Advertisement

UD:23
 ஒரு பெருமூச்சை விட்ட காயத்ரி, அதன்பின் எதுவும் கூறாது அறையை விட்டு வெளியேறினார்… அத்தை சென்றதும் அன்னையின் முகத்தை பார்த்த சின்னவளுக்கு, தாயின் முகத்தில் இருந்த சோகம் ஏனென்று புரியவில்லை என்றாலும் அவருடன் ஒட்டியே இருந்தாள்….
சின்னவளின் எண்ணம் முழுவதும், மாமன் சொன்ன ‘தகுதி, அன்னக்காவடி’ என்ற வார்த்தையிலேயே சுற்றிக் கொண்டு இருந்தது, அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற யோசனையும் தீவிரமாக இருக்க, தன் பாவடையை நோண்டியபடியே இருந்தாள்…
மாலையானதும் வசுந்தரா மகளை அழைத்துக் கொண்டு தன் கணவருடன் வாழ்ந்த அவ்வீட்டிற்கே செல்வதாக சொல்ல, முருகவேல் “தாராளமா போயிட்டு வா மா… ஏதாச்சும் வேண்ணும்னா சொல்லு பண்ணித்தாறேன்…” என்று அவரது வார்த்தைக்கு இகழ்ச்சி யாக ஒரு புன்னகையை சிந்திய வசுந்தராவிற்கு தெரியும் இது அனைத்தும் வெறும் வாய் வார்த்தை என்று இருந்தும் எதுவும் கூறாமல் அமைதியாக செல்ல முற்பட்டவரை தடுத்த செல்லதாயி, தானும் உடன் வருவதாக கூறி கிளம்பிவிட்டார் முருகவேல் தடுத்தும்…
காயத்ரிக்கு கணவன் மீது ஒருவகை  வெறுப்பு உண்டாக அமைதியாக சென்றுவிட்டார் தன் பணியை பார்க்க… தன் கணவர் கட்டிய வீட்டில் வந்து அமர்ந்த வசுந்தராவிற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் மகளின் படிப்பிற்கு உணவிற்கு வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
அப்பொழுது வசுந்தராவின் பெரியப்பா மகன் ஜெயசீலன் அவருக்கு உதவி கரம் நீட்ட அதை மறுத்துவிட்டார்… அதிகம் படித்திடாததால் என்ன வேலை செய்வது எங்கு செல்வது என்று புரியாமல் இருந்தவருக்கு இரண்டு நாட்கள் தீவிர யோசனைக்கு பின், விவசாயம் செய்வது என்று முடிவெடுத்தார்…
ராஜேந்திரன் இதுவரை உழைத்தது என்று சேர்த்து வைத்த காசு மொத்தத்தையும் கொண்டு தான் இந்த வீட்டை கட்டியிருந்தார்… அதனால் சேமிப்பு என்று இப்பொழுது அவர் கையில் பெரிதாக எதுவுமில்லை… திருமணத்திற்கு சீரென்று ஒரு பங்கு நிலத்தை தருவதாக சொன்னதையும் ராஜேந்திரன் மறுத்திருந்ததால் அதுவும் இல்லாமல் கையறு நிலையில் நின்றார் வசுந்தரா…
அப்பொழுது ஜெயசீலன் தன் நிலத்தை தருவதாக கூற, வேண்டாம் என்றவர் தன் அண்ணனிடம் சென்று நின்றார்… முழுதாக உதவி புரியவில்லை என்றாலும் கொஞ்சம் கருணை காட்டுவார் என்ற எண்ணத்தில்…
ஆனால் அவரோ, “என்ன வசுந்தரா பணத்தோட அரும தெரியாம இருக்க… அப்படியே சும்மா எல்லாம் நிலத்த தூக்கி குடுத்துட முடியாது… நீ வேற வாழ்க்கைக்குன்னு சொல்லுறனால தெக்கால இருக்க இரண்டு ஏக்கர் நிலத்த தாரேன்… ஆனா அந்த நிலத்தோட காசை குடுத்துட்டு வாங்கிட்டு போ… நானும் தாராளமாக நிலத்த உன் பெயருக்கு எழுதி தரேன்… எப்படி வசதி…? யோசிச்சு சொல்லு…” என்று கறாராக பேசியபடி தன் அறைக்குள் சென்றுவிட, வசுந்தராவால் அப்பொழுது தன் நிலையை எண்ணி அழ மட்டுமே முடிந்தது… ஆனால் அழுவதால் எவ்வித பயனும் இல்லையென்று புரிந்திருந்தார்…
எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார் என்பதே அறியாமல் வீட்டிற்கு வந்தவர் அப்படியே கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டார்… செல்லதாயி என்னவானது என்று கேட்டதற்கு நடந்ததை கூற, தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழது புலம்ப மட்டுமே முடிந்தது அவரால்…
