Advertisement

UD:25  
“என்ன விஷயம்…? அத்தேன் அம்புட்டையும் பேசி முடிச்சாசே… பொறவு என்னப்பு…?”
“அது… எங்கூட்டு பொண்ணு இத்தன பிரச்சனக்கு பொறவு கட்டிக் குடுக்கோம்… அவிகளுக்கு பிடிக்கலைன்னு பொண்ண கொடும படுத்துன்னா நா சும்மா இருக்க மாட்டேங்க… எம் பொண்ணு அங்குட்டு சந்தோஷமா இருக்கோணும்… எந்த தொந்தரவும் கொடுமையும் இருக்க கூடாது…” என்று முடித்துவிட்டு முருகவேலை பார்க்க அவரால் ஒன்றும் பேச முடியமால் பல்லை கடித்தார், பூங்குழலியின் தற்காப்பை எண்ணி…
கவியழகனோ மனதில் மீண்டும் மீண்டும் மெச்சாமல் இருக்க முடியவில்லை தன்னவளை… ‘தெளிவா தான் டி இருக்க… பார்க்கலாம் நீயா நானா’ன்னு…’ என்று எண்ணிக் கொண்டவன், அன்றைய நிகழ்வில் இரெண்டாவது முறையாக வாய் திறந்தான்…
“என்னை நம்பி கட்டிக் குடுக்க சொல்லுங்க….” என்றதும் அனைவருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது… பூங்குழலிக்கோ அவனது கண்ணில் வந்து போன மின்னலின் ஒளிக்கு காரணம் தெரியாமல் முழித்தாள்…
அதன்பின் அனைத்தும் பேசி முடிவானதும்  பஞ்சாயத்து கலைய, கவியழகன் மட்டும் அவளை தாண்டி செல்லும் வரை இமைக்கா பார்வையோடு பார்த்தவாரே செல்லவும் இவளுக்கு தான் என்னவோ போல் இருந்தது…
…….
“இன்னும் எவ்வளவு நேரம் தான் மச்சான் இப்படியே இருக்குறதா முடிவு பண்ணியிருக்க…?” அரிசி மில் குடௌனில் மூட்டைகளின் மேல், ஒருகையை தலைக்கு கீழும் மற்றொரு கையை தன் கண்களை மறைத்தவாரும் படுத்திருந்த கவியழகனிடம் கேட்ட விக்கிக்கு பதிலில்லை…
“டேய் கடுப்பா இருக்கு டா… இப்படி வெட்டியா இருக்க… நீ தூங்குறியா இல்ல சும்மா படுத்து யோசிச்சுட்டு இருக்கியான்னு தெரியாம நான் உன் மூஞ்ச பார்த்துக்கிட்டு இருக்கேன்… அவசரத்துல ஃபோனை வேற எடுக்காம வந்துட்டேன்…” முதலில் அவனிடம் புலம்பியவன் கடைசியில் தனுக்குதானே முனுமுனுத்துக் கொண்டான்…
மேலும் சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் அதற்கு மேல் முடியாது என்பது போல், “டேய் கவியழகா… ராசா அழகா… போதும் டா டேய்… வனவாசம் போற மாதிரி இங்கேயே இருக்குற மாதிரி முடிவு பண்ணிட்டியா…?அப்படியே இருந்தாலும் நீ மட்டும் இங்க இருக்க வேண்டியது தானே… என்னையும் ஏன்டா இங்க புடிச்சு வச்சு இருக்க… என்னதான்டா உன் பிரச்சினை…” என பேசிக்கொண்டே இல்லை இல்லை புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் அந்த கேள்வி சட்டென தோன்ற, “டேய் நாயே… துரோகி…. அந்த பொண்ணு உன் அத்த பொண்ணுனு ஏன்டா என்கிட்ட சொல்லல…. பரதேசி… எரும….” இத்தனை நாள் கூட இருந்தும் தன்னிடம் உண்மையை கூறவில்லையே என கோபத்தை காட்டியவனுக்கு சம்பந்தப்பட்டவனிடம் இருந்து பதில் வந்ததா என்று பார்த்தால் ம்ஹும்….
