Advertisement

UD:6

“டேய் மாப்ள… எந்திரிடா…”

“ம்ம்ம்…”

“அட நாயே… ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற… எந்திரிச்சு தொல டா…” என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை….

“டேய் பரதேசி, எரும… இப்ப எந்திரிக்க போறியா இல்லையா…?” என்று எட்டி ஒரு உதைவிட,

“ஏன்டா நடுராத்திரில என்னை எந்திரிக்க சொல்லி இம்ச பண்ணுற… மூடிட்டு போடா…” என்று அவன் உதையை தூசு தட்டுவது போல் தட்டிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்…

அவன் வார்த்தையையும், தான் உதைத்தை தட்டி விட்டதையும் கண்டு கடுப்பாகி போனான் விக்கி… “நடுராத்திரியா…?” என்று லேசாக முனுமுனுத்தபடி அவனையும் வெளியே தெரியும் சுடு கதிர் ஒளியையும் கண்டு நெற்றியில் தட்டிக் கொண்டவன், அவனை மீண்டும் உலுக்கியபடி,

“டேய் எருமமாடே… மணி எட்டே கால் டா… சீக்கிரம் எந்திரிச்சு வா… அப்புறம் மிஸ்ஸாயிர போகுது…”

“ம்ப்ச்ச்… டேய் மிஸ்ஸானா ஆயிட்டு போகுது போடா அங்குட்டு…” என்று கத்தியபடி கவுந்து படுத்து தன் தூக்கத்தை கட்டிக்கொள்ள முயற்சிக்கும் வேலை, விக்கி

“ஓகே விடு… மிஸ்ஸான மிஸ்ஸாயிட்டு போகுது… அந்த பொண்ணை இப்ப மிஸ் பண்ணா இன்னொரு நாள் எங்கையாச்சும் பார்த்துக்கலாம்… அதுக்காக தூக்கத்தை விட்டுவிட்டு வரனுமா என்ன…?” என்று தோளை குலுக்கிவிட்டு, பால்கனி நோக்கி நடந்தான்…

பால்கனி வாசலில் காலை வைக்க போகும் சமயம், வேகமாக சென்று பால்கனி கம்பியில் இடித்துக் கொண்டு நின்றான்… இடித்ததில் காலில் லேசாக அடிப்பட்டு விட, “ஸ்ஸ்ஸ்…. ஆஆஆ….” என்று காலை தூக்கி நொண்டியபடி அலறிக் கொண்டிருந்தவன் திரும்பி, தன் முகத்தை அழுத்தி துடைத்தபடியே கைகளால் தலை முடியை கோதியபடி நின்றிருந்த கவியழகனை பார்த்து முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தான் விக்கி…

“மச்சான்… போயிருப்பாளா டா…?” என்று கேட்டபடி சாலையின் இருபுறமும் எட்டி எட்டி பார்த்து கேட்க, விக்கியோ அவனை கொல்லும் அளவிருக்கு வெறி வந்தது…

“ம்ப்ச்ச்… எதுக்கு டா என்னை சைட் அடிக்குற… ? அதுக்கு தான் ஆளு இருக்குல்ல… அப்புறம் என்ன…?” என்று அசால்ட்டாக கேட்டபடி விக்கியின் தோளில் கை போட, அதை தட்டிவிட்டவன்

“ஏன்டா எரும இப்படி வந்து விழுந்த… அதுவும் அடிப்பட்டு அலறுறேன்… காதுல விழாத மாதிரியே நிக்குற…” எரிச்சலும் கோபமும் அவன் முகத்தில் அப்படியே தெரிந்தது…

“ம்ம்ம்… நீ செக் போஸ்ட் மாதிரி நடுவுல நின்னா இப்படிதான் லைட்டா இடி படவேண்டி இருக்கும்… இது எல்லாம் ஒரு விஷயமா…? அதுவும் இல்லாம காதல்ல இதிலெல்லாம் சகஜம் மச்சான்…” என்றவனின் பார்வை மட்டும் திசைமாறவில்லை…

“என்ன சொன்ன இப்ப…? காதல்லையா…? இப்ப உன்னால எனக்கு அடி பட்டதுக்கும் காதலுக்கும் என்ன டா சம்பந்தம்…?” புரியாமல் கேட்டவனை பார்த்து பெருமூச்சு விட்டவன்…