பின் ஜெயசீலன் வந்து கேட்க, அவரிடமும் நடந்ததை கூற, கோபம் தலைக்கேறியது அவருக்கு உடன் பிறந்த தங்கைக்கு செய்வதற்கு பணத்தை எதிர்ப்பார்க்கும் முருகவேல் மீது வெறுப்பு முகிழ்ந்தது உள்ளுக்குள்… அதன் விளைவு ஊர் பெரியவர்களை ஒன்று கூட்டி நியாயம் கேட்க, முருகவேல் அந்த ஊரின் பெரியதலைகட்டு என்பதால் அவர் குரலே அங்கு ஜெயித்தது…
ஜெயசீலன், “இப்ப என்னதுக்கு நீ இப்படி அழுகுற…? அவென் மட்டுத்தேன் அண்ணனா ஏன் என்னைய எல்லா பார்த்தா அண்ணனா தெரியலையா ஒம்பொண்ணுக்கு…? சும்மா அழுகுறத நிறுத்து ஆத்தா…” என்று சொல்லவும் தான் செல்லதாயி சற்று ஆசுவாசப் பட்டார் மகளுக்கு கரம் நீட்ட ஓர் பந்தம் இருக்கிறது என்று…
அதன்பின் வசுந்தராவின் புறம் திரும்பியவர், “இங்க பாரு மா… உனக்கு இந்த அண்ணன் இருக்கேன்… என்ன பண்ணனும்னு சொல்லு பண்ணுத்தேன்… எனக்கு கூட பொறந்த பொறப்பு இல்லையேன்னுட்டு நா என்னைக்கும் வருத்த பட்டதேயில்ல நீ இருக்கனால… தயவுசெஞ்சு என்ன வேண்ணும்னுட்டு கேளும்மா…” என்று தூணில் சாய்ந்து அமர்ந்து எங்கோ வெறித்து பார்த்திருந்தவரின் தலையை வருடியபடி கேட்க அவரை நிர்மலமான  முகத்துடன் நிமிர்ந்து பார்த்தார் வசுந்தரா…
இதையெல்லாம் சற்று தொலைவில் ஜெயசீலனின் மகள் கனிமொழியுடன் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்த பூங்குழலி பார்த்துக் கொண்டு இருக்க, மெல்ல எழுந்து அன்னையை நன்கு ஒட்டிக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்… உனக்காக நான் இருக்கிறேன் என்னும் விதமாக…
மகளை தன்னுடன் சேர்த்தனைத்துக் கொண்டவர், “இந்த வீட்டை வித்து அதுல வர காசை வச்சு அண்ணாகிட்டயிருந்து நிலத்தை வாங்கிக்குத்தேன் அண்ணே…” என்று சொல்லவும் ஜெயசீலனும் செல்லதாயும் அதிர்ந்தனர்…
“அம்மாடி ராசாத்தி… என்னவே சொல்லுத…? இந்த வீட்ட உன் ஊட்டுகாரர் ஆசையா கஷ்டப்பட்டு உழைச்சு கட்டுன வீட்டுன்னு சொல்லுவியே மா இதைய போய் விக்கணும்னுட்டு சொல்லுத… வேண்டாம் தாயி… இதைய வித்துட்டா எங்குட்டு தங்குவ…? நான் இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு பொறவு…? வேண்டாம் டா ராஜாத்தி…” என்று குரல் தழுதழுக்க சொல்லவும்,
“இல்ல ஆத்தா… ஆரு கிட்டையும் கை ஏந்தி நிக்க நா விரும்பல… இது என்ற வூட்டுகாரர் சம்பாதிச்சு கட்டுன வீடு, இதைய வச்சு நான் பாத்துக்குவேன்… அண்ணனெங்குற உரிமைல கேட்டு பார்த்தேன் அவருக்கு சொத்து முக்கியமா இருக்கும் போது நான் இனி போய் கெஞ்ச முடியாது…”என்றவர், இப்பொழுது ஜெயசீலனை பார்த்து,
“இந்த வீட்டை வித்து குடுக்க முடியுமாண்ணே…?”என்று கேட்க, வசுந்தராவின்  உறுதியை பார்த்தவர், ஒரு பெருமூச்சுடன்,
“நானே வாங்கிக்குத்தேன் மா…”என்றவரை சந்தேகமாக வசுந்தரா பார்க்க,
சிறு புன்னகையுடன்,”நியாயமான விலைக்கு தான் வாங்குவேன்… என்னைய நம்பு தாயி…”என்றதும், ஒத்துக்கொண்டார் வசுந்தரா…
அதன்பின் மடமடவென வேலைகள் நடக்க, வீட்டை விற்று தொகையில் பாதியை வைத்து முருகவேலிடம் நிலத்தை கேட்க, அவரோ தொகையின் கணக்கை வைத்து இரண்டு ஏக்கர் நிலத்தை வசுந்தராவிற்கு மாற்றிக் கொடுத்தார்…
