Advertisement

UD:33
வீட்டிற்குள் நுழைந்தவளின் பார்வை எதிரில் நடுவில் நடைபயன்று கொண்டிருந்த பூங்குழலியின் மீது படிந்தது… அவளோ கவியழகன் என்ன செய்கிறான் என அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததால் கனிமொழி வந்ததை கவனிக்கவில்லை…
அவள் அருகில் சென்றவள், மெல்லிய குரலில் கண்ளால் வீட்டை அலசியபடி “புள்ள…” என்றழைக்க,
கவியை பற்றின யோசனையில் இருந்தவளின் முகம் கனி அழைக்கவும் சட்டென திரும்பி பார்க்க மலர்ந்தது தோழியை கண்டதும்… அதில் கவியழகன் பின்னுக்கு சென்றுவிட்டான், ஓடி சென்று கனியை அணைத்து கொள்ள…
“கனி…. எப்படி புள்ள இருக்க…? என்னை விட்டு மைசூர்பாக் திண்ணியே வயிரு ஒன்னும் ஆகலையா புள்ள…?” என்ற சந்தேக கேள்வியை கேட்டு  அணைக்கும் சமயம், கவியழகன் தயாராகி படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான்…
தோழியிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கனி, “ம்ம்ம்…. ” என மண்டைய ஆட்டி வைத்தவள் விழிகள் மீண்டும் அவ்வீட்டை அலச, கண்ணில் பட்டான் கவியழகன்…
அவனோ கனிமொழியை குறுகுறுவென பார்த்தபடி படிகளில் இறங்க, அங்கு வந்த காயத்ரி, “சாப்பாடு எடுத்து வைக்கவா ராசா…?” என கேட்கவும் பூங்குழலியின் பார்வை அவசரமாக கவியின் புறம் திரும்பி அவனை தலை முதல் கால்வரை அலசி ஆராய்ந்தது ஆர்வமாக….
‘என்ன இவீக… சேதாரமே இல்லாம இருக்காக…? ஒருவேல ஒன்னும் ஆகலையோ இன்னும் பலமா வேற ஏதாச்சும் செஞ்சிருக்கணுமோ… ம்ப்ச்ச்… போ புள்ள இப்படி சொதப்பிட்டியே…’ என மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டே அவனை பார்வையால் தொடர்ந்தாள்…
அருகில் கனியோ அவ்வீட்டை அலசிக் கொண்டிருக்க, பூங்குழலியோ தன் கணவனை பார்வையால் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்…
அன்னையின் கேள்விக்கு, “ஆங்… வைங்க ம்மா… சாப்பிட்டு மில்லு வரை போயிட்டு வரேன்… இன்னைக்கு ஒரு லோடு ஏத்தணும்…” என்றபடி சாப்பாட்டு மேசையை நோக்கி நடக்கவிருந்தவன் திரும்பி,
“கனி சாப்பிட வா… ” என்க, அப்பொழுது தான் காயத்ரி கனிமொழியை கவனித்தார்…
“ஆத்தி… இந்த புள்ள எப்ப வந்துச்சு… நாங் கவனிக்கலையே…” என்றபடி அவள் அருகில் சென்றவர் அவள் கன்னம் வருடி, “சொகமா இருக்கியா தாயி… வூட்டுல அய்யன் ஆத்தா அம்புட்டு பேரும் சொகமா…?” என வாஞ்சையாக கேட்கவும்,
“அம்புட்டு பேரும் சொகந்த்தேன் பெரியாத்தா… நீரு எப்படி இருக்கிய…?” என பதிலுக்கு நலம் விசாரித்தவளின் குரலில் துளிக்கூட உற்சாகமோ சந்தோஷமோ இல்லை…
இதை அங்கிருந்த யாரும் கவனிக்வில்லை என்றாலும் கவியின் கருத்தில் பதிந்தது, ‘எதுக்கு இப்படி டல்லா இருக்கா… ஒருவேல விக்கி பத்தி இருக்குமோ…?’ என தாடையை தடவி யோசித்துக்கொண்டிருந்தவனின் பார்வை இப்பொழுது அருகில் இல்லாத நகத்தை கடித்தபடி தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த குழலி பட்டாள்…
‘இவ ஒருத்தி… பண்ணுறதையும் பண்ணிட்டு பார்க்குறத பாரு… முட்டக்கண்ணி… இருடி உன்னைய என்ன பண்ணுறேன்னு பாரு… ‘ என முகம் கடுக்க கருவிக் கொண்டான்…
“செரி வா தாயி… வந்து ஒருவா சாப்புடு…” என கனியின் கையை பிடித்து இழுக்க,
