Advertisement

UD:9  

“டேய் கவி… நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த…?” அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில் மண் அள்ளி போட்டு விடுவானோ என்று…

“அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா…” அதே புன்னகை முகத்துடன் பூங்குழலியின் மீது பார்வையை படிய விட்டபடியே சொல்ல, விக்கி தான் தவித்து போனான்…

‘என்ன இவன் இப்படி சொல்லுறான்… யார பார்க்குறான்னு உறுதியா தெரிய மாட்டீங்குது… சை…’ என்று எண்ணியவன் தன் பின்னதலையை கோதிக் கொண்டே, மீண்டும் கவியை பார்க்க, தன் நிலையையும் பார்வையையும் மாற்றிக்கொள்வேனா என்னும் திணுசில் நின்றிருப்பதை கண்டு,

“டேய் கருமபுடிச்சவனே அந்த கண்ணாடிய கலட்டி தொல டா… ஓடுற பஸ்ஸுக்குள்ள கண்ணாடி போட்டு வெறுப்பேத்திக்கிட்டு…” என்று சிடுசிடுத்தான் இயலாமையில்….

நண்பனின் வார்த்தையில் அவசரமாக கண்ணாடியை கலட்டி அவனை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தபடி, “என்ன மச்சான் ஆச்சு…?”

“என்ன நொன்ன ஆச்சு…? இப்ப எதுக்கு இந்த பார்வ உனக்கு…?”

“டேய் என்னடா கேள்வி இது…? நான் கட்டிக்க போற பொண்ண நான் பார்க்குறேன்… இதுல உனக்கு என்ன பிரச்சின…?” கூலாக கேட்கவும், குணா

“ஏலே… என்னவே சொல்லுத…?” என்று அதிர்ந்து கேட்கவும், விக்கியோ

“நீ யார சொல்லுற…?” என்று விக்கி பதற்றத்துடன் கேட்கவும், கவி இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு

“அந்த பச்ச கலர் தாவணிய கட்டிக் போறேன்னு சொன்னேன் இதுல உங்களுக்கு என்ன பிரச்சன…?” என கூறவும், விக்கியும் குணாவும் அவசரமாக திரும்பி பெண்கள் இருவரையும் அப்பொழுது தான் பார்த்தனர்…

பூங்குழலி பச்சை நிற தாவணி உடுத்தி இருக்க, கனி சந்தன நிற தாவணியை உடுத்தி இருந்தனர்… அதை பார்த்த பின்தான் விக்கிக்கு உயிரே வந்தது அதில் நிம்மதி பெருமூச்சு விட, குணாவோ ஒரு பிரச்சினை முடிந்தது என்னும் விதமாக ஒரு பெருமூச்சை விட்டான்… இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்த கவி,

“ஹே… என்னடா பிரச்சன உங்களுக்கு…?” என கேட்கவும், விக்கி

“இல்ல டா மாப்பிள பக்கத்துல இருக்குறது தான் என் வில்ளேஜ் பியூட்டி… அவள பார்க்குறியோன்னு பயத்துடனே… நீ இப்ப கண்ணாடிய மாட்டிக்கோ ராசா… “என்று கண்ணாடியை எடுத்து கொடுக்க, அதை அவனிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கியவன் அவனை முறைத்துக் கொண்டே குணாவை கேள்வியாக பார்க்க, அவன்

“வேண்ணாம்லே சொன்னா கேளு… உன் அய்யனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையா ஆயிரும்… அந்த புள்ள யாருன்னுட்டு தெரியாம நீ ஆ…”என்று முடிக்கும் முன், கவி

“அதெல்லாம் நல்லா தெரியும்… என்ன பிரச்சனைனும் தெரியும்… எனக்கு அதை பத்தி கவலையில்ல… இவள பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் எனக்கு தான் இவன்னு… அப்பாவ நான் பார்த்துக்குவேன்…” என்று தீவிரமாக சொல்ல அவனது பார்வை இப்பொழுது அவள் புறம் திரும்பியது….

