Advertisement

UD:34
“அம்மா எதுக்கு பதுங்கி பதுங்கி போறாங்க… கைல வேற எதையோ மறைச்சு இருக்காங்க…” என்று முனுமுனுத்தவனுக்கு ஏதோ சரியில்லை என பட, அவசரமாக அன்னையின் கண்ணில் படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டான்…
காயத்ரி, அவர்களது அறையை திரும்பி திரும்பி பார்த்தபடி படியில் கால் வைக்க போக, முருகவேல்
“காயத்ரி…” என்று உறக்க குரலில் கத்தியபடி அறையை விட்டு வெளியேறவும், அடுத்த நொடி காயத்ரி சமையலறைக்கு ஓட்டம் பிடித்தார்…
அதை பார்த்து அதிர்ந்த கவி, என்ன நடக்கிறது என்று பார்க்க தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை… படியில் இறங்கி வந்த முருகவேல், புருவத்தை சுருக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தவர் மீண்டும்,
“காயத்ரி….” என கத்த,
சமையலறையில் இருந்து கைகளை துடைத்தபடி சாவகாசமாக வந்தவர் முகத்தில் முன்பிருந்த பதற்றம் இஞ்சித்துக்கும் இப்போது இல்லை…
“என்னத்துக்கு என்ற பேர இப்ப ஏலம் போட்டுட்டு இருக்கியவ…? மெல்ல அழைச்சா ஆகாதாக்கும்…?” என்று நொடிந்துக் கொள்ளவும் முருகவேலுக்கு குழலி சொல்வது நினைவிற்கு வந்து கோபத்தை கிளப்பியது…
“ஏய்ய்… என்னடி வாய் நீளுது… அப்படித்தேன் கத்துவேன் என்னடி பண்ணுவ…” என்றவறை உற்று பார்த்தவர்,
“செரி… அது உங்கபாடு….என்னத்துக்கு அழைச்சீக… அதைய சொல்லுக… “என அசால்ட்டாக கூற, முருகவேலுக்கு தான் ஏதோ அவர் தன்னை அவமதித்து விட்டாது ஓர் எண்ணம்…
உண்மையில் காயத்ரி அப்படிதான்… என்று அவர் சரியில்லை என தெரிந்ததோ அப்பொழுதே அவரும் தன்னை மாற்றிக் கொண்டார்… ஆனால் அது இது நாள் வரை கவனிக்காத முருகவேல் இப்பொழுது யானையின் காதில் நுழைந்த எரும்பை போல் தன்னை குடையும் குழலியால் அவர் என்னேறமும் கடுப்பின் உச்சியிலேயே இருந்தார்…
முன்பு கருத்தில் படாத பல விஷயங்கள் இப்பொழுது கவனிக்க வைத்தது அவரை… அதற்கு காரணம் குழலி சொத்துக்காக தான் தன் மகனை மணம் முடித்தாள் என்ற எண்ணம் அவருள் வேறுன்றி இருந்தது உள்ளுக்குள்…
“என்னவே இம்புட்டு மெதப்பு… புதுசா மருமக வந்ததும் ஏத்தம் கூடிப்போச்சோ…” என்று பல்லை கடித்து கேட்கவும்,
“சும்மா உரண்டைய இழுக்காதீக… எமக்கு ஜோலியிருக்கு… நீரு எதுக்கு கூப்பிட்டீக… ?அதைய சொல்லுறீகளா இல்ல நாங் போவட்டா…” என்ற காயத்ரியை பார்த்து பல்லை கடித்தவர்…
“நான் தென்னந்தோப்புக்கு போத்தேன்… மத்திய சோறு குமாரு கிட்ட குடுத்துவுட்டுரு… ராவுக்குத்தேன் வூட்டுக்கு வருவேன்…” என்றவர் ஓரடி எடுத்து வைக்க போக பின் நினைவு வந்தவராக,
“ஆமா… என்னத்துக்கு இப்ப வூட்டுக்கு சாம்புராணி போட்டு வச்சிருக்கவ…?” என்று கேட்கவும் ஒருநொடி தடுமாறிய காயத்ரி பின் சாமளித்து,