அதில் உச்சக்கட்ட கடுப்பான விக்கி, “இங்க பாரு மச்சான்… எல்லார் முன்னாடியும் உன்னை இப்படி அசிங்கபடுத்திட்டானு நீ நினைச்சா அதை இப்படி மனசுல நினைச்சு நினைச்சு கஷ்டப்படாதடா இது உனக்கும் நல்லது இல்ல உன்னோட பச்ச கிளிக்கும் நல்லது இல்ல… நடந்ததை மறந்துட்டு தங்கச்சியோட நடக்க போற கல்யாணத்தை பத்தி யோசிடா… நீ ஆசை பட்ட வாழ்க்கை நீ எதிர்பார்க்காத சமயம் அதுவா அமைஞ்சு இருக்கு… அதைய நினைச்சு சந்தோஷ படுடா…” என்று நண்பனின் வார்த்தைகள் அவன் காதில் சென்றடைந்ததா என்றே தெரியவில்லை…
“ம்ப்ச்ச்… இப்படியே இருந்தா என்னடா அர்த்தம்…? சரி உனக்கு அவ்வளவு கோபம் இருந்தா அதை மறக்கவும் வேண்டாம், ஒதுக்கவும் வேண்டாம்… நேரா தங்கச்சிக்கிட்டியே போய்,’ ஏன் இப்படி செஞ்சன்னு…’ கேட்டுரு… பிரச்சினை முடிஞ்சுது…” என்று கூறி முடிக்கும் முன் சட்டென எழுந்து அமர்ந்தவனின் முகம் தீவிரமாக இருந்தது….
“அஆஆஆ…. அம்மா…. ஸ்ஸ்ஸ்…” இவ்வாறு வேகமாக எழுந்து அமர்வான் என்று தெரியாததால் தேமே என்று அவன் அருகில் சாய்ந்து நின்றிருந்த விக்கி ஒருநொடியில் அதிர்ந்து பின்னோக்கி போக, சிதறி கிடந்த நெல்லில் வெறும் கால் வழுக்கி பொத்தென்று விழுந்தான்…
“ஏன்டா அறிவுகெட்டவனே… இப்படியா எழுவ ஒரு அலர்ட் குடுத்துட்டு எந்திரிக்க வேண்டியது தானே… எரும….” என்று திட்டியபடி எழுந்து நின்றவன் நண்பனின் தீவிரமான முகத்தை பார்த்து,
“ஏன்டா இப்ப நான் திட்டுனது கூடவா உன் காதுல விழல…?” என்று அவன் தோளை சுரண்ட,
அவனை நிதானமாக திரும்பி பார்த்த கவியழகனை, “ஏன் இவ்வளவு வேகமாக திரும்பி பார்க்குற…? இன்னும் கொஞ்சம் மெதுவா ஸ்லோ மோஷன்ல பார்க்குறது…” என்று நக்கல் அடிக்க, அதற்கும் அவனிடம் பதில் இல்லை…
“டேய்… என்னதான்டா பிரச்சினை உனக்கு…?” சலிப்பு தட்டிவிட்டது எத்தனை முறை கேட்டும் பதில் இல்லையென்றதும்…
மூட்டையின் மேலிருந்து குதித்தவன், “மச்சான்… நீ நம்ம வீட்டுக்கு போ… நான் அப்புறம் வரேன்…” என்று வேகமாக வெளியேறினான் கவியழகன்….