“சொன்னா புரிஞ்சுக்க கவி… உனக்கு என்ன தெரியும்ன்னுட்டு எனக்கு தெரியல… ஆனா உங்க அய்யனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையா போகும் அதுக்கு முன்ன இந்த புள்ளைய லேசுல எட போடாத ரொம்ப வம்பு புடிச்சவ…”என்று எச்சரிக்கும் போதே, விக்கி

“ஆமா டா… அன்னைக்கு கூட கார நாசம் பண்ணுனாளே… கொஞ்சம் யோசி டா…”

“அடேய் அவ அன்னைக்கு என் கார நாசம் பண்ணதுக்கு திருப்பி பழி வாங்காம விட மாட்டேன்…” என்னும் போதே முகத்தில் அத்தனை தீவிரம் அவனிடம்…

“அப்புறம் அவள தான் கட்டிப்பேன்னு சொன்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…?” மண்டை குழம்பியது விக்கிக்கு…

“ஆமா அவ எது பண்ணாலும் திருப்பி கொடுப்பேன் சும்மா கை கட்டிக்கிட்டு இருக்க மாட்டேன்… ஆனா அதே சமயம் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்… இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டின்னா அது அவ தான்… “என்று தீர்க்கமாக பேசியவனை நண்பர்கள் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை…

இங்கு இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, இருக்கையில் கனி, “என்ன புள்ள சொல்லுத… அவிக யாருனுட்டு உனக்கு தெரியுமா அன்னைக்கு எங்கிட்ட யாருன்னு கேட்ட…”

“நெசமா அன்னைக்கு இவுக யாருனுட்டு தெரியாது புள்ள… இன்னைக்கு ஒழுங்கா பார்த்த பின்னதேன் யாருன்னுட்டு அடையாளம் வெளங்குச்சு…” நிர்மலமான முகத்துடன் கூறியவளை பார்க்க பாவமாகவும் இருந்தது பயமாகவும் இருந்தது கனிக்கு….

“தெரிஞ்சும் எதுக்கு டி அவரையே பார்க்குத… வேண்டாம் புள்ள தேவயில்லாத வம்ப இழுத்து விடாத ஆத்தாக்கு தெரிஞ்சா அடி வெளுத்துப்பபுடும்…”

“ம்ப்ச்ச்… அப்படியெல்லாம் சும்மா இருக்க முடியாது… இத்தன நாள் பெரியவர் மட்டும்தேன் பழி தீக்கனும் நினைச்சேன் ஆனா இனி அவர் வாரிசும் அந்த பழிபாவத்தை கொஞ்சம் அனுபவிக்கட்டும்….” என்று கோபத்தை அடக்கி பல்லை கடித்து கொண்டு பேச, அவளது கையை அவசரமாக அழுத்தி பிடித்த கனி,

“ஏய்ய்ய்… என்னடி இது…? வேண்ணாம் புள்ள எனக்கு சரியா படல… ஏதாச்சும் பண்ண போய் உன்னைய பாதிக்குற மாதிரி ஆயிர போகுது…” உண்மையான பயம் அவளுள், ஏற்கனவே அவர்களது ஊர் பெரியவர் கவியின் தந்தையுடன் மல்லுக்கு நிற்பவள்… பெரிதாக பழி தீர்க்க வேண்டும் என வெறியோடு சுத்திக் கொண்டிருக்க, இப்பொழுது தானாக அவரது மகன் கவியழகனின் மீது அவளது கோபம் திரும்பியது…

தோழியின் பேச்சை காதில் வாங்காது, ஜன்னலின் புறம் தன் தலையை திருப்பி கொண்டாள்… ஒரு நொடி பார்வையை மட்டும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கவியழகன் மீது செலுத்தியவள் பின் மீண்டும் பார்வையை வெளி புறத்தில் தெரியும் காட்சிகளில் படரவிட்டாள் நிலையின்றி…

அவளது முகதிருப்பலை கண்டு கனி, “ஏன் புள்ள இப்படி பண்ணுத… புரிஞ்சுக்காம எதையாச்சும் பண்ணி வைக்காத குழலி… ஆத்தாக்கு தெரிஞ்சா எம்புட்டு வேதன படும்ன்னு ஏம்ல உனக்கு வெளங்க மாட்டீங்குது…” என்று ஆற்றாமையுடன் புலம்பவும் வேகமாக அவள் புறம் திரும்பிய குழலி,

