Advertisement

UD:1

அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது தன் சொந்த கிராமத்தை நோக்கி….

 

மாலை நேரத்து இளவெயிலும், லேசான தூறல் கொண்ட வானமும் அந்த நொடிகளை அழகாகிக்கொண்டு இருந்தது…. சிப்ட்டை செலுத்திக் கொண்டு இருந்தவன், காரின் கண்ணாடியை கீழே இறக்கி விட்டு, அந்த இளவெயிலையும், லேசாக தூறிய மழையையும் ரசித்தக் கொண்டே இடது கையால் ஸ்டியரிங்கை லாவகமாக கையாண்டபடி வலது கையை காரின் ஜன்னலின் விளும்பில் மடக்கி வைத்து, காற்றில் ஆடிய தன் சிகையை கோதியபடி இயற்கையின் அழகை கண்களில் நிரப்பிக் கொண்டு இருந்தான் கவியழகன்…

 

பெயருக்கு ஏற்றார் போல் ஆணழகன். அடர்ந்த சிகை, கூர் விழிகள், அதில் நிரம்பி வழியும் நிமிர்வும் உடன் ஓரமாக ஒளிந்திருக்கும் குறும்பும், நேர் நாசியும், அழகாக அளவாக வளர்ந்த வெட்டிய மீசையும், லேசாக சிவந்த உதடும், மாநிறமும், காரில் அடங்கி இருக்கும் அவனது உயரம் பார்க்க ஆறடி என  உடன் காட்டியதோடு உடற்பயிற்சி செய்பவன் என்பது அவனது உருண்டு திரண்ட புஜங்களும், நெஞ்சமும் அவனது இறுகிய சட்டையே எடுத்து காட்ட, அசரடிக்கும் பெர்ஸ்னாலிடியுடன் அம்சமாக இருந்தான்….

 

அவனது முகம் அத்தனை பூரிப்பில் இருந்தது… இருக்காதா பின்னே, கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு திரும்புகிறான்… மனம் நிலை கொள்ளாமல் தவித்தது, ‘எவ்வளவு வருஷம் ஆயிருச்சு… சே… எத்தனை இடத்துல இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்குற மாதிரி வாராது…’ என்று எண்ணியவன் இத்தனை நாள் இந்த இயற்கை வாழ்வை தொலைத்துவிட்ட துக்கம் அவன் மனதில் ஒரு ஓரம் உண்டானது அவனையும் மீறி… அப்பொழுது அவன் அருகில் இருந்த விக்னேஷ்,

 

“மச்சான்… சான்ஸ்லெஸ் டா… செம்ம பியூட்டி… இது எல்லாம் சிட்டி சைடு பார்க்குறது கஷ்டம்… நான் கல்யாணம் பண்ணிட்டு, ஹனிமூன்க்கு இங்க வந்துருவேன் டா…” என்ற நண்பனை திரும்பி பார்த்து சிரித்து வைத்தான் கவியழகன்….

 

இந்த இதமான பயணத்தை மேலும் ரசிக்க எண்ணம் கொண்டு விக்னேஷ் காரில் இருந்த இசை கருவியை இயக்க, அதில்

 

தென்மேற்கு பருவக்காற்று

தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்

தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று

சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்

 

என பாட, கவியழகனின் உள்ளம் மேலும் குதூகலித்தது சந்தோஷத்தில்…

 

தேனிமாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டி என்னும் கிராமத்தை நோக்கி அவனது உள்ளமும் காரும் சீரி பாய்ந்தது… சில பல நிமிடங்களில் ஊரின் எல்லையில் பயணிக்கையிலேயே, மண்வாசனை அவனது நாசியை எட்டியதும் புரிந்தது மழை நன்கு தன் அருளை பொழிந்து இப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது என்று…

 

பாட்டை ரசித்துக் கொண்டு இருந்த விக்னேஷ்,”என்னடா சைலண்டா வர… ?” என்று கேட்க, அவனை ஓர் பார்வை பார்த்த கவியழகன், விஷம புன்னகையுடன்

 

“உனக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும் அப்புறம் ஹனிமூனை பத்தி பேசு…” என்றதும் திரும்பி பார்த்து முறைத்த விக்னேஷ்,

 

