Advertisement

UD:24
பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, “என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ… என்ன நினைச்சுட்டு இருக்கீக அம்புட்டு பேரும்…?” என்று மீசையை முறுக்கி கர்ஜித்தவர், அப்பொழுது தான் மகனை பார்த்தார்….
கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலை கவிழ்ந்து நின்றிருந்தான்… அவன் மனம் உலை கொலமாக கொதித்துக் கொண்டிருந்தது பூங்குழலியை எண்ணி…
மகனை இருக்கும் நிலை கண்டதும் கோபம் கொப்பளிக்க, பூங்குழலியை பார்வையால் எரிப்பது போல் பார்த்தவர், “ஏய்… என்ன திமிரு கூடி போச்சோ… என்ற பையன் மேல பழியை போட்டு இருக்க… உன்னய மாதிரி தகுதி இல்லாத ஆளுங்க கூட எல்லாம் என்ற மவன்  சகவாசம் வச்சுக்க மாட்டான்… அவன் என் புள்ள… கொன்றுவேன்… ஒழுங்கு மரியாதையா இருந்துக்க…” என்று மிரட்ட, கவியழகனின் கோபம் இப்பொழுது தந்தையின் மீது பாய்ந்தது…
‘உங்கள மாதிரியா…? நிச்சயமா இல்ல ப்பா… நான் உங்கள மாதிரி இல்ல… நான் பூங்குழலிய என் அத்த பொண்ணா பார்த்தேன்… காதலிச்சேன்… இதுல பணம், தகுதி எங்க இருந்து வந்துச்சு…? ஆனா இப்ப இவ பண்ண வேலைக்கு இவமேல கோபமும், ஆத்திரமும் தான் இருக்கு… இவள..’என்று தன் இயலாமையை பல்லை கடித்தபடி நின்றிருந்தான்…
பூங்குழலி, “என்ன பெரியவரே…பிரச்சனையில இருந்து நைசா தப்பிக்க பாக்குதியலோ…?” என்று நக்கலாக வார்த்தையை இழுக்கும் சமயம் விக்கியும் விஷயம் கேள்விப்பட்டு வந்தவன், தோழனின் அருகில் நின்றான் அதிர்ச்சியோடு….
“ஏய்… பல்லை ஒடுச்சுபுடுவேன்… பொட்டகழுத…”என்று ஆவேசமாக பேசும் போது அர்க்கபரக்க ஓடிவந்தார் வசுந்தரா…
மகளின் அருகில் வந்த நொடியே, அவள் முதுகில் நான்கு விழுந்தது பலமாக… “ஆஆஆ… விடு ஆத்தா…”என்று விலகி கனியின் முதுகின் பின் மறைய,
“ஏய் புள்ள… எம்பின்னால ஏம்ல நிக்குறவ… உனக்கு உழ வேண்டியது எனக்கும் சேர்த்து விழும் புள்ள ஒழுங்கா தள்ளி நில்லு…”என்று கனி லேசாக முனுமுனுக்க,
“சீசீ… பேசாம இருடி… “என்று அடக்கியவள், அன்னையின் புறம் சீறினாள்…
“எதுக்கு ஆத்தா என்னைய அடிக்குறவ… நான் என்னத்த தப்பு பண்ணுனேனு, என்னைய அடிக்குத…?” முகத்தை பாவமாக வைத்து கேட்கவும் வசுந்தராவிற்கு கோபம் கனன்றது மகளின் செயலில்…
ஊரில் அவள் இழுத்து வரும் வம்பு தும்புக்கே இவளது திருமணத்தை எண்ணி பயந்தவருக்கு இப்பொழுது இவள் செய்து வைத்திருக்கும் காரியத்தால் நெஞ்சு வலியே வந்து விடும் போல் இருந்தது வசுந்தராவிற்கு…
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்கப்பா…” என்று முறுக்கு மீசையொன்று குரல் குடுக்கவும், கூட்டத்தில் இருந்த சலசலப்பு சற்று அடங்கியது உடன் வசுந்தராவும் தன் அடியை நிறுத்திவிட்டு, முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் ஆனால் ஒரு வார்த்தை கூட யாரிடமும் வாய் திறக்கவில்லை ஏன் குழலியை திட்ட கூட வாயை திறக்கவில்லை…