“அதே ஆத்தா அந்த பெரியவரால எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாகன்னு உனக்கு தெரியுமா… கூட இருந்து பார்த்தவ நான்… பல நாள் பலருக்கு பயந்து எனக்காக போராடி இருக்கேன்… ஏன் உனக்கு தெரியாது…? எனக்கென்ன இப்படி வாழனும்னு தலையெழுத்தா….? இல்ல ஆத்தாக்குதேன் தலையெழுத்தா… நாங்க இப்படி கஷ்டப்பட காரணமே அந்த பெரியவர்தேன்… இதே இது நான் பையனா பொறந்திருந்தா எப்பவோ அவிக சட்டைய பிடிச்சு நாலு வார்த்த கேட்டு, மண்டைய ஒடைச்சு போலீஸ் கேஸ் ஆக்கி இருப்பேன்… ஆனா என்னால எதுவுமே செய்ய முடியாம போச்சு… அதுக்காக நான் சும்மா இருப்பேன்னுட்டு அர்த்தம் இல்ல… எனக்கு சரியான சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கட்டும் பொறவு பாரு புள்ள என்ன பண்ணுறேன்னு மட்டும்…” என்று ஆவேசமாக பேசியவளின் முகம் ஒரு நொடி கூட கடுமையை காட்டவுமில்லை குரலை உயர்த்தவும் இல்லை…

மானை வேட்டையாடும் சிங்கத்தின் பொறுமையை போல் இருந்தது அவளது முகமும் குரலும்… அதை புரிந்துக்கொண்ட கனிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருக்கவும், பூங்குழலி தன் தலையை திருப்பி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்…

அவன் காதலாக அவளை தன் விழிகள் மூலம் தன் நெஞ்சில் உள்வாங்கிக் கொண்டிருக்க, அவளோ வஞ்சத்தை சுமந்துக் கொண்டிருந்தாள்…

குணாவிற்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது கவி, விக்கி இருவரும் செய்து வந்த அலப்பறையில்… பூங்குழலியாவது பஸ் ஏறும் போதும், பஸ்ஸிலும் கவியை பார்த்தவள் சற்று நேரம் கழித்தே அவன் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்…

ஆனால், விக்கியின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது… கனிமொழி, கவியழகனை பார்த்தாளே ஒழிய உடன் இருந்த விக்கியை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை…

அது விக்கியை பலமாக வதைக்க, அவனும் பேருந்தில் வைத்து கவியுடன் சேர்ந்து ஏதேதோ செய்து பார்த்தும் அவள் பார்வையின் தரிசனம் அவனுக்கு கிட்டவில்லை… கவியும் பூங்குழலியின் கவனத்தை தன்புறம் திருப்ப விக்கியுடன் சேர்ந்து, நடத்துனரிடம் பேசி நட்பை உண்டாக்கி வேண்டுமென்றே பாட்டை அடிக்கடி மாற்ற சொல்லி சத்தமிடுதலும் சத்தமாக பேசி சிரிப்பது என்று ஏதேதோ செய்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது தான் மிச்சம்… அரைமணி நேர பயணத்தின் முடிவில் பக்கத்து ஊர் பேருந்து நிலையம் வந்துவிட, பெண்கள் இருவரும் அவர்களை சிறிதும் கண்டுக் கொள்ளமால் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினர்…

விக்கி, கனிமொழியின் சிறு தீண்டல் பார்வை கூட இல்லாததால் தவிப்புடன் அவள் பின்னே போக முற்படுக்கையில் அவனை தடுத்து நிறுத்தினர் கவியும் குணாவும்…

“எங்கடா போற….?” என்று கேட்ட கவியை பாவமாக பார்த்தவன்,

“மாப்ள என் ஆளு என்னை பார்க்கவே இல்ல டா…” அழும் குழந்தையின் முகத்தோடு கூற,

“இங்குட்டு பாரு மாப்ள… இது கிராமம் உங்க ஊர் சிட்டி இல்லப்பு… தேவையில்லாம படிக்குற பொட்டபுள்ளையோட வாழ்க்கைல வெளயாடாதீங்க… இல்ல இல்ல தப்பா சொல்லிப்புட்டேன்… இந்த விஷயமெல்லாம் அந்த புள்ளையோட அய்யனுக்கு தெரிஞ்சுது முடிஞ்சுது உங்க ஜோலி… உசுரோடு ஊரு போய் சேருற வழிய பாரு… அவ்வளவுதேன் சொல்ல முடியும் அதுக்கும் மேல இந்த புள்ளதேன் வேண்ணும்னா நான் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல… இப்ப மண்டபத்துக்கு போலாமா… பந்தி முடியறதுக்குள்ளயாச்சும் போயி சேருவோம்…” என்ற எச்சரித்த குணா மண்டபத்தை நோக்கி நடக்க தொடங்கினான்…

