Advertisement

UD:32
குழலி வெளி வருவதற்குள் அவசரமாக வேலையை முடித்தவன் ஏதும் அறியாததை போல் மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டான் விஷம சிரிப்புடன்…
‘எவ்வளவு பாடுபடுத்துன… நீட்டா இருந்த என் ரூமை கொடுமை பண்ணி வச்சு இருக்க வந்த முதல் நாளே… முட்டக்கண்ணி உன்னைய எப்படி நான் வாழ்க்கை முழுசும் சமாளிக்க போறேன்னு தெரியல…’ என்று அதை எண்ணி பார்த்தவனுக்கு இப்பொழுதே கண்ணை இருட்ட ஆரம்பித்திருந்தது…
தன் தலையை கோதியபடி, பின்னால் சாய்ந்து அமர்ந்தவன் விழிமூடி தன்னவளின் சிந்தனையில் இருக்க, வெளியே முகத்தை துடைத்தபடி வந்தாள் குழலி…
அவள் வரும் அரவம் கேட்கவும் அவசரமாக விழி திறந்தவன், படுக்கையில் ஒருகழித்து படுத்துக் கொண்டான் சிறு இதழ் புன்னகையுடன்…
வந்தவள் படுக்கையில் இருந்த கவியை கண்டு, “அதுங்குள்ள ஒறங்கிட்டாகளா… சரியான கும்பகர்ணனா இருப்பாக போல… ” என முனுமுனுத்தபடி முகத்தை துடைத்துவிட்டு படுக்கையை நோக்கி காலை எடுத்து வைக்க, அறையை ஒருமுறை பார்த்தவள்,
‘சே… கோட்டியாட்டம் பண்ணியிருக்க புள்ள… அறைய சுத்தம் பண்ணுவோமா…’என்று தாடையில் கைவைத்து யோசித்தவள்,
‘ம்ம்ம்… வெல்லன்ன எழுந்து பண்ணிக்கலாம் புள்ள… மொத நல்லா தூங்கணும்… உடம்பு அம்புட்டு நோவுது… என்னத்துக்கு நம்ம உடம்ப நாமளே கெடுத்துக்கிட்டு… பேசாம போய் படு புள்ள…’ என மூளை அறிவுருத்தவும், அதன் சொல்படி கேட்டவள் விளக்கை அனைத்துவிட்டு கவிக்கு எதிர்புறமாக படுக்கையில் விழுந்தாள் உடல் அசதியில்…
படுத்து சில மணி துளிகள் தூக்கம் வராமல் கொட்ட கொட்ட விழித்திருந்தாள்  மனதில் கவியை எண்ணியபடி… அவனும் நாளை அவளது எதிர்வினை எவ்வாறு இருக்கும் என எண்ணியபடி படுத்திருக்க, தூக்கம் மெல்ல அவனது அதன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது…
சற்று நேரம் தூக்கம் வராமல் புரண்டவளும் கண் அயர்ந்துவிட, நாளைய பொழுது என்னவென்று யோசிக்காது இருவரும் நித்திரைக்கு சென்றிருந்தனர்…
காலை விழி தட்டி எழுந்தவளுக்கு சற்று நேரம்பிடித்தது என்னவென்று உணர, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வரவும், வேகமாக திரும்பி பார்த்தாள்…
தன்பக்கம் திரும்பி படுத்திருந்த கணவனை கண்டு மென்மையாக இதழ் பூத்தவள், அவன் புறம் திரும்பி படுத்துக் கொண்டு சில பல நிமிடங்கள் அவனை ரசித்துவிட்டு எழுந்தவள், மணியை பார்க்க அது ஏழு என காட்டியது…
‘ஆத்தி இம்புட்டு நேரமாவா தூங்குனேன்… சே… இன்னேரத்துக்கு ஆத்தா இருந்திருந்தா தோலை உரிச்சு இருக்கும்… இனி எப்ப தயாராகி அறைய சுத்தம் பண்ணி கீழ போறது… கூறுக்கெட்டவளே இப்படியா தூங்குவ…?’என்று தன்னைதானே திட்டியபடி தான் படுத்திருந்த பக்கம் படுக்கையை சரி செய்துவிட்டு நிமிர்ந்தவள், கணவனை கண்டு ஒரு பறக்கும் முத்தத்தை பதித்துவிட்டு குளிக்க தயாராகினாள்…