“என்னப்பா எல்லாரும் வந்தாச்சா… ஆரம்பிக்கலாமா…”என்று ஒரு வெள்ளை வேட்டி கேட்கவும்,
“ஆமா ஜெயசீலன் வரலையா…?” என்று ஒருவர் கேட்கவும்,
“அட அவரு வரும் போது வரட்டும் பா… நாம ஆரம்பிக்கலாம்… அவரு, சம்பந்தபட்டவங்களுக்கு பெரியப்பா ஊட்டு அண்ணன் தானே…” என்று வெள்ளை வேட்டி சொல்லவும், கூட்டத்தில் ஒரு பெண்மணி
“என்ன இப்படி சொல்லிப்புட்டீக… பெரியப்பா ஊட்டு அண்ணனா இருந்தா என்ன… இந்த வசுந்தரா புள்ளைக்கு கூட.பொறந்த பொறப்பு பண்ணாததை பண்ணதும், இந்த புள்ளைக்கு தாய்மாமன் முறை செஞ்சதுன்னு அம்புட்டும் அவர்தானே… இப்ப அந்த குடும்பத்து பொண்ணுக்கு பிரச்சனைன்னா அவர் இல்லாம எப்படி…?” என்று கேள்வி எழுப்ப, பூங்குழலி நிமிர்ந்து கர்வமாக ஓர் பார்வை முருகவேலின் மேல் பாய, பெரிதாக அடி வாங்கியது போல் உணர்வு அவருள்…
“அதானே… அவங்க சொன்னதும் சரிதேனே..”என்று ஒருவர் ஆமோதிக்கும் நேரம் ஜெயசீலன் அங்கு வந்து சேர்ந்தார் கம்பீர நடையில்…
பூங்குழலியோ வந்தவரை நிமிர்ந்த பார்வையில் எதிர்க் கொண்டாள் எந்த குற்ற உணர்வும் இல்லாது… கூட்டத்தில் இருந்த யாரையும் பார்க்காது பூங்குழலியை மட்டும் பார்த்தவாறே வந்தவர் அவளது பார்வையில் இருந்த நிமிர்வை கண்டு கொண்டவர், அமைதியாக அவள் தலை கோதி அருகில் நின்றுக் கொண்டார்…
“பொறவு என்னப்பா… அம்புட்டு பேரும் வந்தாச்சுல… ம்ம்ம்… ஆரம்பிக்கலாம்… நடந்த பிரச்சனை என்னனு எல்லாருக்கும் தெரியும்… பிராது குடுத்து இருக்குறது இந்த பொண்ணு… அது என்ன சொல்லுதுன்னு பார்போம்…” என்று ஒரு வெள்ளை வேட்டி ஆரம்பிக்க, அனைவரும் பூங்குழலியை பார்த்தனர்…
“நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லங்க… எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்… பெரியவர் வீட்டு வாரிசு இப்படி பண்ணுவாகன்னுட்டு நினைக்கல… அவங்க ஏதோ பணம் தகுதி மட்டும் தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா இப்படி எல்லாம் பண்ணுறாக… ” என்று தலையை குனிந்து ஓரக்கண்ணால் முருகவேலை பார்த்தபடியே சொல்ல,
“ஏய்… என்ன வாய் நீளுது… என் வாரிசை இங்க ஒருத்தனும் குறை சொல்ல முடியாது… அவன் கலப்படம் இல்லாத தங்கம்…” என்று முருகவேல் எகிற,
“ம்ம்ம்… நீங்கத்தேன் மெச்சிகணும்…” என்று பூங்குழலி சத்தமாக முனுமுனுக்க, அவள் கையை அழுத்தி பிடித்தாள் கனி…
“ஏய் ஏன்புள்ள என்னாச்சு உனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்குறவ இன்னைக்கு… உண்மையா அந்த அண்ணே உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாகளா….?” என்று அவள் காதை கடிக்க, பூங்குழலி சட்டென திரும்பி ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு மீண்டும் தலையை திருப்பிக் கொண்டாள்…