இதையெல்லாம் பார்த்த ஜெயசீலனுக்கு முருகவேல் மீது கோபமும் ஊர் பெரியவர்களின் மீது வெறுப்பும் உண்டானது அவருக்கு… அதன்பின் ஊர் காரியங்களில் அனைத்திலும் இருந்து ஒதுங்கியே நிற்க ஆரம்பித்தார்… வசுந்தராவும் தான் உண்டு தன் வேலையுடன் என்னும் விதமாக இருந்தார்…
பூங்குழலி மட்டுமே ஊர் காரர்களிடம் வம்பு சண்டையை இழுத்துக் கொண்டு வருவாள்… அதற்கு அன்னையிடம் நன்கு வாங்கிகட்டிக்கொள்ளவும் செய்வாள்…
நிலத்தை ஜெயசீலனின் உதவியுடன் அவரால் முடிந்ததை விவசாயம் செய்ய அது நன்கு விளைச்சலை கொடுக்கவும், கையில் சற்று பணம் புரள ஆரம்பித்தது… அப்பொழுது அடுத்து என்ன செய்வது என்ற யோசனை வர, ஜெயசீலனின் உதவியுடன் சின்னதாக ஒரு மளிகைகடையை ஆரம்பித்தார் வசுந்தரா…
நிலத்தில் வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் கடையிலேயே இருந்தார்… செல்லதாயிக்கு தான் இதையெல்லாம் பார்த்து மனம் வேதனையில் உழன்றது…
ராணியை போல் வலம் வந்த மகள் இப்பொழுது ஓடாய் உழைப்பது பார்த்து கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது…
பூங்குழலி, பெரியவளாக ஆன பொழுது ஜெயசீலன் அந்த வீட்டை சீராக தர, முதலில் மறுத்த வசுந்தரா பின் அவர் முடிவாக, இதை ஏற்றால் மட்டுமே தாய் மாமன் முறையை செய்வேன் என்று கூறியபின்னரே ஒத்துக்கொண்டார் வசுந்தரா…
முருகவேலுக்கு விஷேசம் என்று கூட சொல்லி அனுப்பவில்லை வசுந்தரா… ஜெயசீலன், அண்ணன் என்ற முறையில் அனைத்தையும் முன் நின்று பார்த்துக் கொண்டார் தன் உடன்பிறவா தங்கைக்காக…
பூங்குழலியின் உற்ற தோழி கனிமொழி என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருவரும் ஒட்டு புல் போல் தான் வலம் வந்தனர்… ஊருக்குள் செய்யும் அனைத்து வேண்டாத வேலையிலும் இவர்களின் பங்கு அதிகம் இருக்கும்…
பூங்குழலியின் தந்தையற்ற நிலையையும் கைவிடப்பட்ட சொந்தத்தின் நிலையையும் பயன்படுத்தி சிலர் அவளிடம் தவறாக நெருங்க முற்பட்ட பொழுது காளியாக மாறி இருந்தாள்… தன் துடுக்குதனம் தான் இப்பொழுதைய பாதுகாப்பு என்று அதை அதிகபடுத்திக் கொண்டாள்…
அன்னையின் கஷ்டம் அறிந்தவள் தனக்கு வரும் தொல்லைகளை தானே பார்த்துக் கொள்ள தொடங்கியவள் வீட்டில் அதை மறைக்கவும் தொடங்கினாள்… இதற்கு உதவி கரம் நீட்டும் ஜீவன் கனிமொழியே…
எங்கேனும் முருகவேலை பார்க்க நேர்ந்தால் வேண்டும் என்றே வம்பிழுத்து அவரது இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு செல்லவில்லை என்றால் அன்றைய தூக்கம் பூங்குழலிக்கு தூர ஓடிவிடும்…
காயத்ரியிடமும் சரிக்கு சமமாக சண்டையில் இறங்கினாலும் அவரையும் ஒருக்கை பார்த்துவிடுவாள் எதிலும் ஓரவஞ்சனை பார்க்கும் குணம் அம்மணிக்கு இல்லையென்று பெருமையாக சொல்ல முடியும்…
அனைத்தையும் சொல்லி முடித்ததும் ஓய்ந்து போய் தரையில் கையை ஊன்றியவளின் உடல் வலுவிழந்தது, கவியழகனோ இதையெல்லாம் சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ந்து ஆணி அடித்தார் போல் நின்று விட்டான் என்ன செய்வது என்று தெரியாமல்…