“இல்ல பெரியாத்தா… நாங் வூட்டுலையே சாப்பிட்டுத்தேன் வந்தேன்… காலேஜுக்கு போவணும்… அத்தேன் குழலிய ஒரு எட்டு பார்த்துட்டு போவோம்னுட்டு வந்தேன்…” என தயங்கி தயங்கி பேச,  காயத்ரி
“அதுனால என்ன தாயி… இனி எப்பவேன்னா இங்குட்டு வந்துட்டு போ… ஆரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாக… ரொம்ப வருஷம் கழிச்சு மொத தடவையா வூட்டுக்கு வாரவ இப்ப ஒருவாயி நீ சாப்புட்டுத்தேன் போவணும்… வா…” என கையை பிடித்து இழுக்கும் போது, அருகில் இருந்த குழலியை பார்த்தவர்,
“அடியேய்….” என முதுகில் ஒன்று வைத்தார், கவியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவள் எதிர்பாராமல் வாங்கி அடியில் அதிர்ந்து,
“ஸ்ஸ்ஸ்… மாமியாரேஏஏ…” என முதுகை தேய்த்தபடி அவர்புறம் திரும்பி பல்லை கடிக்க,
“வாய ஒடைச்சுருவேன்டி சிறுக்கி…” என காயத்ரி அவள்மீது பாய, உதட்டை வளைத்து முகம் சுருக்கியவளை பார்த்து,
“வூட்டுக்கு வந்த புள்ளைக்கு ஒருவா காபி தண்ணி கூட குடுக்காம என்னத்தல பாராக் பார்த்துட்டு நிக்குறவ…”என அதட்டியவருக்கு பதில் பேச வாய் திறக்கும் முன், கவியழகன்
“ம்மா… டைமாச்சு… சாப்பாடு எடுத்து வைங்க… கனி வா வந்து ஒருவாய் சாப்பிட்டு கிளம்பு… காலேஜ்க்கு போகத்தான் டைம் இருக்கே… வா…”என அழைத்தவன் குழலியை ஒருபார்வை பார்த்துவிட்டு சாப்பாட்டு மேசையை நோக்கி நடக்க தொடங்கினான்…
அவனுக்கு தெரியும் இப்பொழுது இருவரும் சண்டை பிடிக்க ஆரம்பித்தால் அது லேசில் முடிவிற்கு வராது என்று…
தன்னை கணவன் அழைக்கவில்லையே என்னும் கவலையெல்லாம் இல்லை அவளுக்கு இவனுக்கு எதுவும் ஆகவில்லையா என்னும் ஆராய்ச்சித்தான் மண்டைக்குள் சுழன்றுக்கொண்டிருந்தது…
‘சே… ஒழுக்கா பிளான் பண்ணாம விட்டுப்புட்டோமா…’என எண்ணும் போதே காயத்ரியும் கனியும் கவியின் அழைப்புக்கு உடன் சென்றிருக்க, இவள் மட்டும் தனியாக நின்று புடவை முந்தானையை திருகிக் கொண்டிருந்தாள்…
“அடியேய்… கூறுக்கெட்டவளே… உன்னையவேற தனியா அழைக்கணுமா…” என காயத்ரி கத்தவும் சுயத்திற்கு வந்தவள், உதட்டை வளைத்து
‘விடு புள்ள… அடுத்தடுத்து ஒழுங்கா பிளான் பண்ணிருவோம்… வெசன படாத…’ என தன்னை தானே ஆறுதல் படுத்தியவள் மெல்ல அவர்களை நோக்கி செல்லவும் சைந்தவியும் காலேஜ் செல்ல தாயாராகி வந்து சாப்பாட்டிற்காக அமர்ந்தாள் தன் ஃபோனை நோண்டியபடி…
குழலி அருகில் வரவும், கவியழகன் இருக்கையில் அமர்கையில் இடுப்பில் சுர்ரென வலி உண்டாக, “ஸ்ஸ்ஸ்…” என லேசாக முனங்கியபடி இடுப்பை சட்டென பிடித்துவிட்டான் வலியில் அனைத்தையும் மறந்து…
அவனையே கழுகு போல் பார்வையால் பின்தொடர்ந்தவளுக்கு இக்காட்சி கருத்தில் பதியாமல் போகுமா என்ன… குழலிக்கு முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்…
சரியாக அதே நேரம் சைந்தவியின் ஃபோனில், ‘நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது…’ என்னும் வடிவேலின் காமெடி வசனம் ஓட, கலுக்கென்று வாய் மூடி சிரித்துவிட்டாள்…
ஃபோனில் கேட்ட வசனத்திற்கு பிறகு தான் அவசரத்தில் தான்  செய்ததை உணர, மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான் கவி…