அதை பார்த்து கனிதான் ஆவென்று வாய்பிளந்து நிற்கும்படி ஆனது… இங்கு விக்கியோ நண்பனிடம், “என்னடா மாப்ள… நான் தூங்குன்ன கேப்புல என்ன பண்ணி வச்சிருக்க…? ஆனா இன்னைக்கு உன் ஆளு ஒரு பார்ம்ல தான் இருக்கு டா…” என்று முனுமுனுக்க கவியழகன் எந்த பதிலும் கூறாமல் ஏன் தலையை நிமிர்ந்து கூட பார்க்காமல் நின்றிருந்தான்…
அத்தனை அவமானமாக இருந்தது… அவள் தன் தந்தையை பழிவாங்க தன்னையும் தன் காதலையும் பகடை காயாக மாற்றியதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை… அவள் தன் தந்தையை குறி வைக்க, ஒவ்வவொருமுறையும் அவனது மனதில் இனித்து வந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக கசக்க தொடங்கியிருந்தது…
“இங்குட்டு பாரு ஆத்தா… பேசாம இரு… எதுக்கு கூட கூட பேசுறவ…” என்று ஒரு வெள்ளை வேட்டி குரலுயர்த்தி கேட்கவும்,
“பின்ன என்னங்கையா… இங்க நிக்குற பெரியவரோடு வாரிசு என் கைய புடிச்சி இழுத்ததை நீரு அம்புட்டு பேரும்ந்தானே கண்டீக… அதுக்கு மொத சாட்சியா ராசு இருக்கானே, அவந்தானே உங்களைய எல்லாம் கூட்டியாந்தது…” என்று ராசுவை எள்ளளாக ஒரு பார்வை பார்க்க, முருகவேலோ அவனை கொலைவெறியோடு பார்த்திருந்தார்…
அதை பார்த்து அவனுக்கு வயிறு வலிப்பது போல் ஓர் உணர்வு சட்டென உண்டாக, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலையில் கை வைத்தபடி குத்த வைத்து அமர்ந்து விட்டான்…
‘செத்தடி மவனே… யாரு மேல கை வைக்க பார்த்த… நைசா கோத்துவிட்டேன் பார்த்தியா…? ஒத்த கல்லுல ரெண்டு மாங்கா…’ என்று பார்வையால் அவனை நக்கல் பார்வை பார்த்து வைத்த பூங்குழலி, மேலும் தொடர்ந்தாள்….
“அப்படி இருக்கச்ச, பெரியவர் தங்கம் வைரம் பவளம்னா எப்படி…? ம்ம்ம்…  பணம், நெலம், சொத்துன்னு சேர்த்து வைக்க தெரிஞ்சவருக்கு பையன வளக்க தெரியல போல… பாவம் அவரும்தேன் என்ன பண்ணுவாரு சொத்த அடக்காக்கவே பொழுது போத மாட்டிங்கீது இதுல பையன எப்படி வளர்ப்பாக…? அதான் பையன சிறுசுலேயே அவிக மாமனார் மாமியார் ஊட்டுல விட்டுட்டாகலோ என்னவோ யாரு கண்டா…?” என்றபடி ஆச்சரியபடுவது போல் பேசவும்,
முருகவேலுக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்… பூங்குழலி நச்சென்று அவர் நடுமண்டையில் கொட்டியது போல் ஒரு சந்தோஷம் அவளுள், அதுவும் பதில் பேச முடியாமல் முருகவேல் தலை கவிழ்ந்து அமைதி காப்பதை கண்டு ஏகபோக சந்தோஷம் அவளுள்… ஒருகுத்தாட்டம் போட துடித்த மனதை மிகவும் கடினப்பட்டு அடக்கி நின்றிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்…
ஜெயசீலனுக்கு கூட ‘சபாஷ்…’போட வேண்டும் போல் ஓர் உணர்வு, வசுந்தாவிற்கு அவளது நோக்கம் இப்பொழுது புரிந்தாலும் அவள் மீது புதிதாக ஓர் கோபம் முளைத்தது, கனியோ அப்பொழுது திறந்த வாயை இன்னும் மூடியபாடில்லை, கவியழகனுக்கு அவள் மேல் கோபம் இருந்தும் தைரியமாக அத்தனை பேர் மத்தியிலும் சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ராசுவை அடித்தும் தந்தையிடம் அழகாக கோர்த்து விட்டும், நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டத்தையும் மெச்சாமல் இருக்க முடியவில்லை ஒரு ஓரத்தில், இதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் நின்றிருந்தது விக்கி மட்டுமே. ஏனென்றால் அவனது பார்வை கவனம் முழுவதும் கனிமொழியின் அதிர்ந்த முகமும், செவ்விதழிலுமே இருந்தது… (அவன் கவலை அவனுக்கு…)
