Advertisement

UD-2

“ஏய்… என்னடி இது கோலம்…?” வசுந்தரா அதிர்ந்து கேட்க,

 

“ம்ம்ம்… பார்த்தா எப்படி தெரியுதாம்… ?”

 

“அடிங்க… வாய் கொழுப்பெடுத்தவளே… போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ… இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க… இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா…?” வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,

 

“இத பாரு… நான் பொறண்டதை நீ பார்த்தியா… இல்ல யாரு மண்டையாச்சும் உடைக்குறதுதேன் என் சோலியா…? நானே கடுப்புல இருக்கேன் என்னைய வெறி ஏத்தாம போயிரு சொல்லிபுட்டேன்…” என்றவளை கோபமாக பார்த்தவர்,

 

“கொலுப்பெடுத்தவளே… பெத்தவன்னு கொஞ்சமாச்சும் மரியாத இருக்கா பாரு… இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன் மாமியார் கிட்ட அனுபவிப்ப பாருடி… அப்ப தெரியும் என் அரும…” என்று வசுந்தரா தன் மகள் பூங்குழலியிடம் பாய,

 

“அத பொறவு பார்த்துக்கலாம்…. இப்ப என்னைய வுடு நான் போய் குளிக்குறேன்… ” என்று விடுவிடுவென தன் அறை நோக்கி ஓடினாள்…

 

செல்லும் அவளையே பார்த்திருந்த வசுந்தராவிற்கு அவளது வளர்ச்சியை கண்டு மகிழ்ந்தாலும், அவளுடன் வளரும் குறும்பு தனத்தால் கவலை அவர் உள்ளத்தை பெரிதாக வாட்டியது…

 

‘உனக்கு எப்படியாச்சும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா  என் கடமை முடியும்… கடவுளே நீதேன் என்னைய காப்பாத்தணும்…’என்று மனதில் எண்ணிக்கொண்டவரின் கண்கள் லேசாக கலங்கியது கடந்து வந்த பாதையை எண்ணி…

 

தன் அறைக்குள் நுழைந்தவள், குளித்து தன் உடையை மாற்றிவிட்டு  படுக்கையில் கவிழ்ந்து படுத்து, தன் தலையணையை கட்டிபிடித்தபடி தன் விரல் நகத்தை கடித்துக் கொண்டே, “எங்கனையோ பார்த்திருக்கேனே… எங்க…?யாரா இருக்கும்…?அந்த முகம்…”என்றபடி கண் மூடி யோசிக்க தொடங்கினாள் தன் நினைவடுக்கில்….

 

‘எதுக்கு இவனுங்க முறைச்சுகிட்டு நிக்குறாங்க… நம்ம பையன் ஏதோ வேண்டாத வேலை பண்ணிட்டு தான் ஊரைவிட்டு ஓடிவந்திருக்கான் போல… அய்யோ இவன் கூட வந்து மாட்டிக்கிட்டோமோ… படத்துல வர மாதிரி கம்பத்துல கட்டி வச்சு தோலை உரிச்சுருவாங்களோ…? கடவுளே… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பிலை கொத்து மாதிரி நான் என் அம்மாக்கு ஒரேயொரு பையன் எனக்கு ஒன்னும் ஆயிர கூடாது கடவுளே… ‘ விக்கியின் மனதில் எண்ணங்கள் பந்தைய குதிரையை போல் ஓடியது நொடிகள்..

 

ஒருவரையொருவர் முறைத்தபடி நின்றிருந்தவர்கள் சட்டென, “டேய் குணா…” என கவியும், “மாப்ள கவியழகா…” என்று மற்றொருவனும் கூவியபடி கட்டிக் கொண்டனர்…

 

‘அட எருமைங்களா… தோஸ்த்துன்னா எதுக்குடா இந்த பில்டப் குடுத்தீங்க…’என்று எண்ணியவன் இப்பொழுது முறைப்பதை தன் வேலையாக்கி கொண்டான்…

 

“ஏம்லே கவியழகா… எங்கல போன… ? இம்புட்டு வருஷம் ஆளையே காணம்… ஊரையே மறந்துட்டியோ… ஆளே மாற்றிட்டியேலே… சுகமா இருக்கியா..?” என்று குணா கேட்கவும்,

 

“நல்லா இருக்கேன் குணா… நம்ம ஊரை போய் மறப்பேனா… அப்படியே படிப்பு, வேலைன்னு இத்தனை வருஷம் போயிருச்சு… நீ எப்படி இருக்க… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா…?”