நண்பனின் தோள் மீது கை போட்டபடி, “என்ன மச்சான் இன்னும் சின்ன பையனாவே இருக்க…? அந்த பொண்ணை பத்தி ஒன்னும் தெரியாது உனக்கு, பொண்ணை பத்தி தெரிஞ்சுக்குறேன்னு பின்னாடி போய் யாராச்சும் பார்த்து அடிச்சா என்ன பண்ணுவ…?” என்று கேட்க அதிர்ந்து கவியை பார்த்தான்…

“எதுக்கு இவ்வளவு ஷாக்… இன்னும் இருக்கு கேளு… நீ வேற அந்த பொண்ண ரொம்ப வெறித்தனமா லவ் பண்ணுற… ஒருவேலை அந்த பொண்ணு வேற யாரையாச்சும் லவ் பண்ணிட்டு இருந்தா… ஏன் டா முறைக்குற…? சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொல்லுறேன்… கூல்… யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா அதை பிரிச்சு விட்டு உன் லவ்வ புரியவைக்கனும்… அப்ப சில பற்பல அடிக்கள் விழதான் செய்யும்… அப்ப என்ன பண்ணுவ…?” விக்கியின் அதிர்ந்த முகம் மேலும் அதிர்சையை காட்டியது…

“ஏன்னடா இப்படி அதிர்ச்சியாகுற… இப்ப உன் முகத்தை பார்க்க எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா…?” என்று அவன் தாடையை பிடித்து கொஞ்ச, அவனது மூளையில் ஒரு பல்ப் எறிந்தது சட்டென்று…

வேகமாக அறைக்குள் சென்றவன் படுக்கையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த தன் ஃபோனை எடுத்துக் கொண்டு மீண்டும் பால்கனிக்கு சென்றான்…

கவி அறைக்குள் சென்றதும், ‘என்ன இவன் இப்படி சொல்லுறான்… அப்படினா எப்படி இருந்தாலும் நமக்கு அடி உறுதியா…?’என்று எண்ணியவன் எச்சிலை கூட்டி விழுங்கிவன் மீண்டும் வந்த நண்பனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டடி தள்ளி நின்று சாலையில் பார்வையை பதித்தான்…

நண்பனின் விலகலை கண்டு, அவன் தோள் மேல் கை போட்டு “ஏன் மச்சான் தள்ளி நிக்குற…?” என்று கேட்டவனை பார்த்து முறைத்தவன் அவன் கையை தட்டி விட்டு மீண்டும் தன் வேலையை கவனித்தான்…

“அட பாருடா மச்சானுக்கு கோபத்தை… என்னாச்சுன்னு சொல்லு மச்சான்…” என்று மீண்டும் வழுகட்டாயமாக நண்பனை அணைத்துக் கொண்டவன், “நண்பன் நான் இருக்கேன் மச்சான் தைரியமா சொல்லு…” என்றதும் தான் தாமதம்,

“போடாங்க… என்ன சொல்லனும் சொல்லு நாயே… என்ன சொல்லனும்…? நீயெல்லாம் ஒரு நண்பன்… என் லவ்க்கு ஹெல்ப் பண்ணுவன்னு பார்த்தா என்னைய அடிவாங்க வைக்குறதுல தான் குறியா இருப்ப போல… உன்னை எல்லாம் நம்ப முடியாது… வாலன்டியரா என்னை அடி வாங்க வச்சாலும் வச்சுருவ… ஒழுங்கா தள்ளி நில்லு…” என்று பொரிந்தவனை பார்த்து கேலியாக சிரித்தவன் அவனது உணர்வுகளை புரிந்துக்கொண்டு மென்மையான குரலில்,

“சரி மச்சான் டென்ஷன் ஆகாத… நீ அடிவாங்கமா இருக்க நான் பொறுப்பு… போதுமா…?” என்று கேட்க அதற்கும் முறைத்து வைத்தவன் அவனிடம் பேச்சுக் கொடுக்கவில்லை…

கவியும் முகத்தில் தோன்றிய புன்னகையுடன் சாலையில் விழியை பதித்தான்… அப்பொழுது அவனுக்கு தெரியாது நண்பன் காதலிக்கும் பெண் யாரென்று அத்துடன் அறியும் நேரம் அவனது செயல்பாடு எவ்வாறாக இருக்குமோ… நேரம் சென்றதே தவிர அவ்விருவரவது கிளியும் வந்த பாடில்லை…

ஒரு பெருமூச்சை விட்ட கவி, “என்னடா மச்சான்… யாரையும் காணோம்… நேத்து ஏதாச்சும் கனவு கண்டியா…? நல்லா யோசிச்சு சொல்லு மச்சான்… நேத்து நீ சொன்ன நேரத்தை விட ஒரு மணிநேரம் கடந்து போயிருச்சு…”என்று கைகளை கட்டிக் கொண்டு அவனை துளைக்கும் பார்வையுடன் பார்க்க….