கருங்கூந்தலை அள்ளியெடுத்து கொண்டையிட்டவள், குளிக்க செல்வதற்காக தன் பையை தேட அது அவளது கண்ணில் படாமல் போக்கு காட்டியது…
‘அட இங்குட்டுத்தேனே நேத்து ராத்திரி கண்டோம்… எங்குட்டு போயிருக்கும்… நீ அதுல இருந்து துணிக்கூட எடுத்தியே புள்ள… இப்ப எங்குட்டு போயிருக்கும்…’ என்று யோசித்தபடி கண்களை அறையை சுற்றி அலையவிட்டவளுக்கு  எங்கும் அதை காணவில்லை…
அப்பொழுது படுக்கையில் இருந்த கவியழகன் மீது அவளது பார்வை விழவும்,’ ஒருவேல இது அவீக வேலையா இருக்குமோ… ?’ என்று சந்தேகம் வரவும், முகம் மாறிவிட்டது குழலிக்கு…
வேகமாக அவன் அருகில் சென்றவள், அவனை போட்டு உழுக்க, கவி “ம்ப்ச்ச்…” என அலுப்புடன் இவள்புறம் திரும்பி படுத்தான்…
குழலி, “எந்திரீங்க… ம்பச்ச்…ஒரு நிமிஷம் எந்திரீங்க… எந்திரீங்கனு சொல்லுத்தேன்ல…” என்று உலுக்கியவளுக்கு அவன் எழும் அறிகுறி இல்லாததால் ஓங்கி ஒரு அடி அவன் தோள்பட்டையில் வைக்க,
அலறி விட்டான் கவி, “ஆஆஆ… கொலகாரி… ஏன் டி இப்படி பண்ணுற… மனஷன நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்கிற…” என்று கண்களை கசக்கிக் கொண்டே கேட்க, இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைத்துப்பார்த்தவள்
“என்ற பை எங்குட்டு போச்சு…?” என விரைப்பாக கேட்க,
“எந்த பை…?” என வினவியவனுக்கு சுத்தமாக முன்தினம் தாம் செய்தது நினைவிலேயே இல்லை…
“எங் பை…” என மீண்டும் கேட்கையில் குரலை உயர்த்தியிருக்க,
“அடிங்கு… அடிச்சேன்னு வை… மனுஷன காலங்காத்தால கடுப்பேத்துர… போயிரு பேசாம…” என தூக்கத்தை கலைத்ததிற்காக கோபமும் ஏரிச்சலுமாக பேசிவிட்டு, படுக்கையில் குப்புற படுத்துக் கொண்டான் கவி…
அவனது செயலில் உதட்டை பிதுக்கி யோசித்தவள், ‘இவீக பேசுறத பார்த்தா இவிக ஏதும் பண்ணல போல… பொறவு பை எங்குட்டு போயிருக்கும்…’என மீண்டும் நேற்றைய தன் நிகழ்வை நினைவு கூர்ந்தாள்….
‘பைய இங்குட்டு தானே வச்சோம்… பொறவு எப்படிவே காணமா போச்சு….’என புலம்பியவள் பை இருந்த மேசையை முழுவதுமாக புரட்டி போட்டவள், படுக்கையின் கீழ், பீரோ என அனைத்தையும் தலைகீழாக புரட்டி தேடி பார்த்தவளுக்கு விடையாக எதுவும் கிட்டவில்லை…
குழலி கேட்டதும் முதலில் தூக்க கலக்கத்தில் புரியாது இருந்தவனுக்கு பின் நொடியில் புரிந்தாலும் அவளிடம் வேண்டுமென்றே கோபமாக பேசுவது போல் பாவனை காட்டிவிட்டு படுத்தவன் அவள் அறியா வண்ணம் சிரித்துக்கொண்டான்…
அவள் அந்த அறையை போட்டு உருட்டுவது கேட்டாலும் கவி அசைவதாகவே தெரியவில்லை… ‘எத்தனை முறை மண்டைய காய விட்டு இருப்ப… அனுபவி டி முட்டக்கண்ணி…’ என்றென்னியவன் அசையாது படுத்திருந்தான் உள்ளுக்குள் சிரித்தபடி…