“என்ன டா இந்த குணா இப்படி சொல்லிட்டு போறான்…?” என்று அதிர்ந்து கவியை கேள்வி கேட்க,

“டேய் என்ன பயந்துட்டியா… அதான் நான் இருக்கேன்ல அப்புறம் ஏன் தேவையில்லாம பயபடுற… நீ நனைச்சது கண்டிப்பா நடக்கும்…” என்று தோளில் கையை போட்டு நடக்க, அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு வைத்தான் விக்கி…

“ஏன்டா இவ்வளவு கேவலமா பார்த்த…?”

“ம்ம்ம்… உன்னை நம்புன்னா… எங்கிருந்தாலும் வாழ்கன்னு என் ஆளு கல்யாணத்துல நான் பாட்டுதான் பாடுவேன்…” என்று கோபமாக அவன் கையை தட்டி விட்டு முன்னே நடக்க…

“ம்ப்ச்ச்… ஏன் மச்சான் இப்படி சொல்லுற… உனக்காக எதுவேனா செய்வேன் டா…”

“ம்ம்ம்… பார்த்தேன் பார்த்தேன்… டீ கடையிலும் பஸ்ஸிலும் டன் டன் னா வழிஞ்சியே…. அதுலேயே தெரியுது…” என்று அங்கலாப்பாக கூறவும்,

“புரிஞ்சுக்கோ மச்சி… அவள பார்த்ததும் ஒருமாதிரி ஆயிருச்சு… அதான் கொஞ்சம் சிலிப் ஆயிட்டேன்… இனி பாரு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம நான் ஓய மாட்டேன்… நம்புடா…” என்று நெஞ்சை நிமிர்த்தி பேசியவனை பாவமாக பார்த்து விக்கி,

“வேண்டாம் டா மாப்ள… நீ சேர்த்து வைக்காட்டியும் என் வாழ்க்கைல கும்மி அடிக்காம இருந்தா போதும்… நானே பார்த்துக்குறேன்…” என்று கை எடுத்து கும்பிட்டவன், “அடுத்து எப்ப பார்க்க போறோமோ…” என்று பெருமூச்சு விட…

“இன்னைக்கு சாயந்திரம் பஸ் ஸ்டாப்ல தான் இது என்ன கேள்வி…” என்று கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி வந்தவனை பார்த்த விக்கி,

‘இவன் ஒரு ஃபார்ம்ல தான் இருக்கான்… எதுக்கும் தள்ளியே இருக்கனும்… நாம எதுவும் பண்ணாட்டியும் இவன் அப்பா இந்த விஷயத்துல இவனை அடிக்குறாங்களோ இல்லையோ நம்ம மண்டைய உருட்டுவாங்க அது கன்பார்மா தெரிஞ்சு போச்சு… ஏதோ என்கூட பழகி தான் கெட்டுபோன ரேஜ்க்கு பேசுவாங்க… சே…’ என்று தன் போக்கில் எண்ணியவனை பார்த்த கவி எதுவும் கேட்காது அமைதியாக குணாவை பின் தொடர்ந்து சென்றான் விக்கியை அழைத்துக்கொண்டு…

அதன்பின் நண்பர்கள் மூவரும் கல்யாணத்திற்கு சென்று சில நண்பர்களை பார்த்து பழைய விஷயங்களை பேசி ஓயிந்து மீண்டும் மத்திய சாப்பாட்டிற்கு தான் வீடு வந்து சேர்ந்தனர்…

வாழ்க்கையில் இதுவரை ஒருமுறை கூட பஸ்ஸில் பயணம் செய்திறாத விக்கிக்கு இப்பயணம் சற்று கலைப்பை உண்டாக்க, மத்திய உணவை முடித்து விட்டு அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட, கவியழகன் அன்னையிடம் சொல்லிவிட்டு மில்லிற்கு சென்றான்…