விக்கியோ, “மாப்ள…. சக்தியமா பார்த்தேன் டா…”

“அப்புறம் எங்க டா ஆளையே காணம்…. உன் ஆளையும் காணம் அந்த ராட்சஸியும் காணம்… இதுல என்னையும் சேர்த்து இப்படி தேவுடா காக்க வச்சிருக்க…” லேசான கடுப்பு அவனிடம்…

“எனக்கு மட்டும் என்ன டா மாப்பிள தெரியும்… ஒருவேளை வேற வழில போயிருப்பாங்களோ. …?” என்று யோசிக்கும் போது உள்ளே வந்தார் காயத்ரி…

“என்ன ராசா பண்ணுறீங்க ரெண்டு பேரும்…? எப்ப எந்திரிச்சீங்க…?” என்று கேட்டவாறே அவர்களது படுக்கையை சரி செய்ய தொடங்கினார்…

அதை பார்த்து இருவரும் ஒரு சலிப்புடன் அறைக்குள் நுழைந்தனர்… கவி, “விடுங்க ம்மா… நானே பண்ணுறேன்…” என்று போர்வையை அன்னையிடம் இருந்து பிடிங்கி தானே படுக்கையை சரி செய்தான்…

விக்கியோ இன்று தன்னவளை காண முடியலையே என்று வருத்தத்துடன் அறையில் இருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்திருந்தான்… அதை கண்டு காயத்ரி,

“என்னாச்சு ராசா… ?” என்று கேட்க,

“அதுவா ம்மா… இவன் ஒருநாளா ஒரு பொண்ண லவ் பண்ணுறான்… ஆனா அந்த பொண்ணு இவன லவ் பண்ணல… அந்த பொண்ணுக்காக காத்துட்டு இருந்தான் வரலைன்னதும் கவலை ஆயிட்டான்…” நண்பன் கூற தொடங்கியதும் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தவன், காயத்ரியை கலவரமாக பார்க்க, அவரோ

“அடியாத்தி….” என்று கன்னத்தில் கை வைக்க…

“அய்யோ ஆன்ட்டி அப்படி எல்லாம் இல்ல…”என்று பதறி சமாளிக்க முயன்ற பொழுது, சாலையில் சைக்கிளின் மணியோசை கேட்க, கவி

“மச்சான் உன் காதலி…” என்றதும், காயத்ரியின் அருகில் நின்றிருந்தவன் அவசரமாக பால்கனி சென்று பார்க்க, சாலையில் சிறுவர்கள் சைக்கிளில் விளையாடிக் கொண்டு இருந்தனர்…

அதை பார்த்து சலிப்பாக, “ம்ப்ச்ச்… ஏன் வரல…?” என்று முனுமுனுப்புடன் தலையை கோதியபடி மீண்டும் அறைக்குள் நுழைய, அவனது யோசனை முகம் இஞ்சி தின்ன குரங்கை போல் மாறியது தான் மிச்சம்…

அறையில், இடுப்பில் கை வைத்து உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியின் அருகில் லேசாக வாயை கைகளால் மறைத்தபடி சிரித்துக் கொண்டிருந்த நண்பனை பார்த்து முறைத்தவன், மனதினுள்

‘துரோகி… உன்னையெல்லாம் கொல்லனும் டா… என் காதலுக்கு எடுத்ததுமே ஆப்பு ரெடி பண்ணுறான்…’என்று பல்லை கடித்தவன், ‘எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்ல அப்ப பார்த்துக்குறேன்…’ என்று கருவிக் கொண்டே, சமாளிப்பாக