“சரி புள்ள, நீ சொல்லுதைய ஒத்துக்குரோம் அதுக்காக தேவையில்லாம பேச கூடாது… அமைதியா இரு…” என்றதும் அலட்சியமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்…
மேலும் அவர், “என்னப்பா கவியழகா அந்த புள்ள சொல்லுறதுக்கு என்னத்தவ சொல்லுத…? செஞ்சதை ஒத்துக்குறயா…?” என்று முறுக்கு மீசையொன்று கேட்கவும் எதுவும் கூறாது அமைதியாகவே நின்றிருந்தான்…
அவனது அமைதியை பார்த்து வெள்ளை வேட்டிகளும், முறுக்கு மீசையும் கூடி பேசி ஐந்து நிமிடம் கழித்து, “என்ன வசுந்தரா அமைதியா நின்னா என்ன அர்த்தம்…? உம் பொண்ணு பேசுனதுக்கு என்ன சொல்லுத…?” கவியழகன் அமைதி காக்கவும் வேறு வழியின்றி நாசுக்காக அவரை இழுத்து பூங்குழலியை அடக்க முயற்சி செய்தனர் ஆனால் அது முடியாது என்று அடுத்த நொடியே புரிந்தது அவர்களுக்கு…
“என்ன இது கேள்வி… பாதிக்கப்பட்டது நாதேனே அப்ப நாதானே பேசணும்… எதுக்கு என்ற ஆத்தால கேள்வி கேக்குதிய…?” என்று பூங்குழலி ஆவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு கேட்க,
அதில் தலையில் கைவைத்து கொண்டவர்கள், “செரி ஆத்தா… இப்ப என்னத்தேன் பண்ணனுங்கற…?” என்று கேட்டதும் பட்டென பதில் வந்தது அவளிடம் இருந்து,
“மன்னிப்பு கேட்கணும்…?”
“என்னது மன்னிப்பா.. ஏய் ஆத்தா… தெரிஞ்சுத்தேன் பேசுதியா அங்குட்டு நிக்குறது உன்ற மாமா பையனாக்கும்… ”
“அய்யோ அய்யா… நான் மன்னிப்பு கேட்கணும்னு சொன்னது பெரியவர… அவர் வாரிசை இல்ல…” என்றதும் அனைவரும் திகைத்தனர்…
“என்னபுள்ள பைத்தியம் புடிச்சு போச்சா…? ஏதோ பொம்பள புள்ளயாச்சேன்னு இவ்வளவு நேரமும் நாங்க பொறுமையா இருந்தா என்ன வேண்ணும்னாலும் பேசுவியோ…?” என்று ஒரு வெள்ளை வேட்டி பேச ஆரம்பிக்கும் போதே அங்கு சலசலப்பு உண்டானது அவளது வார்த்தையால்…
அப்பொழுது இடைபுகுந்த ஜெயசீலன், தன் கருத்தை சொல்லவும், குண்டுசி விழுந்தாலும் சத்தம் வரும் அளவுக்கு அமைதி நிலவியது…
பூங்குழலியோ அதிர்ந்து முருகவேலை பார்க்க, அவரும் இவளை அதிர்ந்து பார்த்தபடி ஒரு ஆராய்ச்சி பார்வையை அவள் மீது செலுத்த, இப்பொழுது அவளது பார்வை கவியழகன் மீது படிந்தது… இத்தனை நேரமும் தலைகவிழ்ந்து இருந்தவன் இப்பொழுது அவளை கண்களால் எரிந்து விடும் பார்வையோடு பார்த்திருந்தான்…  
“அட ஜெயசீலன் சொல்லுறதும் செரித்தேன்… இம்புட்டு ஆன பின்னாடி இப்படி பண்ணுறதுத்தேன் நியாயமும் கூட…”என்று வெள்ளை வேட்டி ஒன்று கூறவும் முருகவேல் பொங்கி விட்டார்…
“என்னவே பேசுதீக… அவந்தேன் கூறுக்கெட்ட தனமா பேசுறானா நீங்களா செரின்னுட்டு மண்டைய ஆட்டுறீக…?”