‘அய்யோ… எங் பைய காணமே… அதுவா எப்படி புள்ள காணாம போகும்… தூக்கத்துல எங்குட்டாச்சும் போட்டுடியா நல்லா யோசன பண்ணு புள்ள… இவீக கத்துனத பார்த்தா அவீகளும் ஒன்னும் பண்ணாப்புல தெரியல…’ என தேடி கலைத்துப் போனவள் தரையில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டாள்…
‘இப்ப துணியில்லாம குளிக்க முடியாதே… குளிக்காம கீழ போகவும் முடியாதே புள்ள…’என எண்ணியவளுக்கு அவளது முதல் நாள் இப்படியா அமைய வேண்டும் என்ற கவலை தோன்றி முகம் கசங்க செய்தது…
‘என்ன சத்தத்தையே காணம்… அமைதியா இருக்கு… பேக்(bag) எங்கன்னு கண்டுப்புடிச்சு இருப்பாளோ… வாய்ப்பில்லையே… ‘என எண்ணியவன் மெல்ல தலையை தூக்கி பார்க்கும் சமயம்…
அவர்களது அறைகதவு தட்டும் சத்தம் கேட்டது பலமாக… தலையை தூக்க இருந்தவன் சத்தம் கேட்கவும் மீண்டும் தலையை தலையணைக்குள் புதைக்கொண்டான்…
‘யாரா இருக்கும்… அய்யோ இன்னும் அழுக்குமூட்டையா நிக்குதோமே சே…’ என புலம்பியவள் திரும்பி படுக்கையை பார்க்க அவனோ, சுகமாக குப்புற படுத்து உறங்குவது தெரிந்தது…
‘ஒருத்தி இங்குட்டு பைய காணமேன்னுட்டு தேடிகிட்டு கெடக்கேன்… எதாச்சும் இருக்கா இந்த மனுசனுக்கு சே… எம்புட்டு சொகமா தூங்குறாக… கதவ தட்டுறாகலே போய் தெரப்போம்னுட்டு இருக்கா அதுவும் இல்ல… எனக்குன்னுட்டு வந்து வாச்சு இருக்கு பாரு…’ என எண்ணி ஆவேசமாக மூச்சுவிட்டவள் இரண்டாவது முறையாக கதவு தட்டும் சத்தம் கேட்கவும் உதட்டை பிதுக்கியபடி எழுந்து சென்று கதவை திறந்தாள்…
வெளியே கையில் காப்பி தட்டுடன் நின்றிருந்த காயத்ரியை மேலிருந்து கீழே ஒருமுறை பார்வையை படரவிட்டு மீண்டும் அறைக்குள் செல்ல எத்தனிக்கையில்…
“அடியேய் திமிரு பிடிச்சவளே… நீ பாட்டுக்கு போகுறவ… இதைய வாங்கிட்டு போடி…” என கையில் இருந்ததை நீட்ட, அதை ஒருமுறை உற்று பார்த்தவள்
“எமக்கு பல்லு வெளக்குமுன்ன டீ குடிச்சு பழக்கம் இல்ல மாமியாரே…” என்றுவிட்டு உள்ளே செல்ல பார்க்க, காயத்ரி
“திமிரெடுத்தவளே… நீ மட்டுந்த்தேன் இங்குட்டு இருக்கறவளா….? என்ற மவனுக்கு கொண்டுபோய் குடுடி…”
“ம்ம்ம்…” என்று ஒருவித பார்வையோடு இழுத்தவள், அறையினுள் படுக்கையில் சுகமான உறக்கத்தில் இருப்பவனை ஒருதரம் பார்த்துவிட்டு காயத்ரியிடம்,
“கும்பகர்ணனுக்கு மொந்தைய சென்மத்துல தம்பியா பொறந்திருப்பாராட்டுக்கு… இப்பவும் அதைய போலவே பெத்து வச்சு இருக்கீங்க…” என ஏற்ற இறக்கத்துடன் கேலி செய்ய,
“அடியேய் சிறுக்கி… என்ற மவன பழிக்குற வேலைய வச்சுக்காத… பிச்சுப்புடுவேன் பிச்சு… ஒழுங்கு மருவாதையா இதைய கொண்டு போய் கொடு…” என மீண்டும் டிரேயை நீட்ட, இப்பொழுது குழலி
“பெரிய மவந்த்தேன்  ஊர் ஒலகத்துல இல்லாத மவன்… அம்புட்டு பாசமிருந்தா நீங்களே கொண்டாந்து குடுங்க…” என்று விட்டு அவள் உள்ளே சென்றுவிட காயத்ரிக்கு தான் தர்ம சங்கடமாகி போனது…
