Advertisement

UD-3:

 

“அண்ணே….” என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி

 

“ஹாய் சைந்து… எப்படி இருக்க… படிப்பெல்லாம் எப்படி போகுது…?” என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி…

 

“நான் நல்லா இருக்கேன்ணே… நீங்க சுகமா…? இனியாச்சும் என்கூட இருப்பீகளா இல்ல போயிருவீகளா…?” குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது…

 

அண்ணன் என்ற உறவின் பாசத்தை உணர்ந்திராதவள், அதற்கு அதிகம் ஏங்கவும் செய்தாள்… வெறும் அழைப்பேசியில் எப்பொழுதாவது பேசுவதும், பெற்றோருடன் திருச்சி செல்கையிலும் தான் அண்ணனின் பாசத்தை கண்டு உணர்ந்தவள்… இனியாவது அது முழுதாக தனக்கு கிடைக்குமா என்னும் ஆதங்கம் அவளுள்ள…

 

“ஹே… ஏன் ஃபேஸ் டல் ஆயிருச்சு… இனி இங்க தான் இருப்பேன்… உன்கூட தான் இருக்க போறேன்… அதுனால இந்த அழகு முகத்துல கொஞ்சம் சிரிப்பை கொண்டு வா…” என்று அவள் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சி ஆட்ட கண்களில் நீருடன் சிரித்து விட்டாள் சைந்தவி…

 

“ஆஆஆ… இது தான் அழகு….” என்று தலையில் கை வைத்து ஒரு ஆட்டு ஆட்டினான்….

 

“ம்ப்ச்ச்… விடுன்ணே…” என்று சிணுங்கியவள் விக்கியின் புறம் திரும்பி,

 

“என்ன பார்த்து சிரிச்சுட்டே நிக்குதீக… என்னமோ அத வாங்கியாறேன் இது வாங்கியறேன்னு சொன்னீக… எங்க ஒன்னுத்தையும் காணும்… வீசுன கையும் வெறும் கையுமா வந்திருக்குதீக….” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மிரட்டி கேட்க….

 

“அடடா… நான் கூட நம்ம வாயாடி தங்கச்சி திருந்திட்டாளோன்னு நினைச்சேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த சீன பார்த்து… இப்படி ஏமாந்துட்டியே விக்கி… வௌவ்வாலை நேரா உட்கார வைக்க முடியுமா…?” என்று பெருமூச்சை விட்டு இல்லை என்பதை போல் தலையை ஆட்ட,

 

“என்ன சொன்னீக நான் வௌவ்வாலா உங்களுக்கு… உங்களைய….” என்று விக்கியை அடிக்க தொரத்த தொடங்கவும், கவி புன்னகையுடன் குணாவிடம் திரும்பி

 

“தேங்கஸ்டா மாப்ள… வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதுக்கு… ”

 

“என்னலே… இதெல்லாம் பெரிய விஷயமா விடுலே… ஆமா உங் காரு…?” என்று இழுக்க,

 

“அதுல கொஞ்சம் வேலை இருக்கு அதனால அத நான் பார்த்துக்குறேன் மாப்ள…”

 

“அப்ப செரி… நான் கிளம்புதேன்… பொறவு சந்திக்கலாம்… “என்று ஒருமுறை அணைத்து விடைபெற்றான் குணா…

 

பின் தந்தையின் புறம் திரும்பியவன் அவரது கோப பார்வை ஓடிப்பிடித்து விளையாடும் விக்கியின் மீதும் சைந்தவி மீதுவும் படிந்திருப்தை கண்டு, சிறு புன்னகையுடன் அவர் அருகில் வந்தவன், விக்கியை பார்த்தபடியே “விக்கிக்கு அப்பா, உடன்பொறந்தவங்கன்னு யாரும் இல்ல… அம்மா மட்டும் தான்… சொந்தம் இருக்காங்க… ஆனா அவன் தங்கையா நினைச்சு பாசம் அதிகம் வச்சு இருக்குறது சைந்தவி மேல தான்… என்னை விட ஒரு நல்லா அண்ணணா இருக்கனும்னு நினைக்குறான் ப்பா… நினைச்ச மாதிரி நல்ல அண்ணனும் கூட…” என்று கைகளை கட்டிக் கொண்டு பேசியவனை திரும்பி பார்க்க, கவியும் இப்பொழுது தந்தையை பார்த்தபடி நேர்க்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நின்று,

