Advertisement

UD:29  
சாப்பாட்டு மேஜையில் தன்னவளை பற்றின யோசனையில் அமர்ந்திருந்தான் கவியழகன்… அப்பொழுது தந்தை வருவதை கண்டு சற்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையை வேற புறம் திருப்பிக்கொண்ட
கவிக்கு தெரியும், தந்தைக்கும் பூங்குழலிக்கும் சண்டை உருவாகும் என்று… ஆனால் அவனுக்கு வேற வழியும் தெரியவில்லை… மனம்கவர்ந்தவளை விட்டுவிடவும் முடியவில்லை தந்தையை எதிர்க்கவும் முடியவில்லை…
இதில் தப்பின் பங்கு தந்தைக்கு அதிகம் இருந்ததால் அவனது இதயம் தன்னவளின் புறம் சாய்ந்தது அநிச்சையாக… இவ்விருவர்களுக்கும் இடையில் உண்டாகும் சண்டையில் தந்தையை எளிதாக சமாளித்து விடலாம் என்று தோன்றியவனுக்கு பூங்குழலியை அடக்கும் வழிதான் தெரியவில்லை… தனிமையில் அவளது செயலுக்கு பழிவாங்க முடியும் என்று நம்பியவனுக்கோ பொதுவில் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை…
யோசிக்க யோசிக்க தலை வலிப்பது போல் இருக்க, நெற்றியில் கை வைத்துக் கொண்டான் கவி… பக்கத்தில் அமர்ந்திருந்த சைந்தவி, “என்னாச்சுணே….? தல வலிக்கா…?” என்று பதமாக கேட்கவும் முருகவேல் இவர்களை பார்த்தபடி அருகில் வரவும், ஹாலில் இருந்து வேகமாக வந்த பூங்குழலி முருகவேலை முந்திக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் முருகவேலின் இருக்கையில் அமர்ந்தாள் தோரணையாக….
நொடியில் நடந்த இந்த நிகழ்வை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை… முக்கியமாக முருகவேல்… இங்கு வந்ததில் இருந்து கவி தெரிந்த கொண்ட விஷயம் , சோபாவிலும் சரி, சாப்பாட்டு மேஜையிலும் சரி முருகவேலின் இருக்கையில் எவருமே அமர்வது கிடையாது…
இப்பொழுது பூங்குழலி அமர்ந்ததும், சைந்தவிக்கும் கவியழகனுக்கும் தோன்றியது, ‘அடுத்த சண்டையா…?’ என்றுதான்…
முருகவேலுக்கு, ‘நினைச்சேன்… இந்த பொட்ட கழுத, என்ற இடத்துக்கு ஆச படுதானுட்டு… இப்ப எங் இடத்துல உட்காருரவ நாளைக்கு சொத்துல கை வைக்க தொடங்கிருவா… இந்த சிறுக்கிய தட்டி வச்சே ஆகணும்… இதுக்கு அம்புட்டுக்கும் காரணம்…’ என எண்ணி பல்லை கடித்தவரின் பார்வை இப்பொழுது கவியழகன் மீது அழுத்தமாக படிந்தது…
‘எல்லாம் உன்னால் தான்….’ என்று குற்றம்சாட்டும் அந்த பார்வையை கவியழகனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை… என்னவானாலும் அவர் தன் தந்தை அல்லவா…
சைந்தவிக்கோ, ‘ஆஹா… அடுத்த சண்ட… ம்ம்ம்… நல்லா விருந்துத்தேன் போ சைந்து உனக்கு… பாப்போம் இந்த அம்மணி என்னத்த பண்ண போதாகணுட்டு…’ என்று விழிகளில் சுவாரஸ்யம் பொங்க பார்த்திருந்தாள்…
ஒவ்வொருவர் எண்ணங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்க காரணமாவள், சாப்பாட்டு மேஜையின் இருக்கையில் அமர்ந்ததும் அல்லாமல் கால் மேல் கால் போட்டு நிமிர்த்து அமர்ந்து மேஜையில் பரப்பபட்டு இருந்த பதார்த்தங்களை நாடியில் கைவிரல்களை தட்டியபடி பார்வையால் அலசிக் கொண்டிருந்தாள்…