“பொறவு… என்ன பண்ணுமாம்…? ஊரே பார்த்திருக்கு என்ன நடந்துச்சுன்னு, ஒன்னும் நடக்கலைன்னாலும் பாதிப்பு எங்க ஊட்டு பொண்ணுக்குத்தேனே… முள்ளு மேல சேல விழுந்தாலும் சேல மேல் முள்ளு விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தேன்… நான் சொன்ன மாதிரி  நடக்கணும்… ஏற்கனவே நீரு அம்புட்டு பேரும் என்ற தங்கச்சி வசுந்தராவுக்கு நியாயமா நடந்துக்கல, இப்பவாச்சும் பார்த்து நடந்துக்கங்க… பொறவு நாங்க ஒரேயடியா ஊர விட்டு ஒதிங்கிக்கறது போல பண்ணிபுடாதீக…” என்றவர் இனி முடிவு உங்கள் கையில் என்பதை போல் கையை பின்னால் கட்டிக் கொண்டு எங்கோ வெறித்தப்படி நின்றிவிட்டார் ஜெயசீலன்….
“அட என்னப்பா இது… நீயும் இந்த ஊர்ல முக்கியமான ஆளுத்தேன்… ஏற்கனவே எதுலையும் கலந்துக்க மாட்டீங்கிற… இப்ப எதுக்கு இப்படியெல்லாம் பேசுத… நாங்கதேதான் பேசிட்டு இருக்கோம்ல… சத்த பொறு பா…” என்று ஒரு முறுக்கு மீசை கூறி முருகவேலின் புறம் திரும்பி,
“நீரு என்ன சொல்லுதீக அப்பு… ஜெயசீலன் சொல்லுறதும் வாஸ்துவம்ந்தேனே… இந்த பொண்ணு ஒண்ணும் யாரோ இல்லையே கவியழகனுக்கு ஐத்த மகத்தேனே இதுல உமக்கு என்ன பிரச்சன…” என்று கேட்கவும்,
“அதெல்லாம் எனக்கு தெரியாதுவே… எம்மவனுக்கு வேற முடிவுக்கு பண்ணியிருக்கேன்… என்ன நடந்துச்சுன்னு தெரியாம நாலு பேரு பாத்துட்டீகன்னு இந்த கண்ணாலத்துக்கு என்னால சம்மதம் எல்லாம் சொல்ல முடியாது… “என்று வீம்பாக நின்றார் தன் பிடியில்…
பூங்குழலிக்கோ எவ்வளவு நேரம் இல்லாத பயம் பதற்றம் உள்ளுக்குள் உண்டானது ஜெயசீலன், கவியழகனுக்கும் தனக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறியதும்…
தன்னவன் மீது கொண்ட காதலை அவனது தந்தையின் மீது கொண்ட பழியுணர்வு வென்றதால் தன் காதலை கொன்றாள் மனதில் உண்டான வலியோடு… இப்பொழுது மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மனம் தடுமாறியது…
திருமண பேச்சு என்ற ஒன்று தொடங்கியதும் பூங்குழலியின் குரல் அங்கு ஒளிக்கவே இல்லை… தாவணி முந்தானையை திருகியபடி நிமிர்ந்து கவியழகனை பார்க்க, அவனோ இப்பொழுது தலை நிமிர்ந்து இவளையே எறிக்கும் பார்வையை பார்த்துக் கொண்டு இருந்தான்… அதை பார்த்து பதறியவள் சட்டென தன் தலையை தாழ்த்தி கொண்டாள்…
‘ஆத்தி… என்ன இவுக இப்படி முறைக்காக… கையில சிக்கன்னா ஆட்டுகல்ல போட்டு ஆட்டிருவாக போலவே… இந்த கண்ணாலம் நடந்தா நீ செத்தடி பூங்குழலி… ‘ என்று எண்ணுகையில் தான் முருகவேலின் வேற சம்பந்தம் என்ற வார்த்தை காதில் விழவும், இவளது காதல் நெஞ்சம் சுனங்கியது நொடியில், ‘வேற சம்பந்தமா… ம்ஹும்… ஆனா இத விட்டா அத்தானை கட்டிக்க வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது… என்ன ஆனாலும் சரி கண்ணாலத்துக்கு பொறவு அத்தானை சரிகட்டிக்கலாம்… இப்ப அமைதியா அத்தான் கையால தாலியை வாங்கிக்கலாம்… அம்மா தூர்கை யம்மா… நீத்தேன் என்னைய காப்பாத்தணும்….’என்ற முடிவுடன் கடவுளிடமும் ஒரு வேண்டுதலை வைத்தாள் அவசரமாக…