மாலை சரியாக பெண்கள் இருவரும் வரும் வேலையில் அதே டீக்கடையின் முன்பு ஆஜராகி இருந்தனர் இருவரும்… எத்தனை கூப்பிட்டும் குணா வர மறுத்துவிட இவர்கள் மட்டும் வந்து காத்திருந்தனர் தங்கள் தேவதைகளுக்காக…

காலையில் இருந்து பூங்குழலிக்கு கவியின் நினைவே அவளை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது… ‘எம்புட்டு திமிர் இருந்தா என்னைய அப்படி பார்த்துட்டு இருந்து இருப்பாக… எங்கிட்ட வால ஆட்டடும் பொறவு தெரியும் ஜோலி…’ என்று கருவிக் கொண்டாள் உள்ளுக்குள்…

மாலை பஸ்ஸிலும் கவியை பற்றின யோசனையுடனே வந்துவளுக்கு இப்பொழுது எண்ணங்கள் வேறாக இருந்தது அது, இப்பொழுது தனக்காக வந்து காத்திருப்பானா அல்ல வந்திருக்க மாட்டானா என்ற பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள்…

என்றோ விதைத்த விதை ஒன்று இன்று அவள் மனதில் முளையிட தொடங்கியிருந்தது அவளையும் அறியாது… அதை அவள் அறியும் வேலையில் தன் கையாலேயே அதை பிடுங்கி எறியும் நிலையும் வரும் என்பதையும் அவள் அறியாது போனது அவளது துர்திஷ்டமே…

கனிகோ, பூங்குழலி பற்றியும் அவளது அன்னையை பற்றிய கவலையும் தான் பெரிதாக ஆட்டி வைத்தது… அவளது விழி வட்டத்தில் கூட விக்கி விழவில்லை என்பதே உண்மை…

“டேய் மச்சான் என்னடா இன்னும் பஸ்ஸ காணம்… ” என்று நொடிக்கொரு முறை தன் கைகடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தான் கவியழகன்…

அவனை ஒரு பார்வை பார்த்த விக்கி, “நீ துடிக்குறதை பார்த்தா எனக்கு உதவி பண்ண வந்த மாதிரி தெரியலையே…”

“டேய்… நம்பு டா… உனக்காக தான் கேட்டேன்… இப்படி சந்தேக படாத நாயே…” என்று சமாளித்துக் கொண்டு இருக்கவும் பஸ் வரவும் சரியாக இருந்தது…

அதில் விக்கி பரபரப்பாக, கவியோ சாவகாசமாக அங்கிருந்த பெஞ்சில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து டீ யை ருசி பார்த்து பருக தொடங்கினான்… அவனது செயலை புரியாமல் பார்த்த விக்கி பின் கனியின் புறம் தன் கவனத்தை திருப்பினான்…

பஸ்ஸில் இருந்து இறங்கிய இருவரும் ஒன்றுபோல் பெஞ்சில் தங்களை கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்கும் கவியழகனையே பார்த்தபடி செல்ல சற்று கடுப்பாகி போனான் விக்கி…

‘ஒருத்தன் இங்க இவளுக்காக காத்திருந்தா… கண்டுக்குறாளா பாரு…’ என்று மனதில் தன்னவளை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்….

கடையை தாண்டும் வரை அவனை பார்த்துக்கொண்டு சென்றவர்கள் அவனை தாண்டியதும் தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தனர் அவனை திரும்பியும் பாராது…

விக்கிக்கோ ஒன்று புரியாமல் தலையை கோதியவாறு ஒரு கையை இடையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்… சைக்கிளை எடுத்த பூங்குழலிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது… உடனே,

“இன்னைக்கு உன்னைய கொல்லாம விட மாட்டேன் டா…” என்று பல்லை கடித்து மெல்லிய குரலில் அவனை திட்டியபடி, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த,

“வேண்ணாம் புள்ள… சொன்னா கேளு புள்ள… ஆத்தாக்கு நீ பெரியவரோடு மவன் கூட வம்பிலுத்தது தெரிஞ்சுது பிரச்சன ஆயிடும் டி… “என்று அவசரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு அவளது கையை பிடித்து இழுத்து நிறுத்த முயற்சிக்க, ஆவேசமாக அவள் புறம் திரும்பியவள்

“ஏய் விட்றி… இல்ல அவனுக்கு உழ வேண்டியது உனக்கு உழும்… ஒழுங்கா விடு என்னைய…” என்று கனியின் பிடியில் இருந்து திமிறியவள் வேகமாக கவியழகன் முன்பு நின்றாள் கோபம் மூச்செடுத்து…