தந்தை பணத்திற்கு மரியாதை குடுப்பவர் என்று புரிந்துதான் இருந்தான்…. அது வந்த சில தினங்களில் அவரது நடவடிக்கைகளில் புரிந்துக்கொண்டவனுக்கு இவ்விஷயம் இடியாக இருந்தது…
ஒருபுறம் இதை எப்படி சரி செய்வது என்ற குழப்பம் , எவ்வாறு இவளை இப்பொழுது சரிக்கட்டுவது என்று மற்றொரு குழப்பம் அவனுள்… அதில் புருவம் சுருங்க தன் எண்ணங்களில் உழன்று கொண்டு இருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்திய படி, தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள்,
“அப்பன் புத்தி தானே புள்ளைக்கும் வரும்… அதேன் அப்பனைய பத்தி சொன்னத நம்ப முடியல போல… சீ … உங்க கிட்ட போய் சொன்னேன்ல என்னைய சொல்லணும்… நா ஒரு கூறுகெட்டவ… இனி என் வழியில வர சொல்லியே வச்சுக்காதீய பொறவு நல்லாயிருக்காது சொல்லிப்புட்டேன்… உங்க அப்பாருனால நாங்க பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணும்… என்ற ஆத்தா பட்ட கஷ்டத்துக்கு நா பழிவாங்காமவுடவும் மாட்டேன்…” என்று ஆவேசமாக மொழிந்தவள் திரும்பி நடக்க இருக்கையில் , அவளது கரம் பற்றியவன்
“பூங்குழலி ஒரு நிமிஷம் நில்லு… ” என்க, தன் கையை பற்றியிருந்த அவனது கையை தீப்பார்வை பார்த்தவளை அவன் சிறிதும் கண்டுக் கொள்ளாமல் தன் காதலால் அதை மாற்ற முயன்றான்…
“பிளீஸ் பூங்குழலி… நான் சொல்றதை கொஞ்சம் கேளு… நான் நம்புறேன் நம்புலன்னு இல்ல… இதை எப்படி சரி பண்ணுறதுன்னு தான் யோசிக்குறேன்… என்னை புரிஞ்சுக்கோயேன்…” என்று கண்களில் காதலோடு கெஞ்ச, வேகமாக அவன் கையில் இருந்து தன் கையை உருவிக்கொள்ள முயன்றபடி,
“நா எதுக்குவே புரிஞ்சுக்கணும்… எனக்கு  புரிஞ்சுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல…முதல்ல என் கைய விடுக…” என்று போராடிக் கொண்டு இருக்கையிலேயே,
“அங்குட்டு பாருங்க… நான் தான் சொன்னேன்ல்ல… அந்த கவி பையனும் பூ புள்ளையும் மறைவுல தப்பா பண்ணுறாங்கேன்னு… பாருங்க உங்கே கண்முன்னால என்ன நடக்குதுன்னு…” என்று ராசு ஊர் பெரியவர்கள் சிலரை கூட்டி வந்து கையை பிடித்தபடி நின்றிருந்தவர்களை காட்ட, அனைவரும் அதிர்ந்து போயினர்…
அவனது வார்த்தையில், கோபம் வெடிக்க “டேய்…” என்று அவனது சட்டையின் காலரை பற்றி இழுத்த கவியழகன் அவனது முகத்தில் குத்து ஒன்றை வைக்க போகும் சமயம் ஊர் கார்கள் சிலர் அவனை தடுத்து பிரித்து நிறுத்தினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு… அப்பொழுது,
பூங்குழலி, “அய்யோ… அய்யோ… என்ற மானம் போச்சே… இதுக்கா ஆத்தா என்னைய பெத்த அய்யோ… இப்ப என்னத்த பண்ணுவேன்…” என்று முகத்தில் அடித்துக்கொண்டு, மடங்கி அழ ஒன்றும் புரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டு இருந்தனர்…
‘ஒன்னும் நடக்கலையே அப்புறம் ஏன் இப்படி அழுகுறா… பூங்குழலி அழாதடி நான் பார்த்துக்குறேன்…’என்று எண்ணிக்கொண்டவனுக்கு தெரியவில்லை இதனால் தனக்கு நேரப் போகும் துன்பம் என்னவென்று…
அவளை நோக்கி இளகிய குரலில், “பூங்குழலி…”என்று கவியழகன் சமாதானம் செய்ய முறப்பட்ட பொழுது,
“பார்த்தீங்களா அப்பு… கையும் காலும் மாட்டிக்கிட்டதும் அழுது நாடகம் ஆடுறத….”என்று ராசு முடிக்கும் முன் ஆவேசமாக எழுந்து முன்னேறியவள், ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள்….