கவியழகனோ மனதில், ‘சிக்குன டி… என் பெயரையே கெடுத்துட்டியே டி பாவி… இப்ப இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் நான் காட்டுறேன் யாருன்னு… ‘என உள்ளுக்குள் கருவிக் கொண்டான் கவியழகன்…
“யப்பா முருகவேலு இதெல்லாம் செரியில்ல சொல்லிப்புட்டேன்… ஒரு பொட்டபுள்ள வாழ்க்க விஷயம்பா… சும்மா வீம்புக்கு நிக்காத… உம்மவனுக்கு ஒண்ணும் ஆசையில்லாமலையா இப்படி பண்ணியிருப்பான்… ஐத்த மகன்னு உரிமையெடுத்துக்க நினைச்சு இருப்பான் அது இப்ப இப்படி ஆயிப்போச்சு… பேசாம கண்ணாலத்துக்கு சம்மதம் சொல்லுப்பா…” என்று முறுக்கு மீசை குரல் உயர்த்தவும், முருகவேலுக்கு எரிச்சலாக வந்தது, ‘எம் முன்னாடி கைகட்டி நின்னபயலுக இப்ப என்னையவே நிக்க வச்சு அதட்டுற நிலமைக்கு கொண்டு வந்துட்டால இந்த சிலுவண்டு… சை…’என்று சலிப்புடன் தலையை திருப்பிக் கொண்டார்…
முருகவேல் பதில் பேசாமல் இருந்ததால் நாட்டாமை பதவியில் இருந்த ஒருவர், கவியழகனிடம் “இங்க பாரு பா தம்பி, உனக்கு உன்ற ஐத்த மக பூங்குழலிய கட்டிக்க சம்மதமா…?” என்று கேட்கவும்
“சம்மதம்…” என பட்டென விழுந்தது வார்த்தை அதில் இருஜீவன்கள்  அதிர்ந்து அவனை பார்த்திருந்தனர்…
ஒன்று முருகவேல், ஏதோ பூங்குழலி தன்மேல் உள்ள கோபத்தில் பொய் கூறி தன்னை பஞ்சாயத்தில் நிற்க வைக்க தன் பையனை உபயோகித்துள்ளாள் என்று எண்ணியிருந்ததால் மகனிடம் ஒரு வார்த்தை கூட கேட்டாமல் இருந்தவருக்கு அவனது சம்மதம் என்னும் வார்த்தை அதிரச்சிக்குள்ளாக்கியது… மகனுக்கு இப்படியொரு நினைப்பு எப்படி வந்தது என்றே புரியவில்லை…
மற்றொன்று பூங்குழலி, தான் செய்த காரியத்துக்கு தன்னை கொலை செய்யும் அளவிற்கு கோபம் கொண்டுள்ளான் அதனால் அனைவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி சம்மதம் சொல்ல வைக்க வேண்டும்  என்று எண்ணியிருந்தவளுக்கு, இப்படி ஒரு பதிலை சொல்லுவான் என்று ஒரு சதவீதம் கூட நினைத்து பார்க்கவில்லை என்பதே அவளது உண்மை மனநிலை…
மகனது பார்வை பூங்குழலியின் மீது அழுத்தமாக படிந்திருப்பதை கண்டு, ஏதோ புரிந்தது போல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்… இப்பொழுது முருகவேலும் மகனுடன் சேர்ந்து அவளை முறைக்க உள்ளுக்குள் கிலிப்பிட்டித்துக் கொண்டது பூங்குழலிக்கு…
கவியழகன், சம்மதம் என்று சொன்னதும் இப்பொழுது வசுந்தராவிடம் கேட்க, பூங்குழலி மனதில் ‘அதென்ன எங்கிட்ட கேட்கவே இல்ல… கட்டிக்க போறது நாந்தானே அப்ப எங்கிட்டல்ல கேட்கணும்… இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டாணுங்க… இருங்க எல்லாத்துக்கும் ஒருநாள் இருக்கு…’என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள் குழலி….