 

“நானும், வூட்டாலுங்க எல்லாம் சுகம் தான்லே… எப்பல வந்த…? ஒத்த வார்த்தை கூட சொல்லல…நம்ம ஊர சுத்தி பாக்குதியோ…?”

 

“இல்ல குணா… நான் இப்ப தான் ஊருக்குள்ளேயே வரேன்…”

 

“என்னலே சொல்லுதே…? இப்பதேன் வரேங்குற… பை ஒன்னுத்தியும் காணம்… ஆமா ஏன் நடந்து வந்துட்டு இருக்க…?” கவியழகனையும் உடன் வந்தவனையும் ஆராச்சியாக பார்க்க, அப்பொழுது தான் இருவரும் தங்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்த விக்கியை கண்டனர்…

 

“மாப்ள… யாரு இது உன் சினேகிதனா…?” என்று குணா கேட்கவும்,

 

“ஆமா பா… நான் வெளிநாட்டுல வேலை பார்க்கும் போது நல்ல பழக்கம்… நம்மளை மாதிரி தான்…”என்றவன், விக்கியின் புறம் திரும்பி “ஏன்டா முறைச்சுட்டு நிக்குற…? என்னாச்சு…?” என்றதும் தான் தாமதம்,

 

“என்ன என்னாச்சு…? ஏன்டா இரண்டு பேரும் பிரண்ட்ஸ்னா எதுக்கு டா அப்படி முறைச்சுக்கிட்டீங்க…? நடுவுல நான் பேக்கு மாதிரி பயந்து முழிச்சுட்டு இருந்தேன்…எதுக்குடா இந்த பழைய காலத்து எஃபெக்ட் உங்களுக்கு…?” வார்த்தையில் அத்தனை கடுப்பு தெரிந்தது அவனிடம்….

 

குணாவிடம் இருந்து பிரிந்த கவியழகன் விக்கியிடம் நெருங்கி, “மச்சான் எதுக்கு இவ்வளவு டென்ஷன் உனக்கு… பார்த்து பல வருஷம் ஆச்சுல டக்குன்னு நியாபகத்துல வரல அதுனால கொஞ்சம் உத்து பார்த்தோம் அவ்வளவு தான்… அத போய் நீ முறைக்குறதுன்னு தப்பு புரிஞ்சுக்கிட்ட…” என்று அவன் தோளில் கையை போட வர,

 

“என்னது உத்து பார்த்தீங்களா டேய்… வேண்டாம் வாய்ல நல்லா வந்துரும்…”என்று மேலும் திட்ட போனவனின் தோளை பற்றிய குணா,

 

“அட விடு மாப்ள… இது எல்லாம் அரசியல்ல சாதாரணம்… பெருசா கண்டுக்க கூடாதுலே… ஆமா உங்க பை எல்லாம் எங்க…? ஏன் நடந்து போறீக…? அய்யாக்கு நீ வாரது தெரியாதா…?” என்று விக்கியை தோளோடு அணைத்தபடியே குணா கேட்க,

 

“பை எல்லாம் கார்ல இருக்கு மச்சான்… கார் ஊர் எல்ல சாமி கோவில் கிட்ட நிக்குது… கார் டையர் பஞ்சர் ஆயிருச்சு.. அதான் அப்படியே நடந்து வந்துட்டு இருக்கோம்…அதுவும் இல்லாம சிக்னல் வேற இல்ல ஃபோன்ல, அதுனால அப்பாக்கும் ஃபோன் பண்ண முடியல… ” என்றவன் நடந்த உண்மையை கூறவில்லை…

 

இனி இங்கு தானே இருப்போம் பொறுமையாக அவளை கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவே கார் பஞ்சர் என்று மட்டும் சொல்லி வைத்தான்…

 

விக்கியின் கேள்வியான பார்வையை கண்டுக் கொள்ளாமல் குணாவை மட்டும் பார்த்திருந்தான்…

 

“அப்படியா… ஒன்னும்  பிரச்சினை இல்ல… வாங்கலே நான் வீட்டுல விடுறேன்…”என்று அழைத்தவன் வண்டியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கவும் தான் விக்கியின் முகத்தில் பல்பு எரிந்தது…

 