 

“தப்பா நினைக்காதீங்க ப்பா… இதுல கோப பட எதுவுமில்ல… அவங்களோடது சுத்தமான அண்ணன் தங்கை பாசம்… முழுசா நம்புங்க… போதும்….” என்று சொல்லவும் ஏனோ முருகவேலால் அதை மறுக்கவோ எதிர்த்து பேசவோ முடியவில்லை அவனது நிமிர்வில்…

 

மீண்டும் ஒருமுறை மகளையும் விக்கியையும் பார்த்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றார்… அதன் பின் அன்னையை பார்த்தவன் முகத்தில் பெரிதாக புன்னகை படர்ந்தது…

 

கன்னத்தில் கைவைத்து அதிர்ந்து விக்கியை சைந்துவையும் பார்த்திருந்தார் காயத்ரி, அவர் அருகில் வந்து தோளோடு அணைத்தவன், “என்னம்மா… என்னாச்சு…? ஏன் இப்படி பார்க்குறீங்க….?” என்று சிரிப்புடன் கேட்க,

 

“ஏன் ராசா… என்ன இந்த விக்கி பய இப்படி இருக்கான்…?” என்று ஆச்சரியமாக கேட்கவும், விக்கி சைந்து சண்டை ஓரளவுக்கு முடிந்து சமாதானம் ஆகி காய்த்ரியின் அருகில் வரவும் சரியாக இருந்தது…

 

“அய்யோ ம்மா… இவன போய் நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தியா இத்தனை வருஷம்… நீ சொன்ன மாதிரி இவன் கொரங்கு தான் ம்மா… உன்கிட்ட பேசும்போது மட்டும் தான் ஏதோ நல்ல பையன் மாதிரி நடிப்பான்… வேண்ணும்னா சைந்து கிட்ட கேட்டு பாருங்க…”என்று கவி கூற, சைந்தவி

 

“ஆமா ஆத்தா… உன்கிட்ட பேசும்போது கொழஞ்சு கொழஞ்சு பேசிட்டு என்கிட்ட சண்டை பிடிப்பாக… இது தெரியாம இப்படி ஏமாத்துட்டியே ஆத்தா…”என்று கவலையோடு சொல்ல….

 

“அய்யய்யோ ஆண்ட்டி… இவங்க சொல்லுறத நம்பாதீங்க… பொய் சொல்லுறாங்க… நான் ரொம்ப நல்ல பையன்…நம்புங்க” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு பேச, காய்த்ரி அவனை வினோதமாக ஒரு பார்வை மேல் இருந்து கீழ் பார்க்க,

 

‘எதுக்கு இப்ப நம்மளை ஸ்கேன் பண்ணுறாங்க…?’ என்று எண்ணியவன், “என்ன ஆண்ட்டி… ?” என்று கண்சிமிட்டி குழந்தை முகத்துடன் கேட்க,

 

“ம்ம்ம்… ஒண்ணுமில்ல….” என்று இழுத்து கூறிவிட்டு மகள் புறம் திரும்ப போகையில்,

 

“அப்ப நம்புறீங்க தானே ஆண்ட்டி….?” ஆர்வமாக கேட்டவனை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,

 

“நம்பிட்டேன்….” என்று வாயை சுழித்து இழுத்து சொல்லவும், விக்கிக்கு முகம் விழுந்துவிட்டது… அதை பார்த்து அண்ணன் தங்கை இருவரும் சிரிக்கவும்,

 

“என்ன சிரிப்பு…? வீட்டுக்கு முத தடவையா வந்த புள்ளைய எல்லாரும் சேர்ந்து அசிங்க படுத்துறீங்கல்ல… நான் கிளம்புறேன்… ” என்று திரும்ப போக, அவனை தடுத்தான் கவி…

 

“டேய் மச்சான்… என்னடா சட்டுன்னு சீரியஸ் ஆயிட்ட…. சும்மா விளையாட்டுக்கு தானே டா…?” என்று முடிக்கும் முன்,

 

“எது டா விளையாட்டு இல்ல எது விளையாட்டு… பசிக்குதுன்னு சொன்ன பையனா நடத்தியே கூட்டிட்டு வந்து கொடும படுத்துற.. இங்க என்னடான்னா வீட்டுக்கு வந்து புள்ளைக்கு ஒருவாய் தண்ணீ கூட குடுக்காமா குடும்பமே சேர்ந்து கலாய்ச்சுட்டு இருக்கீங்க….” என்று கோபமாக கூறவும் நெற்றியில் அறைந்துக் கொண்டான் கவி….