அதில் பொறிகலங்கி சில நொடிகள் தள்ளாடினான் ராசு… சத்தியமாக இந்த அடியை ராசும் எதிர்ப்பார்க்கவில்லை, கவியும் எதிர்ப்பார்க்கவில்லை….மற்றவர்கள் அவளை தடுக்க முற்பட, அப்பொழுது கூட்டத்தில் ஒரு நரைத்த மீசைகாரர், ” என்ன புள்ள பண்ணுத…. நீ அம்புட்டையும் பண்ணிட்டு கையும் நீளுதாக்கும்… ஒரு ஆம்பள புள்ளைய கை நீட்டுறளவுக்கு ஆயிபோச்சா… ஆமா நீ இங்குட்டு என்னத்தவ பண்ணுத… ?”
“யாருயா அது…?” என்று கூட்டத்தில் அந்த நரைமீசையை கண்டுபிடித்தவள் அவர் முன் தன் கண்ணீர் இல்லாத கண்களை துடைத்துக்கொண்டு, “இங்குட்டு என்ன நடந்துச்சுன்னு சொன்னா மட்டும் என்னத்தய பண்ணுவீரு…? எப்படியா இருந்தாலும் இந்த ஊர் பெரியவருக்குத்தேன் சாதாகமா பேசுவீக… ஏன்னா அங்குட்டு தானே பணமிருக்கு… பொறவு என்னதுக்கு என்னைய கேள்வி கேக்குதியவ…?” என்றவளின் வார்த்தை அங்கு இருந்த பலருக்கு  புரியவில்லை, அதிலும் ராசுவுக்கு அவள் விட்ட அறையில் காதில் ஏதோ சத்தம் கேட்கும் நிலையில் இவளது வார்த்தை குழப்பத்தை தான் உண்டாக்கியது…
‘இவளைய இழுத்துட்டு வந்தது நானு… இவ என்னத்துக்கு முருகவேல் அய்யாவ இழுக்குதியா.. ஒண்ணும் புரியலையே…’ என்று யோசிக்க,
‘இங்க நடந்த பிரச்சினைல அப்பாவ எதுக்கு சம்பந்தபடுத்துறா..? ஏதாச்சும் பிளான் பண்ணுறாளா…’என்று யோசித்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்கவும், “ஷிட்….” என்று முனுமுனுப்புடன் நெற்றியில் கைவைத்துக் கொண்டவன், “நல்லா வச்சு செய்ய போறா போல சை… இவள தடுத்தே ஆகணும்…” என்று முனுமுனுப்புடன் அவளை நெருங்கிய சமயம், கூட்டத்தில் வேறொருவர்
“என்ன புள்ள சொல்லுத… நாங்க நியாயமாத்தேன் நடந்துப்போம்… சும்மா வாய்க்கு வந்தத பேசாதா… இப்ப என்னதுக்கு அய்யாவ இதுல இழுக்குறவ…?” என்று வேறொருவர் குரலையுயர்த்தி பேச, அதற்கு சற்றும் அடங்காத பூங்குழலி,
“வாரும் அய்யா வாரும்… ” என்று அவர் முன்பு நின்றவள்,”என்ன சொன்னீரு…? நியாயமாத்தேன் நடந்துக்கிடுவீகளா… ஏய்யா யோவ்… இவ்வளவு பேசுதீகளே இந்த பேச்சு நியாயம் தர்மம் அம்புட்டும் கூடபொறந்த பொறப்ப என்ற ஆத்தாவ நடுதெருவல நிக்கவச்சு உதவ முடியாதுன்னு அந்த பெரியவர் சொன்னப்ப எங்கயா போச்சு…?” என்று தாவணியின் முந்தியை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு ஆவேசமாக கேட்டவளுக்கு அங்கு இருந்த யாராலும் பதில் சொல்ல முடியவில்லை…
அவளது இவ்வாறான கேள்வியில் விக்கித்து தலை குனிந்து நின்றிருந்த சில நரை மீசைகளை பார்த்தவள், “என்னவே எல்லாரும் அமைதியா நிக்குதீங்க…? பதில் இல்லையோ… எப்படி இருக்கும்…? அப்ப என்ற ஆத்தாக்கு நடந்த தப்புக்கே நீங்க நியாயம் வழங்கல இப்ப நடந்த தப்புக்கும் நீங்க நியாயம் வழங்க போறது இல்ல பொறவு என்னத்துக்குவே கேட்குதீக…” என்று கத்தியவளுக்கு அங்கிருந்த யாராலும் பதில் அளிக்க முடியவில்லை….
கவியழகனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை, ‘இவ என்னதான் பிளான் பண்ணுறா ஒன்னும் புரியலையே…’ என்று யோசித்தவன் தன் பார்வையை சுழல விட்டான். பாதி ஊர் ஜனங்கள் அங்குதான் கூடியிருக்கும் போல அதை பார்த்து என்னவோ போல் ஆகிவிட்டது அவனுக்கு, ஆனால் பூங்குழலியோ அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அழகாக பயன்படுத்தி தன் அன்னைக்கு நியாயம் வழங்குவதோடு முருகவேலையும் பழிவாங்க தன் முதல் அடியை எடுத்து வைத்தாள் சாதுர்யமாக…
“சரிபுள்ள அப்ப ஏதோ சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு… இப்ப என்ன பண்ணனும்னுட்டு சொல்லுத…? அப்படி உனக்கு என்னத்த அநியாயம் நடந்து போச்சு… ?” என்று அந்த ஊர் நாட்டாமை பதவியில் இருக்கும் ஒருவர் கேட்கவும்,
கவியழகன் புறம் திரும்பி  வெற்று பார்வையை அவன் மீது வீசியவள் தன் மனதில் துளிர் விட்ட காதலை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு முருகவேலை பழி தீர்க்கும் எண்ணத்தை முதன்மையாக விதைத்துக் கொண்டவள் நிமிர்ந்து நின்றாள் ஒரு முடிவோடு…
அவளது பார்வையின் மாற்றத்தையும், நிமிர்வையும் கண்டவன் புருவம் சுருங்க அவளை பதிலுக்கு எதிர் பார்வை பார்த்து நின்றான்…
சட்டென தன் குரல் விதத்தை மாற்றியவள், “நான் என்ற ஆத்தாவ பாக்க கடைக்கு போகுறாப்புல, இந்தா இங்க நிக்குறாறே பெரியவர் ஊட்டு வாரிசு இவரு என்னைய வழுக்காட்டாயம இங்குட்டு இழுத்து வந்து எ.. என்கிட்ட வம்பு பண்ண பாத்தாக… நா தப்பிக்க பாக்கும் போதுத்தேன் நீங்க எல்லாரும் வந்தீக… ” என்று கண்கள் கலங்கியது போல் லேசாக கண்களை துடைத்துக் கொண்டவள், ஓரக்கண்ணால் கவியழகனை பார்க்க அவனது முகத்தில் இருந்த அதிர்ச்சியை கண்டு இதயம் வலிக்க தன் செயலுக்காக ஊமையாய் அழுதால் உள்ளுக்குள் தன்னவனுக்காக…
‘பாவி… உன்னை காதலிச்சதை தவிர நான் வேற என்னடி பண்ணினேன்… என் பெயரையே கெடுத்துட்டியே…’ என்று அதிர்ந்தவனுக்கு அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து உள்ளம் கூச, அவமானத்தில் தலை கவிழ்ந்தவனின் கோபம் எரிமலையாய் வெடித்து சிதற இருந்ததை கைமுஸ்டியை முடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தான்…
ராசுவோ, ‘ஆத்தி… என்னங்கையா நடக்குது இங்க…?’ என்று வாய்பிளந்து பார்த்தபடி நின்றிருந்தான் அதில் ஈ, கொசு என்று எது சென்றிருந்தாளும் ஆச்சரியபடுவதற்கில்லை….