ஆனால் கவியழகனோ, “இல்ல மச்சான்… நீ ஏதோ வேலையா போயிட்டு இருக்குற மாதிரி இருக்கு நீ அத பாரு… எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல… இன்னும் கொஞ்ச தூரம் தானே நாங்களே மெதுவா நடந்து போயிக்குவோம்… “என்றதும் விக்கியின் முகம் இறுகி விட்டது…

 

“அப்ப நீ வேண்ணா நடந்து வா… நான் மச்சான் கூட வீட்டுக்கு வண்டில போறேன்… “என்று குணாவை நோக்கி நடக்க போக,

 

“டேய் மச்சான்…”என்று கவியழகன் பல்லை கடித்தான்…

 

“என்னடா…? ரொம்ப ஓவரா பண்ணுற…? ஏற்கனவே பசி உயிர் போகுது… இதுல இன்னும் நடந்தே கூட்டிட்டு போவானாம்… உன்ன நம்பி ஊர்க்கு வந்த புள்ளைய, பசியால சாக வச்சுறாத…” என்று மிரட்டவும், சிரித்த கவியழகன் குணாவை நோக்கி திரும்பி, “போலாம் டா மச்சான்…” என்று கூறவும்,

 

சிரித்துக் கொண்டே வண்டியை உயிர்ப்பித்தான் குணா, கவியழகன் விக்கி இருவரும் பின்னால் அமர்ந்துக் கொள்ள, பார்வையாவும் இவ்வூரின் மாற்றங்களை கண்களில் நிரப்பிக் கொண்டே வந்தான் கவியழகன்….  வீட்டை நோக்கி சென்ற வண்டி சிறிது நேரத்தில் கவியழகனின் வீட்டை அடைந்து…

 

“அத்த….” என்று கத்தியபடி வீட்டின் உள்ளே நுழைந்தாள் கனிமொழி…

 

“வாடி வா… இப்பதேன் நினைச்சேன் எங்கடா இவளை காணமேன்னு வந்துட்டா… எங்கடி போய் உருண்டுட்டு வரிங்க…?” என்று கையில் ஒரு கம்புடன் வர,

 

“அடி ஆத்தி… என்ன ஐத்த இது வம்பா போச்சு உன்கூட… உன் மக பண்ணுற சோலிக்கு என்னைய அடிக்க வரிக…?” என்று அவரிடம் இருந்து தப்பிக்கும் விதமாக அவரை விட்டு நான்கடி தள்ளி நின்றுக் கொண்டாள்…

 

“ம்ம்ம்… என்ன பண்ணிட்டு வந்து இருக்கா…? உண்மைய சொல்லு உன்னைய அடிக்க மாட்டேன்…” என்று வசுந்தரா மிரட்ட,

 

‘இவளைய பிரண்டா புடிச்சுட்டு நான் பாடாத பாடு படுதேன்… எல்லாம் என் நேரம்…’என்று மனதில் அலுத்துக் கொண்டவள், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே, நடந்த அனைத்தும் கூறி முடிக்கவும் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார் வசுந்தரா…

 

அதை பார்த்து பதறிய கனிமொழி, “அத்த….” என்று வசுந்தராவின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடிக்க,

 

நச்சென்று ஒன்று விழுந்தது அவள் முதுகில், “ஆஆஆ அம்மா…. ” என்று அலறவும், வசுந்தரா

 

“இவளை… “என்று பல்லை கடித்தபடி வேகமாக எழுந்தவர் சேலை முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவர், கீழே கிடந்த கம்பை தூக்கிக் கொண்டு பூங்குழலியின் அறையை நோக்கி வேகமாக சென்றார்…

 

‘அத்த போற வேகத்தை பார்த்தா இன்னைக்கு குழலி நல்லா பாத்து பதமா வாங்க போறடி…’ என்று எண்ணிக் கொண்டவள் தனக்கு விழுந்த அடியை தேய்த்துக் கொள்ள தவறவில்லை….