‘சே… சொதப்பிட்டியே டா கவி… இவ முன்னாடியா இப்படி ஆகணும்… கொஞ்சம் பொருத்திருந்தா… இவ சந்தேகத்துலையே மண்டை காஞ்சு போயிருப்பா… இப்ப பாரு இவ சிரிக்குறத…’என உள்ளுக்குள் புலம்பியவன் வெளியே குழலியை பார்த்து பல்லை கடித்து வைத்தான் அவளை முறைத்தப்படி…
‘சிக்குனியா…?’ என்னும் தோரணையில் பார்த்து நக்கலாக சிரித்தவள், இருகைகளையும் தட்டி உள்ளங்கையை ஊதியவள், உள்ளுக்குள் ‘மிஷன் சக்சஸ் புள்ள…’ என்றெண்ணியவளின் பெருமை முகத்தில் ஜொலிக்க, அவனை மிதப்பாக பார்த்தபடியே நின்ற இடத்தை விட்டு நகன்றாள்…
கவியழகனோ அவளது நக்கல் சிரிப்பை யாரும் அறியா வண்ணம் முறைத்தபடி எதிர் நோக்கியிருந்தான்… அப்பொழுது காயத்ரி, “எத்தன மொற சொல்லுத்தேன் சைந்து… சாப்புடும் போது ஃபோன எடுக்க கூடாதுன்னுட்டு… எடுத்து உள்ளார வை… சாப்புடு மொத…” என அதட்டவும் குழலியின் கவனமும் திசை மாற, கவியும் தலையை கவிழ்ந்தான் உணவில் கவனத்தை திருப்பி…
ஆனால் கனியின் பார்வை மட்டுமே விக்கிக்காக அந்த வீட்டை கண்களால் அலசிக் கொண்டிருந்தது… ஆனால் என்ன பயன் அவன்தான் சென்றாகி விட்டதே… பேதையவள் அதை அறியாததால் எங்கேணும் கண்ணில் பட்டுவிட மாட்டாரா என்னும் ஏக்கம் அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது…
காயத்ரி அவளுக்கு ஒரு தோசையை வைக்க, அதையே கிண்டிக்கொண்டிருந்தாள் வெகு நேரமாக… குழலி அனிச்சையாக கவியின் அருகில் நின்று அவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து பறிமாறியபடி நைந்தவி கனிமொழிக்கும் பறிமாற, காயத்ரி அதை கண்டும் காணாமல் இருந்தாலும் மனதில் குறித்துக் கொண்டார்…
ஆயிரம் சண்டை ஆனாலும் கவியிடம் அவள் குணாதிசயங்கள் வேறு படுவதை கவனிக்க தவறவில்லை… அது அவர்களுக்குள் இருக்கும் புரிதலை அழகாய் காட்டியது அவருக்கு…
“நேத்து கண்ணால வேலைல ஒழுங்கா பேச முடியல… எப்படி தாயி இருக்க…?” என காயத்ரி கனியிடம் கேட்கவும், முதலில்
“ஆங்ங்ங்… என்ன ஆத்தா…?” என விழித்தவளுக்கு விக்கியை பற்றி அறியமுடியவில்லை என்னும் எண்ணம் மட்டுமே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது…
அதன் விளைவு காயத்ரி பேசியது அவளது செவிகளில் விழாமல் போக, அவரை பார்த்து முழித்தப்படி அமர்ந்திருந்தாள், அதை கவியழகன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்…
குழலியோ கணவனை கவனிக்கவே சரியாக இருந்ததால் தோழியிடம் உண்டாகிய மாற்றத்தை கவனிக்க தவறிவிட்டாள்…
காயத்ரி தான் கேட்டதை மீண்டும் கேட்க, “நல்லா இருக்கேன் ஆத்தா…” என்ற பதிலோடு நிறுத்திக்கொண்டவளுக்கு ஏனோ அங்கு அதற்கு மேல் அமர முடியவில்லை…
கண்களில் கண்ணீர் வரவா வேண்டாமா என்னும் நிலையில் இருந்தது… அவசரமாக, வைத்த ஒருதோசையை வாயில் அடைத்து அழுகையை முழுங்கியவள் கையை கழுவ எந்திரிக்க,
“ஏய்ய்…ஏம் புள்ள அதுக்குள்ள எழுந்துபுட்ட… இன்னும் ஒரு தோச சாப்புடு டி…” என்று குழலி சொல்லவும்,
“இல்ல குழலி… பஸ்ஸுக்கு நேரமாச்சு நாங் கிளம்புத்தேன்… ” என்று கிளம்ப நிற்கையில் கவி,
“ம்மா… சொல்ல மறந்துட்டேன்… விக்கி ஊர்ல இருந்து ஃபோன் பண்ணியிருந்தான்…” என்று சாப்பிட்டுக்கொண்டே சொல்ல, கனியின் செயல்கள் தடையாகி சிலையாகி போனாள்….