“என்னடா நக்கலா… இப்ப சொல்லுறேன் கேளுடா இங்கேயே ஒரு நச்சு கிராமத்து பிகரை பார்த்து கரெக்ட்டு பண்ணி, கல்யாணம் பண்ணி, இங்கேயே ஹனிமூன் கொண்டாடல…” என்று அவன் சபதத்தின் வார்த்தையை முடிக்கும் முன் கார் ஒரு ஆட்டம் கண்டது…

 

ஊருக்குள் நுழையும் வேலையில், நண்பனின் கூற்றை சிறு சிரிப்புடன்  வழியில் தெரிந்த வயல் வெளிகளை பார்வையிட்டுக் கொண்டு வந்தவன் ரோட்டில் இருந்து குழியை கவனிக்க தவறினான்…

 

அதில் சட்டென ஏறி இறங்கிய கார் சற்று குழுங்கியது நொடியில்…. அதில் அவனது கவனம் ரோட்டின் புறம் திரும்பினாலும் அவனது விதி அந்த குழியில் இருந்து தன் வேலையை பார்க்க தொடங்கியதை கவியழகன் அறியாமல் போனான்…

 

விக்னேஷும் நண்பனின் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்ததால் சாலையில் இருந்த குழியை அவனும் கவனிக்க தவறினான்…

 

“டேய் மச்சான் என்னடா ஆச்சு…? வயசு பையன் டா… வாழ்க்கையை இனி தான் வாழணும்… இப்ப தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன் அதுக்குள்ள இப்படி உயிர் பயம் காட்டுற….” என்று அவனை பார்த்து முறைக்க,

 

“டேய்… ஓவரா பண்ணாத… வேடிக்கை பார்த்துட்டு வந்ததுல குழி இருந்ததை பார்க்கல அதுக்கு எதுக்கு டா ஓவரா சீன் போடுற…”

 

“ஏன்டா பேச மாட்ட… என்னோட உயிர் என்னோட வாழ்க்கை எனக்கு முக்கியம்… உன்னை எல்லாம் நம்புன்னா நான் தான் கடைசி பிரச்சினைல மாட்டுவேன்… அதுனால வேடிக்கை பார்க்காமா ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டு… அப்புறம் பொறுமையா ஊர் சுத்தி பார்க்கலாம்….” என லேசாக பயந்ததை போல் மிரண்டு பேசியவனை பார்த்து இதழை வளைத்து சிறு புன்னகை புரிந்தவன் சாலையில் கவனமானான்…

 

சில நிமிடங்களில் ஊர் கோவிலை அடைய, காரை நிறுத்திவிட்டு சாமியை தரிசிக்க உள்ளே நுழைந்தார்கள் இருவரும்…

 

பல மலரும் நினைவுகள் கவியழகன் இதயத்தில் அழகிய படமாக விரிய, தன் நெஞ்சை தடவியபடி உள்ளே நுழைந்தவனின் முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது…

 

கோவில் திருவிழா வர போவதால் அதன் ஏற்ப்பாடுகள் தொடங்கி இருக்க அதை எல்லாம் பார்த்துக்கொண்டே வந்தவர்கள் சன்னிதானத்தில் கைகூப்பி கடவுளை வேண்டி நின்றனர்…

 

“டேய்… போதும் வா டா கோவிலை சுத்திட்டு வருவோம்… ரொம்ப நேரம் கடவுள் கிட்ட அப்படி என்ன பெட்டிஷன் போட்ட…?” கண்கள் மூடி தீவிரமாக வேண்டிக் கொண்டு இருந்த விக்னேஷை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற படி கேள்வி கேட்க,

 

“டேய்… ஏன்டா என் உயிர வாங்குற…? நிம்மதியா சாமி கூட கும்பிட விட மாட்டீங்கிற….” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்ற படி கத்த,

 

“ரொம்ப நேரம் வேண்டுனா, சாமி கண்ணா குத்திடும் அதான் உன்னை காப்பாத்தி இருக்கேன் மச்சான்…” அவன் கழுத்தை வளைத்து பிடித்தபடியே கோவிலை சுற்றி நடக்க ஆரம்பித்தான் கவியழகன்…

 

கோவிலை சுற்றி பச்சப்பசேலென்று வயல்வெளியாக இருக்க, தடுப்பு சுவர் அற்ற திறந்த வெளி கோவிலை சுற்றி வர துடங்கினான் கவியழகன்…