அப்பொழுது பூங்குழலி, “ஆனா இந்த கோட்டிபய…” என்று வீர்கொண்டு எழுந்தவள், இடதுகையால் அங்கு இருந்த ராசுவின் சட்டை காலரை பிடித்து நடுகூடத்தில் இழுத்தவள், “என்ன நடந்துச்சுன்னு தெரியாம, என்னைய அந்த பெரியவூட்டு காரர் பையனோட சேர்த்து வச்சு பேசினதும் இல்ல ஊர கூட்டி என்னைய அசிங்கபட வச்சுட்டான்…” என்று ஓங்கி கண்ணத்தில் மீண்டும் ஒன்று வைத்தாள்…
மேலும், “ஏன்டா கூறுகெட்டவனே…. அந்த பெரியருவருக்கும் எனக்கும் ஆகவே ஆகாது…. அப்படி இருக்கும் போது, நா எப்படில அவரு பையன் கூட சோடி போட்டு சுத்துவேன்டா நாயே…” என்று மீண்டும் ஒன்று விட, அவளது வார்த்தைகள் கவியழகனை வெகுவாக தாக்கியது என்றால் அவளது அந்த அறை தன் ஆசைக்கும் எண்ணங்களுக்கும் விழுந்தது போல் இருந்தது உள்ளுக்குள்…
“என்ற ஆத்தா பட்ட கஷ்டத்தவே இன்னும் மறக்காம  கோபத்துல சுத்திக்கிட்டு இருக்க என்னைய பார்த்து எப்படிவே அப்படி சொன்ன…? உன்னைய…” என்று ராசுவை நடுகூட்டத்தில் போட்டு புரட்டி எடுத்தவள் சரமாரியாக அடிகளை வஞ்சனையில்லாது வாரி வழங்கினாள் குழலி… அது அவன் அவளிடம் தவறாக நடக்க முற்பட்டதற்கு என்று சம்மபந்தபட்ட மூவருக்கும் புரிந்தது தான் இருந்தது…
“ஏய் யாத்தா… போதும் நிறுத்துவே… சும்மா பொசுக்கு பொசுக்குன்னு அவனைய அடிக்குறவ…. அட நிறுத்துன்னுட்டு சொல்லுதோம்ல…” என்று பெரியவர்கள் சிலர் அவளை தடுத்து நிறுத்திய பின்னரே அவளது பேயாட்டம் நின்றது…
அவனை அடிப்பதை நிறுத்தினாலும் முறைப்பதை நிறுத்தவில்லை… அவளது அந்த முறைப்பு எச்சரிக்கைவிடுவது போல் இருந்தது ராசுவுக்கு… அதனால் பயந்து அமைதியாக பம்மியபடி நின்றிருந்தான் ஓரமாக…
“சரி இப்ப என்னத பண்ணலாங்கற தாயி…?” என்று ஒருவர் கேட்கவும்,
“உங்க ஊர் பஞ்சாயத்த கூட்டுங்க… அதுவும் இப்பவே… “என்று விடாப்பிடியாக பேசியவளை ஒரு இயலாத பார்வையோடு முறைப்பையும் அவள் மீது வீசினான் கவியழகன்….
ஆனால் அவள் அவன்புறம் திரும்பவில்லை… அவளது காதல் நெஞ்சம் தன் செயலுக்காக அவன் அவமானபடுவதை கண்டு பொறுக்கமுடியாமல் கதறினாலும்,  தன் நிலையிலேயே நின்றாள் அவனது தந்தையை பழிதீர்க்க வேண்டுமென்று…
“என்னாத்தா இது என்ன வெளாட்டு விஷயமா…? சுளுவா பஞ்சாயத்த கூட்ட சொல்லுறவ…” என்று ஒருமுறுக்கு மீசை அவளது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க,
“ஓஓஓ… பொறவு என்ன பண்ணுங்குறீக….?”