 

“உன் கெத்து அவ்வளவு தானா நான் கூட என்னவோன்னு நினைச்சேன்…”

 

“அப்படி  சூடு, சொரணை எல்லாம் பார்த்தா பொழைக்க முடியாது மாப்பிள….” என்று தோளை குழுக்கி சொல்லவும் அவனை ஓர் அற்ப பிறவியை போல் பார்த்து வைத்தான் கவி….

 

“சைந்தவி…வெரசா போய் சாப்பாடெல்லாம் எடுத்து வை போத்தா…” என்று மகளிடம் வேலையை ஏவ…

 

“சரி ஆத்தா… அண்ணா ரெண்டு பேரும் வாங்க… சாப்பிடலாம்…” என்ற அழைப்புடன் அடுக்களை நோக்கி நடக்க,

 

“இதோ வந்துட்டேன் தங்கச்சி…. ” என்று விக்கி அவள் பின் வால் பிடித்து சென்றுவிட,

 

“அய்யா ராசா…”

 

“ம்மா… சொல்லுங்க…”

 

“உண்மையாவே இங்கத்தேன் இருக்க போறியா ராசா….?” ஏக்கம் அவர் குரலிலும் கண்களிலும் அப்பட்டமாக தெரிந்தது….

 

“ஏன் ம்மா… இப்படி கேட்குறீங்க…? இத்தன வருஷம் பிரிஞ்சு இருந்தது போதும் ம்மா… எனக்கும் உங்க கையால் சாப்பிட்டு, சைந்து கூட சண்டை போட்டு, அப்பாவோட சுமைய இறக்கி வைக்கணும்னு நினைக்குறேன்… அதுனால இனி இங்க தான் உங்க கூட தான் இருக்க போறேன்…” என்று அன்னையை அணைத்துக் கொண்டான்…

 

“அப்புறம் ஏன் ராசா… பை எதுவும் எடுத்துட்டு வரல…?” என்று கேள்வியாக பார்க்க,

 

“ஓஓஓ… அதான் திரும்ப திரும்ப இப்படி கேட்குறீங்களா…? அது ஒண்ணுமில்ல ம்மா…” என்றவன் நடந்த அனைத்தையும் மறைக்காமல் அன்னையிடம் கூற, அவருக்கு தெரிந்து விட்டது அது யார் செய்த வேலையென்று…

 

ஆனால் அதை மகனிடம் சொல்ல வேண்டாம் என்று எண்ணி, “செரி விடு ராசா… நான் முனியன் கிட்ட சொல்லி காரை செரி செஞ்சு எடுத்தார சொல்லுதேன்… நீ போய் சாப்பிடு… அதுக்குள்ள உங்க பை வந்துரும்…” என்று மகன் தலையை கோத,

 

அவருக்கு வாகாக தலையை கொடுத்தவன், “ம்மா…. ”

 

“சொல்லு ராசா…”

 

“உங்களுக்கு அது யாருன்னு தெரியுமா… இந்த ஊர்ன்னு தான் நினைக்கிறேன்…”என்று கேட்க, மகனது தலையை கோதுவதை நிறுத்திவிட்டு, அவனை பார்த்து

 

“அதெல்லாம் எதுக்கு ராசா… இப்பதேன் ஊருக்கு வந்திருக்க… வந்ததும் வராததும்மா பிரச்சன வேண்ணாம் ராசா… எனக்கும் சரியா தெர்ல  யாரு செஞ்ச வேலைன்னுட்டு… எதையும் மனசுல போட்டு யோசன பண்ணாம போய் சாப்பிடு ராசா… நான் முனியனுக்கு சொல்லிட்டு வாரேன்….”என்று சமாளித்து மகனை அனுப்பி வைத்தவர் முனியனிடம் சொல்லி, காரை மெக்கானிக்கை விட்டு சரி செய்ய சொல்லி அப்படியே காரை கழுவி வீட்டுக்கு எடுத்து வர சொன்னார்… உடன் ஒருவனை அனுப்பி இருவரது பயண பொதிகளை எடுத்து வரவும் உத்தரவிட்டவர் வீட்டினுள் நுழைந்தவர் மனம் சந்தோஷத்தில் மிதந்தது மகனது வரவால்..