 

“என்னடா புதுசா சொல்லுற…? எந்த ஊர் சாமி டா கண்ணை குத்தும்…? ஏன்டா புழுகுற…? எனக்கு ஒரு நல்லது நடக்கத்தான் விட மாட்டா அட்லிஸ்ட் வேண்டுதலாச்சும் வைக்க விடுடா…” என்று அவனிடம் மல்லுக்கட்டிய படி உடன் நடந்தான் இல்லை கவியழகன் இழுத்த இழுப்பிற்கு இழுத்து செல்லப்பட்டான்…

 

“எங்க ஊர் சாமி அப்படி தான்டா… ரொம்ப சக்தி வாய்ந்த சாமி… சோ வேண்டுதல் வைக்குறேன்னு அவங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது… வா பேசாம…” என்றவனுக்கு பதில் குடுக்கும் முன் அவனது ஃபோனில் அழைப்பு வந்து அவன் வார்த்தையாடலை தடை செய்தது…

 

“மாப்பிள நீ போ நான் பேசிட்டு வரேன்… அம்மா தான் கூப்பிடுறாங்க…” என்க, சரியென்று கவியழகன் முன் சென்றுவிட, விக்னேஷ் ஃபோனை உயிர்ப்பித்து காதிற்கு கொடுத்தான்…

 

“ஹலோ ம்மா… எப்படி ம்மா இருக்கீங்க…? நல்லா இருக்கீங்களா…? மிஸ் யூ ம்மா…” என்று அன்பொழுக பேச,

 

“டேய்… ஓவரா சீன் போடாத… மதியம் தானே வீட்டுல இருந்து கிளம்புன… அதுக்குள்ள எதுக்கு இந்த ஆக்டிங்…?” என்ற அவனது அன்னையின் வார்த்தையில் விக்னேஷின் மூக்கு அறுப்பட்டு பொத்தென்று கீழே கிழந்தது…

 

“என்ன ம்மா… இப்படி பேசுறீங்க…? உங்க மேல எவ்வளவு பாசமா பேசுனேன்…?” முகம் சுருங்க, கோவிலின் பின் நின்றிருந்தவன் திரும்பி காலில் வட்டமிட்டபடி பேசிக் கொண்டு இருந்தான்….

 

“டேய் முடியல… கொஞ்ச நாள் என்னை நிம்மதியா இருக்க விடு… இப்ப ஊர் போய் சேர்ந்தியான்னு கேட்க தான் கால் பண்ணினேன்…”

 

“ம்மா… இது டூ மச்… கொஞ்சமாச்சும் பாசம் அக்கரையோடு நடந்துக்கோ… நீ பெத்த பையன் கிட்ட பாசம் காட்டுனா தானே மத்தவங்க காட்டுவாங்க… கொஞ்சம் திருந்து ம்மா…”

 

“டேய்… யாருடா அது மத்தவங்க…?”

 

“லொல்லு தானே உனக்கு… நான் எவ்வளவு முக்கியமான அறிவுரை சொன்னேன் அதை விட்டுட்டு நீ எதை மட்டும் கவனிச்சுயிருக்க… ஏன் ம்மா இப்படி பண்ணுற…?” அவன் அங்கலாய்ப்புடன் கேட்க, அந்த பக்கம் அவனது அன்னை வாய்க்குள் சிரித்துக் கொண்டார்… பின்

 

“சரி சரி… கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…” எப்பொதும் காட்டும் போலி அலட்சியம் அவரது வார்த்தையில்…

 

“ம்க்கும்…எந்த கேள்விக்கு பதில் சொல்லனும்….?” முகம் சிடுசிடுக்க விக்னேஷ் கேட்க,

 

“டேய்…”

 

“சரி சரி… கூல்… முதல் கேள்விக்கான பதில் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் ஊர்குள்ள நுழைஞ்சோம்… இப்ப கோவில்ல இருக்கோம், ரெண்டாவது கேள்விக்கான பதில் இன்னும் யாரும் பாசம் காட்ட போட்டிக்கு வரல… சோ டென்ஷன் ஆக தேவையில்ல… எப்படியும்  இங்க இருந்து வரதுக்கு முன்னாடி ஆள் சிக்குனாலும் அதிர்ச்சியாகுறதுக்கு இல்ல…”

