநிம்மதி, நம்பிக்கை என அனைத்தும் மடிய போவதை அறியாமல்…

“ஏம் புள்ள, இதுல உப்பு போட்டியா இல்லையா… சப்புன்னுட்டு இருக்கு…” என்று குறை சொல்லியபடி உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் பூங்குழலி….

“எல்லாங் கரெக்டாதேன் இருக்கு… நீ நொட்டம் சொல்லாம இருந்தா போதும்… குறையும் சொல்லிபுட்டு மூக்கு முட்ட திங்குறத பாரு… கிறுகு புடிச்சவ…” தோழியை வசைபாடியபடி தன் உணவை உள்ளே தள்ளும் வேலையில் இருந்தாள் கனி…

மதிய உணவை வயிறார உண்டுவிட்டு, முற்றத்தின் தூணுக்கு பின் போடிருந்த சோபாவின் இருக்கையில் ஒரு மூலையில் படுத்துக் கொண்டு காலை கைப்பிடியில் நோங்க விட்டபடி பூங்குழலி படுத்திருக்க, அவளை போலவே சோபாவின் மறுமுனையில் கனி படுத்திருந்தாள் காலை கைப்பிடியில் தொங்க விட்டபடி…

“இந்த அப்பத்தா சரியான ஆளு கனி…” என்று விட்டத்தை பார்த்தபடி கூற, கனியும் அதே நிலையில் விட்டத்தை பார்த்தபடி

“ஆமா புள்ள… இது வரும்ன்னு நம்ம எம்புட்டு கஷ்டப்பட்டு சமைச்சு வச்சுருக்கோம் ஆனா இன்னும் வரல பரேன்…” என்று குறை கூற,

“ம்க்கூங்க்… அப்படியே வந்தாலும், ஆயிரம் குறை சொல்லும்… இப்பதேன் அது வாழ்க்கைய அனுபவிக்குற தோரணையில் சுத்துது கனி… நம்ம வெளிய போனா மட்டும் பொழுது சாயறதுக்குள்ள வூட்டுல இருக்கனும்… அங்குட்டு போக கூடாது இங்குட்டு போக கூடாதுன்னு எம்புட்டு கண்டிஷன் போடுதாக, இந்த அப்பத்தா மட்டும் தெனாவட்டா ஊரு சுத்திட்டு வருது…” என்று காலை ஆட்டியபடி பேசிக்கொண்டிருக்க,

“ஆமா புள்ள… அதுவும் பொண்ணு நாமளும் பொண்ணு அப்ப கண்டிஷனும் ஒன்னாதேனே இருக்கனும்… இதைய சொன்னா நமக்குதேன் வெளக்குமாத்தாள அடி விழும்…” என்று சொல்லி முடிக்கும் முன், இவர்களுக்கு அருகில் ஒரு முறம் பறந்து வந்து விழுந்தது…

தங்கள் உலகில் எந்த கவலையும் இன்றி சொகுசாக படுத்துக் கொண்டு காலை ஆட்டி, தங்களின் பாட்டியை பற்றி குறை பேசிக்கொண்டு இருந்தவர்களின் அருகில் ஏதோ ஒன்று விழவும் பதறி எழ முயறச்சித்து முடியாமல் உருண்டு கீழே விழுந்தனர் பெண்கள் இருவரும்….

தொடரும்….

Advertisement