“அது கை தவறி காப்பி தண்ணீய கொட்டிபுட்டேன்… அதைய சுத்தம் பண்ணுறதுக்குள் ஒரே நாத்தம் ஈச்ச தொல்ல வேற… அத்தேன் கொஞ்சம் சாம்புராணி போட்டு விட்டேங்க…”என விளக்கவும், மனைவியை ஒரு மார்க்கமாக பார்த்தவர் அவர் முகத்தில் ஒன்றும் புலப்படாததால்,
“ம்ம்ம்… நாங் கிளம்புத்தேன்…” என்க,
“ம்ம்ம்… செரிங்க…” என்று மண்டைய உருட்டவும், அவரை ஒருமுறை முறைத்துவிட்டு வாசலை நோக்கி நடக்க, காயத்ரியும் அவரை பின்தொடர்ந்து வழியனுப்பி விட்டு வந்தார்…
முன்பிருந்த எந்த உணர்வுமின்றி ஒருவகை நிம்மதி மட்டுமே இருந்தது காயத்ரிக்கு… நேராக சமையலறைக்கு சென்றவரை கண்ட கவிக்கு ஒன்றும் புரியவில்லை…
“என்னதான் இந்த அம்மா பண்ணுறாங்க… ஒருவேல சாதாரண விஷயம் நமக்குதான் ஒரு டைப்பா தெரியுதா…? சே இந்த முட்டக்கண்ணிய கட்டிக்கிட்டு அதுக்குள்ள லூசாயிட்டேன்… இன்னும் வாழ்க்க ழுழுசும் என்ன பண்ணுவேனோ…” என முனுமுனுத்தபடி தலையை கோதியவன், அன்னை மீண்டும் வருவதை கண்டான்…
ஆனால் முன்பு போல் பதுங்கவில்லை, விழிகள் அலைபாயவில்லை… அதுவே கவிக்கு ஒருவிஷயத்தை விளக்கியது…
“அப்படினா அப்பாக்கு தெரியாம ஏதோ பண்ணுறாங்க… என்னவா இருக்கும்…” என்றபடி அன்னையை பின்தொடர்ந்தவன் அவர் தன் அறை முன் நிற்பதை கண்டு துணுக்குற்றான்…
‘எதுக்கு நம்ம ரூம் முன்னாடி நிக்குறாங்க…?’ என்று எண்ணும் பொழுது தான் நினைவு வர,  அவசரமாக பார்வையை சுழல விட்டான் குழலியை தேடி, வீட்டில் எங்கும் இருப்பதாக தெரியாததால் சந்தேகத்தோடு மீண்டும் அன்னையை பார்க்க அவரோ கதவை தட்டிவிட்டு காத்திருந்தார்…
‘ஒருவேல ரூம்ல இருப்பாளோ…?’ என்று எண்ணுகையிலேயே அவர்களது அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது…
கதவை திறந்தவள் காயத்ரியை கண்டு புருவம் சுருக்கி பார்த்து, “என்ன மாமியாரே…. இப்ப என்னத்துக்கு தேடி வந்திருக்கீக… நாங் அமைதியா ஒதுங்கி போகுத்தேன்… ஆனா நீரு வம்பு பண்ண தேடி வந்திருக்கீக போல… ” என்று எங்கோ பார்த்தபடி உதட்டை சுழிக்க,
அவளை பார்த்து முறைத்தவர், “அடிங்கு… அடிச்சு பல்லை கழட்டிப்புடுவேன் டி… ஒழுங்கு மருவாதையா பேசு மொத… இப்ப வழிய விட்டு நகரு…” என்று அவளை இடித்துக் கொண்டு உள்ளே சென்றார்…
‘இந்த அம்மா எதுக்கு தேடி போய் அவளை சண்டைக்கு இழுக்குறாங்க… சும்மா இருக்க வேண்டியது தானே…’ என்று எண்ணியவன் மெல்ல அவர்கள் அறை பக்கம் சென்று பாதி திறந்திருந்த கதவின் வழியாக பார்க்க முயற்சித்தான்…
“என்ன மாமியாரே… நீரு பாட்டுக்கு உள்ளாரா வாரீக…” என்று சண்டைக்காக பேச தொடங்கும் போது , காயத்ரி மகனது அறையை பார்வையால் அளந்தார்…
தான் அறையை படுத்தியபாட்டை இப்பொழுது சீர் செய்து வைத்திருந்தாள் குழலி… அதை கண்டு உள்ளுக்குள் மெச்சியவர், வெளியே அவள் ஒருபக்கம் கத்திக்கொண்டிருந்ததை காதில் வாங்காதவர் போல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் தோரணையாக….