 

“சரி சரி… நல்லா என்ஜாய் பண்ணு… அப்புறம் இரண்டாவதா சொன்னியே அதுக்கு எல்லாம் ஒரு முகராசி வேண்டும் டா… அதுனால ஒழுங்கா ஊரை சுத்தி பார்த்துட்டு சேதாரம் இல்லாமல் ஊர் வந்து சேரு… நான் ஃபோனை வைக்குறேன்…”என்று அழைப்பை புன்னகையுடன் வைத்துவிட,

 

‘நம்ம மூஞ்சு என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு…?  ரெண்டு பேரும் ரொம்ப மட்டமா சொல்லுறாங்க…’என்று எண்ணியபடி தன் விழியை சுழற்றியபடி தாடையை நீவிக் கொண்டே திரும்பியவனின் விழி பார்வையில் விழுந்ததை பார்த்து,

 

“ஏய்… யாரு அது…?” என்று கேட்டுக் கொண்டே அவர்களின் காரை நோக்கி முன்னேறினான்…

 

‘அடிஆத்தி…. சிக்கிட்டோமோ…’ காரை சுற்றி சுற்றி வந்தவள் அவனது விளிப்பில் துள்ளி திரும்பி பார்க்க, விக்னேஷ் அவளை நோக்கி வருவதை கண்டு,

 

“ஆத்தி பார்த்துபுட்டானே… ஓடிடுடி…” தனக்குத்தானே பேசியவள், அடுத்த நொடி சிட்டாக பறந்தாள் சிவப்பு நிற தாவணி உடுத்திய ரெட்டை ஜடை பைங்கிளி ஒன்று….

 

கோவிலை சுற்றிவிட்டு, மீண்டும் ஒருமுறை சாமியை தரிசித்துவிட்டு வெளியேற இருந்தவன் நண்பனின் குரலில் புருவம் சுருங்க, வேகமாக விக்னேஷை நோக்கி செல்ல, அவனோ

 

“ஏய்… நில்லுன்னு சொல்லுறேன்ல… அட நில்லு மா…” என்று கத்தியபடி அவள் பின்னே நான்கடி ஓட,

 

“விக்கி… டேய் மச்சான்…. எங்க டா ஓடுற…?” என்று நண்பனின் பின் ஓடியவன், காரின் அருகில் இருந்து பறந்து சென்ற பைங்கிளியின் பாதையை பார்த்தபடி நின்றிருந்தவனின் தோளை தொட்டு, அவன் பார்வை சென்ற வழியை இவனும் நோக்கினான் ஆனால் ஒன்றும் சிக்கவில்லை….

 

நீண்டிருந்த சாலையின் ஒரு புறம் வயல் தன் போர்வையை போர்த்தி இருக்க, மறுபுறம் சோலை குருத்து ஆளுயற வளர்ந்து இருந்தது… காரை சுற்றி வந்தவள் கோவிலின் வளைவில் திரும்பி நின்றிருந்த விக்னேஷை கவனிக்க தவறினாள்… அவனது சத்ததில் தன்னை கண்டு கொண்டதை கண்டதும் அவனிடம் இருந்து தப்பிக்க எண்ணி, சோலை காட்டிற்குள் புகுந்து கொண்டாள்…

 

இந்நேரம் சாலையாக இருந்திருந்தால், ‘எதுக்கு எங்க வண்டிய நோட்டம் விட்டுட்டு இருந்த..?’என்று கேள்வியோடு அவளை பிடித்திருந்திருப்பான், ஆனால் அவள் சட்டென சோலை காட்டுக்குள் நுழைந்ததும் தெரியாத ஊரில் தெரியாத பெண்ணை தொடர்ந்து செல்ல தயங்கி காரின் அருகிலேயே நின்றுவிட்டான் விக்கி…

 

“ம்ம்ம்… ஒரு பொண்ணு நம்ம காரை சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்துச்சு, என்ன பண்ணுறன்னு கேட்குறதுக்காக கூப்பிட்டேன் என்னை பார்த்ததும் டக்குன்னு ஓடிட்டா… தொறத்திட்டு போலாம்னு பார்த்தா அது மின்னல் வேகத்துல இதுக்குள்ள ஓடிடுருச்சு…அதான் பார்த்துட்டு இருக்கேன்…” அவள் சென்ற பாதையையே பார்த்திருக்க,