“ஆன்ட்டி… நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னுமில்ல சும்மா தான் வேடிக்கை பார்க்க போனேன்…” என்று பல்லை காட்டியபடி, அவர் அருகில் சென்றான் சமாளிப்பதற்காக…

காயத்ரி, அருகில் வந்தவனின் காதை பிடித்து திருகி “எங்க வந்துபுட்டு என்ன ஜோலிய பாக்குதியவ…? கொன்னுருவேன்…” என்று மேலும் திருக,

“ஆஆஆ… ஸ்ஸ்ஸ்… ஆன்ட்டி… பிளீஸ்.. பிளீஸ்… நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க ஆன்ட்டி… வலிக்குது பிளீஸ்… விடுங்க ஆன்ட்டி…” என்று கதற அங்கு அதற்கு பலன் இல்லை… ஆனால் காயத்ரி மேலும் காதை பிடித்து திருக,

“ஆன்ட்டி ஆன்ட்டி… பிளீஸ்… நான் உண்மையாவே அந்த பொண்ண லவ் பண்ணுறேன்… இதுவரை யாரையும் இப்படி பார்த்ததில்ல… முதல் முறையா எனக்கானவன்னு தோணுச்சு… என்ன ஆனாலும் அவளை விட்டுற கூடாதுன்னு நினைச்சேன்… என்னை நம்புங்க ஆன்ட்டி… உங்க ஊர் பொண்ண ஏமாத்த நினைக்கல… உண்மையா மனசுல ஏத்துக்கனும்னு நினைக்குறேன்… நம்புங்க ஆன்ட்டி… இதுக்கு மேல எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியல…” என்று தட்டுத்தடுமாறி கூறியவனை கண்டு மெதுவாக கையை விலக்கிக் கொண்டவர் முறைப்பை மட்டும் நிறுத்தவில்லை…

கவியோ படுக்கையில் அமர்ந்து, நடக்கும் காட்சியை முகம் எல்லாம் வாயெல்லாம் பல்லாக பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்… தன் நிலை இதைவிட மோசமாகும் சமயம் வர போவதை உணராமல்…

அவனை ஒருமுறை பார்த்து முறைத்து விட்டு, காயத்ரியின் புறம் திரும்பியவன், “ஆன்ட்டி பிளீஸ் என்னை நம்புங்க… என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா… எனக்கு உண்மையா அந்த பொண்ணை புடிச்சு இருக்கு… பார்த்த முதல் பார்வையிலேயே அவ மேல ஏதோ ஒரு உரிமை உணர்வு… மனசு முழுக்க நிறைஞ்சுட்டா என்னால அதை உணர முடியுது… ஒருவேளை இது பேர் தான் காதல்னா ஆமா ஆன்ட்டி நான் காதலிக்கிறேன்… “என்று முகம் மென்மையாக நெஞ்சில் கை வைத்து சிறு புன்னகையுடன் கூறியவனை பார்த்தவரின் முகமும் மென்மையானது…

அவன் அருகில் சென்று தலையை கோத, அவரை திரும்பி பார்த்தவனை கண்டு சிறு புன்னகையை சிந்தியவர், “ஆரு ராசா அந்த பொண்ணு…?” என்ற அவர் கேள்வியில் மலர்ந்திருந்த  முகம் அனிச்சையாக வாட தொடங்கிவிட்டது விக்கிக்கு…

அதை கண்டு, “ஏன் ராசா…? என்னாச்சு…?” லேசான பதற்றம் அவர் குரலில்…

“அது தான் சார்’க்கு தெரியாதே… அப்புறம் எப்படி சொல்லுவான்…”என்று கவி கூற, ஆச்சரியமாக பார்த்த காயத்ரி,

“என்ன ராசா சொல்லுத… ? ஆருன்னுடே தெரியதா..? தெரியாமலா விருப்பப்பட்ட…?” என்று மோவாயில் கை வைத்து கேட்க, முகம் சோகமாக இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான் விக்கி…

அதை கேள்வியாக பார்த்த காயத்ரி, கவியின் புறம் திரும்பி ‘என்ன..’ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்கவும் பெருமூச்சு விட்டான் கவியழகன்…