 

ஆனால் உடன் மகன் சொன்னதும் நியாபகம் வரவும் பயம் உள்ளுக்குள் துளிர் விட்டது… இனி என்னென்னவெல்லாம் நடக்க போகுதோ என்று எண்ணி…

 

கவியழகனும் விக்னேஷும் வாயிறார உண்டதும் ஓய்வெடுக்க காயத்ரி சொல்லவும், மறுக்காமல் தங்கள் அறைக்குள் நுழைந்தனர் தோழர்கள்…அங்கிருந்த பெட்டிகளை பார்த்து,

 

“மாப்ள…. நம்ம பெட்டி எப்படி டா இங்க வந்துச்சு…?” என்று ஆச்சரியமாக கேட்க படி பெட்டியில் இருந்து மாற்று உடையை எடுக்க,

 

“ம்ம்ம்… கால் மொளச்சு நடந்து வந்துச்சு… சாப்பாட்டுல மட்டும் குறியா இருந்தா இப்படி இதெல்லாம் நியாபகத்துக்கு வரும்… ” என்றவனை பார்த்து முறைக்க,

 

படுக்கையில் பொத்தென்று விழுந்த கவி, “முறைக்காத டா மச்சான்… அம்மா கிட்ட சொன்னேன்… அவங்க தான் ஆளு விட்டு எடுத்துட்டு வர சொன்னாங்க… ” என்றுவிட்டு இருகைகளையும் தலைக்கு கீழ் குடுத்து இன்று நடந்த நிகழ்வை எண்ணிக் பார்க்க ஆரம்பித்தான்…

 

“அப்ப காரு…?” என்று விக்கி கேட்கவும்

 

“லூசா டா நீ… பேக் எடுத்துட்டு வர சொன்னவங்க… அதையும் சரி பண்ணி எடுத்துட்டு வர சொல்லமாட்டாங்களா… ஏன் டா இப்படி பண்ணுற…?மூடிட்டு படுடா…” என்று கடுப்பாக,

 

“ஓஓஓ… சரி நீ ஏன் இப்ப இவ்வளவு கடுப்பாகுற…? சாதாரண கேள்வி தானே கேட்டேன்…” என்றவன் உடையை மாற்றிவிட்டு படுக்கையில் விழந்தான் கேள்வியுடன்…

 

“இத்தன நாள் கழிச்சு வீட்டுக்கு வரேன் ஊருக்குள்ள வரும்போதே இப்படி ஆயிருக்கு… யாரா இருக்கும் அந்த பொண்ணு… இல்ல இல்ல பொண்ணு இல்ல…” என்று விட்டத்தை பார்த்து பேசிக் கொண்டு இருக்க, இடைபுகுந்தான் விக்கி

 

“பொண்ணு இல்லாம பன்’னா…? ஆனா அந்த பொண்ணு பார்க்க பன் மாதிரி எல்லாம் இல்ல டா…”என்று சீரியஸாக சொல்ல, நண்பனை திரும்பி பார்த்து முறைத்தான் கவி…

 

“இல்ல சும்மா கடுப்பா இருக்கியேன்னு காமெடி பண்ணினேன் மாப்ள… முறைக்காத டா...” என்று பல்லை காட்டி அசடு வழிய,

 

“உன் காமெடி ரொம்ப கண்ராவியா இருக்கு… அவளை ராட்சசி’ன்னு சொல்ல வந்தேன்….கொஞ்ச நேரம் வாய் மூடிட்டு இருக்கியா…?” என்றதும் வாயை மூடிக் கொண்டான்…

 

“யாருன்னு மட்டும் தெரிஞ்சுது… அப்புறம் இருக்கு அவளுக்கு… எவ்வளவு திமிரு… எதுக்கு இப்படி பண்ணினான்னு தெரியனும்… அதுக்கு முன்னாடி அவளை ஏதாச்சும் பண்ணனும்… ” என்று கோபத்தில் கூற, அவனையே பார்த்திருந்த விக்கி, மெல்ல

 