அங்கு நடக்கும் எதுவும் புரியாமல் குழம்பி போய் வேடிக்கை பார்த்தான் விக்கி… பூங்குழலி வேகமாக வருவதை பார்த்து அவசரமாக அவள் செல்ல வழி விட்டு நின்றவன், ‘என்னாச்சுன்னு இப்படி வரா… லூசா இருப்பாளோ …?’ என்று எண்ணிக்கொண்டு இருக்க, தோழியை தடுக்க முயற்சித்தவளுக்கு அது முடியாமல் போகவும் அவளை பின்தொடந்தவள் பூங்குழலி கவியின் அருகில் செல்லவும் பின்னடைந்தாள் கனிமொழி…

சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் பூங்குழலி கவியழகன் இருவரையும் பார்த்தபடி அனிச்சையாக விக்கியின் அருகில் நின்றாள் பெண்ணவள்…

அதை உணர்ந்த விக்கிக்கு அவனை சுற்றியிருந்த அனைத்தும் அவுட் ஆஃப் போக்கஸ்ஸில் இருக்க அவனது அவள் மட்டுமே அவனது கருத்தில் பதிந்தது..

தன் முன் நின்றிருந்த பூங்குழலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் டீயை பருக ஆரம்பித்தான் கனி…

அதில் கோபம் வலுப்பெற,”ஹே… என்னல வம்பு பண்ணுதீயோ…? தேவையில்லாம உன் வால எங்கிட்ட ஆட்டாத… கொன்னுறுவேன்… ” என்று கத்தியவளை பொறுமையாக பார்த்தவன், தான் பருகி முடித்த டீ டம்ப்ளரை வைத்துவிட்டு மெதுவாக எழுந்து பூங்குழலியை ஓர் வெற்று பார்வயை பார்த்து,

“மேடம் என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியலையே…” என்று புரியாத பார்வை பார்த்தபடி கைகளை கட்டிக்கொண்டு கேட்க,

“நடிக்காதல… நீர்தேன் என் சைக்கிள் டையர பஞ்சர் பண்ணி விட்டுருக்க எனக்கு தெரியும்… ஒழுங்கா அதைய சரிப்பண்ணி குடு… இல்ல என்ன பண்ணுவேன்னுட்டு எனக்கே தெரியாது…” என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆவேசமாக பேசியவளை பொறுமையாக பார்வையால் அழந்தவன் எழுந்து நின்றான்…

‘இவன் இத தான் காலைல சொன்னானா…? பாவி கூடதானே இருந்தேன் எப்ப இதை பண்ணுனான்…’என்று விக்கி எண்ணிக்கொண்டு இருக்கையில் அப்பொழுது தான் கவனித்தான் தன் அருகில் நின்றிருந்த அவனது விள்ளேஜ் பியூட்டியை….

கண்கள் மின்னிட, அவள் புறம் திரும்பியவன் குழைந்த குரலில், “ஹாய்….” என்க,

பயத்தில் தோழியை தீவிரமாக பார்த்திருந்தவள், தன் அருகில் கேட்ட குரலில் மெல்ல விழிகளை உருட்டி தலையை திருப்பி பார்த்தாள் கனிமொழி…

அவளது கடைகண் பார்வை தன் மேல் பட்டதும் முகம் மலர்ந்தவன், ஓரடி அவள் முன்சென்று அதே குழைந்த குரலில், “ஐ ஆம் விக்னேஷ்…உங்க பேரு…?” என்று ஆர்வமாக கேட்க அவனை ஏதோ அர்ப்ப பதறை போல் பார்த்து வைத்தாள் கனிமொழி…

‘அப்படி என்ன கேட்டுட்டோம்னு இப்படி ஒரு லுக் விடுறா… ‘என்று அவன் யோசிக்கும் போதே கவியழகனின் குரலில் விக்கி கனி இருவரது கவனமும் அவர்கள் புறம் திரும்பியது…

“நான் தான் உங்க சைக்கிள்ல பஞ்சர் பண்ணினேன்னு எதை வச்சு சொல்லுறீங்க… நீங்களே இப்ப தான் வரீங்க… அப்புறம் எப்படி உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி என்மேல பழி போடுறீங்க…” என்று கூலாக சொல்ல அவனை உறுத்து விழித்தாள் பூங்குழலி…