“அது சார் நேத்து காலைல தான் அந்த பொண்ண நம்ம பால்கனில வச்சு பார்த்தாரு… பார்த்ததுல இருந்து பையன் பொண்ணு மேல பைத்தியம் ஆயிட்டான்… யாரு, என்ன, அது ஏன் பொண்ணு பெயர் என்னன்னு கூட தெரியாது… இன்னைக்கு அந்த பொண்ணுக்காக காத்துட்டு இருந்தான் பட் பொண்ணு வரல… அதான் அய்யா சோகமா இருக்காரு…” என்று கூற காயத்ரிக்கு ஆச்சரியம் தாளவில்லை…

பார்த்து ஒரு நாளே ஆன ஊர் பெயர் தெரியாத ஒருவள் மீது இத்தனை நேசமா…? அவன் பேசுகையில் வார்த்தையிலும், கண்களிலும் அத்தனை அன்பும், நேசமும் தெரிந்ததே… உண்மையில் பிரம்மித்து தான் போனார்…

“செரி உடு ராசா… எங்குட்டு போயிற போரா… இந்த கிராமத்துலதேன் சுத்திட்டு இருப்பா… கண்டுபுடிச்சுருலாம்… உனக்குதேன் அவனுட்டு அந்த கடவுள் நினைச்சிருந்தா அதைய ஆராலும் மாத்த முடியாது…” என்று கூறவும் முகம் மலர நிமிர்ந்து பார்த்த விக்கி,

“ஆன்ட்டி உண்மையா தான் சொல்லுறீங்களா…? அப்ப உங்களுக்கு சம்மதமா…?” என்று இருக்கையில் இருந்து எழுந்து சந்தோஷமாக கேட்க,

அவர் முகத்தை திருப்பிக் கொண்டு, “அதேப்படி உடனே சொல்ல முடியும்… என்ற ராசாவுக்கு ஏத்த சோடியான்னு தெரியாம அப்படியெல்லாம் சொல்ல முடியாது ராசா… எந்த நொல்லுயும் சொல்லையும் இல்லாம மகா லக்ஷ்மி மாதிரி இருந்தா யோசிச்சு சொல்லலாம்… ” என்று மிடுக்காக கூறவும் அவரை கட்டிக் கொண்டவன்,

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி… கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும்… பார்த்தா நீங்களே சொல்லுவீங்க…”என்று கூற, அவன் தோளில் கையை போட்ட கவி,

“டேய் அதை நாங்க சொல்லனும்… என்ன ம்மா அப்படிதானே…?” என்று கேட்க,

“ஆமா ராசா… பசல நோய் வந்தனுக்கு பக்கி கூட பார்வைக்கு அழகாதேன் தெரியும்…” என்று மகனுடன் சேர்ந்து விக்கியின் காலை வாரினார்…

“ஆன்ட்டி… என்ன பக்கி’ன்னு சொல்லுறீங்க… அவள பார்த்தா நீங்க வாயடைச்சு போயிருவீங்க….”என்று தன்னவளுக்காக எகிறிக் கொண்டு வந்தான் அந்த காதலன்…

“அட பாருடா… யாருன்னே தெரியாத குட்டிக்காக எகிறிட்டு வரத… ம்ஹூம்… இது செரியில்ல அப்பு… பொறவு பைத்தியமாதேன் திரிவ…சொல்லிப்புட்டேன்…”என்றவர் ஆண்மகனது அழகிய வெட்க சிணுங்களை கண்டு புன்னகைத்தபடி,

“வெரசா குளிச்சிட்டு, சாப்பிட வாங்கயா…” என்றபடி வெளியேறிவிட்டார்…

அவர் சென்றதும் விக்கி யோசனையுடன் படுக்கையில் விழ, அவனை கண்ணாடியில் பார்த்தபடி குளிப்பதற்கு உடையை எடுத்துக் கொண்டு இருந்தான் கவி…

“ஏன் மச்சான் இப்படி சோக சாங் வாசிச்சுட்டு இருக்க…?”

ஆவேசமாக படுக்கையில் இருந்து எழுந்தவன், “ஏன் டா நாயே… நீ எல்லாம் ஒரு நண்பனா…? ஆன்ட்டி கிட்ட மாட்டி விடுற… அவங்க என்னை தப்பா நினைக்க மாட்டாங்க ….?”