அப்பொழுது எதார்த்தமாக பார்வையை திருப்புவது போல் திரும்பியவள் முருகவேல் நிற்ப்பதை கண்டு, புருவங்களை உயர்த்தி போலி ஆச்சரியத்துடன்
“என்ன மாமனாரே… அங்குட்டே நின்னுட்டீக… வாங்க வந்து உட்காருங்க…” என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்து மிதப்பாக முருகவேலை வரவேற்றவள் அருகில் இருந்த பக்கவாட்டு இருக்கையை சுட்டிக்காட்டினாள் போலி அக்கறையுடன்…
அவளது வார்த்தையில் கவியழகன், ‘போச்சுடா…’என்னும் விதமாக மேஜையில் கை ஊன்றி நெற்றியை பிடித்துக் கொண்டான்…
சைந்தவியோ, ‘சபாஷ்… தொடக்கமே அசத்தல்த்தேன் போ புள்ள…’என்னும் விதமாக மேஜையில் கை ஊன்றி தடையை கையால் தாங்கிய படி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்…
முருகவேலோ சொல்லவும் வேண்டுமா, பொங்கி எழுந்து விட்டார் வெறியில், “பொட்ட கழுத… மருவாதயில்லாமலா கூப்புடுத்த… பல்ல பேத்துருவேன் ராஸ்கல்…” என தோளில் போட்டிருந்த துண்டை உதறியபடி ஓர் எட்டு முன் வைத்தார்…
பூங்குழலி அதற்கெல்லாம் அசராமல், “பொறவு எப்படி கூப்பிட மாமனாரே… மாமா ‘ன்னு கூப்பிட என்ன தகுதி இருக்கு…? இல்ல என்ற அம்மாக்கு என்ன செஞ்சீக, தாய்மாமானுட்டு எனக்கு என்னத்த செஞ்சீக…?” என்று எகத்தாலமாக கேட்கவும், பதில் கூற முடியவில்லை முருகவேலால்…
சத்தம் கேட்டு சமையலறையை விட்டு வெளியே வந்த காயத்ரி பூங்குழலி அமர்ந்திருக்கும் இடத்தை கண்டு பதறியவர், சற்றிலும் தன் கண்களை சுழல விட்டார்…
முருகவேல், கோபத்தை அடக்கி கண்கள் சிவக்க பூங்குழலியை முறைத்துக் கொண்டிருப்பதை கண்டு, “சிறுக்கி… என்னத்தையோ பேசி வம்பிழுத்து வச்சுருக்கா போலவே… அய்யோ கடவுளே…” என்று முனுமுனுத்தபடி அருகில் வந்தவர்,
“அடியேய்… என்ன டி பண்ணிட்டு இருக்கவ… மருவாதையா எழு டி மொத… இங்குட்டு அவரு மட்டுத்தேன் உட்காருவாரு… எழு டி மொத… எழுன்னு சொல்லுத்தோம்ல…” என்று அதட்ட, பூங்குழலியின் பார்வை இப்பொழுது நிதானமாக காயத்ரியின் புறம் திரும்பியது அழுத்தமாக…
நிறுத்தி நிதானமாக வார்த்தையில், “என்ன சொன்னீக மாமியாரே… இங்க உங்க வூட்டுகாரர் அதாவது என்ற மாமனர் மட்டும்த்தேன் உட்காருவாரு… அப்படித்தேனே…?” என்று கேட்டவள்,
“ஏன் மாமியாரே… மத்தவங்க உட்கார தகுதி தராதரம் அந்தஸ்துனுட்டு அம்புட்டும் இருக்கணுமோ…?” என்று சந்தேகமாக கேட்டவள், யோசனை செய்வது போல் பாவனை செய்து பின் நினைவு வந்ததை போல் முகத்தை பிரகாசமாக காட்டியவள்,
தன் நெற்றியில் அரைந்துக் கொண்டு, “ஷ்ஷ்ஷ்…. மறந்தே போயிட்டேன் மாமியாரே… இந்த சேர்ல(chair) ஒன்னுமில்லாத அன்னக்காவடிங்க உட்கார கூடாதில்ல… ” என்று சொல்லவும் அங்கிருந்த அனைவருக்கும் அவளது செயலின் பொருள் விளங்கியது…
சைந்தவிக்கு ஏன் இந்த வார்த்தைகளை குழலி சொன்னாள் என்று புரியவில்லை என்றாலும் தன் தந்தை எதையேனும் சொல்லிருக்க கூடும் என்று புரிந்திருந்தாள்…
காயத்ரியோ அன்றைய நாளின் நினைவில் அமைதியாகிவிட, அதை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்தவள், முருகவேலை பார்த்து,