 

வேகமாக உள்ளே சென்ற வசுந்தரா படுக்கையில் கவிழ்ந்து படுத்து கால்கள் இரண்டையும் ஆட்டிக் கொண்டிருந்தவளை காண காண கோபம் எரிமலையாக எகிறியது… கையில் இருந்த பிரம்பால் அவளது காலில் ஒரு அடி இழுக்க,

 

“ஆஆஆஆ…..” என்று கத்திக் கொண்டே படுக்கையில் இருந்து உருண்டு கீழே விழுந்த பூங்குழலி, கால்களை தேய்த்துக் கொண்டே கோபமாக அன்னையை ஏறிட்டு,

 

“எதுக்கு இப்ப இப்படி அடிச்ச லூசு ஆத்தா…” என்று எகுற,

 

‘இவ செத்தா இன்னைக்கு…’ என்று வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கனி எண்ணம் தோன்றியது தோழியின் கேள்விக்கு…

 

“அடிங்க… வாய்… வாய்… இந்த வாய இழுத்து வச்சு அறுக்குறேன் பாரு… யார பார்த்துடி லூசுங்குற…? ஊர் பூராவும் வம்பு இழுத்துட்டு வந்துட்டு என் உசுர வாங்குறதையே குறியா வச்சு இருக்க… இத்தன நாளும் உள்ளுர்காரங்க கூடத்தேன் பிரச்சினை பண்ணிகிட்டு திரிஞ்சவ.. இப்ப வெளியூர்காரவளையும் விட்டு வைக்காம வம்பிழுதுட்டு வந்து நிக்குறவ… இன்னைக்கு உன் கால வொடச்சு வீட்டுலையே உட்கார வைக்குறேன் பாரு…” என்று அவளை திட்டியபடியே அவளது ரெட்டை ஜடையில் ஒன்றை பிடித்துக் கொண்டு அவளது காலை பதம் பார்த்துக் கொண்டிருந்தார் பிரம்பால்…

 

“ஆஆ.. அய்யோ… ஆஆ.. என் காலு… ஆஆஆ..அய்யயோ… என் ஜட….” அன்னையின் கையில் மாட்டிய ஒற்றை ஜடையை விடுவிக்க போராடியபடி நின்ற இடத்திலேயே கதகளி ஆடிக்கொண்டிருந்தாள்…

 

இந்த அற்புத காட்சியை வெளியே கையை கட்டிக்கொண்டு நின்றிருந்த கனிமொழி வசுந்தரா செய்து வைத்திருந்த தட்டுவடையை வாயில் அடைத்துக் கொண்டே புன்னகையுடன் பார்த்திருந்தாள்…அவளுள் அத்தனை சந்தோஷம் பூங்குழலி அடி வாங்குவதை கண்டு, இருக்காதே பின்னே ஊரில் இவளால் உண்டாகும் அத்தனை பிரச்சனையும் தோழி என்ற ஒற்றை காரணத்திற்காக பழி ஏற்று அடி வாங்கி, யாரிடமும் சிக்கி கொள்ள கூடாது என்று சில சமயங்களில் ஓடி, உருண்டு, பிரண்டு, காயம் பட்டு, உடை கிழிந்து என அவள் கண்ட சேதாரங்கள் தான் எத்தனை எத்தனை அம்மம்…..மா சொல்லிமாளாது அத்தனையும்…

 

அதனால் அவ்வப்போது இவ்வாறு அவள் வாங்கும் அடியை கண்டு உள்ளுக்குள் ஒரு அல்ப சந்தோஷம் உண்டாவதை மனப்பூர்வமாக அனுபவிப்பாள் கனிமொழி…

 

கனிமொழி நிற்கும் தோரணையும் முகத்தில் இருக்கும் பிரகாசமும் அவளது உள்எண்ணத்தை அப்பட்டமாக காட்டி கொடுக்க, ‘உள்ளுக்குள்ள சந்தோஷ படுறியோ… இருடி உனக்கு இருக்கு… என்னைய காப்பாத்தாம தட்டுவடைய அமுக்குறியோ… வச்சுக்குறேன் டி உன்னை…’ என்று அவளை முறைத்தபடியே அன்னையிடம்  அடியை வாங்கிய படி அலறிக்கொண்டே ஆடிக் கொண்டிருந்தாள்….