முகத்தில் அத்தனை அதிர்ச்சி, ‘கிளம்பிட்டாகளா… ஒத்த வார்த்த கூட சொல்லாம கிளம்பிட்டாகளா…? என்ன நடந்திருந்தாலும் சொல்லிட்டு போகணும்னுட்டு கூட தோணலையா அவீகளுக்கு…’ முதலில் அதிர்ச்சியை காட்டிய அவளது முகம் போக போக வேதனையை தாங்கிக் கொண்டது…
அவளது முக பாவனைகள் அத்தனையும் கவியழகன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்… கனியின் எண்ணத்தில் என்ன இருக்கிறது என்று அறியவே அவ்வாறு அவன் பேசியதற்கு காரணம்…
“என்னப்பா சொன்னான்… பத்திரமா வூடு போய் சேர்ந்துச்சா தம்பி…?” என காயத்ரி கேட்கவும்,
“ஆமா மா… வீட்டுக்கு போய் சேர்ந்துட்டானாம் அப்புறம் உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன்னு சொல்ல சொன்னான்….” என்றபடி சாப்பிட்டுவிட்டு எழுந்தவன் ,
கனியின் முகத்தில் தோன்றிய வேதனை வலியை பார்த்தவன், ‘ரெண்டும் புரிஞ்சுக்காமா இப்படி வதைச்சுக்குதுங்க… லூசுங்க… நாம பேசி புரிய வைக்குறத விட, அவங்களா புரிஞ்சுகிட்டும்… அதுதான் சரியும் கூட…’என்று முடிவடுத்தவன், கையை சுத்தம் செய்துவிட்டு வர, காயத்ரியுடன் குழலியும் மேசையை ஒழுங்கு படுத்துவதை கண்டவன் முகத்தில் சிறு புன்னகை கிறல் உண்டானது அவனையும் அறியாது…
அவர்களின் அருகில் வந்தவன், “சைந்து… ” என்றழைக்க,
சாப்பிட்டு முடித்து தன் காலேஜ் பையை சரிப்பார்த்துக்கொண்டிருந்தவள், “சொல்லுண்ணே…” என நிமிர்ந்து பார்க்க,
“கிளம்பிட்டியா…?”
“ம்ம்… கிளம்பிட்டேன்… ஏன்ண்ணே… ?” என கேள்வியாக பார்க்க,
“நான் ஒரு வேலையா வெளிய தான் போறேன்… நீயும் கனியும் வாங்க உங்க காலேஜ்ல நானே டிராப் பண்ணிறேன்…” என்றவனுக்கு கனி இந்நிலையில் தனியாக அனுப்புவதில் உடன்பாடில்லை..