 

“ஆமா டா இது பெரிய தாஜ்மஹால் பாரு… சுத்தி சுத்தி பார்க்க, ஏதோ சும்மா நின்னு இருப்பாங்க அதுக்கு ஓவரா சவுண்ட் விட்டு இருக்க, இது என்ன சிட்டின்னு நினைச்சியா வில்லேஜ் டா… நீ கத்துனதும் என்னவோ ஏதோன்னு பாவம் பயந்து போயி ஓடியிருக்கும்… ஏன்டா இப்படி பண்ணா எப்படி டா உனக்கு கல்யாணம் ஆகும்… ?” சந்தேகமாக நண்பனை ஒரு பார்வை பார்க்க,

 

“அடேய் மாப்ள….இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு பேசி, என் கல்யாணத்தோட சம்பந்த படுத்துற…?” என்று  கோபத்தோடு கேட்டவன், அவனை பார்த்து முறைத்து நின்றான்…

 

“சரி விடு… வா கிளம்பலாம்… இருட்ட ஆரம்பிச்சுருச்சு….” என்று காரில் ஏற போனவன் அதிர்ந்து நின்றுவிட, அவனை முறைத்துக் கொண்டே காரின் மறுபுறம் ஏற போன விக்கி, நொடியில் அதிர்ச்சியை காட்டிய அவன் முகத்தை கண்டு,

 

“என்ன டா ஆச்சு…? ஏன் ஷாக் ஆகி நிக்குற…?” என்று கேட்டபடி அருகில் வந்தவன் கவியழகனின் பார்வை சென்ற இடத்தில் பார்வையிட்டவனும் முதலில் அதிர்ந்து, பின் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க தொடங்கினான்…

 

“டேய் மாப்பிள… செம்ம டா…ஹா ஹா ஹா ஹா…. ஊர்க்கு நீ வரேன்னு தெரிஞ்சு நல்லா வெல்கம் பண்ணுறாங்க போ…” என்று பேச்சின் இடையிடையே வாய் விட்டு சிரித்தபடி, நண்பனின் தோளில் கை போட, விக்னேஷை திரும்பி தன் உஷ்ண பார்வையை அவன் மீது வீசினான் கவி…

 

“டேய்… என்னை ஏன்டா முறைக்குற…? என்னமோ சொன்ன இந்த கார் என்ன தாஜ்மஹால்ன்னு.. இப்ப பாரு உன் கேள்விக்கு பதில் இல்லைன்னு சொல்லாம செயல்ல காட்டிட்டு போயிருக்கா கார் மேல்ல சேரை பூசி… ஹா ஹா…” என்று சிரித்துக் கொண்டே காரை நோட்டம் விட்டவன்,

 

“டேய் மாப்ள… இங்க பாரு டா…” என்று மேலும் சிரிப்பை அதிக படுத்தினான்… கார் மேல் வரட்டியை தட்டி  வைத்தது போல் சேரை ‘ஃ’ ஐ குறிப்பது போல் அப்பி வைத்திருந்தாள்… அதையே கோபமாக பார்த்திருந்தவன் நண்பனின் அழைப்பில் அவன் பார்க்க சொல்லிய இடத்தில் பார்த்துவிட்டு,

 

“ஓஓஓ… ஷிட் …” என்று தலையில் ஒரு கையும், மற்றொரு கையை இடுப்பிலும் வைத்துக் கொண்டவனுக்கு கோபம் கன்னா பின்னாவென எகிறியது…

 

பக்கம் நின்று வயிற்றை பிடித்தபடி சிரித்துக் கொண்டு இருந்தவனை திரும்பி பார்த்தவனுக்கு கோபம் அனைத்தும் அவன் மேல் பாய, “டேய் போதும் சிரிக்குறதை நிறுத்து டா…கடுப்பாகுது…”என்று எச்சரிக்க, அது அவன் காதில் விழுந்தால் தானே…

 

அவனது வாய்மொழி பாஷை சரியாக விழாததால் அவனது கைமொழி பாஷை சரியாக விழுந்தது விக்கியின் முதுகில்…

 

“ஆஆஆஆ…. டேய்… என்னை ஏன் டா அடிச்ச…” நெளிந்தபடி  முதுகை தேய்த்துக் கொண்டே கேட்க,

 

“எதுக்கு அடிச்சன்னா…? அதான் சொல்லுறேன்ல கடுப்பாகுது சிரிக்காதன்னு… அதுக்கு அப்புறமும் சிரிச்சுட்டே இருந்தா என்ன அர்த்தம்… ?”