“என்ன மாமனாரே அப்படித்தானே…?” என்று கேட்க, அதற்கு மேல் பொறுமை காக்க முடிவில்லை அவரால்…
“ஆமா… அப்படித்தேன்… ஒழுக்கா எழுந்திருடி பொட்ட கழுத…” என்று கர்ஜிக்க, கவியழகனுக்கு அவரது வார்த்தையில் கோபம் வந்து விட்டது…
மனைவியை மரியாதை அற்று பேசவும், குரலை உயர்த்தி விட்டான் கவி, “ப்பாஆஆஆ… ” என்றபடி எழுந்துவிட, இப்பொழுது அனைவரது பார்வையும் அவன்மீது படிந்தது…
“என்னவே எங்கிட்டையே குரல ஒசத்துற…?” என கேட்கவும் பல்லை கடித்த கவியழகன்,
“பூங்குழலி என் மனைவி ப்பா… இந்த வீட்டோட மருமக… அவள இப்படி நீங்க பேசுறத என்னால அனுமதிக்க முடியாது…” என்று குரலை அடக்கி பேசுவும், முருகவேல்
“என்னடா என்ன பேசுதன்னுட்டு தெரிஞ்சுத்தேன் பேசுதியா…? உன்னைய ஊர் முன்னாடி அசிங்க படுத்தி, தாலி வாங்கிட்டு வந்தவ,உன்ன பெத்தவன் என்னைய மருவாத இல்லாம பேசுதா அதைய கேட்க முடியல ஆனா இவ உமக்கு ஒசத்தியா போயிட்டா… நான் மட்டமா போயிட்டேன்னா…எங்கிட்ட குரல் ஒசுத்துர… என்ன டா இது அம்புட்டும்… இந்த சிலுவண்டு எல்லாம் எங் இடத்துல உட்கார்ந்துட்டு என்னையவே அதிகாரம் பண்ணுதா அத கேட்க துப்பில்ல எங்கிட்ட பொண்டாட்டிக்காக சிபாரிசு பண்ணிட்டு வருதியாக்கும்…?” என்று மூக்கு வெடைக்க அத்திரமாக கேட்டவரை பார்த்து என்ன சொல்லுவது எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறும் சமயம்…
பூங்குழலி, ” என்ன மாமனாரே இப்படி சொல்லிப்புட்டீக…?” என ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்தார் போல் கேட்டவளை பார்த்த கவியழகனுக்கு,
‘இவ கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருந்தா நல்லா இருக்கும்… ‘ என நினைக்கத்தான் தேன்றியது…
முருகவேல், “ஏய்ய்ய்…” என கத்தவும், சுண்டு விரலால் தன் காதை குடைந்தவள்,
“ஷ்ஷ்ஷ்… என்ன மாமனாரே இப்படி கத்துரீக… தொண்ட என்னத்துக்கு ஆவுறது… சொல்லுங்க… நாந்த்தேன் பக்கமா இருக்கேன்ல பொறவு என்னத்துக்கு இம்புட்டு சவுண்டு… மெல்லமா பேசுங்க மாமனாரே…” என்று பதவிசமாக பேச, முருகவேலுக்கோ அவளை கொன்றுவிடும் அளவுக்கு கோபம் முகிழ்ந்தது…
இருந்தும் அதை கட்டுப்படுத்த முயன்ற சமயம், பூங்குழலி ” மாமனாரே… நாங் என்னைக்கும் பெரியவங்களுக்கு மருவாத குடுத்து பேசித்தேன் பழக்கம்… என்ற வூட்டுல என் ஆத்த அப்படித்தேன் சொல்லி குடுத்த வளர்த்தா… “என்னும் போது முருகவேல் ஏதோ பேச வாய் திறக்க,
“பொருங்க… பொருங்க…  உடனே ஏமாத்தி கண்ணாலம் பண்ணிக்க மட்டும் சொல்லி குடுத்தாகலான்னுட்டு கேக்க வாரீக அத்தேனே…?” என்ற கேள்வியுடன் புருவம் உயர்த்தி முருகவேலை பார்த்தவள், அவர் பதில் கூறாது அமைதியாக அவளை முறைத்து பார்த்திருக்க, அதை எள்ளல் சிரிப்போடு எதிர்க்கொண்ட குழலி,
“அப்படித்தேன் போல… மாமனாரே நாங் ஒன்னும் பொய் சொல்லல… நெசமாலுமே உங்க மவன் என்ற கைய புடிச்சு இழுத்தாக ஆமாவா இல்லையானுட்டு உங்க மகன்கிட்டயே கேட்டு பாருங்க….” என்று கவியை மாட்டிவிட, இப்போது அவளை முறைப்பது கவியின் முறையாயிற்று…