‘அப்ப நம்ம வரயிலேயே பார்த்துட்டுதேன் பார்க்காத மாதிரி உட்கார்ந்து இருந்தாகளா…? உறுதிக்கு சொல்லுதேன் இவந்தேன் இந்த வேலைய செஞ்சு இருக்கனும்… விடாத டி குழலி…’ என்று முடிவெடுத்தவள், அவனை முறைத்துக் கொண்டே

“எனக்கு தெரியுமல… நீதேன் இதைய பண்ணுனது… ஒழுங்கு மரியாதையா அதைய செரி பண்ணி குடுத்துடு இல்ல பின்னால ரொம்ப வருத்தபடுவ…”

“அப்படியா அப்படி என்ன மேடம் பண்ணுவீங்க…?” என்று ஆச்சரியமாக கேட்பது போல் பேசி அவளை கொஞ்சம் கொஞ்சமாக வெறி ஏற்றினான்…

“என்னவே லந்து காட்டுதியோ…? எதுக்குவே என் சைக்கிள பஞ்சர் பண்ணுன…?”

“ம்ம்ம்…” என்று அவளை மேலிருந்து கீழாக அழந்தவன், “எதுக்குன்னு சொல்லி தான் ஆகனுமா…?” என்று அலட்சியமாக கேட்க,

“அப்ப நீதேன் இதைய பண்ணுனது… எதுக்குவே இப்படி பண்ண…? கூறுகெட்டவனே…” அனைவரும் தங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்னும் எண்ணமே இன்றி, கவியழகனுடன் ஒற்றைக்கு ஒற்றையாக மல்லுக்கு நின்றாள்…

அவளது ‘கூறுகெட்டவனே…’ என்னும் வார்த்தையில் கவிக்கும் கோபம் வர, “ஏய்… என்ன ஓவரா துள்ளுற… ஆமா நான் தான் அப்படி பண்ணுனேன்… இப்ப என்ன அதுக்கு…? நீ என் காரை டேமேஜ் பண்ணுன இல்ல அதான் உன் சைக்கில பஞ்சர் பண்ணினேன்… நீ பண்ணதுக்கு நான் பண்ணது சரியா போச்சு… ” என்று அவனும் எகிற,

அவனை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தவள், திரும்பி விக்கியை பார்வையால் பொசிக்கி விட்டு, கவியின் புறம் திரும்பியவள், “நான் ஒன்னும் ஆச பட்டு உங்காரை நாசம் பண்ணல… நீ எம்மேல சேர் அடிச்ச அதேன் தான் உம்கார அப்படி பண்ணினேன்…” என்றவளை சந்தேகமாக பார்க்க, அது அவளை மேலும் கோப பட தூண்டியது…

“இங்குட்டு பாரு… உங்கிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல… அன்னைக்கு நாங்க நடந்து வந்துட்டு இருந்தப்ப, ரோட்டுல குழி இருக்கா இல்லையான்னு கூட பார்க்காம பார்க் பார்த்துட்டு ஓட்டி என்மேல சேர் அடிச்சுட்டு போனது நீ… அதுக்கு பழி வாங்கினேன் அம்புட்டுதேன்… ” என்ற அவள் கூறவும் தான் அன்னைறைய நினைவு கவிக்கு வந்தது…

இயற்கையை வேண்டிக்கை பார்த்துக்கொண்டு காரை செலுத்தியவன் ரோட்டில் இருந்த குழியை கவனிக்காமல் அதில் காரை இறக்கியது நினைவில் வந்தது… அப்பொழுது கூட அங்கு பெண்ணொருத்தி இருந்ததாக அவன் நினைவில் வரவில்லை… ஆக அவளது செயலுக்கான காரணம் விளங்கவும் சற்று அமைதியாக பேச முடிவெடுத்தான்…

“ஓஓஓ… சாரி… நான் கவனிக்கல…” என்றவனை முறைத்தவள்,

“இங்குட்டு பாரு அது முடிஞ்சு போன கத… இப்ப எங்சைக்கிளை ஒழுங்கா செரி பண்ணி குடு…” என்றவளை சுவாரஸ்யமான பார்வையில் அளந்தான்…