“நா சொல்ல இதுல ஒண்ணும் இல்லைங்க… ஜெயசீலன் அண்ணே  என்ன சொல்லுதாகலோ அதே தாங்க என்னக்கும் என்ற மவளுக்கும்…”என்று முடித்துக் கொண்டார்…
அதில் முருகவேலுக்கு கோபமும் எரிச்சலும் உண்டாக, ஜெயசீலனோ கர்வமாக உணர்ந்தார்… பணத்திற்கு அடிபடியாத சில விஷயங்களில் அன்பும் ஒன்று, அதை ஜெயசீலன் தன் தங்கைக்கு அதிகமாகவே அள்ளி தந்திருக்க அது இன்று அவரை தலை நிமிர்ந்து நிற்க வைத்தது அனைவர் முன்பும்…
“பொறவு என்ன பா… சம்பந்த பட்ட எல்லாரும் சம்மதம் சொல்லியாச்சு… அடுத்து என்ன கண்ணாலம்ந்தேன்… நாள மறுநாள் திங்ககிழம, முகூர்த்த நாள் தான் அன்னைக்கே கண்ணாலத்த வச்சுக்கலாம் எல்லா சொல்லுதீக …” என்று ஒருவர் கேட்கவும்,
பெரியவர்கள் அனைவரும் சம்மதம் சொல்ல, கவியழகன் பூங்குழலி திருமணம் நிச்சயக்கப்பட்டது வேகமாக… இதையெல்லாம் வெறுப்பாக பார்த்திருந்த முருகவேலுக்கு மனம் குமுறியது ஊர் கூட்டி அழைப்புவிடுத்து பெரிய திருவிழா போல் தன் மகனுக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்று கனவு கண்டவருக்கு இப்பொழுது அவசர கதியில் கோவிலில் வைத்து நடக்கும் இத்திருமணம் அவரது கோபத்தை மேலும் தூண்டியது…
இருவரும் தன்னை முறைப்பதை பார்த்த பூங்குழலி அவசரமாக, தன் அருகில் நின்றிருந்த ஜெயசீலன் மாமனின் கையை இறுக்க பற்றினாள்…
அவர் என்ன என்ற அவள் புறம் திரும்ப, அவர் காதில் பூங்குழலி ஏதோ சொல்ல அவள் புறம் குனிந்திருந்தவரின் பார்வை மட்டும் உயர்ந்து எதிரில் நின்றிருந்த முருகவேல், கவியழகன் மீது படிந்து மீண்டது ஒரு நொடி…
அவள் பேசி முடித்ததும் நிமிர்ந்தவர், “அப்புறம் முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்குங்க….” என்று பெரியவர்களை பார்த்து சொல்ல, முருகவேல் யோசனையாக புருவம் சுருக்கி பார்க்க, கவியழகன் உலகமே அழிந்தாலும் தன் பார்வையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை போல் பார்த்திருந்தான் அவளை…
தொடரும்….

Advertisement