 

“அதுக்கு….?” என முதுகை தேய்த்துக் கொண்டே முகத்தை சுளித்துக் கொண்டு கேட்க,

 

“ம்ப்ச்ச்…. யாரு டா அந்த பிசாசு… எதுக்கு டா இப்படி பண்ணுச்சு…?” நெற்றியை தேய்த்துக் கொண்டே கேட்க,

 

“சாரி டா மாப்பிள… அந்த பொண்ணு என்கிட்ட சொல்லிட்டு செய்யல… சோ… எனக்கு தெரியல…” என முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு பஞ்சர் ஆன டயரை பார்த்தபடியே சொல்ல, தலையில் அடித்துக் கொண்டான் கவியழகன்…

 

‘யாரா இருக்கும்…? எதுக்கு இப்படி பண்ணனும்…?ஏன் பண்ணனும்…? சை… என்னோட ஃபேவரைட் கார்… இப்படி நாஸ்தி பண்ணி வச்சு இருக்கு பிசாசு…’என எண்ணிக் கொண்டு இருக்கையிலேயே,

 

“அச்சச்சோ மாப்பிள..?” அதிர்ந்து கத்திய விக்கியின் புறம் திரும்பியவன்,

 

“ஏன்டா…இப்ப என்னாச்சு… வேற ஏதாச்சும் பண்ணி வச்சு இருக்கா அந்த பிசாசு…?”

 

“இல்ல டா… டேமேஜ் அவ்வளவு தான்… ஆனா இது உன் ஃபேவரைட் காராச்சே மாப்பிள என்ன பண்ண போற…?  “என்று யோசனையுடன் கேட்க,

 

நண்பனின் வார்த்தையில் உள்ளுக்குள் எழுந்த கோபத்தால், “டேய் நீ அவளை பார்த்து இருக்க தானே… அடுத்த முறை அந்த பிசாசை பார்த்தா யாருன்னு காட்டு டா மச்சான்… அடுத்து என் கைல சிக்குவா இல்ல அப்ப பார்த்துக்குறேன் டா அவள… சை…” என்று தலையை கோதிக் கொள்ள,

 

“கண்டிப்பா மாப்பிள… உனக்காக இது கூட செய்யாட்டி எப்படி…?” என்று தோளை தட்டி ஆறுதல் படுத்தினான் நண்பனின் கார் சேதமானதை கண்டு…

 

இங்கு இவர்கள் இருவரையும் கவனித்தபடி சோலை குருத்துக்களுக்கு நடுவில், வாயில் தன் தங்க செயினின் டாலரை லேசாக கடித்தபடி குறுகுறுவென பார்த்திருந்தாள் சிவப்பு தாவணி அணிந்த பைங்கிளி…

 

“ஏ வா புள்ள போயிறலாம்… பார்த்தா பட்டணத்து ஆளுங்க மாதிரி இருக்கு, மாட்டுனா வம்பாயிரும் புள்ள…” என்று தன் தோழியின் தோளை சுரண்ட,

 

“போலாம் இருடி… என்னத்த பண்ணுறாகவன்னு பார்த்துபுட்டு போலாம்…. ” என்றவள் பார்வையை மட்டும் அவர்கள் மீதிருந்து அகற்றவில்லை…

 

“அய்யோ ஏன் குழலி இப்படி பண்ணுத…?”

 

“என்னத்த பண்ணினேன்…?”

 

“எதுக்கு அப்படி அவிக கார்ல சேத்தை பூசுன…டையர வேற பஞ்சர் ஆக்கி விட்டு இருக்க… ஏம்புள்ள இந்த சோலி உமக்கு…?” என்ற கேள்விக்கு தோழியை பார்த்து முறைத்தவள் மீண்டும் அவர்கள் புறம் பார்வையை திருப்பிவிட்டு,

 

“ஏன்னு உமக்கு தெரியாதாக்கும்…?” என்று கேட்டவளின் பார்வை கவியழகனையே குறுகுறுவென பார்த்திருந்தது….