“மாப்ள.. எதுக்கு இவ்வளவு கோபம்… இது நல்லதுக்கு இல்ல டா… கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு… இப்ப தான் ஊருக்கு வந்திருக்க அதை என்ஜாய் பண்ணு… ஏன் தேவையில்லாமல் அதையே நினைச்சுட்டு இருக்க… விடு… எல்லா கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும்… இப்ப எதையும் யோசிக்காம தூங்கு… நாளை ஊரு சுத்த போகனும்… ” என்று நண்பனை சமாதானம் செய்ய சற்று அடங்கிய கவியழகன் பயண கலைப்பில் வேகமாக தன் நித்திரையை அரவணைத்து கொண்டான்…

 

விதி என்ன நடத்த முடிவு செய்துள்ளது என்று அறியாத இரு கட்டிளம் காளைகளும் நாளைய பொழுதின் விடியலை எதிர்பார்த்து உறங்கி போயினர்…

 

“அத்த…. அத்த…. அத்த….” என்று கத்தியபடியே வீட்டினுள் நுழைந்தாள் கனிமொழி…

 

“ஏ… எதுக்குவ இப்படி கூப்பாடு போட்டுட்டு வரவ… நீ கத்துறது பத்து தெருவுக்கு தள்ளி இருக்குறவகளுக்கு கேக்கும்… அந்த கிறுக்கி கூட சேர்ந்து கெட்டு குட்டிசெவுறா போகுது இதுவும்… சை…”என்று திட்டியபடியே அடுக்கலையை விட்டு வெளி வந்தார் வசுந்தரா…

 

“என்ன அத்த… காலையிலேயே திட்டுறீக… இப்படி திட்டு வாங்கிட்டு காலேஜ்க்கு போனா நல்லாவா இருக்கும்…?” என்று சிணுங்க…

 

“ம்ம்ம்… என் வாய்ல ஏதாவது வந்துரும் சொல்லிபுட்டேன்… உங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது டி மத்தவங்களுக்குதேன் ஏதாச்சும் பிரச்சன வரும் உங்களால… எதுக்கு டி கத்துனவ…” தன் வேலையை செய்தபடியே கனியையும் பூங்குழலியையும் வசை பாடியபடி இருக்க, அவர் முன் ஒரு தூக்கு சட்டியை நீட்டியவள்,

 

“இதுல வெள்ள பணியாரம் இருக்கு… அப்பத்தா உங்ககிட்ட குடுக்க சொல்லுச்சு…” என்று நீட்டவும் அதை முறைத்துக் கொண்டே வாங்கியவர்,

 

“இதயா குட்டி எப்படி இருக்கு…?” என்று கனியின் தங்கையை நலம் விசாரிக்க,

 

“ம்ம்… இதெல்லாம் அநியாயம் அத்த, அவ மட்டும் குட்டி நான் மட்டும் திமிரு பிடிச்சவளா…?” என்று முகத்தை தூக்கவும் அறையில் இருந்து வெளிவந்தாள் பூங்குழலி…

 

அவளை பார்த்ததும், கனி “ஏய்… வெரசா வா புள்ள பஸ் போயிற போகுது… நேத்தே அவசரமா போனோம் இன்னைக்காச்சும் வெரசா போலாம்…” என்று சொல்ல அதை காதிலேயே வாங்காத பூங்குழலி,

 

சாவகாசமா ஒரு தட்டை எடுத்து வந்து அன்னையின் கையில் இருந்த தூக்கு சட்டியை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு முற்றத்தில் அமர்ந்து தேவையான அளவிற்கு தன் தட்டில் பணியாரத்தை அடுக்கி அதில் கார சட்டினியை தொட்டு ரசித்து உண்ண தொடங்கினாள்…

 

கனியோ அவளது செயலை பார்த்து,தரையில் அவள் அருகில் பாவமான முகத்தோடு உட்கார, அதை பார்த்த வசுந்தரா நெற்றியில் அறைந்துக் கொண்டவர்,  “இங்க பாரு டி… உன் நல்லதுக்குதேன் சொல்லுதேன்… முத இவ சகவாசத்தை விடு அப்பதேன் நீ வாழ்க்கைல உருப்புடுவ… சொல்லிப்புட்டேன்…”என்று முந்தியை உதறி இடுப்பில் சொருக்கவும், வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த பூங்குழலி,

 