‘உனக்கு போய் சப்போர்ட்டு பண்ணின்னேன் பாரு… என்னைய சொல்லணும் டி அரலூசு… இருடி எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கவனிக்குறேன்…’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டான்…
கேள்வியை முருகவேலை பார்த்து கேட்டுவிட்டு கவியை எதார்த்தமாக பார்க்க அவனது முறைப்பை கண்டு , ‘இவீக எதுக்கு நம்மலை முறைக்காக..?’ என்று யோசிக்க அப்பொழுது தான் பேச்சு வாக்கில் கணவனை கோர்த்துவிட்டது நினைவிற்கு வந்தது…
அதில் நக்கை கடித்து மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், ‘அய்யோ… லூசு முறைச்சு பாக்குதே… உனக்கு என்ன பேசுறேன்னுட்டு தெரியாம எல்லா நேரமும் இவனையே இழுத்து விடற டி கிறுக்கி… கிறுக்கி…’ என தன்னை தானே திட்டிக்கொண்டவள் அப்பொழுது தான் காயத்ரியை கண்டாள்…
அவரது, ‘அடிப்பாவி….’ என கேட்கும் தோற்றத்தை கண்டு சில நொடிகள் பேந்த பேந்த விழித்தவள் பின் தன்னை சமன் செய்துக்கொண்டு நிமிர்ந்து முருகவேலின் புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள் குழலி…
பின்னே சில மணிதுளிக்களுக்கு முன்பு தான் உண்மையை காயத்ரியிடமும் சைந்தவியிடமும் உளறினாள்… இப்பொழுது முருகவேலிடம் தோரணையாக கேள்வி எழுப்பவும் காயத்ரிக்கு அவளை நினைத்து அழுவதா இல்லை இப்படி சொதப்பி மாட்டிக் கொண்டு விழிப்பவளை நினைத்து சிரிப்பதா என்று தெரியவில்லை…
“ஏய்ய்ய்…. என்ற மவன் நீ சொல்லுறாப்புல ஒன்னும் கிடையாது… இதுக்கு மேல ஏதாச்சும் பேசுன்ன…” என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவரை பார்த்து சாதாரணமாக,
“பேசுன்னா என்ன பண்ணுவீக மாமனாரே…? என்னை ஏதாச்சும் சொன்னாலோ இல்ல செய்யணும்னுட்டு நினைச்சாலோ என்ற புருஷன் சும்மா இருப்பாகனீட்டு நினைச்சீரோ… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தீகள…” என்று மிதப்பாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள் குழலி…
அதில் வெகுண்டவர், திரும்பி கவியை பார்த்து முறைக்க, அவனோ தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டான் தலைகுனிந்தபடி…
முருகவேல், “அம்புட்டும் உன்னால வந்ததுவே… பஞ்சாயத்துலையே பேசி அத்துவிட்டு இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா…?” என்று கேட்கவும், கவியால் பதில் கூற முடியவில்லை…
குழலியின் புறம் திரும்பி, “குழலி…. என்ன நடந்திருந்தாலும் நீ பண்ணுறது தப்பு…. மாமா , அத்த’ன்னு கூப்பிடாம அது என்ன மரியாத இல்லாம மாமனாரே மாமியாரே ன்னு கூப்பிடுறது… ஒழுங்கா மரியாத குடுத்து பேசுறதா இருந்தா பேசு இல்ல வாயவே தொறக்காத…” என்று எச்சரிக்க, அவனை ஆழ்ந்து பார்த்தவள் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து கைகளை கட்டிக்கொண்டு நேர்கொண்ட பார்வையால்,
“நீங்க ரொம்ப செரியா சொன்னீக அத்தான்…” என்றவளை அதுவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளது ‘அத்தான்…’ என்ற அழைப்பில் சட்டென முகம் மலர்ந்து விட்டது கவியழகனுக்கு….