அதை கண்ட குழலி, “என்ன மாமியாரே நாங் பாட்டுக்கு பேசுத்தேன் நீரு பாட்டுக்கு அறைய உலக அதிசயத்த சுத்தி பார்க்குறாப்புள பாக்குதீய…” என்று முகத்தை சுருக்க,
“ம்ம்ம்… உனக்கு வாய் மட்டும்த்தேன் எட்டூருக்கு நீளும்னுட்டு நினைச்சேன்… ஆனா பரவால கைக்கு கொஞ்ச வேலையும் தெரிஞ்சு இருக்கு… ” என்று தோளை உழுக்கி சொல்ல,
கடுப்பாகி போன குழலி, பல்லை கடிக்க… அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவர், “என்னவே மொறைக்குறவ… கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன் பார்த்துக்க… வா… வந்து இங்குட்டு உட்காரு…” என அருகில் இருந்த நாற்காலியை காட்ட, அவரை புருவம் சுருங்க சந்தேகமாக பார்த்து வைத்தாள் குழலி…
கவியோ, ‘சமாதான உடன்படிக்கை போட போறாங்களா…?’ என்றபடி சுவாரஸ்யமாக பார்த்திருந்தான் அவ்வீட்டின் மாமியாரையும் மருமகளையும்….
“சொல்லுத்தேன்ல… வா வந்து உட்காரு… எனக்கு ஆயிரம் ஜோலியிருக்கு… இங்குட்டு உங்கூட மல்லுக்கட்டிகிட்டு இருக்க முடியாது… வெரசா வாடி…” என்றழைக்கவும், உதட்டை இருபுறமும் வளைத்து சுழித்தவள்,
“ஆரு உங்களைய இங்குட்டு அழைச்சா… போய் உங்க ஓராயிரம் ஜோலிய பார்க்க வேண்டியதுத்தேனே…” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு வந்து அருகில் அமர,
அவளது குமட்டில் ஒரு குத்து குத்திய காயத்ரி, “வாய்… வாய் மட்டுத்தேன் டி உமக்கு…” என்றவர் அவள் கையில் தான் மறைத்து எடுத்து வந்ததை திணித்தார் ஆசையாக…
அவர் குத்தவும் கன்னத்தை பிடித்துக்கொண்டு கோபமாக வாயை திறக்க போனவள், கையில்  திணித்ததை கண்டு புரியாமல் பார்த்தவள், மெல்ல அதை திறந்து பார்க்க அத்தனை ஆச்சரியம், சந்தோஷம் அவளது முகத்தில்…
வெளியே இருந்து ஒளிந்து ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த கவிக்குத்தான் ஒன்றும் புரியவுமில்லை பார்க்கவும் முடியவில்லை…
‘என்னது அது… இவ மண்டை மேல எதுக்கு பல்ப் எறியுது…?’ என்றபடி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு காதில் வந்து விழுந்தது அடுத்த அதிர்ச்சியான வார்த்தையென்றால் கண்ணுக்கு காட்சியானது அடுத்த செயல்…
“அத்தே… சூப்பர்… அசத்தி புட்டீக… ” என்று கூவலோக, முன்னிருந்த மேஜையில் கையிலிருந்ததை வைத்துவிட்டு எழுந்து, காயத்ரியை கட்டிக் கொண்டாள் குழலி…
கவிக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருந்தது… ‘என்னடா நடக்குது இங்க… ?’ என்று மீண்டும் உற்றுபார்க்க,
இப்பொழுது குழலி காயத்ரியின் கழுத்தை கட்டிக் கொண்டு கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைக்க, காயத்ரியும் சிரித்துக்கொண்டே அவளது கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க, இங்கு கவிக்கு தலையோடு சேர்த்து உலகமே சுற்றுவது போல் ஒரு பிரம்மை…