“இந்த நட்பு என்ன மழ தண்ணில வந்த ஆரு மாதிரின்னு நினைச்சீங்களோ இப்படி எல்லாம் சொன்னா பிரிஞ்சு போக, ஆழமான நட்பு ஆத்தா… இதைய அம்புட்டு சுளுவா பிரிக்க முடியாது…” என்று வாயில் பணியாரத்தை அடைத்துக் கொண்டே வீர வசனம் பேச,

 

பொறுமை இழந்த கனி அவள் பின் மண்டையில் தட்டி, “இப்ப ரொம்ப முக்கியம்… மூட்டிட்டு திண்ணு தொல டி… பஸ்க்கு நேரமாகுது…” என்று கோபத்தில் கத்த, தலையை தேய்த்தபடியே அவளை பார்த்து முறைத்தவள் எதுவும் பேசாது அமைதியாக உண்டு முடித்தாள்…

 

“அத்த வாரேன்…” என்று கத்தியபடியே வீட்டை விட்டு வெளியேறிய கனியை தொடர்ந்து, அன்னையை முறைத்தபடியே பூங்குழலி வெளியேற போக, அவளது கையை பிடித்து நிறுத்திய வசுந்தரா,

 

“இந்தா புடி.. ஒழுங்கா போற மாதிரி போயிட்டு வந்து சேரனும்… எங்கையும் போயி வம்பு வளக்க கூடாது…” என்று மிரட்டலாக கூறி மதிய உணவை பாக்ஸில் அடைத்து கொடுத்து வழியனுப்பவும், அவரை கட்டிக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து வெளியே தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடியவள்,

 

“பார்க்கலாம்… பார்க்கலாம்… என்னைய யாரும் வம்பிழுக்காத வரை நானும் யாரு கூடவும் சண்டைக்கு போக மாட்டேன்… ” என்றவள் கனியுடன் வேகமாக பறந்தாள் பஸ் ஸ்டாப்பை நோக்கி…

 

அவள் சொன்னதை கேட்ட வசுந்தரா, சிறு பெருமூச்சு விட்டவருக்கு முகம் புன்னையை தத்தெடுத்துக் கொண்டது… அவரது வாழ்வின் ஆதாரம், சுட்டியாக இளம்பச்சை நிற தாவணியில் ரெண்டை பின்னலுடன் சைக்கிளில் செல்லுவதை பார்த்து பிரம்மிப்பாக இருந்தது…

 

நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது… சின்ன பெண்ணாக இருந்தவள் இப்பொழுது வளர்ந்து திருமண வயதில் நிற்ப்பவளை பார்த்து உள்ளம் பூரிக்கதான் செய்தது… எத்தனை வசவுகள் , அடிகள் வாங்கினாலும் மறுநாள் அனைத்தையும் மறந்து முத்தமிட்டு செல்லும் மகள் மீது உள்ளுக்குள் அத்தனை பாசம் வசுந்தராவிற்கு… ஆனால் அதை வெளியே காட்டினால் மேலும் தன் குறும்பை காட்டுவாள் என்பதற்காகவே அவளை சீராட்ட துடிக்கும் ஆசையை அடக்கிக் கொண்டு கோபமாக சுற்றுவார் வசுந்தரா…

 

இவ்விருவருக்கும் துணையாக இருக்கும் மற்றொரு ஜீவன் வசுந்தராவின் அன்னை செல்லதாயி… கனிமொழியின் தங்கை பூப்பெய்தியதால் அவளது இல்லத்தில் சடங்கு முடியும் வரை இருப்பதற்காக சென்றிருக்கிறார்…

 

செல்லதாயின் அன்பான குணமும், அரவணைப்பும் அப்படியே பொருந்த பெற்றவள் தான் வசுந்தரா… ஆனால் பூங்குழலியின் குணத்திற்கு இவ்வாறு இருந்தால் சரி வராது என்று தன்னையே விரைப்பாக மாற்றிக்கொண்டார் மகளுக்காக….

 

“ஏய் புள்ள குழலி… ஏன்டி அமைதியா வர…”

 

“பேசமாட்டியா எங்கூட…?”

 

“என்னடி ஆச்சு… அடியேய் கிறுக்கி…” என்று கத்தவும் சைக்கிளை சடன்பிரேக் போட்டு நின்றவள் கனியை முடிந்த மட்டும் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க….