அவனை பின்தொடர்ந்த விக்கி, “நீ எங்கடா போற… ஏன்டா நான் ஊருக்கு வந்ததுல இருந்து பார்க்குறேன் நீ நடுவுல நடுவுல என்னை கழட்டி விட்டுட்டு போற இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்… என்கிட்ட வண்டியும் இல்ல ஃபோன்னும் இல்ல டா நாயே… டேய்…. டேய்….” என்று கத்திக் கொண்டே அவன் பின் செல்ல, கவியழகன் அதை கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை…
வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டான்… அதை பார்த்திருந்த விக்கி, தன் நெற்றியில் அறைந்துக் கொண்டு, “எல்லாம் என் நேரம்…” என்று புலம்பியபடி நண்பனின் வீட்டை நோக்கி தன் நடையை கட்டினான்…
அப்பொழுது சுற்றி முற்றி பார்த்தபடி நடந்தவனுக்கு அத்தனை இதமாக இருந்தது அவனுக்கு… “ம்ம்ம்… என்னதான் இருந்தாலும் கிராமம் கிராமம் தான்… சப்பா என்ன காத்து… இந்த சுகம் எல்லாம் ஏசி காத்துல வராது… ம்ம்ம்… இந்த பௌர்ணமி நிலவு, சில்லுன்னு காத்து, கூட இதமான ஒரு காதல் பாட்டு, அப்படியே நம்ம ஆளும் இருந்தா சும்மா மாஸா இருக்கும்… ஆனா இல்லயே…” என்று தன்பாட்டுக்கு பேசிக் கொண்டே சுற்றும் முற்றும் இருட்டை வேடிக்கை பார்த்தபடி வந்தவன் அப்பொழுது தான் தன் பின்னால் தொலைவில் ஒரு சைக்கிள் வருவதை கண்டான்…
“கடவுளே… நன்றி… இன்னைக்கு நடராஜா சர்வீசஸ்னு நினைச்சேன்… நல்லவேலையா காப்பாத்திட்ட…” என்று கடவுளுக்கு நன்றி கூறியவன், லிஃப்ட் என  கேட்டு கையை நீட்டினான்…
இருட்டில் சற்று தொலைவில் வந்து கொண்டு இருந்ததால் அது யாரென்று கண்டுக்கொள்ள முடியாமல் இருந்தவனுக்கு பக்கம் வந்ததும் அது யாரென்று அடையாளம் கண்டுக்கொள்ள  முடிந்தது அவனுக்கு…
“அட நம்ம ஆளு… கடவுளே… கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு…” என்று சந்தோஷப்பட, ஆனால் அவளோ சைக்கிளை நிறுத்தாமல் அவனது பக்கவாட்டில் ஒடித்து அவனை தாண்டி செல்ல…. விடுவானா இவன்…?
அவள் பின் ஓடி சென்று, அவள் சைக்கிளை பிடித்து நிறுத்தினான் இரெண்டே தாவில்…
“ம்ப்ச்ச்… என்ன பண்ணுதீக.. விடுங்க… இப்ப கைய எடுக்க போறீகளா இல்லையா…?” வார்த்தையில் கோபம் தெரித்தது…
“ம்ம்ம்… நீ ஒழுங்கா நிறுத்தி இருந்தா நான் ஏன் இப்படி புடிக்க போறேன்…”
“நா எதுக்கு நிறுத்தணும்…?”
“உன் முன்னாடி தானே லிஃப்ட் ன்னு கைய காட்டுனேன்… அப்ப நீ தானே நிறுத்தணும்… “
“அப்படி கைய காட்டுற ஆளுகளுக்கு எல்லாம் நிப்பாட்ட முடியாது…” என முகத்தை திருப்ப,
“ஓஓஓ… சரிவிடு… அதான் நானே பிடிச்சு நிறுத்திட்டேனே… அப்புறம் எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு… சரி சரி நகரு… ”  அவளை லேசாக இடிப்பது போல் வரவும் கனிமொழி சைக்கிளை விட்டுவிட்டு இரண்டடி தள்ளி நின்றுக் கொண்டாள் பதற்றத்தில்…
“அய்யோ என்ன பண்ணுதீக…? என் சைக்கிளு…” என்று கத்தியவளை கண்டுக் கொள்ளமால், அவளது சைக்கிள்களில் அமர்ந்தவன்,
“தேவையில்லாம கத்தாத… சீக்கிரம் உட்காரு டைம் ஆகுது…” என்று அவன் கூறவும்,
“எஎனனன்துஉஉஉ….” அதிர்ச்சியில் அவளது வாய் பிளந்துக் கொண்டது…
அதை பார்த்தவன், “ஏய் சும்மா சும்மா வாய பொளக்காத… எனக்கு என்னன்னமோ தோணுது… அந்த ஷட்டர க்ளோஸ் பண்ணு மொத….” என்றவன் சட்டென எழுந்த எண்ணங்களை கட்டுப்படுத்த தன்  தலையை கோதிக் கொண்டான் இடது கையால்…