 

“அதுக்கில்ல புள்ள… அவிக வேற வெளியூர் மாதிரி தெரியுராகவ… இப்படி கார பழுதாகி வச்சு இருக்கியே இப்ப எப்படி புள்ள ஊர்க்குள்ள வருவாக…? அதேன் கேட்டேன்…”

 

“என்ன கனி அக்கறை எல்லாம் ஊத்து மாதிரி வழியுது… என்ன விஷயம்…?” கேள்வியில் இருந்த சந்தேகத்தை பார்த்து பதறிய கனிமொழி,

 

“ஆத்தி… என்ன புள்ள ஒருதினுசா கேக்குறவ…? அக்கறையும் இல்ல சக்கரையும்  இல்ல… இவக இப்ப நம்ம ஊருக்கு தான் வராக, உன்ன வேற அதுல ஒருத்தேன் பார்த்துட்டுடாக நாளைக்கு உன்னை எங்குட்டாச்சும் பார்த்து பிரச்சினை ஆச்சுன்னா என்னத்த பண்ணுவ… அதான் சொன்னேன்… போடி… நீ எப்படியோ போ… எனக்கு என்ன வந்துச்சு…” என்று திரும்பி நடக்க இருந்தவளின் கையை பிடித்து நிறுத்தினாள் பூங்குழலி….

 

“சரி சரி கோவிக்காத புள்ள… நீ சொல்லுறதும் செரித்தேன்… ஏதாச்சும் பிரச்சினை பண்ணா பார்த்துக்கலாம் விடு… நான் யாருன்னுட்டு தெரியும்ல… ஒருகை பார்த்துபுட மாட்டேன்…” என்று தன் முன் தொங்கிய இரட்டை ஜடையில் ஒன்றை தூக்கி பின்னால் போட்டவள் ஒற்றை  புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க,

 

“அதானே… உன்னை பத்தி தெரியாம சொல்லி புட்டேன்… இப்ப வாடி போலாம் அவிக திரும்பவும் பார்த்துட போறாக…” என அவள் கை பிடித்து இழுக்க, திரும்பி பார்த்த பூங்குழலி, கவியழகன் விக்கியை முதுகில் அடிப்பதை பார்த்துவிட்டு திரும்பி தோழியுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள்….

 

ஓயாமல் பேசி கொண்டு வரும் தோழி இப்பொழுது அமைதியின் சிகரமாக சிந்தனையுடன் வருவதை கண்டு கனிமொழி, “என்ன புள்ள தீவிர யோசனல இருக்க போல…? பயமா இருக்கா புள்ள…?” என்று கரம் பற்றி பரிவாக கேட்க,

 

“அய்ய…. பயமா எனக்கா… போடி அங்குட்டு… நா யோசன பண்ணுறதே வேற… அந்த நீல கலரு சட்டைய எங்கனையோ நான் பார்த்திருக்கேன்… ஆனா எங்கன்னு தான் தெரியல… அதேன் எங்கன்னு யோசிக்குதேன்…” என்றவள் மீண்டும் தன் சையின் டாலரை கடிக்க தொடங்கினாள்…

 

“என்ன புள்ள சொல்லுத…. பார்த்து இருக்கியா..? உன் சொந்தமா அவிக…?”

 

“அட யாருடி இவ ஒருத்தி… யாருன்னு தெரியல ஆனா பார்த்தாப்புல இருக்கேன்னு சொல்லுதேன்… சொந்தமான்னு கேட்குதா இவ…” என்று அலுத்துக் கொண்டு பதில் சொன்னாலும் தன் யோசனையை கைவிடவில்லை…

 

“ஓஓஓ… அப்ப செரி… யாருன்னு நியாபகம் வந்தா சொல்லு….”என்று தீவிரமாக சொல்ல, இருவரும் சோலை செடிகளுக்கு நடுவில் இருந்து சாலையை வந்து அடைந்திருக்கவும் ரோட்டை பார்த்து நடக்க தொடங்கினார்…

 

அவளை பார்த்து முறைத்த குழலி அவள் கூறியது போல் தன் யோசனையை தொடர்ந்தாள் தீவிரமாக வீட்டை சென்று அடையும் வரை…

 

“சரி இப்ப எப்படி டா ஊருக்குள்ள போறது…?” என்று விக்கி கேட்கவும்,

 

“வேற எப்படி…? நடராஜா சர்வீஸ் தான்…” என்று தோளை உலுக்கி சொல்லியவன், காரை லாக் செய்துவிட்டு, ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு நடக்க தொடங்கினான் ஊரை நோக்கி….