 

இவள் சட்டென  நிறக்கவும் இதை எதிர்பார்த்த கனிமொழி மூன்றடி தள்ளி தன் சைக்கிளை பிரேக் கிட்ட நின்றாள்…

 

“இப்ப எதுக்கு டி நிற்குறவ… வா… லேட் ஆவுது… பஸ் போயிருச்சுன்னா வம்பாயிரும்… வா புள்ள…” என்று நடுரோட்டில் நின்று கத்திக் கொண்டு இருந்தாள்…

 

“ம்ப்ச்ச்… யாருடா அது தூங்கும் போது கத்திக்கிட்டு… போங்கடா அந்த பக்கம்…”என்று முணங்களுடன் அருகில் இருந்த கவியை கட்டிக் கொண்டு கலைந்த தன் தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்…

 

“ஏன் புள்ள இப்படி ராவடி பண்ணுறவ… என்னதான் வேண்ணும் உனக்கு…” என்று மீண்டும் கத்த,

 

“அடிங்கு… யாராட அவன்…” என்று கடுப்பாகி அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனியில் நின்று கண்கள் கசக்கிக் கொண்டே குனிந்து ரோட்டை பார்க்க, அவன் விழிகள் பெரிதாக விரிந்தது காலையில் கண்ட காட்சியில்…

 

இரட்டை ஜடையிட்டு, மாநிறத்திறக்கும் சற்றே கூடி இருந்த வெள்ளை நிறத்தில், தாவணி அணிந்து, நெற்றியில் நிறைந்தக் குங்குமம் சிறு கோடாக காட்சியளிக்க, கோபமான முக பாவனையில் தூக்கி சொருகிய பாவாடையும் இழுத்து சொருகிய தாவணியுமாய் சைக்கிளில் அமர்ந்த வாரே கத்திக் கொண்டு இருந்த பெண்ணவளின் காலடியில்  விழுந்தது பால்கனியில் இருந்த ஒரு ஜீவனின் இதயம்…

 

சில நொடிகளில் சுதாரித்தவன், அப்பொழுது தான் பார்த்தான் யாருடனோ அவள் சண்டையிட்டு கொண்டு இருப்பதை…

 

“ம்ம்ம்… என்ன வேணுமா… நேத்து நான் ஆத்தா கிட்ட அடி வாங்கிட்டு இருக்கும் போது சிரிச்சுட்டு நின்னல… அதுக்கு தண்டனையா இன்னைக்கு எங்கூட படத்துக்கு வர…” என்று பூங்குழலி டீல் பேசவும்,

 

“அடிப்பாவி…. “என்று கனி வாய் பிளக்கவும் விக்கிக்கு பார்வை அவளது இதழில் படிந்தது அன்னிச்சையாக…

 

“என்ன….?” என்று கேட்ட குழலியின் குரலில் அத்தனை மிதப்பு,

 

“இதெல்லாம் அநியாயம் டி புள்ள… ஆத்தாக்கு தெரிஞ்சா அம்புட்டுதேன்… தோல உரிச்சு உப்புகண்டம் போட்ரும்…” அத்தனை பயம் வசுந்தராவின் மேல் ஆனால் அவர் பெற்ற மகளோ,

 

“அதெல்லாம் சமாளிச்சுகலாம்… ஆத்தாக்கு எம்மேல பாசம் அதிகம் புள்ள… மொத திட்டும் பொறவு விட்ரும்… இப்ப நீ வரியா இல்லையா…?” என்று கராராக கேட்க,

 

கனிமொழிக்கு பயத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை… பதற்றத்தில் நகத்தை கடித்தபடி, “படத்துக்கு  போனது தெரிஞ்சா அத்த தோல உரிக்கும்…. போகலைன்னா இவ வேற கொடும படுத்துவா…”என்று தனக்குள் பேசியபடி புலம்பியவள், கடைசியாக ‘ம்ம்ம்…. நம்ம என்ன புதுசாவா அடிவாங்க போறோம்… அதுக்கு படத்துக்கு போயிட்டு அடிவாங்கிக்கலாம்…’ என்று முடிவெடுத்தவள் நிமிர்ந்து,

 

“சரி புள்ள போலாம்… இப்ப வா பஸ்க்கு நேரமாச்சு…” என்றதும் தான் விக்கிக்கு சுயமே வந்தது…

 

இத்தனை நேரம் அவளது செவ்விதழில் படிந்திருந்த அவன் விழிகள் இப்பொழுது வேகமாக அவளை நோட்டம் விட்டது…