அவனது வார்த்தையில் தன் வாயை பட்டென மூடிக் கொண்டவள், கோபமாக அவளது சைக்கிள்களின் கைப்பிடியை பற்றிக் கொண்டு,
“மருவாதையா என் சைக்கிள்ல எங்கிட்ட குடுங்க…” என்று குழுக்க,
“ஏய்… எதுக்கு ஷாக் அடிச்ச மாதிரி ஆடுற… அய்யய… ஆட்டுறத நிப்பாட்டு மா… அட நிப்பாட்டுங்குறேன் நீ பாட்டுக்கு சைக்கிளை பிடிச்சு ஆட்டிட்டே இருக்குற…” என இறுதியில் கத்தவும், அதிர்ந்து பட்டென கையை விலக்கிக் கொண்டவள் அவனை பார்த்து  கண்கள் கலங்க உதடு துடிக்க நிற்கவும் உருகி விட்டது விக்கிக்கு…
“இப்ப எதுக்கு அழுகுற… உன்னை ஏதாச்சும் பண்ணினேனா…?” என்று ஒரு விரல் நீட்டி மிரட்டும் தோரணையில் கேட்க,
அவளோ பதிலேதும் சொல்லாமல், கலங்கிய விழியோடு அவனையே மலங்க மலங்க பார்த்திருந்தாள், “ம்பச்ச்…பதில் சொல்லு… ஏதாச்சும் பண்ணினேனா…?” என்று மீண்டும் கேட்க,
“ம்ஹும்….”என்று தலையை இல்லை என்பதை போல் ஆட்டி வைத்தாள்…
“உன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினேனா…?”
“ம்ஹும்…”
“உன்ன தொல்லை பண்ணினேனா…?”
ஒரு நொடி முழித்தவள்,பின் “ம்ம்ம்…” ஆம் என்பதை போல் தலையை ஆட்ட,
“அடிப்பாவி… நான் எங்க உன்ன தொல்லை பண்ணினேன்…?” என்று வாயில் கைவைத்து அதிர்ந்ததை போல் பாவனை காட்டவும் அவனை பார்த்து முறைத்து கனிமொழி, ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மற்றொரு கையை அவனையும் தன் சைக்கிளையும் சுட்டிக் காட்டி,
“பொறவு இதுக்கு பேரு என்னவாம் உங்க ஊருல…?” என்று தோரணையாக கேட்க,
“ஓஓஓ… இதுவா… இங்க பாரு, நான் நல்லா பையனா லிஃப்ட் கேட்டேன் நீ நிறுத்தல நான் நிறுத்திட்டேன் அவ்வளவு தான்… அதுவும் எனக்கு என்ன வேண்டுதலா… இப்படி நிலா வெளிச்சத்துல, சில்லுன்னு வீசற காத்துல உன்கூட இருக்கணும்னு… நான் உன் நொண்ணன் கூட தான் வந்தேன் அந்த எரும என்ன கழட்டிவிட்டுட்டு போயிட்டான் இப்படி நடந்து போனா எப்ப வீட்டுக்கு போய் சேர முடியும்… கொஞ்சமாச்சும் யோசிச்சு பாரு இங்க இருந்து நடக்க ஆரம்பிச்சா அரைமணி நேரத்துக்கு மேல ஆகும் என்ன ஆகும் நிலம…? அதான் சைக்கிள்ல லிஃப்ட் கேட்டு அப்படியே தொத்திட்டு போயிறலாம்னு நினைச்சேன்… நீ ஓவரா பண்ணுற…. ” என்று நீலமாக ஒரு விளக்கவுரை அளித்தான் விக்கி…
முதலில் அவன் கூறியதை கேட்டு முறைத்தவள், தான் சைக்கிளை வழிப்பறி செய்ததன் காரணத்தை கூறவும் பாவமாக உணர்ந்தாள் தான் ஆனால் எல்லாம் ஐந்து நொடிகள் மட்டுமே…
“அதுக்கு…? இப்படித்தேன் பண்ணுவீகளா..? ஊர்ல யவராச்சும் பார்த்தாகனா என்னையத்தேன் தப்பா நினைப்பாக… ஒழுங்கா எங் சைக்கிள்ல குடுங்க….” அவனது பார்வைக்கு ஏதோ குழந்தை மிட்டாய்காக சிணுங்குவது போல் இருந்தது அவளது தோற்றம்…
அதை ரசனையுடன் பார்த்திருந்தவன், அவள் கவனிக்கும் முன்பு தன் பார்வையை மாற்றிக்கொண்டு, ” என்ன நீ ரொம்ப பண்ணுற… நான் வேண்ணும்னே பண்ணுற மாதிரி நடந்துக்காத இந்த இடம் ஊரோட எல்லை, நல்லா உன்கண்ணை தொரந்து பாரு… ஸ்டிரீட் லைட் கூட கிடையாது இந்த ராத்திரில நியும் தனியாதான் போகணும் நானும் தனியா தான் போகணும்… அதுக்கு நாம ஒருதருக்கொருதர் துணையா போனா என்ன…?”