அதை பூங்குழலி கவனித்தாலும், இறுகிய முகத்துடன், “நீங்க சொன்னத ஏதுக்கிடுத்தேன்…. ஆனா நீங்களும் ஒன்ன தெரிஞ்சுக்கோங்க…. எங் வாழ்க்கைல மாமா’ன்ற ஸ்தானம் அது ஜெயசீலன் மாமாக்கு மட்டும்த்தேன்… அவரைய தவிர வேற யாரையும் எங்வாய் மாமானுட்டு கூப்பிடாது… அதுபோக என் மாமனாரை மாமனாரேன்னுட்டுத்தேன் கூப்பிடுத்தேன் அது மரியாதையான வார்த்தத்தேன்… அவரை ஒன்னும் நீ வா போ’ன்னுட்டு சொல்ல கிடையாது… மாமான்னு கூப்பிட அவரு எங்வாழ்க்கையிலும் என்ற ஆத்தா வாழ்க்கையிலும் கஷ்டத்த தவிர வேற ஒன்னும் கூடுக்கல… அதைய மறந்துராதீங்க…”என்று தீர்க்கமாக பேச, அங்கு இருந்த யாராலும் எதுவும் கூற முடியவில்லை…
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் அதே நாற்காலியில் அமர, முருகவேலால் முறைக்க மட்டுமே முடிந்தது…
சில நொடிகளில் தன்னை சமன் செய்துக் கொண்டவள், அங்கு இருந்த யாரையும் கருத்தில் கொள்ளாது தட்டில் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள், தன் வேலை தான் தனக்கு முக்கியம் என்பதை போல…
கவியோ தந்தையை ஒரு குற்றம் சாட்டும் பார்வையை பார்த்துவிட்டு தன் இருக்கையில் அமர, காயத்ரி வந்து மகனுக்கும் மகளுக்கும் தேவையானதை பார்த்து பரிமாற செய்தார்…
அங்கு முருகவேலை யாரும் மதிக்கவுமில்லை… சாப்பிடு என்று கூறவுமில்லை… வினை விதைத்தாய் அதற்கான பலனை அறுவடை செய்கிறாய் என்னும் விதத்தில் தான் அங்கிருந்த அனைவரும் நடந்துக் கொண்டனர்…
மும்முரமாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த பூங்குழலி, “எனதருமை மாமியாரே…” என்று அழைக்க,
கவியழகன், ‘கொஞ்ச நேரம் அடங்குறாளா பாரு… இப்ப என்ன பண்ண போறாளோ.. முட்டக்கண்ணி முடியல டி… ‘ என உண்பதை நிறுத்திவிட்டு கை விரல்களை முறுக்கி இறுக கண்களை மூடி திறந்தவன்,
‘இப்பொழுது என்ன…’ என்னும் விதமாக தன்னவளை பார்க்க, அவளோ தலை குனிந்து உணவை வாயில் அடைத்தப்படி நிமிர்ந்து பார்த்தாள்…
‘நான் என் மாமியாரத்தேனே கூப்பிட்டேன்… என்னத்துக்கு அம்புட்டு பேரும் என்னையவே பார்க்குதாக…?’ என்று வாயில் உணவோடு கை அந்தரத்தில் தொங்க, விழிகளை உருட்டி முழித்தபடி அனைவரையும் பார்த்தாள் குழலி…
ஏனோ காயத்ரிக்கு அவளை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை அதுவும் அவளது திருட்டு முழி அவளை இன்னும் அழகாக காட்டியது அவருக்கு… ஆனால் சிரிக்காமல் இருக்க பெரும் பிரயர்த்தனம் எடுக்க வேண்டியதாகி போனது உண்மை…
காயத்ரியை புருவம் சுருக்கி சற்று ஆழமாக உற்று பார்த்து பூங்குழலிக்கு அவர் முயற்சி தென்படவே சட்டென தன்னை சரி செய்து கொண்டவள், தட்டில் கடைசியாக மிச்சமிருந்த உணவு கவலத்தை வளித்து வாயில் அடைத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள்….
“இன்னைக்கு நல்ல நாளுங்கறதால இத்தெல்லாம் ஓகே… ஆனா எப்பவும் இப்படியேன்னா முடியாது மாமியாரே….” என்றவளை அனைவரும் புரியாது பார்க்க, மேலே தொடர்ந்தாள் பூங்குழலி
“வாரத்துல ஒருநாளாச்சும் நல்ல வெடக்கோழியா பார்த்து, நல்லா அம்மில அரைச்ச மசாலா அம்புட்டும் சேர்த்து நல்லெண்ணைல மணக்க மணக்க சமைச்சு தாரீக… என்ன மாமியாரே வெளங்குச்சா…?” என்று கேட்கவளை முருகவேல் வெட்டவா குத்தவா என்று பார்க்க…