‘என்ன இவ இப்படி பேசுதா…. கொஞ்சகூட கூறே இல்ல…’என எண்ணியவர் முன்தினம் இரவு காதலோடு கவி குழலியை தூக்கி செல்லவதும் பதிலுக்கு வெட்கத்தை முகத்தில் ஏந்தி அவனது கழுத்தை பிடித்திருந்தவளை நினைத்து பார்த்தவர் குழம்பி போனார்…
முருகவேல் அறைக்கு போனதும் காயத்ரியும் கடவுளிடம் வேண்டிவிட்டு அறைக்கு சென்றவருக்கு மகன் மாடிக்கு சென்றது நினைவிற்கு வந்து மனம் உறுத்தியது…
சில நிமிடங்கள் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக எழுந்து வெளியே வரும் சமயம், அவர் கண்டது குழலி கவியின் கைகளில் நாணத்தோடு தவிழ்ந்தபடி அறைக்குள் நுழையவது தான்…
அந்த காட்சியை கண்டவர் , மகனது வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என எண்ணி மகிழ்ந்தவருக்கு இப்பொழுது குழலியின் பேச்சு தோரணை சரியாக படவில்லை…
தன் நினைவின் யோசனையில் இருந்தவர் அப்பொழுது தான் அறைகதவு ஒருபக்கமாக திறந்திருக்க அதன் இடைவெளியில் அறைக்குள் தரையில் கிடந்த துணிகளை கண்டு திகைத்து பாதியாக திறந்திருந்த கதவை மேலும் திறந்து அறையை பார்த்தவர் அதிர்ந்து போனார்….
அதே அதிர்வோடு அறைக்குள் நுழைந்தவர், தரையெங்கிலும் சிதறி கிடந்த துணி, சீப்பு, பைகள், இதர சாதணங்களை பார்த்து நெஞ்சில் கைவைத்து, “ஆத்தி……” என அதிர்ந்து முனுமுனுத்தவர், அப்பொழுது தான் குழலியை கண்டார்…
அவளோ மீண்டும் ஒருமுறை தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்திருந்தாள்…அவளது இப்பொழுதைய ஒரே குறிக்கோள் அந்த பையை கண்டெடுப்பது என்றானது… அவளை பார்த்ததும் சந்தேகமாக, “ஏய்ய்ய்… என்னதுடி இது அம்புட்டும்… ?” என்று கேட்க,
தேடுவதை நிறுத்திவிட்டு, “பார்த்தா தெரியலையா மாமியாரே…?” என்று கடுப்புடன் பதில் கேள்வி கேட்க,
காயத்ரி, “அடிங்கு… கூறுக்கெட்டவளே… என்னதுக்கு டி அறைய இந்தபாடு படுத்தியிருக்குறவ…?” என்று கேள்வி கேட்கும் போது படுக்கையில் இருந்து எழுந்த கவி கால் நீட்டி சாய்ந்து அமர்ந்ததோடு குழலியை ஒருபார்வை பார்த்துவிட்டு உடலை நெழித்து முறுக்கெடுத்தான்…
“ம்ம்ம்… எதைய கேட்குதீக… ?” என்றபடி அவளது பார்வை பைக்காக அலைய, காய்த்ரி
“எதையவா…? அடியேய்… துணி அம்புட்டையும் இப்படி பண்ணி வச்சிருக்கவ… பொருள் அம்புட்டையும் கலைச்சுவுட்டு இருக்க…. என்னடி கோலம் இது அம்புட்டும்…?” என்று கேட்டவருக்கு மனம் பொருக்கவில்லை…”ம்ம்ம்… உங்க மவந்த்தேன் காரணம்… அவரைய அடிக்க போய்த்தேன் இப்படி ஆச்சு… பொறவு சாதனம் கலைய காரணம்….” காயத்ரிக்கு பதிலளித்தபடி தன் பையை தேடிக்கொண்டு இருந்தவள் கடைசி, நிமிர்ந்து அவரை பார்த்து உதட்டை பிதுக்கி
“எங் பைய காணம்… அற முழுக்க தேடிட்டேன்… பைய காணல… “என கூறியவளை பார்த்தவருக்கு முதலில் அவள் சொன்னதை கேட்டு கோபம் இருந்தாலும் கடைசியில் மனம் உருகிவிட்டது…