அதனாலேயே தானே முன்வந்து காலேஜில் வடுவதாக சொல்ல, “சூப்பர் அண்ணே… நான் ரெடி…” என்றவள் கனியின் புறம் திரும்பி,
“வா புள்ள…இனி எப்பவும் போல நாம ஒன்னாவே போவோம்…  யாரும் எதுவும் சொல்ல மாட்டாக… ” என்று குஷியில் படபடவென பேசிவிட, பின் தான் பேசியதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டவள் மெல்ல திரும்பி, அண்ணனையும் தாயயும் கண்டாள்…
இத்தனை நேரம் விக்கியின் நினைவில் முகம் கசங்க இருந்த கனி கூட அவளது பேச்சில் விழிப்பிதுங்கி அனைவரையும் பார்த்து வைத்தாள்…
கவி சைந்தவி பேசியதை புருவம் சுருங்க பார்த்தவன், கனியின் முகத்தில் கூட இப்பொழுது தெரிந்த பதற்றம் அவனை யோசனை யாக்க, சட்டென திரும்பி குழலியை பார்க்க அவளோ பேய் முழி முழித்தவள், சில நொடிகளில் ஒன்று தெரியாதது போல் வேறு எங்கோ பார்வையை திருப்ப, அவளது கண்ணில் பட்டார் காயத்ரி…
வாய் பிளந்து அதிசயத்து பார்த்தவரை கண்டு மூவரும் அசடு வழிந்தனர் கொடூரமாக… அதில் சுயம் வந்த காயத்ரி, “மூணும் கூட்டு களவாணிகளா…?” என்று கேட்க, மூவருமே திருட்டு முழியுடன் நின்றிருந்தனர்…
“எம்புட்டு நாளா நடக்குது இந்த கூத்து…?” என கேட்க,
மூவரும் ஒன்று போல், “பன்னிரண்டு வருஷம்….”என்க, காயத்ரி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்…
அதை பார்த்து ஏனோ கவிக்கு லேசாக சிரிப்பு வந்துவிட்டது… பின்னே இதுவரை குழலி, கனி தான் ஒரு கூட்டு என எண்ணியிருக்க சொந்த வீட்டில் இத்தனை வருடங்கள் அன்னைக்கே தெரியாமல் ஒருத்தி அனைவரையும் ஏமாற்றி நட்பு பாராட்டி வந்துள்ளாள் என்றால் மூவரும் எத்தனை விவரமாக இருந்திருப்பார்கள் என்று தான் எண்ணத் தோணியது…
இதில் பெரிதும் சிக்கியது என்னவோ சைந்தவிதான்… எப்பொழுதும் அன்னையுடன் அவரது கட்டுப்பாட்டில் இருப்பவளுக்கு இது எவ்வாறு சாத்தியம் என்று தோன்ற, கவி அதை கேட்டே விட்டான் …
அதற்கு  சைந்தவி, “ஸ்கூல்ல ஒன்னாத்தேன்  சுத்துவோம்… ஸ்கூல் முடிஞ்சதும் சாமி அண்ணே தோப்புக்கு போயிரும்… அங்க வெளாண்டுட்டுத்தேன் வூட்டுக்கே போவோம்… அங்க ஆரும் அதிகம் வரமாட்டாக… காலேஜ் சேர்ந்த பின்னாடி டவுன்ல பார்த்துப்போம்…” மெல்லிய குரலில் வாக்குமூலம் தர, என்ன சொல்வது என்றே தெரியவில்லை அங்கிருந்த காயத்ரிக்கும் கவியழகனுக்கும்….
யாருக்கும் தெரியாமல் திருட்டு தனமாக சந்தித்து தங்கள் நட்பை இதுவரை தொடர்ந்துள்ளனர் என்பதே பெரிய வியப்பை அளித்தது… காயத்ரி,
“அதைய ஏம்டி எங்கிட்ட கூட சொல்லாம மறச்சவ…?” என்று கேட்க சைந்தவி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்… எப்பொழுதும் அன்னையிடம் எதையும் மறைத்து பழகாதவள் இந்த ஒரு விஷயத்தை தவிர…
அது ஏன்னென்ற காரணம் அவளுக்கே தெரியவில்லை என்பதே உண்மை… அவள் முழிப்பதை பார்த்த குழலி,
“இப்ப என்ன குத்தம் பண்ணிப்புட்டோம்னு இப்படி விசாரனைய போட்டு இருக்கியவ…?” என காயத்ரி கவியை பார்த்து கேட்டவள், பின் காயத்ரி புறம் திரும்பி