சைந்தவியும் கவியழகனும் வாயை பிளந்தபடி பார்த்திருந்தனர்.. காயத்ரி முதலில் அவள் சொன்ன தோரணையில் வாயை பிளந்து பார்த்தாலும் இருக்கும் நிலை உணர்ந்து சடுதியில்,
“அம்மாடி வாயாடி மருமகளே…” என இழுத்து குழலியை அழைக்க, விரலில் ஒட்டியிருந்த இருந்த உணவை நக்கிக் கொண்டிருந்த குழலி,
“சொல்லுங்க மாமியாரே… கோழியடிச்சு கொழம்பு வைக்குறதுல ஏதாச்சும் சந்தேகமா… கவல வேண்டாம் மாமியாரே என்ற ஆத்தா அருமையா வைக்கும் கேட்டு வச்சு குடுங்க…” என்றபடி தன் வேலையை பார்த்தவளை கண்டு தன் நெற்றியில் அறைந்துக் கொண்டார் காயத்ரி…
“அம்மாடி மருமகளே… இது சைவ குடும்பம்… அசைவம் சமைக்க மாட்டோம் ஆத்தா… அதுனால இனி அதைய நினைச்சுக் கூட பார்க்காத…” என்றதும் தான் தாமதம்…
“என்னதுஉஉஉஉ….” என அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்து நின்றுவிட்டாள் பூங்குழலி…
அவள் தலையில் யாரோ கல்லை போட்டது போல் ஒரு உணர்வு… முகம் கசங்க, உள்ளே சென்ற குரலுடன் கவியை திரும்பி பார்த்தவள்,
“நீங்களும் சைவமா…?” என்று கேட்க , கவியழகனுக்கு இத்தனை நேரம் இருந்த இறுக்கம் கோபம் அத்தனையும் மறந்து போனது அவளது செயல்களில்… அவளை ரசித்தப்படி, ‘ஆம்…’ என்பதை போல் தலையை ஆட்டி வைத்தான் தன்னவளை இமைக்காத பார்வையில்…
அவ்வளவு தான், பூங்குழலி “போச்சே… போச்சே… அம்புட்டும் போச்சே… என்ன ஏதுன்னுட்டு விசாரிக்காம கண்ணாலம் பண்ணிட்டேன்… இப்ப என்ன பண்ணுவேன்… எல்லாம் போச்சே… அய்யோ… “என பொய்யாக அழுது புலம்ப…”ஆஆஆஆஆ” என அலறலுடன் மண்டையை தேய்த்து கொண்டவளை  அனைவரும் ‘ஙே..’ என பார்த்து விழித்திரிக்க, காயத்ரி மட்டும் தெளிந்து அவளது மண்டையில் ஓங்கி அடி வைத்திருந்தார் ஆத்திரத்தில்…
புலம்பிக் கொண்டிருந்தவள் இந்த எதிர்ப்பாரா தாக்குதலில் அதிர்ந்து இடது கையால் தலையை தேய்த்தபடி நிமிர்ந்து காயத்ரியை பார்த்தாள் பாவமாக… ஏனோ முருகவேலுக்கு அங்கு நிற்பது நெருப்பின் மீது நிற்பது போல் ஓர் உணர்வு… அங்கு நடக்கும் கூத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறியபடி அவ்விடம் விட்டு நகர்ந்தார் பூங்குழலியை முறைத்தபடி…
சைந்தவிக்கோ சிரிப்பை அடக்க முயற்சி செய்து கண்கள் கலங்கிவிட்டது… கவியழகன் ‘இதைய பெத்தாங்களா இல்ல வசு அத்த இன்ஸ்டன்ட்டா கடைல இருந்து வாங்கினாங்களா…?’ என ஆராய்ச்சியில் இறங்கி இருந்தான்…
குழலி, தன் தலையை தேய்த்தபடி ” என்ன மாமியாரே இப்படி பொசுக்குன்னு அடிச்சுபுட்டீக…?” என கேட்க,
“உன்னைய அடிக்காம கொஞ்ச சொல்லுதீயா கூறுக்கெட்டவளே… இன்னைக்குத்தேன் கண்ணாலம் நடந்திருக்கு அந்த நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்கா… இப்படி சாப்பாட்டுக்கு போய் ஒப்பாரி வைக்குறவ… கூறுக்கெட்டவளே…” என திட்டியவர் காளி அவதாரம் எடுக்காத ஒன்று தான் குறை…
அவர் கூறியதின் நியாயம் விளங்கவும், நாக்கை கடித்து தன் தவறை எண்ணி உள்ளுக்குள் வருந்தியவள், மெல்லிய குரலில்