“என்னது…?”
“இல்லமா… ராத்திரி நேரம்ல ஒரு பாடிகார்டு  மாதிரின்னு சொல்லவந்தேன்…. வேற எந்த அர்த்தத்திலும் சொல்லல… ” என்று சமாளிக்க, கனிமொழியோ
“ம்ஹும்… அதெல்லாம் தெரியாது… பார்டிகார்டும் வேணாம் ஒண்ணும்  வேணாம்… நீங்க மொத எங் சைக்கிள்ல குடுங்க…” மீண்டும் ஹான்டில் பாரில் கை வைத்து குலுக்க,
“அடிங்க… நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டு இருக்கேன் நீயும் சொன்னதையே சொல்லிட்டு இருக்க… சைக்கிள் எல்லாம் தரமுடியாது… நீ நடந்தே வா… நான் போறேன் அப்பதான் புத்தி வரும்…. ” என்றவன் அடுத்த நொடி அவளை தாண்டி சைக்கிளில் செல்ல, இவளுக்கு தான் கண்ணீர் கீழே விழுந்துவிடுமோ என்பதை போல் இருந்தது…
உதடு கடித்து, செல்லும் அவனையே பார்த்திருந்தவளுக்கு அந்த சூழல் பயத்தை உண்டு பண்ணியது… எழரை தான் ஆகி இருந்த வேளையிலும் இருள் அவ்விடத்தை அதிகம் கழிந்து இருப்பதை போல் தோற்றம்…
பயம் தொற்றிக் கொள்ள, இங்கு நிற்பது நல்லது அல்ல என மண்டையில் உரைக்கவும், தந்தையை அழைத்து கூட்டிச் செல்ல சொல்லலாம் என்று எண்ணுகையில், சைக்கிள் எங்கே என்று கேட்டால் பதில் என்ன சொல்வது என்று எண்ணம் வந்தது சட்டென, அன்னையின் அடி மின்னல் போல் கண்முன் வந்துவிட்டு போக, அந்த யோசனையை கைவிட்டவள், “பேசாம வெரசா நடந்து போயிராலாம்…நேரா குழலி வூட்டுக்கு போயிட்டு பொறவு நம்ம வூட்டுக்கு போலாம் கேட்டா குழலி வூட்டுல இருந்தேன்னுட்டு சொல்லிக்கலாம்…” என்று திட்டத்தை முனுமுனுத்தபடி வேகமாக நடக்க தொடங்கினாள் தரையை பார்த்தபடி…
அப்பொழுது அவளது எதிரில் சைக்கிளை இடிப்பது போல் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “கொஞ்மாச்சும் கூறிருக்கா… இப்படியா வந்து நிப்பாட்டுவாக..?” என்று பொறிய…
“எனக்கு இல்லதான் உனக்கு அதிகமா இருந்தா கொஞ்சம் குடு…”என்று நக்கலடிக்கவும் முகத்தை திருப்பிக் கொண்டாள்…
ஒரு பெருமூச்சுடன் நிதானமான குரலில், “இங்க பாரு கனி… உன்ன நான் ஒண்ணுமே பண்ண போறது இல்ல இங்க இருந்து வீட்டுக்கு எவ்வளவு தூரம்ன்னு உனக்கே தெரியும்… என்னைய பார்த்தா பாவமா இல்லையா… பிளீஸ்… ஊருக்குள்ள போனதும் நான் தனியா போயிக்குறேன்… என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வராது… நம்பு… ” என்று கூறவும் யோசிக்க தொடங்கியவள் அரைமனதாய் சரியென்று தலையை ஆட்ட,
“தேங்க்ஸ் கனி… உட்காரு…” என்று சைக்கிள்களை திருப்பி வைத்துக் கொண்டு நிற்க, பெண்ணவளுக்கு என்னவோ போல் இருந்தது…
சைக்கிளின் பின்னால் தட்டு தடுமாறி அவனை தொடாதவாறு அமர்வதற்கு பெரும் அவஸ்தையாக உணர்ந்தவள் மனதில், ‘இந்த கொடுமைக்கு நடந்தே போயிருக்கலாம்… சை… கஷ்டமா இருக்கே… கடவுளே…’ என்று கடவுளே என்று புலம்பியவளுக்கு பிடிக்கவும் வசதியில்லை, அவனை தொடாமல் உட்காரவும் வசதியில்லை…