“மாட்டாங்க…” என்று கூலாக சொல்ல சூடாகி போனான்…

“அதைய நீயே சொல்லாத… ஆன்ட்டி ஏதோ நல்லவாங்களா இருக்க போய் என் ஃபீலிங்ஸ புரிஞ்சுகிட்டாங்க… இதே இது வேற மாதிரி இருந்துருந்தா…” வார்த்தையை முடிக்கும் முன், அதை கவி சொல்லி முடித்தான்…

“சொல்லி இருக்க மாட்டேன்…” என்றபடி கண்ணாடியில் தன் தலையை சீர் செய்துக்கொண்டே கூற, அவனை அமைதியாக முறைக்க மட்டுமே முடிந்தது…

“சும்மா முறைக்காத மச்சான்… அம்மாவ பத்தி எனக்கு நல்லா தெரியும்… அதிகம் அவங்க கிட்ட நான் பழகாட்டியும் அதிக நேரம் செலவு செஞ்சதில்லைன்னாலும் அவங்க குணம் தங்கம் டா… அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுப்பாங்க… அதுனால தான் தைரியமா சொன்னேன்… பாரு முதல்ல கோபட்டாலும் அப்புறம் புரிஞ்சுகிட்டாங்க இது தான் அவங்க குணம்… “என்ற நண்பனின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகனும்…

ஏன்னென்றால் விக்கியும் அதை அறிந்தே இருந்தான்… கவியுடன் ஃபோனில் பேசும் போதும் தன்னிடம் அன்பு காட்டி விசாரிக்கும் போதும் அவரது அன்பான குணத்தை அறிந்திருந்தான்…

“இருந்தாலும் உன்னை நம்ப முடியாது… இனி யார் கிட்டயும் இதை பத்தி வாய் திறக்காம இருக்க இல்ல நானே உன்னை கொன்னுருவேன் டா…” என்று எச்சரிக்கை விடுத்தவன் படுக்கையில் மீண்டும் சரிந்தான் தன் கிராமத்து அழகியின் நினைவில்…

‘எங்க போனா…? ஏன் வரல…? உடம்புக்கு ஏதாச்சும் பிரச்சினையா இருக்குமோ…? காலேஜ் படிச்சுட்டு இருப்பா போல… ஆனா அவ ரெட்ட ஜடையும், சைக்கிளும் ஸ்கூல் பொண்ணு மாதிரி இருந்துதே…’ என்ற எண்ணம் எழ, மிகவும் சோர்ந்து போனான்…

அவனது எண்ணங்கள் இவ்வாறாக இருக்க, அதற்கு சொந்தகாரியோ,

அடிஆத்தாடிஇஇஇஇ….

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா….

அடி அம்மாடிஒரு அலைவந்து மனசுல அடிக்குதே

அதுதானா

கனி: உயிரோடு

குழலி: உறவாடும்

இருவரும்: ஒரு கோடி ஆனந்தம்

என்று இருவரும் ஒற்றை சேலையை பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர் தங்களை மறந்து…

அச்சமயம் பெருக்குமாரு அவர்களின் மீது வந்து விழவும், அதிர்ந்து பிரிந்து நின்றவர்கள் திருதிருவென விழித்தபடி சுற்றும் முற்றும் பார்க்க, கொல்லைப்புற வாசலில் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு தங்களை அனல் தெறிக்கும் பார்வையோடு பார்த்திருந்த வசுந்தராவை பார்த்து பேய் முழி முழித்தனர் அல்லி ராணிகள் இருவரும்…

“கூறு கெட்ட கழுதைகளா… என்னத்த பண்ண சொன்னா என்னத்தல பண்ணுதீக… உருப்படியா ஒத்த வேல செய்ய துப்பில்ல இதுல ராணிங்களுக்கு பாட்டு கேட்டுதோ பாட்டு… தோல உரிச்சுப்புடுவேன்… ஜாக்கிரத… மறுக்கா இந்த மாதிரி ஆடிட்டு இருக்குறதைய பார்த்தேன் சோறு தண்ணி கிடையாது சொல்லிட்டேன்… வெரசா துணிய எல்லாம் தொவச்சு போட்டுட்டு மதியத்துக்கு சமைச்சு வகைக்குற வழிய பாருங்க ஒழுங்கா…இன்னைக்கு ஆயா வீட்டுக்கு வருது… என்னவே புரிஞ்சுதா…?”என்று அதட்டி கேட்க இருவரது மண்டையும் வேகமாக ‘ஆம்…’ என்று ஆடியது சேர்ந்தார் போல்…