 

அடி சற்று அதிகமாக விழவும், பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தவள், “ஆஆஆஆ… ஆத்தா… நிப்பாட்டுறியா கொஞ்சம்… ” என்று உச்சாத்தியில் கத்தவும், வசுந்தரா சற்றே தன் பிடியை தளர்த்தியபடி அடிப்பதை நிறுத்த, இது தான் சாக்கென்று அன்னையிடம் இருந்து விடுப்பட்டவள், தன் தலையை தேய்த்தபடி

 

“என்ன நடந்துச்சுன்னு தெரியாம இந்த அடி அடிக்குறியவ… நான் ஒன்னுமே பண்ணல… எல்லாத்துக்கும் காரணம் அந்த கார்காரன் தான்… ” என்று முடிக்கும் முன்,

 

“புழுவாத டி திமிர் பிடிச்சவளே… கனி எல்லாத்தையும் சொல்லிட்டா…” என்று அன்னை சொன்னதும் வெடுக்கென்று திரும்பி பார்த்து கனியை முறைக்க,

 

பூங்குழலியின் திடீர் பார்வையை எதிர்ப்பார்க்காதவளுக்கு புரையேறிவிட, தலையை தட்டியபடி, “அத்த என்னைய என் ஆத்தா தேடும் நான் வாரேன்… ” என்று நைசாக நழுவி கொண்டாள்…

 

‘எப்படி இருந்தாலும் நாளைக்கு இங்க வந்து தானே ஆகுனும்… அப்ப கவனிச்சுக்குறேன் டி உன்னை…’ என்று கருவி கொண்டவள், அன்னையின் புறம் திரும்பி

 

“உண்மையாவே அந்த கார்காரன் தான் ஆத்தா காரணம்… நான் அமைதியா தான் போயிட்டு இருந்தேன் அந்த கனிபுள்ளையோட… ” என்று முடிக்கும் முன்,

 

“ஏதோ ஒன்னு… ஆனது ஆயிபோச்சுன்னு பேசாம வர வேண்டியது தானே… என்னத்துக்கு அவிய வண்டிய நாசம் பண்ண…?” என்று கேட்டு முறைத்தபடி அடிக்க போக, அவரிடம் இருந்து தப்பித்தவள்,

 

“இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் பார்த்துக்க… “என்று மிரட்டிய மகளை பார்த்து,

 

“நானும் சொல்லுதேன் நல்லா கேட்டுக்க… இனி எங்கையாச்சும் போய் வம்பிழுத்துட்டு வந்தேன்னு தெரிஞ்சுது… படிச்சது போதும்னு கை, காலை உடைச்சு வீட்டுல போட்டுட்டு ஏதாச்சும் மாப்பிள்ளையை பார்த்து கட்டி வச்சுருவேன்… ஜாக்கிரதை…” என்று எச்சரித்துவிட்டு வெளியேறினார் கோபமாக…

 

அவருக்கு மனதில் பயம் பெரிதும் வாட்டி வதைத்தது மகளது திருமணத்தை பற்றி… எந்த கவலையுமின்றி வண்ணத்து பூச்சியாக சுற்றி வருபவள் எத்தனை கஷ்டம் வந்த போதும் அதை முகத்தில் காட்டாது தன்னோடு தனக்கு ஆறுதலாக இருந்து, தன் வாழ்விற்கே அர்த்தமாக இருப்பவள் ஊரிலில் உள்ள அத்தனை வம்பு தும்பையும் வா என்று வெத்தலை பக்கு வைத்து அழைத்து, ஒரு பிரளயத்தை உண்டு பண்ணாமல் அவளது ஒருநாள் பொழுது விடியாது…

 

இதில் பெரிதும் பாதிப்பது இரு  ஜீவன்கள் ஒன்று சண்டையில் உடன் இருந்த பாவத்திற்காக தன் மண்டையும் சேர்த்து இழுத்து விட்டுக் கொள்ளும் கனிமொழி, மற்றொன்று வசுந்தரா நடந்த சண்டைக்கு சமரசம் பேசி பிரச்சினையை பெரிதாக விடமால் முடிவுக்கு கொண்டு வருவதற்குள் மூச்சு முட்டி நாக்கு வெளியே தள்ளிவிடும்…. இவை அனைத்திற்குமான காரணகர்த்தாவோ ஒன்றும் அறியா பிள்ளை போல் ஒரு ஓரம் நின்றிருக்கும்…

 

பூங்குழலியின் தந்தை அவளது ஒன்பதாவது வயதில் மாரடைப்பால் அவளையும் அவளது அன்னையையும் தன்னந்தனியே இவ்வுலகில் விட்டுவிட்டு சென்றுவிட, அதன் பின் இவர்களது வாழ்க்கை புயலில் மாட்டிக் கொண்டது போல் ஆயிற்று…. ஒற்றையாளாக நின்று மகளை போராடி வளர்த்தாள் வசுந்தரா…