அப்பொழுது சைக்கிளை நிறுத்தியவன், “கனி….” என்றழைக்கவும், சில நொடிகள் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள சட்டென இறங்கி நின்றவள், பெரும்மூச்சை இழுத்து விட்டாள்…
அவளை பார்த்தபடியே, மெல்லிய குரலில், “ஃபோன் வச்சு இருக்கியா…?” என்று கேட்கவும், அவள் புரியாமல் முழிக்க
“ஃபோன் வச்சிருக்கியான்னு கேட்டேன்…” என்று மீண்டும் அழுத்தி கேட்க, “ம்ம்ம்….” என்று தலையை ஆட்ட, “குடு…” என்று இவன் கைநீட்ட, இப்பொழுதும் புரியாமல் முழித்தபடியே, தன் இடுப்பில் சொருகி இருந்த ஃபோனை மெதுவாக எடுக்கவும், விக்னேஷ்க்கு குப்பென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது…
‘என்ன இவ இடுப்ப ஃபோன் வைக்குற ஸ்டான்டு மாதிரி யூஸ் பண்ணுறா… கேட்டது தப்பா போச்சோ… இல்ல டா விக்கி… நீ நல்லவன்… நீ நல்லவன்… ஸ்டெடி…’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கனிமொழி
“எதுக்கு ஃபோன் கேட்டீக…?” என்ற கேள்வியில் சுயத்திற்கு வந்தவன்,
“ஹாங்… அ…அது ஒ..ஒண்ணுமில்ல… இங்க குடு…” என சில நொடி தடுமாறி பின் நிதானத்திற்கு வந்தவன், வெடுக்கென்று அவள் கையில் இருந்து ஃபோனை பறிக்க, இவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது…
இத்தனை நேரம் பாவையாவளின் இடுப்பில் வீற்றிருந்ததால் அவளது இடுப்பு சுடு அந்த ஃபோனிற்கு இடமாறியிருந்தது… அதை உணர்ந்தவனுக்கு தான் பெரும் சோதனையாகி போனது…
‘சத்தியமா கொல்லுறாளே… ஃபோன் கேட்டது நம்ம தப்பு தான்… முடியலடா சாமி…’ என்று மனதில் புலம்பியபடி ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்…
“அய்யய்யோ என்ன பண்ணுதீக…? எங் ஃபோனை குடுங்க எங்கிட்ட…” என்று அவனிடம் இருந்து தன் ஃபோனை கைப்பற்றிக்கொள்ள  போராட, அதை சுலபமாக தடுத்தபடியே தன் வேலையில் கவனமாக இருந்தான்…
“இப்ப குடுக்கபோறீகளா இல்லையா…?” என்று போராடிக்கொண்டிருக்கும் போது,
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா…
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா…
அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்கிறேன்….
என்று பாடல் மெல்லிய ஒளியில் இன்னிசையாய் கேட்க, அமைதியாகி போனாள் கனிமொழி…
பாடலை ஓடவிட்டதும், அவளை பார்த்து “உட்காரு போலாம்… உனக்கு டைம் ஆகுது….” என்றதும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி போனவள், ஏதும் வாக்குவாதம் செய்யாமல் அமர போக,
ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன், “என்னை பிடிச்சுட்டு வரணும்னு தேவையில்ல… உனக்கு பேலன்ஸ்க்கு வேண்ணும்னா என் ஷர்டை புடிச்சுக்கோ… ” என்று மட்டும் சொன்னவன் முகத்தை திருப்பிக் கொண்டான்… இந்த மனநிலையை வாக்குவாதம் செய்து கெடுத்துக் கொள்ள விரும்பாததால் அமைதியாகவே பேசிவிட்டு அவள் அமர்வதற்காக காத்திருந்தான் விக்கி….