ஏனோ இப்பொழுது அவளது சிறுவயது தோற்றம், கவியை பற்றி புகார் கூற, சாப்பிட ஏதாவது வேண்டும் என்றாலோ, ஏதாவது அவரிடம் வேலையாக வேண்டுமென்றாலோ இப்படித்தான் வந்து நிற்பாள் காயத்ரியிடம்…
அது இப்பொழுது நினைவிற்கு வரவும், குரல் தனிந்து “செரி உடு… கீழ உன்ற பை மத்ததைய இங்குட்டு எடுத்தார சொல்லுத்தேன்… இப்ப போய் குளி…” என்று தீர்வு சொன்னார் எளிதாக…
அத்தியாவசிய தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு பையை மட்டும் அப்பொழுதைக்கு மகன் அறையில் வைத்தவர் அவளது மற்ற சாதனங்களை கீழே சைந்தவி அறையில் தான் வைத்திருந்தார்…
ஆனால் பூங்குழலியோ, “இல்ல எனக்கு அத்தேன் வேண்ணும் இப்ப…”என முகத்தை சுருக்கி காலை தரையில் உதைத்து சிணுங்க,
காயத்ரிக்கும், கவிக்கும் மிட்டாய்க்காக அடம்பிடிக்கும் குழந்தையை போல் தான் கண்ணுக்கு தெரிந்தாள்… கவியோ அனைத்தையும் கவனித்தபடி மெல்ல எம்பி, மேசை மீது வைத்திருந்த காபியை எடுத்து பருக தொடங்கினான்…
தனக்கும் இதுக்கும் இவ்வித சம்பந்தமும் இல்லை என்னும் தோரணையில்…. அதை பார்த்து முடிந்த மட்டும் முறைத்தவள் மீண்டும் கண்களை பைக்காக அலையவிட…
காயத்ரி, மகனையும் மருமகளையும் பார்த்து ‘ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு செரியாத்தேன் இருக்கு… ம்ம்ம்…’என்று எண்ணியபடி பெருமூச்சைவிட்டார்…
“உமக்கு என்ன இப்ப அப்படியொரு அடம்… அத்தேன் சொல்லுதோம்ல மத்த பைய அனுப்பி விடுதோம்ன்னு… தொலஞ்ச பைய பொறவு தேடிக்கலாம்… இப்ப போ…”
 
“இல்ல அதுலத்தேன் மஞ்சல வச்சுருந்தேன்… நா…நாங் மஞ்ச பூசாம குளிக்க மாட்டேன்… ஆத்தா சொல்லிருக்கு…”என்று உள்ளே சென்ற குரலில் சொல்லவும், ஒருமுறை கவியின் பார்வை மையல்லாக மாறி, அவளை தலைமுதல் கால்வரை அளந்துவிட்டு டக்கென்று பார்வையை காபியின் மீது திருப்பிக் கொண்டான் அன்னை அருகில் இருப்பதால்…
காயத்ரிக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை… மகனை அருகில் வைத்துக்கொண்டு எதுவும் பேசவும் முடியவில்லை அவரால்…
“கடவுளே… “என தலையில் கை வைத்தவர், “செரி எங்குட்டு வச்ச கடைசியா…?” என கேட்க,
“அ…. அது…. இங்குட்டு மேச மேலத்தேன் வச்சேன்ன்ன்….”என இழுத்து பேசியவளின் பார்வை இப்பொழுது கோபமாக கவியழகனை அலசிக் கொண்டிருந்தது…
ஏனென்றால், அன்னை அவளிடம் கேள்வியை கேட்கும் போது, காப்பி கப்பை மேசை மீது வைக்கும் போது அவன் இதழில் தோன்றிய ஒருநொடி புன்னகையும் தன் ஃபோனை எடுக்கும் பொழுது வினாடிக்கும் குறைவாக அவனது பார்வை தொட்டு சென்ற இடத்தையும் மின்னல் வேகத்தில் கண்டுக் கொண்டாள் குழலி…
அதில் விஷயம் புரிபட, பல்லை கடித்தவள் காயத்ரி பார்வையால் அறையை ஆராய்ந்துக் கொண்டிருப்பதை கண்டு,
“உங்களைய புள்ளைய பெத்து போட சொன்னா… தொல்லைய பெத்து விட்டு இருக்கீக… சிறுசுளையும் தொல்ல இப்பவும் தொல்ல…சே…”என பொறிந்தவள், ஆவேசமாக அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டு, அதில் ஏறி பரன் மேலிருந்த தன் பையை எடுத்து கீழே வைத்தாள் பொத்தென்று…