“எனக்கு சோறுத்தேன் முக்கியம்… மத்தது அம்புட்டும் பொறவுத்தேன்… இப்படி உங்க மவன கட்டிக்கிட்டு சைவம் மட்டும் சாப்பிட வச்சு கொடும படுத்துறீக… சே…” என்றவள் வேகமாக இருக்கையை விட்டு  எழுந்து கையை கழுவ ஓடினாள் ஒரே ஓட்டமாக…
பின் நிதானமாக நின்று பேசிவிட்டு கிளம்புவதற்குள் காயத்ரி மீண்டும் அடித்துவிட்டாள் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை தான் இந்த ஓட்டம்…
அவள் ஓடியதும், “இதைய எப்படித்தேன் வசுந்தரா சமாளிச்சு இத்தாசோடுக்கு வளத்து விட்டோச்சோ தெரியல…. ஒருநாளைக்கே மூச்சு வாங்குது… இனி வாழ்க்கைக்கும் எப்படி சமாளிக்குறது கடவுளே…” என புலம்பியபடி தன் வேலையை பார்க்க செல்ல, சைந்தவி சிரித்தபடி அன்னையின் கூற்றை கேட்டுக் கொண்டு தன் அண்ணனிடம் மெல்லிய குரலில்
“ஆல் தி பெஸ்ட்’ணே” என்று விட்டு போக,
‘என்னடா இது கொடுமை…’என்பதை போல் இருந்தது கவியழகனின் முகம்… பின் பூங்குழலியை பற்றி சிறிது நேரம் அமர்ந்து யோசித்திருக்க …
அப்பொழுது அங்கு வந்த காயத்ரி , “என்ன ராசா கைய கழுவலையா…?இல்ல பசி தீரலையா… சாப்பாடு வைக்கவா…?” என கேட்கவும்,
“இல்ல இல்ல ம்மா… போதும் … சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்…”என்க,
“ம்ம்ம்… சரி ராசா… போ … போய் கைய கழுவ… இப்படி சாப்பிட்ட கை காய கூடாது ராசா… நல்லதுக்கு இல்ல… “என கூறவும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து கை கழுவ சென்றவனுக்கு ,
முருகவேலும் பூங்குழலியும் பேசிக் கொண்டிருந்தது அவனை அவர்களை கவனிக்க செய்தது உன்னிப்பாக…
“என்ற மவன் உங்கூட இருக்கானுட்டுத்தேனே இந்த ஆட்டம் போடுத நீ… சீக்கிரம் அவனைய உன்ன வெறுக்க வச்சு… நாங் பார்த்துவச்ச சம்பந்தத்ததோடு கண்ணாலம் பண்ணி வைக்குறேன் பாரு டி…” என்று கோபமாக வார்த்தையில் அனல் தெரிக்க பேசியவரை நிதானமாக பார்த்தாள் பூங்குழலி…
“அன்னைக்கு இதே சேர்ல(chair) நாங் உட்கார்ந்தேனுட்டு கீழ தள்ளி தகுதி இருக்கா… நீ அன்னக்காவடின்னுட்டு சொன்னீக நெனவிருக்கா மாமனாரே…?” என்று கேள்வியோடு அவரை பார்த்து நிமிர்ந்து நின்றவள்,
“இன்னைக்கு இந்த சொத்தோட வாரிசு உங்க மவன், அவரோட பொண்டாட்டி நாங்… அப்ப இந்த சொத்துலையும் எனக்கு பங்கு இருக்கு, அதிகாரமும் இருக்கு, அதுக்கும் மேல உங்க மவன் மனசுல எனக்கு இடமும் இருக்கு… இன்னைக்கு உங்க இருக்கைல உட்கார்ந்த நான் நாளைக்கு மொத்த அதிகாரத்தையும் எங்கைல கொண்டாருவேன் மாமனாரே… முன்ன என்னைய சுழுவா தொரத்துன மாதிரி இப்ப என்னைய ஒன்னும் பண்ண முடியாது மாமனாரே…” என்றவள் அவரது முறைப்பை கண்டுக்கொள்ளாமல் தலையை சிலுப்பிக் கொண்டு அவரை தாண்டி சென்றாள் நிமிர்வோடு…
முருகவேலுக்கு அப்படியொரு கோபம் அவருள்… திட்டமிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தவளை ஒன்னும் செய்ய முடியாத கையாளகாத நிலையை அறவே வெறுத்தார்…
திரும்பி செல்ல இருந்தவர் மகன் வருவதை கண்டு, அவன் அருகில் சென்று “ராசா… என்னாச்சுல உமக்கு… ஊர கூட்டி நடுவுல நிக்க வச்சு அசிங்க படுத்தனவளுக்கு இப்படி வக்காலத்து வாங்குறவ… வேண்ணாம்யா… இவ உனக்கு வேண்ணாம்…” என்னும் போது, கவியழகன்