 

சிறுவயதில் இருந்தே துடுக்குதனம் அதிகம் கொண்ட பெண்ணாகவே வளர்ந்த பூங்குழலி… தந்தையின் மறைவிற்கு பின், பூப்பெய்திய பின்னர் இன்னும் சுட்டியாக மாறினாள்… அச்சம் மடம் நாணம் என்று பெண்களுக்கு உருவாக வேண்டிய அனைத்தும் அவள் விசயத்தில் தலைகீழாக நடந்தது… சுட்டியிலும் சுட்டியாக மாறி போனாள்… வயது வித்தியாசம் எதுவும் இன்றி அனைவரிடமும் சரிக்கு சமமாக நின்று வாய் சண்டையில் இறங்குவாள்…

 

யாரேனும் அவளை அதிகம் சீண்டி விட்டால் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது சேதாரம் உண்டாக்காமல் அவளது உள்ளம் சாந்தி அடையாது… கனிமொழி இவளது தோழியாக இருப்பினும் முதல் உரிமையாக அவள் பூங்குழலியின் மாமன் மகள் என்பதே உண்மை…

 

பள்ளியில் இருந்தே அதாவது பள்ளியில் வலது காலை எடுத்து வைத்தது முதல் இன்று வரை ஒன்றாக படித்து, ஒன்றாக உண்று, ஒன்றாக உருண்டு, ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக சண்டையிட்டு வாழ்ந்து வரும் ஒட்டு புல்கள்…

 

இவளது அத்தனை சேட்டையும் ஊரில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று… இதில் சிலர் அவளது சேட்டையால் பெரிதும் பாதிக்கப்பட்டு கரித்துக்கொட்டி பழி சொல்ல காத்திருப்பவர்களும் உண்டு…

 

இந்நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் கல்லூரி படிப்பை முடிக்கவிருக்கும் மகளை எவ்வாறு மணம் முடித்து கொடுப்பது என்ற பெரும் கவலை அவருள்… சில நேரம் இவளது செயல் அவரது பயத்தை அதிகப்படுத்த அது பெரும் கோபமாக மாறி அவளை அடிபின்னி எடுத்து விடுவார் இன்றுபோல்…

 

வீட்டின் நடுவில் நான்கு தூண்கள் கொண்ட முற்றமும் வெட்டவெளியாக இருக்க மூன்று படுக்கையறையும் ஒரு சமையலறை பூஜை அறை கொல்லைபுறத்தில் குளியலறை என்று அமைக்க பெற்றிருந்தது அவர்களது வீடு… ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த வசந்தராவின் விழிகள் கலங்கி கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தது…

 

இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தையும், ஒரு மளிகைகடையையும் பார்த்து கொண்டிருப்பவருக்கு உடல் முன்போல் ஒத்துழைக்காதது வேறு கவலையை அதிகப்படியாக்க மகளை எவ்வாறாவது பத்திரமாக கரை சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவருள் வேர் விட்டு இருந்தது…

 

சிறிது நேரம் மகளின் எதிர்க்காலத்தை  எண்ணி கலங்கியபடி அமர்ந்திருந்தவர், நேரமானது உணர்ந்து, ” அய்யோ இம்புட்டு நேரம் ஆச்சே… புள்ளைய வேற ரொம்ப அடிச்சுடேன்… ரொம்ப வலிச்சு இருக்குமோ… பசிக்குமே… கடவுளே…” பெற்றவளாயிற்றே, மனம் பதைபதைக்க அவளை உண்ண சொல்லி அழைக்கலாம் என்று எழ போனவர், அப்படியே அமர்ந்துவிட்டார்…

 

பூங்குழலி தன் அறையை விட்டு வெளியே வந்தவள், முற்றத்தில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்து கண்களை உருட்டி முறைக்க வசுந்தராவும் நொடியில் மகள் மேல் இருந்த பாசம் அவளது கண் உருட்டில் பஸ் பிடித்து பாகிஸ்தான் சென்றிருக்க அவரும் அவளை முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தார்…

 