பையை தேடிக்கொண்டிருந்தவர் தீடிரென குழலி பேசியதை புரிந்துக்கொள்ள முடியாமல் அவளையும் அமைதியாக ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த தன் மகனையும் மாறி மாறி பார்த்து வைத்தார்…
அப்பொழுது எதிர்ச்சையாக, அவரது விழியில் பட்டது மகனது கள்ளசிரிப்பு… பின் பரனிலிருந்து பையை எடுத்த குழலியை கண்டவர், இருவருக்குள்ளும் இருக்கும் ஊடலை புரிந்துக்கொண்டவர் மற்றொன்றையும் புரிந்துக் கொண்டார்…
மகனும் லேசுப்பட்டவன் இல்லை என்பதை… நேற்று இவள் அடிப்பதற்காக துணிகளை வாரி இரைத்திருக்கிறாள்… இவன் அவளது பையை ஒளித்து வைத்துள்ளான் ஆகா ஜாடிக்கேத்த மூடி என்று புரிந்துக் கொண்டவர் சிறு புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினார்….
அன்னை சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டவன், அமைதியாக குழலியை பார்வையால் தொடர்ந்தபடி ஃபோனையே நோண்டிக் கொண்டிருந்தான்… குழலியோ அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாது சண்டையிடாது அமைதியாக குளிப்பதற்கான சாதனங்களை அவனை முறைத்துக்கொண்டே எடுத்தவள் குளிக்க செல்லும் போது, கவி
குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைத்தவளே…
நீ மஞ்சல் தேச்சு குளிக்கையில்
என்னை கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்கு மணியா என்னை கொஞ்சம் மாத்து தாயே…
என வரிகளை பாடவிட,
குளியலறை கதவில் கைவைத்தவள் பாடலின் வரியில் அவனை வேகமாக திரும்பி பார்த்து முறைக்க, அதுவரை தன்னவளை பார்வையால் தொடர்ந்தவன் அவள் திரும்பி முறைக்கவும், சட்டென தன் பார்வையை மேல் கூரையில் ஏதோ ஆராய்வது போல் மாற்றிக் கொண்டான்…
அவனை பார்த்து முறைத்தாலும் பெண்ணவள் ஒருவார்த்தை கூட திட்டவும் இல்லை பேசவுமில்லை… அமைதியாக குளியலறைக்குள்ள நுழைந்தவள்,
“எம்புட்டு ஏத்தம் இவீகளுக்கு… நாங் எம்புட்டு நேரம் தேடிக்கிட்டு இருந்தேன்… அப்ப ஒன்னுமே அறியாதவக போல சத்தம் வேற போட்டு என்னைய ஏமாத்திபுட்டாக…” என புலம்பியவள், “சும்மா விட கூடாது புள்ள… காலங்காத்தால உன்னைய ரொம்ப படுத்திட்டாக… பதிலுக்கு ஏதாச்சும் பண்ணியே ஆகணும் புள்ள…” என தீர்மானம் எடுத்த பின்னரே குளிக்க சென்றாள்…
வெளியே கவிக்கு அவளது அமைதி ஏதோ ஒரு நெருடலை அளித்தது… சிறு வயதிலும் சரி, வருடங்கள் கழிந்து பார்க்கையிலும் சரி இவன் ஒன்று என்று கூறினாள் அவள் இரெண்டு என்று கூறித்தான் பழக்கம்…
அப்படி பட்டவள் அமைதியாக சென்றது சுத்தமாக பிடிக்கவில்லை கவிக்கு… விஷயம் தெரிந்தால் ஒரு போர்களமே உண்டாகும் என்று எண்ணியிருத்தவனுக்கு அவளது இந்த சாந்தம் திருப்த்தியின்மையை காட்டியது….