கனிமொழிக்கும் அச்சூழலும் பாட்டும் ஏதோ ஒரு விதமான இதத்தை கொடுக்கவும் அமைதியாக அவன் பின் அமர்ந்துக் கொண்டாள் அவனை உரசாதவாறு, அதை விக்கியும் கண்டுக்கொள்ளவில்லை…
தன் மனதை அப்படியே எடுத்து கூறும் பாடலின் வரிகளும் அந்த சூழ்நிலையும் அவனை அதை ரசிக்க தூண்டியது… இருந்தும் தன்னவள் தன்னை தொட்டுவிடாமல் பின் அமர்ந்திருப்பதற்கு பதிலாக முன்னால் தன் கைவளைவிற்குள் அமர்ந்திருக்கும் சுகத்தை மனம் வெகுவாக நாடியது… அதை கற்பனையில் ரசித்தபடியே சைக்கிளை ஊரை நோக்கி ஓட்டினான்…
சற்று நேரம் பொறுத்து பார்த்த கனிக்கு அதற்குமேல் முடியாமல் சூழ்நிலை காரணமாக விளைந்த லேசான நெருக்கமும், முன்பிருந்த மிக மெல்லிதான ஈர்ப்பும் அவளை அவனது முதுகு புறம் சட்டையை லேசாக பற்றிக்கொள்ள செய்தது…
அதை உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் சில்லென்று காற்று வீச, மனம் இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்த, அப்பொழுது ஓடியபாட்டின் வரிகளை சீட்டி அடித்துக் கொண்டே தன் வேலையை பார்த்தான்…
சற்று நேரத்தில் அவர்களது இதமான பயணம் முடிவிற்கு வரவும், இருவருக்கும் மனம் சுனங்கியது பிரிவால்… வீடுகள் இருக்கும் இடத்தை நெருங்கவும், சைக்கிளை நிறுத்தி, இறங்கி நின்றிருந்த அவளது முகத்தை பார்த்தவன் இனிதாய் அதிர்ந்தான்…
இவ்வளவு நேரம் அவனுடன் இருந்த இந்த அழகிய பொழுதில் விளைந்த வெட்கம் அவளது முகத்தை பிரகாசமாக காட்ட, அருகில் இத்தனை நேரம் அனுபவித்த அவளது நறுமணம் என ஏதோ செய்ய, அவனால் தன் விழிகளை அவள் மீதிருந்து அகற்ற முடியவில்லை…
சற்று நேரம் பொறுத்து பார்த்தவள் பின் நேரம் ஆவதை உணர்ந்து, மெல்லிய குரலில் “எனக்கு நேரமாகுது…” என்றதும் தான் தன் கவனத்தை அவள் மீதிருந்து பிரித்தெடுத்தான்…
பின் லேசாக செருமியபடி, “தேங்க்ஸ்…” என்றவாறே சைக்கிளை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, நகர்ந்து நிற்க, அவளோ பதிலேதும் சொல்லாமல் கஷ்டப்பட்டு நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்தபடியே ‘வருகிறேன்…’ என்பதை போல் தலையை ஆட்டிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்று சென்றாள் மெல்ல தன் சைக்கிளை நகர்த்தியபடி…
அவளது செயல், ஆணவனின் இதயத்தை பலமாக தாக்கவும், “கொல்லுறடி கனி…” என்ற முனுமுனுப்புடன் தன் நெஞ்சை நீவி விட, அப்பொழுது தான் தன் பாக்கெட்டில் இருந்த அவளது ஃபோன் நினைவிற்கு வந்தது…
அதை எடுத்து லேசாக வருடியவன் சிறு புன்னகையுடன், நண்பனின் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான்…
இங்கு கவியழகனோ அரிசி மில்லில் இருந்து கிளம்பியவனின் வண்டி, பூங்குழலியின் வீட்டு தெருமுனையில் இருந்த புளிய மரத்தின் அருகில் சென்றுதான் நின்றது….
தொடரும்….

Advertisement