“செரி… செரி… மொத சாப்புடு… சூடு ஆரிற போவுது…”என்று காயத்ரி சிரித்துக் கொண்டே கூற, அவரை விட்டு விலகி அவசரமாக மேசை மீதிருந்த தூக்கு சட்டியை எடுத்தவள், அதில் சூடாக இருந்த நாட்டு கோழி குழம்பை அடியில் இருந்த சாதத்தோடு பிசைந்து வாயில் வைக்க, அதன் ருசியில் சொர்க்கத்தில் மிதப்பது போல் ஓர் உணர்வு அவளுக்கு…
அதை கண்கள் மூடி ரசித்தவள், பின் வேகமாக நாலைந்து கவளம் உண்ட பின்னர் தான் தலையை நிமிர்த்தினாள்… காயத்ரியோ ரசித்து உண்ணும் மருமகளை விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தார் ஆசையாக…
பாவம் கவிக்கு தான் இன்னந்தென்று சொல்லிட முடியாத உணர்வுகள் உள்ளுக்குள்… ‘பாவி… பாவி… எப்படி சாப்புடுறா பாரு… இவ கேடின்னு தெரிஞ்சதுதான்… ஆனா இந்த அம்மா… ‘ என பல்லை கடித்தவன் பொறுமை காத்தான்…
“மாமியாரே… ருசி அம்புட்டு அரும…” என வாயின் இருபக்கமும் உணவை அடைத்துக் கொண்டு பேச,
“ம்பச்ச்… செரி… செரி… நீ மொத மெல்ல சாப்புடு… பொறவு பேசிக்கலாம்… ” என்க, பின் குழலி ஒரு பருக்கையை கூட விடாமல் வளித்து திண்ற பிறகே பேசுவதற்கு வாய் திறந்தாள்…
“புடிச்சுருந்துச்சா வாயாடி… “என வாஞ்சையாக குழலியின் தலை வருடி கேட்க, அவளோ கையில் இருந்த பருக்கை மற்றும் குழம்பை நக்கியபடி,
“ம்ம்ம்… அம்புட்டு அருமையா  இருந்துச்சு மாமியாரே…” என்றவள் சந்தேகமான முகத்துடன் நிமிர்ந்து,
“ஆமா ஏங் இங்குட்டு வூட்டுல அம்புட்டு பேரும் சைவம்…? நாங் எங்கூட்டுல ஏங் ஆச்சி கூட திங்கும்மே…” என கேள்வி கேட்க,
“அது ராசாவோட அப்பாருக்கு அசைவத்த விட சைவந்த்தேன் விரும்பி சாப்பிடுவாக… அத்தேன் ஆரும் அசைவம் சாப்பிடுறது இல்ல… எங்களுக்கும் சைவமே இஷ்டமாயி போச்சு… ” என்று விளக்கம் அளிக்க,
“ஓஓஓஓ….” என உதட்டை குவித்து கதை கேட்டாள் குழலி… பின் நினைவு வந்தவளாக,
“இம்புட்டு வருஷம் சமைக்கலைன்னு சொல்லுதீக… பொறவு எப்படி மாமியாரே இம்புட்டு ருசியா சமைச்சீக…?”
“குத்து மதிப்பாத்தேன் சமைச்சேன்… உமக்கு புடிக்குமோ புடிக்காதோன்னுட்டு… உன்ற ஆத்தா அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ சுமாரா சமைக்க தெரியும்டி….” என்று முகத்தை வெட்ட, குழலி
“ம்க்கும்…” என பழிப்பு காட்டியவள், மீண்டும் விரல்களில் இருந்த மசாலாவை நக்க தொடங்கினாள்… அப்பொழுது காயத்ரி, மென்மையான குரலில்
“ஏங் தாயி… நல்லா இருக்கியா…?” என கேட்க, அவரை தலை நிமிர்ந்து பார்த்தவளின் உதட்டில் இதமான புன்னகையை பூத்தாள்…
“ஏன் நல்லா இல்லாம நல்லா வெடக்கோழியும், சுடு சோறும் திருட்டு தனமா சமைச்சு அதை திருட்டு தனமா குடுத்தா… மூக்கு முட்ட சாப்பிட்டு நல்லா தான் இருப்பா…” என்றபடி, அறை வாசலில் கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு குறுகுறுவென இவர்களை பார்த்தபடி நின்றிருந்தான் கவியழகன்…