“எப்படி சொல்லவா… சிறுசுல எங்களைய பத்தி பேசுனாலே அவ அப்பாருக்கு அப்படி ஒரு கோவம் வருது… பொறவு எங்குட்டு சொல்லுறது….? அத்தேன் ஆருகிட்டையும் சொல்ல வேண்டாம்னுட்டு பேசி முடிவெடுத்தோம்…” என்று தலையை சிலுப்பினாள் தோரணையாக…
தன் நெற்றியில் அரைந்துக் கொண்டவன், “பெரிய உலக உள்நாட்டு துறை முடிவு… பேசி முடிவெடுத்தாங்களாம்…” என்றவன்,
“ஒழுங்கா நாளைல இருந்து காலேஜ் போற வழிய பாரு… அப்படியே டைனிங் டேபிள் தொடைச்சு ஏமாத்திரலாம்னு நினைக்காத…” என்றவனை பார்த்து குழலி முறைத்துக் கொண்டிருக்க…. காயத்ரியின் புறம் திரும்பியவன்,
“ம்மா… மூன்னும் ஒரு ஒரு டைப் கேடிங்க… இனி எதுக்கும் இதுங்கள நம்பாதீங்க…” என்று அறிவுரை வழங்கியவனை பார்த்து ஆவேசம் கொண்ட குழலி,
“மாமியாரே… சொல்லி வைங்க உங்க அரும மவன் கிட்ட… நாங் இன்னைக்கே காலேஜுக்கு போயிருப்பேன்… ஆனா அப்படி போன உங்மவனத்தேன் அம்புட்டு பேரும் தப்பா பேசுவாக… கண்ணாலம் ஆன மறுநாளே அனுப்புதானே ஒருவேல கொடும படுத்துதானோன்னு… அத்தேன் உங்க மவன் மருவாதைய காப்பாத்த காலேஜு போல… பொறவு… நாங்க ஒன்னும் கொலகுத்தமோ தப்புதண்டாவோ பண்ணல… அதுக்கு எங்களைய கேடின்னு சொல்லுற வேலயெல்லாம் வச்சுக்க வேண்டாம்னுட்டு சொல்லி வைங்க பொறவு நாங் என்னத்த பண்ணுவேன்னுட்டு தெரியாது சொல்லிப்புட்டேன்…” என எச்சரிக்க, தன் நெற்றியில் அரைந்து கொண்ட கவி,
“எங் மருவாதைய இவ காப்பாத்த போராளாம்… கொடும…” என்று முனுமுனுத்தவன், சைந்தவி கனிமொழியின் புறம் திரும்பி,
“கிளம்புங்க டைமாச்சு…” என்க, சைந்தவி விட்டால் போதும் என்று வெளியே ஓடி விட, கனியோ விக்கியின் நினைவில் முடக்கிவிட்ட பொம்மையை போல் காரில் ஏறி அமர்ந்தாள்…
காலம் கடந்து உணரும் காதல் பொருள் இல்லாமல் போய்விடுகிறது… புரிதல் இல்லாமல் ஒரு உறவை ஒட்ட வைக்க நினைத்தால் அது இரு தரப்பிலும் பிரச்சனையை உண்டாகி வலியை கொடுக்கும் அதற்கு அந்த உறவில் இருந்து விலகுவதே இருதரப்பிற்கும் சால சிறந்தது… இல்லாமல் கட்டாயப்படுத்தி காதலிக்க செய்வதோ அல்லது திருமண பந்தத்தில் இணைத்தாலோ அது வலி வேதனையை மட்டுமே வழங்கும்…
இங்கு விக்கி கனகயின் விஷயத்திலும் அதுவே நடந்தது புரிதல் இன்றி மன்னவன் பிரிந்து செல்ல, தன்னவனின் காதலை காலம் கடந்து உணர்ந்தாள் பெண்ணவள்… அவரவர் இதுதான் விதி என்றும் அதை ஏற்க முடிவும் செய்துவிட, மனதில் புதைந்த நினைவுகளை மறக்க தொடங்கினர்…
விக்கிக்கு இவள் எப்படி இப்படி பேசலாம் என்னும் எண்ணம்… கனிக்கோ அவன் செய்ததும் தவறு, தான் பேசியதும் தவறு, ஆனால் அதை என்னவென்று உணர கூட நேரம் அளிக்காது தன்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லாது சென்று விட்டது அவனது மிக பெரிய தவறே என்று எண்ணம் கொண்டாள்…
இனி அவனை நினைக்க ஒன்றும் இல்லை, பாதியில் வந்தவன் பாதியில் சென்றுவிட்டான்… இதற்காக இனி வருத்தப்பட்டு தன்னையும் வருத்தி மற்றவருக்கு சந்தேகம் வந்து அவர்களையும் வருத்துவதில் எவ்வித பொருளுமில்லை என்று எண்ணியவள் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டு, முகத்தை அழுத்தி தொடைத்து தன்னை நிலை செய்துக் கொண்டாள்…