‘ஒரு கிஸ்க்கு இப்படி மாறிட்டாளா…? நேத்து புதுசா வெட்கப்பட்டா இன்னைக்கு அமைதியா இருக்கா…’என எண்ணிக் கொண்டே வந்தவன், ‘அப்ப இனி அடக்க ஒடுக்கமா நடந்துக்க போராளா…? அய்யோ….’ என எண்ணியவன் பதறிவிட்டான்…
‘நம்ம ஆளுக்கு இது செட்டாகாதே…’ என எண்ணியபடி மீண்டும் படுக்கையில் கவிழ்ந்தான்… குளியலறையில் குழலிக்கு கவியை என்ன செய்வது என்ற யோசனை மட்டுமே மண்டைக்குள் சுழன்றது…
குளித்து முடித்து வெளியே செல்லவிருந்தவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற, “எங் ஆச மாம மவன் அத்தானே… உங்களுக்கு நாங் குளிக்கும் போது உங்களைய பூசணுந்த்தேனே ஆச பட்டீக… அதெல்லாம் என்னத்துக்கு அதையவிட ஸ்பெஷலா கவனிக்கேன் உங்களைய…”என்று முனுமுனுத்தபடி தன் வேலையை செவ்வென செய்தவள் அமைதியாக குளியலறையை விட்டு வெளியேறினாள்…
குழலி வரும் அரவம் கேட்கவும் வேகமாக எழுந்து அவளை பார்த்தவன் ஏதாவது பேசுவாளா இல்லை சண்டை பிடிப்பாளா என்று பார்க்க… அவளோ அவனை கண்களால் எறிக்கும் வேலையை மட்டுமே செய்தாள்…
‘புள்ள…. அவீக குளிக்க போவுறதுக்கு மொத நீ அறைய விட்டு வெளிய போயிரு… அத்தேன் உமக்கு நல்லது… ‘ என்று சிந்தித்தபடி அவனை முறைத்துக் கொண்டே, வேகமாக தன் ஈர கூந்தலை தளர்வாக பின்னல்லிட்டு நெற்றியில் ஒற்றை பொட்டை ஒட்டிவிட்டு அவனை திரும்பி பார்த்து முறைத்தவாரே அறையை விட்டு வெளியேறினாள்…
குழலிக்கு அப்பொழுது தான் சீராக மூச்சுவிட முடிந்தது… அவன் கையில் தனியாக சிக்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்…
கவியழகனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை… ஒற்றை முத்தம் ஒருவரின் பிறவி குணங்களை மாற்றி விடுமா என்னும் பெரும் சந்தேகம் அவனுள்…
பொறுமையாக படுக்கையை விட்டு எழுந்தவன் சிதறி கிடக்கும் தன் பொருட்களை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு, ‘எப்படி கொடும பண்ணியிருக்கா… இப்படி பண்ணுறவ எப்படி ஒருநாள் ராத்திரியில திருந்தி இருப்பா…?’என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் தோன்றியது,
‘இவ கண்டிப்பா திருந்துற கேஸ் இல்ல… புயலுக்கு முன் அமைதிங்குற மாதிரி ஏதோ பெருசா பிளான் பண்ணுறான்னு நினைக்குறேன்…’என மனைவியை பற்றி மிக சரியாக யூகித்தவன் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டான்…
அது இனிதான் வம்பை வளர்ப்பாள் என்று எண்ணியருந்தவனுக்கு தெரியவில்லை குளியலறையில் ஏற்கனவே தனக்கான ஆப்பை மனைவி தயார் செய்துவிட்டு தான் வெளியேறியிருக்கிறாள் என்று…
கீழே கிடந்த தன் துணியில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை தானே அயர்ன் (iron) செய்தபடி, என்ன ஆனாலும் குழலியின் வலையில் சிக்கி விட கூடாது என்று யோசனையோடு, உடையை தயார் செய்து விட்டு குளிக்குவென குளியலறைக்குள் நுழைந்தான் கவியழகன்…
கீழே குழலியோ, ‘குளிக்க போயிருப்பாகளா…? சத்தம் வருமா… ?’ என்று தனக்குள் யோசித்தபடி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்… அப்பொழுது வீட்டினுள் தயக்கமாக, கண்களில் ஏக்கத்தோடு கருவிழிகளை அலையவிட்டப்படி நுழைந்தாள் கனிமொழி…
தொடரும்…

Advertisement