‘சிறுக்கிக்கு திமிர பாரு…  எம்புட்டு அடி வாங்கினாலும் சொரணையே இல்லாம முறைச்சுட்டு நிக்குது… இவளையெல்லாம் நாலு நாள் பட்டினி போடனும்… கொழுப்பெடுத்தவ…’என்று மனதில் தாளிக்க, அவளோ வழக்கம் போல் தன் நெஞ்சில் புரண்டு கொண்டு இருந்த ரெட்டை ஜடையில் ஒன்றை பின்னோடு விசியதோட நில்லாமல் வசுந்தராவை பார்த்து வாயில் அவலம் காட்டி முகத்தை திருப்பிக் கொண்டு சமையலறையை நோக்கி சென்றாள் வீர நடையில்…

 

அவள் செல்வதை பார்த்து, “இதுக்கு போய் பாவபட்டேனே… என்னைய சொல்லனும் மொத… இது எல்லாம் திருந்தாத கூறுகெட்டவ…”என்று தன் தலையில் அடித்துக் கொண்டவர் அவள் கேட்கும்படி புலம்பிக் கொண்டே தன் வேலையை பார்க்க தொங்கினார்…

 

நம் பூங்குழலியோ, அவரை ‘யார் நீ…?’ என்னும் தோரணையில் பார்த்துவிட்டு கருமமே கண்ணாக அவளது வேலையை அவள் பார்க்க, அதற்கும் வசவு வந்து விழுந்தது வசுந்தாவிடம்….

 

“சூடு சொரனை ஏதாச்சும் இருக்கா பாரு… பொட்ட புள்ளையாட்டமா இருக்கு…? பயலுகவளாட்டம் சுத்திட்டு திரியுது… இதைய பெத்ததுக்கு என் நிம்மதி போனது மட்டுந்தேன் மிச்சம்… கொஞ்சமாவது காது கேட்டுக்குதா பாரு… ஏழுகழுத வயசாச்சு வீட்டுல உருப்படியா ஒரு வேல செய்யுதா… ஒன்னுமில்ல…. ஆக்கி வச்சா நல்லா மூக்கு முட்ட திங்க மட்டும் தெரியும்… வீட்டுக்குன்னு ஒருவேலை செய்யுதா அதுவுமில்ல, நா ஒருத்தியா என்னத்த பார்ப்பேன்… கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்கா… வெளில எல்லாம் அவ அவ என் பொண்ணு அப்படி என் பொண்ணு இப்படின்னு பெரும பித்துறாளுக… எனக்கு மானகேடா இருக்கு சே.. எல்லாம் நா வாங்கியாந்த வரம் அப்படி….” என்று புலம்பிக் கொண்டு இருக்க,

 

பூங்குழலியோ நன்றாக வயிறார உண்டு கையை கழுவிட்டு ஒரு குட்டி ஏப்பத்தையும் விட்டு, “ஸ்ஸ்…  செம்ம சாப்பாடு…” என்று சொல்லியவாறு தன் அறைக்குள் சென்று தன் மஞ்சத்தில் சாய்ந்தாள் அடுத்த நாளின் கடமையை ஆற்ற இப்பொழுதைய ஓய்வை நாடி…

 

அதை பார்த்த வசுந்தரா, “கடவுளே… இதைய வச்சு நான் என்னதான் செய்யுறது…  நீதேன் என்னைய காப்பாத்தனும்…” என்று மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டார்… அவரால் அதை மட்டும் தான் செய்ய முடியும்…

 

இங்கு கவியழகன் வீட்டிலோ தடபுடலான விருந்து ஒன்று நடந்துக் கொண்டு இருந்தது… பல வருடங்கள் கழித்து வீடு திரும்பி இருக்கும் மகனை முருகவேலும், காயத்திரியும் விழுந்து விழுந்து கவனித்தனர்…

 

வாசலில் வந்து நின்ற மகனுக்கு ஆர்த்தி சுற்றி திருஷ்டி கழித்த காயத்ரி, “நல்லா இருக்கியா ராசா…?”

 

சிறு பாச பார்வை கொண்ட புன்னகையுடன், “நல்லா இருக்கேன் மா… நீங்க எப்படி இருக்கீங்க… ?” என்று கேட்டவாறே அருகில் நின்றிருந்த தந்தையின் மீது ஒரு பார்வை செலுத்தினான்…

 

அவரும் நலம் என்னும் விதமாக ஒரு புன்னகையை பதிலளிக்க மீண்டும் அன்னையின் புறம் பார்வையை திருப்பினான்…

 

“ஏய் வடிவு… இதை வீதில கொட்டிரு….” என்று ஆர்த்தி தட்டை அவ்வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுக்க,

 