இருவரும் இவனை எதிர்பார்க்காததால் அதிர்ந்து எழுந்து நின்றார்கள் தன்னைபோல்… காயத்ரியோ கையை பிசைந்தபடி குழலியோ கைவிரல்களை நக்கியபடி பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தாள்…
‘ஆத்தி…. லூசு பார்த்திருச்சு… தனியா மாட்டிக்காத புள்ள… பிச்சு மேஞ்சாலும் மேஞ்சுரும் லூசு….’ என மனதில் எண்ணங்கள் ஓட, வெளியே அவனை பார்த்து விழித்தபடி நின்றிருந்தாள்…
காயத்ரியோ உடனே நிலமையை கையில் எடுக்க, “ஏய்ய்ய்… என்ன வேடிக்க பார்த்துட்டே நிக்க… போய் தம்பிக்கு காபி தண்ணீ எடுத்தா… போ… ” என பண்ணிந்தவரை திரும்பி பார்த்து உதட்டை வளைத்தவளை,
“போடிங்குறேன்… முறைச்சுட்டு நிக்குறவ… போடி…”என்று தோளை பிடித்து லேசாக தள்ளவும்,
“போத்தேன்… போத்தேன்…” என்று முகத்தை வெட்டியவள் செல்கையில் தூக்கு சட்டியை எடுத்து செல்லவும் மறக்கவில்லை…
அவனை தாண்டி செல்கையில், விரலை நாக்கியபடி ஓரகண்ணில் அவனை பார்த்தபடி கடக்க, கவியழகன்
“ஓழுங்கா சோப் போட்டு கையை கழுவிட்டு அப்புறம் காப்பிய போடு… நீ விரலை நக்குனதுல கை சுத்தம் ஆயிருச்சுன்னு அப்படியே போட்டுறாதா… அப்புறம் உன் மூஞ்சுல தான் வாந்திய எடுத்து வைப்பேன்…” என கூறவும்,
“ம்ம்ம்… எடுப்பீக… எடுப்பீக… வாய உடைச்சுரு மாட்டேன்…” என,
“உடைச்சுத்தான் பாரேன்… அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு தெரியும்… ” என்றவனின் பார்வை இப்பொழுது அவளது உதட்டில் அழுத்தமாக பதிய, அது அந்த பெண்ணவளுக்கு புரிந்து விட, அதிர்ந்து காயத்ரியை ஒருமுறை பார்க்க,
அவரோ நெற்றியை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்துவிட்டிருந்தார் இவர்களின்.சண்டையில்… பின் பார்வையை கவியழகன் புறம் திருப்பியவள் அவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு பட்டென வெளியே ஓடிவிட்டாள் லேசான பயத்தில்…
‘ஆத்தி… என்ன இவீக… செரியான கூறுக்கெட்ட மனுசனா இருப்பாக போல… ஆத்தாவ பக்கம் வச்சுக்கிட்டே இந்த அலும்பு பண்ணுதாக… சே… சே… கோட்டி பய…’ என அவனை மனதில் திட்டிக்கொண்டே சமையலறையை நோக்கி நடக்க தொடங்கினாள் குழலி…
இங்கு அறையில், கவி “ம்மா… இதுக்கு தான் சாம்பிராணி போட்டு வச்சு இருக்கீங்களா….?” என கேட்க,
“வேற வழி… உங்க அப்பாருக்கு தெடிஞ்சுது சாமி ஆடிபுடுவாரு மனுஷன்…” என்று கண்கள் விரித்து சொல்ல, லேசாக புன்னகைத்தவன்,
“இவ்வளவு ரிஸ்க் எடுத்து பண்ணனுமா…? அதுவும் இல்லாம உங்களுக்கும் உங்க மருமகளுக்கும் தான் ஆகாதே… அப்புறம் என்ன திடீர் பாசம் எல்லாம் நாட்டு கோழில பொங்கி வழியுது…” என கேலியாக கேட்கவும், அவன் தோளில் லேசாக தட்டியவர்
“திடீர்னுட்டு எல்லாம் இல்ல ராசா… அது சிறுசா இருக்கச்சேயே இருந்து இருக்கு… சிறுசுலையும் இப்படித்தேன் எதுவா இருந்தாலும் ஏட்டிக்கு போடிக்கு இடிச்சுடே இருக்கும் பொறவு கொஞ்சிட்டி சுத்தும்… வெளியே திமிரா காட்டினாலும் உள்ள அம்புட்டும் பாசம் ராசா…” என அவனை பார்த்து புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தவன், மனதில்