“ப்பா பிளீஸ்…” என்று பல்லை கடித்து முகத்தை திருப்பியவன், “நீங்க பண்ணுதுக்குத்தேன் இப்ப இவ இப்படி பண்ணுறா… அதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க… பண்ண தப்பை திருத்திக்க பாருங்க… திரும்ப திரும்ப தப்பு பண்ண நினைக்காதீங்க…”என்று நகர போனவன் ஒரு நொடி தேங்கி,
“இந்த ஜென்மத்துல பூங்குழலித்தான் என் மனைவி ப்பா… அவ என்ன பண்ணாலும் பேசுனாலும் அது மாறாது… அவளே மாத்தணும்னு நினைச்சாலும் நான் மாத்த விட மாட்டேன்… ” என்று உறுதியாக தன் நிலையை கூறியவன் விறுவிறுவென அவ்விடத்தை விட்டு அகன்றான்…
முருகவேலுக்கு முகம் கருத்துவிட்டது மகனது வார்த்தையில்… ஏனோ அவரால் அவரது தோல்வியை ஏற்க்கொள்ள முடியவில்லை… சொத்திற்காக தான் பூங்குழலி இவ்வீட்டினுள் நுழைந்திருக்கிறாள் என்று தீர்கமாக எண்ணியவர்… அதை மகனுக்கு புரியவைத்து பூங்குழலியை இவ்வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானம் மேலும் உறுதியானது அவருக்கு…
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பொழது காயத்ரி பூங்குழலியை சைந்தவி அறையில் இருக்க சொல்ல, இப்பொழுதும் குழலி உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் அவளது விருப்பமான தோட்டத்தில் உளாத்திவிட்டு வந்தவள் நேராக சைந்தவி அறையை நோக்கி நடந்தாள்…
“ஏய்ய்ய்… அரவேக்காடு… ” என காயத்ரி அழைக்க,
தன்போக்கில் கையை ஆட்டியபடி வீட்டை சுற்றி பார்த்தக் கொண்டு  சைந்தவி அறையை நோக்கி நடந்தவள் காயத்ரியின் அழைப்பில் சட்டென நின்று திருதிருவென விழிக்க, காயத்ரி மீண்டும்
“உன்னத்தேன் கூப்பிடுத்தேன்… வா இங்குட்டு…” என அழைக்க, இப்பொழுது திரும்பி பார்த்து முறைத்த பூங்குழலி,
” என்ன மாமியாரே..ஆர பார்த்து அரவேக்காடுனுட்டு சொன்னீங்க…?” என சண்டைக்கு போனவளை தூசி போல் ஒரு பார்வை பார்த்தவர், அவள் கையில் ஒரு புடவையை திணித்து
“அந்த அறைல போய் குளிச்சு தயாராகு…” என்றுவிட்டு நகர போக, கையில் இருந்த புடவையை புரியாமல் பார்த்து ழுழித்தவள்,
“இப்ப என்னத்துக்கு மாமியாரே புது புடவ…?” என புரியாமல் கேட்க, அடுத்த வேலையை பார்க்க போன காயத்ரி அவளது கேள்வியில் நெற்றியில் அரைந்துக் கொண்டு, மீண்டும் அவளிடமே வந்து,
“கூறுக்கெட்டவளே… கண்ணாலம் முடிஞ்சு பண்ண வேண்டிய சடங்குக்குத்தேன் தயாராக சொன்னேன்…” என்றவரை அப்பொழுதும் புரியாது பார்த்தவள்,
“இப்ப என்ன சடங்கு… அதுவும் பேய் சுத்துற நேரத்துக்கு…” என்று முனுமுனுத்தவளுக்கு அப்பொழுது தான் மண்டையில் பல்ப் ஒன்று பிரகாசமாக எறிந்தது விஷயம் புரிந்து…
‘சே… இதைய எப்படி மறந்த்தேன்…. இருடி மாப்ள இந்தா வாரேன்…’என எண்ணியவள், காயத்ரியிடம்
“புரிஞ்சுது மாமியாரே… இந்தா போய் தயாராகி வெரசா வாரேன்…. நீங்க பால் சொம்பு எடுத்து வைங்க…” என்றுவிட்டு காயத்ரி காட்டிய அறையை நோக்கி நடந்தாள் வேகமாக…
செல்லும் அவளை வாய் மீது கை வைத்து அதிர்ந்து ஆச்சரியமாக பார்த்தவர், “இதுக்கு வெட்கம் மச்சம் மடம் நாணம்னா என்னானுட்டே தெரியாது போல … கூறுக்கெட்டவ… கடவுளே… எம்மவன நீத்தேன் காப்பாத்தணும்… “என்ற வேண்டுதலுடன் மருமகள் கேட்ட பால் சொம்பை தயார் செய்ய சென்றார் சமையலறைக்கு….
தொடரும்….

Advertisement