காலேஜ் வந்தவுடன் கவிக்கு ஒரு நன்றியையும் சைந்தவியிடம் ஒரு பாய்(bye)யும் சொல்லிவிட்டு இறங்கி சென்றாள் கல்லூரிக்குள்…
செல்லும் தங்கையை சில நொடிகள் பார்த்தவனுக்கும் புரிந்துதான் இருந்தான், சொல்லாத காதல் எவ்வாறு செல்லாதோ அதே போல் காலம் கடந்து உணரும் காதலுக்கும் மதிப்பில்லை என்பதை… இருந்தும் விக்கியிடம் எத்தனை கேட்டும் என்னவென்று கூறவில்லை… இதுவரை பார்வையில் கூட தன் விருப்பத்தை காட்டாத தங்கையிடமும் எதுவும் கேட்க முடியவில்லை… அவர்கள் வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுத்துள்ளனர்… இதில் அவர்கள் விருப்பமின்றி தான் நுழைவது சரியாக இருக்காது என்று யோசித்தவன், எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று ஒதிங்கி கொண்டான்…
அதன்பின் சைந்தவியை கல்லூரியில் விட்டவன் மில்லிற்கு செல்ல, அவனது கவனம் அனைத்தும் இப்பொழுது வேலையில் ஆழ்ந்தது… ஏற்ற வேண்டிய லோடை அருகில் இருந்து பார்த்தவன் அந்த வேலை முடிந்ததும் மில்லை ஒருமுறை சுற்றி பார்த்த பின்னர் தன் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு இடுப்பின் வலி அத்தனை இருந்தது…
அதில் முகம் கசங்க, ‘ஸ்ஸ்ஸ்… முட்டக்கண்ணி… உன்னைய..’ பல்லை கடித்தவனுக்கு காலை குளிக்க சென்றது நினைவிற்கு வந்தது…
குழலி ஏதேனும் வம்பு செய்ய காத்திருப்பாள் தான்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே குளியலறைக்குள் நுழைத்து கதவை சாற்றியவன், திரும்பி இரெண்டடி எடுத்து வைக்க கால் வழுக்கி பொத்தென்று தரையில் அமர்ந்தான் கைகளை ஊன்றியபடி…
முதலில் என்ன நடத்தது என்று புரியாமல் முழித்தவன் பின் புரிந்ததும் “அடியேய்ய்ய்ய்….. முட்டக்கண்ணிஇஇஇஇ…. “என பல்லை கடித்தான்…அப்பொழுதைக்கு அதைதான் அவனால் செய்ய முடிந்தது…
“தரையோட கலர்ல இருக்கு… ஒருவேல சோப்பு தண்ணியா…?” என்று எண்ணியவன், இடது கையை எடுத்து முகர்ந்து பார்க்க, அது ஷாம்பு வாசனையை கொடுக்க, மீண்டும் பல்லை கடித்தவன்,
“பாவி….  ஷாம்புவ தண்ணீல கரைச்சு தரைல ஊத்தி வச்சுருக்கு லூசு… இவளைய… சே… ஜாக்கிரதையா இருந்திருக்கணும் கவி அவளை பத்தி தெரிஞ்சு இவ்வளவு அசால்ட்டா இருந்தது உன் தப்புதான்… நீயெல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட டா நாயே…” என தன்னைதானே திட்டிக்கொண்டவன் மெல்ல எழுந்து தரையில் இருந்த ஷாம்புவில் முடிந்த மட்டும் தண்ணீர் ஊற்ற அது போவேனா என்னும் தோரணையில் இருக்க கடுப்பாகி போனான்…
“கீழ விழ வச்சதும் இல்லாம வேலையும் செய்ய வச்சுருச்சு லூசு… அடேய் கவி அவளை சும்மா விடாத…” என்று கருவிக் கொண்டவன் முடிந்தமட்டும் சுத்தம் செய்தவன் கண்ணில் பட்டது ஷம்பு பாட்டில்…
அதை எடுத்து பார்த்தவன் பாதி பாட்டிலுக்கு மேல் காளியாகி இருந்ததை கண்டு,
“பயங்கரமா ஹார்டு வௌர்க் பண்ணிருக்க… அந்த லூச பாராட்டியே ஆகணும்….”என பல்லை கடித்தவன், குளிப்பதற்காக ஷவரை திறக்க தண்ணீர் வரவில்லை…
“என்னடா இது வம்பா போச்சு…” என்றபடி கீழே பைப்பை திறக்க அதில் தண்ணீர் வந்தது… கவிக்கு குழுப்பம் வந்தது தான் மிச்சம்…