‘அதுதான் தெரியுமே… வெளியே சும்மா சீன் போட்டு சுத்தும்… கிறுக்கு…’ என எண்ணிக் கொண்டான்… அப்பொழுது மீண்டும் காயத்ரி,
“எமக்கு மொத பொட்டபுள்ள வேண்ணும்னுட்டுத்தேன் ஆச பட்டேன்… ஆனா நீரு பொறதீரு… பொறவு குழலி பொறந்தப்ப அதைய எம்பொண்ணாத்தேன் பார்த்தேன் ராசா… எங்கிட்டியே நின்னு சண்டை போட்டுட்டு, எங்கிட்டியே ஒட்டிக்கிட்டு சுத்தும்… வெலகி மட்டும் போகாது….அதில்லாம சின்னதுல அம்புட்டு அழகா இருக்கும்….” என்று மருமகளை நினைத்து பூரித்து சொல்ல, கவியோ மனதில்’அதான் தெரியுமே…’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு கண்முன் தோன்றியது அவளது குண்டு குண்டு கன்னங்களும், முட்டைக்கண்ணழகும், இரு காதோரமும் குட்டியாக தொங்கும் முயல்குட்டி ஜடையும் தான்….
“உங்க அப்பாரு பண்ண ஜோலியால அவளும் அவ ஆத்தாலும் ரொம்ப வேதனைய அனுபவிச்சுட்டாக ராசா… அத்தேன் இப்படி பண்ணிட்டு சுத்துறா… நானே எங்கண்ணால பார்த்தேன்… ஒருக்கா சந்தைக்கு போயிட்டு வராப்புல, ஸ்கூல்ல இருந்து வந்துக்கிட்டு இருந்த இவளைய ஒரு பொறுக்கி பைய வழிய மறிச்சு வம்பு பண்ணிகிட்டு இருத்தான்… நான் பக்கம் போறப்ப… அந்த கிறுக்கன், ‘உன்னைய ஏதாச்சும் பண்ணுனா கூட ஏன் கேட்க நாதியில்ல, உன்ற மாமனே உங்களைய தண்ணீ தெளிச்சு விட்டுப்புட்டாக… பொறவு என்னத்து மொறன்டு புடிக்குத்தே”னுட்டு அவன் சொல்லவும் எமக்கு அம்புட்டு சங்கடமா போயிருச்சு… பாதுகாப்பு தரவேண்டிய நாம வெளகி நிக்கோமேன்னுட்டு வலி தாங்களையா… அவனைய நாங் அடிச்சு சாத்துறத்துக்குள்ள உன்ற பொண்டாட்டி அவனைய செருப்பால அடிச்சு தொறத்தி வுட்டுபுட்டா…” முகம் கசங்க கூறிக்கொண்டு வந்தவர், இறுதியில் அன்றைய நாளில் குழலியின் அவதாரத்தை நினைத்து புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது…
அருகில் இருந்த கவியோ கையை முறுக்கி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான்… மனைவியிடம் வாலாட்டியவனை அடித்தே கொல்ல வேண்டும் என்ற வெறி எழுந்தாலும் அதை தற்சமயம் வெளிகாட்ட அவன் இல்லை என்பதால் அமைதியாக கையை முறுக்கி அமர்ந்திருந்தான்…
“அதுக்கு பொறவுத்தேன் அவ உங்க அப்பாரை கண்டா வேண்ணும்னுட்டே வம்பிலுப்பா… ஊடால என்னையும் இழுக்கும்… ம்ம்ம்… அப்படியாச்சும் அவ எங்கிட்ட பேசுதாளேன்னுட்டு நானும் அதைய வம்பிலுப்பேன்… அப்ப மட்டுத்தேன் உங்க அப்பாரு என்னைய ஏதும் சொல்லமாட்டாக…” என்று கூறி லேசாக சிரிக்க, கவியழகனுக்கும் அன்று வண்டிக்கு பூஜை போடும் போது அவள் அடித்த கூத்து நினைவிற்கு வந்து அவனது இறுகிய முகத்தில் புன்னகையை கொண்டு வந்தாள்…

Advertisement