மண்டையை ஆட்டிய அவர்களை சந்தேகமாக ஓர் பார்வை பார்த்துவிட்டு வயல் வேலையை பார்க்க சென்றார் வசுந்தரா…. வீட்டை விட்டு வெளியேறும் முன்னர், வேகமாக வீட்டிற்குள் நுழைந்தார் பொண்ணுதாயி… வசுந்தராவின் பக்கத்துக்கு வீட்டு கூட்டாளி…

அதை விட உளவாளி என்று சொல்வதே சால சிறந்தது… காலை வயலுக்கு சென்றால் அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு, கடைக்கு சென்று விடுவார் வசுந்தரா… அதன் பின் ஒரு நாள் பொழுது கடையிலும் நடுநடுவே வயலிலும் வேலையை பார்த்துக் கொள்வது தான் வழக்கம்…

சிறுவயதில் பூங்குழலி சுட்டியாக இருக்க, வசுந்தராவால் அவளை சமாளித்து வயல் கடை என்று அனைத்தையும் பார்த்துக்கொள்ள தடுமாற, வசுந்தராவின் அண்ணன் ஜெயசீலன் பூங்குழலியை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்… வசுந்தரா வீட்டிற்கு கிளம்பும் வேலையில் மகளை அழைத்து செல்பவருக்கு ஊரில் நடக்கும் விஷயத்தை பற்றி ஒளிப்பரப்புவது தான் பொண்ணுதாயின் தலையாய கடமை…

கிராமம் என்பதால் அனைத்து வேலைகளையும் சீக்கிரம் முடித்துக்கொண்டு உறங்க செல்லுவது தான் வழக்கம்… அதனால் மகளை உறங்க வைத்துவிட்டு முற்றத்தில் அமர்ந்து ஒரு அரைமணி நேரம் அனைத்தையும் ஒப்பிவித்து செல்வர் பொண்ணுதாயி…

“என்ன பொண்ணுதாயி… இப்பதேன் ஊருல இருந்து வந்தியோ…? உன் ஊர்ல உன் ஆத்தா சுகதானே…?” என்று கேட்க,

“ஆத்தா சுகந்தேன்… வயசாயி போச்சுல அதேன் அடிக்கடி நோவு ஆயிருது… ம்ம்ம்… என்னத்த பண்ண…” என்று பெருமூச்சு விட்டவர், தலையில் கை வைத்து,

“அட நான் ஒருத்தி… வந்த விஷயத்த சொல்லாம எதைய பத்தி பேசுதேன் பாரு… விஷயம் தெரியுமா வசுந்தரா…?” என்று தீவிரமாக முகத்தோடு கேட்கவும், அவரை பார்த்து முறைத்தவர்

“என்ன பொண்ணுதாயி காலைல ஜோலிக்கு கிளம்புற நேரத்துக்கு வந்து வெளாண்ட்டு இருக்குதியோ…?”

“ஆமா இவ அழகு கொமரி… வெளாடுறாங்க இவ கூட… அட யாருடி இவ…” என்றவரின் வார்த்தையில் சலிப்பு தெரிவிக்கவும்,

“பொறவு என்ன சேதின்னு சொல்லு… எனக்கே நீ சொல்லிதேன் ஊர் விஷயம் தெரியும்… அதுல நீ வேற ஊர்ல இரண்டு நாள் இல்ல… பொறவு எப்படியாதா தெரியும் எனக்கு…?” என்ற கேள்வியுடன் தன் உணவு கூடையை எடுத்துக் கொண்டவர், “வெரசா விஷயத்த சொல்லு… இல்லாட்டி ரவைக்கு பேசிக்கலாம்…” என்று நகர போனவரின் கையை பிடித்து நிறுத்தினார் பொண்ணுதாயி…

“அய்யோ பொறு பொறு… நேத்து அந்த பெரியவர் வீட்டுக்கு…” என்று முடிக்கும் முன் அவர் வாயை பொத்தினார் வசுந்தரா…

“ஷ்ஷ்ஷ்…” என்றவர் கொல்லை புறத்து வாசலை நோக்கினார் அவசரமாக…

அங்கு மகளோ இல்லை கனிமொழியோ இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியவர், பொண்ணுதாயின் கையை பிடித்து அவசரமாக வாசலை தாண்டி வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தார்…