“அங்குட்டு நிக்குறது உன்ற மாமமகன்… இது உங்க ஊட்டு பிரச்சன, அதைய உங்க ரெண்டு குடும்பமும் பேசி முடிவெடுக்கட்டும், நீ சின்ன புள்ள அதுனால கொஞ்சம் அமைதியா இரு, அவிக பேசி முடிவெடுப்பாக….” என்று தன் ஆளுமையை காட்ட, அவரை பார்த்து எள்ளளாக ஒரு சிரிப்பை உதிர்த்தவள், அவர் புறம் சென்று
“ம்ம்ம்… நீங்க அப்படி வாரீகளோ….?” என்று அடுத்து பேசும் முன் கூட்டத்தை தள்ளிவிட்டு உள்ளே வந்த கனி, ஓடி சென்று அவள் கையை பற்றி, பதற்றமாக “ஏய் என்னபுள்ள பண்ணுறவ…? வாடி போலாம்…” என்று இழுக்க,
“ம்ப்ச்ச்… செத்த நேரம் சும்மா இருடி…” என்று தோழியை அடக்கியவள், முறுக்கு மீசையின் புறம் திரும்பி, நிமிர்ந்த பார்வையுடன்
“என்ன அப்பு சொன்னீங்க, ஊட்டு பிரச்சினயா…? ஏன் அது இந்த எடுப்பட்ட நாயி உங்க கிட்ட வந்து சொல்லும் போது தெரியலையாக்கும்… இவிக என்ற மாம மகன், ஊட்டு பிரச்சனன்னுட்டு…?” என்று கேட்டு புருவம் உயர்த்தியதற்கு அங்கு யாரிடமும் பதில் இல்லை…
அதற்கும் நக்கலாக சிரித்தவள், “இத்தன பேருக்கு நடுவுல நிக்க வச்சு என்ற மானத்த வாங்கிபுட்டு இப்ப கமுக்கமா ஊட்டுல உட்கார்ந்து பேசி தீத்துக்கோன்னா இது எந்த ஊர் நியாயம்… ஓஓஓ என்ற ஆத்தாக்கு பண்ண மாதிரி இது உங்க ஊர் நியாயம் அப்படிதானே… ?” என்ற கேட்கவும்,
“என்ன புள்ள ரொம்ப பேசுறவ… ஊர் பெரியவங்க கிட்ட பேசுற…. மாதிரியா பேசுவ…” அவர்களது தவறை புள்ளியிட்டு குழலி விளக்கவும் ஒருவருக்கு அவளது வார்த்தையில் கோபம் வந்ததில் ரோஷத்தோடு பொங்க தொடங்கினார்….
ஆனால் அதற்கெல்லாம் அடங்குபவளா இந்த குழலி…?
“மொத நீங்க எல்லாம் பெரியவக மாதிரி நடந்துக்கோங்க… பணம் படைச்ச அந்த பெரியவர பஞ்சாயத்துக்கு கூப்பிட கூடாதுன்னுட்டு என்னைய ஏமாத்தி பேசி அனுப்ப பாக்குதியலா…?”
அவளது நோக்கம் என்னவென்று கவியழகனுக்கு தெளிவாக புரிந்தது… தன் தந்தையை பழிவாங்க தன்னையும் தன் காதலையும் பலியாக்கிவிட்டாள் என்று விளங்கியது, ஆனால் அவனோடு சேர்ந்து அவனது காதலும், மானம் பலியானதை தான் அவனால் பொருக்க முடியவில்லை…
“சரி ஆத்தா… நீ சொல்லுத போலவே பஞ்சாயத்த கூட்டாலாம் ஆனா நாளைக்குத்தேன்… இப்ப வீட்டுக்கு போ…” என்று அனைத்து பெரியவர்களும் ஒன்றுக்கு கூடி ஒரு முடிவை சொல்ல…
‘வேற வினையே வேண்ணாம்… என்ற ஆத்தா என்னைய அடிச்சே கொன்றும்… பஞ்சாயத்த வைக்க விடாது… சூட்டோடு சூட்டா பெரியவர பஞ்சாயத்துக்கு இழுத்து நாலு வார்த்தையாச்சும் நறுக்குன்னு கேட்டுட்டு போய் ஆத்தா கிட்ட அடி வாங்குன்னா கூட நிம்மதியா வாங்கிப்பேன்….’ என்று எண்ணியவள்,
“எதுக்கு அந்த பெரியவர் கிட்ட எப்படி இதைய தடுத்து நிறுத்தலாம்ன்னுட்டு பேசி முடிவு பண்ணுறதுகா…? இந்த வேல எல்லாம் இங்குட்டு ஆகாது அப்பு இன்னைக்கே பஞ்சாயத்த கூட்டியே ஆகனும்… அதுவும் இப்பவே….” என்று விடாப்பிடியாக ஒற்றை காலில் நின்றாள் பூங்குழலி…
அவளது விடாபிடி முயற்சியும், ஏற்கனவே அன்னைக்கு யாரும் துணை நிற்காததை அத்தனை பேர் முன்பும் சுட்டிக் காட்டி பேசவும் வேறுவழி இன்றி நரைத்த முறுக்குமீசை அத்தனையும் பஞ்சாயத்தை கூட்ட வைத்தது…
விஷயம் சம்பந்தப்பட்ட முருகவேலுக்கும், வசுந்தராவிற்கும் தெரியவர இருவரும் இருவேறு மனநிலையில் கொதித்தனர்… அடுத்த அரைமணி நேரத்தில் பஞ்சாயத்தை வந்து அடைந்தனர் அனைவரும்…
தொடரும்….

Advertisement