ஆனால் அதை ஆராயா நேரமில்லை மில்லுக்கு செல்ல வேண்டும் போதாத குறைக்கு இடுப்பு வேறு ஒரு பக்கம் வலியை கொடுக்க, அத்தனையும் பொருத்துக்கொண்டு பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்து விட்டு வெளியேற இருந்தவனுக்கு அந்த ஷவர் ஏதோ உறுத்தலை கொடுக்க அதை குறுகுறுவென பார்த்தபடி அருகில் சென்றான்…
“ஒருவேல இதுவும் அந்த முட்டக்கண்ணி வேலையா இருக்குமோ… “என தாடையை தடவி யோசித்தவன், தண்ணீர் கொட்டும் பகுதியை மட்டும் திருக்கி எடுக்க, அதிர்ந்து விட்டான்…
காரணம் தண்ணீர் வரகூடிய பைப்பின் முடிவில் பைப்பை ஒட்டும் டேப்பை(tape) சிறு பந்து போல் உருட்டி திணிந்து வைத்திருந்தாள்…
“பாவி… எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கா… இவளை நாம லேசா எடைப்போட்டோமோ… ஆமா இவளுக்கு எப்படி இது கிடைச்சுது…” என்று யோசித்தபடி கண்களை அந்த குளியளறையை சுற்றி சுழற்ற, கண்ணில் பட்டது அந்த டேப்…
அப்பொழுது தான் கவிக்கு நினைவே வந்தது சில தினங்களுக்கு முன், பைப் சரியில்லையென அதை சரி செய்ய ஆட்கள் வந்தது… அவர்கள் வேலையை முடித்துவிட்டு இங்கேயே இதை விட்டு சென்றிருக்க வேண்டும்…
“பாவி… பாவி… வெளிய முறைச்சு பார்த்துட்டு உள்ள வந்து யோசிச்சு பண்ணி இருக்கா… நாமதான் லூசுதனமா இருந்திருக்கோம்… சே…” என்று தலையை கோதியவன்,
“இருடி… உனக்கு வச்சுருக்கேன்… உன்னை திணற வைக்கல… நான் கவியழகன் இல்ல டி…” என கருவியவன் தன் மீசையை முறுக்கிக் கொண்டான் பழிவெறியில்….
பின் டேப்பை வெளியே எடுத்து வீசிவிட்டு பழையபடி அதை பைப்பில் பொருத்திவிட்டு வெளியேறினான் குழலியின் நினைவிலேயே…
இப்பொழுது அறையில் இருந்தவனுக்கு அவளை ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது, இதற்கு மேல் இங்க வேலையும் இல்லை… அதுவும் நேற்று திருமணம் முடிந்திருக்கிறது மறுநாள் மில்லிற்கு வரவும் அனைவரது பார்வையும் தன்மேல் பதிவதை கண்டவன், தர்மசங்கடமாக உணர்ந்தான்…
லோடு ஏத்தி முடிந்ததும் சிறிது நேரம் அறையில் இருந்தவன், குழலியை பார்க்க வேண்டும்  அவளை ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றவும் அதற்கு மேல் பொருக்காமல் எழுந்து வீட்டை நோக்கி சென்றான்…
வழி எங்கிலும் அவனது மணையாளின் நினைவுகள்தான்… அதிலும் அவள் கல்லூரிக்கு செல்லாததை சொன்ன விதம் இப்பொழுது தன்னை மில்லில் அனைவரும் பார்த்த பார்வை என்று எல்லாம் சேர்ந்து அவனது முகத்தில் புன்னகையை உண்டாக்க தலையை கோதி சிரித்துக் கொண்டான்…
வீட்டிற்குள் நுழைந்தவன் தன் சட்டையின் கை பகுதியை மடக்கிக் கொண்டே வர, எதார்த்தமாக விழியுயர்த்தி பார்த்தபடி நடந்தவன், கண்ணீல் பட்டார் காயத்ரி…
முகம் முழுவதும் வேர்த்திருக்க, அங்கும் இங்கும் சுற்றி முற்றி பார்த்தபடி பதற்றத்துடன் சேலை முந்தானையால் முகத்தை துடைத்தபடி மெல்ல அடுக்கலையை விட்டு வெளியேறியவரை கண்கள் இடுக்க பார்த்தவன் அப்பொழுது தான் அன்னையின் கையில் ஏதோ இருப்பதை பார்த்து துணுக்குற்றான்…
தொடரும்….

Advertisement