“சரிங்க ம்மா….” என அவர் தட்டுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும்,

 

“ராசா… சாமி…” என மகனின் முகம் வருடியவர், “இப்பதான்யா மனசுக்கு நிம்மதியா இருக்கு… இனியாச்சம் இந்த ஆத்தா கூடவே இருய்யா…” என்று உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீருடன் கேட்க,

 

“ம்மா… கவலை படாதீங்க இனி இங்க தான் இருப்பேன்… இதுக்கு எதுக்கு அழறீங்க…?” என்று லேசாக தோளோடு அணைத்தபடியே கேட்க,

 

“ரொம்ப சந்தோஷம் ராசா… நா அழுகல…” என்று புன்னகையுடன் கண்ணை துடைக்கவும், விக்கி

 

“ஓஓஓ… அம்மா க்கு கண்ணு வேர்த்துருச்சு போல… “என்று மெல்லிய குரலில் அவன் பக்கம் சாய்ந்து கூற, அது காயத்திரியின் காதிலும் விழுந்தது…

 

“என்னது…” என்று அவர் கேட்கவும்,

 

“ஒன்னுமில்ல ம்மா… உங்களுக்கு பாசம் அதிகம்னு சொன்னேன்…” என்று பல் இளிக்க, அவனை ஒரு போலி கோபத்தோடு முறைத்தவர்,

 

“யாரு ராசா இந்த கொரங்கு..? உன் சினேகிதனா…?” என்று கேட்டவரை பார்த்து அதிர்ந்தான் விக்கி….

 

கவியழகன், “ஆமா ம்மா… என் கூட வேலை செய்யும் போது பழக்கம்… எப்படி ம்மா கொரங்குன்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க…?” என்று அதிசயம் போல் கேட்க,

 

“ஓஓஓ… அது என்ன அம்புட்டு பெரிய விஷயமா…? மொச புடிக்குறவன் மூஞ்ச பார்த்தா தெரியாது… ” என்றவர் விக்கியை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆளும் முழியும்…” என்று முனுமுனுத்தார்…

 

அப்பொழுது முருகவேல், “சரி.. சரி.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்குறதா யோசன… உள்ள வாங்க… ஏய் காயத்திரி இப்ப தான் புள்ள வூட்டுக்கு வந்து இருக்கு வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கறவ… கூறுகெட்டவளே உள்ளாற கூட்டியா புள்ளைய… வாப்பா ராசா…” என்று அதட்ட அனைவரும் கலைந்து வீட்டினுள் நுழைந்தனர்…

 

வீட்டினுள் செல்லும் போது, “என்னடா அம்மா புள்ள ரெண்டு பேரும் சேர்ந்து கலாய்க்குறீங்களா…? இது எல்லாம் ஓவர் டா மச்சான்… என்னை பார்த்தா குரங்கு, மொச புடிக்குறவன் மாதிரியா இருக்கு…?” என்று விக்கி கடுப்புடன் கேட்கவும்…

 

“டேய் மாப்பிள்ள நீ அம்மாவ கலாய்க்க பார்த்த, அதான் அம்மா உன்னை டேமேஜ் பண்ணிட்டு போறாங்க…” கையை அவன் கழுத்தை சுற்றி போட்டவாறு மெல்லிய குரலில் பேசியபடி வீட்டினுள் நுழைந்தனர் தோழர்கள் இருவரும்…

 

“அதுக்குன்னு இப்படியா….?”

 

“ம்ப்ச்ச்… மாப்பிள்ள அம்மா ஜாலி டைப்… சும்மா வம்புக்கு பேசிட்டு போறாங்க அவ்வளவுதான்… ரொம்ப பாசமானவங்க டா… இப்ப தானே வந்து இருக்க போக போக புரியும் பாரு… ” என்று தோள் தட்டினான்…

 

“ம்ம்ம்… அம்மாவும் புள்ளையும் என்னை வச்சு செய்யாம இருந்தா சரி…” என்று பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்தவனின் பார்வை முருகவேல் மேல் படவும் நெளிந்தான்…

 

முருகவேல் பார்வையால் அவனை மேலும் கீழுமாக ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்திவிட்டு தன் தோளில் இருந்த துண்டை எடுத்து உதறிவிட்டு திரும்பி செல்ல இருக்கையில், அவரை முறைத்தபடி வந்தாள் சைந்தவி….

 

தொடரும்….

 

Advertisement