“ம்ம்ம்… இப்ப சொல்லுவே.. என்ன சங்கதி…?” என்று கேட்க,

“நெசமாலுமே உனக்கு தெரியாதா…? நான் உங்கிட்ட  விசாரிச்சுட்டு போலாம்ன்னு வந்தேன்… நீ என்னவோ எங்கிட்ட கேக்க…” என்று ஆச்சரியமாக கேட்கவும், கொஞ்சம் குழம்பில் தான் போனார்…

“எங்கிட்டையா…? என்னவே சொல்லுத… எனக்கொன்னும் விளங்கல…” என்று குழுப்பமான முகத்துடன் கேட்க, பொண்ணுதாயி,

‘நெசமாலுமே சேதி தெரியாது போல… ம்ம்ம்…’ என்ற எண்ணத்தோடு பெருமூச்சு விட்டவர்…

“செரி விடு நானே சொல்லுதேன்… நேத்து நம்ம முருகவேல் அண்ணன் மில்லுக்கு கவியழகன் பையன் வந்து இருந்தானாம்… அங்குட்டு வேலைக்கு போனவக பார்த்துட்டு அரசல் புரசலா பேசிக்கிட்டாகளாம்… இனி அம்புட்டையும் தம்பிதேன் எடுத்து நடத்த போகுதுன்னு…” என்று கூறவும் வசுந்தராவின் முகம் உடலும் இறுகியது வலியில்…

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஓஓஓ… அப்படியா…?” என்று சாதாரணம் போல் கேட்க,

“என்னவே நான் எம்புட்டு பெரிய விஷயம் சொல்லுதேன்… சொரத்தே இல்லாம அப்படியா’ன்னுட்டு கேட்குத…?” ஆச்சர்யம் அவர் குரலில் அப்பட்டமாக தெரிந்தது…

சேலையை இழுத்து சொருகிய வசுந்தரா, உணர்ச்சிகள் தொடைத்த முகத்துடன், “உப்புபொறாத சேதிய சொன்னா வேற எப்படி கேட்குறதாம்…?”

“அதில்ல வசுந்…”என்று பேச வந்தவரை கையுயர்த்தி தடை செய்தவர்,

“தேவையில்லாத விஷயத்தை தூக்கிட்டு எங்வாசற்படிய மிதிக்குற ஜோலிய வச்சுக்காத சொல்லிப்புட்டேன்… எம்மவ காதுல அவிக பேரு விழுந்துச்சு பொறவு பிரச்சனையாச்சுன்னா என்னைய குத்தும் சொல்லபுடாது…”என்று மிரட்டும் தொனியில் சொல்லவும் பூங்குழலியை ஒரு சில நொடிகள் எண்ணி பார்த்தவர், எதற்கு வம்பு என்று, முகத்தை மாற்றிக்கொண்டு

“செரி வசுந்தரா தலைக்குமேல சோலி கெடக்கு நான் போய் அதைய பாக்கேன்…” என்று ஒன்றும் தெரியாது என்னும் தோரணையில் முகத்தை வைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார்…

அதை பார்த்து லேசாக சிரித்த வசுந்தரா, மகளின் அட்டுழியம் கூட ஒருவகை பாதுகாப்பை உண்டாக்கி உள்ளதை உணர்ந்தவர் மனதில், ‘வாயாடி ஊரே பயப்படுற அளவுக்கு பயமுறுத்தி வச்சு இருக்கா… ‘ என்று  எண்ணி வீட்டினுள் நுழைந்து மகள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்க, இப்பொழுது வேறு ஒரு பாட்டுக்கு கனியுடன் சேர்ந்து பாட்டு பாடி ஆடிய படி துணியை பிழிந்துக் கொண்டிருந்தாள்… அதை பார்த்து புன்னகைத்தவர், சற்று நேரத்திற்கு முன்பு அனுபவித்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைய மகளின் அழிச்சாட்டியங்களை எண்ணி நகைத்தபடியே வயலுக்கு கிளப்பினார்….

வாழ்க்கை வசுந்தராவிற்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது அதில் அவர் மறந்து வெறுத்து ஒதுக்கிய சில விஷயங்கள் அவரது அனுமதியின்றி நுழையும் போது எதை எவ்வாறு எதிர் கொள்ள போகிறாரோ….

தொடரும்….

Advertisement