 

“ம்ம்ம்… இப்படி ஆயிருச்சே மாப்பிள நம்ம நிலம… சரி எவ்வளவு நேரம் ஆகும் வீடு போய் சேர…? மதியம் திடீர்னு உன்கூட வர மாதிரி பிளான் ஆயிருச்சு, அவசரத்துல சாப்பிட முடியல… இப்ப பயங்கரமா பசிக்குது…” என்று வயிற்றை தடவியபடி நண்பனை பார்த்து கேட்டவனுக்கு நக்கலாக ஓர் சிரிப்பை பதிலாக தந்தான் கவியழகன்..

 

“ஏன்டா… ஒரு மார்க்கமா சிரிக்குற…?” என்று கேட்டவனின் கழுத்தை வளைத்துபிடித்தவன்,

 

“இன்னும் அரைமணி நேரம் நடக்கனும் மச்சான்… வழில ஹோட்டல் வேற இருக்காதே என்ன பண்ணுவ…? அதுவும் இல்லாம நான் இங்க வந்து ட்வல் இயர்ஸ் ஆச்சு… வழியும் சரியா நியாபகம் இல்ல…” என்று யோசிப்பது போல் தாடையை தேய்த்துக் கொண்டே கூற, கொலைவெறி ஏறியது விக்கிக்கு…

 

“என்னது அரைமணி நேரமாஅஅஅ….? பாவி… எரும… நல்லா வருவியா டா நீ… உன்ன நம்பி வந்தேன் பாரு என்னை சொல்லனும்… எடுடா கை…” தோளில் இருந்த அவன் கையை தட்டி விட,

 

“நான் என்ன வேண்ணும்னா பண்ணினேன்…இத பண்ணுனவ மட்டும் கைல கிடைச்சா செத்தா டா அவ… சிக்னல் வேற இல்ல… இல்லாட்டி அப்பாக்காசும் ஃபோன் பண்ணி சொல்லலாம்னு பார்த்தா அதுக்கும் வழியில்லாம போச்சு…” என்று ஃபோனை தூக்கிபிடித்தபடி நண்பனிடம் பேசிக் கொண்டே ஊர்க்குள்ள நுழைந்தனர்…

 

ஒரு பதினைந்து நிமிடம் நடைக்கு பின் இவர்களுக்கு எதிரில் ஒருவன் குருகுரு பார்வையோடு கவியழகனை பார்த்தபடி வண்டியில் கடந்து செல்ல… அதை கவனித்த விக்கி, “ஏன்டா அந்த ஆளு உன்னை அப்படி முழுங்குற மாதிரி பார்த்துட்டு போறாரு… மாப்பிள… உண்மைய சொல்லு… ஏதாச்சும் கேப்மாரி தனம் பண்ணிட்டு, ஊர விட்டு ஓடி வந்துட்டியா இல்ல உண்மையாவே உன்னை உன் தாத்தா பாட்டி தான் கூட்டிட்டு போய் வளர்த்தாங்களா…?” என்று சந்தேகமாக கேட்கவும்,

 

“டேய் நான் ரொம்ப நல்லவன் டா… என்னை நம்பு… யாருடா அது என்னை சைட் அடிச்சது…?” என்றபடி தன்னை கடந்து சென்ற வண்டிகாரனை திரும்பி பார்க்க,

 

வண்டியில் சென்றுக் கொண்டு இருந்தவனும் சந்தேகத்தோடு திரும்பி பார்க்க இருவரும் ஒரு நொடி ஆழ்ந்தனர் அவர்களின் முகத்தை கண்டு, அவனோ சட்டென வண்டியை நிறுத்தி ஒற்றை புருவத்தை உயர்த்தி, விரப்பாக ஒரு பார்வை பார்த்தபடி வண்டியை திருப்பி இவர்களை நோக்கி வந்தவன் அவர்கள் அருகில் நிறுத்தி, கவியழகனை பார்த்து முறைக்க, அவனும் பதிலுக்கு முறைத்து வைத்தான்…

 

தொடரும்…

Advertisement