 

“பார்த்தா ஸ்கூல் பொண்ணு மாதிரி டிரெஸ் பண்ணியிருக்கா… ஆனா ஆளு மூஞ்ச பார்த்தா மெச்சுர்டா தெரியுது… ம்ம்ம்… இவளை பத்தி எப்படி தெரிஞ்சுக்கறது…” என்று தலையை கோதியபடி பார்வையை பக்கம் செலுத்தியவன் அப்பொழுது தான் பூங்குழலியை கவனித்தான்…

 

“இந்த பொண்ணு….” என்று இழுத்த சில நொடிகளில்” அந்த பொண்ணுல….” என்று அதிர்ந்தவன் வேகமாக அறையினுள் நுழைந்து, கவியை “டேய் மாப்ள…. எந்திரி டா… அடேய்… எந்திரி டா….” என்று அவனை புரட்டி போட்டு எழுப்ப முயற்சிக்க,

 

“விடுடா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடு மச்சான்…” என்று தூக்கத்தில் உளறியபடி மீண்டும் தன் தூக்கத்தை தொடர, நெற்றியில் அறைந்துக் கொண்டவன் “டேய் நேத்து நான் பார்த்த பொண்ணு இங்க கீழ் ரோட்டுல நிக்குது வாடா…” என்று கத்தவும், தடாலடியாக படுக்கையை விட்டு எழுந்தவன் வேகமாக பால்கனியில் இருந்து ரோட்டை  பார்க்க, அங்கு எவரும் இல்லை…

 

கனிமொழி சரியென்றதும், “அது… மவளே பேச்சை மாத்துன்ன பொறவு சேதாரம் அதிகம் ஆயிரும் சொல்லிப்புட்டேன்… ” என்று மிரட்ட,

 

“அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் புள்ள… வா போலாம்…” என்று கூறவும்,

 

“ம்ம்ம்… வா…” என்று இருவரும் பஸ் ஸ்டாப்பை நோக்கி சைக்கிளை மிதிக்க தொடங்கினர்…

 

அவர்கள் சற்று தொலைவில் செல்லவும் கவி பால்கனிக்கு வரவும் அவனது விழிகளுக்கு தெரிந்தது தொலைவில் செல்லும் இரு பெண்கள் மட்டுமே…

 

இடுப்பை தேய்த்துக் கொண்டே வந்த விக்கி, “என்னடா பார்த்தியா..?” என்று கேட்க,

 

“ம்ப்ச்ச்… இல்ல டா… நான் வரதுக்குள்ள தெருவோட எண்டுக்கு(end) போயிருச்சு… பார்க்க முடியல…” வருத்தம் இழைந்தோடிய குரலில் கூறியவன் அப்பொழுது தான் நண்பன் நின்றிருக்கும் விதத்தை கண்டு,

 

“ஏன்டா ஒரு டைப்பா நிக்குற…? என்னாச்சு…” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் முறைத்த விக்கி,

 

“ம்ம்ம்… அப்படியே கொஞ்சம்,  சீன ரிவைன்ட் பண்ணி பாரு தெரியும்…”

 

“அப்படி என்னாச்சு…?” என்றபடி தலையின் முன்உச்சி முடியை கோதியபடி யோசித்தவனுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது…

 

நண்பன் கூறிய பெண்ணை பார்க்க போகும் ஆவளில் வேகமாக படுக்கையை விட்டு எழும் போது பக்கம் நின்றிருந்த விக்கியை தள்ளிவிட்டு பால்கனிக்கு ஓடிவர, கவி தள்ளியதில் பிடிமானமின்றி பின்நோக்கி பொத்தென்று விழுந்தான் தரையில்…  

 

தன் செயல் நினைவிற்கு வரவும், “சாரி டா மச்சான்… தெரியாம நடந்துருச்சு…” என்று அணைக்க வர, அவன் கையை தட்டி விட்டவன், “உன்னை வந்து எழுப்பி நான் கீழ் விழுந்ததுக்கு பேசாம இங்கேயே நின்னு என் நாட்டுக்கட்டைய சைட் அடிச்சு இருந்திருக்கலாம்…” என்று அங்கலாய்ப்பாக சொல்லவும் நண்பனின் வார்த்தையில் அதிர்ந்தான் கவியழகன்…

தொடரும்…

 

Advertisement