பூங்குழலியின் குணம் அவன் முன்பே அறிந்திருந்தாலும் இப்பொழுது பார்க்கையில் ரசனை கூடியது… செய்த தவறை அவளது முறையில் சரி செய்துவிட்டால் அதை அப்பொழுதே மறந்துவிடும் ரகம்… ஆனால் அவளை பாதித்த விஷயத்தை எப்பொழுதும் மறக்காமல் மனதின் அடியில் வைத்து ஒவ்வொரு முறையும் நினைத்து பார்க்கும் குணம் கொண்டவள் என்று அறியாமல் போனான் கவியழகன்…

அவளது செயலுக்கான காரணம் விளங்கவும் இப்பொழுது அவளது சைக்கிளை சரி செய்து கொடுக்கும் எண்ணித்தில் தான் இருந்தான் கவி… ஆனால் அதை சற்றே திமிராக கேட்கவும் வீம்புக்கே அவளுடன் மல்லுக்கு நிற்க முடிவெடுத்தான்…

“முடியாதுன்னா என்ன பண்ணுவ…?”

“வேண்ணாம்… தேவையில்லாம எங்கிட்ட வம்பு பண்ணாத பொறவு வருத்த படுவ… ஒழுங்கா எங்சைக்கிள செரி பண்ணி குடு… ” அவள் அவனை எச்சரிக்கவும் அந்த டீ கடையில் இருந்த வேறொருவன் கவியின் அருகில் வந்து,

“தம்பி… சொன்னா கேளு… இது பொண்ணே இல்ல சரியான திமிரு புடிச்சவ… திடீர் திடீர்னு ஏதாச்சும் செஞ்சுரும்… ஒங் அய்யன் எம்புட்டு பெரிய ஆளு அவரையே வம்புக்கு இழுக்கும்… தேவையில்லாம இதுகூட சங்காதம் வைச்சுக்கிடாத தம்பி… அது சைக்கிள செரி பண்ணி குடுத்துடு….” என்று இலவச அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டான்…

அவரது வார்த்தையில் அதிர்ந்து பார்த்தவன், “என்னணெ சொல்லுறீங்க… என் அப்பாவ வம்புக்கு இழுப்பாளா…?”

“ஆமா தம்பி…” என்று ஒத்து ஊத, கோபமாக அந்த நடுத்தர வயதை கொண்டவனை முறைத்து பார்த்தவள்,

“யோவ் சொட்ட… உன்னைய யாராச்சும் இங்குட்டு கூப்பிட்டாகலா… இல்லல மூடிட்டு உங்சொலிய பார்த்துட்டு போவியா… வந்துட்டான் அறிவுர சொல்ல… இருடி இப்ப நீ பண்ணதுக்கு உனக்கு சங்கு ஊதாமா விட மாட்டேன்… சிக்காமலா போவ…” என்று நாக்கை மடக்கி அவனை மிரட்டவும், அவனோ பயந்து கவியை ஓர் பார்வை பார்த்துவிட்டு தனக்கெதற்கு வம்பு என்னும் விதமாக நகர்ந்து விட்டார்…

அவன் செல்வதை பார்த்து முறைத்து நின்றவள், இப்பொழுது கவியின் புறம் திரும்பி, “அப்ப நீ எங் சைக்கிள சரி பண்ணி தர மாட்ட அப்படி தானே…?” என்று ஒருவித தோரணையில் கேட்க,

என்னதான் செய்துவிடுவாள் என்னும் நினைப்பில் கவியும், “ஆமா அப்படிதான்… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…” என்று அவனும் ஒரு மிதப்புடன் கூற,

இனி இவனுடன் பேசுவது வீண் என்று உணர்ந்தவள், ஒரு பெருமூச்சுடன் தன் தாவணி முந்தானையை எடுத்து உதறி இடுப்பில் சொருகி, அவனை விட்டு விலகி சென்றாள் தலையை குனிந்து தீவிர முக பாவனையோடு…

என்ன செய்துவிடுவாள் என்று பார்த்திருந்தவனுக்கு அவள் செய்கை அதிர்ச்சியை உண்டாக்க அவளை இமைக்காது பார்த்திருக்க, கனியோ தன் தோழியை நோக்கி ஓட, விக்கி தன் நண்பனை நோக்கி ஓடினான்…

தொடரும்…..

Advertisement